எஸ். சண்முகம் கவிதைகள்

2

1

மதியநேர கண்ணயர்வில் 
வாரங்களாக அசைவஉணவின் ருசியை
நுனிநா சுவைக்காது போனாலும் 
மேல்வீட்டிலிருந்து ஈர்க்கும் 
ஆட்டிறைச்சியின் மணம்
நுழைவுக் கூடத்தை வியாபிக்கிறது

ஆட்டிறைச்சி கடைகள் திறந்திருக்கின்றன என்று 
மேல்வீட்டுக்காரர் படியில் இறங்குகையில்
தன் கைபேசியில் விலையை 
அசாத்தியக் குரல் ஏற்றத்துடன் சொல்கிறார்

பாதிமூடிய கதவுகளின் பின்னே
நான் நின்றிருப்பதை அவர் ஊகித்திருக்கக்கூடும்

எங்கள் சமையலறையில் 
குக்கர் கூடுதல்நேரம் சத்தமிட்டு
நெடுநாட்களாகிவிட்டன

அதுமட்டுமல்ல 
ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லாளிடம்
எவ்வளவு துரிதமாய் மதிய உணவு பரிமாறுவாய் 
என அடிக்கடி கேட்பதையே 
ஒரு மாதமாக மறந்திருந்தேன் 

அது ஒருபுறமிருக்கட்டும்
இம்முறை அரசாங்கம் வழங்கும்
நிவாரணத் தொகையில் 
ஆட்டிறைச்சி வாங்கி

நாசிதுளைக்கும் அஞ்சறைப்பெட்டியின் 
மசாலா லாவகத்துடன்
குருமாவும் பொன்நிற வறுவலும் சமைத்து
மதிய உணவின் தட்டில் இட்டு 
பசிதணிய உண்ட பின்னர்

மேல்வீட்டுக்காரர் கேட்க 
நானும் கைபேசியில் குரலுயர்த்தி 
நண்பர் யாரிடமாவது 
மதிய உணவின் இறைச்சி சுவையை
பகிர வேண்டும்.

2

ஒரு நாளின் எந்தப் பொழுதைத் தேர்ந்தெடுப்பது
குறிப்பாக வேறுபடுத்திக் கொள்ள
இப்போதெல்லாம்
சமிக்ஞைகள் ஒன்றுமே தென்படுவதில்லை

மானுட பேச்சொலிகளும்
காலணிகளின் சரசரப்பும்
காரணமின்றி எழும் உற்சாகக் குரலெழுப்புதல்களும்
இருசக்கர வாகனங்களினால்
நகரும் அமானுட ஊளைகளும் மடிந்த தெருவில்
ஒருவனாய் நின்றிருத்தலில் சுவையேதுமில்லை

தொலைக்காட்சியின் சேனல்கள் நொடிமுள்ளாய்
இமைக்கும் தோறும் நிமிடங்களுடன் பெயர
ஒரு கையில் ரிமோட்டுன்
மறுகையில் காபி குவளையின் சுகவெம்மை

பின்னிரவின் படபடப்பில் வாசிக்கப் புரட்டி கைவிட்ட
பல்வேறு நூற்களின் பக்கங்களின் எண்களெல்லாம்
முன்னிருக்கும் நாட்காட்டியில்
விடுமுறை நாட்களாகி நிற்கின்றன

பெருநகரத்துக் காலையின் குளிர்மையையும்
அன்மைக்காலமாக கூடுதலான சிட்டுக்குருவிகளையும்
இல்லத்துள் அனுமதிக்க
சாளரத்தை விசாலமாய்த் திறக்க
அனுமதித்ததே போதுமானது.

3

முன்கூட்டியே அறிந்திருந்தால் தவறவிட்டிருக்க மாட்டேன்
மிகைவடிவ இறகுகளே என்னைச் சுற்றிலும் 
இன்று உகுக்கப்பட்டுள்ளன
பறவையின் இறகுகள் அல்ல இவை

எனினும்
பறத்தலில் தரையிறங்கும் போது 
இல்லையெனில் 
மீண்டும் மேலெழுகையில் உகுத்தவையாக இருக்கக்கூடும்

பாதப்பாவல்கள் எதுவும் தட்டுப்படவில்லை
குரலும் கேட்டதாய் நினைவில்லை
நாசியும் பெண் ஆண் என
எச்சுகந்தத்தையும் உணரவில்லை
முன்பு உள்ளதைக்காட்டிலும் விழிகளில் ஒளிதேங்கியுள்ளது

தாழிடப்படாத பால்கனிக்கதவைத் தாழிடும் எண்ணமில்லை
வந்து சென்றது மறுபடியும் வரலாம்
அது ஒரு தேவதையாக இருப்பின் 
மெய்யாயினும் பொய்யாயினும் 
இம்முறைக் காணத்தவறக்கூடாது.

நானிருக்கும் இடத்ததைப் பற்றியோ
அன்றி மற்றுமுள்ளோரது வசிப்பிடங்களியோ
அறிந்திருக்க வாய்ப்பில்லை

அதுவும்கூட தீர்மானமாகக் கூறவியலாது
சுவாசச்சுழல் வட்டமிட 
கர்மாவையும் விதியையும் அண்டவிடாது
தன்போக்கில் இலக்கின்றி
நீந்திக் களிக்கின்றன கயல்கள்

***

4

நகர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டும் 
நாம் நகர்கையில் சுற்றிலுமுள்ளவைகளையும் 
ஒருமுறை அசைத்துவிட்ட பின்னர் 
வேறிடத்திற்கு போகலாம்

எதிரில் தொங்கவிடப்பட்டிருக்கும் துகிலோவியத்தில்
மஞ்சுஶ்ரீயின் விழிகள் பூமியை நோக்குகின்றன
அதில் பொன்வண்ணக் குழைவின் தகதகப்பு 
பரவிவருவது ஒரு திடீர்நொடியாகிறது

யூகிக்கச் சிரமமான இடத்திலிருந்து 
மெய்யல்லாத தோற்றத்துடன் அப்பறவை 
வெண்மஞ்சிற்குள்ளிருந்து வெளிப்பட்டு
சிறகசைத்து நெருங்க

கவியும் முழுஇருள் தேங்க ஆரம்பிக்கையில்
மஞ்சுஶ்ரீயின் புருவங்களுக்கும் அதரங்களுக்கும் மத்தியில்
அனந்தாய் முகிழும் மென்பிரகாசக் கீற்றுடன் 
கண்ணயர எத்தனிக்கிறேன் 
சூழ்ந்துள்ளவை எல்லாம் அவ்வண்ணமே இருக்க.

***

5

மூட மறந்த கதவின்வழியே 
குளிர்மை கசியும் இரவின் தோற்றம் 
பூரணமாய் தெரியாவிடினும் 
இனம்கொள்ளும் அளவிற்கு தென்படவே செய்கிறது 

உடலின் புறத்தேயும் அகத்தேயும் 
இன்றெதுவும் முழுமைகொள்ளாதது போலவே 
துயிலும் தத்தளித்து நள்ளிரவிற்குள்ளே 
அமிழ்ந்திருக்க

நீரிட்ட நினைவுடன் வெளுக்கும் நாழிகையில்
சமீபமாகப் புழுங்காத பால்கனியின் மூலையிலுள்ள 
தொங்கும் மண்தொட்டியில்
என்றோ ஊன்றியிருந்த படர்கொடியில் 
சிறுபூக்கள் இல்லாது போனாலும்
தற்செயலின் நற்கணமென
வெளிச்சமிழைவுடன் ஓரிரு சுருளிலைகள்.

***

6

நன்றியதலின் நிழல்காணாப் பெருநகரில் ஜீவித்த 
எங்களது தடயங்களையெல்லாம் இழப்பின் வசமளித்துவிட்டு 
பெயர்தலில் மூச்செறிந்த வண்ணமாய் 
தொலைவின் பேய்மைக்குள் பிரவேசித்து 
எல்லைக்கோட்டின் வசம் எங்களை ஈந்து நடக்கிறோம்

நெடுஞ்சாலைகளில் நிகழும் அதிவேகமாய் 
மேம்பாலங்களின் கீழ் தேங்கிய 
புகைப்படவங்களாய் 
எம் உயிர்வடிவங்கள் விடுபட்டன

ஆடைகளில் படிந்திருந்த
இவ்வாழ்விடத்தின் மண்துகள் 
கடக்கும் முன்னரே காற்றின் வன்மையில் பறக்க

உணர்வின்மையின் குற்றத்தைச் 
சுமந்து தீர்க்கவும் 
பெருநகரின் பாராமுகத்தை
உம்வசமே ஒப்புவித்துவிட்டு 

பிறப்பின் கொடியவிழ்ந்த அடிவானுக்குள் புகுகிறோம்
உணவும் விதையுமான 
எம் பூர்வநிலத்தின் மீதான நாட்டத்தின் துணையுடன்.

***

எஸ். சண்முகம் – கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். சிற்றிதழ் சூழலில் விமர்சனத்துறையில் அவரது பங்களிப்பு தலையாயது. ஆசிரியர் தொடர்புக்கு – s.shanmugam65@gmail.com

2 COMMENTS

  1. சண்முகம் கவிதை பிரமாதம்

  2. தற்காலம் வெளிப்படும் கவிதை சிறப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here