Sunday, February 25, 2024

1929

பிரமிளா பிரதீபன்

ம் பேரு தாரணி. தாரணி யசோதரன்”

இல்லையில்லை.. இவ்வளவு தெளிவாக ஒரு பைத்தியம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டாது. பின் எப்படித் தொடங்குவதாம். இவர் மிகப் பிரபல்யமான மனோத்துவ ஆலோசனையாளர் என்பதால் ஒரே பார்வையில் கண்டுபிடிப்பாரோ!

“ஒன்னுமே சொல்லாம நிண்டா சரியா இருக்குமா? “இல்லல்ல… எம் பேரு தாரணி. நா அவ்வளவா படிக்காதவ. ஆனா எம்புருசன் நல்லா படிச்சவரு…’ ச்சே புருசன பத்தியெல்லாம் எதுக்கு பேசணும்?”

அடுத்ததாய் தாரணிக்கான அழைப்பு எனும் எச்சரிக்கையுணர்வே அவளுக்குள் வேடிக்கையான எண்ணங்களையெல்லாம் தோற்றுவிக்கத் தொடங்கியிருந்தது. பதட்டத்தை உள்ளங்கைக்குள் பொத்திப் பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள்.

பேசாமல் எழுந்து ஓடிவிட்டால் என்ன?

நானொரு பைத்தியக்காரியாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தானென்றாலும், வெகு சாமர்த்தியமாய் அவற்றை மறைத்துக்கொள்ள விரும்பினேனே தவிர வெளிப்படுத்தவல்ல… ஒரு பைத்தியக்காரியை நிச்சயமாய் எவருமே அனுமதிக்கவோ விரும்பவோ போவதில்லை.

ஓடிவிடலாமா?

நிஜத்தில் பைத்தியக்காரத்தனம் தானா இது? அல்லது அதி புத்திசாலித்தனமா? அறிவற்ற பூஜ்ஜிய மனநிலையா? மதியின் மேம்பட்ட எண்ணச் செறிவா? அதனிலெல்லாம் ஆழமானதா? கற்பனாவாதத்தின் உச்சமா? சாராசரி மனநிலையை மிஞ்சிய ஆன்மீக வெளிப்படுத்தலா?

என்றாலுமே யாருக்குமே தெரியாத பைத்தியமாய் அவ்வப்போது உருமாறும் தேர்ச்சியும் மிக அத்தியாவசிமானது தானோ!

“சந்தியா ஒங்கள பத்தி சொல்லிருக்காங்க டொக்டர்”

எதிர்பாரா விதத்தில் அவளை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தாள். திட்டத்தில் இல்லாத புதிய அறிமுக யுக்தி. இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு திட்டமிட்டிருக்க வேண்டாமோ!

“உக்காருங்க…. நீங்க தாரணி தானே!”

மனோத்துவ ஆலோசனையாளர் திரு.கயானுக்கு தன்னைத் தெரிந்திருந்தமை பற்றியும் அவரது சினேகமான சிரிப்பு அறையெங்கிலுமாய் வழிந்தமை பற்றியும் ஆச்சரியமாகவே தோன்றியது.

கூடவே அந்த அறையில் தெரிந்த பளீர் நேர்த்தி சங்கடத்தைத் தருவதாயிருந்தது. அவ்வளவு ஒழுங்கு. ஒருபுறம் நீள்வாக்கு கண்ணாடி யன்னலில் தெரியும் வெளிக்காட்சி. இன்னதென்ற அடையாளமற்று சுவரை நிரப்பிய அம்சமான தைல ஓவியம். அதில் வளைந்தாடும் உருவமாய் பெண்ணொருத்தி தெரிவது போலிருந்தாலும் அதுவொரு பெண்ணல்ல போலவுமாய்.

ஆமாம் நிறங்கள் சிதறி வடியும் உருவற்ற பெருந்தொடர்ச்சி. ஒருவிதமான ஊதா கலந்த இளநீலத்திற்கு என்ன பெயர். அவ்வளவு எடுப்பாய் இருக்கிறதே!

பரவிக் கொண்டிருக்கும் இந்த மெல்லிய வாசனை செயற்கையானதா இல்லை இச்செடிப்பூக்களினதா? செடிக்கருகாமையிலுள்ள மூலைச்சுவரில் சில புத்தகங்களும் சுவர் கண்ணாடியும் இருந்தன. புத்தர் படம் போட்ட கருநீல அட்டையுடைய புத்தகம் மாத்திரம் வெளியே இழுப்பட்டிருந்தது. சற்றே எக்கிப் பார்த்தால் கண்ணாடியில் இடுப்புப் பகுதி தெரிந்தது. இதற்குள் எதற்கொரு கண்ணாடி? அழும் மூஞ்சிகளை பார்த்துச் சிரித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்களோ! மேசைக்கடியில் ஒரு மஞ்சள் வண்ண உறை கொண்ட லோலிபப் கிடந்தது. சிறுவர்கள் யாரேனும் தவறவிட்டிருக்கக் கூடும். குனிந்து அதனை எடுத்துப் போட்டாலென்ன? அது முறையல்ல. அதற்காக அது அப்படியே கிடக்கட்டும் என விடுவதும் முறையல்லவே!

வைத்தியருக்கும் நோயாளிக்குமான கதிரைகளின் இடைவெளி மிகக் குறைவானதாய் இருந்ததுடன் வழமை போலல்லாது அவை சாய்வு கதிரைகளாவுமிருந்தன. ஆச்சரியந்தான்.. யாரும் சொல்லாமலேயே அவளும் சாய்ந்து ஆசுவாசிக்கும் தோரணையிலேயே அமர்ந்திருந்தாள். இயல்பாகவே ஒரு ஒத்துணர்வு ஏற்பட்டுப் போனதோ!

ஏதும் பேசாமல் நீளும் இந்த இடைவெளி பற்றி இவர் ஏன் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. எனது தற்போதைய தேவையென்பதாய் நினைக்கிறாரோ? இருக்கட்டும்… இருக்கட்டும்.

தாரணி பெருந் தயக்கத்துடனேயே தொடர்ந்தாள்.

‘“சேர்….. எப்பிடி ஆரம்பிக்குறதுன்னே தெரியல… எங்க தொடங்கி எப்பிடி சொல்றதுன்னு ஒன்னுமே புரியல… ஒரே வார;த்தையில சொல்லனுமுணா…”

அவ்வறைக்குள் வேறு யாராவது இருக்கிறார்களாவென மீண்டுமொரு முறை தேடிக்கொண்டே சற்று முன்னால் எக்கி மெதுவாகச் சொன்னாள்,

“எனக்கு பைத்தியமுனு நெனைக்கிறேன்”

கயான் அசாதாரணமான நிதானத்துடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“எவ்வளவு காலமா?”

“கொஞ்ச காலமா….. இப்ப கூடிருச்சு”

“பைத்தியம்னு ஏன் முடிவு பண்ணீங்க?”

அவள் மீண்டும் அறையின் திசைகளை கவனித்து யாருமில்லையென உறுதிபடுத்திக்கொண்டே தொடர்ந்தாள்.

“ரொம்ப கோவம் வருது. கைல கெடைக்கிறத தூக்கி அடிக்கிறேன். சத்தம் போட்டு கத்துறேன். எம்புள்ளய அடிச்சு காயப்படுத்திகூட இருக்கேன். புள்ளைய கண்டாலே சமயத்துல தலய பிய்க்கிற கோவம் வர்ற மாதிரி இருக்கு. இந்த பழக்கமெல்லாம் எம்புள்ளய ரொம்ப பாதிக்குதுன்னு நெனைக்குறேன் சேர்”

“பாதிக்குதுன்னு தெரிஞ்சா எதுக்காக செய்யணும்?”

அவள் திடுக்கிட்டு அமைதியாகினாள்.

“சரி….. மகளுக்கு எத்தன வயசு”

“பன்னண்டு முடிஞ்சு பதிமூனு வருது”

“அப்போ கோபப்படுறத நிறுத்த முயற்சி செஞ்சா சரியா போயிடுமில்லயா?”

“இல்ல… அததான எனக்கு கண்டுபிடிச்சுக்க முடியல. மூச்செடுக்கையில அடைக்கிறாப்ல… எங்கயாவது ஓடிரலாம் போல… என்னத்தயெல்லாமே யோசிக்கத் தொடங்கிட்டேன். சரியா தூங்க, சாப்பிட, பேச எதுவுமே முடியுதில்ல… கடைசிலதான் இப்பிடி…. எனக்கு பைத்தியமுனு….”

“இங்க பாருங்க தாரணி. நீங்க ஒரு வேலையில இருக்கிறீங்க. உங்களுக்கு வீட்டையும் வேலையையும் ஒன்னா பாத்துக்கிறது கஷ்டமா இருக்கலாம். அந்த சமயத்துல நீங்க சொல்றது எல்லாமே சாத்தியம்தான். அதுவுமில்லாம அறிவு நிலையிலிருந்து உயர்ந்த மனநிலை கூட ஒருவகையான பைத்தியம்தானே! கொஞ்சம் வித்தியாசமா யோசிக்க தெரிஞ்சவங்க எல்லாம் தங்கள பைத்தியம்னு சொல்லத் தொடங்கிட்டா உலகத்துல பாதிபேர் பைத்தியமாதான் இருக்கணும் இல்லையா?”

தாரணி அர்த்தமற்ற பதட்டத்துடனேயே இருந்தாள். இடைக்கிடையே பேக்கிலிருத்த தண்ணீர் போத்தலை எடுத்துக் குடித்துக்கொண்டாள்.

“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றார்? அவரோட ஏதும் பிரச்சனைகள்?”

“ச்சே அவர் என்னயும் ஒரு கொழந்தய போலதான் கவனிச்சுக்குறார். அவரால எதுவுமே இல்ல.”

“அப்ப உங்க கோபம் தொடர்பா எதுவும் அவருக்கு தெரியாதா?”

“அத எப்பிடி சொல்றதுன்னா… எனக்கு எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கணும். தரையில ஒரு முடி விழுந்திருந்தா, தூசி படிஞ்சிருந்தா, வச்சது வச்ச இடத்துல இல்லன்னா… இதெல்லாம் எனக்கு புடிச்சிக்காது. செருப்ப கழட்டி ஒரே வாக்குல நேரா அடுக்கி வைக்காட்டி கூட என்னால ஏத்துக்க முடியல. அவ்வளவுக்கு சரியா இருக்கணுமுன்னு நெனைப்பேன். சோறையும் கறியையும் ரொம்ப பெசைஞ்சு யாரும் சாப்புடறத கூட ஏத்துக்க முடியல. எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கனுணுமுனு தோனும். இப்பிடி யோசிக்கிறதாலதான் வீட்டுக்குள்ள சண்ட கூட வருது. அத்தோட அதையெல்லாம் வேற எப்பிடி சொல்றதுன்னு புரியல்ல. இன்னோங் கூட நெறைய சொல்லிக்கலாம்.”

அவள் தடுமாறினாள். வார்த்தைகள் பதட்டமாக வந்து விழுந்தன. எதைச் சொல்வதென்று தெரியாத தவிப்புடன் பல சம்பவங்களை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிச் சொன்னாள்.

“பொறுமையா சொல்லுங்க… சண்டை எப்பிடி வருது?”

“சொல்லலப் போனா பிரச்சின தொடங்குற எடமே எம் பழக்க வழக்கந்தான். நான் நெனைக்கிற புள்ளையா எம்புள்ள இல்ல. அவ ரொம்ப குழப்படியா இருக்கா. சரியா எல்லாம் செஞ்சிக்குவான்னு எதிர்பார்க்குறேன். அவரும் எனக்காக ரொம்ப சமாளிக்கிறாரு. ஆனா எதுவுமே நெஜமா இல்ல. எனக்காக எல்லாரும் நடிக்கிறாங்க. எங்கிட்ட உண்மையா இல்லன்னு தோனுது. எனக்கு தெரியல… இதெல்லாம் சரியா சொல்றேனான்னு தெரியல”

இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொள்வதாய் பட்டது. இருந்தாலும் வலது கையால் முகத்தை அழுந்தத் துடைத்தவாறே முடியைப் பின்னால் அமத்தி விட்டாள்.

“மகள் என்ன தப்பு செய்றாள்னு நினைக்கிறீங்க?”

“எத சொல்றது…? இப்டி வச்சிக்குவோம். சில நேரத்துல மரக்கறி சாப்புட மாட்டா. ஊட்டிவிட சொல்லுவா ஊட்றது சரியில்லன்னு சொன்னா கோவப்படுறா. எதிர்த்து பேசுறா. புள்ளைக்கு தேவையானதை தெனமும் பார்த்து பார்த்து செய்றேன். அளந்து அளந்து கொடுக்குறேன். ஆனா பூடு, கிராம்பு இதையெல்லாம் சாப்புட சொன்னாக்கூட புள்ளைக்கு புடிக்குதுல்ல. தெரியாம வீசிப்போட்டதை ரெண்டு முறை கண்டுபிடிச்சிட்டேன்.”

“கண்டுபிடிச்சி…..!”

“பயங்கரமா அடிச்சேன். கள்ளத்தனம் செய்றத என்னால ஒத்துக்க முடியல. ஆனா நான் கோவத்துல அடிக்கல்ல.”

அவள் அனேகமாக வேறெங்கேனும் ஒரு திசையை நோக்கியவாறே பேசிக்கொண்டிருந்தாள். அவரை நேரே பார்த்துப் பேச அமையும் போதெல்லாம் அவசியமேயற்ற தடுமாற்றத்துடன் குனிந்தும் நிமிர்ந்துமாய் பேசினாள்.

இன்னும் ஏதோவெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டார்கள். பின் ஒரு வாரத்திற்கு பிறகு சந்திக்க வேண்டிய தினத்தையும் நேரத்தையும் தீர்மானித்து விடைபெறும் போது அவள் அழுததற்கான அடையாளம் முகத்தில் தேங்கியிருந்தது. அவளும் ஓரடி பின்னால் சரிந்து கண்ணாடியில் தன் பிம்பத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

*

உடலில் எப்பாகத்தின் கனதி குறைந்ததென்று தெரியவில்லை. தூக்கி வைத்திருந்த பெருங்கல்லொன்றைத் தட்டியடித்து வெடிக்க வைத்தாயிற்று. இனியென்ன? துண்டு துண்டாக பெயர்த்தெடுத்து வீசிவிடுவது தானே! எத்தனையோ திட்டங்கள் குடைந்தபடியே இருந்தன. அதுவாக அதன்படி நடக்கட்டுமென அவற்றை புறந்தள்ளினாள். வாசலில் போடப்பட்டிருந்த மிதித்துணி சுருண்டிருந்தது. காலால் அதனை விரித்து நேர்படுத்தினாள்.

இன்னும் இருபது நிமிடங்களுக்கிடையில் அவன் வந்துவிடக் கூடும். அடுத்தடுத்ததாக ஏகப்பட்ட ஏவல்களை குழந்தையிடத்தே வீசியபடியே வேலைகள் செய்தாள்.

“அப்பா வருவாரு டிவிய நிப்பாட்டு”

“அப்பா வர மொதல்ல குளிச்சிரு”

“அப்பா வரப்போராரு புத்தகத்த எடு”

“தலகாணிய பாரு அப்பா வந்துருவாரு எடுத்து வை”

எல்லாம் சரியாகவிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டாள். சாப்பாட்டு மேசையில் பொருட்களேதும் இல்லை. தும்புத்தடி நிலத்தில் படாமல் தொங்கியது. யன்னல்கள் சரியாக மூடப்பட்டிருந்தன. தேவையற்ற மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. குசினி குழாயில் தண்ணீர் சொட்டவில்லை. குறிப்பாக மிதித்துணிகள் சுருங்கியிருக்கவில்லை.

குளித்துத் தூய்மையானாள், பிள்ளையையும்.

குடிக்காமலிருந்த சளி மருந்து அப்படியே கிடந்தது. ஆண்டவா! சட்டென எடுத்து மறைத்து வைத்தாள். பிள்ளை படிப்பில் மூழ்கியதாய் பாவனை செய்வது போலிருந்தது. இருக்கட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்.

அவன் உள்நுழையும் போது சிரிப்பால் வரவேற்றாள். பிள்ளை நிமிர்ந்து ஒருதடவை சிரித்துப் பின் குனிந்தது.

“படிக்கிறியா நடிக்கிறியா? மொதல்ல ஒழுங்கா உக்காரணும் அப்பத்தான் படிப்பு மண்டைக்கு ஏறும். உக்காந்து படிக்கிற லெச்சணத்த பாரு…. இதெல்லாம் ஒங்க கண்ணுக்கு தெரியவே தெரியாதா?” தாரணியையும் திட்டியபடி பிள்ளையின் தலையில் பலமாக ரெண்டு போட்டான்.

அவர்கள் ஒரு ஒழுங்கு முறையில் இயங்கினார்கள்… சிரித்தார்கள்… சாப்பாட்டு மேசையை சாப்பிடவும் சோபாவை டிவி பார்க்கவும் பயன்படுத்தினார்கள். ஓய்வெடுக்கவும் சரியான அளவில் நேரமொதுக்கிக் கொண்டார்கள்.

சமையலறை யன்னலில் அரிசி பருக்கைத் தேடும் குருவியொன்று இரவு நேரத்திலும் வந்து கண்ணாடியை கொத்திப் பார்த்துக்கொண்டிருந்தது. எழுந்து போய் ஒருபிடி அரிசியை விசிறத் தோன்றினாலும் அக்குருவி ஏமாறப் போகிறதா அல்லது அங்கு கிடைக்கும் ஏதேனும் ஒன்றைக் கொத்தி திருப்தியுறுகிறதாவென காண ஆவல் கொண்டவளாய் பேசாதிருந்தாள்.
குருவியின் அசைவு இருளுக்குள் பெரிதாகி தெரிந்தது. தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க பயமாகவும் அருவருப்பாகவும் கூட இருந்தது. விரட்டி விடுதலுக்கும் மனம் ஒப்பவில்லை. அப்படியே அசையாதிருந்தாள்.

இரவு நேரத்தில் ஏன் குருவி வருகிறதென்று அவன் சந்தேகத்துடன் அவளைக் கேட்டான். எந்நேரமும் அரிசி வீசப்படுவதால்தான் அது வரப் பழகியிருக்க வேண்டுமெனும் புதுக் காரணத்தைக் கண்டுபிடித்தான். அதையே திரும்பத் திரும்பச் சொன்னான். இடையில் அரிசி இன்னுமே மிஞ்சியிருக்கிறதாவென யன்னலைத் திறந்து தேடினான். ஒரு பருக்கை கூட கிடைக்காத ஏமாற்றத்தை குருவியின் மீதாக்கித் திட்டினான். வேகமாக அது அரிசி பருக்கைகளை விழுங்குவதை தான் அவதானித்ததாக இரண்டொரு முறை கூறிக்கொண்டான்.

பழங்கள் சாப்பிடப்படாமல் அப்படியே இருப்பதாகக் கூறி பேச்சை வேறு திசைக்கு மாற்றி திட்டத் தொடங்கினான்.

சமயம் பார்த்து தாரணி ஆரம்பித்தாள்.

“நம்ம எல்லாருமே ஏதோ வகையில உளநலம் பாதிக்கப்பட்டுதான் இருக்றோமாம். இது பெருசா வெளியில தெரிஞ்சிக்காட்டியும் மத்தவங்களுக்கு அது பிரச்சனையா ஆகாட்டி வெளிய தெரிஞ்சிக்க வாய்ப்பே இல்லன்னு சொல்றாங்க. அப்பிடி மத்தவங்களுக்கு பிரச்சன தருவதாயிருந்தா ஒடனே மருந்து எடுக்கணுமாம். டொக்டர பாக்கணுமான்னு சொல்றாங்க”

“யாரு சொல்றாங்க?”

“ஒரு புத்தகத்துல படிச்சேன்.”

“இத புத்தகத்துல வேற படிக்கணுமா? நாந்தா சொன்னேனே ஒனக்கு நெறய பிரச்சின இருக்குனு”

“ம்ம்… பிரச்சனதானே! இதுக்கு OCD இல்லன்னா OCPD -ன்னு பேராம். இது வாறதுக்கான காரணம் சரியா இதுதான்னு இல்லையாம். ஆனா ஏராளமானவங்களுக்கு இருக்குமாம். ரொம்ப சுத்தமா இருக்கணுமுன்னு நெனக்கிறது… வச்சது வச்ச மாதிரியே இருக்கணும்… அப்பறம் எல்லாமே ஒரே ஒழுங்குல நடக்கும்னும் நமக்கு புடிச்ச மாதிரியே மாத்தணும்னு யோசிக்கிறது. இன்னோ நெறய்ய..”

அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவள் தொடர்ந்தும் சொல்லத் தொடங்கியிருந்தாள்.

“வெளிய தெரியாட்டியும் இதெல்லாம் மத்தவங்களுக்கு தொல்லையான விசயந்தா பாருங்க. ரொம்ப நேரமா கை கழுவுறது… அளவுக்கு அதிகமா குளிக்கிறது… எல்லாரும் நமக்கு தகுந்தாப்பல மாறணும்னு நெனச்சிக்கிறது இப்படியெல்லாம் கூட அதுக்குள்ள அடங்குது பாருங்க”

“அப்படியெல்லாம் பாத்தா வாழ முடியுமா சொல்லு?”

“அதென்னமோ வாஸ்த்தவந்தா. ஆனா நமக்கும் அதெல்லாமே இருக்குதுன்னு நெனச்சா கொஞ்சம் பயமா இருக்கு.”

“நமக்குன்னு ஏன் என்னய சேத்துக்கற? எனக்குன்னு ஒன்னய வேண்ணா சொல்லிக்க”

அவன் எரிச்சலடைந்தவனாய் காட்டிக்கொண்டான். அவனுக்கு இவ்வுரையாடலில் நாட்டமில்லையென்பதை வேறுவகையில் வெளிப்படுத்தினான். கொட்டாவி விட்டான். உடல் நெளித்தான். கைத்தொலைபேசியை நோண்டி ஏதோ வீடியோ பார்க்கத் தொடங்கியிருந்தான்.

தாரணி வைத்தியர் பேசியவற்றை மீட்டிக்கொண்டே படுக்கையில் சாய்ந்தாள்.
‘OCD-ல பாதிக்கப்பட்டவங்க அர்த்தமேயில்லாத முட்டாள்தனமான ஏதாவது செஞ்சிட்டே இருப்பாங்க. அதனால நடக்கவிருக்குற கெட்டதுகளை கட்டுப்படுத்திட்டதா இல்லன்னா அவங்க இருக்குற இடத்த அவங்க பாதுகாக்குறதாவும் நினச்சிப்பாங்க. சொல்லப்போனா அப்பிடி நினைக்கையிலதான் அவங்களால பதட்டமில்லாம இருக்க முடியும். இதெல்லாம் விட்டுர நினச்சாலே பெரிய பீதியில் பதறி ஓய்வா சந்தோசமா இருக்கவே முடியாம தவிப்பாங்க”

இன்னும் எவ்வளவோ சொன்னாரே.. உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமுமாம். பிள்ளை என்னத்த செஞ்சிச்சின்னு அத போட்டு தண்டிக்கணும்?

பிள்ளையிடத்தே போய் படுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. திட்டுவானே. ஒரு வயசுக்குப் பின் தனியா விடுறது ரொம்ப கட்டாயமாம். இடைக்கிடை போய் தொந்தரவு செய்யவும் கூடாதாம். அவங்க ஆரோக்கியத்துக்கு நல்லதில்லையாம்.

பலமாக தலையில் அடித்தானே. வலித்திருக்குமோ! பிள்ளை எதுவுமே சொல்லிக்கொள்ளவில்லையே?

இறக்கி வைத்ததாய் எண்ணிக்கொண்ட பாரம் மிகப்பலமாக நெஞ்சை அழுத்தியது. சாய்ந்துகொள்ள முடியாமல்… கைகால்களை அசைக்கக்கூடத் தோன்றாமல் படுத்திருந்த பக்கவாட்டு கன்னத்தில் இருதுளி கண்ணீர்த் திவலைகள் உருண்டு அதே இடத்தில் படிந்து தேங்கின. அத்திவலைகளின் அடர்த்தி அனாயாசமானதாகப்பட்டது. அதனைத் துடைத்தெறியும் முயற்சியைக்கூட வெறுத்தவளாய் அப்படியே கிடந்தாள். வைத்தியரின் அறைக்குள் தென்பட்ட புத்தரின் உருவம் கொண்ட அட்டைப்படம் மனதிற்குள் நிழலாடியது. சம்பந்தமேயில்லாமல் அந்த லோலிபப்பை அவர் எடுத்து என்ன செய்திருப்பார் என்று யோசித்தாள். விரக்தியான சிரிப்பொன்றை இருளுக்குள் வாயசைத்து வெளிப்படுத்தினாள். தனது முயற்சி ஸ்திரமற்று துவண்டு சரிவதாய் தெரிந்தது. மூச்சு முட்ட போர்வையைப் போர்த்தி அடர் இருளுக்குத் தாவினாள்.

*

அனுமானம் பொய்த்திருக்கவில்லை. ஏதோவொரு இடத்தில் இடறியது. சந்தேகத்தை உறுதிபடுத்த சந்தியாவுடனும் பேச வேண்டி நேர்ந்தது.

நிச்சயமாக தாரணிக்கு ஒரே ஒரு மகன்தான். மகளென தன் பிள்ளையை மாற்றிச் சொல்லியிருக்கிறாள். அல்லது தடுமாற்றத்தில்…. இல்லை தடுமாற்றத்தால் தொடர்ச்சியாகவே மகனை மகளாக்குதலுக்கான அவசியமென்ன? அதையும் விட சந்தேகத்திற்கான ஏராளமான இடங்களை அவள் மிச்சப்படுத்தியுமிருந்தாள்.
OCPD-யின் அறிகுறிகள் அவளிடத்தேயும் இல்லாமலில்லை. ஆனால் அனேகமாகப் பொய்களையே அவள் சொல்ல விழைவதாக இருந்தது. சொல்லப் போனால் ஆரம்பத்தை விட நாளாக நாளாகத்தான் அவளில் பதட்டமும் பயமும் அதிகரித்திருந்தது.

கயான் மேலதிகமாக சில மாத்திரைகளைப் பரிந்துரைத்தான். மாத்திரைகளைவிட தொடர்ச்சியான சந்திப்பே அதற்கான தகுந்த நிவாரணியென அடிக்கடி வலியுறுத்தும் போது அவளது தடுமாற்றத்தை அவதானித்தான். மூச்சுபயிற்சிகளையும் உடற்தளர்ச்சிக்கான பயிற்சிகளையும் மாற்றி யோசிக்கும் திறன்களையும் மெல்ல மெல்ல உணர்த்தி அவளைத் தெளிவாக்க முயற்சித்தான்.

அவர்களது சந்திப்பு இறுதிக்கட்டங்களை அடைந்துகொண்டிருந்தன. அவள் எல்லாவற்றையும் தொடர்பேயில்லாமல் சந்தேகம் கேட்டாள். மாத்திரைகள் பலனற்று போக வாய்ப்புள்ளதா? மாத்திரைகளை தண்ணீரில் அல்லது தேநீரில் கரைத்து குடிப்பதால் அதன் பலன் குறையுமா? சந்திப்புக்கு வராமல் மாத்திரை மட்டும் குடித்தால் சரியாகாதா? இன்னும் பலவற்றையிட்டும் குறைப்பட்டாள். தன்னிடத்தே ஒரு மாற்றமும் இல்லையென்பதாய் அழுது தன் பிள்ளையின் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசத் தொடங்கியிருந்தாள்.

“இப்பவெல்லாம் மர்மமா என்னென்னமோ நடக்கத் தொடங்கிருக்கு… நான் சொன்ன விசயத்த யாராவது கண்டுக்கலன்னா பயங்கரமா கோவிச்சிக்கிறேன். அடுத்த கட்டமா நான் எச்சரிச்ச விசயத்த நானே நடத்தி மத்தவங்கள திட்டித் தீர்த்துக்குவேன். எப்பிடியாவது நான் சொன்னது சரின்னு நிரூபிக்க என்னவெல்லாமோ பண்றேன். அப்பிடின்னா… ஒங்களுக்கு இது புரியல்லயோ தெரியல்ல… நடந்த ஒரு விசயத்த சொன்னா ஒங்களுக்கு வௌங்கிரும் சேர்.”

மிகவும் பதறிப் போனவளாய் பேசிக்கொண்டிருந்தாள். கைகளை அசைத்து அசைத்து நிலை தடுமாறியவளாய், குரலில் சிறுநடுக்கம் தொற்றியிருந்தது.

“இப்ப பாருங்க… தண்ணி க்ளாச மேசையில வைக்க வேணான்னா, யாருமே கேட்ட பாடா இல்ல… அப்பறம் யாருக்கும் தெரியாம நானே அத கீழ தள்ளிவிட்டுட்டு சத்தம் போட்டு கத்துவேன். கடைசில எல்லா குத்தமும் என் பொண்ணு செஞ்சதாதான் மாறியிருக்கும். நான் செய்யலம்மான்னு அவ எவ்வளவு சொன்னாலும் புள்ளவுட்டு பேச்சு எடுபடாம போகும். அப்பறம் கோவம் தெறிக்க கண்ட எடத்துல அடிச்சு புள்ளய காயப்படுத்துவேன். அத்தோட போச்சின்னு கோவம் தீந்தாலும் பரவால்லயே! கத்தி வீட்டயே ரெண்டாக்கி போட்ருவேன். இப்பிடியெல்லாம் எதுக்கு நடக்குதுன்னு ஒன்னுமே புரிய மாட்டிங்குதே…!”

அவள் வெடித்தழுதாள். இயலாமையின் அந்தரத்தில் எங்கேனும் ஒரு பிடிமானம் கிடைக்காதாவெனும் இறுதித்துளி நம்பிக்கையில் அமர்ந்திருந்தாள்.

எல்லாமே எதிர்பார்த்ததுதான். நிலமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் என்ன? தாரணி சொன்ன அத்தனை பொய்களிலும் ஒரே ஒரு பொய்யைத்தானும்தான் கண்டுக்கொண்டதாய் கயான் கடைசிவரை காட்டிக்கொள்ளவில்லை.

எனினும் ஒரு தடவை கேட்டுப்பார்த்திருக்கிறான்.

“உங்க குடும்பத்தை நான் சந்திக்கணும். கூட்டி வர முடியுமா?”

உயிரற்ற வெற்றுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே சரியென்றாளே தவிர செய்யவில்லை. செய்வாளென்ற எதிர்பார்ப்பும் அவனுக்கு இருக்கவில்லை.

ஒன்றிற்குமே பிடிபடாத சில அவஸ்தைகள் வெளிப்படும்போது… வேறு வழியே இல்லை எனும் சூழ்நிலை உருவாகும் போது… இச்சம்பவங்களை ஆய்ந்தறிந்த ஒரு நபராக…. வேறென்ன செய்துவிட முடியும்?

வழமையாகச் செய்வதுதான்.

கயான் 1929 இலக்கத்தை அமத்தி பேசத் தொடங்கியிருந்தான்.

***
*1929 – இலங்கைச் சிறுவர் பாதுகாப்பு உடனடித் தொடர்பிலக்கம்

பிரமிளா பிரதீபன் – இலங்கையில் உள்ள வத்தளையைச் சேர்ந்தவர். தற்பொழுது ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது விரும்பித் தொலையுமொரு காடு யாவரும் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular