Monday, September 9, 2024
Homeஇலக்கியம்கிருமி - உமையாழ்

கிருமி – உமையாழ்

1.
நான் கேட்டு நீங்கள் எதையும் வாங்கித்தராமல் இருந்ததில்லை வாப்பா. உங்களால் முடியாமல் இருந்த போதும் கூட நீங்கள் எனக்கான எதையும் செய்யாமல் இருந்ததில்லை. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா வாப்பா, ஐந்தாவது படிக்கிற போது கல்விச் சுற்றுலாவிற்கு பணங்கொடுக்கும் திகதி தவறிப் போனது. அப்போது நீங்கள் பாடசாலைக்கு வந்திருந்தீர்கள். ஆசிரியரிடம் உங்களது மகனுக்காக பரிந்து பேசுவதற்காக. அன்று உங்களது உடல்மொழியில் இருந்த பணிவு, எனது பிடரி நரம்பை விட அண்மையில் இருப்பது போல எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது வாப்பா.

வாப்பா நீங்கள் எவ்வளவு அழகானவர், உடலால், செயலால், நீங்கள் எவ்வளவு அழகானவர்! உங்களது செயல்கள்தான் எவ்வளவு நேர்த்தியானது! எல்லாவற்றையும் செய்ய உங்களுக்கு ஒரு முறைமை இருந்தது, ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்த பாசிமணி போல. நீங்கள் தவறியும் அந்த முறைமையில் இருந்து தவறியவரில்லை. ஆயினும் மெய்யான காரணங்களுக்காக அந்த முறைமையை நீங்களாகவே மாற்றிக்கொள்வீர்கள். அதில் உங்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் இருந்ததில்லை.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் நகங்களை வெட்டுவீர்களே! அந்த மைக்கத்திதான் எவ்வளவு கூர்மையானது! ஒருநாள், சின்னவனாக இருந்தபோது பென்சில் சீவ எடுத்த மைக்கத்தியால் விரலை வெட்டிக்கொண்டேன். நீங்கள் பதறிப் போனீர்கள். அதற்குப் பின்னர் நீங்கள் மைக்கத்தியை தூரமாக்கி வைத்துவிட்டீர்கள். ஒரு துண்டு பிளேடால் விரல் கொப்புகள் கிழியக் கிழிய நீங்கள் நகம் வெட்டியதைப் பார்த்தபோது அழுகை வந்தது. அதையும் நீங்கள்தான் ஆற்றுப்படுத்தினீர்கள். ஆற்றுப்படுத்துவது பெரும்பணி என்பதைச் சொல்லித் தந்தீர்கள்.

மின்சாரம் தடைப்பட்ட நாட்களில் முற்றத்தில் வைத்த விளக்கில் கார்த்திகைப் பூச்சிகள் சுடுபட்டு இறந்தபோது பதறிப்போனீர்கள். அதற்குப் பிறகுதான் விளக்குகளைச் சுற்றி கண்ணாடி உருளைகள் என்றென்றைக்குமாய், நிரந்தரமான ஒரு இடத்தை பெற்றிருந்தன நமது வீட்டில். பொறிவைத்துப் பிடித்த எலியை நீரில் முக்கி சாவடித்து, நெருப்பில் சுட்ட போது உம்மாவை நொந்து கொண்டீர்கள். அந்த இடத்தில் மார்க்கம் சொல்லித் தந்தீர்கள். தற்கொலை செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது. காரணமே இல்லாமல் பிற உயிர்களைக் கொல்வது தடுக்கப்பட்டது. இறந்த உடலை தீவைத்துச் சுடுவது நமக்கு ஆகுமானதல்ல. இவை எல்லாம் உயிரினதும் உடலினதும் கௌரவத்தை குறைப்பது. கண்ணியத்தைக் குலைப்பது. ஒவ்வொரு உயிருக்குமென ஒரு கண்ணியம் இருக்கிறது. ஒவ்வொரு உடலுக்கும் ஒரு கௌரவம் இருக்கிறது. அதை மதிப்பதுதான் உயர்ந்த தர்மம். அதுதான் எமது மார்க்கம். இதெல்லாம் நீங்கள் சொன்னதுதானே வாப்பா. அப்படி கற்றதுதானே வாப்பா எங்களுக்கு மார்க்கம்.

தம்பியோடு சண்டையிட்ட ஒவ்வொரு முறையும் மூத்தவன் என எனது மூர்க்கம் துளிர்க்கும் போதெல்லாம், அதிகாரம் ஆபத்தானதென புரிய வைப்பீர்கள். வலியோன் என்றால் வலிமையானவன்தானே வாப்பா? வலியோன் செயல் அறவே, எளியோன் செயல் மறவே எனச் சொல்லித் தந்தது நீங்கள் தானே வாப்பா.

நமது வாழ்க்கை வானவில் போல வண்ணம் நிறைந்ததாக இருக்கவில்லை. ஆயினும் என்ன, தேங்காய்ப் பூவும் சோறும் தின்ற நாட்களும் கசந்து போனதில்லை. ஒவ்வொரு பருக்கையாக நீங்களே ஊட்டி விட்டீர்கள் எனக்கும் தம்பிக்கும். அறம் கற்பிக்கிற ஒவ்வொரு கதையாகச் சொன்னீர்கள். அப்போதெல்லாம் எல்லாமும் நன்றாகத் தானே இருந்தது வாப்பா. நீங்கள் சொன்ன கதைகளில் மாண்புறும் மனிதர்களும், அவர்தம் கொண்ட அன்பும், காருண்யமும் எவ்வளவு மகத்தானது. உம்மா மரணப்படுக்கையில் கிடந்தபோது உங்களுடைய கையைப் பிடித்து பிள்ளைகள் பத்திரம் என்றதும், எங்களுடைய கைகளைப் பிடித்து வாப்பா பத்திரம் என்றதும் அந்த மாண்பின் மீட்சிதானே வாப்பா. நீங்கள் ஊட்டிய சோற்றுப் பருக்கையுடன் அந்த மாண்பைத்தானே எங்களுக்கும் ஊட்டி விட்டீர்கள். இவ்வளவு காலமும் உம்மாவின் சொற்படி நீங்கள் எங்களை பத்திரமாகத்தானே பார்த்துக் கொண்டீர்கள்.

உம்மாவை அடக்கி விட்டு வந்த நாள் இரவில் நீங்கள் எங்களுக்கு உபதேசித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா வாப்பா?
மரணத்திற்கு முன்னால் அழக்கூடாது.
மய்யித்திற்கு முன்னாலும் அழக்கூடாது.
கல்பு அழட்டும்.
கண்கள் அழட்டும்.
ஆனால் சத்தம் எழவே கூடாது.
ஓலம் அறவே கூடாது.

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)

அப்படித்தானே வாப்பா நீங்கள் அன்று நின்றிருந்தீர்கள். மாபெரும் பொறுமையுடன், கண்களில் நீர்வடிய, கல்பு அழுது கரைய தைரியமாக நிற்பது போலத்தானே நின்றிருந்தீர்கள். யாரையும் சத்தம் போட்டு அழக்கூடாது எனச் சத்தமாகவே சொன்னீர்கள். மையத்தைத் தூக்குகிற போது எழுந்த சத்தத்தை பார்வையாலே அடக்கி விட்டீர்கள். அடியற்றுப் போனாலும் ஆலமரம் ஆலமரம்தான், அரசமரம் அரசமரம்தான். அவ்வளவு அமைதியான மய்யித்து வீட்டை யாரும் கண்டிருக்க மாட்டார்கள்.

படுத்த இடத்தில் சூடு ஆறும் முன்னர் மய்யித்தைக் குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுவித்து அடக்கி விட வேண்டும். அப்படித்தானே வாப்பா?

அதை மட்டும்தானே நீங்களும் வேண்டுனீர்கள்.
உம்மாவை அடக்குவதில் எவ்வளவு அவசரம் காட்டினீர்கள்!

உம்மாவின் சூடு அவ்வீட்டில் பெரும் வெம்மையாய் நிறைந்திருந்த போதே உயிரற்ற உம்மாவின் உடலை அடக்கம் செய்யக் கொண்டுபோய் விட்டோம்.

வெல்லக்கட்டியில் எறும்புகள் போல பள்ளியில் ஒரு ஆயிரம் பேர் கூடி இருப்போம் உம்மாவிற்கான கடைசித் தொழுகையைத் தொழுவதற்காக. ஐந்து வேளையும் நேரந்தவறாமல் தொழுத உம்மாவை வெள்ளைத் துணியால் சுற்றி, ஒரு பேழையில் வைத்து பள்ளியில் முன்வரிசையில் வைத்திருந்தோம். இனி உம்மாவிற்கு தொழுகை கடமையில்லை. உம்மாவின் இறந்த உடல் மீதான தொழுகை நமக்குத்தான் கடமை எனச் சொன்னீர்கள். உங்களது கண்ணீர் கசிந்த கண்ணின் பிசுபிசுப்பு எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது வாப்பா.

தொழுதோம். ஆறடி மண்ணில் உம்மாவை புதைத்துவிட்டு வந்துவிட்டோம். எவ்வளவு கண்ணியமான மரணம்! எவ்வளவு கண்ணியமான இறுதி யாத்திரை!

“இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்”
(அல்குர்ஆன் : 20:55)


02.


ங்களுக்கு, நீங்கள் இன்றுதான் இறந்து போனீர்கள் வாப்பா. அப்படித்தான் சொல்லப்பட்டோம். நுரையீரல் திரண்டு, மூச்சுத்திணறி நீங்கள் இறந்து போனதாக அந்தச் சிங்கள அதிகாரி தள்ளி நின்று செய்தி சொன்னார். நாங்கள் உங்களைப் பார்த்து சரியாக பதிமூன்று நாட்களாகி விட்டது. ஏதோ ஒரு பெயர் தெரியாத இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததை விட, இத்தனை நாளும் உங்களைப் பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்ததுதான் கொடுமையாக இருந்தது வாப்பா. காலையில்தான் வீடு திரும்பி இருந்தோம். எங்களைச் சோதித்தவர்கள் கொடுத்த வைத்திய நற்சான்றுப் பத்திரத்தைக் கையோடு கொண்டுவந்திருந்தோம்.

அப்போதுதான் அதிகாரிகள் வந்திருந்தார்கள். நீங்கள் இறந்து இரண்டு நாட்களாகிவிட்டதாம். அப்படியும் ஒரு தகவல் சொன்னார்கள். கிணற்று வாளியை அப்படியே போட்டுவிட்டு தம்பி ஓடி வந்தான். உங்களை எப்படியாவது பார்க்க வந்துவிட வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தான். அதற்காகத்தான் குளித்துக் கொண்டிருந்தான். ஒட்டகச் சிவிங்கி போல நீண்ட கழுத்துடைய அந்த அதிகாரி தம்பியை தள்ளி நிற்கச் சொன்னார். அவரும் பின்னகர்ந்து கொண்டார். அவரது கண்ணை மட்டுமே பார்க்க முடிந்தது. இரக்கம் இல்லாத, இரண்டு சிவந்த கோலிக்குண்டுகள் போன்ற கண்களை உடைய அந்த அதிகாரி, மேலும் சொன்னார், இறந்த உடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாதென்பதாக. அப்போதுதான் தம்பி குரலை உயர்த்தினான். அவனை நான் சமாதானம் செய்தேன். பசித்த வேங்கையின் முன்னால் பரிவை வேண்டுகிற ஒரு புள்ளிமானின் உடல்மொழியை அணிந்துகொண்டேன். பணிவாக அந்த அதிகாரியை வேண்டினேன். இந்த உடல் ஏற்கனவே கூனி இருந்தது. இந்தக் காலத்தில் இறப்பவர்களது உடலை உறவினர்களிடம் கையளிக்க முடியாது என அதிகாரி சொன்ன தோரணையில் திமிரேறியிருந்தது. பணிவின் முன்னால் திமிரோடு நிற்பவன் கோழை. இறப்பின் மீது பரிவற்ற அந்தக் கோழை அதிகாரியின் கண்களை தரிசிப்பதை தவிர்க்க எண்ணினேன். அப்போதுதான் அவர் இறந்த உடல்களை எரிக்கச் சொல்லி இருக்கிறார்கள் என்கிற தகவலைச் சொன்னார். தம்பி கட்டையைக் கையில் எடுத்தான். அந்த அதிகாரியை விலகிப் போகும்படி சைகை செய்தேன்.

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி உங்களது உடல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த வைத்தியசாலையின் வாசலில் எங்களுக்கான கடைசி நம்பிக்கைகளை இறுகப் பிடித்தவர்களாக நின்றிருந்தோம். கண்களில் கருணை உள்ளவர் எவரையாவது எங்கள் மீதுசாட்டு ரஹ்மானே என்கிற வேண்டுதல், தகிக்கும் உள்ளத்தைத் தாண்டி வார்த்தைகளாக பொரிந்து கொண்டிருந்தது. நீங்கள் இங்கே நிற்பதே எங்களுடைய பெருங்கருணையால்தான் எனச் சொன்ன அந்த ராணுவ அதிகாரியின் முகம் கன்றிப் போயிருந்தது. ஒரு எதிரிக்கு முன்னால் விறைப்போடு நிற்கும் இயந்திரத்தனத்தை அவன் வலிந்து தனது உடலின் மேல் தருவித்திருந்தான். நரகலைப் பார்ப்பதைப் போல ஒரு பார்வை அங்கிருந்த எல்லோருடைய முகங்களையும் அப்பி இருந்தது. மனிதன் பயப்பட ஆரம்பிக்கும் போது அவனிடம் எஞ்சி இருக்கும் வன்மங்கள் எல்லாம் திரண்டு நிற்பதைக் கண்முன்னே கண்டேன் வாப்பா.

தம்பி வெட்டப்பட்ட பல்லியின் வாலைப் போல துடித்துக் கொண்டிருந்தான். நான் அவனை ஆற்றுப்படுத்துவது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

எரிப்பதற்காக எடுத்து வைக்கப்பட்ட மூன்றாவது இஸ்லாமியரது உடல் உங்களது தந்தையருடையதுதான் எனச் சொல்லப்பட்டோம். இரண்டு உடல்களை தீ வைத்துச் சுட்டெரித்த வெற்றிக் களிப்பில் அவர்களது முகங்கள் பிரகாசித்தன. எதிரி என நினைப்பவனின் காயங்களைக் கசக்குவதில் அப்படி ஒரு ஆனந்தத்தை அவர்கள் எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் வாப்பா.

வாப்பா, இன்னேரத்துக்கு நீங்கள் கிடத்தப்பட்ட இடத்தில் குளிர் ஏறி இருக்கும். படுத்த பாயின் சூட்டை, ஏறிய அக்குளிர் சமன்செய்து தாண்டி இருக்கும். ஐயோ வாப்பா, நீங்கள் கேட்ட அற்பமானதைக்கூட நிறைவேற்ற முடியாமல் நின்றிருப்பது எவ்வளவு பெரிய கைசேதம்! விம்மி விம்மி நெஞ்சு பதைத்தது வாப்பா.

நீலக்கவசம் அணிந்தவர்கள் சடலமொன்றை நரகலைக் காவுவதைப் போல வாகனமொன்றில் ஏற்ற முயன்றபோது தான் தம்பி திமிறி எழுந்தான். தடுப்பான்களை மீறி அவன் சீறிப்பாய்ந்த போது இயந்திரத் துப்பாக்கி உடன் நின்றிருந்த இயந்திரம் போன்ற மனிதர்களில் ஒருவனால் முழங்காலில் சுடப்பட்டான். பொத்தென விழுந்தவன் வீறிட்ட அலறல் உங்களுக்குக் கேட்டதா வாப்பா. ஈரக்குலையைப் பிடுங்கி எடுத்ததைப் போல ஒரு பிக்கல். ஒரு வலி. முறுக்கி விட்ட விசைப்படகைப் போல அந்த அதிகாரியை நோக்கி ஓடினேன். எனது எண்ணங்களில் அவனது குரல்வளை மட்டுமே குறியாக இருந்தது.

03.


நிலத்தில் மல்லாந்து கிடந்தேன். நாக்கு வெளித்தள்ளி இருந்தது. என்னைத் துளைத்து வெளியேறிய குண்டில் எனது மூளையின் சிதைவுகள் அப்பி இருந்தன வாப்பா. இரண்டாவது குண்டு பல்லிடுக்கில் சிக்கிய இறைச்சித்துண்டு போல மூளைக்குள்ளேயே தங்கி விட்டது. கசிந்த ரத்தம், கொட்டிய இடத்தில் கட்டியாகத் திரண்டிருந்தது. எனக்கு எல்லாமும் தெளிவாகத் தெரிகிறது வாப்பா. மிகமிகத் தெளிவாக. மனிதன் இறந்து போகிற போது அவனுக்கு எல்லாமும் தெளிவாக விளங்கி விடுகிறது.

சிதறிய என் மூளையின் துகள்கள் அந்த ரத்தக்கட்டியை நோக்கித் திரண்டு வந்தன. ஊர்ந்து ஊர்ந்து திரண்டு வந்தன. வெஞ்சினங் கொண்ட பாம்பைப் போல, உஸ்ஸ்ஸஸ…. மூளைச் சிதறல்கள் ஊர்கிற சத்தம் காற்றில் ஏறிற்று. ரத்தமும், மெல்லிய கம்மிய நரம்பு நாளங்களும் கெட்டி ரத்தத்துடன் கலந்தெழுந்தன. ஆயிரம் நாக்குகளைக் கொண்ட ஒரு மாபெரும் கிருமியைப் போல அவை உருக்கொண்டன. மெல்லிய உஷ்ணம் பரவிய என் உடலில் அந்தக் கிருமி ஊர்ந்தது. என்னுடலில் உயிர் எஞ்சி உள்ள இடத்தைத் தேடி, அறத்தால், மாண்புகளால் கைவிடப்பட்ட ஒரு அநாதை அலைவதைப் போல அது ஒவ்வொரு இடமாக ஊர்ந்தது வாப்பா. அது ஊர்ந்த இடமெல்லாம் கண்ணீரின் கதகதப்பை உணர்ந்தேன் வாப்பா.

பயம் அப்பிய ராணுவ வீரர்கள் என்னை நோக்கி மீண்டும் மீண்டும் சுட்டார்கள். அவர்களால் வெற்றுடலைத்தான் சுட முடிந்தது. திரண்டு நின்ற கிருமி தீச்சுவாலையைக் கக்கிய அவர்களது குண்டுகளை இலகுவாகக் கடந்து கடந்து ஊர்ந்தது. அவர்கள் சுட்ட ஒவ்வொரு குண்டுக்கும் அது வலிமை கொண்டெழுந்ததை நான் நிச்சயமாகக் கண்டேன் வாப்பா.

வாப்பா, திரண்டெழுந்த கிருமி உங்களது வெற்றுடல் கிடந்த அந்த நீலப்பையை நோக்கி ஊர்ந்து வந்தது வாப்பா. அது எழுந்து நின்று உங்களுக்காகத் தொழுதது வாப்பா. அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். அதிகாரிகள் நியாயமான ஒரு காரணத்தைச் சொல்லி இருந்தால் அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும் வாப்பா. ஆனால் அவர்கள் எங்களது பணிவிற்கு முன்னால் அதிகாரத்தைக் கொண்டிருத்தினார்கள். எங்களை அடங்கிப் போகப் பணித்தார்கள். அங்குதான் எல்லாமும் பிழைத்தது வாப்பா. தம்பி சுடப்பட்டது, நான் செத்தது, இப்போது  கிருமி உருப்பெற்றதென எல்லாமும் நடந்து விட்டது. இதோ கிருமி எழுந்து நிற்கிறது.

இயந்திர வேடம் பூண்ட மனிதர்கள் அவர்களது இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டே கிருமியின் பின்னால் ஓடி வருகின்றனர். குண்டுகளை விழுங்கி விழுங்கி அந்தக் கிருமி ராட்சத உரு கொள்கிறது வாப்பா. பயம் போர்த்திய அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் மலைத்து நின்ற போது அந்தக்கிருமி வெடித்துச் சிதறி ஒவ்வொருவர் மீதும் அப்பிக்கொள்கிறது. தம்பியைச் சுட்டவனது முகம், பயத்தால் ஈயம் காய்ச்சி ஊற்றியதைப் போல தீய்ந்து போவதைப் பார்க்க அவ்வளவு திருப்தியாக இருக்கிறது வாப்பா. எல்லோரும் தெறித்து விழுந்த சில்லான் கொட்டைகள் போல சிதறி ஓடுகிறார்கள். தன்னைத் திரட்டி திரும்பவும் உருக்கொண்ட கிருமி அதோ, அங்கே ஊர்ந்து ஊர்ந்து ஊருக்குள் நுழைகிறது.

உஸ்ஸ்ஸ்ஸஸ……


உமையாழ் – தற்பொழுது இவர் இலண்டனில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை அண்மையில் வெளியானது.

ஆசிரியர் தொடர்புக்கு : -umayaal.peri@gmail.com

RELATED ARTICLES

6 COMMENTS

  1. யப்பா , கொன்னு கொலை எடுத்துறாங்க. படைப்பு ஆற்றலில், படைப்பு கருணையில்

    துயிலாத ஊழ் கதையில் அம்மம்மா குறித்து என்றால்
    இதில் வாப்பா வின் கதை.

    தந்தை மகன் உறவை எவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கிறார்.

    அதிலும் தம்பியோடு சண்டை போடும் பொழுதெல்லாம் அதிகாரம் ஆபத்தென புரிய வைத்தீர்களே வாப்பா

  2. இப்போது நடந்துகொண்டிருக்கிற சூழலில் இருந்து ஒரு கதை. மனம் துடிக்கத் துடிக்க வாசித்ததை உணரமுடிந்தது. இறுதியாய் மகன்கள் வாப்பாவின் முகத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று வாசிப்பு வேகத்தை அதிகப்படுத்தியதை மனத்தால் உணர்கிறேன். உம்மாவிற்கு செய்த இறுதி மரியாதையும், அது வாப்பாவிற்கு நிகழாமல் போய்விட்ட சூழலிலும் இருக்கிற அந்த மையச் சூடு ஆதாரமாக இருக்கிறது கதைக்கு.

    இறுதியில் ஒரு பேயாட்டம்
    அதிகாரத்திற்கு எதிராக, நோய்க்கு எதிராக, வன்முறைக்கு எதிராக அது எழுப்பும் குரல், சூடுபட்ட ரத்தம் என்பதும் கொதிக்கும் தானே..

    நல்லாயிருக்கு

  3. கிருமி.. நல்லாருக்கு உமை, உண்மையைய்தான் புனைந்து இருக்கிறீர்கள் சிறிய மாற்றங்களுடன். ரசித்தேன் 👍

  4. இன்று கிருமிகளால் உலகம் துன்பத்தை எதிர்நோக்குகிறது. நாம் அறிந்து இது நடக்கிறது. ஏனெனில் அதிகார வர்க்கம் முதல் அரசியல்வாதி வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை பாதிக்காதவரை எந்த துன்பமும் துயரமும் அத்தனை முக்கியமானதில்லை. எத்தனையோ மரணங்கள் எத்தனையோ கொடுமைகள் நம்மைச் சுற்றி நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒன்றுமே நடக்காதது போலத்தான் அவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பொதுவான துயரம் மட்டுமே துயரமாக கணக்கெடுக்கப்படுகிறது.

    ஆனால் தற்காலச்சூழல் இன்னொருவரின் துன்பத்தை புரிந்துக்கொள்ளும் வழியைக் காட்டியுள்ளது. இக்கதையையும் அவ்வாறுதான் காண்கிறேன். எல்லா காலத்திலும் நடந்துக்கொண்டிருக்கும் கொடுமைதான், ஒதுக்கப்படுதல்தான், உதாசினம்தான். ஆனால் தற்கால சூழலில் இக்கதையை வாசிக்க மனதை கணக்கச் செய்கிறது.

    வாசிப்பவர்களே கதைசொல்லியாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள். இதைவிடவா கதையினுள் செல்வதற்கு வேறொரு உபாயம் தேவை.

    கதை ஒரு கட்டத்தில் வாசிக்க விடாமல் வருந்த வைக்கிறது. இந்த கிருமியால் ஆனா பாதிப்பு இன்று மட்டுமானது அல்ல, அதிகார வர்க்கத்தின் கையில் நசுங்கிக்கொண்டிருக்கும் சக மனிதன் தப்பித்துக்கொள்ளும் வரை தொடரத்தான் போகிறது.

    கதையின் நம்பகத்தன்மைக்கு அதன் மொழியும் சொல்லும் முறையும் முக்கியம். இக்கதை அதற்கு நன்றாகவே பொறுந்தியுள்ளது.

    இன்னொரு முறை வாசிக்க வேண்டும். ஏனெனில் இக்கதை ஒற்றைக் காரணத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை.

  5. தற்காலச் சூழலை மையப்படுத்தி நகரும் கதை. கோரணி நச்சிலால் பாதிக்கப்பட்ட தந்தையின் சடலத்தை அவர் விருப்பம்போல் எடுக்கவிடாத அதிகாரத் தோரணை. அன்பையும் அமைதியையும் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அதிகாரத்திற்கு எதிராக பொங்குவது. அதிகாரமும் ஒருசிலரின் கட்டுப்பாட்டினால் கடைபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆபத்தான நோய் மற்றவர்களுக்குப் பரவக்கூடாது என்பதில் அந்த இராணுவ வீரர்கள் தீவிரம் காட்டியிருக்கலாம். இருந்தும், உண்மை நிலையை எடுத்துக் கூறியிருக்கலாமே என்ற கதைச்சொல்லியின் ஆதங்கம் நியாயமானது. தற்காலச் சூழலின் கட்டுப்பாட்டு வாழ்க்கையைச் சொல்லும் கதை.

  6. மனிதன் பயப்பட ஆரம்பிக்கும் போது அவனிடம் எஞ்சி இருக்கும் வன்மங்கள் எல்லாம் திரண்டு நிற்பதைக் கண்முன்னே கண்டேன் வாப்பா #
    இந்த கால கட்டத்தின் நிதர்சனமான நிலை😥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular