Thursday, March 28, 2024

யாதுமானவள்

பிரபாகரன் சண்முகநாதன்

கொக்..கொக்…

கோழிகளின் இரைச்சலும் அவை மண்ணைக் கிளருகின்ற ஓசையும் தெளிவாக காதில் வந்தடைந்தது. சலசலன்னு கேணி நீரில் முகத்தை அலம்பினால் தான் தேவலை என்று தோன்றவும் படுத்திருந்தக் கோணத்தில் இருந்து மரக்கதவின் நுனியைப் பற்றியவாறே எழுந்துப் பின்கட்டுக்கு விரைந்தாள். கடக்…கடக் என சுழலும் கப்பியின் ஒரு முனையில் இருந்த வாளியோடு பிணைத்திருந்தக் கயிறைத் தூக்கி கிணற்றுக்குள் போடவும் தொபுக் என தண்ணீருக்குள் வாளி விழுந்தது. கயிறின் மறுமுனை கிணற்றின் ஒரு பக்க தூணில் கட்டப்பட்டிருந்தது. நிதானமாக கயிறைப் பிடித்து வாளியை இழுக்க தொடங்கினாள். தண்ணீருக்குள் சர்ரென்னு மேலேறிய நீர் நிறைந்த வாளி நீர்ப்பரப்பைத் தாண்டியதும் கனம் கூடிற்று. வாளியை மேல் இழுக்க தன் முதுகைக் கயிற்றோடு ஒட்டி முன் வளைய வேண்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறிய வாளியின் விளிம்பு தெரிந்ததும் கயிற்றைக் கொஞ்சம் பிடி தளர்த்தி வாளியை வெளியே இழுத்தாள்.

கிணற்றடிவாரத்தில் மேவப்பட்டு இருந்த சிமிண்ட் தளத்தில் வாளியை வைத்து இரு கைகளாலும் நீரை மோண்டு முகத்தில் அடிக்கவும் அதன் குளுமை புத்தியைத் தெளிவாக்கியது போல இருந்தது அலமேலுவுக்கு. இன்னொரு முறை அதைப் போலவே முகத்தைக் கழுவிக்கொண்டு சம்பிரதாயங்களை மீறி நெற்றியில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறிய கருப்பு பொட்டு அதன் இடத்தில் தான் இருக்கிறதா என்பதை சரி செய்தாள்.

எங்கிருந்து இந்த ஆசுவாசம் கிடைக்கிறது என தெரியவில்லை. கிணற்றடிக்கு மட்டும் அப்படி ஒரு புனிதத்தன்மையை எது சேர்த்துக் கொடுக்கிறது என்பதற்கு விடையெல்லாம் இல்லை. சுற்றி நிற்கிற வேப்ப மரம், புளிய மரம், முருங்கை மரம் மாறி மாறி கிணறின் தாழ்வாரத்துக்கு வெயிலை அண்ட விடாமல் பார்த்துக் கொள்கின்றன. எத்தனை பிரச்சனை இருந்தாலும் இங்க வந்து நின்னுட்டா அப்போதைக்கான தெளிவை வாரி வழங்குது. கிணறின் வழியாக தான் இந்த மண் மனிதர்களிடம் பேச விரும்புது. கடவுள் மேல இருக்குறது இல்லை. மண்ணுக்குள்ள தான் இருக்காரு. அவருடைய வழிபாதையாகத் தான் கிணறு இருக்கும். மனிதர்களைக் கண்காணிக்க அவர் கிணறு வழியாக வந்து செல்கிறார்.

எங்கோ போகிற நினைவுகளைக் கட்டி இழுத்துட்டு வர இந்திராவின் நினைப்பே போதுமானதாக இருந்தது. அலமேலு பெருமூச்சு விட்டபடி காற்றில் சொற்களை உதிர்த்தாள். யாரும் கேட்க இல்லாத போதும் பேசும் பழக்கம் இன்னிக்கு நேத்து இல்ல இந்திராவின் அப்பா இறந்து, ஆண்கள் அவரை எரிக்க தூக்கிக் கொண்டும் பெண்கள் நீர்மாலை எடுக்கவும் போன பிறவு இதே கிணற்றடியில் யாரிடமோ பேசுவது போல சத்தம் போடத் தொடங்கிய போதே தொடங்கியது. அலமேலுவை அவள் வீட்டில் வேலை செய்த மகமாயி அக்கா தான் ஆற்றுப்படுத்தி மடியில் சாய்த்துக் கொண்டாள். ‘கவலைப்படாதே பொன்னுத்தாயி. மனுசன பிறந்த யாரும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டு போகத்தான் வேணும். அதுவரைக்கும் களத்துமேட்டு அய்யனார் காவல் தான் துணை தாயி’

“என் தப்பு என் தப்பு. அவன் குடிகாரன்னு தெரிஞ்சு இருந்தா என் பிள்ளைய கட்டிக் கொடுத்திருக்க மாட்டேனே. என்ன பெத்த அப்பா, எனக்கு அந்த மட்டுக்கு கூட அறிவு இல்லாம என்னைய வளர்த்து விட்டுட்டு போயிட்டீகளே. என் பிள்ளை அங்கு கஷ்டப்படுறப்போ இங்க நான் எப்படி நிம்மதிய கஞ்சி குடிச்சுட்டு கிடக்க முடியும்” -சத்தம் மதிலைத் தாண்டி வீதியில் முட்டி எதிரொலித்தது.

அழுகைக்கு நடுவே வார்த்தைகளும் அதற்கு முன்பே இளைப்பும் வர, ஆற்றமாட்டாது வற்றிய நெஞ்சில் கைவைத்தாள் மூச்சுக்குத் திணறியவாறே. சாமியறையின் கதவுக்கு மேல் நிலையில் இருந்த உறிஞ்சுகிற மருந்தை வாயில் மூன்று நான்கு முறை இழுத்த பிறகே அமைதியானாள்.

இளைப்பு முன்னாடி இருந்தே இருக்கு. சரியா சொல்ல வேண்டுமென்றால் அப்பா இறந்த மறுவருஷம் வீட்டின் பண்டம் பாத்திரம் எல்லாமும் அரிசியான பிறவு இனி அம்மா ஒன்றே ஒன்று என வைத்திருந்த குண்டுமணி தங்கமும் மு.சொ.குட்டியப்பன் நகை கடைக்குப் போனபோது, அம்மா முறுக்கு சுட்டு கடைக்குக் கொடுத்தனுப்பினாள். வெளிநாட்டில் இருந்து அப்பா ரொட்டி வாங்கிட்டு வந்த தகர டின்கள் அவை. பளீர் வெள்ளையில இருக்கும் தேன்குழல் முறுக்குகளைக் கொண்டு போயிக் கொடுத்துட்டு திரும்பும் போது மண்டைய பொளக்குற வெயில். சிகப்பி அக்கா வீட்டுக் கொய்யா மரத்து நிழலுல நின்ற போது சிகப்பி அக்காவின் வீட்டுக்காரர் சொக்கு அய்த்தான் ‘என்ன இங்க நிக்குற’ என தன் முகப்பில் இருந்து குரல் கொடுத்தார். அம்மா கடைக்கு போயிட்டு வரச்சொன்ன விவரத்தைக் கேட்டுட்டு ‘சரி இந்த வெயிலுல தான் போவணுமா, உள்ள வா. கம்மாய் தண்ணீர் குடிச்சுட்டு போலாம்.’ அய்த்தான் எப்போ பார்த்தாலும் இரண்டு வார்த்தை பேசாம விடமாட்டாரு. அப்பப்போ மிட்டாய் கூட குடுப்பாரு. உள்ள போயி இரண்டு நிமிஷம் தான். இரண்டு தகர டின்களையும் கால்களில் இடற பற்றிக்கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து கண்ணீரோடு கிள்ளியதால் சிவந்த தோலின் தடங்களைக் காட்டி அம்மாவிடம் அழுத போது தொடங்கிய இளைப்பு இது. இத்தனை வருசமாகியும் இன்னும் விட்டபாடில்லை. அலமேலு வளர வளர இளைப்பும் தேம்பலும் வளர்ந்து கொண்டே தான் வந்தது.

செந்திலோட அழைப்பு செல்பேசியை அதிரச் செய்தது. செந்தில் கிட்ட பேசி எத்தனை நாளாகிடுச்சு. இந்திரா அவனுக்கும் கூப்பிட்டு சொல்லி இருப்பாள். இல்லைனா இந்த வேளையில் அவன் கூப்பிடவே மாட்டான். ‘மாமி, இந்திரா கூப்பிட்டாளா உங்களை. அங்க அவன் பெரிய பிரச்சனையா பண்ணிட்டு இருக்கானாம். யாரும் இல்லாத பிள்ளைன்னு நினைச்சுடானா. நம்ம பிள்ளை தான் மாமி நமக்கு முக்கியம். போய் நாலு தட்டு தட்டுனா தான் சரிப்பட்டு வரும் போல’

‘இன்னிக்கு நேத்தாடா இது நடந்துட்டு இருக்கு. அவள கட்டிக் கொடுத்த முதல் வருசத்துல இருந்து இப்படி அம்மாவாசைக்கொரு தரம் பெளர்ணமிக்கொரு தரம் அவனுக்கு கிறுக்கு பிடிச்சு இப்படி எதாவது பண்ணிட்டே தானே இருக்கான். விடுடா அவ சமாளிக்கட்டும்’

‘என்ன மாமி, நீங்களே இப்படி பேசுறீக. நீங்க கேக்க மாட்டீக. நான் அப்பா கிட்ட பேசிட்டு நேர்ல போயி பார்த்துட்டு வரேன்.’

டப்பென்று அலைபேசி நின்று போனது. துடியான பையன். கூடப் பிறந்தவன் கூட இப்படி பார்த்துக்க மாட்டான். அவன விட நான்கு வருஷம் பெரியவ இந்திரா.

‘பொழுது சாய்ஞ்சுட்டு வர்றது கோழிகளை அடைக்கணும்’ என்கிற உணர்வு வந்தவளாக பின்கட்டில் நுழைந்தாள். பாத்திரம் கழுவுன நீர் தாரையாக வடிந்து செல்லும் ஈரமான மண்ணைக் தாய்க்கோழி கிளறியது. அதனோட எட்டு குஞ்சுகளும் கிவ்…கிவ்வென்று தாயின் காலுக்கும் கிளறும் மண்ணுக்கும் இடையே சுற்றிச்சுற்றி வந்துட்டு இருந்தது. இது முறைப்பான கோழி. தன்னுடைய குஞ்சுகளைக் கொத்த வருகிற காக்கையைக் கூட மதில் உயரத்திற்கு எட்டிப் பறந்து கொத்தி விரட்டி விட்டுரும். அது கூடவே சேர்ந்து வளர்ந்த சேவலைக் கூட நெருங்க விடாது. குஞ்சுகள் கொஞ்சகொஞ்சாம வளர்ந்துட்டு வருதுக. இன்னும் நாள் போனா குஞ்சுகள தனியா பிரிச்சு விட்டுரும். அப்புறம் அதுக அதோட வாழ்க்கைய சுமந்துட்டு சுத்த வேண்டியது தான். குழம்பானாலும் சரி. கொள்ளை போனாலும் சரி.

மனிதர்களினால் அப்படி இருக்க முடிறது இல்லை. பொண்ணா பிறந்து மக்களைப் பெத்துட்டா கடைசி வரைக்கும் மனசுல சுமந்துட்டே தான் வாழ வேண்டியது இருக்கு. இயல்புக்கு வந்தவளாக நீர் கழிக்க வேப்ப மரத்துக்கு பின்புறம் சென்றாள். சரேலென்று நீளமா எதுவோ ஓடியது. காட்டுத்தனமா வளர்ந்த புதர்களைச் சபித்துக் கொண்டே கொடிகளை விலக்கினாள். பின்புறம் நாமம் இட்ட நல்லபாம்பு ஒன்று ஓடியது. வம்ப நாராயணா என வாய்க்குள்ளேயே இரண்டு மூன்று முறை முணுமுணுத்து விட்டு வீட்டின் முகப்பை அடைந்தாள்.

‘ஆச்சி’ என்றவாறே பூக்கார இலட்சுமி வாயெல்லாம் வெத்திலைக் கறை மின்னக் கூடையோடு வாசலில் நின்றாள். ‘வாடீ, உள்ளே’ திண்ணையில் அலமேலு அமரவும் இலட்சுமி படிகளில் அமர்ந்து கொண்டாள். ‘என்ன ஆச்சி நினைப்பு இங்க இல்ல போலயே’

‘எல்லாம் நான் பெத்த மகளை சுத்தி தாண்டீ. நீயும் ஒரு மக பெத்து வச்சுருக்கியே. பார்த்துடி. பொம்பள பிள்ளைய வளர்த்து கட்டிக் கொடுக்குறது மட்டுமில்ல. பெத்தவ உசிரோட இருக்குற வரைக்கும் சுமக்கணும். லேசுப்பட்ட காரியமா. என்ன பெத்தவரு கட்டுனவரு எல்லாம் சுளுவா கண்ண மூடிட்டாங்க. நான் தானே கிடந்து தவிக்குறேன்’

‘திரும்பி மாப்பள தண்ணீய போட்டுட்டு தகறாறு பண்ணுனாராக்கும்’

‘அவ பூ மாதிரி டி’ ஆச்சி வேற ஏதோ பேச ஆரம்பிக்கிறத உணர்ந்த போது கிளம்பிவிட எத்தனித்தாள் லட்சுமி. ‘நீங்க பழைய கதைய ஆரம்பிச்சுடுவீக. அப்புறம் கட்டுன பூவெல்லாம் நான் எங்க போடுறது.’ என்றவாறே எழுந்து சென்றாள்.

‘டீ குடிச்சுட்டு போலாம், இருடி’

‘வரேன் ஆச்சி’ என தெரு முக்கில் இருந்து சத்தம் கொடுத்துட்டு லட்சுமி சென்றுவிட்டாள்.

பொழுது கவிழ்ந்து இருட்டு வந்தது. சின்ன பிள்ளைல இருந்தே இந்திராவுக்கு இருட்டுனா பயம். இருட்டுல அதைக் காட்டி சோறு ஊட்டிரலாம். பகல்ல கிணற்றுநீர் மேல படிந்துக் கிடக்கிற இருட்டைப் பூச்சாண்டி என சொல்லி சோறு ஊட்டியது இந்திரா வளர்ந்த பிறகும் பயம் விட்டுப்போகலை. அவரு எதை வச்சு இந்திரான்னு பேரு வச்சாரோ. அவருக்கே வெளிச்சம்.

இந்திரா அவ்வளவு பாசக்காரி. எதுனா ஒன்னுனா துடிச்சுப் போவா. அம்மா பார்த்த வேலையையே தானும் பார்ப்போம்னு அலமேலு அவரு இறக்குறதுக்கு முன்னாடி வரைக்கு யோசிச்சதுக் கூட கிடையாது. குளிர்பருவக் காலத்தில் தான் அப்பாவும் இறந்தது. தன்னையும் தம்பியையும் வச்சுக்கிட்டு தனியா அம்மா நின்ன மாதிரியே இந்திராவைத் தூக்கிகிட்டு தானும் நின்றாள். முறுக்கு சுட்டே இந்திராவை வளர்த்து கல்லூரி வரைக்கும் படிக்க வச்சு குணமான மாப்பிள்ளையா பார்த்து கட்டிவச்சா. ஆமா குணமான மாப்பிள்ளை தான். இதே இந்திரா தான் போன மாதம் அவ்வளவு மகிழ்ச்சியோடு பேசுனது. ஒன்ன்னாவது படிக்கிற பேரனுடைய முகம் நினைவில் எட்டி பார்த்தது. அப்பாவைப் பார்த்த மாதிரி இருக்கும் அலமேலுவுக்கு.

கூடவே வச்சு பார்த்துக்குறதுக்கும் ஒரு கொடுப்பினை இருக்கணும் போல. யாருக்கு எது ஒட்டுமோ அதுதான் ஒட்டும். அவளே கிணத்துல நீந்தி மேலேறி வரட்டும் அவ அம்மாவைப் போல. ஆயாவைப் போல. இளைப்பு மீண்டும் ஆரம்பித்த போது, வெளியே பனியும் இருளும் கிணற்றில் அமைதியாக படர்ந்து கொண்டிருந்தது. கிணறு தனக்குள்ளே கொண்டிருந்த வெம்மையை இறுக்க அணைத்தவாறே உறங்கச் சென்றது.

***

பிரபாகரன் சண்முகநாதன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular