சுஷில் குமார்
மதியம் ஒரு மணிக்கு அந்த கட்டிடத்திற்குள் சென்றவன் இரவு 9 மணியாகியும் வெளியேற முடியாமல் அதன் கண்ணாடிப் பிரதிபலிப்பிற்குள் வந்து போய்க்கொண்டிருக்கும் உருவங்களைப் பார்த்து சலித்துப் போயிருந்தேன். முழுக்கை சட்டையும் ஷூவும் சாக்ஸும் புதிதாகக் கட்டிப் பழகியிருந்த டையும் மொத்தமாகச் சேர்ந்து என்னை இறுக்கிக் கொண்டிருந்தன. அவசரத்தில் சாப்பிடாமல் வேறு வந்துவிட்டேன், அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பதினைந்தாவது அடுக்கிலிருந்த ஒரு சர்வதேச உணவகத்தில் இருந்த பெரும்பாலான பதார்த்தங்களை நான் அப்போது தான் முதல் முறையாகப் பார்த்தேன். அடுத்த சுற்று நேர்முகத் தேர்விற்கு வயிறு இடைஞ்சலாக இருந்துவிடக் கூடாதென வெறும் முட்டை பப்ஸும் எலுமிச்சை ஜூஸும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அடுத்த இரண்டு சுற்றுகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டேன்.
உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அயல் நாட்டுக்காரனோடு அவன் மொழியில் பேசி அவனுக்குத் தேவையான சேவையைச் செய்வதற்கு என் நாட்டைச் சார்ந்த ஒருவனே என்னைப் போட்டு என்ன பாடுபடுத்தி விட்டான். என்னவெல்லாம் கேள்வி கேட்கிறான்? அடுத்து ஓர் அயல் நாட்டுக்காரனோடு தொலைபேசியில் உரையாட வேண்டும். அவனது மொழியை அவன் நாட்டு உச்சரிப்பில் சரியாகப் பேசுகிறேனா எனப் பரிசோதிக்கும் சுற்று. அதை சரியாகச் செய்துவிடலாமென நம்பிக்கையாகத்தான் இருந்தேன். மரத்தாலும் கண்ணாடியாலுமான அந்தச் சிறிய குளிர்பதன அறையில் நானும் ஒரு தொலைபேசியும் மட்டும் இருந்து ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சற்று நேரத்தில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பு வருவதற்குள் என்னவெல்லாமோ மனதில் வந்துசென்று விட்டது. பத்தாம் வகுப்பு விடுமுறையில் பம்பாய் அத்தை வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்தேன். ஒருநாள் அத்தைப் பெண்ணின் பிறந்தநாள் விருந்திற்கு மொத்த நகரத்தின் பெரிய பெரிய குடும்பங்களும் வந்திருந்தன. அவர்கள் பேசிக்கொண்ட இரண்டு மூன்று மொழிகளில் எதுவும் எனக்குத் தெரியாததால் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மொத்தக் கூட்டத்திலும் என் நெற்றியில் மட்டும்தான் திருநீறு இருந்தது. என் கையில் மட்டும்தான் ஒரு சிவப்புக்கயிறு கட்டப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமொன்றில் பிறந்து கூரை ஓடுகளின் வழியே வந்த சூரிய ஒளியில் அறிவியல் படித்து பத்தாம் வகுப்பு வரை வந்ததே பெரிய சாதனை. இதில் ஆங்கிலமெல்லாம் பேசுவது வாழ்நாளில் நடக்கிற காரியமேயில்லை. அங்கே சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் இந்தியும், ஆங்கிலமும் இன்னும் என்னென்ன மொழிகளும் தெரிந்து வைத்திருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் நான்கைந்து சிறுமிகள் என்னைச் சூழ்ந்துகொண்டு ஏதோ விளையாட்டுப் பொருளைப் பார்ப்பதைப் போல நின்றார்கள். அவர்கள் என்னிடம் என்னென்னவோ கேட்டார்கள். அதில், பல கேள்விகள் எனக்குப் புரிந்தன, பதிலும் தெரிந்திருந்தது, ஆனால், வாயைத் திறக்கக்கூட முடியாமல் அங்குமிங்கும் பார்த்து நின்றேன்.
சரியாக என் அத்தைப் பெண் என்னருகே வரும்நேரத்தில் ஒரு சிறுமி என்னிடம் கேட்டாள், “வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்? ஒய் ஆர் யு நாட் டாக்கிங் எனிதிங்?”
நான் சிரிக்க முயன்று முடியாமல், தலையை இல்லையென ஆட்டி, “யெஸ்…நோ…நோ..” என்றேன். என் அத்தைப் பெண் என்னருகே வந்து நின்று என் கையைக் கிள்ளினாள்.
அந்த சிறுமி தொடர்ந்து, “வாட்? வாட் டு யு திங்க் யு ஆர்?” என்று கேட்டாள். எனக்கு அவள் கேட்டது சுத்தமாகப் புரியவில்லை. ஒவ்வொரு வார்த்தையாக மனதில் ஓட்டிப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சிப்பதற்குள் சுற்றி நின்ற அத்தனை சிறுமிகளும் எனைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். எனக்கு வெப்ராளம் பொத்துக் கொண்டு வந்தது. எரிச்சலும், கோபமும் சேர்ந்து ஒன்றும் செய்ய முடியாமல் கண்கலங்கி நின்றபோது என் அத்தைப்பெண்ணும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்து ஓடிவிட காலெடுத்து வைத்தவனைப் பிடித்த அவள், “டேய், ஒன்னுமில்லடா. நீ ஒன்ன யாருன்னு நெனச்சிட்ருக்கன்னு கேக்குறா, அவ்ளோதான்.” என்றாள்.
நான் கலங்கிய குரலில், “சரவணன்.. ஐ.. சரவணன்..” என்று சொல்லிவிட்டு வீட்டின் பின்புறம் சென்றுவிட்டேன். அப்படியே கழிப்பறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டு இருந்த நிமிடங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. அவமானம், இயலாமை, ஏதாவது செய்து அந்த அவமானத்தை மாற்றிவிட வேண்டும் என்கிற கர்வம். அன்று ஆரம்பித்த ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான பிரயத்தனம் என் இளநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. ஓரளவிற்கு என்றில்லாமல் நன்றாகவே ஆங்கிலம் பேச, எழுதக் கற்றுக்கொண்டேன். பிறகு சிலமாதங்கள் வேலைக்கான நேர்காணல் நிமித்தமாக அந்த மொழியை இங்கிலாந்துக்காரன் மாதிரியும் அமெரிக்காக்காரன் மாதிரியும் பேசவும் பயிற்சியெடுத்து தேறினேன்.
ஆனால், அன்று அந்த சிறிய அறையில் அந்த தொலைபேசி அடித்த போது எனக்காகக் காத்திருந்த குரல் என் சுயமரியாதையை சுக்குநூறாக நொறுக்கித் தூக்கியெறிந்து விட்டது. முதல் முப்பது நொடிகளுக்கு அவர் கேட்ட எதுவும் என் காதில் விழாமல், ‘பார்டன் மீ, பார்டன் மீ’ என்று சொன்னேன். பிறகு, ஒருவாறாக அந்த உச்சரிப்பு தெளிவாகி வர, என்னைப் பற்றிய அறிமுகம், என் பலம், பலவீனம், அந்த நிறுவனத்தைப் பற்றிய எனது தகவல் சேகரிப்பு, மற்றும் சில விசயங்களை என்னால் முடிந்த அளவு வேகமாக அமெரிக்க பாணியில் சொல்லி முடித்தேன். அடுத்து அவர் கேட்ட கேள்விக்கு நான் விரிவாக பதில் சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட தருணத்தில், “ஸ்டாப், ஸ்டாப்..” என்றார்.
எதற்கு நிறுத்தச் சொல்கிறார் என்று நான் குழம்பி விடை ஏதும் கண்டுபிடிப்பதற்குள், “சர்வன், குட் யு ப்ளீஸ் ரிப்பீட் வாட் யு செட் ஜஸ்ட் நவ்?” என்று கேட்டார்.
நான் சொன்ன முந்தைய வாக்கியத்தை அப்படியே திரும்பவும் சொன்னேன். சட்டெனச் சிரித்தவர், அடுத்து கிட்டத்தட்ட ஒரு பத்து முறையாவது என்னை அந்த வாக்கியத்தைச் சொல்ல வைத்தார். அதற்கு முன் ஏறி இறங்கிய அத்தனை நிறுவன நிர்வாகிகளின் ஏளனச் சிரிப்புகளும் ஒட்டுமொத்தமாக என்முன் பேருருக்கொண்டு எழுந்து நின்று என்னைப் பார்த்து கைகொட்டிச் சிரித்ததைப் போல இருந்தது.
கடைசியில் என்னவென்று புரியாமல் ஏன் என்னைத் திரும்பத் திரும்ப அந்த வாக்கியத்தைச் சொல்ல வைத்தார் என அவரிடமே கேட்டு விட்டேன். அதற்கு அவர் தொலைபேசியை வைத்துவிட்டு பக்கத்து அறைக்கு வருமாறு என்னை அழைத்தார்.
வியர்த்துப் போய் பக்கத்து அறைக்குள் அனுமதி வாங்கி நான் நுழைந்த போது என்னை பாடாய்ப்படுத்திய அந்த அமெரிக்கக் குரல் அங்கு ஒரு நாற்காலியில் ஒரு வட இந்தியராக உட்கார்ந்து சுற்றிக்கொண்டிருந்தது.
“சர்வன், வாங்க, ஒட்கார்ங்க.” என்றார் அந்த நிர்வாகி.
“தேன்க் யு.” என்றவாறு பதட்டத்தோடு உட்கார்ந்தேன்.
“லுக், நாம் விசயட்ட உங்க கித்த சொல்லறான்.” என்றார்.
என்ன சொல்லப் போகிறார் என்கிற பதட்டம், பசி, வியர்வை எல்லாம் சேர்ந்து அன்று இரவே இரயிலேறிவிட வேண்டும் என்று தோன்றியது.
“இப்ப, நாம் டமில்ல பேசறான். நீங்க புரியுது? இல்ல, இர்ரிடேட் ஆகுது?” என்று என்னைப் பார்த்து புன்னகைத்தார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
ஓர் அமெரிக்கனிடம் பேசுகிறபோது அச்சு அசலாக அமெரிக்கனைப் போலவே பேசவேண்டும். ஒரு வார்த்தை தவறாக உச்சரித்தாலே போதும், அந்த நிறுவனத்தின் வியாபாரத்தில் சில நூறு டாலர்கள் காணாமல் போய்விடும். அதுவுமில்லாமல், இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்காவின் ஏதோ ஒரு நகரத்தில் இருப்பதாகச் சொல்லி வியாபாரம் செய்ய வேண்டும். இதில் சிறிது பிசகானாலும் நிறுவனத்திற்கு பெரும் சிக்கலாகி விடும். இதற்காகவே வேலையில் எடுத்த பிறகும் கூட சிலருக்கு தொடர்ந்து உச்சரிப்புப் பயிற்சி வழங்கப்படும். ஆனால், அந்த நிலைக்கு தகுதி பெறுவதற்கே ஆறு சுற்று நேர்காணல்கள்.
“அஸோசியேய்ஷ்ன்…” என்றார். “கம் ஆன், ரிப்பீட்..”
நானும் அதையே சொன்னேன். மேலும் சிலமுறை அதே வார்த்தையை உச்சரிக்க வைத்தார்.
“அசோசியேசன் இல்ல சர்வன், அஸோசியேய்ஷ்ன்.. ட்ரை… ட்ரை..”
“அசோசியேஷன்..”
சிறிது இடைவெளி விட்டு, என்னைப் பற்றியும் என் பின்புலத்தைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். ஒரு காகிதத்தில் ஏதோ குறித்துக்கொண்டார்.
சரியாக இரவு பத்து மணிக்கு ஓர் இளம்பெண் வெளியே வந்து தேர்வு செய்யப்பட்டால் அழைப்பதாகச் சொல்லி என்னைக் கிளம்பலாம் என்றார். எத்தனை இடங்களிலெல்லாமோ இதே பதிலைக் கேட்டிருந்ததால் எனக்கு முடிவு தெளிவாகிவிட்டது.
அடுத்த மாதம் பிறந்தால் சென்னைக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிடும். கன்னியாகுமரியில் இரவும் பகலுமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறை பிடித்துக் கொடுத்து கிடைக்கும் வருமானத்தில் எனக்கு மட்டும் சில ஆயிரங்களை அனுப்பி வைக்கும் அப்பாவை இன்னும் எத்தனை நாட்களுக்குக் கஷ்டப்படுத்த முடியும், வயது வேறு ஏறிக்கொண்டே இருந்தது, படித்த படிப்பிற்கு வேலைக்கு ஏறவில்லை என்கிற கவலையோடு உடன் படித்தவர்கள் சிலர் அமெரிக்காவிலும், துபாயிலும் நல்ல வசதியாக இருப்பது வேறு அம்மாவை சங்கடப்படுத்தியது. இரக்கமற்ற அந்த நீலநிற சென்னை பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு கசங்கிப்போய் இன்னும் எத்தனை நிறுவனங்களுக்கு ஏறி இறங்குவது? ஒருமுறை கிட்டத்தட்ட சாலையைத் உரசிக்கொண்டு போய் கீழே விழுந்திருக்க வேண்டியது. எதற்கு இந்தப்பாடு? பேசாமல் மனதைத் தேற்றிக்கொண்டு ஊருக்குக் கிளம்பி விடலாம், ஏதாவது கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்தவாறு ஒரு பேருந்தில் ஏறினேன்.
நடத்துனரிடம் சீட்டு வாங்கி விட்டு அவரது இருக்கைக்கு முன்னால் காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். சன்னலருகே முகத்தை வைத்து சிறிது காற்று வாங்கி, பின் என் பையிலிருந்த சிவப்புநிறத் தொப்பியை எடுத்து தலையில் வைத்து கண் மறையும் அளவிற்கு இழுத்துவிட்டு இருக்கையின் பின்கம்பியில் தலையை சாய்த்தேன். பல நிறுத்தங்களில் பலர் ஏறி இறங்கினர். என் மனது முழுதும் வெற்றிடமானதைப் போல இருந்தது. பின், சில பாடல்கள் வந்து போயின.
“அட, நீங்கதானா இன்னிக்கி? எப்படி இருக்கீங்க சங்கர் அண்ணே?” என்றொரு கரகரப்பான குரல் வளையோசையோடு கேட்க, “வாம்மா மகராசி, என்ன, ரொம்ப நாளா ஒன்ன பாக்கவே முடியல்லயே?” என்றார் நடத்துனர்.
“நா என்னண்ணே புதுசா சொல்லப் போறேன்? அதே பொழப்புதான். கொஞ்ச நாள் டேசன்ல, அப்புறம் கொஞ்சம் ஒடம்பு சரில்லாம ஆயிடுச்சு. ஒரே இழுப்பா இருக்கு. இப்ப ரெண்டு மூனு நாளாதான் வெளியவே வாறேன்.”
“அப்டியா? என்னத்தச் சொல்ல? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சின. அதுசரி, இப்ப எங்க, மெரினாக்கு தான? போலீஸ் தொந்தரவு இருக்குமே அங்க?”
பேச்சு நாட்டு நடப்பு, குடும்பம், கடவுள் என்று போய் கடைசியில் வண்டியில் நாங்கள் மூவரும் ஓட்டுனரும் மட்டுமிருந்தபோது கொஞ்சலாக மாறியது. இரட்டை அர்த்த வார்த்தைகளில் அவர் நடத்துனரைச் சீண்ட, அவர் செல்லமாகக் கோவிபித்துக் கொண்டார். அப்போது நான் தற்செயலாக நீட்டி முறித்து விட்டபோது, அந்தக்கை நீண்டு வந்து என் தொப்பியை எடுத்தது.
சட்டென எழுந்தமர்ந்த நான் எரிச்சலில், “ஹலோ, எதுக்கு இப்ப தொப்பிய எடுத்தீங்க?” என்று கேட்டேன். அப்போது தான் அவரது முகத்தைப் பார்த்தேன். புருவமற்ற மையிடப்பட்ட நீண்ட விழிகள், ஒடுங்கிய மூக்கு, குழி விழுந்த ஒரு பக்கத்துக் கன்னம், என் உயரம், என் எடையில் அப்படியொரு அழகான உருவம். முகத்திலும் கையிலும் சிறுசிறு தழும்புகள் இருந்தன. நிஜ முடியோடு ஒன்றிரண்டு திருப்பங்களைச் சேர்த்து நீண்ட பின்னல் போட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ சூடியிருந்தார்.
“அட கோவப்படாத தம்பி. ஒங்க அக்கா எடுத்தா கோவப்படுவியா நீ?”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எரிச்சலில் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
அவர் மீண்டும் என் தோளைத் தொட்டு, “தம்பி, எந்த ஊரு? அக்காட்ட பேசாம மூஞ்சியத் திருப்புறியே.” என்றார்.
நான் இலேசாகத் திரும்பி, “அதெல்லாம் ஒங்களுக்கு எதுக்கு? என் தொப்பியத் தாங்க மொதல்ல.” என்று கையை நீட்டினேன்.
சட்டென என் கையைப் பிடித்து திருப்பி உள்ளங்கையைப் பார்த்து,
“இரு, இரு, அக்கா ஒனக்கு நல்லது சொல்லுறேன், என்ன?” என்றார்.
ஏனோ, என்னால் என் கையை வெடுக்கென இழுக்க முடியவில்லை.
“தம்பிக்கு கடல் கண்ட ஊரு. காணாத கஷ்டமெல்லாம் கண்டாச்சு, என்ன? ஒத்தைக்கு ஒரு மவனில்ல, கூட ஒன்னு உண்டு. தெரவியம் தேடி வந்து பல மண்டலம் ஆச்சு. வாய்க்கு வந்தாலும் சனியன் ஒன்னுக்கும் ஒதவல்ல. கைக்காசு ஒன்னுமில்ல. கவுரவம் மட்டும் ஏகத்துக்கு உண்டும். அக்கா சொல்லுறத சந்தேகத்தோடு பாக்குது உள்ள உள்ள நரி மனசு. தொட்டா சிணுங்கியா இருந்திருக்க வேண்டியவன். வாடாமல்லியா இங்க வந்து நிக்கிற. இப்ப, திரும்பிப் போற தெசையால்ல தெரியிது.” என்று முடித்து நீண்ட மூச்சு விட்டவாறு என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
எனக்கு உடல் நடுங்கியேவிட்டது. அவரது முகத்தையும் அவர் தலையில் வைத்திருந்த என் தொப்பியையும் ஒருமுறை பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டேன். என் கட்டுப்பாட்டை மீறிக்கொண்டு அழுகை வந்தது.
அவர் வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து என் கையைப் பிடித்துக் கொண்டார். நான் கண்களை இறுக்கமாக மூடி முகத்தை வெளியே திருப்பிக் கொண்டு இருக்க, என் கையில் தாலாட்டு பாடுவதைப் போல ஏதோ பாடி தட்டிக்கொண்டே இருந்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு நான் மெல்லத் திரும்பி அவரது முகத்தைப் பார்த்தேன்.
“தம்பி, ஒன்னுமில்ல தம்பி. எல்லாம் சரி ஆயிரும், நீ வேண்ணா பாரேன். அக்கா சொன்ன சொல் அப்பிடியே பலிக்கும் தெரியுமா? ஆமா, ஒம் பேரென்ன தம்பி?”
மெல்லத் தயக்கம் விலக, “சரவணன்.” என்றேன்.
“அட, எஞ்சாமி பேரா ஒனக்கு? அப்புறமென்ன தம்பி, எல்லாமே யோகம் தான்… சரி ஆகும்… சரி ஆகும்…”
சிறிது நேரம் மெளனமாக ஏதோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பின், என் கை விரல்களைப் பிடித்து சொடுக்கெடுத்து விட்டார்.
திடீரென, “எனக்கும் அதே சாமி பேருதான் தம்பி… முருகன்னு… அம்மா ஆசையா வச்ச பேரு…” என்றார்.
“பசங்கல்லாம் என்னவோ சொல்வாங்களே? ம்ம்… ஆங்… அடிச்சிக்கோ, ஹை ஃபை அடிச்சிக்கோ..” என்று தன் உள்ளங்கையை நீட்டினார். நான் புன்னகைத்து அவர் கையில் அடித்தேன். பிறகு, பயணம் முடியும் வரை தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். என்னென்னவோ கதைகள், என்னென்னவோ கஷ்டங்கள், எவ்வளவோ மனிதர்கள்.
மெரினாவை நெருங்கியபோது சட்டென எழுந்து, “தம்பி, இந்த தொப்பிய அக்கா வச்சிக்கவா?” என்று ஆசையாகக் கேட்டார்.
நான் ஒரு நொடி யோசித்து, சரியெனத் தலையாட்டினேன்.
“டேங்க்ஸ் தம்பி… சரி, ஒன் பர்ஸ எடு, சீக்கிரம்…”
நான் தயங்கித் தயங்கி என் பர்ஸை எடுத்து அவரிடம் நீட்டினேன். அதை வாங்கித் திறந்து பார்த்தவர் அதிலிருந்து ஓர் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்தார். அந்த நாணயத்தை தன் முகத்தின் அருகே வைத்து கண்களை மூடி ஏதோ மந்திரத்தைக் கூறிவிட்டு, என்னிடம் நீட்டினார். “இத பத்திரமா வச்சுக்கோ… அக்காவ மறக்காத தம்பி… நல்லா இரு..” என்று சொல்லிவிட்டு பேருந்திலிருந்து இறங்கினார்.
*
பத்து வருடங்களில் நான் சென்ற உயரங்கள், அடைந்த புகழ், வசதி எல்லாமே சில சமயங்களில் ஒரு பெரும் கனவாகத்தான் தோன்றும். அதிருஷ்டமா, கடும் உழைப்பா என்றெல்லாம் நான் ஒருபோதும் உட்கார்ந்து ஆராய்ந்ததில்லை. ஆனால், எப்போது சிறிது கீழிறங்கினாலும் அக்காவின் முகமும் அவர் சொன்ன சொற்களும் எனக்குள் வந்து நின்று என்னை ஆற்றுப்படுத்தும்.
வேலை தேடும் இளைஞர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் என் சொந்த நிறுவனத்தின் ஐந்தாவது கிளையைத் துவக்கி வைப்பதற்காக இன்று வேலூருக்கு வந்தேன். எல்லாம் நல்லபடியாக அமைந்தது. திரும்பிப் புறப்பட்டபோது நிறுவனத்தின் எதிரே என் மனைவியை காரில் உட்கார வைத்து விட்டு தண்ணீர் வாங்குவதற்காக சிறிது முன்னால் இருந்த கடையை நோக்கி நடந்தேன். அலைபேசியில் வந்த ஏதோ செய்தியைப் பார்த்தவாறு நடந்து கொண்டிருந்தேன்.
“ஏய், இங்கப் பாருடி. இந்த சாரு போட்ருக்க சட்ட செமையா இருக்கு பாரேன்.” என்றவாறு என் முன்னே வந்து கையைத் தட்டி நின்றனர் இருவர்.
அவர்களைக் கண்டுகொள்ளாமல் என் பர்ஸை எடுத்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து பக்கவாட்டில் நீட்டியவாறு விலகினேன்.
“தம்பி, எங்களுக்கு ஒன்னும் ஒங்க பத்து ரூபா வேணாம். ஒரு ஒர்ருவா காயின் குடுங்க. எங்க ஆசிர்வாதம், நல்லா இருப்பீங்க.” என்று சொல்லிவிட்டுச் சிரித்தனர்.
நான் பர்ஸிலிருந்து ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அவர்களிடம் நீட்டினேன். அப்போதுதான் அவர்கள் இருவரின் முகங்களையும் பார்த்தேன். என்னுடல் ஒரு நொடி நடுங்கி விட்டது.
“அட பர்ஸுக்குள்ள வைங்க தம்பி. நானே தொட்டு எடுக்குறேன்.” என்றார் அவர்களில் பெரியவர்.
நான் இலேசாகப் புன்னகைத்தவாறு, ஒரு கணம் யோசித்து நின்றேன். அவர்களுக்குள் ஏதோ இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.
“என்ன சாரு ரொம்ப யோசிக்கிறாரு?” என்றார் இளையவர்.
நான் அந்தப் பெரியவரைப் பார்த்து மீண்டும் புன்னகைத்து என் பர்ஸை அவர்முன் நீட்டினேன்.
அந்த நேரத்தில் யாரிடமிருந்தோ அழைப்பு வர அலைபேசியைப் பார்க்க எடுத்தபோது என் பர்ஸிற்குள் விரலை விட்டு அந்த நாணயத்தை எடுக்க வந்தவர் அப்படியே பர்ஸைப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். அதற்குள் அந்த இளையவர் காணாமல் போயிருந்தார்.
நான் செயலற்று நின்று, “அக்..அக்கா..” என்று அழைத்தேன். அக்காவோடு என் அதிருஷ்ட நாணயமும் மறைந்து போயிற்று.
***
சுஷில் குமார். 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”..
ஆசிரியர் தொடர்புக்கு : sushilkumarbharathi2020@gmail.com