Friday, April 19, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ம்யூட் செய்யப்பட்ட கலைப் பேச்சு - (யாளி பேசுகிறது)

ம்யூட் செய்யப்பட்ட கலைப் பேச்சு – (யாளி பேசுகிறது)

ஜீவ கரிகாலன்

டை அடைத்தவுடன். விமானத்திலிருந்து கீழே குதித்த மகர யாளியின் குண்டலமொன்று தரையில் பட்டுத் தெறிக்க, நானும் யாளியும் அது எங்கே உருண்டோடியது எனத் தேடிக் கொண்டே பேச ஆரம்பித்தோம்…

அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற விஜய் பிச்சுமணியின் ஓவியக் காட்சிக்கு சென்று வந்தவுடன் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கையில் நிறையவே மனத்தடைகள் இருந்தன. ஒரு படைப்பைப் பற்றி நாம் என்ன புரிந்துகொண்டோம் என்கிற புரிதல் எப்படிக் கட்டுரை ஆகும். அது ஒரு போதாமையெனத் தெரிந்தது. அப்படியே ஒரு திரைப்படம், இலக்கியம் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றிலும் அயற்சி. அரசியல், கோட்பாடு, மரபு என்று படைப்புகளை ஆய்வதற்குத் தேவைப்படும் எல்லா ஆடிகளையும் விட நிஜக் கண்கள் என்று எது எனத் தேடிப்பார்க்க முயன்றேன். கண்களில் வைத்திருக்கும் காண்டெக்ட் லென்ஸ் வரை நீக்கப்பட வேண்டும்.

காண்டெக்ட் லென்ஸ் என்று சொல்லப்படும் கண்ணுக்குள் பொருத்தப்படும் ஆடியாக ரசனையைச் சொல்லலாம்.

எனக்காக எழுதிச்சென்ற என் பாட்டனின் குகை ஓவியம் முதலில் என்னவாக இருக்கும் என்பது மட்டும் தான் அசலானதாக இருக்க முடியும்.

செய்தி?

தொடர்பு?

எச்சரிக்கை?

வியாக்யானம்?

வழிகாட்டுதல்?

ஏன் எல்லாமும் தான்..

இந்த விசாரனை கூட நாளை அபத்தமாகப் போகக் கூடும்.

விஜய் பிச்சுமணியைத் தேடிச் செல்ல காரணமாய் இருந்தது, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் காட்சிப்படுத்தியிருந்த பத்து அடி நீளமுள்ள வுட்கட் யானை. யானை எப்படியான பிரம்மாண்டமான உயிரியோ அதேபோன்ற ஒரு பிரம்மாண்ட பதிப்போவியத்தை உருவாக்கியிருந்தார். அடுத்தடுத்த வருடங்களில் ஒரு மழைச்சொட்டும், பூவிதழும் யானையைப் போலாகின்றன. அவர் உள்ளே செல்லச் செல்ல விரிகிற பிரம்மாண்டம், யானை காலில் மிதிப்பட்டுக் கிடக்கிற பிரம்மாண்டம் பூக்களின் உள்ளேயும் இருக்கிறது என்றால்…. ?

ஸாந்தல் ஜுமெலெ என்கிற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். அவர் ஒரு ஓவியரும், ஆய்வாளரும், பயணியும் கூட.. இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியப் பயணத்தில் வாசல்களில் போடப்படும் புள்ளிக் கோலங்களால் மிகவும் ஈர்க்கப்பட்டு தன் ஆய்வுகளையும் படைப்புகளை அதைச் சுற்றியே வைத்துக் கொண்டார். அவர் புள்ளிக் கோலங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார், அது எவ்வாறான பரிமாணங்களையெல்லாம் தட்டையாக்கி காட்டுகின்றன என்று புரிந்து கொள்ள முயன்றார்.

பாதங்களை வரையும் கோலங்களின் பரிணாமம் குறித்துப் பேசுகிறார். அந்த கோடுகளைக் கொண்டே சங்க இலக்கிய, வேத கால சித்திரங்களை புதுவிதமான நவீன மொழியில் தொன்மங்களை வரைந்து பார்க்கிறார். இதுவும் உள்ளே பயணிப்பதும், வெளியே நின்று பார்ப்பதுமாக இருவேறு அனுபவங்களைத் தருகின்றன.

 “பூஜை செய்யும் அறையில் திங்கள், செவ்வாய், புதன் என ஒவ்வொரு கிழமைக்கும் (அல்லது கிரஹத்திற்கும்) ஒரு கோலம் என்று போடுவார்கள், அது எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரி இருக்கும்” என்று நினைவை மீட்டிச் சொல்லும் அம்மா காகிதத்தில் வரைந்து காண்பிக்கையில் ஒன்றிரண்டு கோலங்கள் தவறாக இருக்கலாம், இதனால் கிழமையோ கிரகங்களோ மாறியிருக்கலாம் என்று ஒரு எமோட்டிக்கான் கோலத்தை வரைந்துக் காட்டியுள்ளேன்.

அப்போ இது என்னவென்று உணர்ந்து கோலம் போட்ட மூதாதையோ, சூனியக்காரியோ, கலைஞரோ அவர் போட்ட கோடுகள் உள்ளிருந்த ஒன்றின் அல்லது தன்னைச் சுற்றிலுமிருந்த ஒன்றின் காண முடிந்த தட்டை வடிவம் என்று சொல்லலாமா? புரிதல் என்பது இத்தனை லேசானதா?

அப்படியானால்

கலை என்பது ஆடையா? அப்போ அதன் நிர்வாணம் என்ன?

ஒரு கிராமத்தையே நிர்மூலம் ஆக்கிய ஓஹி புயலின் மழைச் சொட்டை மூன்றடிக்கும் நான்கடிக்குமாய் மரத்தில் செதுக்கி விஜய் பிச்சுமணி பிரம்மாண்டப்படுத்தியது தான் மிக இயல்பான ஒன்றா? அல்லது இருபது அடி இருக்கும் சுவர் தான் இவன் யானையை லில்லிப்புட் ஆக்காமல் பார்த்துக்கொண்ட பரிணாமமா?

என்ன புலம்பல் இது?

ஒரு கையடக்க மினியேச்சர் ஓவியத்தில் மஹாபாரதத்தின் அர்ஜுனரின் அஸ்வமேத யாகம் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததை ஒப்பிட்டால் மேலே சொன்னது தவிடுபொடி ஆகாதா?. கங்கை (ஏதோ ஒரு நதி) நதிக்கரையில் நிற்கும் அர்ஜூனனின் பின்னே பலவிதமான சேனைகள் அணிவகுத்து நிற்கும் பிரம்மாண்டம் இதைவிடப் பெரியது தானே.

ஐந்து நட்சத்திர விடுதிகளில் சுவர்களோ, பகட்டான கேலரிகளின், மால்களின் சுவரோ, காகிதமோ, சிமெண்ட் தரையோ, இடிந்த வீட்டுச் சுவரோ ஒரு அசலான படைப்பு அதில் வெளிப்படுவதும் அதைத் தாண்டியும், நம்மைத் தொடர்பில் வைத்துமே உருவாகிறது. சிலருக்கு தொடர்பு மட்டும் புரியும், சிலருக்கு வடிவம் மட்டுமே தெரியும், சிலருக்கு ஆனந்தம் மட்டுமே கிடைக்கும், சிலருக்கு பிரதியெடுத்துப் பார்க்கத் தோன்றும், சிலருக்கு கொள்ளையடிக்கத் தோன்றும், சிலருக்கு விற்கத்தெரியும், சிலருக்கு அதனைச் சொல்லி தன்னை விற்கத் தெரியும்.

பஞ்சம் பிழைக்கவோ அல்லது பிழைக்க யாருமேயில்லாத ஒரு வீட்டின் கதவைப் பெயர்த்து வார்னிஷ் செய்து மீட்டிருவாக்கம் செய்து மற்றொரு வீட்டிற்கும் விற்கலாம் அதுவும் ஒரு கலை தான். தன் வாழ்நாளில் உழைக்காத நாட்களை நினைவில் கொள்ளாத எண்ணற்ற கிராமத்து மாந்தர்களுக்கு மத்தியில் பிறந்த ஒரு கலைஞனுக்கு அந்த கதவுக்குள் தெரியும் பிரம்மாண்ட பாதங்களில் அந்த ஊரின் ஒட்டுமொத்த உழைப்பிற்கும் கொடுத்த வெடிப்புகளின் texture-ஐ வெளிப்படுத்தத் தெரிந்திருக்கிறது. அவர் அந்த ரப்பர் தோட்டத்து உழைப்பாளிகளின் வெடிப்புகள் என்று சொல்லாவிட்டால் அது மார்க்ஸியத்தின் குரலோடு இருக்கும், அது அப்போதும் ஐந்து நட்சத்திர விடுதியில் சில லட்சங்கள் கொடுத்து வாங்கப்பட்ட பெருமையோடு இருக்கும்.

சரி விஜய் பிச்சுமணியை விடு. வேறு ஒன்றைப் பேசுவோம். எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்ளும் கலையை, இதுவென மட்டும் நிறுவிக் காண்பிப்பது எத்தனைப் பெரிய துரோகம். அதையும் சிலர் துணிந்து செய்கிறார்கள். ஒரு உலகத்திற்கான கலை ஒன்றை செய்ய விரும்பும் கலைஞன், அதற்கு சம்பந்தமேயில்லாத ஒரு குறியீட்டை உருவாக்கி நிறுவி, தான் செய்ய வேண்டிய ஒன்றிற்கு எதிராகவே காட்சிப்படுத்துகிறான் என்பதை நினைக்கையில், கலைப் பார்வை எனும் புலனற்று வாழ்வது மேலானதோ எனத் தோன்றுகிறது.

எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. அதான் அண்ணாத்தே படத்தை இருமுறைப் பார்த்தேன்..

பரவாயில்லை உத்தமம்

மேலும் அது ஸாண்ட் ப்ளாஸ்ட் செய்யப்பட்டு, எந்த டெண்டிஸ்ட்களாலும் காப்பாற்ற அல்லது மீட்டுருவாக்கம் செய்ய முடியாத மொக்கையானப் பற்களைக் கொண்ட யாளிகளைப் போல, சார்புகளால் கூரற்றுப் போன கலையுலகம் மீட்கப்படாத டெரகோட்டாவாகப் புதைந்து கிடக்கிறது.

கி.பி என்று சொல்லதே.. கி.மு என்று சொல்என்கிற அகழ்வாய்வுப் பேச்சிற்கு தொடர்பேயற்ற குண்டும் குழியுமான மெட்ரோ நகரத் தார்ச்சாலை நாகரிகத்தில் கலை இப்படித் தான் போஷிக்கப்படும் என்கிற எரிச்சலோடு விடைபெற்ற யாளி, அபான வாயு முத்திரைக் காட்டிவிட்டு அர்த்த மண்டபத்தினுள் நுழைந்தது.

கீழே தட்டுப்பட்ட மகர குண்டலத்தை அணிச்சையாய் கோயில் உண்டியலில் போட்டுவிட்டு என் தலையிலேயே தட்டிக்கொண்டேன்.

(தொடரும்…)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular