Thursday, December 5, 2024
Homesliderதொலைந்த பாடல்

தொலைந்த பாடல்

ஹேமி கிருஷ்

பொங்கித் தளும்பிய சபர்மதி ஆற்றின் கரையை அதன் போக்கில் விடாமல், போடப்பட்ட 3 அடி தடுப்பில் கைகளை தாங்கியபடி ஆற்றினைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை .ஆறு வானத்தின் நிறத்தை வாங்கிக் கொண்டு மினுமினுத்தது. செந்தீயின் நிறம்…..

” தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா” மனம் தனிச்சையாக நினைத்தது..
பாரதியாரை நினைத்ததும், அப்பா ஞாபகத்தில் வந்து போனார். கிருஷ்ணாவும் வந்து போனான்… மங்கை நெற்றிப் பொட்டில் கை வைத்துத் தேய்த்தாள். வேண்டாம்.. மறந்தாயிற்று. இனி என்ன?

அவன் படிக்கட்டுகளிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை மங்கை பார்த்தாள். வந்துவிட்டானா? இவன் யார்? ஏன் நம் இடத்திலேயே வந்து நிற்கிறான்?
ஒரு வாரமாக கவனித்தப் பிறகுதான் இவன் தினமும் வந்து நிற்கிறான் என்றே உறைத்தது. .. அலுவலக அல்லது பக்கத்து வீட்டு மனிதர்களைப் போல, இவனை இங்கே பார்ப்பது அவளுக்கு வினோதமாகவும் ஒவ்வாமையாகவும் இருந்தது.
நவ்ரங்கபுராவில் அவளது வீடு. அலுவலகம் பால்டியில் இருக்கிறது. தினமும் மாலை வீடு திரும்பும் முன், லால் தார்வாஜாவில் இறங்கி, ரிவர்ஃப்ரண்டிற்கு வந்து இப்படி இளைப்பாறிக் கொள்வாள்.

இருள் கவிழத் தொடங்கும் போது, தூரத்தில் வெளிச்சப் பொட்டுகளாய் கட்டிடங்களாய் தெரியும் போது, ஆற்றில் மின் விளக்குகளின் பல நிறங்கள் குழைந்து, மிதக்கத் தொடங்கும் போது, அங்கிருந்து கிளம்புவாள். மனம் லேசாகியிருக்கும்.

வழக்கம் போல் வீட்டிற்குள் நுழைந்ததும் வெறுமையும் புகுந்தது. அவளது அறையில் அம்மா இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது. இளமைக் காலத்தில் இடுப்பொடிய வேலை செய்து கடும் எலும்பு தேய்மானத்தில் அவதிப்பட்டு, மங்கைப் பற்றி கவலையிலேயே இறப்பும் அவள் அம்மாவை அழைத்துக் கொண்டது.
மாளவிகாவும், ரோகிணியும் சமையலறையில் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் மங்கையின் சித்தப்பாவின் மகள்கள். வீட்டில் இருக்கும் மூன்று அறைகளில் ஒரு அறை மங்கை குடும்பத்திற்கும், மற்றோர் அறை சித்தப்பா குடும்பத்திற்கும், மூன்றாவது அறை அவளது அத்தை, மாமாவிற்குமாக பிரிக்கப்பட்டு, நடுவில் இருக்கும் முற்றம் கூடிய வராண்டா எல்லாரும் கூடுமிடமாக இருந்தது. இப்போது அவளது அறையில் அவளுக்கு துணையாக மாளவிகாவும் ரோகிணியும் படுத்துக் கொள்கிறார்கள்.

நல்ல வசதியாக வாழ்ந்த குடும்பம். எதிர்பாரா பெரிய கடன் சுமையால் எல்லாவற்றையும் விற்று நொடிந்து போனார்கள். பிறகு நிலைமையை சமாளித்து கொஞ்சம கொஞ்சமாக மீண்டு ஒரு சுமாரான நிலைக்கு வந்தார்கள்.
அகமதாபாத்தில் நவ்ரங்க புராவில் நவீன கட்டிடங்களுக்கு மத்தியில் தேமே என்றிருக்கும், பழைய தமிழ்நாட்டு பாணியில் கட்டப்பட்ட வீட்டில் வாழும் தமிழ்பேசும் கூட்டுக் குடும்பம் இது வீட்டின் பெரியவர்கள் இயலாமையில் ஒடுங்கி விட்டார்கள். இவர்கள் மூவரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
மங்கை ஓடிப் போய் மாளவிகாவை கட்டிப் பிடித்து விட்டு, ரோகிணியை அழைத்துக் கொண்டு முற்றத்தில் போய் அமர்ந்து கொண்டாள். மூவருக்குமாக காபி போட்டு மாளவிகா, மங்கைக்கு ஒரு முத்தம் கொடுத்து, காபியும் கொடுத்து அவளருகில் அமர்ந்து கொண்டாள். மூவரும் வீட்டு வேலைகளை பேசிக் கொண்டே பகிர்ந்து செய்வார்கள். சமையல் வேலையை மட்டும் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எல்லாரும் சாப்பிட்டு தூங்கச் சென்றபின், இவர்கள் மூவரும், முற்றத்தில் இருளின் தழுவலிலும், நிலவின் வெளிச்சத்திலும், படுத்துக் கொண்டே அன்றைய பொழுதைப் பற்றி பேசிக் கொள்வார்கள். ரோகிணிக்கும், மங்கைக்கும் இரவு தூங்குவதற்கு முன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது… பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். அதுவும், மங்கைக்கு பாரதியின் பாடல்கள்.

” தீர்த்தக் கரையினிலே, தெற்கு மூலையில்”… என கேட்டப்படி அவளது அப்பாவின் நினைவை தவிழ விடுவாள். பாரதியாரின் பாடல்கள் என்றால் அவளது அப்பா வாசனுக்கு மிகப் ப்ரியம். பாரதி பாடல்களை இப்போதும் கேட்டால், அப்பா வாரியணைப்பது போல் ஒரு பிரம்மை வந்துவிடும். மங்கையின் ஆறேழு வயதில் அவளுடைய பிஞ்சு கைகளை அவருடைய நெஞ்சில் பற்றிக் கொண்டு, பெரிய கண்கள் முழிக்க வெற்றிலையை குதப்பியபடி, ” பாயுமொளி நீயெனக்கு” எனப் பாட ஆரம்பிப்பார். மிக சாதுவான சிரித்த முகமாக இருக்கும் அவர் பாரதி பாடல்களை மட்டும் கர்வம் மிளிர, கண்கள் பொங்க பாடுவார்.

மாலையில் வீட்டுக்கு வருகையில் பாடம் படிக்கும் மங்கையைப் பார்த்து “சின்னஞ்சிறு கிளியே. கண்ணம்மா. செல்வ களஞ்சியமே” எனப் பாடிக் கொண்டே உள்ளே நுழைவார். அடுப்படியில் புதைந்த பெண்களை உச்சி முகர்ந்து தைரியமூட்டிய பாரதியை, வாசன் சிலாகித்து சொல்லிச் சொல்லி, மங்கைக்கு முண்டாசுக் கவிஞன் மீது காதல் உண்டானது.. அவளுக்கு பாரதியையும் அப்பாவையும் வேறாக பிரித்துப் பார்க்கத் தோன்றியதில்லை.

மங்கையின் அப்பாவிற்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவர் பாடிய பாரதி பாடல்களும், கடவுள் பற்றிய அபிப்ராயமும் மங்கையின் ஒவ்வொரு அணுக்களிலும் புக ஆரம்பித்தது . ” நாளை போற இடத்துல நாள் கிழமைக்கு பூஜை புனஸ்காரம் செய்யலைனா உனக்குதான் பாதகம்” என அம்மா அழுவாள். மங்கையை மாற்ற அவள் அம்மா என்னவோ சாகசம் செய்தும் தோற்றுப் போனாள்.

சகலமும் அவளுக்கு அப்பாதான். சிறு காயம் பட்டால் கூட அப்பாவின் பரிவிற்காக அவரை கண்கள் தேட ஆரம்பித்து விடும். மாதவிடாய் காலத்தை ஒவ்வொரு மாதமும், மாடியில் போடப்பட்டிருக்கும் கூரை அறையில்தான் கழிக்க வேண்டும் என வீட்டினர் தீர்மானமாய் பிடிவாதமாய் சொன்ன போது, இவரும் மாடியறையில் இவளுடன் துணைக்கு வந்து படுத்துக் கொள்வார். தீட்டு பெண்ணை தொடக் கூடாது என்றபோதும், காதில் வாங்காமல் அவளை அரவணைத்தார். அவளுடைய எல்லா முடிவுகளுக்கும் துணை நின்றவர். கல்லூரியில் விருப்பமான படிப்பை படிக்க அவர் வீட்டுச் சுமைகளுடன் கடன் வாங்கிப் படிக்க வைத்தார்.வாழ்வதன் சாட்சியாக சுழன்று கொண்டிருந்த அந்த உயிர்க்கடிகாரம் ஒரு நாள் நின்று போனது. ஓரிரவில் வாசன் நாற்காலியில் அமர்ந்தவர் அமர்ந்தபடியே போய்ச் சேர்ந்தார். அப்பா இல்லாத உலகம் வேறுமாதிரியாக இருந்தது. இருப்பினும் அவள் அப்பா எப்போதும் அவள் கை பிடித்து சென்றதில்லை, முன் நடக்க வைத்து பின் வந்தவர். எந்த சூழ்நிலையையும் அடுத்தவர் துணையில்லாமல் தனியாக எதிர்க்கொள்ளப் பழக வேண்டுமென அவர் எடுத்த பாடம்தான் அவளுடன் துணைக்கு நின்றது நிரந்தரமாக..அந்த தனிமை அவளுக்கு பிடித்திருந்தது கிருஷ்ணா வரும் வரை,
“என்ன யோசனை… வா போய் தூங்கலாம்” என சொல்லி,மாளவிகா, மங்கையின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

சில நாட்களுக்கு பிறகு ஆற்றருகே தினசரி பார்க்கும் அவனை வங்கியில் நேருக்கு நேராக பார்த்த போது இருவருமே தர்மசங்கடமாக உணர்ந்தார்கள். அதன் பின் மானெக் சௌக், மார்க்கெட் என அடிக்கடி தென்படும் போதெல்லாம் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆற்றங்கரையில் தெரிந்தவனை வேறென்ன செய்வது தவிர்ப்பது தவிர.

அன்றைக்கு ஓர் விடுமுறை நாளில் ரோகிணி வீட்டிற்கு மூச்சு வாங்க ஓடி வந்தாள்.

“மங்கை.. சீக்கிரம் கிளம்பி வா” என்று பதறியபடி அவளை இழுத்தாள்.

“என்னாச்சு?”
“நீ வா சொல்றேன்” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு வெளியேறும் போது ..
“இதுக போக்கு சரியில்ல,. எங்கேடி போறீங்க? என அவர்களது அத்தை திட்டியதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஸ்கூட்டியை ரோகிணி ஓட்ட, பின்னமர்ந்தாள் மங்கை. அங்கிருந்து போடாக் தேவிற்கு சென்று கொண்டிருந்தார்கள்…

” எங்கடி போறோம் ? “

ஃபோட்டோ எக்ஸிபிஷனுக்கு” காற்றில் வார்த்தைகள் சிதறியபடி அவளை அடைந்தது.

“அங்க ஏன் இவ்ளோ அவசரமா?” மங்கைக்கு பதட்டம் தொற்றியது. போடாக் தேவிலிருந்த ஒரு பழமையான கட்டிடத்திற்குள் கூட்டிச் சென்றாள். அங்கே புகைப்பட கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ரோகிணி நேராக அவளை கூட்டிச் சென்று ஒரு புகைப்படத்தின் முன் நிற்க வைத்தாள். மங்கை பிரம்மை பிடித்தது போல் நின்று விட்டாள்.

மங்கையின் புகைப்படம். அதில் கண்கள் கண்ணீரினால் பூத்து கன்னத்தில் வழிந்திருந்தது. நேர்கோடாய் வழிந்த கண்ணீர், தெரு விளக்கில் மின்னியது. மை பூசிய கண்களில் சிவந்த நரம்புகள் வலைப் போல் தெரிந்தன, . காதில் பச்சை சிவப்பு கல் வைத்த ஜிமிக்கி ஜொலித்தது. இளஞ்சிவப்பு நிலா , வண்ணக் கலவையான சபர்மதி ஆறு, விளக்கொளியில் மங்கையின் முகம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து எடுக்கப்பட்ட புகைப்படம். மங்கைக்கு உண்டான உணர்வு அவளுக்கே விளங்க வில்லை. சில நொடிகள் அதையே உற்றுப் பார்த்தவள் பதட்டத்தை காண்பிக்காமலிருக்க ரோகிணியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.இருவரும் வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது.

” பாத்தியா? யார் எடுத்திருப்பா?” கேட்டாள் ரோகிணி.

” தெரியலைடி..” என மங்கை யோசித்தாள். அந்த நாள் நினைவிருக்கிறது. கிருஷ்ணாவின் திருமணம் அன்று… கல்யாணத்திற்கு செல்லாமல் இங்கு வந்தாள். நமக்கே தெரியாமல் அத்தனை நிதானமாக யார் எடுத்திருப்பார்கள். யோசிக்க யோசிக்க மூளையில் பொறி தட்டியது.

“அவனா? அவன் எடுத்திருப்பானோ?”வாய்விட்டு கேட்டாள்.
” எவன்” ரோகிணி திருப்பி கேட்டாள்.
” ரிவர்ஃப்ர்ன்ட்ல தினமும் ஒருத்தனை பாக்கிறேன். நான் வர்ற அதே நேரத்துக்கு வர்றான்.. ஆனா கையில கேமரா இல்லையே” குழம்பினாள்.

“இப்போ அங்க இருந்தானா அவன் நீ பாத்தியா?அங்கேயே விசாரிச்சிருக்கலாம்னு சொன்னேன்..நீ அவசரப்பட்டு இழுத்துட்டு வந்துட்ட.. “
” இல்லடி . சரியா கவனிக்கலை.” வந்ததும் மாளவிகாவிடம் பற்ற வைத்தாள்…
“மாலு.. நம்ம மங்கையை பாக்க தினமும் ஒருத்தன் ரிவர் ஃப்ரன்டுக்கு வரானாம் தெரியுமா? இதையே இன்னைக்குதான் சொல்றா. கல்லூளி மங்கை ” என்றபடி முழு விபரத்தையும் சொன்னாள்.

” ஏய் லூஸு சும்மா இரு.அவன் என்னைலாம் பாக்கல. நானே குழப்பத்துல இருக்கேன்” என சோபாவில் அமர்ந்தபடி குழப்பமாகவும் பதட்டமாகவும் யோசித்தாள்.

அவள் அத்தை வந்தாள், ” வீட்ல சொல்லிட்டு போற பழக்கமெல்லாம் வச்சுக்காதீங்க? உங்க அப்பங்காரன் வரட்டும் வச்சுக்கிறேன். அதென்ன மட்டு மரியாதை இல்லாத குணங்கள்” என திட்டியபடி துணிகளை முற்றத்தில் இருந்த கம்பியில் உலர்த்தினாள் இவர்கள் மூவரும் கண்டுகொண்ட சுவடே இல்லை. தங்கள் பேச்சை ரகசியமாக தொடர்ந்தார்கள்.

“அவன் எப்படி இருப்பான் சொல்லு” இருவரும் நச்சரித்தனர்.
” ஏய் போங்கடி”
“இல்லடி.எங்கயாவது பார்த்தா சொல்லலாம்ல…சொல்லு” என்றார்கள்.
” நல்லா உயரமா இருந்தான்., சுருள் முடி, மாநிறத்துக்கும் கம்மியான நிறம்… மீசை வச்சிருந்தான். தமிழ் பையன் மாதிரிதான் தெரிஞ்சான்..”
” ஸ்மார்ட்டா இருந்தானா?” என மாளவிகா கண்ணடித்து கேட்டாள்.

மங்கை முறைத்தாள் “அப்படித்தான் வச்சுக்கேயேன்.. அவன்தான் எடுத்தானானு தெரியாது. ஆனா அவன் பார்வை சந்தேகமா இருக்கு.பாக்கலாம்”என்றாள்.
மறு நாள் மாலை பதட்டத்துடன் சபர்மதி ஆற்றங்கரைக்கு வந்தாள். முன் பின் தெரியாத ஒருவனிடம் பேசுவது எரிச்சலான விஷயமாக தோன்றியது மங்கைக்கு.
அன்று அவன் அவளுக்கு முன்னதாகவே வந்திருந்தான். அவன் யாரையோ எதிர்ப்பார்ப்பது போல் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். மங்கையை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவனருகில் சென்று மெதுவாக கூப்பிட்டாள், அவன் பதட்டமாகவே பார்த்தான்
“நீங்கதான் என்னை ஃபோட்டோ எடுத்தீங்களா? ” என குஜராத்தியில் கேட்டாள்.
“எனக்கு புரியலை. நான் தமிழ் நாடு”ஆங்கிலத்தில் சொன்னான்.

“ஓ. தமிழா நீங்க?.. நீங்கதான் என்னை ஃபோட்டோ எடுத்தீங்களா?”

“ஆமாங்க.. அது வந்து நானே உங்ககிட்ட சொல்லணும்னுதான் தினமும் வர்றேன்.. ஆனா “ என இழுத்தான்.

” கொஞ்சமாவது அறிவு இருக்கா? என்னோட அனுமதி இல்லாம நீங்க எப்படி என்னை எடுக்கலாம்? அதும் கண்காட்சில வைக்க எவ்ளோ தைரியம். எங்க வீட்ல பார்த்தா அவ்ளோதான் “ என திட்ட ஆரம்பித்தாள்.

” மன்னிச்சுக்கோங்க… அன்னைக்கு உங்களை எடுக்கணும்னு நோக்கத்துல நான் இல்லை. .. ஊரை சுத்திப் பாத்துட்டு இருந்தேன். அன்னைக்கு உங்க வாடிய முகத்தை பார்த்ததும் எதையும் யோசிக்காம எடுத்துட்டேன் மன்னிச்சுக்கோங்க!” கெஞ்சினான்.

“ அங்க வச்ச போட்டோவை நீங்க எடுத்துடுங்க. இன்னைக்கே ” என சொன்னாள். அவன் மறுப்பு தெரிவிக்காமல் எடுத்து விடுவதாகக் கூறினான்.

மறு நாள் அவன் புகைப்படத்தை எடுத்துவிட்டானா என மூவரும் மீண்டும் அந்த கண்காட்சி இடத்திற்கு சென்றார்கள். சொன்னபடியே அவளுடைய புகைப்படத்தை எடுத்திருந்தான். அவளுக்கு தன்னுடைய அந்த புகைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டுமென தோன்றியது.

மறு நாள் அவனை மீண்டும் ஆற்றங்கரையில் சந்தித்தாள்… அவனாகவே வந்து பேசினான்…” ஃபோ ட்டோவை எடுத்துட்டேங்க….”

” பார்த்தேன், நன்றி… அந்த ஃபோட்டோ நிஜமாவே அழகா இருந்துச்சு, இதுவரை அப்படி என்னை நானே பார்த்ததில்லை.. “

” நீங்க இன்னைக்கும் திட்டுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்”

” இல்ல..அந்த போட்டோவை பாத்தப்போ எனக்கு உண்டான உணர்வும், .பின்ணணில இசைச்சிட்டு இருந்த… எல் வால்ஸ் இசையும் என்னை என்னமோ பண்ணிடுச்சு. அப்படியே உறைஞ்சு நின்னுட்டேன். .”

“அப்றம் ஏன் அதை எடுக்க சொன்னீங்க.. ஃபோட்டோவையே அழிக்க சொன்னீங்க?”

” ஆமா… என் அனுமதி இல்லாமல் எடுக்கிறது தப்புதான் ”

” தெளிவா இருங்க மேடம். எல்லாரையும் குழப்பாதீங்க” சொன்னான் சிரித்துக் கொண்டே.

வீட்டில் இரவில் வழக்கத்துக்கு மாறாக எல் வால்ஸ் மற்றும் டிமிட்ரியின் வால்ட்ஸ் 2 இசையையும் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தாள். ரோகிணி மாளவிகாவின் காதில் ஏதோ சொல்லி, இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

” ஏய் என்ன சிரிக்கிறீங்க?”
” அதுல்ல.. இந்த ம்யூஸிக்தான் அந்த கண்காட்சில போட்டாங்களாமே..” என சிரித்தபடி மாளவிகா கேட்டாள்.
இவள் எழுந்து இருவரையும் மாற்றி மாற்றி தலையணையில் அடித்தாள்.
” போடி… பாட்டு கேக்கற மூடையே கெடுத்திட்டீங்க” என்றபடி அலைபேசியை அணைத்தாள்.

மறு நாளும் ரிவர்ஃப்ரன்டில் அவனைப் பார்த்தாள். அவனாக பேசுவான் என நினைத்து அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நதிக்கரையில் இருக்கும் கான்க்ரீட் இருக்கைகள் எல்லாம் மனிதர்களால் நிரம்பிருந்தன; பலூன், துப்பாக்கிகளை விற்பவர், ஒவ்வொரு இருக்கையாய் சென்று குழந்தைகளிடம் ஆசை காட்டிக் கொண்டிருந்தார்.

நடைபாதை ஓரத்தில் பானி பூரி விற்பவரிடமும், மசாலா சாட் விற்பவரிடமும் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. ஆரஞ்சு மஞ்சள் நிற சாயமூட்டி தரும் ஐஸ் கோலாவை வாங்க சில குழந்தைகள் அடம் பிடித்துக் கொண்டிருந்தன. சில குழந்தைகள் அந்த ஐஸ் நிறத்தை மூக்கிலும், தாடையிலும் அப்பிக் கொண்டு சில்லிடும் உணர்வை சிலிர்ப்புடன் சுவைத்துக் கொண்டிருந்தன. இன்னும் சிலர் வெறுமனே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனும் அவளை போலவே அவளை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அப்படியே நடைபாதையில் நடந்துவிட்டு படியேறி மேலே சென்று விட்டான்.
மங்கைக்கு ஏமாற்றமாக இருந்தது… ” சரி. அவன் யார்…அவன் எதுக்கு நமக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.. வழிப்போக்கன் தானே…” என சமாதனம் செய்தாலும், அவளை எடுத்த புகைப்படமும், அவன் முகமும் அவளுக்குள் பரிதவிப்பை உண்டாக்கியது

அந்த வாரம் முழுவதும் ஆற்றங்கரைக்கு செல்லவில்லை. அவன் தன்னை கண்டுகொள்ளாமல் போனதுதான் உண்மையான காரணமாக இருந்தாலும், நான் ஒன்றும் உன்னை எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனுக்கு மறைமுகமாக சொல்லிட, அங்கு போகாமல் தவிர்த்தாள்.

சில நாட்களில் சபர்மதி ஆசிரமத்தின் அருகே மிக அருகில் மீண்டும் அவனைப் பார்த்தாள்.

“எப்படி அடிக்கடி உங்களை பாக்கிறேன்” என அவளாகவே கேட்டாள்.

“ஒரே ஏரியால இருக்கிறோம் போல. ? வாங்க. அந்த படிக்கட்டுல உட்காந்து பேசலாம்” எனக்கேட்டான். மங்கை தயங்கினாள்.
“வேலையா இருந்தா, பரவாயில்லை. இன்னொரு நாள் பேசலாம்”
“ஆமா. கொஞ்சம் லீ லேண்டுக்கு போறேன்”
“அதெங்க இருக்கு?”
“அதோ நடக்கிற தூரம்தான்”
“சரி.. உங்க கூட நடந்துட்டே வரட்டுமா நீங்க தப்பா நினைக்கலைன்னா”
“ஓ சரி” என்றபடி நடக்க தொடங்கினாள்.
“என் மேல கோபமா இருக்கீங்க போலிருக்கு?” என்று கேட்டான்.
” இல்ல. கோபம் வர்ற அளவுக்கு நீங்க எனக்கு பழக்கமில்லையே?”
” அது வும் சரிதான்… ரிவர் ஃப்ரண்ட்ல இப்போ பாக்கறதில்லையே”
“அதுவா.. கொஞ்சம் பிஸி” என தலையை ஆட்டியபடி சொன்னாள்.
” ஓ!. உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்? உங்க சொந்த ஊர் எது?”
“தாய்மொழி தமிழ்தான்…பலதலைமுறையா இங்கதான் இருக்கோம். தமிழ்நாட்டுல திருச்சி பக்கம்னு சொல்வாங்க. நான் இங்க ஒரு ப்ரைவேட் கன்சர்ன்ல வேலை பண்றேன்”
“உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா? விருப்பமில்லைனா வேண்டாம்”
“மங்கை…”
” வாவ். நல்ல தமிழ் பேர் “
” எங்கப்பாக்கு தமிழ்ல ஈடுபாடு அதிகம், தமிழ்ல எழுதப்படிக்க சொல்லித் தந்தார். புத்தகங்கள், பாரதிப் பாட்டுன்னு அறிமுகம் செஞ்சார்… தினமும் தூங்கறதுக்கு முன்னாடி பாரதி பாட்டை கேட்டுதான் தூங்குவேன், ஏனோ எங்கப்பா என்கூட இருக்கிற போலவே இருக்கும்”
“ரொம்ப நல்ல விஷயங்க…என் பேர்லாம் கேக்க மாட்டீங்களா”?
” மன்னிக்கணும்.. உங்க பேர் என்ன? என்ன பண்றீங்க?”
” என் பேர் அகிலன்.. நான் போட்டோகிராபர். . ஊர் திண்டுக்கல். நிறைய இடங்களுக்கு பயணம் செஞ்சு போட்டோ எடுப்பேன். உணர்வுகளை பிரதிபலிக்கிற எளிமையான முகங்கள்தான் எனக்கு மூலதனம். அந்த மாதிரியான முகங்களைத் தேடி நாடு முழுக்க பயணப்பட்டுட்டே இருக்கேன்..”
“ஓ! நீங்க ஊருக்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்”
” இல்ல துர்கா பூஜைக்கு, இங்க நல்லா இருக்கும்னு சொன்னாங்க. இந்த கலாச்சார அழகை கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துட்டு போலாம்னு இருக்கேன் “
” ஓ..சரி..இங்கதான் நான் போகணும். இன்னொரு நாள் பாக்கலாம்” என்றாள்.
” நாளைக்கு பாக்கலாமா ரிவர்ஃப்ரன்ட்ல?.. நான் வெட்டியாதான் இருக்கேன். எனக்கு இங்க தமிழ் பேச கிடைக்க ஒரே ஆள் நீங்கதான் ” .
“சரி “என்றாள்.
” உங்ககிட்ட புது ஆளுங்கற உணர்வே வரலை. பழகினவங்ககிட்ட பேசற மாதிரிதான் இருக்கு” .
அவள் முறைத்தபடியே உள்ளே சென்றாள்.

அதன் பின் அவனுடனான உரையாடல்கள் சபர்மதி நதிக்கரையில் தினமும் தொடர்ந்தது. இருவரும் பெரிதாக எதிர்ப்பார்ப்பில்லாமல் பேசத் தொடங்கினார்கள்.
பிடித்த வேலை,பயணம் செய்வது, கிடைக்குமிடத்தில் உண்பது, தூங்குவது, புதிய முகங்களை புகைப்படம் எடுப்பது, கண்காட்சி வைப்பது என அவன் சொன்ன வாழ்க்கை முறையை ரசித்தாள்.

மொழி தெரியாத புது ஊர் என்பதால் கடைவீதிக்கு மங்கை உதவியுடன் அவன் சென்றான்.. இங்கேயே பிறந்து,வளர்ந்த மங்கைக்கும் இவனிடம் பேச விருப்பப்பட்டதற்கு காரணம் உண்டு. வீட்டு ஆட்களை தவிர வேறொருவரிடமும் இதுவரை தமிழில் கதையளந்ததில்லை. இது அவளுக்கு புதிதாகவும், அவளுடைய வெறுமையான மனதிற்கு விடுதலை தந்தது போலவும் இருந்தது.
ஒரு நாள் அவன் அலைபேசியில் “பாயுமொளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு! தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு! ” என அழைப்பு வந்தது. அவன் முழு வரிகளையும் ஒலிக்க விட்டு பின் எடுத்து பேசினான்.
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து..

” இது எப்ப இருந்து? என குறும்புடன் கேட்டாள”
” எது?”
“பாரதியார் பாட்டை ரிங் டோனா வச்சது”
” உங்களுக்கு பாரதியார் பாட்டு ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சதும் ” என சொல்லிச் சிரித்தான். பின் மீண்டும் அந்த பாடலை அலைபேசியில் ஒலிக்க வைத்தான்.

வயலின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒலித்த அந்த பாடலை, தகதகவென மிதந்த ,செக்கச் சிவப்பு சபர்மதி ஆற்றின் மேலெழும்பிய சிறு அலைகளை பார்த்தவாறு அமைதியாக கேட்டனர். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியான அந்த நேரத்தை கலைத்துவிட்டு, அவள் அவனிடம் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பினாள். அவனும் ஏனென்று கேட்கவில்லை.
அந்த பாடலைக் கேட்டதும், அவளுக்கு அப்பா ஞாபகம் வந்தது. சுய பச்சாதாபம் வாழ்வில் என்றும் உனக்கு தோன்றிடக் கூடாது என அவர் அவளுக்கு உபதேசித்தது நினைவுக்கு வந்தது. அதையும் மீறி அழுகை வந்தது. பெருமூச்சு ஒன்றை விட்டு இறுக்கத்தை தளர்த்திக் கொண்டாள்.

இருவருமே அலைபேசி எண்களை பரிமாறியதில்லை. காரணம் வீட்டிற்கு வந்த பின்னும் இரவு வரை அலைபேசியில் தொடரும் பழக்கம் வேண்டாம் என மங்கை சொல்லியிருந்ததால் அவனும் அவள் எண்ணைப் பெற முயற்சிக்க வில்லை.
ஒருமுறை அவனை வீட்டிற்கு அழைத்து வந்து அலுவலக நண்பன் என அறிமுகம் செய்த போது, சித்தியும், அத்தை, மாமாவும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்கள்.

மங்கைக்கு தர்மசங்கடமானாலும், அகிலன் அதனை பெரிதாக நினைக்கவில்லை மாறாக அவளை சமாதானப்படுத்தினான். அவள் தங்கைகள், அவனைப் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் சரியாக பேச முடியாததால், ஒரு விடுமுறை நாளில் அவள், அவளது தங்கைகளுடன் சேர்ந்து அவனை சந்தித்தாள். அவர்கள் மூவரும், அவனுடன் அகமதாபாத்தின் பழமையான இடங்களுக்கு சென்றார்கள்.

படிக்கிணற்றில் அவள் தங்கைகள், தங்களை புகைப்படம் எடுக்கச் சொல்லி அகிலனின் புகைப்படக் கருவியில் எடுத்துக் கொண்டனர். அன்று முழுவதும் அவள் சிரித்தபடியே இருந்தாள். அவனும் கூட.

“பெண்கள் எல்லோரும் தேவதைதானே?” ஒருநாள் சபர்மதி நதிக்கரையில் அவர்களின் வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது, எடுத்ததும் இப்படிச் சொன்னான் அகிலன்…

“இல்லை.இப்படி சொல்லிச் சொல்லி, பெண்களை பயன்படுத்திக்குது இந்த ஆண் சமூகம்” ஆட்சேபித்தாள்.

“உங்க அனுபவம் அப்படி இருக்கலாம். ஆனா… நான் பார்த்த பெண்கள் நிஜமாவே தேவதைகள்தான்.. என் அம்மா, என் அக்கா, என் பெண் தோழிகள்” சில நொடிகள் விட்டு, “நீங்களும்தான்!..நான் அவர்களுக்கு எதுவுமே செஞ்சதில்லை. நான் அவ்ளோ நல்லவன்லாம் இல்லைதான். இருந்தாலும் பிரதிபலன் இல்லாம அன்பை மட்டுமே எனக்கு தந்திருக்காங்க. இதோ முன் பின் தெரியாம இங்க வந்து பழகின நீங்க கூட அப்படித்தான் எனக்காக மெனக்கெடறீங்க..”

“நான் செய்யறதும் கொஞ்சம் சுயநலமாத்தான் அகிலன்… ஒரே மாதிரியான மனுஷங்களை பார்த்து சலிக்கிறப்போ, புதுசா ஒருத்தரை பார்த்தா பழகிப் பாக்கலாம்னு தோணும்ல,அப்படித்தான்.”
” புகழை விரும்பாம உண்மை சொல்றீங்க. அப்போ நீங்க தேவதைதானே”
” நான் தேவதையா இருக்க விரும்பலை.” என்றாள்.
” விரும்பினாலுமே எல்லோராலும் தேவதையாக முடியாது. எனக்கு வர்ற உணர்வை நீங்க உணரணும்னு அவசியம் இல்லை.” வெடுக்கென சொன்னான்.
” நான் கிளம்பறேன் கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி சட்டென எழுந்தாள்.
“கோபமா? உங்களை காயப்படுத்திட்டேனா ?” அவன் கேட்டான்.
“இல்ல..நிஜமாவே எனக்கு வேற வேலை இருக்கு. உஸ்மான் புரா வரைக்கும் போகணும்.அப்றம் பாக்கலாம்” என்றபடி கிளம்பினாள். மங்கை, லால் தார்வாஜாவில் ஆட்டோ ஒன்றைப் பிடித்து நேராக வீட்டிற்குப் போனாள்.

” இவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் நாட்டின் ஏதோ ஒரு திக்கிலிருந்து வந்தவன், எந்த புள்ளியில் நம் வாழ்வில் இணைந்தான்? எதற்காக இவனிடம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன்? என்ன அர்த்தம் வந்துவிட்டது இந்த உறவில்? ஒரு துக்கத்திலிருந்து விலக இன்னொரு துக்கத்தில் போய் மாட்டிக் கொள்ளும் மனம் ஒரு பிசாசு”என பரிதவித்தாள்.

வீட்டிற்கு சென்று மாளவிகாவின் மடியில் தலைவலிக்கிறதென படுத்துக் கொண்டாள்.முன்னெப்போதோ படிந்திருந்த நிராகரிப்பின் வலி, புதியவனின் அருகாமை எல்லாம் மனதை இம்சை செய்தது. மறுநாள் நல்ல மழை ! மாலையில் மங்கையின் அலுவலக வாசல் முன் அவன் குடையில் காத்துக் கொண்டிருந்தான். அலுவலகம் விட்டு வெளியே வந்த மங்கைக்கு அவனைப் பார்த்ததும் ஆச்சரியம்! பிசாசு மனம் அவனைப் பார்த்ததும் சிரித்தது.

“என்ன இங்க?” ஆச்சரியமாய் கேட்டாள்.

” இல்ல நேத்து நீங்க வேற கோவிச்சுகிட்டீங்களா? மனசே சரி இல்லை. உங்ககிட்ட உரிமை எடுத்துகிட்டேனோனு தோணுச்சு. அதான் இங்கேயே வந்து மன்னிப்பு கேக்கலாம்னு வந்தேன்” என்றான். குடையில் விழுந்த மழைத் துளிகள் தடதடவென அவன் பேச்சுக்கு தாளமிட்டது.

அவள் சிரித்தாள்..” பரவாயில்ல, கொஞ்சம் மூட் அப்செட் ஆயிடுச்சு. அப்புறம் மறந்துட்டேன்.. நாளைக்கு மீட் பண்ணலாம்” என சொன்னதும் அவன் சரி என விடைபெற்றுக் கொண்டான்.மறு நாள் அவர்களின் வழக்கமான சபர்மதி நதிக்கரையிலிருந்த மர இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இருக்கை குளிர்ந்திருந்தது. முந்தைய நாளின் மிச்சமிருந்த மழை மதியம் வரை பெய்து ஓய்ந்திருந்தது.. புற்களின் பச்சைவாசம் ஈரக் காற்றில் மிகுந்திருந்தது. சிறகுகளை படபடவென சிலிர்த்தபடி பறவைகள் நதியின் மேல் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன.

” உங்க கிட்ட ஒன்னு கேக்கறேன் தப்பா நினைக்க வேண்டாம்” எனக் கேட்டான்
” பரவாயில்லை சொல்லுங்க”
“அன்னைக்கு ஏன் அழுதீங்க…. விருப்பமில்லைனா சொல்ல வேண்டாம்”
என்னைக்கு?
” நான் ஃபோட்டோ எடுத்தேனே அன்னைக்கு” என்றான்.
சிரித்தாள்…” அன்னைக்கு கிருஷ்ணா வோட கல்யாணம்… கிருஷ்ணா யார் தெரியுமா? என்னோட கணவன்”
அகிலன் நம்ப முடியாமல் அதிர்ச்சியாய் பார்த்தான்.

“ஒரு விசேஷத்துலதான் அவனை பார்த்தேன். அவனாதான் வந்து வந்து பேசினான். அப்பா இறந்த சமயம், அப்போ வந்த உறவு அவன்.. எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பிட்டே இருப்பான். அப்புறம் மெல்ல பேச ஆரம்பிச்சு, ரெண்டு பேருக்கும் பரஸ்பரம் பிடிச்சு போச்சு. தினமும் காலேஜுக்கு போறப்போ, வர்றப்போ, ஜாமல்பூர் பஸ் ஸ்டாப்ல வந்து நிப்பான். நமக்காக ஒருத்தர் எப்பவும் இருக்காங்கன்ற எண்ணமே எனக்கு அவ்ளோ சந்தோஷத்தை தந்துச்சு. ரெண்டு பேரும் காதலிச்சோம்… தினமும் மணிக்கணக்காய் விடிய விடிய சளைக்காமல் பேசியிருக்கிறோம். ரொம்ப அழகா காதல் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. கல்யாணமும் பெரியவங்க ஆசிர்வாதத்தோட நடந்துச்சு..அவங்க வீட்ல கால் வைச்ச உடனேயே கிருஷ்ணாவோட அம்மா என் கடவுள் மீதான அபிப்ராயத்தை சுரண்டுனாங்க… என் அம்மா வீட்ல கூட திட்டிட்டே சகிச்சுகிட்டாங்க. ஆனா இது புகுந்த இடம் இல்லையா? நான் மாறனும்னு உறுதியா இருந்தாங்க. என்னால மாற முடியலை. எப்படி நான் வேற யாரோவா மாற முடியும்? கிருஷ்ணா நான் ஈகோவில் திமிரில் இப்படி செய்யறதா சொல்வான். என்னை பற்றி நல்லா தெரிஞ்சும் அவன் அப்படி சொன்னது எனக்கு அத்தனை வலியா இருந்துச்சு. கேட்டா, எப்படியும் என்னை மாத்திடலாம்னு நினைச்சானாம்” வலியுடன் புன்னகைத்தாள். பின் அவளே தொடர்ந்தாள்.

“திடீர்னு ஏக கட்டளைகள் , கட்டுப்பாடு உங்க முன்னாடி முளைச்சு கண்ணை மறைச்சா எப்படி இருக்கும்? அப்படி இருந்துச்சு எனக்கு. தினமும் பிரச்சனை, சண்டை. நான் ஒருத்திதான் அவங்களுக்கு அந்நியமா தெரிஞ்சேன். அப்புறம் அவனாதான் எங்கிட்ட விவாகரத்து கேட்டான்.

சும்மா இருந்த என் மனசை கலைச்சு என்னை கல்யாணமும் செஞ்சு அப்புறம் என்னை வேணாம்னு போயிட்டான். விவாகரத்தும் வாங்கியாச்சு. அந்த கவலையிலேயே அம்மாவும் என்னை விட்டு போயிட்டாங்க. மனசால ரொம்ப பாதிச்சிட்டேன். திடீரென சூனியமான உணர்வு.

எப்படியும் திரும்ப வருவான் என நினைச்சப்போ ஒரு நாள் அவனுக்கு ரெண்டாவது கல்யாணம்னு கேள்விப்பட்டேன். உடைஞ்சு போனேன். இருந்தாலும் அவன் கல்யாணத்துக்கு நானும் பெரிய மனசு பண்ணி கிளம்பினேன். ஆனா போக முடியாம இங்க வந்து அழுதேன்.. பைத்தியம் பிடித்தது போல் இரவு முழுக்க அழுதேன். போதும் இனி ஒருபோதும் அவனுக்காக அழக் கூடாது . அவன் இழப்பு அப்படியொன்னும் எனக்கு வலிக்கலைங்கறதை அவனுக்கு உணர்த்தனும்னு நினைச்சேன். இதோ இப்போ வரைக்கும் அப்படித்தான் தைரியமா இருக்கேன் ” என்றாள்.
சில நொடி அமைதிக்குப் பின்..

“ஐ லவ் யூ”

” என்ன?” .

” நாம் ஓடிப் போலாமா? என சிரித்தபடி கேட்டான்.
“ப்ளடி நான் என் கவலையை சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன லூஸு மாதிரி பேசற?”

“ ஏய்.. நான் உண்மையாதான் சொல்றேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். முதல் நாள் வலி தெரியற இந்த கண்களை பாக்கிறப்பவே ரொம்ப பிடிச்சு போச்சு. உங்க முகத்துல எப்பவும் ஒரு அமைதி இருக்கு தெரியுமா? அதுதான் போட்டோ எடுக்க தோணுச்சு. எந்த நிபந்தனையும் இல்லாம உங்களை என்னால நேசிக்க முடியும். நீங்க காதலிச்ச கிருஷ்ணா மாதிரி இல்ல நான்”

“இதெல்லாம் காதலிக்கற வரைக்கும் தான்…போதும்”

“இப்படித்தான் ! தவறானதை நம்பி மோசம் போறதும், சரியானதை சந்தேகப்படறதும் தான் இந்த உலகம். என்னோட தோற்றம், என்னோடவேலை, இப்படி நாடோடி மாதிரி இருக்கிறதால என்னை நம்பத் தோணலைல்ல?”

” அப்படி இல்ல.. கல்யாணம்னு வர்றப்போதான் எல்லாருடைய முகத்திரை கிழியுது..”

“ இவ்ளோ நாள் எல்லாம் எங்கேயும் நான் தங்கினதில்லை. யார்கூடவும் ஒட்டினதுமில்ல. மனம் போன போக்குல வாழ்ந்த நான் உங்களுக்காத்தான் தங்கினேன். ”

” இப்போதைக்கு எதுவும் வேண்டாம் !”

“உங்களுக்கு என்னை பிடிக்கலைனா, இனி எப்பவும் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

அவள் எதும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள். அவள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் தினமும் அவன் மங்கையின் வருகைக்காக சபர்மதி நதிக்கரையில் காத்துக்கொண்டிருந்தான். தெரிந்தும் மங்கை அங்கு செல்வதை தவிர்த்தாள். செல்லவேண்டுமென பிசாசு மனம் ஊஞ்சலாடிக் கொண்டேயிருந்த போது பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டாள். 10 நாட்கள் மேலாகியிருக்கும்.மனது கேட்காமல் அவனை சந்திக்க ரிவர்ஃப்ரெண்டிற்கு சென்றாள். அவன் அங்கு இல்லை. அதன் பின் வந்த நாட்களிலும் அவன் வந்திருக்கவில்லை.

ஒரு நாள் இரவு அவளுடைய சித்தப்பா, அவளருகில் அமர்ந்து பேசினார். தூரத்து உறவினர் பையன். அவனுக்கும் இது இரண்டாவது திருமணம். சென்னையில் வேலை பார்ப்பதாகவும், அவனுடைய ஜாதகம் பொருத்தமாக இருப்பதால், பேசி முடிக்கலாமா என அவளை கேட்டார்.

மங்கை எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்ததைப் பார்த்து தனது அறைக்கு சென்றுவிட்டார். அன்றிரவு தூங்கும்போது அருகில் படுத்திருந்த ரோகிணி மெதுவாக மங்கையை கூப்பிட்டாள் “அக்கா!”

மங்கை கண் திறந்து அவளைப் பார்த்தாள்….” அகிலன் நம்பர் வச்சிருக்கியா? என மெதுவாக கேட்டாள். மங்கைக்கு கண்ணீர் குபுக்கென எட்டிப் பார்த்தது. ரோகிணியும், மாளவிகாவும் அவளை கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தினார்கள்.மறுநாள் அவளுடைய சித்தப்பா மீண்டும் கல்யாணம் பற்றி பேசினார். அருகில் அத்தையும் இருந்தார்.

“ மங்கை உனக்கு இந்த வருஷம்தான் குருபலன், அப்றம் 5 வருஷம் கழிச்சுதான் வருது. உனக்கப்புறம் மத்த ரெண்டு பேரும் இருக்காங்க ஞாபகம் வச்சுக்கோ” என அத்தை சொன்னாள்.

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம். 5 வருஷம் ஆனாலும் பரவாயில்லை. என்னை கட்டாயப்படுத்த வேணாம். நல்ல வரன் வந்துச்சுன்னா மாளவிகாவுக்கு முடிச்சிடுங்க எனக்கு சந்தோஷம்தான்” என சொன்னாள்.

அத்தை ஏதோ சொல்ல ஆரம்பித்ததும், அவள் சித்தப்பா “. உன்னுடைய விருப்பம் எப்பவோ சொல்லு. அப்போ பாக்கலாம் . அண்ணா இருந்திருந்தா இதைத்தான் செய்திருப்பார் “என தலை வருடி சொல்லிவிட்டுப் போனார். அத்தை புலம்பியபடியே இருந்தாள். மங்கை எங்கோ தொலைத்தாளோ அங்கேயே அகிலனை தினமும் தேடிக் கொண்டிருந்தாள். அவன் அருகாமை அப்பாவை நினைவு படுத்தியதாக அவளுக்கு தோன்றியது.

அன்றொரு மாலை அந்த சபர்மதி ஆற்றங்கரையில் மங்கையுடன் ரோகிணியும் துணைக்கு வந்திருந்தாள் வழக்கமாக அவனும் அவளும் அமர்ந்து பேசுமிடம் வெற்றிடமாக இருந்தது.. அவன் வருகை நின்று போயிருந்தது.

“தூய சுடர் வான் ஒலியே ! சூரையமுதே கண்ணம்மா..” என பாரதியின் வரிகள் சபர்மதி நதியின் அலையோடு அலையாக மெல்ல தவழ்ந்து போய்க் கொண்டிருப்பதாக தோன்றியது.

“ கவலைப்படாத மங்கை. அகிலன் திரும்ப வருவார் பாரேன். அவர் ஒன்னும் கிருஷ்ணா மாதிரி இல்லை “ என ரோகிணி சொன்னாள்.
“ எப்படி சொல்ற?”

“ ஒரு தடவை நாம எல்லாரும் அவரை மீட் பண்ணினோம்ல. அப்போ உனக்கு தெரியாம உன்னோட நம்பரை அவர் வாங்கிகிட்டார். நீ திட்டுவேனுதான் உங்கிட்ட நான் சொல்லலை” என அவள் சொன்னாள்.

மங்கைக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. சிறு நம்பிக்கை துளிர்த்தது. இருவரும் குறும்பாக ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மங்கையின் அலைபேசிக்கு ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது…

  • ஹேமி கிருஷ் – பெங்களூரில் வசிக்கும் இவருக்கு, மழை நண்பன் என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.. தொடர்புக்கு -hemikrish@gmail.com
RELATED ARTICLES

3 COMMENTS

  1. Tholaintha padal story is excellent.. awesome……what an end…… Really superb
    வாழ்த்துக்கள் ஹேமிகிருஷ்….

  2. மென் உணர்வுகள் ரொம்ப அழகா வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது…கதைக்களம் வர்ணிப்பு ரொம்ப நல்லா இருக்கு….. பெரிதாக விவரிக்க படாமலேயே மங்கையின் மென்சோகம் அதன் மேலான நாயகனின் ஈர்ப்பு மொத்த கதையையும் ஒரு ‘ கிளிக்கில் ‘ அழகான பிரேமில் கொண்டு வரப்பட்டுள்ளது இக்கதையின் சிறப்பு….. புற விவரணைகளும் ,உவமைகளும் கொஞ்சம் மேலதிகமாக இருந்திருந்தால் இக்கதை இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்…

  3. ஆற்றங்கரையில் அரும்பிய அழகிய காதலை அதைவிட அழகாக சொல்லியிருக்கிறார் ஹேமி கிருஷ்…!
    Worth reading it, end was class !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular