Monday, September 9, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்அம்பரம் – நூல் பார்வை

அம்பரம் – நூல் பார்வை

கணேஷ்பாபு

“அம்பரம்” என்ற சொல்லை முதன்முதலாகத் திருப்பாவை வாசிப்பில்தான் அறிமுகம் செய்துகொண்டேன். “அம்பரமே, தண்ணீரே, சோறே..” என்று துவங்கும் பாசுரத்தில். “அம்பரம்” என்ற சொல் முதன்மையாக ஆடையைக் குறிப்பதாகும். “பீதாம்பரம்” (பொன்னாடை அல்லது பட்டாடை), “திகம்பரர்” (திசைகளை ஆடையாகக் கொண்ட துறவிகள்) போன்ற சொற்களை இங்கு நினைவு கூரலாம். “அம்பரம்” என்ற சொல் வானத்தையும் குறிக்கும். அதே பாசுரத்தில் “அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த” என்ற வரியில் அம்பரம் என்பது ‘வானம்’ என்ற பொருளில் வருகிறது. “அம்பரம்” என்ற சொல்லுக்கு ‘கடல்’ என்ற பொருளும் உண்டு. என் மனம் கவர்ந்த கவியன்னை ஆண்டாள் பயன்படுத்திய சொல் என்பதால் இந்த நாவலின் தலைப்பைக் கண்டதுமே நாவலுக்குள் மூழ்கிவிட்டேன்.

பொதுவாகச் சிங்கைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் படைப்புகளில் சொந்த ஊர் அல்லது சிங்கப்பூர் சார்ந்த கதைக்கருக்களைப் பிரதானமாக தேர்வு செய்து எழுதுவது வழக்கம். ஆனால், ரமா சுரேஷ் தன்னுடைய முதல் நாவலிலேயே இந்த வழக்கத்தை உடைத்துப் போட்டிருக்கிறார். தமிழகத்துக்கோ சிங்கப்பூருக்கோ முற்றிலும் அயலான பர்மாவைத் தனது கதைக்களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கதைநாயகனும் நாயகியும் பர்மாவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள். இஸ்லாமியர்கள். ஆக, தனக்கு முற்றிலும் அந்நியமான பர்மிய வாழ்க்கை, அதன் கலாசாரம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள். கூடுதலாக, இஸ்லாமியக் கலாசாரப் பண்பாட்டுக் கூறுகள். இவையிரண்டின் ஊடாட்டம். கூடவே, பௌத்த சமய நம்பிக்கைகள், வழிபாட்டுச் சடங்குகள், மட்டுமல்லாமல் நாவல் நடக்கும் காலம் என்பது இரண்டாம் உலகப் போர் நடந்த காலம். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முந்தைய பர்மா மற்றும் சிங்கப்பூரின் வரலாறு, பண்பாட்டு, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்குள் துல்லியமாகக் கொண்டு வந்து கலைத்தன்மைக்குப் பங்கமேற்படாமல் கதை சொல்வது என்ற சவாலை வெற்றிகரமாகச் சந்தித்திருக்கிறார் ஆசிரியர்.

அம்பரம் நாவல் இரண்டு பாகங்களைக் கொண்டது எனலாம். முதல் பாகம் முழுவதும் பர்மாவில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டது. இரண்டாம் பாகம் சிங்கப்பூர் நிகழ்வுகளைச் சொல்வது. முதல் பாகம் பசுமையும் ஈரமும் கொண்ட அடர்காடு என்றால் இரண்டாம் பாகம் அனலும் வெம்மையும் கண்ணீரின் உப்பும் கொண்டது எனலாம்.

யூசுப் என்ற குத்துச்சண்டைக்காரனின் வாழ்க்கையைச் சொல்கிறது என்ற ஒருவரியில் நாவலைச் சுருக்கிவிட முடியாது. ஒரு வாழ்க்கையைச் சொன்னாலும் நாவல் அந்த ஒரு வாழ்வினூடாக பல்வேறு நிலவெளிகளை, வரலாற்றை, துயரக் காட்சிகளை சொல்லிச் செல்கிறது. இழந்துகொண்டே இருக்கும் ஒரு மனிதனின் கதை மட்டும் அல்ல, இழந்துகொண்டே இருக்கும் பல மனிதர்களின் கதைத்தொகுதி இது. “மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே இருக்கின்றன. துயரப்படும் குடும்பங்கள் யாவும் அதனதன் வழியில் துயருறுகின்றன” என்ற டால்ஸ்டாயின் வரிதான் இந்த நாவலை வாசிக்கையில் நினைவில் எழுகின்றது.

விதி என்ற சூதாட்டப் பலகையின் முன் தம் கைப்பொருட்கள் ஒவ்வொன்றாகப் பணயம் வைத்து யாவற்றையும் இழக்கும் மனிதர்கள் நாவல் நெடுக வந்துகொண்டிருக்கிறார்கள். யூசுப் இழக்காதது என்று எதுவுமில்லை. தாய் தந்தையரை சிறுவயதில் இழக்கிறான், அதன்பின் தன் உயிர் நண்பனை இழக்கிறான், வளர்ப்புத் தந்தை, தன் குத்துச்சண்டைக் கனவுகள், தன் குழந்தை, இறுதியில் தன் மனைவி என யாவற்றையும் இழந்துகொண்டே இருக்கிறான். இழப்பின் சுமைகளால் அவனது வாழ்வுத் தராசின் ஒரு பக்கம் தாழ்ந்தபடியேதான் இருக்கிறது. தராசின் மறுதட்டில் வைப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்ற நிலையில் வாழ்வை வெறுத்து பயணம் கிளம்பி விடுகிறான்.
சொந்த வீட்டையும் உறவையும் நாட்டையும் இழந்து வந்த மனிதர்கள் திசைகள் தோறும் தவித்தலையும் சித்திரம் நாவலின் பக்கங்களெங்கும் நிரம்பியிருக்கின்றன. எனில், வெறும் இழப்புகளின் கூட்டுத்தொகைதான் நாவலாக வந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். இந்த நாவல் எந்த அளவிற்கு இழப்பைப் பேசுகிறதோ அதே அளவிற்கு அன்பையும் பேசுகிறது.

எத்தகைய துயரம் வாழ்வைப் பிளந்துபோட்டாலும் அன்பும் ஆதரவும் செலுத்துவதற்கு மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தாயை இழந்த யூசுப்பை ஓர் இந்துக் குடும்பம் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கிறது. அந்தக் குடும்பத்தின் சொந்தக் குழந்தையாகவே மாறிவிடுகிறான் யூசுப். அடைக்கும் தாழ் என்ற ஒன்றில்லாத கட்டற்ற அன்பைப் பெறுகிறான் யூசுப். இந்த நாவலில் இழப்புக்கு இணையாகவே அன்பும் நட்பும் விரிந்து பெருகுகின்றன.
சிவராமன், ஆஸிப் இவர்களது நட்பு, யூசுப், சிட்போ இருவரது நட்பு, யூசுப், பாஷிர் நட்பு என நட்பின் கதைகள் நாவலில் தொடர்ந்து வந்தபடியே உள்ளன. நண்பர்கள் இல்லாத எவரும் இந்த நாவலில் இல்லை என்று சொல்லுமளவு நட்பின் முக்கியத்துவத்தை நாவலின் பக்கங்கள் தாங்கியபடி இருக்கின்றன. காசில்லாதவன் என்று ஒருவன் இருக்கலாம், நண்பர்கள் இல்லாதவன் என்று எவனாவது இருக்கிறானா? அப்படி ஒருவன் இருந்தால் உலகிலேயே அவன்தான் மிக வறியவன் என்ற புரிதலை நாவல் அளிக்கிறது. இழப்பும், வலிகளும் ஏற்படும்போதெல்லாம் ஒருவனைத் தாங்குவதற்கு நண்பர்கள்தான் புறப்பட்டு வருகிறார்கள்.

யூசுப்புக்கும் சிட்பொவுக்குமான நட்பு மிகவும் ஆத்மார்த்தமானது. சிட்பொவுக்கு ஏற்படும் முடிவு மனம் பதைக்கச் செய்வது. ஆனால் அதன்பின் யூசுப்பின் இருண்ட மனநிலையை மிகவும் யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் ஆசிரியர். அவர்கள் இருவரும் அடிக்கடி நடந்து திரியும் சாலைக்கு செல்கிறான் யூசுப். சாலை முழுவதும் மறைந்த நண்பன் சிட்பொவின் கால் தடங்கள் பதிந்திருப்பதை அவனால் உணர முடிகிறது. காலம் மெல்ல ஓடி மறைகிறது. தன்னுடைய மகனுக்கு நண்பனுடைய பெயரை இட்டு அவன் நினைவைத் தொடர்கிறான் யூசுப்.

பெண்கள்தான் நாவலின் இதயமாக இருக்கிறார்கள் எனலாம். ஆணின் துயரத்திற்கும் பெண்ணின் துயரத்திற்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்? ஆண் துயரத்தில் மூழ்கிவிட்டால் அவனுக்கு மீளும் வழி தெரிவதில்லை. எல்லாத் திசையும் அவனுக்கு இருண்டுவிடுகிறது. ஆனால், ஆணைக் காட்டிலும் அதிகத் துன்பமிருந்தாலும் பெண்கள் சட்டென அதிலிருந்து மீண்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் வெளியேறும் புள்ளி புலப்பட்டுவிடுகிறது. தான் மட்டுமல்லாது குடும்பத்தையே அதன்மூலம் தூக்கி நிறுத்திவிடுகிறார்கள். பிரிந்து போன கணவனை நம்பிக்கையுடன் தேடிச்செல்லும் யூசுப்பின் அம்மா விபத்தில் இறக்கும் தருணத்திலும் மகனுக்கு ஓர் அடைக்கலம் பெற்றுத் தருவது, தந்தைக்குப் பிடிக்குமே என்று பிறந்து வளர்ந்த பர்மாவை விட்டு தந்தையின் தங்கை மகனைத் திருமணம் செய்யத் தமிழகம் வந்து அடிமை வாழ்வு வாழும் காமாச்சி, உன் நிழலில்தான் என்னுடைய வாழ்வின் எல்லாமும் நிகழ வேண்டும் என்று யூசுப்பிடம் சொல்லி கடைசி வரை நிழலாய் அவனுடன் வாழும் காஸியா, சிங்கப்பூரில் அவர்களுக்கு அடைக்கலம் தரும் நேனெக் என நாவல் முழுக்க பெண்களே நம்பிக்கையின் சின்னங்களாக வலம் வருகிறார்கள்.

நாவலில் நிலம் சார்ந்த வரலாற்றுப் பண்பாட்டுக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது நாவலை உள்வாங்குவதற்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, பர்மாவின் நிலவியல்: மேல் பர்மா, கீழ் பர்மா, மேல் பர்மாவில் கிளைக்கும் ஐராவதி நதி, கீழ் பர்மாவில் பாயும் ரங்கூன் நதி என ஆங்காங்கே நிலவியல் குறிப்புகள். இந்தியாவின் ஒரு மாகாணமாக பர்மா இருந்தது, அதன் பின் பர்மாவில் தோன்றிய சுதந்திரப் போராட்ட எழுச்சி, அரசியல் கிளர்ச்சிகள், கீழ் பர்மாவில் இருந்த சதுப்பு நிலங்களை விளைச்சல் நிலமாக்க வெள்ளையர் திட்டமிட்டது, அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் பஞ்சத்தில் திண்டாடிய மக்கள் கூலி உழைப்பாளிகளாக பர்மாவுக்கு இடம்மாறியது என்று வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. ரங்கூனின் மையத்தில் உள்ள ஸ்வேடகன் பகோடா பற்றிய குறிப்புகளும் துல்லியமாக உள்ளன, அதன் கட்டுமான அமைப்பும், அதனைச் சார்ந்த நம்பிக்கைகள், பௌத்த சமயத்தினரின் வழிபாடுகள், ஷின்பியு போன்ற சடங்குகள் என விரிந்த சித்திரங்கள் நாவலில் உள்ளன.

பண்பாட்டுச் செய்திகளில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால் இந்நாவலில் உள்ள பண்பாட்டுக் குறிப்புகளை விரும்பி வாசித்தேன். உதாரணமாக, பர்மாவில் வாழும் தமிழ்ச் செட்டியார்கள் பர்மியப் பெண்களை மணம் செய்திருந்தாலும், அவர்களின் கலாசாரம் ஒன்றிணையவில்லை என்பது ஆர்வமூட்டும் செய்தி. அந்த ஆண்களில் பலர் தங்கள் வீடுகளில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள், வழிபாடு, பூஜை போன்ற சடங்குகளிலும் அப்பெண்களை ஈடுபடுத்த மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் மட்டும் ஐந்து, ஆறு என பெற்றுத் தள்ளுகிறார்கள். எனில், அப்பெண்களை வெறும் பாலியல் கருவிகளாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையறிந்தும் அப்பெண்கள் இந்த ஆண்களுடன் ஒன்றாக குடும்பம் நடத்தியிருப்பதன் நிர்ப்பந்தம் என்ன என்று யோசிக்கையில் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. பர்மியர்கள் சாப்பிடும் ஙப்பி மீன் செய்முறையை யூசுப் விளக்கும் இடம் சுவாரஸ்யமானது. ஙப்பி மீனை என்னால் ஒருபோதும் சாப்பிட முடியாது என்ற போதும், அதன் செய்முறையை வாசிப்பது விருப்பமானதாகத்தான் இருக்கிறது.

நாவலின் இரண்டாம் பாகமான சிங்கப்பூர் கதையிலும் இத்தகைய பண்பாட்டுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, மக்கள் மனதில் நிலவும் பேய் பற்றிய நம்பிக்கைகள். மரத்தை வெட்டாமல் மரத்திலுள்ள ஆவிகளை சமாதானப்படுத்துவதற்காக நடத்தப்படும் பூஜைகள் நாவலில் இடம்பெறுகின்றன. இங்கே மூட நம்பிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்த மனம் வரவில்லை. பண்பாட்டு செய்திகளையெல்லாம் மூட நம்பிக்கை என்று உடனடியாக நிராகரித்துவிடாமல், அதன் பின்னுள்ள மனித மனதின் உளவியலைப் புரிந்து கொள்ள முயல்வதே வாசிப்பை பலப்படுத்தும். சிங்கப்பூரில் இன்றளவும் நிலவும் பேய்கள் குறித்த பயமும் அது சார்ந்த சடங்குகளும் இன்று நேற்றல்ல, நூறாண்டுகளாய் இச்சமூகத்தில் நிலவி வருபவை என்று இந்த நாவலின் மூலம் அறிய முடிகிறது.

இன்றும் ஜுரோங் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை “பேய் பிளாண்ட்” என்றே அழைக்கப்படுகிறது. அங்கு வேலைக்குச் சென்றவர்கள் கதை கதையாகச் சொல்வார்கள். பிறருக்கு எப்படியோ, எழுத்தாளர்களுக்கு இக்கதைகள் யாவும் அமுத சுரபிகள்.

நாவலில் வாழ்வு சார்ந்த அனுபவங்களின் மூலம் சில நடைமுறைத் தத்துவங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. இவை யாவுமே கதைப்போக்கில் வைத்து வாசிக்கும்போது மிகுந்த எடை கொண்டவையாக மாறிவிடுகின்றன. சாதாரணமாக நாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் வெளியேற்றிவிடும் நடைமுறை அறிவுரைகள் கூட அனுபவங்களின் மூலம் அறிந்து கொள்ள நேரும்போது மிகுந்த வெளிச்சம் பெற்றுவிடுகின்றன.

சில உதாரணங்கள் இவை:

செடியை எங்கு எப்படி நட்டு வைத்தாலும் சூரியனை நோக்கித் திரும்பிவிடும். அப்படித்தான் இந்தப் பிறவி. நாம் எங்கு, எந்த நிலையில் வாழ்ந்தாலும் அந்த நிலத்தை நோக்கியே பயணம் செய்யவேண்டும், அந்த நிலம் கொடுக்கும் இன்ப துன்பத்தை உடனே கடந்துவிட நினைக்காதே. நின்று நிதானித்து அனுபவித்து திளைத்த பிறகு துறந்துவிடு. துறப்பது மட்டுமே நீ எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். இடைப்பட்ட அனைத்தும் அதன்படியே நடக்கும். அதை நீ அனுபவி, அப்படியே அனுபவி. அதுதான் இந்தப் பிறவியில் நீ வாங்கி வந்த வாழ்க்கை”

எங்க போயி உக்காந்தாலும் கண்ண மூடித்தான் உக்காரப்போறோம். அது மடமா இருந்தா என்ன? மசூதியா இருந்தா என்ன? எதச் செஞ்சா நீயும் உன்னைச் சுத்தி இருக்கவங்களும் சந்தோசமா இருப்பாங்களோ அதையே செய். அம்புட்டுத்தான் வாழ்க்கை”

ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று சொல்பவர்களை முட்டாள் என்றே சொல்வேன். நினைத்த நேரத்தில் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு முன் கண்ணீர் சிந்துவது வரம். தன் எல்லாத் தவறுகளையும் பலவீனங்களையும் ஒத்துக்கொண்டு நான் இவ்வளவுதான் என்று கண்ணீர் சிந்த இந்த ஆண்களுக்கு மட்டும் ஏன் கொடுப்பினை இல்லை

மனிதனின் ஆதாரமான உளவியல் ஒன்றை இந்நாவல் காட்டுகிறது. பர்மாவிலும் சிங்கப்பூரிலும் இடம்பெயர்ந்து பிழைக்க நேர்கிற தமிழர்கள் யாவரும் ஊர் திரும்புதல் குறித்த ஆசையுடன் இருக்கிறார்கள். வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் எலோருக்கும் தமிழகம் திரும்பும் விருப்பம் இருக்கிறது, அங்குள்ள உறவுகள் மீதான ஏக்கம் இருக்கிறது. சரி, அப்படியானால் தமிழகம் அப்போது எப்படி இருந்தது? இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, பர்மாவில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் இந்த வாழ்க்கைக்கு பர்மாவே மேல் என்று கண்டு கொள்கிறார்கள்.

தமிழகத்துக்கு வாக்கப்பட்டு வந்த காமாச்சி, பர்மாவில் சுதந்திரமாகவாவது இருந்தோம், இங்கே அடிமை வாழ்வு அல்லவா வாய்த்திருக்கிறது என்று உணர்ந்து கொள்கிறாள். பர்மாவில் சாதி மதம் போன்ற பிரிவினைகள் இல்லாது தமிழர்கள் அனைவரும் அணுக்கமாகவே பழகுகிறார்கள். தமிழகத்தில் நிலவிய இறுக்கமான சாதிக் கட்டுப்பாடுகள் காமாச்சி, சிவராமன் போன்றவர்களை மிரட்சியடைய வைக்கிறது.

யூசுப்பிடம் அவனது மைத்துனன் கேட்கிறான், “நமக்கு எந்த நாடு சொந்தம் மாமா?”

எனில், நிலம் என்பது என்ன? நிலம் என்பது உண்மையில் மனிதர்களின் குணம்தான் என்று அவ்வை சொல்கிறாள்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
“ – இக்கவிதையையே இந்த நாவலும் வழிமொழிகிறது.

இரண்டாம் பாகத்தில் போர்க்காட்சிகளும் மனிதர்களின் கீழ்மைகளும் வாதைகளும் காட்டப்பட்டிருக்கின்றன. வீடுகளையும் மனிதர்களையும் தகர்த்தெறிகின்றன குண்டுகள். வெடிகுண்டுகளுக்குப் பயந்து மனிதர்கள் இடம்மாறியபடி இருக்கிறார்கள். ஜப்பானியர்களால் கைப்பற்றப்பட்ட சிங்கப்பூரின் அடிமை வாழ்வின் சித்திரங்களையும் நாவல் காட்டிச் செல்கிறது. அதே சமயம் மனிதர்கள் இணக்கமாக வாழ்ந்த கம்போங் வாழ்க்கை, அன்றைய சைனா டவுன் மற்றும் மாரியம்மன் கோயில் தெருக் காட்சிகளும் இடம்பெறுகின்றன.

ஜப்பானியர்களால் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் படையின் முக்கியப் போர்க்கப்பல்களான பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (Prince of Wales) மற்றும் ரிபல்ஸ்(Repulse)சின் போர்க்காட்சிகளும் நாவலில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானியர் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்ட சிங்கப்பூரில் மக்கள் படும் துயரம், ஜப்பானியரின் கொடூரங்கள், பாலியல் அத்துமீறல்கள் யாவும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அதே சமயம் எதற்காகப் போரிடுகிறோம், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் போருக்குள் இழுக்கப்பட்ட சிப்பாய்களையும் பார்க்க முடிகிறது. சிங்கப்பூருக்குள் வந்துவிட்ட ஒரு இந்தியச் சிப்பாய் அங்கிருக்கும் ஒருவரிடம் “இந்தியாவில் இது எந்த இடம்?” என்று கேட்கிறான்.

நாவலின் சுவாரஸ்யமான மொழி அமைப்பே நாவலை விரைவில் வாசிக்கச் செய்தாலும் முதல் பாகமான பர்மாவில் நடக்கும் கதையில் தென்படும் உயிரோட்டமான சித்தரிப்பும் கவித்துவமும் இரண்டாம் பாகமான சிங்கப்பூரில் நடக்கும் கதையில் தென்படவில்லை. ஒப்பு நோக்க இரண்டாம் பாகம் சற்றே நீளமானதாகவும் இருக்கிறது.
நாவலில் எந்தவொரு இடத்திலும் நாடகீயத்தன்மையோ செயற்கையான காட்சி சித்தரிப்போ இல்லை. வெகு யதார்த்தமாகவே மொழி அமைந்திருக்கிறது. அச்சுப் பிழைகளும் புதிய அத்தியாய எண்களுக்குக் கீழே முடியும் முந்தைய அத்தியாய வரிகள் போன்ற பிழைகள் அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன்.

முதல் பாகத்தில் ஆசிரியரின் கோணத்தில் அமைந்த கதை சொல்லும் முறை இரண்டாம் பாகத்தில் யூசுப்-இன் கோணத்தில் சொல்லப்படுகிறது. இதைத் தவிர்த்துப் பார்த்தால் நாவல் மரபான வடிவத்திலேயே அமைந்திருக்கிறது. பிற முக்கியமான பாத்திரங்களின் கோணத்திலும் கதையை நகர்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, காஜியாவின் பார்வையில், அல்லது சிட்பொவின் பார்வையில் சில அத்தியாயங்களை கதை சொல்வதற்காகப் பயன்படுத்தியிருந்தால் இன்னும் பல வெளிச்சங்கள் கிடைத்திருக்கும்.

நாவலில் தமிழ் தெரியாதவர்கள் பேசும்போதும் தமிழின் வட்டார வழக்கு தென்படுகிறது. வெள்ளைக்காரரான மார்ஷியல் “வந்திட்டு”, “போயிட்டு” என்று வட்டார வழக்கில் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற தருணங்களில் பொதுவான உரைநடைத் தமிழையே பயன்படுத்தியிருக்கலாம்.

லீ குவான் யூ ஓர் அத்தியாயத்தில் தோன்றுகிறார். ஆயினும் அவரது செயல்பாடுகளை விவரிக்கும்போதெல்லாம் யதார்த்தம் மீறிய வழிபாட்டு உணர்ச்சி தென்படுகிறது. அப்போது அவர் ஜப்பானியர்களின் சோதனை மையத்தில் வரிசையில் நிற்கும் ஒரு சிறுவன். ஆனால் பின்னாளில் நடக்கப்போவதை முன்கூட்டிய அறிந்ததைப் போல யூசுப் “அவன் கால்களின் தடம் மண்ணில் மிக ஆழமாக வேரூன்றிப் பதிந்து, நூறாண்டு காலத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதை நான் பிரமிப்புடன் பார்த்தேன்” என்று சொல்வது நாவலின் யதார்த்தத்துக்குப் பொருந்தி வரவில்லை.

நாவலில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கைக்கு வரம்பில்லை என்றாலும் இறுதி அத்தியாயம் வரை யாராவது புது கதாபாத்திரம் அறிமுகமானபடி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆலி, சிதம்பரம் போன்ற கதாபாத்திரங்கள் நாவல் முடிவதற்கு சற்று முன்னர் அறிமுகமாகிறார்கள். அவர்களது பாத்திரப் படைப்பும் அவசரமாக உருவாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது.

அதேபோல் ஆராயியின் பாத்திரமும் சரியாக உருவாகி வரவில்லை என்றே தோன்றுகிறது. சிவராமனுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அத்தனைப் பெண்குழந்தைகளின் தாயான ஆராயிக்குத் தரப்படவில்லை. அவளது மனநிலை நாவலில் ஒருசில பக்கங்களில் சொல்லப்பட்டாலும் அதை இன்னும் விரிவாக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அவளது குழந்தைகளில் காமாச்சி மற்றும் முனியம்மா இருவர் மட்டுமே நாவலில் அதிகம் இடம்பெறுகிறார்கள். மற்ற குழந்தைகளைப் பற்றி அதிகம் சொல்லப்படவில்லை.

அதேபோல, நாவலில் பல மொழிகளின் வார்த்தைகள் புழங்கி வருவதால் அவற்றுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். இது வாசகர்களுக்கு மிகவும் உதவியாக அமைந்திருக்கும். அடுத்த பதிப்பில் இக்குறை களையப்படுமென நம்புகிறேன்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், முற்றிலும் புதிய கதைக்களத்தில், முற்றிலும் நம்பகமானதொரு மொழியில் ஒரு நல்ல நாவலாக இது அமைந்திருக்கிறது. சிங்கப்பூரின் தமிழ் நாவல்களில் முக்கியமான நல்வரவாகவும் “அம்பரம்” தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

***


கணேஷ்பாபு –

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார்.

இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.

தொடர்புக்கு : ganeshmodec@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular