Friday, March 29, 2024
Homesliderரமேஷ் பிரேதன் நேர்காணல் - பகுதி 3

ரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி 3

உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்
தொகுப்பு – சித்ரன்

முருகபூபதி: நாடகக் கலைவெளிக்குள் உடல், உணர்வு, பிரதி, வெளி, சமகாலம் இவற்றிற்கான தொடர்பாடல் பற்றி பேச முடியுமா?

இசையைத் தவிர  ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், திரைப்படம் என்பன யாவும் காட்சிக்கலைகள்தாம். இலக்கியம் என்பது மொழிக்கலை. இசை, நாடகம், இயல் என்று இம்மூன்றையும் இடம்மாற்றி வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் குருதியும் சதையுமாக உடம்பைப் பார்வையாளர் தொட்டுணரும் கலை வடிவமாக நாடகமே உயிர்க்கலைச் செயலாக இருக்கிறது. திரைக்கலை ஒளியாலும் இசைக்கலை ஒலியாலும் மொழிக்கலை எழுத்தாலும் நிலைபெறும்போது, நாடகம் மட்டுமே உடம்பைப் பொருண்மையாய்ப் பொருள்படுத்துகிறது. இசையைப் போல மெய்க்கலையும் மொழியைத் தவிர்த்து இயங்கவல்லது. தனியொரு உடம்பும் உணர்வும் பிரிந்த இருநிலைகளில் மனிதரால்  இயங்கவியலாததைப்போல உடம்பும் வெளியும் தனித்தனியாகப் பிரிந்த நிலையில் நாடக இயங்கியல் சாத்தியப்படாது. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பது போல உடம்பை வளர்த்தேன் இயல்வெளி நிறைத்தேன் என்பதே நாடக இயங்கியற் பொருண்மை. இரும்பைத் தங்கமாக மாற்றுவதைப் போல உடம்பெனும் உயிர்ப்பொருளைக் கலைப்பொருளாக மாற்றும் ரசவாதமே நாடகம். இயல், இசை வளர்ந்த அளவிற்கு எல்லாம் இருந்தும் நாடகம் வளரவில்லை. உடம்பை நான்கு வர்ணங்களாகவும் நான்காம் வர்ணவுடம்பைச் சாதிகளாகவும் பிரித்துவைத்த சமூக அரசியலே இக்கலை வளராமல் போனதன் காரணி எனலாம். இயலும் இசையும் தனியொருவரால் உருப்பெறக்கூடியது; ஆனால், உடம்புகளாலான நிகழ்த்துக்கலையானது உடம்புகளாலான கூட்டுக் கலவையாலானது. வர்ணக்கலப்பு உண்டாகும்போது அதைத் தடுத்து நிறுத்தித் தூய்மைப் பேண பரம்பொருள் இம்மண்ணில் தோன்றும். வர்ணப் பாகுபாடும் பால் பாகுபாடும் உச்சத்திலுள்ள இந்தியத் தமிழ்ச்சமூகத்தில், இருபதாம் நூற்றாண்டுவரை இயல், இசை, நாடகக் கலைஞர்கள் யாவரும் பொதுச்சமூக விலக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளானவர்களாகவே இருந்தனர். திரைப்படம் நடிப்புக்கலைத் தொழிலாளர்களை பொருளாதார முடக்கத்திலிருந்தும் அடைப்பட்ட வர்ண இறுக்கத்திலிருந்தும் சற்றே இளைப்பாற கதவுகளைத் திறந்தது. ஆம், புதிய புதிய அகிலம்சார் தொழில்நுட்ப வளர்ச்சியே சமூக விடுதலையையும் அதன்வழி கலை விடுதலையையும் சாத்தியமாக்கும். பார்ப்பனியத்தை அடிவேர் அறுக்கும் தலித் – சூத்திரப் பண்பாட்டுப் புரட்சியே பால், வர்க்கம் கடந்த கலை மலர்ச்சியைத் தமிழகத் தீபகற்பத்தில் உண்டாக்கும்; அதற்கு இயல் இசையைவிட நிகழ்த்துக்கலைகள் மேலதிக வலு சேர்க்கும். 

*  

சபரிநாதன்: உங்கள் கவிதைப் பரப்பில் உடல் என்பது முக்கியமான ஒன்றாக தொடர்ந்து வருகிறது. ஆன்மீகத்திற்கான, விடுதலைக்கான வழியாகவும்; அதேபோது மறைமுகமான வெறுப்பிற்கு ஆளாவதாகவும் தொனிக்கிறது. கவிதைத்தளத்தில் உடல் என்பதை என்னவாக எல்லாம் பாவிக்கிறீர்கள்? மேலும் நுகர்விய சந்தைப் பொருளாதாரம் கூட உடலையே மூலதனமாகவும் வழிபடு பொருளாகவும் ஆக்கியிருக்கிறதே?

தமிழறிவுத் தொகைமை என்பது உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பதை முதன்மையாகக் கொண்ட இயங்கியல் பொருள் முதல் தன்மையது. சமூக அரசியல் தளத்திலும் இனம், சாதி, நிறம் இவை உடம்பை முன்வைத்தே அறுதியிடப்படுகிறது. கலை இலக்கிய அழகியல், அதிகாரப் போரியல் யாவும் உடம்பின் கட்டமைப்பை வைத்தே முதன்மைப் பெறுகிறது. உடம்பின் அறிவியலே மருத்துவமாகி வளர்ந்து மரணத்தைத் தள்ளிப்போடுகிறது. கடவுளென்ற எதிர் அறிவைக் கைவிடாத இறுதி மனிதர் உள்ளவரை உலக அறிவியல் துறை முழுமையடையாது. தனியொரு உடம்பின் போதாமையை உணரும் தன்னிலைக்குக் கடவுள் என்னும் கற்பிதம் தேவையாயிருக்கிறது. ஆம், உடம்பை முன்வைத்தே மனித அறிவு அமீபாவிலிருந்து அணுப்பிளவு வரை வளர்ந்து புவிக்கோளைவிடுத்து பரிதி மண்டலம் தாண்டி வளர்கிறது. இது இப்படியிருக்க, மொழிக்கலையான கவிதை, உடம்பைத் தவிர்த்து கடவுளை மட்டும் தழுவி நிற்கமுடியுமா? எளிமையாகச் சொன்னால் உம்பைப் பேணுவதே அறிவியல், உடம்பைப் பேணுவதே அரசியல், உடம்பைப் பேணுவதே அழகியல்; இந்த மூன்றின் அளவுக்கு மீறிய அழுத்தங்களிலிருந்து உடம்பை விடுவிப்பதே ஆன்மீக விடுதலையியல்; இதில், மதத்திற்கும் அதன் நடுப்புள்ளியான கடவுளுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. ஃபாசிசம் படியாத உள்ளம் எந்தவொரு உடம்பையும் வெறுக்காது, ஒடுக்காது. உலக உயிரினங்களில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உயிரினம் மனிதரைத் தவிர வேறில்லை. அண்டவெளியில் உடுக்களை உற்று நோக்குவதைப்போல் சக மனிதரை நான் உட்குடைந்து போகிறேன். காதலும் கலவியுமே எனது கவிதையியல். சக உடம்பைக் கொண்டாடத் தெரியாத மனிதரால் உடலுறவில் சிறக்க முடியாது. குங்கிலியம் சுமக்கும் கழுதையாக ஒவ்வொரு மனிதவுடம்பையும் நுகர்வுப் பண்பாட்டுச் சந்தைப் பொருளாதாரம் ஆக்கி வைத்திருக்கிறது. நுகர்வுப் பண்பாடு கட்டமைக்கும் உடம்பின் கண்ணாடிப் பிம்பமாக போர்க்கருவிகளால் பூட்டப்பட்ட உடம்பு நிற்கிறது. நான் சக மனிதருக்கு எனது எழுத்துக்களால் அவரது உடம்பைப் புனைவுகள் படியாத உயிர் பொருளாய் மீட்டுத்தர எத்தனிக்கிறேன். என் கவிதையால் உன்னைக் கொல்ல முடியாது என்பதே அதன் ஆன்மீகப்பண்பு. இறைமைசெய் யோனியும் லிங்கமும் புணர்ந்தப் படிமத்தை வழிபடும் ஆறறிவு விலங்கினம் ஊரும் சேரியுமாகப் பிரிந்தியங்குவது எங்கனம்? இந்தத் துணைக்கண்டம் மனநலமற்றோரின் மருத்துவமனை.

*

சூர்யதேவ்: ஆண் / பெண் என்ற இரட்டை எதிர்நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் மையமற்ற பாலியலை முன்னிறுத்தும் உடல் அரசியல் பற்றி?

விலங்குகளை ஆண்பால், பெண்பால் என இரண்டாக உயிரியல் பகுத்துக் கொண்டுள்ளது. இயற்கை வகுத்த இனப்பெருக்கத் தொழில்நுட்ப இலக்கண வரையறையே இப்பகுப்பிற்கு அடிப்படை. இது உயிரியங்கியலின் அடிப்படை பண்பு; இனப்பெருக்கம் மட்டுமே இதன் விளைவு. பாலியல், பாலுறவு என்பன சமூகப் பண்பாட்டின் உடன் விளைவு; இது வெவ்வேறு நிலவியல், இனவியல் சார்ந்து வேறுபடும்; ஏன், தனியொரு உடம்பு சார்ந்தும் உள்ளம் சார்ந்தும் வேறுபடும். எனவே, பால் செயல்பாடுகளுக்கு பொது இலக்கண விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பக் கையேட்டை உருவாக்க முடியாது. இடம்பெயரும் நாடோடி விலங்குக் கூட்டம் தம் மொழியை முதன்மையாய்க் கொண்டு ஒருநிலைச் சமூகமாகக் கட்டமையும்போது  அதன் முதல் அதிகார மையமாகக் கடவுளை முன்னிறுத்திய பூசனைச் சடங்கியல் கட்டமைகிறது. இதன் பெரிதுபடுத்தப்பட்ட வடிவமே மதம். உடலுறவே மனிதவுடம்பின் முதல் உழைப்பு; அதன் விளைவே இன விளைச்சல். உழவு என்பது இரண்டாம் உழைப்பாகிச் சமூக அடித்தளமாகிறது. கடவுளைக் கைப்பற்றிய ஒரு குழு அதிகார மையமாகி, சமூகத்தில் தனித்த ஓர் அங்கமாகிச் செயல்வடிவம் பெறுகிறது. இங்கு அரசின் தோற்றம் நிகழ்கிறது. பிறகு, அது கடவுளைக் கைவிட்டு உழைப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக,  சமூக உற்பத்தியுறவின் மூல உழைப்பான இனப்பெருக்கத்தை தனது கட்டுக்குள் கொண்டுவந்து, பால் செயலை மேலதிகக் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளது. அலைகுடி, உழுகுடி என வளர்ந்து இன்றைய பின் நவீனக்குடி மரபிலும், அதிகாரம் பால் செயலைக் கட்டுப்படுத்துகிறது. ஆண் – பெண் எதிர் இணையை மையப்படுத்திய குடும்பம் என்ற நுண்ணமைப்பு தனக்குள் மதம், அரசு என்னும் இரண்டு அதிகார அமைப்புகளைக் கொண்டுள்ளது. அணுவுக்குள் எலெக்ட்ரான், நியூட்ரான் போல குடும்ப நுண்மையுள் ஆண் – பெண் எதிர் பால் இணை இயங்குவிசைகள் செயல்படுகின்றன. ஆக, உடம்பின் பாலிலக்கண விதிகளை மாற்றியமைக்கும்போது குடும்பம் என்னும் நுண்ணதிகாரக் கட்டமைப்பு குலையும். நான் அறியாமலேயே எனது உடம்பு சமூக அதிகாரத்திற்கான இயங்கு விசையை உற்பத்தி செய்கிறது. எனவே, என்னுடம்பை அதிகாரத்திற்கு எதிரான ஆயுதமாக முன்னிறுத்த பாலடையாளம் மறுத்த உடம்பாக வளர்த்தெடுக்கிறேன். இதுவே எனது உடலரசியல் அல்லது பாலரசியல் பற்றிய வரைவு. இதில் திருவள்ளுவர் என்னுடன் மாறுபடலாம். குடும்ப விளக்கை ஏற்றும் பாரதிதாசன் என்னை விரட்டி விரட்டி உதைக்கலாம்; ஆனால், கண்ணகி, மாதவி, மணிமேகலை வழிவந்த மூதாய்கள் என்னைக் காப்பர். நண்பா, என்னை நீ மறுக்கும்போது என் அதிகார ஒழுங்கமைவைக் குலைக்கிறாய்.

*

லக்ஷ்மி சரவணகுமார்: இந்தியக் கலைமரபில் காமத்திற்கு மிக நீண்ட வரலாறும் உறவும் உண்டு. ஓவியம், சிற்பம், இலக்கியமென எல்லாவற்றிலும் காமத்தைச் சுதந்திரமாக பேசியவர்கள் நாம். ஆனால் கடந்த சில நூறாண்டுகளில் அந்தப் போக்கு முற்றாக மாறி இச்சை ஒரு பாவச்செயலாக பார்க்கப்படுவதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நண்பா, இந்தியக் கலைமரபு என்பதை  இந்தியத் துணைக்கண்டத்தின் கலைமரபுகள் என பொருட்படுத்திக் கொள்கிறேன். இந்த பூமியில் எந்தவொரு சமூகமும் ஒருமையாலானது இல்லை; அது பன்மையின் ஒருங்கிணைவு. ஒற்றை அடையாளம் என்னும் வன்முறைக்குள் நாம் நமது பேச்சுவழக்கின் வழியில்கூட அடைபடக்கூடாது. ஒருமையாக்கம் என்பதன் மூலமே பேரரசுகள் உருவாகின்றன. மதத்தின் வழி, மொழியின் வழி, கலை இலக்கியப் பண்பாட்டு அசைவுகள்வழி அரசதிகாரம் உலகை ஒருமுகப்படுத்துகிறது. உடம்புக்கு உடம்பு வேறுபட்டு தனித்துவத்தோடு இயங்கும் பால் செயல்களும் ஒற்றை இலக்கண வரையறைக்குள் ஒருமுகப்படுத்தப்படுகிறது. காமசூத்திரப் பனுவலையும் கஜுராஹோ சிற்பங்களையும் கொண்டு இத்துணைக்கண்டத்தின் காமச்செயல்பாடுகளைக் கட்டற்றது எனக் கொண்டாடுகிறோம். வர்ணக்கலப்பு தடைசெய்யப்பட்ட பிரம்மனின் ஆண்குறி மையச்சமூகங்களில் விடுபட்ட பால்மனம் என்பது பிறழ்வாகவும் குற்றமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. காமசூத்திரம் ஓர் ஆண் மையப்பனுவல்; அதில் பெண்ணுடம்புக்கான சொல்லாடல் தவிர்க்கப்பட்டுள்ளது. அதில் பெண்ணுடம்பு ஓர் இனப்பெருக்க இயந்திரம் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை. அதிகார வர்க்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சூத்திரப் பெண்ணுடம்புகள் யாவும் ஆண்குறிகள் சுரக்கும் விந்துக்குழைவை வெளியேற்றும் கழிப்பறைகளாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகச்சமூக மொழிகளில் பெண் பாலடிமை உடம்புகளைச் சுகிப்பதற்கான தொழில்நுட்பக் கையேடுகள் இதுபோல பல உள்ளன. பாலறம் என்பதைச் செந்தமிழ் வள்ளுவ ஆசானிடமே காண்கிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனச் சொல்லும் சமூகமே பாலறம் பேணும். கருக்கலைப்பைத் தடுத்து இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் மதம் பாலிச்சையைத் தடைசெய்கிறது. பகல் புணர்ச்சி என்பது சமூக இழிவழக்கு. இரவில் இணையுடம்பு காணாது, தொட்டுத்தடவி குத்துமதிப்பாகப் புணருவதே இனப்பெருக்க முறைமை. இந்திய ஆண்களுக்குச் சுய இன்பக் கரமைதுனமே போதுமானது; பெண்களுக்கு அதுகூட இல்லை. விடுபட்ட காமம் இல்லாமல் விடுதலை இல்லை. பாலொடுக்கு முறையால் பட்டினி கிடக்கும் சமூகம் பொருளாதாரச் சுரண்டலுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்து விடும். உறக்க நடையாளர்களைக் கொண்டு சமூகப்புரட்சியை முன்னெடுக்க முடியாது. நான்கில் மூன்று பங்கு கடலாலான திரவப்பரப்பில் மீன்கள் உறங்குவதில்லை. உலக மத அடிமைச் சமூகங்களுக்குப் பால் கலை குறித்த தேடல் இல்லை. உலகப் பெண்ணடிமைச் சமூகங்களுக்குப் பாலின்பம் குறித்தத் தேடல் இல்லை. ஒரு பெண்ணுடம்பைத் தன்னுடம்புடன் தரிப்பதில் ஆணுடம்பும் ஓர் ஆணுடம்பைத் தன்னுடம்புடன் தரிப்பதில் பெண்ணுடம்பும் முழுமையடைகிறது. ஒரேயொருத்தியிடமோ ஒரேயொருவனிடமோ முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுப்பதிலேயே பால் மேலாதிக்கம் அற்றுப்போகும். தனியோர் உள்ளம் ஆன்மீக உச்சத்தை அடைய வழித்துணையாகக் கடவுள் தேவையில்லை; எதிர் பாலுடம்போ இணை பாலுடம்போ போதும். காமத்தில் தன்னிறைவு அடையாத சமூகம் விட்டு விடுதலையாகி நிற்பதில்லை. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே…

*

சூர்யதேவ் : தன்பால் புணர்ச்சி போன்ற மாற்றுவகை பாலியல் தேர்வுக்கான சுதந்திரம் என்பது  இயற்கைக்கு மாறானது என்ற பார்வை பொதுப்புத்தியில் நிறைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்கள் எழுத்தில் வெளிப்படும் மாற்று காமத்திற்கான அறவியல் பற்றி விளக்க முடியுமா?

அன்பு, காதல், காமக் கலைச்செயல் யாவும் சமூகக் கட்டமைப்பில் உருவான செயற்கை அடித்தளங்கள். இனப்பெருக்கத்திற்கான பாலுந்துதல் மட்டுமே இயற்கையான உயிரியல் விளைவு. உடம்பின் பாலவயங்களை மூடும் ஆடையிலிருந்து ஆணுறைவரை எல்லாம் சமூக விளைவின் செயற்கைத்தனங்கள். செயற்கையாக இனப்பெருக்கத் தடைகளைச் சமூக அரசியல் காரணிகள் உருவாக்கும்போது, இனப்பெருக்கச் சாத்தியமற்ற மாற்றுப் பாலுறவு நடைமுறைகளை ஊக்குவிப்பது எதிர்ச்சமூக உயிரியல் செயல்பாடாகாது. பாலியல் நடைமுறைகளை உற்று நோக்கும் மதம், இதைப் பிறழ்வாகவும் மீறலாகவும் கடவுளுக்கு எதிரான கலகமாகவும் சமூக / இயற்கை ஒழுங்கியல்பைக் குலைக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கிறது. விடுதலை என்பது சமூக இனவியல், மொழியியல், பொருளியல் சார்ந்தது மட்டுமில்லை; அது உடம்பியல், உளவியல் கட்டமைக்கும் மனித மெய்யியல் சார்ந்ததுமாகும். மெய்யே உலகியல் பொருள் முதன்மையாகும். சமூகவிடுதலையே மெய்வருத்தக் கூலியாகும்போது; உடம்பின் விடுதலையே பாலறமாகும். எனது இலக்கியப் பனுவல்களில் மிகு பாலுடம்புகளும் பால் கடந்த உடம்புகளும் பால் துறந்த உடம்புகளும் பால்நிலை மாறிய உடம்புகளும் முதன்மை பெறுவதே அவற்றின் இயலொழுங்காக இருக்கிறது. உடம்பில் செயற்கையான வலியையும் மரணத்தையும் விளைவிப்பதே  இயற்கைக்கு மாறான அற இழுக்கு. தனியொரு உடம்பு விழையும் பால் தேர்ந்தெடுப்பை ஒடுக்கும், கட்டுப்படுத்தும் சமூக எதேச்சதிகார இலக்கணத்தை மீறுவதே எனது பிரதியியல் கலகம். ஒற்றைப் பொருளுரைப்பு பனுவலின் விடுதலையை ஒடுக்குவதைப்போல் உடம்பின் ஒற்றைப் பொருளுரைப்பு சமூக விடுதலையை ஒடுக்கும். மனித இனக்குழுவின் சமூகமாதல் என்பது உடம்பைக் கொண்டாடுவதாக இருத்தல் வேண்டும். பால் விடுதலையே பாலறம்; ஃபாசிசம் அண்டாத உடம்பே ஆர்கச உச்சச் சிலிர்ப்பை எளிதில் அடையும். நண்பா, இழப்பதற்கும் பெறுவதற்கும் உன் உடம்பைத் தவிர உன்னிடம் வேறில்லை. உடம்பைக் கொண்டாடாதச் சமூகம், கிடத்தப்பட்ட உடல்களாலான இடுகாடு; அங்கு விடுதலை பற்றிய கேள்வியில்லை.

*

சூர்யதேவ் : உங்கள் படைப்புகளில் வெளிப்படும் காமம் என்பது அதீத இருண்மைகளின், குற்றவுணர்ச்சிகளின் வெடிப்பாக முன்வைக்கப்படுகிறதா?

லக்ஷ்மி சரவணகுமார்: உங்கள் புனைவுலகில் வெளிப்படும் அனேக கதாபாத்திரங்களின் வழியாய் நீங்கள் வைக்கும் முக்கியமானதொரு உரையாடல் உடல்களின் வாதை. மார்கி தெ சாத், ஜார்ஜ் பத்தாய் போன்றோரின் நாவல்களில் வெளிப்படும் வாதைக்கும் கவபத்தாவின் The House of the Sleeping Beauties நாவலில் வெளிப்படும் வாதைக்கும் நிறைய வேறுபாடுண்டு. மார்கி தெ சாத்தையும் பத்தாயின் Story of the Eye-யும் வாசிப்பது ஒருவரின் சமநிலையைக் குலைக்கக் கூடியது. கவபத்தாவின் கீழைத்தேய வாதையையும் சாத், பத்தாய் போன்றவர்களின் மேலைத்தேய வாதையையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்? உங்களது புனைவில் வெளிப்படும் வாதை  சாத் மற்றும் பத்தாயின் வெளிப்பாடாகத் தோன்றுகிறது.

உங்களுடைய இரு கேள்விகளுக்கும் சேர்த்தே பதிலளிக்க முயற்சிக்கிறேன். ஆம், நிலவியலும் அது சார்ந்து உருவாகும் சமூகப் பண்பாட்டுக் கருத்தியலும் மனித உடம்புகளை வெவ்வேறாக வளர்த்தெடுத்தாலும் அவற்றில் விளையும் இன்பமும் வலியும் ஒரே உணர்வாலானவையே. உடம்பு உணரும் இன்பமும் வலியும் நிலவியல் பண்பாடு சார்ந்து வேறுபடுவதில்லை. உணர்வின் உள்ளடக்கம் மட்டும் திட திரவ வாயு நிலைகளில் வேறுபட்டு நிற்கும். கீழைத்தேய, மேலைத்தேய நிலவியல் பண்பாட்டு வேறுபாடுகள் உடம்பையும் உள்ளத்தையும் வரையறுப்பதில் வேறுபடும்; ஆனால் அவை உணரும் வாதை உடம்பியல் சார்ந்து வேறுபடுவதில்லை. பிறப்பு, இன்பம், வாதை, இறப்பு இவை உலகு தழுவிய இயற்கை நியதி. பூமிக்கு வெளியே இந்த உடம்பின் இயற்பியல் தன்மை மாறுபடும்போது, அதன்வழி பெருகும் கலை இலக்கியத் தத்துவம்போல் – இன்பமும் வலியும் மாறுபடலாம். சமூக அமைப்பு உடம்பைக் கண்காணிக்கிறது, பிறழும்போது தண்டிக்கிறது. உடம்பானது பால், இனம், நிறம், சாதி, தேசியம், மொழி இவற்றால் வேறுபடுகிறது. இவற்றில் ஏதாவதொன்றில் வேறுபட்டு நிற்கும் இரண்டு உடம்புகள் ஏதாவதொன்றில் ஒன்றுபட்டு நிற்க பொதுக்கூறைத் தேடுகின்றன. இந்தத் தேடலின் நிமித்தம் வரலாற்றில் அலைவதை எழுத்தாக்குகிறேன். எனது சக கலைஞர்களான தெ சாத், பத்தெய், கவபத்தா, பாஸ்பைன்டர், ழெனே எனப்பலர் ஒவ்வொரு மொழியில், பண்பாட்டு அரசியல் வெளியில், பைத்தியர்களால் கட்டமையும் வரலாற்றில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மனிதரை அரசியல் தத்துவங்கள் வடிவமைப்பதில்லை; மாறாக, அவர் சார்ந்த மதமே வெளித்தோற்றம், உள்ளடக்கம் அனைத்தையும் வடிவமைக்கிறது. நான் எந்தவொரு தத்துவக் கோட்பாட்டையோ அறிவு இயக்கத்தையோ தனிநபரையோ பின்தொடர்வதில்லை. கடவுளில்லாத வெற்றிடத்தில் என்னை நிரப்பிக் கொண்டிருக்கிறேன்; கடவுளென்பது காமத்தின் மாற்றீடு. கடவுளைப்போல காமமும் சமூகப் பங்கெடுப்பால் விளைவது. தனியருக்கு அங்கு வேலையில்லை. தொடர்ந்து பேச களைப்பாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால், வலியில்லாத மானுடமே எனது விழைவு. மரணம் என்னும் மாபெரும் தனிநபர் புதிர் விளையாட்டை குதூகலத்தோடு விளையாடுகிறேன். நான் இயற்கையின் விளைவு; இயற்கையோடு இயைந்த வாழ்வை சமூகமாதல் என்னும் ஃபாசிசக் கட்டமைப்பு குலைக்கிறது. மேலாதிக்கம் இயற்கை ஒழுங்கியலைக் குலைத்துவிடும். வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த எந்தவொரு விடுதலைக் கருத்தியலும் மெல்ல மெல்ல ஃபாசிசமாக உருத்திரிந்ததைப் பார்த்துவிட்டோம். வெள்ளை, பச்சை, காவி, சிவப்பு, கறுப்பு, நீலம் என வகைப்படும் ஆதிக்கம், எதிர் ஆதிக்கம், மேலாதிக்கம் யாவும் எளிய மனிதவுடம்பில் அரசியல்  வினையாற்றுகின்றன. சமூகத்தில் மனம் பிழன்ற பைத்தியங்களை ராணுவத்தில் சேர்ப்பதில்லை; ஏனெனில் ராணுவக்கட்டமைப்பே ஆகச்சிறந்த பைத்தியக்காரத்தனமல்லவா? பைத்திய உடம்பில் அரசியல் செயலிழந்துவிடும்; உலகப் பைத்தியக்காரர்களே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கமே எனது பனுவலரசியலாக இருக்கிறது.

*

லக்ஷ்மி சரவணகுமார்: புனைவில் வடிவ ரீதியிலான ஏராளமான சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர் நீங்கள், இதற்கான பயிற்சியை எங்கிருந்து எடுத்துக்கொண்டீர்கள்? வடிவரீதியிலான உங்களின் புனைவு முயற்சிகளுக்கு யாருடைய எழுத்துக்களை முன்மாதிரியாய் சொல்வீர்கள்?

எனது புனைவுகளின் வடிவரீதியான கட்டமைப்புகள் யாவும் சிம்ஃபோனி இசைக்கோர்வையின் ஒட்டுமொத்த இயங்கியலையும் தொழில்நுட்ப நேர்த்தியையும் பின்பற்றுபவை. நான் ஐரோப்பியக் கண்டத்தில் வளர்ந்திருந்தால் எனது முதல் தேர்ந்தெடுப்பாக திரைப்படமே இருந்திருக்கும். என்னைத் தமிழ்க்கவிதை மரபிலிருந்து வெளியேற்றி  புதிய இயங்குத் தளத்தை ஆக்கிக்கொடுத்தவர்கள் சர்ரியலிசக் கலைஞர்களேயாவர். தண்டனை இல்லை; உலகில் யாரையேனும் ஒருவரைக் கொன்றுவிடு எனச் சொன்னால், யோசிக்காமல் ஸல்வதோர் தலியைக் கலையின் போகச்சிலிர்ப்பால் சுட்டுக் கொன்றுவிடுவேன். பதின்பருவத்திலேயே எனது உள்ளடக்கம் அவனால் நிறைந்தது. அவனுடைய நண்பன் லூயி புனுயேலைத்தான் இன்றும் பின்தொடர்கிறேன். வெர்னர் ஃபாஸ்பைன்டரும் ழான் லுக் கோதாரும் என்னைக் கலைத்து அடுக்கியவர்கள். சத்யஜித்ரேவிடமும் அடூர் கோபாலக்கிருஷ்ணனிடமும் எளிமையாகவும் நிதானமாகவும் ஆழமாகவும் எழுதக் கற்றுக்கொண்டேன். பிதாமகன் லூயி போர்கஸ் வழி கட்டமையும் லத்தின் அமெரிக்கக் கண்டம் எனது விளைநிலம். இடாலோ கல்வினோவும் ழார்ழ் பெரெக்கும் உம்பர்தோ எக்கோவும் நான் கடக்க நினைக்கும் எல்லை இலக்குகள். இவர்கள் எனது தாய்மொழிக்கு வெளியில் நிற்கும் ஆசான்கள். இவர்கள் என் போக்கை மாற்றியவர்கள். திருக்குறளே எனது ஆணிவேர்; கிளைகள், திசைகள் எட்டும் பரவும் இயல்புடையவை. எல்லோரும் எழுத்தெண்ணிப் படிப்பார்கள்; நான் வள்ளுவனிடம் எழுத்தெண்ணி எழுதக் கற்றுக்கொண்டேன். புனிதவதியாரிடம் சரண் புகுவதே, ஃபாசிசவழி ஒழுகலுக்கு எதிரான பைத்திய இயங்கியல் என்ற கவிதையியலைப் புரிந்து கொண்டேன். பாரதியும் பாரதிதாசனும் உண்டாக்கிய போக்குவரத்து நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பேராசான் புதுமைப்பித்தனிடம் தமிழ் நாவல்களுக்கான வகைமைகளின் மூலக்கதைகளைக் கற்றுத் தேர்ந்தேன். இன்று, கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இவர்களின் கூட்ட நெரிசலில் என்னைத் தேடுகிறேன்.

*

சித்ரன் : 80 களிலும் 90 களிலும் தமிழ் எழுத்தாளர்கள் மரபான கதை சொல்லும் வடிவத்திலிருந்து புதிய வடிவங்களை நோக்கிய தேடலில் சற்று மிகையாகவே ஈடுபட்டுவிட்டார்களோ என்ற ஐயப்பாடு எனக்குள்ளது. உங்கள் புனைவுலகத்திற்கு நெருக்கமான கி.ராவின் அபாரமான ‘பேதை’ கதையோ எளிமையான வடிவத்தில் எழுதப்பட்டதுதானே?

மரபான கதை சொல்லும் வடிவமென்று எதுவுமில்லை; அது இசையைப் போல நிலத்திற்கேற்ப காலச்சூழலுக்கேற்ப மாறிக்கொண்டேயிருப்பது. அதை ஒன்றில் அறுதியிட்டு நிலைப்படுத்த முடியாது. நடந்ததைத் திரும்பச் சொல்வதும் நடக்கப்போவதை முன்கூட்டிச் சொல்வதும் ஒவ்வொரு வாய்க்கும் மாறுபடும். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் ஒற்றை மெய்ப்பொருளாய் அமையாது. வாய்க்கேற்ப இடத்திற்கேற்ப காலத்திற்கேற்ப மாறுவதே சொல்கதை இயங்கியல். உலக அரசியல் மாற்றத்திற்கேற்ப இருபதாம் நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகளில் தமிழ்ப்புனைவில் உளவியல், மெய்யியல் சொல்லாடல்கள் செறிந்து புதிய கவிதையியல் போக்குகளை வெளிப்படுத்தின. சமூகப் பொதுப்புத்தியில் தேய்வழக்காகிவிட்ட ஒன்றைப் புறமொதுக்கி புதியதை உட்புகுத்துவதே கலையின் அடிப்படை இயல்பு. இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதில் கட்டமைந்து இறுதி இருபதில் கட்டுடைந்த சோவியத் ஒன்றியம் உலகு தழுவிய கலை இலக்கியச் செயல்பாடுகளை மாற்றியமைத்தது. ஆம், வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் முதன்முதலாக பூமி புரண்டு படுத்தது. எல்லாப் பொருளும் இடதுவலதாய் வலதுஇடதாய் இடம் மாறின. இப்புவியசைவு ஒருநாளில் நிகழ்ந்ததன்று; ஒரு நூற்றாண்டாக உள்ளுக்குள் சிறுசிறு நடுக்கங்கள் திரண்டு நிகழ்ந்தது. ஒரு நிலப்பகுதியின் அரசியல் நிகழ்வே அதன் கலை இலக்கியத்தை மாற்றியமைக்கிறது. கடந்த நூற்றாண்டின் இறுதிக்கால நிலநடுக்கம் தமிழ் நிலத்திலும் உணரப்பட்டது. நிறப்பிரிகை, மீட்சி, தமிழ் நேயம், கிரணம் போன்ற இதழ்கள் வழியே புதிய சொல்லாடல்கள் பெருக்கமடைந்தன. அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் கார்ப்பரேட் கம்பெனிகளாயின. கதையற்று அலைந்தோம்; புதிய கதைகளைத் தேடத்தொடங்கினோம். கனவுகளற்ற உறக்கத்தில் சூன்யத்தைக் கதைப் பொருளாகத் தொட்டுணரலானோம். எல்லாம் மறுவாசிப்புக்கும் பொருள்கோளுக்கும் உட்படுத்தப்பட்டன. கி.ராஜநாராயணனைப் பற்றி குறிப்பிட்டீர்கள். ஆம், மேல்நிலைப்பள்ளிப் பருவத்தில் வாசகர் வட்டம் வெளியிட்ட கோபல்ல கிராமம், அதுவரை வாசித்திருந்தப் பனுவல்களிலிருந்து வேறுபட்டு தனித்துத் திகழ்ந்தது. கி.ராவின் ஒட்டுமொத்த எழுத்தும் கரிசல் பூமியின் சமூக மானுடவியல் ஆவணத் திரட்டு. வெளியிலிருந்து வந்த ஓர் இனக்குழுவின் புலம்பெயர்க் கதையினூடாக மண்ணின் இனக்குழுக்களின் கதைகளையும் சேர்த்துச் சொல்லிச்செல்வது. ஆம், எளிய வாக்கியங்களாலானவர் கி.ரா. ஆனால், கதையின் உட்பொருள் எளிமையானதன்று. கி.ராவின் படைப்புகளில் சிலவற்றைத் தேர்ந்துத் தொகுத்து விரிவான கட்டுரையொன்றை எழுதி கி.ரா. எழுத்துலகம் என்ற நூலை கலைஞன் பதிப்பகம் மூலம்  பிரேமுடன் சேர்ந்து வெளியிட்டேன். தமிழ் இலக்கிய உலகில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த கி.ரா. எனும் நாட்டார் கதைசொல்லி என்ற எளிய படிமத்தைச் சிதைவாக்கி அவரை ஒரு பின்நவீன / பின்நவீனத்துவ கதைசொல்லி என்று புதிய வாசிப்பின் வழி நிறுவப்பட்டது. மேற்சுட்டிய நூலில் பத்து சிறுகதைகள் தேர்ந்து முன்வைக்கப்பட்டன. அவை  பொதுவழக்கில் அதிகம் பேசப்படாதவை. அவற்றிலொன்றுதான் ‘பேதை’ நான் இந்த உரையாடலில் முன்வைத்துள்ள தாய்மை திரிந்த பேய்மை என்னும் கவிதையியல் பொருண்மையை, நான் பிறப்பதற்கு முன்பே கி.ரா. இக்கதை வழியே நிகழ்த்திக் காட்டியுள்ளார். வேட்டி, கதவு போன்ற கதைகளின் தேய்வழக்கால் முடக்கப்பட்டிருந்த கி.ராவின் கதைவெளியின் பிற பரிமாணங்கள் வாசகப் பார்வைக்குச் சுட்டப்பட்டன. இது, கி.ராவை வாசிப்பதில் புதிய நோக்கை முன்னெடுத்தது. இலக்கியப் பனுவல் ஒருபோதும் காலாவதியாவதில்லை; ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் மாறுபடும் பொருளுரைப்பில் புதிது புதிதாய்ப் பல்கும்.

*

சபரிநாதன் : பொதுவாக உங்கள் கவிதைகளில் இசைமையும் கட்டமைப்பும் உண்டு. ஆனால் சமீபத்திய கவிதைகளில் நீங்கள் கிட்டத்தட்ட அகவற்பா, விருத்தம் போன்ற மரபார்ந்த வடிவங்களில் எழுதி வருகிறீர்கள். கட்டற்ற தன்மை இன்னும் மிகுந்திருக்கிறது. இத்தகைய புத்துருவவாத (neoformalism) கவிதைகளை நோக்கிய திருப்பத்திற்கான காரணம் என்ன?

பள்ளிப்பருவம் முதலாக எழுதுவதைப் போலவே பேசுவதற்கும் பயின்று வந்தவன். எல்லா வகை மரபு வடிவங்களிலும் பாப்புனையும் பயிற்சி பெற்றிருந்தேன். பழைய ஞாபகத்தில, எதுகை மோனையை விடுத்து விருத்தப்பா கட்டமைப்பில் ஐம்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பை நடுநிசி மதியம் என்ற பெயரில் உருவாக்கினேன். புது எழுத்து பதிப்பகம் வெளியிட்டது. வழக்கம் போல தமிழ் இலக்கியச்சூழல் அதைக் கடந்து சென்றுவிட்டது. அது எனது பதினான்காவது கவிதைத் தொகுப்பு. கட்சி அரசியல் விளைவிக்கும் ஃபாசிச அழுத்தம் தமிழ்ச் சமூகச் சூழமைவிற்குக் கேடு பயக்கும்; அதுபோல இலக்கிய அரசியல் விளைவிக்கும் ஃபாசிச அழுத்தம் தமிழ்க் கலையியலுக்குக் கேடு பயக்கும். தோழமை மனப்பாங்கு இச்சமூகத்திற்கு அந்நியமானது. சகமனித சாதிய வெறுப்பால் கட்டமைந்த உள்ளத்தில் கவிதை கருக்கொள்ளாது. உலக இலக்கியப் போக்கிலிருந்து தமிழிலக்கியம் பின்தங்கியுள்ளதற்கு இதுவே முதற்காரணம். கூட்டுப்புழுவைப் போல என்னைச் சுற்றி நானே கட்டமைத்துக் கொண்ட வெளிக்குள்ளிருந்து கற்பனையான இலக்கியச் சூழலை நிறுவிக்கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். கண்ணாடியில் உற்றுப் பார்க்கும்போது முகத்தில் பைத்தியக்களைக் கூடிவருவதுத் துலங்குகிறது. ஒன்றில் தேங்கவிடாமல் என்னைக் கலைத்துக் கலைத்துப் புலன்களை மாற்றி மாற்றி கோர்த்துக்கொண்டே இருக்கிறேன். இப்பழக்கம் பனுவலாக்கத்திலும் பிரதிபலிக்கிறது. ஒற்றை வடிவத்தில் எனது உடம்பு நிலைக்கலாம்; ஆனால், எனது படைப்பு வெவ்வேறு வடிவங்களில் கூடுவிட்டுக் கூடு மாறிக்கொண்டே இருக்க வேண்டும். கைப்பிடிக்குள்ளிருந்தாலும் அதற்குள் ஒடுங்காமல் ஓயாமல் அலையடிக்க வேண்டும்; ஒவ்வொரு கணமும் வெவ்வேறு அலைகள். மொழி என்பது ஒலிகளின் தொகுப்பு; அதன் துணுக்குகள் எழுத்துக்களாகவும் வார்த்தைகளாகவும் வாக்கியங்களாகவும் வாய்வழி கட்டமையும் இசைக்கோலம். மொழிக் கட்டமைப்பே இனக்குழு உருவாக்கும் முதன்மையான இசைக் கட்டமைப்பு. ஒவ்வொரு மொழியும் ஓர் இசை வடிவம். நான் தமிழிலோ ஃப்ரெஞ்சிலோ பேசுகிறேன் என்றால் வாயொலி வழியாக பொருளுடைய இசைக்கோலத்தைப் பிறருடன் பகிர்கிறேன். மரபான பா வடிவங்கள் மட்டுமில்லை; ஒரே மொழியின் பேச்சு ஒலிவடிவம் நிலப்பகுதிக்குத் தக வேறுபடும்; இதையே வட்டார வழக்கு என்கிறோம். வேறுபடும் வட்டார வழக்கு என்பது வேறுபடும் பா வகைமையே. எளிமையாகச் சொன்னால், இசையால் நான் எழுதுகிறேன். எடுத்துக்காட்டாக, பாரதியின் கவிதைகள் தமிழின் ஒலிக் கட்டமைப்பாலேயே செழுமைப் பெறுகின்றன. பெயர்க்கப்பட்ட அவற்றை இரு ஐரோப்பிய மொழிகளில் படித்திருக்கிறேன்; மூலமொழியின் இசைத்தன்மை நீக்கப்பட்டு வெற்று பேச்சாகவே மீந்திருந்தன. எந்தவொரு மொழியிலிருந்தும் உரைநடை இலக்கியம் மொழி மாற்றமடையும் அளவிற்குக் கவிதை இலக்கியம் மொழி மாற்றம் செய்யப்படுவதில்லை. கவிதையோ கதையோ மொழிபெயர்ப்பின் வழி முழுமையடைவதில்லை. தமிழ்த் தொன்மையின் இசைவளத்தை என்னால் விலக்கி வைக்க முடியாது. ஆக, கவிதையிலும் கதையிலும் வகைவகையான இசைக்கட்டமைப்பை வார்த்தைப்படுத்துகிறேன்.

*

சபரிநாதன் : உங்கள் கவிதைகளில் அறிவு நிலையிலோ உணர்ச்சிகரத்திலோ ஒருவித வன்தன்மை அல்லது ஒருவகை மூர்க்கம் இருப்பதாகத் தோன்றுவதுண்டு. அப்படியான தோற்றத்திற்கு வாய்ப்புள்ளதாகக் கருதுகிறீர்களா?

எனது எழுத்துச் செயல்பாடுகளின் அரசியல் என்னவென்றால், மேலாதிக்கத்திற்கு எதிராக சக மனிதரின் அறிவொழுங்கை மாற்றியமைப்பதேயாகும். நானொரு தமிழ் தேசியவாதி. மார்க்ஸ், அம்பேத்கர், அயோத்திதாசர், பெரியார் என்னும் நான்கு அறிவுத்திசைகளால் கட்டமைவதாகத் தமிழ் தேசியம் இருத்தல் வேண்டும். அம்பேத்கரின் அவைதீகம், மார்க்சின் பொதுவுடைமை, அயோத்தி தாசரின் தமிழ் பெளத்தம், பெரியாரின் சமூக நீதி என்னும் தொகுப்பறிவால், இத்துணைக்கண்டத்தில் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் தனது மொழி வழியே தனக்கான தேசத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கு உடனிருந்து உழைப்பதே எனது எழுத்தின் அரசியல் அறிவுநிலை. திருக்குறளின் அறநெறிகளே எனது கவிதையியலின் உள்ளடக்கம். ஆண் பால், பெண் பால் கலந்துத் திரிந்த ஆபெண் பால்நிலைக் கட்டமைப்பை உருவக உடலரசியல் செயல்பாடாக முன்னெடுப்பதே எனது பனுவலரசியல். உடம்புகளின் போகத் திளைப்பினூடாக ஆன்மீக உச்சத்தை அடைவதே வாழ்வியல் எனச்சொல்லும் எனது படைப்புகள் மூர்க்கத்தையோ வன்முறையையோ கொண்டாடுவதில்லை. கருத்தியல் உருவகங்களான கடவுளுக்கும் சாத்தானுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நிகழும் உரையாடலில் நான் கடவுளின் பக்கமே நிற்கிறேன். எல்லோரும் இன்புற்றிருப்பதே யல்லாமல் வேறொன்றறிந்திலேன் தோழர்களே…

***

தொடரும்

***.

சித்ரன் – கனாத்திரமுறைத்த காதை – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர். [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular