மா.க.பாரதி
1
பாலத்தில் ஆற்றைப் பார்த்துக்கொண்டே நடந்து சென்ற சீனுவுக்குப் பேரெழில் மிக்கதொரு ஒலி தன்னுள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருப்பதாகப்பட்டது. அவ்விடம் யாருமற்றிருப்பதை உறுதி செய்த பின்னர் வழக்கமாக அவன் அமரும் இடத்தருகே வந்து சப்பணமிட்டமர்ந்து பாலத்தின் இடை ஓட்டைவழி ஆற்றை வெறித்த வண்ணமிருந்தான். அவன் உறுதி செய்யத் தேவையில்லைதான். இரவு ஒன்றரை மணிக்கு இப்பாலத்தருகே யார்தான் இருப்பார்கள்? அவன் உதடுகள் ஏதோ ஒரு பெயரை மந்திர உச்சாடனம் செய்வதுபோல் உச்சரித்துக் கொண்டேயிருந்தன. மேலே முக்கால் நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் கணந்தோறும் அந்தக் குரல் அவன் செவியை அறைந்த வண்ணமிருந்தது. நிலவைப் பார்த்துவிட்டு ஆற்றை ஆசையுடன் பார்த்தான். நீரின் இன்மை நிலவை எதிரொலிக்கவில்லை.
தூரத்தில் ஒரு லாரி பாலைவனச் சுழல்போல் அமைதியைக் குலைத்தவண்ணம் முன்னேறி வந்தது. காவிரிக்கும் பாலைவனத்துக்கும் இனியென்ன புதிதாய் வித்தியாசம் தோன்றிவிடப் போகிறது? KRY என்ற பதம் கொட்டைவடிவில் முன் தெரிந்தது. அப்பாவின் வண்டி. சிறு வயதில் இதே காவிரியில் கதை சொல்லிக் கொண்டே குளிப்பாட்டிவிடும் அப்பாவின் கைகள் கண்முன் வந்து போனது. லாரி ஸ்டியரிங் பிடித்த அந்த முரட்டுக் கைகளின் வாஞ்சையான ஸ்பரிசத்தைத் தன் முதுகில் உணர்ந்தான்.
சீனுவுக்குப் பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும். காவிரியில் அப்பாவும் சீனுவும் குளித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசுவதைப் பார்த்தவண்ணமே ராகினி நீந்திக் கொண்டிருந்தாள். வங்காளம் வரை தான் சென்று வந்த பயணம் பற்றிப் பேசிக்கொண்டே காளிங்கன் சீனுவின் முதுகைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார்.
‘பா. எனக்கும் உன்கூட வரணும் போலிருக்கு’ என்றான் சீனு.
’அதுக்கென்ன கண்ணு’ என்று காளிங்கனும் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். கடைசி ஒரு வாரமாக அம்மாவுடன் தினமும் சண்டை. அதிர்ந்து பேசாத அப்பா சண்டை போடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சண்டை நீடிக்கும் ஒவ்வொரு கணமும் அம்மா வாலி போல் தனது எதிராளியின் பலத்தை எடுத்துக்கொண்டு இன்னும் சத்தமாகக் கத்தத் தொடங்கிவிடுவாள். இவை எல்லாவற்றையும் கடந்து காளிங்கன் திக்கித் திணறிச் சண்டை போடுவார். அக்கா ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.
அன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் லாரி அதிசயமாக வீட்டருகே நின்றுகொண்டிருந்தது. ஒரு டிரங்குப் பெட்டியும் முன்னிருந்தது.
‘ஒரு மாசம் கழியட்டுமப்பு. படிச்சுக்குவியல்லோ? கூட வாறியா?’ என்று லாரியில் பொருட்களை நிரப்பிக் கொண்டே கேட்டார். புத்தகப்பையை விசிறி எறிந்துவிட்டு அப்பாவைக் கட்டிக் கொண்டான். காப்புக் காய்த்த அந்த முரட்டுக் கைகள் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தபோது உணர்ந்த பாதுகாப்புணர்வைப் பிற்காலத்தில் நினைத்துப் பார்ப்பதற்கெனத் தன் நினைவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டான். பஞ்சாப் வரை பயணம். ஊரின் பெயர்கள் எவையும் அவன் மனத்தில் தங்கவில்லை. அந்த ஊர்கள் பற்றி அப்பா கதைகதையாக சொன்னவை மட்டும் மனத்தில் தங்கியது. அப்பா வண்டியோட்டிக் கொண்டே இருக்க சீனி தங்கவேலு அண்ணனிடமும் அப்பாவிடமும் மாறி மாறிக் கதையடித்துக்கொண்டே வந்தான். வழியில் இல்லையென்றாலும் மைசூரில் நிறுத்தினார். முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் வயது. அப்பாவையும் தங்கவேலு அண்ணனையும் மாறிமாறிக் கட்டிக் கொண்டாள். சீனுவை அறிமுகம் செய்தவுடன் அவனையும் கட்டிப்பிடித்து முத்தம் தந்தாள். அவள் பேசியது எதுவும் சீனுவுக்குப் புரியவில்லை. கோகுல் சாண்டல் பவுடரின் மணம் ஊருக்கே வீச, அவள் தன் கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிக் கன்னடத்தில் பேசியதை சீனு வெகுவாக இரசித்தான். ஒரு நாள் பயணம் கழிந்திருக்கும். தங்கவேலு அண்ணனும் அந்த மைசூர்க்கார அக்காவும் எங்கோ போயினர். அப்பா இதுதான் சமயம் என்று கடைக்குச் சென்று லைட்ஸ் வாங்கி வந்தார். சீனு ஆச்சரியமாகப் பார்த்தான்.
‘என்ன கண்ணு பாக்குற. நமக்கு என்னிக்குமே லைட்ஸ்தான். கூட எவனாச்சும் இருந்தா கம்மனாட்டிங்க பங்கு கேப்பானுங்க. அவனுங்களுக்காகத்தான் பீடி புடிக்குறது’ என்று சிகரெட் இழுத்துக் கொண்டே சிரித்தார். மீண்டும் தங்கவேலு வந்ததும் பயணம் தொடர்ந்தது.
‘அந்த அக்காவக் காணோம்?’ என்று சீனு கேட்டபோது
‘இனி அத மறந்துடு’ என்று தங்கவேலு அவன் கன்னத்தைக் கிள்ளியபடியே சொன்னார். அவரிடமிருந்துதான் இப்போது கோகுல் சாண்டல் மணம் வந்தது.
இதுவரை பார்த்திராத பகுதிகள், கேட்டிராத மொழி, சந்தித்திராத மனிதர்கள் என அவன் செல்லும் வழியெங்கும் புதுமையான அனுபவங்களால் நிரம்பி வழிந்தன. இரவு தங்குவதற்குப் பெரிதாக மெனக்கெடவில்லை. சில சமயங்களில் ஏதேனும் சத்திரம். சில சமயங்களில் நண்பர்களின் வீட்டுத் திண்ணை. அப்போதுதான் சந்தித்து நண்பர்களாகியிருக்கும் யாரேனும் ஒருவரது வீடு. இவ்வளவு பயணம் போனபோதும் காளிங்கன் கடலுக்குப் போக அதிகம் விருப்பம் காட்டியதேயில்லை. ‘என்ன பெரிய மயிரு கடலு. தண்ணியா அது. தூ’ என்று சலித்துக்கொள்வார். இப்படிப்போன பயணம் ஒரு மாதத்தில் நிறைவுற்றது. கரூருக்குத் திரும்புகையில் ‘வீட்டுக்குப் போறோம்’ என்ற உற்சாகம் இருந்தாலும், மீண்டும் இதேபோன்ற ஒரு லாரி பயணம் வாய்க்குமா என்ற ஏக்கம் நிறைந்த கேள்வியுடனேயே அவனது பொழுது கழிந்தது. வீட்டுக்கு வந்தபின் அம்மா நெற்றியில் முத்தமிட்டாள். அவளது உதடுகள் குளிர்ச்சியாக இருந்தன.
அதே வருடத்தில் இது போன்று மூன்று பயணங்கள். மீண்டும் எட்டாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள். ‘லாரி டிரைவர் காளிங்கன் மகன்’ என்று பள்ளியில் யாரேனும் அவனை அடையாளப்படுத்தினால் பெருமையில் அவனது நெஞ்சம் விம்மிப் புடைக்கும். பள்ளியில் ராகினிக்கு அடுத்தபடி பிரசித்தி பெற்ற மாணவன் இவனாகத்தான் இருப்பான். ஒவ்வொரு முறை பாடம் நடத்தும்போது வரும் ஊர்களில் இவனுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு ஊர் வந்துவிட்டால் போதும். பிரலாபிக்க ஆரம்பித்துவிடுவான்.
காளிங்கன் மற்றும் அவர் போன்ற பல லாரி டிரைவர்களின் அகில இந்திய பர்மிட் திடீரென ஒருநாள் பறிக்கப்பட்டது. காளிங்கன் உடைந்து போனார். மீண்டெழ முடியாதவண்ணம் அப்பா உடைந்துபோயிருப்பதை உணர்ந்த சீனு இயலாமையின் பிடியில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக்கிடந்தான். மார்த்தாண்டம்தான் காளிங்கன் வீட்டுக்கு வந்து சமாதானம் சொல்லி அவரைப் போராட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அன்றிலிருந்து சில மாதங்கள் வரை மார்த்தாண்டத்தின் வீடுதான் காளிங்கனுக்குப் புகலிடமாயிற்று. பல கட்டங்களில் போராட்டம் நடத்தினர். போராட்டம் வெகுமக்களிடம் அதிகம் சென்று சேரவில்லை. அதிகாரிகள் கண்டு கொள்ளவேயில்லை. இதை உணர்ந்த காளிங்கன் நம்பிக்கை இழந்து வேறு வேலை தேடத் தொடங்கினார். கரூரில் வேலைக்கா பஞ்சம்? டெக்ஸ்டைலில் கூலி வேலைக்குச் சேர்ந்தார். அக்காவும் டெக்ஸ்டைலில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தாள். அந்த வருடத்தில் உலகச் சந்தையில் ஏற்பட்ட சரிவாலும் தமிழகத்தில் ஏற்பட்ட மின்வெட்டாலும் பல டெக்ஸ்டைல்கள் இழுத்து மூடப்பட்டன. அப்பா வேலை பார்த்த கடை தன் ஆயுளை அத்துடன் முடித்துக்கொண்டது. அக்காவின் வேலை மட்டும் தப்பித்தது. சீனு தானும் வேலைக்குப் போவதாகச் சொன்னான். எப்போதும் கத்தாத அப்பா அப்போது உச்சிவெறியில் கத்தினார்.
காளிங்கன் அதிகமாகக் குடிக்கத் தொடங்கினார். வீட்டிலேயே காசிருப்பதில்லை என்று அம்மா உச்சஸ்தாயில் கத்தும்போது அப்பா பொறுமையாகக் கேட்பார். கேட்டு முடித்தபின் சிகரெட்டை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுப் பேசாமல் சென்று படுத்துவிடுவார். ‘தண்ணியடிச்சா அப்பனை மாதிரி தண்ணியடிக்கணும்’ என்று சீனு தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பான். அப்போது ஊரில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்துகொண்டிருந்த KRY குழுமத்தார் லாரி டிரைவர்களை வேலைக்கு வலைவீசித் தேடிக்கொண்டிருந்த செய்தி காளிங்கனுக்கு எட்டியது.
’உங்கொப்பன் லாரியெடுத்தான்னா சுத்துவட்டாரத்துல ஒரு பய கிட்ட நெருங்க முடியாது’ என்று போதையில் வீறாப்பு பேசியபடி அன்றிரவு இருந்தார். கொஞ்ச நாட்களிலேயே லாரி டிரைவராக காளிங்கனுக்கு வேலை கிடைத்தது. முதல் நாள் வேலைக்குச் சென்றவரை அன்று இரவு நெடுநேரம் ஆகியும் காணவில்லை. உள்ளூரில் இருந்தால் இரவு 9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதையடித்துவிட்டுத் தூங்கிவிடும் காளிங்கன் அன்று இரவு முழுக்கக் காணவில்லை. ‘நெம்ப நாள் கழிச்சு ஸ்டீரிங்க கைல புடிச்சிருக்குல்ல. எங்ஙனயாச்சும் சுத்திட்டு வரும். நீ படுத்துத் தூங்கப்பு’ என்று அம்மா தன்னையும் சீனுவையும் சமாதானம் செய்ய முயன்றாள். எத்தனை முறை ஃபோனடித்தும் எடுக்கவேயில்லை. அடுத்த நாளும் கழிந்தது. இரவு பதினொன்றரைக்கு அதீத போதையில் வீடு வந்து சேர்ந்தார். சீனுவைக் கூப்பிட்டு கையில் ஐம்பது ரூபாயைத் திணித்து ‘போய் சிகரெட் வாங்கியா’ என்று அனுப்பினார்.
இரவு பதினொரு மணிக்கு மேல் டீயும் சிகரெட்டும் கிடைக்கும் ஒரே இடம் வ.உ.சி தெரு மைதானம் அருகேயுள்ள கணேசனின் சைக்கிள் கடையில்தான். மூன்று கிலோமீட்டர் நடந்து போய் வாங்கி வந்து கொடுத்தான். திண்ணையில் சாய்ந்த மேனிக்கு உட்கார்ந்திருந்த காளிங்கன் ‘அப்பூ. வா சாமி’ என்று கம்மிய குரலில் கெஞ்சுவதுபோல் அழைத்தார். குழி வெட்டிய பின் விரைந்து இடம் நிரப்பும் நீரின் வேகத்துடன் அப்பாவுக்கருகில் சென்று அமர்ந்தான் சீனு. பௌர்ணமிக்கு இன்னும் குறைந்து ஐந்து நாட்களாவது இருக்கும். அந்த முக்கால் நிலவின் பக்கம் இருவரது பார்வையும் திரும்பியது. அப்பா சிகரெட் புகையை இழுக்கும்போது அந்நெருப்பு மேலும் சில புகையிலைத் துகள்களைத் தழுவிப் பரவும் சப்தம் அவன் செவிகளில் ஒலித்தது. பேரமைதியாக இருக்கும் என்று நம்பப்பட்ட இரவின் நிசப்தத்துடன் மின் காற்றாடியின் சப்தம் இணைந்து கொண்டது. நிசப்தத்தின் புதிய சப்தக்கூறு! வாயினின்று வெளிவந்த புகை வடிவமற்று மேலெழுவதைக் கண்டு சீனு துணுக்குற்றான். நெருப்பு தான் தீண்டும் ஒவ்வொரு பொருளையும் திருமித் தழுவி அதுவே தானாக, தானே அதுவாக மாறும் வரை நிலைகொள்ளாது தத்தளிக்கிறது. நெருப்பு ‘பற்றுகிறது’ என்று சொல்வதற்கும் அதுதான் காரணமாக இருக்கக்கூடும். அதீதமாக இழுத்ததால் உதடுகளையும் விரல்களையும் காளிங்கன் புண்ணாக்கிக் கொண்டார்.
’எங்கப்பன் வவுத்தக் கிழிச்சு கொடலத் தோண்டி என் வவுத்த நெரப்புனாப்புல இருக்குய்யா’ என்றார். சீனுவுக்குத் தாத்தாவின் நினைவு வந்தது. அதிகம் பேசாத தமிழ் வாத்தியார். காளிங்கன் லாரி டிரைவரானதில் பெரிய வருத்தமுண்டு.
‘எங்கப்பனக் கரச்ச எடத்துலயே கை வெச்சுட்டனே’ என்று மெல்லக் குலுங்கியபடியே புலம்பினார். ஆறுதல் சொல்லலாம் என்றால் தயக்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. முழு வளர்ச்சி பெறாத நிலவை நிதானித்துப் பார்த்தபடி இருந்தான். திரும்பிப் பார்த்து அப்பாவைக் கட்டிக்கொண்டான். பிராந்தியும் சிகரெட்டும் கலந்த வாடை குப்பென்று வீசியது. சீனுவைத் தள்ளிவிட்டு அன்றைய நாளின் கடைசிச் சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
காவிரியில் மணலள்ளும் வேலை காளிங்கனுக்கு. பாதி சிகரெட்டைப் புகைத்த பின்னர் தன் விரல்களிலிருந்து அதை விட்டெறிந்தார். அருகில் குழியில் தேங்கி நின்ற நீரில் விழுந்தது. தன் இறுதி மூச்சை அது விட்டொழிந்தது. நிலவைக் கடந்து மேகங்கள் புகையாய்ச் சென்றன.
2
பாலத்தின் நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு காளிங்கன் இறங்கிவந்தார்.
’அப்பூ. இங்கென்னாய்யா? வீட்டுக்குப் போலாமல்லோ?’ என்று அவன் தோள்மீது கை வைத்து அழைத்தார்.
’நீ போப்பா. நான் வர்றேன்’ என்று தன்மீது வைக்கப்பட்ட அந்தக் கையை உதறிவிட்டுச் சொன்னான் சீனு.
’அம்மா கேட்டான்னா கண்ணப்பமூட்டுல தங்கிட்டேன்னு சொல்லிடு’ என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான். தளர்ந்த நடையுடன் காளிங்கன் வண்டியெடுத்துக் கிளம்பினார். அவர் செல்லும்வரை சீனு திரும்பவேயில்லை. பனிக்காற்றின் இருப்பும் நீரின் இன்மையும் மட்டுமே அவனை அணைக்க அவ்விடம் இருந்தது. சீரான ஓசையுடன் காலடிச் சப்தங்கள் அவனை நோக்கி வருவதாகப்பட்டது. மார்த்தாண்டம்! அவரைப் பார்த்தவுடன் வேகமாக அவ்விடம் விட்டகன்று பாலத்தின் பெரிய தூணுக்குப் பின் சென்று மறைந்து கொண்டான். சற்றுமுன் அவன் அமர்ந்து நோக்கிய அதே இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் கைகளைப் பாலத்தின் மீது ஊன்றிக் கண்களை இடுக்கிக்கொண்டு காவிரியைப் பார்த்தார். நிமிடத்துக்கொருமுறை ஆழ்ந்த பெருமூச்சு அவர் நாசியினின்று வெளிப்பட்டது.
ஊரிலேயே பேரழகான தென்னைமரம் அவர் வீட்டில்தான் இருக்கும். கார்த்திகை மாத இரவுக் குளிரில் நடுங்கியபடி அம்மரத்தடியில் ராகினியுடன் உரையாடியது நினைவுக்குமிழாக மேலெழுந்தது. மடீரென்று அவன் தலையில் இளநீர் நான்கு விழ அவன் மயங்கியும் விழுந்தான். அன்று இரவு முழுக்க அவள் வீட்டிலேயே மார்த்தாண்டம் வைத்தியம் பார்க்கத் தங்கிவிட்டான்.
ராகினியின் அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து சென்றபோது அவளுக்கு வயது ஒன்பது இருக்கும். மார்த்தாண்டம்தான் தன் மகளிடம் சென்று சண்டைபோட்டு ராகினியைக் கரூருக்கு இழுத்து வந்தார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவள் அப்பா மதுரையிலிருந்தும் அம்மா கோவையிலிருந்தும் அவளைப் பார்ப்பதற்காக வந்து இரண்டு நாட்கள் தங்கிச்செல்வர். மார்த்தாண்டம் கூடவே இருந்ததாலோ என்னவோ அவரது பல குணங்கள் ராகினியிடம் தென்பட்டன. சக மனிதர்களின் மன ஆழம்வரை சென்று அவர்களைப் புரிந்துகொள்வது, விஷயங்களை முதிர்ச்சியுடன் அணுகுவது எனத் தொடங்கி அவளது உலகப்பார்வை வரை தாத்தாவின் தாக்கம் தொடர்ந்தது.
காளிங்கனின் அகில இந்திய பர்மிட் ரத்து செய்யப்பட்டபோது அவர் மார்த்தாண்டத்தின் வீட்டிலேயேதான் கிடந்தார். மார்த்தாண்டத்தின் வீடு அப்படி. ஊரில் எந்த ஒரு பொதுக்காரியமாக இருக்கட்டும், பிரச்சனையாக இருக்கட்டும் அவரது வீடுதான் முதல் புகலிடம். காளிங்கன் அங்கிருக்கும் சாக்கில் சீனு ராகினியுடன் பேசுவதற்காகவே கிளம்பி வந்துவிடுவான். பள்ளிக்காலம் ஒருவழியாக முடிந்தது. கல்லூரி தேடும் படலம் சிக்கலானது. சென்னையில் சேரலாம் என்று ராகினி முடிவெடுத்துத் தன் தாத்தாவிடம் சொல்ல அவரது முகம் வாடியது. இருந்தாலும் சரி என்று தலையாட்டினார். ராகினி திருச்சியில் சேர்வதென்று முடிவு செய்தாள். சீனுவும் திருச்சியில்தான் சேரப்போகிறான் என்பதை அறிந்ததும் ராகினிக்கு ஒரே மகிழ்ச்சி. இருவருக்கும் ஒரே கல்லூரியில் சீட் கிடைத்தது. அவளுக்கு ஆங்கில இலக்கியம். இவனுக்கு வணிகவியல். தினமும் காலை ஆறரைக்கெல்லாம் சீனு தென்னையின் கீழ் வந்து நின்றுவிடுவான். பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் ராகினி கதவைத் திறந்து வெளிவருவாள். இருவரும் கைகோத்துக் கொண்டு காந்திகிராமம் பேருந்து நிலையம் வரை நடப்பார்கள். அங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறிக் கல்லூரி செல்வார்கள். ‘
இருவருக்கும் பேருந்துப் பயணம் மிகவும் பிடித்த விஷயம். கரூரிலிருந்து திருச்சி செல்லும் வழி தென்னந்தோப்புகளும் வாழைத்தோட்டங்களும் பனந்தோப்புகளும் நிறைந்து காணப்படும். புலர்ந்தவண்ணமிருக்கும் பொழுதை சூரியகாந்தி மலர்கள் சுட்டியவண்ணமிருக்கும். ஜன்னல் சீட்டுக்கு எப்போதும்போல் இருவரும் சண்டைபோடுவார்கள். அமர்ந்த பின்னர் அவள் பேசத்தொடங்குவாள். இவன் அவ்வப்போது பேசினாலும் அவள் பேச்சில் மூழ்கிக் கிடப்பதையே விரும்புவான். ஆங்கிலமும் ஆங்கில இலக்கியமும் இப்படித்தான் அவனுக்குப் பரிச்சயமாயிற்று. வார இறுதிகள் பெரும் தொந்தரவாக மாறத் தொடங்கிற்று. பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்று சீனு ராகினியிடம் சொல்ல ‘எனக்கும் அப்படித்தான்’ என்று அவள் சொல்லிப் புன்னகைத்தாள். சீனு ஒரு வழி கண்டுபிடித்தான். வாங்கலுக்கு அருகே ஒரு சிறு தோட்டம் உள்ளது. கருப்பண்ணசாமி கோயிலும் அருகே ஒரு சிறு குளமும்கூட. சனி ஞாயிறு மாலை வேளையில் கண்ணப்பனிடமிருந்து டிவிஎஸ் வாங்கி ராகினியை ஏற்றிக்கொண்டு கோயிலின் குளத்துப் படிக்கட்டுக்கு அழைத்துச் செல்வான். கோயிலுக்கு வெளியே இருசிறு மின்விளக்குகள் எரிந்தவண்ணமிருக்கும். பூசாரிக்கு மார்த்தாண்டத்தையும் காளிங்கனையும் நன்றாகத் தெரியுமாதலால் எவ்வளவு நேரமானாலும் இவர்களை ஒன்றும் சொல்வதில்லை.
அன்றைய தினம் கீட்ஸின் Endymion தொகுப்பிலிருந்து கவிதையை வாசித்துக்கொண்டிருந்தாள். குளத்து நீரில் வாகைமரத்தின் இலைகள் விழத் தொடங்கியிருந்தன. மெல்லிய அதிர்வுகளைத் தோற்றுவித்த இலைகளின் வீழ்தல் பேரியக்கச் செயலூக்கியென நீர்ப்பரப்பை இசைமயப்படுத்திக்கொண்டிருந்தன. அவள் படித்தாள்:
“A thing of beauty is a joy for ever;
Its loveliness increases; it will never
Pass into nothingness”
மரத்தின் இலைகள் நிரப்பாத பகுதி வழியே நுழைந்த நிலவொளி கீற்றுகளாக அவ்விடத்தை நிரப்பியது.
’காதல் அனுபவம் எத்தன பேருமேல ஏற்பட்டிருக்கு?’ என்று அவன் கேட்டான்.
’அப்போ நீ கவிதய கவனிக்கல?’ என்று அவள் புருவமுயர்த்தி அதட்டினாள்.
’ஏய். சொல்றா’ என்று சீனு கொஞ்சினான்.
’ஏழு பேரு மேல ஈர்ப்பு உண்டாகியிருக்கு. ஆனா அந்த ஏழும் வளரவேயில்ல’ என்றாள்.
ஏழில் ஒன்றாகத் தன் பெயரும் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த எழுவரைப் பற்றி விசாரித்தான். ஏழும் முடிந்தது. சீனுவின் பெயர் இல்லை. அவனது நண்பர்கள் சிலர் உட்பட அவ்வரிசையில் இருந்தனர். சீனுவின் முகம் வாடியது. நேரம் பார்த்தான்.
’வா ராகினி. கெளம்பலாம்’ என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டுச் சீனு எழுந்தான்.
வண்டி நிறுத்திய இடத்துக்கு வந்து சேர்ந்தனர். மரங்களைக் கடந்தவுடன் முக்கால் நிலவு ஒளிர்ந்தது.
’முழு நெலாவவிட எனக்கு முக்கால் நெலாதான் புடிக்கும்’ என்றாள்.
’அது ஏன் அப்படி?’ என்றான் சீனு.
’யோசிச்சுப் பாரேன். முழு நெலாவப் பாக்கும்போதெல்லாம் ஒரு முழுமைய எதிர்பாக்குறோம். அது அந்த நிறைவத் தர மாட்டேங்குது. உடனே ஏகப்பட்ட சமாதானத்தை சொல்லி அதையும் அழகுன்னு சொல்ல ஆரம்பிக்குறோம். ஆனா இந்த அரைகுறையான நிலவுகிட்ட நமக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்ல. அதனாலயே என்னால இத முழுசாப் பருக முடியுது. முழுசா உணர முடியுது’ என்று சொல்லி அவனது கைகளை எடுத்துத் தன் கைகளைப் பொருத்திக் கொண்டாள்.
வண்டியை அவள் வீட்டருகே கொண்டுவந்து நிறுத்தினான். மணி நள்ளிரவைக் கடந்திருக்கும்.
’இன்னைக்கு ரொம்ப அழகான ராத்திரியா இருக்குல்ல’ என்று ராகினி தனது வாக்கியத்தை நிறுத்தினாள்.
என்ன சொல்வதென்று தெரியாததால் பேந்தப் பேந்த விழித்துவிட்டு ‘எனக்கும்தான்’ என்று வழிந்தான்.
’அந்த ஏழுகூட இன்னொரு பேரையும் சேத்துக்கோ!’
’ஆனா அது எம் பேரா மட்டுந்தான் இருக்கும் பரவால்லியா?’ என்றான்.
வீட்டுக்குள் செல்ல எத்தனித்தவள் அவன் கைகளைப் பற்றி தென்னையருகே இழுத்துச் சென்றாள். அவனை முழுமையாக அணைத்தாள். நீங்காத ஸ்பரிசமாக அவன் நினைவில் அந்தத் தீண்டல் படர்ந்தது. பரிமாறப்பட்ட முதல் முத்தமும் அம்மரத்தின் கீழ்தான்.
’ஒரு கவித படிக்கட்டுமா?’ என்றாள்.
மீண்டும் அதேபோல் முழித்துவிட்டு ‘இப்பத்தான் படிக்கணுமா?’ என்றான் சீனு.
அவள் சத்தம்போட்டு சிரித்தபடியே ‘ஆமாம்’ என்றாள்.’
தென்னையில் சாய்ந்தபடியே ‘ம்ம். சரி படி!’ என்றான்.
‘Bright Star! Would I were steadfast as thou art!’ என்று அவள் தொடங்கினாள்.
இளநீர்க்குலை தலையில் விழுந்ததில் சீனு மயங்கிச் சாய்ந்தான்.
3
ராகினி பின்னமர்ந்துவர சீனு வண்டியை வாங்கல் பாலம்வழி விட்டான். பாலத்தடியில் நீரென்று ஏதுமில்லை. மழைக்காலத்திலும் தற்போதெல்லாம் அதிகமாக நீர் நிற்பதில்லை. மக்கள் பலரும் பாலத்தைப் பயன்படுத்தாது முன்னாள் ஆற்றின் வழியாகவே நடந்து சென்றனர். பாலம் தன் இருப்புக்கான காரணத்தை இழந்து வெறும்வெளியில் பொருளற்று நின்றது. சிறு வயதில் அப்பாவும் அவனும் சேர்ந்து குளித்ததை எண்ணியபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். பாலத்தடியில் ஏதோ தகராறுபோல் பட்டது. சீனு வண்டியை நிறுத்தி பாலத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்தான். ஒரு லாரியைச் சுற்றி மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். கூச்சலாக இருந்தது. சற்று உற்றுப் பார்த்தபோது KRY என்று அந்த லாரியில் எழுத்துகள் பெரிதாகத் தெரிவதைக் கவனித்தான். திடுக்கிட்டு பாலத்திலிருந்து இறங்கி ஓடினான். நான்கு தடியன்கள் காளிங்கனை அடித்து மிதித்துக் கொண்டிருந்தார்கள். சீனு அவர்களைத் தள்ளிவிட்டு அப்பாவைக் கட்டிப்பிடித்துத் தூக்கினான். அவர்களை முறைத்துப் பார்த்தான். ‘என்னடா மொறக்குற?’ என்று இருவர் அவனை அடிக்க வந்தனர். ராகினி வருவது கண்டதும் கிட்டத்தட்ட மொத்த இடமும் அமைதியானது.
அவள் கண்ணீர் மல்க அவர்களனைவரையும் பார்த்து ‘தாத்தாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாரு’ என்று சொல்லிவிட்டுக் காளிங்கனைப் பிடிக்கச் சென்றாள். காளிங்கனை ராகினியிடம் ஒப்படைத்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஓட்டிச்சென்று ஆட்டோ பிடித்து வந்தான். அவன் அப்பாவோடு ஆட்டோவில் ஏற, ராகினி டிவிஎஸ்ஸில் அவர்களைப் பின்தொடர்ந்தாள். வீட்டுக்கு வந்தபோது அம்மா இதைப்பார்த்துப் பெருங்குரலெடுத்து அழ எத்தனித்தாள். ராகினியைக் கண்டவுடன் அவளைக் கட்டிக்கொண்டு மெல்லிய விசும்பல்களை மட்டுமே உதிர்த்தாள். காயங்களுக்கு மருந்திடும்வரை ராகினி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள். சீனு தன்னிலைக்குத் திரும்பியபின் வெளியே வந்தான். அவளுக்குப் பின்வந்து அவள் தோள்களை அணைத்தவண்ணம்
’விட்றா. அப்பாவுக்கு ஒண்ணுமில்ல. ஆனா அடிச்சவிங்கதான் யாருன்னு தெரில’ என்றான்.
மரத்துப்போன குரலில் ராகினி ‘எனக்குத் தெரியும்’ என்றாள்.
சீனு எதுவும் பேசாமல் அவளுக்கு அருகில் வந்தமர்ந்தான்.
’தாத்தா தலைமையிலான போராட்டக்குழு அது. காவிரில மணலள்ளும் லாரிங்களுக்கும் அதோட உரிமையாளர்களுக்கும் எதிரா லாரி சிறைபிடிக்கும் போராட்டம். தாத்தாவுக்கு ஒடம்பு சரியில்ல. அதனால தொரசாமிய அனுப்பி வெச்சாப்டி. இப்பிடி ஆகும்ணு நான் நெனச்சுக்கூடப் பாக்கல’
அவன் சற்றுக் குரலுயர்த்தி ‘எங்கப்பன் வண்டிதான் கெடச்சுதா? ஊர்ல வேற எவனும் வண்டியே ஓட்டலியா? மண்ணே அள்ளலியா?’ என்றான்.
’சீனு. புரிஞ்சுக்கடா. உங்கப்பா வேல பாக்குறது ஒரு மணல் மாஃபியா கும்பலுக்குக் கீழ. வருங்கால எம்.எல்.ஏ-க்குக் கீழ. இன்னிக்குன்னு பாத்து உங்கப்பாதான் அங்க மண்ணள்ளிட்டு இருந்தாரு’
’அதுக்கு ஏன் அப்பன அடிச்சீங்க?’ என்று கலங்கிப்போய் கத்தினான்.
’தாத்தாவோட கைமீறி நடந்த விஷயம் இது. அதுக்கு ஏன் என்கிட்ட கொரல ஒசத்துற?’ என்று கண்களில் நீர்வழியக் கேட்டாள்.
’நான் போறேன்’ என்று எழுந்த ராகினியை ‘ஒரு நிமிஷம்’ என்று சீனு நிறுத்தினான். வண்டி சாவியை அவளிடம் வீசி ‘வண்டிய எடுத்துட்டுப் போ. கண்ணப்பன்கிட்ட நான் பேசிக்குறேன்’ என்றான். அவள் புன்னகையை உதிர்த்துவிட்டுக் கிளம்பினாள்.
KRY குழுமத்தாரின் மேனேஜர் வீட்டுக்கு வந்து சென்றார். அவர் வருவது தெரிந்து சீனு வெளிச்சென்றுவிட்டான். இந்த வேலையை அப்பா விட்டுவிடலாம்தான். ஆனால் அக்காவின் திருமணத்திற்கென்று முதலாளியிடமிருந்து கடன் வாங்கிய மூன்று லட்சம் ரூபாய் கழுத்தின் மீதேறி மூச்சை இறுக்கியது. மேனேஜர் மார்த்தாண்டத்தின் மீது புகார் கொடுக்குமாறு காளிங்கனைத் தூண்டினார். காளிங்கன் முதலில் மரியாதையாக மறுத்துப் பார்த்தார். மேனேஜர் மசிவதாகத் தெரியவில்லை. ஆதலால் காளிங்கன் அவரை மரியாதையாக வீட்டைவிட்டு அனுப்பி வைத்தார். இதற்கிடையில் காவிரியில் மணலள்ள இடைக்காலத்தடை விதித்தது கரூர் நீதிமன்றம். மார்த்தாண்டம்தான் வழக்குத் தொடுத்தார். காளிங்கன் இரண்டு மாதங்கள் வேலையின்றி இருந்தார். இக்காலத்தில் மாதம் மூவாயிரம் KRY குழுமத்தாரிடமிருந்து வீடுவந்து சேர்ந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நமது இஷ்டப்படியும் வசதிக்கேற்பவும் புரிந்து கொள்ளலாமாதலால் இடைக்காலத்தை இரண்டு மாதங்கள் என்று இண்டர்பிரட் செய்தாயிற்று. பிறகு மீண்டும் மணலள்ளும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. காளிங்கனும் போய்க்கொண்டுதானிருந்தார்.
சீனுவும் ராகினியும் அதற்குப்பின்னும் சந்தித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இருப்பினும் முன்பிருந்த நெருக்கம் குறைந்துவருவதை இருவரும் உணரத் தொடங்கினர். பிரிவது உசிதம் என ராகினி எண்ணத் தலைப்பட்டாள். சீனுவிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தியபோது அவன் பெரிதாக எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் புருவம் சுருக்கிச் சற்றுநேரம் சிந்தித்துவிட்டு ‘சரி’ என்றான். ராகினிக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் கல்லூரியில் அவ்வப்போது சந்தித்துக்கொள்வதோடு சரி.
கல்லூரியில் அந்த வருடம் அதிசயமாக ஆடிப் பதினெட்டுக்கு விடுமுறை அறிவித்தனர். அணை திறந்துவிட்டமையால் காவிரியில் ஓரளவு நீர்வரத்து அதிகரித்தது. ராகினி நச்சரித்தபடியால் மார்த்தாண்டம் அவளுடன் காவிரி வர ஒப்புக்கொண்டார். பாலத்திலிருந்து ஆட்டோ கீழிறங்கி நின்றது. வெகுகாலம் கழித்து ஆற்றில் நீரைக் கண்டவுடன் ராகினிக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியில் கண்களில் நீர் தளும்பியது. பல குழந்தைகளை அன்று அவர்களது பெற்றோர் ஆற்றுக்கு அழைத்து வந்திருந்தனர். அநேகமாக அக்குழந்தைகள் ஆற்றைப் பார்ப்பது இதுதான் முதல்முறையாக இருக்கும். கூட்டம் கூட்டமாகக் குளியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆழமற்ற நீரில் நீச்சலடிக்கும் வீண் எத்தனங்களைத் தவிர்த்து சப்பணமிட்டு அமர்ந்தாள். அமர்ந்தபின்னும் நீரளவு அவள் கழுத்துவரை மட்டுமே இருந்தது. குடகிலிருந்து கிளம்பும் காவிரி கரூருக்கு வருமுன் எத்தனையோ ஊரின் சாக்கடைகள், ஆலைக்கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள் எனப் பலவற்றைச் சுமந்துகொண்டுதானே வரவேண்டும். எனவே ஆற்றின் தூய்மைபற்றி அவள் கவலைப்படவில்லை.
ஆங்காங்கு அப்பாக்களும் அம்மாக்களும் குழந்தைகளுக்கு நீச்சலடிக்கக் கற்றுக்கொடுத்தும் குளிப்பாட்டிவிட்டும் இருந்தனர். இளசுகள் தூரத்தில் சத்தம்போட்டு ‘டைவ்’ அடித்தபடி குளித்துக்கொண்டிருந்தனர். கரையில் மார்த்தாண்டம் இவற்றையெல்லாம் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருப்பதை ராகினி உணர்ந்தாள். அவர் மூச்சின் வெப்பம்தான் இந்நீரை இவ்வளவு சூடாக்கியிருக்கக்கூடும். பக்கத்தில் மேனியில் சட்டை அணிந்திராத ஒரு சிறுவனும் அவனது அப்பாவும் உரையாடியபடியே குளித்துக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவனைப் பார்க்கையில் சீனுவின் நினைவு வந்தது ராகினிக்கு. அவள் காவிரியில் நீச்சலடித்துப் பயிற்சி பெறும்போது சீனுவும் காளிங்கனும் லாரிக் கதைகளைப் பேசுவதை ஏக்கத்துடன் பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் சீனு ராகினியைப் பார்க்க நேர்கையில் பற்கள் அனைத்தும் தெரிய விரிந்து சிரிப்பான். அவளுக்கு அச்சிரிப்பு இதமாக இருக்கும். இந்தச் சிறுவனும் கைகால்களை ஒரு நிலையில் வைக்காமல் ஆட்டியாட்டிப் பேசுவதுகூட சீனுவை நினைவுறுத்துவதாகவே இருந்தது. ராகினி தன்னைப் பார்ப்பதைக் கண்ட சிறுவன் அப்பாவுக்குப் பின் மறைந்துகொண்டு ‘அப்பா. அந்தக்கா என்னையே பாக்குதுப்பா’ என்றான்.
’மம்மதக்குஞ்சல்லோ நீயி. பாக்கத்தான் செய்வாய்ங்க’ என்று பாதி வசவாகவும் பாதி கொஞ்சலாகவும் சொல்லி அவனை அதட்டினார். ‘நீயி இங்கனயே இரு. அம்மாள உள்ளார கூட்டியாரேன்’ என்று சொல்லிவிட்டு அவன் அப்பா அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
அச்சிறுவன் ராகினியையே பார்த்துக்கொண்டிருந்தான். என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று வாய் நிறைய ஒரு சிரிப்பு! பேரிதமும் பெருவலியும் கலந்த ஒரு மனமுயக்கத்தில் ‘சீனு’ என்று கண்மூடி வாய்திறந்து சொன்னாள். கண் திறந்தபோது அவனை அவ்விடம் காணவில்லை. இரு கைகள் அவலக்குரலெடுத்து ஓதுவதுபோல் நீரில் அளைந்தாடிக்கொண்டிருந்தது. ராகினி தன் இடம் விட்டெழுந்தாள். இருப்பின் முடிவைக் குமிழிகளின் வெடிப்பு அறிவித்தது.
இருவரது சடலமும் நள்ளிரவுக்கு மேல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ராகினியின் கைகள் அச்சிறுவனின் தோள்பட்டையையும் முடியையும் இறுகப் பற்றியிருந்தது. மார்த்தாண்டம் காளிங்கன் சீனு மூவரும் சடலத்தைப் பெற்றுக்கொண்டனர். போலீசார் கேட்ட இடத்திலெல்லாம் மார்த்தாண்டம் கையெழுத்திட்டார். நீச்சல் தெரியாமல் ஆழத்துக்குப் போனதால் மரணம் என்று முடித்துவிட்டார்கள். ஆற்று மணல் அள்ளியதால் உண்டான புதைகுழி பற்றி அதிகாரிகள் யாரும் வாய்திறக்கவில்லை. ஏன் திறப்பார்கள்? மார்த்தாண்டம் நடத்திய போராட்டம் பல இந்த அதிகாரிகளுக்கும் எதிரானதுதானே? அவர்களுக்குத் தெரியவா போகிறது ராகினியின் மரணம் அவளுடையது மட்டுமல்ல, அது காவிரியின் மரணப் பேரோலம் என்று?
மார்த்தாண்டத்திடம் வழக்கமாகக் காணப்படும் தீவிரமான போராட்ட மனநிலையின் ஒரு துளிகூட இப்போது காணமுடியவில்லை. ஊரில் யாருக்கு இது நடந்திருந்தாலும் அவர் கலங்கிப் போயிருப்பார். கலங்கினாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிப் பெற்றொரை நண்பர்களை அடுத்தகட்டப் போராட்டத்துக்குத் தயார்படுத்தியிருப்பார். மார்த்தாண்டம் வீட்டுக்கும் மிகப்பலர் வந்தனர். எனினும் துக்கம் விசாரிப்பதற்கும் ஆறுதல் கூறுவதற்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. தன் வாழ்க்கைக்கான பொருளைத் தன் வாழ்முறை மூலம் உருவாக்கிக் கொண்டவர் மார்த்தாண்டம். மக்களுக்காக எத்தனையோ போராட்டங்கள். உடனடி விளைவுகளை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் பெரும்பான்மைப் போராட்டங்கள் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. அவர் நம்பும் தத்துவம் அவரைத் தொடர்ந்து இயங்கச் செய்தது. ஆனால் அறுபதாவது வயது தொடங்கி தன் வாழ்வின் ஆதாரக் குவிமையம் என இருபது வருடங்களாகக் கருதிவந்த ஓர் உயிர் ஒரு கணத்தே மறைந்த அந்த அதிர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் அந்த மனம் மறுத்தது. மனப்பிறழ்வு உண்டாயிற்றோ என்று பலர் கருதும்வண்ணம்தான் அவரது நடவடிக்கைகள் அமைந்தன. அவர் அநேகமாகத் தன்னையே அவளில் கண்டிருக்கக்கூடும். அவளது மறைவுக்குப் பிறகு தன்னையே படர்க்கையில் கண்டாரோ என்னவோ?
சில சமயங்களில் இரவு நேரத்தில் இரண்டு மணிநேரம் நடந்து பாலம்வரை சென்று அவளது சடலம் கிடைத்த இடத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். அவ்விடம் மார்த்தாண்டம் வரும் சமயங்களிலெல்லாம் யாரோ ஒருவர் இவர் கண் பார்வையினின்று தப்பிக்கும்பொருட்டு ஓடி ஒளிந்து கொள்வது போன்ற தோற்றம் அடிக்கடி ஏற்படும். இன்றும் யாரோ தூணுக்குப் பின் சென்று ஒளிந்தது போல் இருந்தது. திடீரென்று மழை பெய்யத் தொடங்கிற்று. மார்த்தாண்டம் வேகமாகப் பாலத்தடியில் சென்று நின்றுகொண்டார். மழை ஆற்றின் சிறு பள்ளங்களை ஆங்காங்கு நிரப்பின. மழையின் திடீர் வரவால் சமநிலையிழந்த பல உயிரினங்கள் தங்கள் வளைகளுக்குள் சென்று அடைந்துகொண்டன. தேங்கி நின்ற நீரிலிருந்து குமிழிகள் எழத்தொடங்கின, இருப்பின் சாட்சியத்துக்குக் கட்டியங் கூறுவதுபோல.
மார்த்தாண்டத்தின் அசைவுகளையும் பெருமூச்சையும் தூணில் வழிந்த நீரில் நனைந்தபடியே சீனு பார்த்துக்கொண்டிருந்தான். கட்டியணைத்துச் சற்று அழவேண்டும் போலிருந்தது. குற்றவுணர்ச்சியின் பிடியில் அவன் சுருண்டு தவித்தான். அச்சிறுவனின் தோள்களில் அவள் பிடியின் இறுக்கம் தளர்த்தியது சீனுதான். தனது இயல்பை இழந்து இறுகிக்கிடந்த அந்தக் கைகளில் முத்தமிட்ட கணத்திலிருந்து அவளது மரணத்துக்குத் தானும் காரணம் என்றே எண்ணத் தொடங்கினான். அன்றிலிருந்து அவன் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. காளிங்கன் ஒவ்வொரு கணமும் ஆறுதலான வார்த்தையை எதிர்பார்த்துச் சீனுவிடம் வரும்போதெல்லாம் ஒன்றிரண்டு சொற்களில் அவரை விரட்டிவிட்டு அவன் எங்காவது சென்றுவிடுவான். லாரியின் மீது ஒட்டிக்கொண்டிருந்த துளிப்பிரியமும் இந்த நிகழ்வால் குலைந்துபோனது. அவர் லாரியை வெறுக்கத்தொடங்கினார். எனினும் வேலையை அவரால் விடமுடியவில்லை.
காளிங்கனைப் போராட்டக் குழுவைச் சார்ந்தவர்கள் தாக்கியபோது வீட்டுக்கு வந்த மார்த்தாண்டத்தைக் காளிங்கன் மரியாதையாக நடத்தினார். சீனு அவரிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை. இப்போது அவரிடம் சென்று பேசுவதற்கே உடல் கூசியது. அவர் மட்டும் பழைய நிலைமையில் இருந்திருந்தால் அவர் பின்னாலேயே தான் போயிருக்கலாம் என்று எண்ணினான். குற்றவுணர்ச்சிக்குத் தீனி போடுவதன் மூலம் தனது இயலாமையை மறக்கத் தொடங்கினான். ஊரில் பலரும் மார்த்தாண்டத்தைப் பரிகசித்துப் பேசும்போதெல்லாம் சீனு உள்ளே ததும்பி வழியும் நீரை விழுங்கியபடி கடந்து செல்வான். பத்தடி தூரத்தில்தான் மார்த்தாண்டம் நின்றுகொண்டிருந்தார். சென்று பேசிவிடலாம் என்ற உந்துதல் அவனை அலைக்கழித்தது. மழைவிட்டபின்னர் மார்த்தாண்டம் தன் வீட்டுக்கு நடையைக் கட்டினார். அவன் அவ்விடமே அமர்ந்தான். சற்றுநேரத்தில் கண்களைச் சுழற்றியபடியே தூங்கிப் போனான். தோள்களில் சாய்ந்த வண்ணம் அவள் கைகள் முதுகை ஸ்பரிசிப்பதை உணர்ந்தான். அச்சிறுவனின் தோள்களைப் பற்றியிருந்த அக்கைகளின் பிடியின் இறுக்கத்தை அவன் தோள்கள் வலிக்க உணர்ந்தான். காலை சூரியன் உதிக்கும்முன்பே அவ்விடம் விட்டெழுந்து உடலில் ஒட்டியிருந்த சேற்றுநீரைத் துடைத்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். காளிங்கன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. நெற்றியில் முத்தமிட்டு எதையோ முணுமுணுத்துவிட்டு நகர்ந்தான்.
அதிகாலைச் சூரியனின் கீற்றுகள் இரவு பெய்த மழையின் சிறு பள்ளத் தேக்கங்களில் எதிரொலித்த வண்ணம் விரவிக் கிடந்தது. தென்னை மரம் தன் பொலிவை இழந்துவிட்டதாக சீனுவுக்குப் பட்டது.
***
மா.க.பாரதி – கரூரைச் சேர்ந்தவர். தற்போது ஐதராபாதில் இருக்கிறார். வெவ்வேறு இதழ்களில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. தொடர்புக்கு – barathyganesan96@gmail.com
ம.கா.பாரதியை பெஸண்ட் நகர் ஸ்பேஸ் அரங்கில நடைபெற்ற, எழுத்தாளர் இமையம் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் சந்தித்தேன். நிகழ்வின் பிறகு நிறைய கேள்விகளால் இமையத்தைத் துளைத்துக் கொண்டிருந்தார். பிறகு அதே ஆண்டில் தொகுப்பாசிரியராக பொன்.வாசுதேவன் வெளியிட்ட ‘விளிம்புக்கு அப்பால்’ சிறுகதைகள் நூலில் இவரது கதை வந்தபோதுதான் ம.கா.பாரதி முதல் சிறுகதையினை வாசித்தேன். பிறகு லயோலா கல்லூரியில் அவர் படித்து முடித்து வெளியேறும் காலத்தில் எழுதுவதை நிறுத்திக் கொண்டார் போல… நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் உரையாடலில் என்ன எழுதிட்டு இருக்கீங்க என்று கேட்டுவாங்கி, இரண்டு ஆண்டுகள் முன்பு அவர் எழுதியிருந்த இந்த ’ஸ்பரிசம்’ சிறுகதையினை வாசித்தேன். பாரதியின் இந்தச் சிறுகதை ஊரடங்கு காலக் கதைகள் தொடரில் வெளியானதில் மகிழ்ச்சி.
ஆழ்மனங்களில் நீந்தும் நியாபக நதியாக இக்கதை என்னுள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது.பாரதிக்கு எனது வாழ்த்துக்கள்.
குறிப்பு :1. கரூரில் இருந்து பஞ்சாப் போகும் வண்டிகள் திருச்சி- நாமக்கல்-சேலம் வழியாக பெங்களுர் சென்று பெங்களூரில் இருந்து சித்திரதுர்க்கா-வழியாக கர்நாடகம் கடந்து மும்பை வழியே பஞ்சாபை நோக்கி பயணிக்கும் மைசூர் பக்கம் போகாது.
2.ஆல் இண்டியா பர்மிட் என்பது டிரைவர்களுக்கல்ல.வண்டிகளுக்குத்தான்.இந்தியாவின் எந்த பகுதியில் லைசன்ஸ் எடுத்தாலும் இந்தியாவெங்கும் வண்டியோட்டலாம்.பர்மிட் தடை என்பது தொடர்ந்து வண்டியில் ஏற்றும் பொருளால் ,அல்லது அதிக எடையால் ஏற்படும் சிக்கல்.அது மட்டுமில்லாமல் வண்டி முதலாளிகள் நினைத்தால் ரூட் மாற்றி வேறு பகுதிகளுக்கு செல்லும் பர்மிட்டையும் பெற முடியும்.பெரும்பாலும் கொஞ்சம் பனம் விளையாடும் அவ்வளவே.மேலும் நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் ஓட்டுநர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது.நாமக்கல்லில் ஒரு பழமொழியாகவே சொல்வார்கள் ஓட்டுனர்கள்.”நாமக்கல் மணிக்கூண்டுல நின்னு நான் லைசென்ச தூக்கி போட்டா எவன் எடுக்குறானோ நான் அவனுக்கு டிரைவர் “ என..அதுமட்டுமில்லாமல் கரூர் வண்டிகள் தமிழ்நாடு முழுக்க கூட ஓடும்.தமிழ்நாடு மட்டும் பர்மிட் வாங்கி கொண்டு..காளிங்கன் ஆல் இண்டிய பயனங்களுக்கு போகாமைக்கு வேறு காரணம் இருக்க கூடும்..
அதே போல இந்தியா முழுக்க பயனம் செய்யும் ஓட்டுனர்கள் /இரவு தங்குவதற்குப் பெரிதாக மெனக்கெடவில்லை. சில சமயங்களில் ஏதேனும் சத்திரம். சில சமயங்களில் நண்பர்களின் வீட்டுத் திண்ணை. அப்போதுதான் சந்தித்து நண்பர்களாகியிருக்கும் யாரேனும் ஒருவரது வீடு. /இப்படி தங்குவதில்லை.வண்டியில் சமையல் நடக்கும்.ஆற்றோரம் அல்லது வண்டியில் தூங்குவார்கள்.பொதுவாக இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.ஒருவர் தூங்க ஒருவர் ஓட்டுவார்..தொடர்ந்து தேணீர் அருந்தும் நேரமோ,தாபாக்களில் ஓய்வெடுக்கும் நேரம் ,குளிக்கும் நேரம் தவிர லாரிகள் பயணப்பட்டுக் கொண்டே இருக்கும்.பஞ்சாப்பில் அல்லது தமிழகத்தில் லோடு ஏற்ற என லோக்கல் டிரைவர்கள் இருப்பார்கள்.அந்நேரங்களில் புக்கிங் அலுவலகத்தில் ஓய்வெடுப்பார்கள் ஓட்டுனர்கள்.பஞ்சாப் வரை ஒரு நடை போய் வர மொத்தமாக 14 நாட்கள்.ஏதாவது லோடு கிடைக்க லேட்டாகும் போது இரண்டு மூன்று நாட்கள் கூடுதலாக எடுக்கும்
காவிரியின் சாவை கரூரிலிருந்து சாட்சியாக படைத்திருக்கிறார் பாரதி .அழகான ஒரு காதலை ,அப்பா மகன் பாசத்தை லாரி டிரைவரின் பயணத்தை என அனுபவமாகப் பநிந்திருக்கிறார். மார்த்தாண்டம் எனக்கு தோழர் நல்லகண்ணுவை நினைவுபடுத்தியது.ஆற்று மணல் கொள்ளையிடப்படுவதால் நீராதாரம் அழிந்தும் ,இன்னும் கண்ணுக்குத் தெரியாத பள்ளங்களாலும் எத்தனை உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்ற அச்சமும் வேதனையும் நெஞ்சை அடைக்கின்றது. கைபிடித்து அழைத்து செல்வது போல கதையோடு பயணிக்க முடிகிறது .வாழ்த்துகள் பாரதி