லஷ்மி சரவணகுமாரின் ‘போர்க்குதிரை’

0

தமிழ் சுப்பிரமணியம்

கால எல்லைகளில் சிறுகதைகளின் வடிவம் மாற்றம் கண்டுகொண்டே இருக்கும். புதிய புதிய எழுத்தாளர்கள் தங்கள் பாணியிலான கதைகளைச் சொல்லப் பிரயத்தனப்படுவார்கள். நாவலின் தொடக்கமே அதிலுள்ள சிறு சிறு கதைகளின் கோர்ப்புகள்தான். சிறுகதைகள் வாழ்வின் ஓட்டங்களோடு தொடர்புற்று இருந்தால் அது யுகங்கள் தாண்டியும் மானுட சமூகங்களால் தொடர்ந்து பேசப்பட்டு விவாதிக்கப்படும். எழுத்தாளன், தன் நிலையை சிறுகதை என்ற எளிய கடத்தியின் மூலம் வாசகனுக்குள் கடத்துகிறான். அந்நிலை அரசியல், தத்துவம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னும் இப்படி ஒரு நிலை இருப்பதை நான் முழுமையாக நம்புகிறேன். எழுத்தாளர் லஷ்மி சரவணகுமாரின் கதைகளிலும் இத்தன்மையெல்லாம் இருப்பது வாசகர்கள் அனைவரும் அறிந்ததே. அவரின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ‘போர்க்குதிரை’ அதற்கு சான்று. இதில் கையாளப்பட்டுள்ள தன்மைகள் முன்னிலிருந்து சற்று வேறுபாடோடும் உள்ளது. பயணம், இசை, ஆன்மீகத்தன்மை, உடலரசியல், பகடி என இக்கதைகள் பன்முகத்தன்மையாக (Versatile) உள்ளன.

இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் பயணம் ஒரு பிணைப்பாய் இருக்கிறது. முதன்மைப் பாத்திரங்கள் அனைத்தும் வாழ்வின் துயரங்களிலிருந்து விடுபட விடியலை நோக்கி ஆன்மாவைக் கொண்டுசெல்ல பயணத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. அதன்வழி கதைகள் நகர்கின்றன. லஷ்மியின் அறிமுக பகுதியில் ‘ஊர் சுற்றுவதை பிரதான வேலையாக கொண்ட இவர்’ என்ற வரிகளை அடிக்கடி பார்க்கலாம். பயணம் வாழ்வின் ஒரு பகுதியாய் அமையப்பெற்ற எழுத்தாளரின் கதைகளில் பயணம் இல்லையென்றால்தான் ஆச்சரியத்திற்குரியது.  பயணங்களின் வழி பெற்ற அனுபவ வார்த்தைகளாக இவரின் கதைகள் விளங்குகின்றன.

‘வீடு திரும்புதல்’ கதை பயணத்தின் பிராதன கதை என்று சொல்லலாம். மற்ற கதைகளில் சிறிய சிறிய பயணம் வந்துபோகத்தான் செய்கின்றன. ஆனால் ‘வீடு திரும்புதல்’ கதையிலுள்ள ஆத்மார்த்தமான தன்மை அக்கதையை முன்னிறுத்திக் காட்டுகிறது. விரக்தியின் பாதையில் பயணிப்பவனுக்கு ஞானத்தின் பாதையை நோக்கி உந்தச் செய்கிறது. இதே போன்ற ஒரு சிறுபயணம் ‘குருவைத்தேடி’ கதையிலும் காணலாம். அதில் உள்ள கதைமாந்தனின் இருப்புநிலை வேறு. ஆனால் உள்ளக் கொதிப்புநிலை இரு கதைகளிலும் சம அளவாகத்தான் இருக்கும். இவையிரண்டும் பேசிய களம் வேறு. தமிழ் இலக்கியத்தில் நிலக்காட்சிகளை வாசகனின் கண்களுக்கு விஸ்தரிக்கச் செய்வது சாதரணமானதல்ல. க.நா.சு, மௌனி போன்ற எழுத்தாளர்கள் அகவயமாக நிலக்காட்சிகளை கடத்துவார்கள். கி.ரா போன்ற எழுத்தாளர்கள் நிலக்காட்சிகளை புறவய அழகியலோடு படைப்பார்கள். லஷ்மியின் நிலக்காட்சி அமைப்புகள், புறவயத்தின் அழகியலை பயணக்கதைகள் மூலம் வெளிப்படுத்துகின்றன. “நிலங்களின் வழியாய் கதைகளை அணுகுவதை எப்போதும் நான் முக்கியமானதாய்ப் பார்ப்பேன்” என்று முன்பொரு கட்டுரையில் லஷ்மி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கம்பமத யானை’ கதையில் வருகின்ற மஹாலிங்க மலை நோக்கிய பயணம், ‘தடியன் சேகரில்’ சாப்டூரைத் தாண்டிய சாலையின் இருளும் மலைகளும், ‘குருவைத் தேடி’ திருவண்ணாமலை பயணமும் சேர்த்து இம்மூன்று கதைகளின் வழி Spritual தன்மை பொதிந்த கதைகளை பயணங்களின் வழியாய் கூறியிருக்கிறார். ‘ஆலமரத்துயில்’ கதையில் பஞ்சம் பிழைக்க மக்கள் திருப்பூர் போவார்கள். இது பயணம் என்ற வகைமைக்குள் வராமல் போனாலும் ஒரு இடப்பெயர்வு இக்கதையில் இருக்கிறது. நூலின் தொடக்க உரையில் “பயணங்களிலும் நண்பர்களுடனான உரையாடல்களிலும் பெற்றுக்கொண்டவைகளில் இருந்துதான் எனது கதைகள் உருவாகின்றன” என்கிறார் லஷ்மி.

லஷ்மியின் கதைகளில் இரண்டாவதாக அதிகம் தென்படுவது இசை. இசை குறித்து உரையாடக்கூடிய சமீபத்திய எழுத்தாளர்களில் லஷ்மியும் ஒருவர். இத்தொகுப்பின் கதைகளில் இசை பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. ‘வீடு திரும்புதல்’ கதையில் லஷ்மணின் நேபாள மனைவி பாடும் நேபாள நாட்டுப்புறப்பாடல், ‘ஆதாமின் துரோகம்’ கதையில் வரும் ப்ளூஸ் இசை (‘Bobby blan! ‘I wouldn’t treat a dog’ (the way you treated me)), ‘போர்க்குதிரை’ கதையில் வருகிற தாந்திரிக் இசை, ஓம்னியாவின் பேகன் ஃபோக் இசைத் தொகுப்பு, ஹூ பேண்டின் பாடல்கள், ‘ரகசியத்தின் அரூப நிழல்கள்’ கதையில் வரும் தர்காக்களில் பாடப்பட்ட ஹுவ்வாலிப் பாடல்கள் என்று இக்கதைகளில் ஆங்காங்கு இசை குறித்து எழுதியுள்ளார்.

லஷ்மியின் மூன்றாவது தன்மை அவரின் கதைகளில் காணப்படும் குற்றம், உடலரசியல் தன்மை. கதைகளில் உடல் குறித்தான நுட்பமான அறிவு முதிர்ச்சியோடு மனிதர்களின் நுண்ணுணர்வுகளை பிசகாமல் மெய்த்தன்மையோடு காட்டக்கூடியவர். கம்பமதயானை, போர்க்குதிரை, ரகசியத்தின் அரூப நிழல்கள், ஆதாமின் துரோகம், இப்படியாக அவளின் சில காதலர்கள் போன்ற கதைகளின் அணுகுமுறையில் உடல் சார்ந்த மானுடத்தின் தாத்பரியம் வெளிப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து பைத்திய நிலை குறித்த சித்திரத்தை லஷ்மியின் நாவல்களில் ஒருசில பாத்திரம் வழி காணலாம். அத்தன்மையிலும் ‘கிறுக்கு கன்றுக்குட்டி’ என்ற கதை இத்தொகுப்பில் உள்ளது. பைத்திய நிலையில் இருக்கும் மனிதனுக்கு அவனின் கடந்த காலச் சித்திரம் பிரதிபலித்துக்கொண்டே அவனைப் பின் துரத்தும். அது நீக்கமுடியா சாபமாகவும் இருக்கும். அத்தகு கதையாகத்தான் இது உள்ளது.

லஷ்மியின் நான்காவது பாய்ச்சலாக அரசியல் மற்றும் பகடித்தன்மையை சொல்வேன். குருவைத் தேடி, போர்க்குதிரை பகடித்தன்மை என்றால், ஆலமரத்துயில், இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல என்ற இரு கதைகளும் அரசியல் பேசக்கூடியவை. எளிய வாழ்க்கை வாழக்கூடிய மனிதர்களின் கதைகள் இவை. லஷ்மியை விளிம்புநிலை மனிதனின் குரலாக நான் பார்க்கிறேன். திருநம்பிகள் குறித்து பெரிதாக யாரும் எழுதாத நிலையில் அவர்களின் உள்ளுணர்வு நிலையை எழுதும் லஷ்மியை விளிம்புநிலை மனிதனின் குரல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தொகுப்பிலுள்ள மனிதர்கள் அந்நியமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள்.  இவர்களைக் குறித்து தினந்தோறும் செய்திகளிலே மட்டுமே தெரிந்த நமக்கு அவர்களை பரிச்சயமானவர்களாக ஆக்கும் பாலமாக லஷ்மி சரவணகுமார் இருக்கிறார். ஜென் கவிதையில் வருகிற பயணியைப் போல் யாவற்றையும் நோக்குபவராக பயணங்கள் தொடரட்டும்.

போர்க்குதிரை – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் – லஷ்மி சரவணகுமார்
வெளியீடு – ஜீரோ டிகிரி

***

தமிழ் சுப்பிரமணியம்
கட்டுரை ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here