Thursday, February 12, 2026
Homeஇதழ்கள்2025 இதழ்கள்ஐந்து அம்சங்கள்

ஐந்து அம்சங்கள்

பாவண்ணன்

காந்தியடிகள் எழுதிய கட்டுரைகளும் கடிதங்களும் அறிக்கைகளும் தொகுக்கப்பட்டு நூறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. இன்றைய இணைய கால வாசகர்கள் இருந்த இடத்திலிருந்தே அவற்றைப் படிப்பதற்கேற்றவாறு அவை அனைத்தும் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

காந்தியடிகள் தம் வாழ்நாளில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பக்கங்கள் அளவுக்கு எழுதியிருக்கிறார் என்பது மிகப்பெரிய சாதனை. இவற்றைத் தவிர, இந்திய சுயராஜ்ஜியம், தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம், சத்திய சோதனை ஆகிய முக்கியமான நூல்களையும் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும் பலருக்கும் தெரிந்த செய்தியாகவே இருக்கக்கூடும். இந்த அளவுக்கு எழுத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திய காந்தியடிகள் மொழிபெயர்ப்பின் வழியாகவும் தன்னை முன்வைத்துக்கொண்டார் என்பது முக்கியமான செய்தியாகும்.

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் உலகெங்கும் வசித்த வாசகர்களும் ஆர்வலர்களும் கடிதமெழுதி கேட்கிற கேள்விகளுக்கு  கடிதம் வழியாகவே பதில் அனுப்புவதை ஒரு பழக்கமாகவே மேற்கொண்டிருந்தார். ஒவ்வொரு கடிதத்தையும் தன் நிலைபாட்டை விளக்கிச்சொல்லும் வகையில் விரிவாகவே அவர் எழுதினார். அவ்வகையில் வான்கூரில் வசித்துவந்த இந்தியரான தாரக்நாத் தாஸ் என்னும் அன்பர் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற நினைக்கும் இந்தியாவுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டு டால்ஸ்டாய்க்கு இரண்டு கடிதங்கள் எழுதி அனுப்பினார்.

இந்தியாவில் ஆங்கிலேயரை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி விடுதலை பெறுவதற்கு ஆயுதப்புரட்சியே சிறந்த வழி எனும் நிலைபாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர் தாரக்நாத் தாஸ். அத்தகு கருத்துகளைப் பரப்புவதற்கு உதவும் வகையில் அக்காலத்தில் அவர் ‘ஃப்ரி இந்துஸ்தான்’ என்னும் பெயரில் ஒரு பத்திரிகையையும் நடத்திவந்தார்.  அவருடைய கடிதங்களுக்கு டால்ஸ்டாய் மிக விரிவான முறையில் 1908ஆம் ஆண்டு இறுதியில் ஒரு பதில் எழுதி அனுப்பினார்.

தாரக்நாத் தாஸின் கருத்து நிலைபாடுகளுக்கு முற்றிலும் மாறான மற்றொரு கருத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக இருந்தது டால்ஸ்டாயின் பதில். ஆயினும் ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட அக்கடிதத்தை அதன் முக்கியத்துவம் கருதி உடனடியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தம் பத்திரிகையில் வெளியிட்டார் தாரக்நாத் தாஸ்.

அப்போது காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்தார். 1909இல் அவர் ஆப்பிரிக்காவாழ் இந்தியர்களின் நிலை பற்றி ஆங்கிலேய அரசுடன் நேரிடையாகப் பேசுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்தார். எதிர்பாராத விதமாக டால்ஸ்டாயின் கடிதம் வெளிவந்திருந்த ஆங்கிலச் செய்தித்தாளை அப்போது அவர் அங்கு படிக்க நேர்ந்தது. அக்கடிதத்தில் விடுதலை குறித்தும் அறவழியிலான போராட்டம் குறித்தும் டால்ஸ்டாய் எழுதியிருந்த வரிகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அக்கடிதத்தை மொழிபெயர்த்து வெளியிட டால்ஸ்டாயிடம் அனுமதி கேட்டு உடனடியாக ஒரு கடிதம் எழுதினார். டால்ஸ்டாயும் அவருக்கு அனுமதி வழங்கினார்.

காந்தியடிகள் இங்கிலாந்தில் தங்கியிருந்த சமயத்தில் தசரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொள்ள அவரை அழைத்தனர். காந்தியடிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.  அந்தக் கூட்டத்திற்கு சாவர்க்கரும் அழைக்கப்பட்டிருந்தார். அன்று இருவருடைய பேச்சும் இந்திய விடுதலையை ஒட்டியதாக இருந்தது. சாவர்க்கர் துர்க்கையின் வழியில் நின்று, பத்து கரங்களிலும் ஆயுதங்களை ஏந்திய துர்க்கையைப்போல இந்தியர்கள் அனைவரும் ஆயுதங்களை ஏந்திப் போரிட்டு ஆங்கிலேயரை விரட்டுவதன் வழியாகவே விடுதலையைப் பெற முடியும் என்று ஆவேசமாக உரை நிகழ்த்தினார். காந்தியடிகள் அகிம்சை வழியில் உறுதியாக நின்று எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழியாகவே விடுதலையைப் பெறமுடியும் என்று குறிப்பிட்டார். வன்முறை வழியா, அகிம்சை வழியா என்பதையொட்டி அனைவரும் யோசனையில் மூழ்கினர்.

இங்கிலாந்தில் தன் வேலை முடிந்ததும் தென்னாப்பிரிக்காவுக்குக் கப்பலில் புறப்பட்டார் காந்தியடிகள். அந்தக் கப்பல் பயணத்தில் பயண நேரத்தை வீணடிக்கக்கூடாது என்கிற எண்ணத்தோடு நீண்ட காலமாக தன் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த எண்ணங்களையெல்லாம் திரட்டி தினந்தோறும் இருபது முப்பது பக்கங்கள் என்கிற கணக்கில் கேள்வி பதில் பாணியில் ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்னும் புத்தகத்தை எழுதி முடித்தார் காந்தியடிகள். அதை முடித்ததும் எஞ்சியிருந்த நேரத்தில் டால்ஸ்டாயின் கடிதத்தையும் ஆங்கிலத்திலிருந்து குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்து முடித்தார். பிற்காலத்தில் அவர் இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு அக்கடிதம் ‘இந்து ஒருவருக்கு ஒரு கடிதம்’ என்னும் தலைப்பில் குஜராத்தி மொழியில் ஒரு தனி நூலாக வெளிவந்தது. பிறகு படிப்படியாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 

டால்ஸ்டாய் தன் கடிதத்தில் எழுதியிருந்த ஒரு கருத்துதான் அக்கடிதத்தை மொழிபெயர்க்கும் ஆவலை காந்தியடிகளிடம் உருவாக்கியது. ‘ஒரு வணிகர்  லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு மதுக்கடை நடத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக்கடையில் தினமும் மதுவை வாங்கிக் குடிக்கும் ஒருவருக்கு அந்த வணிகர் மீது குற்றம் சுமத்த எந்த அதிகாரமும் இல்லை. தன் செயலின் காரணமாக தன் உரிமையை அவர் இழந்துவிடுகிறார். தம்மை அடிமையாக்கும் சூழலை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்களாகவும் அதற்கு இசைந்துபோகிறவர்களாகவும் இந்தியர்கள் இருக்கும் வரையில் அவர்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்புணர்வுக்கு ஒரு பொருளும் இல்லை. ஆயுதங்களால் அந்த வணிகரை விரட்டிவிடுவது இன்று எளிதாக இருக்கக்கூடும். ஆனால் அக்கடையில் தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்துக்கு இரையாகிவிட்டவர்களிடமிருந்து அப்பழக்கத்தை விரட்டுவது எளிதல்ல. ஆகையால் உறுதியான மனத்துடன் ஓர் அமைப்புடன் ஒத்துழையாமல் விலகி இருப்பதே எதிர்ப்பைப் புலப்படுவதற்கான ஒரே வழி. அதுவே விடுதலைக்கு வழிவகுக்கும்’ என்பதுதான் அவர் கருத்து.

அச்சமயத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இந்தியா சிக்கி ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் நகர்ந்துவிட்டிருந்தது. ஆங்கிலேயரின் செல்வாக்கு இந்திய மண்ணில் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. அந்தச் செல்வாக்கிலிருந்து மக்களை விடுவிக்க, தாய்நாட்டுப்பற்றை ஊட்டும் முயற்சி மட்டுமே போதாது என்பதை காந்தியடிகள் நேரிடையாகவே உணர்ந்துகொண்டார். ஆகவே, கூடுதலான சில வழிமுறைகளை அவர் கண்டறியவேண்டியிருந்தது.  அதுவரை இந்திய விடுதலைக்கான கோரிக்கை என்பது கோகலே வழியாகவும் திலகர் வழியாகவும் இருந்த நிலையிலிருந்து வேறுபட்டு புதிய பாதையை அவர் உருவாக்க நினைத்தார்.

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறவேண்டும் என இந்தியாவின் மேல்தட்டு மக்கள் கருதினாலும் கூட, அவர்களுடைய ஆழ்மனத்தில் ஆங்கிலேய அரசு அதிகாரிகளின் வாழ்க்கைமுறைகள் மீதும் ஆடம்பரத்தின் மீதும் பெரியதொரு ஈர்ப்பு இருந்தது. நாற்காலியிலிருந்து அவர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் அமரும் கனவு கொண்டவர்களாகவே பெரும்பாலானோர் இருந்தனர். மேல்தட்டில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை இருந்தது. அவரவர்களுடைய வாழ்க்கைப்பாடே அவரவர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

1915இல் இந்தியாவுக்குத் திரும்பி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்ட காந்தியடிகள் அந்தச் சூழலையும் வேறுபாடுகளையும் வெளிப்படையாகவே கண்டுணர்ந்தார். காந்தியடிகளுடைய எளிமையான தோற்றத்தின் காரணமாகவே இந்தியாவில் வசித்த எளியவர்களை அவர் உடனடியாக ஈர்த்தார். அவருடைய வருகைக்குப் பிறகே இந்திய தேசிய காங்கிரஸ் எளியவர்கள் பங்கேற்கும் இயக்கமாக மாறியது. அவருடைய குரல், பல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் நிலவிய அன்றைய சூழலில் அனைவரையும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தோடு  செயல்பட வைக்கும் லட்சியக்கனவை விதைத்தது.

காந்தியடிகள் எளிமையை ஒரு கவசமாகக் கொள்ளவில்லை. மாறாக, அதையே வாழ்க்கைமுறையாக அமைத்துக்கொண்டவர். ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்னும் தலைப்பில் 1896 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில் இருபது முறை தமிழ்நாட்டுக்கு வந்துபோன வரலாற்றை பத்திரிகையாளரும் காந்தியருமான அ.ராமசாமி ஒரு தனிப் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் பயணங்களில் அவரை நேரில் கண்டவர்களும் உரையாடியவர்களும் எண்ணற்றோர். அவர்களில் அவிநாசிலிங்கம், அம்புஜம்மாள், தி.சே.செள.ராஜன், குமுதினி போன்ற ஒருசிலர் அவரோடு பயணம் செய்த பொழுதுகளைப்பற்றியும் உரையாடிக் கழித்த பொழுதுகளைப்பற்றியும் பதிவு செய்திருக்கிறார்கள். நிர்மல் குமார் போஸ், சுசிலா நய்யார், காகா காலேல்கர் போன்றோர் புத்தகங்களாகவே எழுதியிருக்கிறார்கள். ஒரு சின்னஞ்சிறு பெட்டியில் அடங்கக்கூடியதாகவே காந்தியடிகளுடைய உடைமைகள் இருந்தன என்பதையும் அவருடைய தேவைகளும் மிகமிகக் குறைவாகவே இருந்தன என்பதையும் குறிப்பிடும் பகுதி எல்லோருடைய நூல்களிலும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதைப்  பார்க்கமுடிகிறது. எளிமையையே வாழ்க்கைமுறையாகக் கொண்ட ஒருவரால் மட்டுமே எல்லா இடங்களிலும் எல்லாத் தருணங்களிலும் ஒரே மாதிரியாக வெளிப்படமுடியும்.

காந்தியடிகளின் அகிம்சை என்பது எதிரியின் மீது வன்முறையைச் செலுத்தாமல் இருப்பது என்பது மட்டுமல்ல, எதிரி என்னும் கருத்தாக்கத்தையே நிராகரிப்பதாகும். அகிம்சை என்பதை வாழ்வதற்கான அடிப்படை விதியாகவே காந்தியடிகள் கருதினார். இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் எல்லா உயிர்களும் பொருட்களும் சமமானவையே. உருவ அமைப்பில் நாம் காணும் வேறுபாடு என்பது தோற்றத்தை ஒட்டி உருவாவதாகும். சாராம்சத்தில் அனைத்தும் ஒன்றே. எந்த ஒன்றும் இன்னொன்றுடன் ஒத்திசைவோடு இயங்கும்போது மட்டுமே முழு இயக்கமும் மிகச்சிறந்த இயக்கமாக இருக்கமுடியும். ஒன்று இன்னொன்றுடன் மோதி அழிக்கத் தொடங்கினால், ஒட்டுமொத்த ஒத்திசைவும் இயக்கமும் சிதையும். அத்தகு சிதைவுக்கு இடம்கொடுக்காமல் ஒத்திசைவோடு வாழும் அறமே அகிம்சை. அத்தகு அற உணர்வை ஒருவன் ஆழ்நெஞ்சில் கொண்டிருக்கும்போது, அவன் நெஞ்சில் பகை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவன் நெஞ்சம் கருணை, அன்பு, உண்மையின் உறைவிடமாக அமையும். காந்தியடிகளின் அகிம்சைக்கொள்கை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதைமட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, வாழ்க்கையில் மாமனிதனாக வாழும் வகையைக் கற்பிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இராட்டையில் நூல் நூற்பதையும் கைத்தறியால் உருவாக்கப்பட்ட கதராடைகளை அணிவதையும் காந்தியடிகள் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தினார். கதருக்காக ஓர் இயக்கத்தையே நடத்தினார். வாங்கி அணிவதற்கு அது எளிமையான ஆடை என்பது உடனடியான ஒரு நன்மை, கதர் வழியாக தற்சார்பு கொண்ட நெசவுத்தொழிலை இம்மண்ணில் நீடித்திருக்க வைக்கமுடியும் என்பது இன்னொரு நன்மை.

அயல்நாட்டு ஆடைகளைப் புறக்கணிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட இயக்கமும் இவ்விதமான இரு நன்மைகளை அளிப்பதாக அமைந்தது. ஆடம்பரமான ஆடைகள் மீதான மோகத்தைத் தவிர்ப்பதன் வழியாக எளிய வாழ்க்கையின் மீது ஈடுபாட்டை அனைவரிடமும் உருவாக்கமுடியும் என்பது ஒரு நன்மை. அயல்நாட்டுத் துணிவணிகம் குறையக்குறைய அரசின் வருமானம் தானாகவே மெல்ல மெல்ல சரியும் என்பது இன்னொரு நன்மை. கள்ளுக்கடை எதிர்ப்பு வழியாக வருமானத்தில் பெரும்பகுதியைக் குடிச்செலவில் செலவழிப்பவர்களைத் தடுத்து குடும்பத்தின் மீது அக்கறை காட்டுமாறு மீட்டெடுப்பது ஒரு நன்மை. குடி வருமானத்தின் வழியாக அரசுக்குச் செல்லும் வரிவருமானத்தைக் கட்டுப்படுத்துவது மற்றொரு நன்மை. அந்த வழியில் காந்தியடிகள் முன்வைத்த ஒத்துழையாமைச் செயல்பாடு மனிதர்களிடையில் தன்னம்பிக்கையையும் விடுதலை நாட்டத்தையும் உருவாக்குவதை ஒரு நோக்கமாகவும் ஆங்கிலேயரின் நிர்வாகத்தை நிலைகுலைய வைப்பதை இன்னொரு நோக்கமாகவும் கொண்டிருந்தது.

காந்தியடிகள் வகுத்த அறவழியில் நம்பிக்கை கொண்ட பல இளைஞர்களும் அவருக்குத் துணையாக நின்றனர். காந்தியடிகள் அந்த இளைஞர் கூட்டத்தை இரு அணிகளாகப் பிரித்தார். ஓர் அணியை அரசியல் விடுதலை சார்ந்த போராட்டங்களில் ஈடுபடுத்தினார். இன்னொரு அணியை இந்தியாவைப் புதிய தோற்றத்தில் கட்டமைக்கும் கனவுகளைக் கொண்ட நிர்மாணப்பணித் திட்டங்களில் ஈடுபடுத்தினார். இந்த இருபெரும் அணிகளில் இந்தியாவைச் சேர்ந்த எளிய ஏழை மக்களும் இருந்தனர். வசதியுள்ள பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். சாதி, மத, இன வேறுபாடுகளையும் வசதி வேறுபாடுகளையும் கடந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் இலட்சியக்கனவு கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர்.

காந்தியடிகள் முன்னெடுத்த உப்பு சத்தியாகிரகத்துக்கு நாடு தழுவிய அளவில் கிடைத்த ஆதரவும் வெற்றியும் இனி நீண்ட காலத்துக்கு இந்தியாவில் ஆட்சியதிகாரத்தைத் தொடரமுடியாது என்னும் செய்தியை ஆங்கிலேயருக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்திவிட்டன. ஆயினும் தன் அதிகாரத்தின் ஆற்றலை இழக்க விரும்பாத ஆங்கிலேய அரசு, காந்தியடிகள் ஈட்டிய மக்கள் ஆதரவை இல்லாமலாக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. அவர் மீண்டும் மீண்டும் தன்னை இந்த உலகத்தின் முன் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.  இறுதியில் அதற்காகவே அவர் தன் உயிரையும் இழக்க நேர்ந்தது.

இந்திய மக்களிடையில் எளிமை, உண்மை, நல்லிணக்கம், ஒற்றுமை, தியாகம் ஆகியவற்றை விதைத்து வளர்த்தெடுக்கும் ஆவலோடு காந்தியடிகளுடைய குரல் இந்தியாவெங்கும் ஒலித்தது. அதுதான் நம் தேசத்தின் விடுதலையைச் சாத்தியமாக்கியது. காந்தியடிகளின் பிறந்தநாளைக் கொண்டாடுகிற சூழலில், அதை ஒரு சடங்காக நினைக்காமல் அவர் வளர்க்க நினைத்த ஐந்து அம்சங்களுக்கு நம் நெஞ்சில் நாம் எந்த அளவுக்கு இடம் கொடுத்திருக்கிறோம் என்பதை சுயமதிப்பீடு செய்துகொள்வது பயனளிப்பதாக இருக்கும். 

***

பாவண்ணன் – விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் பிறந்தவர். கர்நாடக மாநிலத்தில் உதவிக் கோட்டப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று தொடர்ச்சியாக இலக்கியத்தில் தடம்பதித்து வருபவர். மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது, இயல் விருது முதலிய தமிழின் முன்னணி விருதுகளை வென்றவர். மின்னஞ்சல்: writerpaavannan2015@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here