Wednesday, November 29, 2023

மந்திரமாவது

காளீஸ்வரன்

க்கா… அக்கோவ்”

சற்றே தயக்கம் தொனித்தாலும் வலுவாக எழுப்பப்பட்ட குரல் குமரேசனின் தூக்கத்தைக் கலைத்தது. அவிழ்ந்து கிடந்த லுங்கியை சரிப்படுத்திக்கொண்டு, படுத்தவாறே அண்ணாந்து கெடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழு. கிழக்கு பார்த்த தலைவாசல் கொண்ட அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெரிவது பூஜையறை. தலைவாசல் நெலவும் பூஜையறை நெலவும் கிட்டத்தட்ட ஒரே அகலம். வீட்டுக்குள் நுழையும்போதே பூஜையறையும் அதன் மையமாய் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கும் பழனி முருகன் படமும் கூடவே குமரேசனின் குலதெய்வம் படமும் தென்படும். பூஜையறையை ஒட்டியபடி அகன்ற ஆசாரம். எப்போதுமே ஆசாரத்தில் படுப்பதுதான் குமரேசனின் விருப்பம்.

குமரேசன் எழுந்து தூக்கக் கலக்கத்துடன் பார்த்தான். சாமியறை முன்பாக அம்மிணியக்கா நின்று கொண்டிருந்தாள். இடுப்பில் அவளது மகள் வயிற்றுப்பேரன் சோர்வாய்க் கிடந்தான். “அப்பனிருந்தா கொஞ்சம் வரச்சொல்லு தங்கம். புள்ளக்கி ஒடம்பு சொகமில்ல” என்றாள் அம்மணியக்கா. .
“யக்கோ, ஊத்துக்குளிலதா ஆசுபத்திரி இருக்குதுல்ல. அங்க போவேண்டியதுதான. இந்தாளு என்ன டாக்டரா?” எனக் கேட்பதற்கும், குமரேசனின் அப்பா பாலன் வருவதற்கும் சரியாக இருந்தது. பழுப்பேறிய வேட்டி, மேல் துண்டு, சவரம் செய்யப்படாத முகம், எண்ணையோ சீப்போ தலைமுறைக்கும் காணாதது போன்ற தலைமுடி. முந்தைய இரவின் போதை எச்சத்தால் உண்டான லேசான தள்ளாட்டம். அரைகுறையாய் கழுவப்பட்ட முகத்தில் நிரந்தரமாய்க் குடியேறியிருக்கும் அலட்சியத்துடன் அம்மணியக்கா முன்வந்து “என்ன ?” என்பது போலப் பார்த்தார்.

“கொழந்தைக்கி ராத்திரி பூராவும் காச்சலு. மேலு சூடே நிக்கல” கெஞ்சும் தோரணையில் அம்மணியக்கா சொல்ல, இயந்திரகதியில் சாமியறையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த தட்டத்தில் இருந்து கொஞ்சம் திருநீறை வலக்கை சுண்டு விரல் தவிர்த்த நான்கு விரல்களால் கூட்டி எடுத்து தன் மூக்குக்கு நேரே வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு மந்திரங்களை முணுமுணுக்கலானார் பாலன். இப்போது அவர் வாயிலிருந்து வரும் சொற்களை இன்னொரு முறை சொல்வது மற்றவர் எவராலும் முடியாது. ஏன் பாலனாலேயே முடியாத காரியம். அப்போதைக்கு நினைவில் வரும் சொற்களே அவருக்கு மந்திரம். ஓரிரு நிமிடங்கள் முணுமுணுத்தபின், அருள்வந்த பாவனையில் முன்னும் பின்னுமாக லேசாக ஆடிவிட்டு, கொஞ்சம் திருநீறை குழந்தையின் தலையில் போட்டுவிட்டு மீதியை நெற்றியில் பூசிவிட்டார் பாலன். அருகில் கசங்கிக் கிடந்த பழைய பேப்பரைக் கிழித்து கொஞ்சம் திருநீறை மடித்துக் கொடுத்தார். எதிர்ப்பார்ப்புடன் நீட்டப்பட்ட தட்டில் அழுக்கான ஒரு பத்து ரூபாய் தாள் விழுந்தது.

அம்மணியக்கா கிளம்பியதும் பொடக்காலிக்கு வந்து அப்பனை நினைத்தபடி காறித் துப்பிவிட்டு, முகம் கழுவினான் குமரேசன். அரைகுறையாய் சாமி நம்பிக்கை உண்டே தவிர, இந்த மந்திரிப்பது செரகடிப்பது இதிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாதவன். பத்தும் பத்தாததுக்கு பாலனையும் நம்பி சிலர் மந்திரிக்க வருவதே, கொஞ்ச நஞ்சம் ஊசலாடும் நம்பிக்கைக்கு அணைபோடப் போதுமானதாக இருக்கிறது.

அன்று செவ்வாய்க்கிழமை. செவ்வாயும் வியாழனும்தான் உள்ளூர் மக்கள் இந்நேரத்தில் அவ்வீட்டைத் தேடிவருவது வழக்கம். பெரும்பாலான காய்ச்சல், மேல்வலி, வயித்துப்போக்கு நோய்கள் சுகப்பட அவனது அப்பா பாலனிடம் திருநீறு மந்தரித்து போவதற்கென வருவார்கள். அவர் அப்படியொன்றும் மந்திர தந்திரங்கள் அறிந்த வித்தைக்காரரில்லை. மந்திர தந்திரம் மட்டுமில்லை, உருப்படியாக ஒன்னுமே கத்துக்காதவர். அவர் மனைவி பூவாத்தாள் பாஷையில் சொல்வதானால், “அந்த வேள சோறிருந்தா போதும் அடுத்த வேளயப் பத்திக்கூட நெனக்காத சென்மம்”.

அது கிட்டத்தட்ட நூறு வீடுகள் கொண்ட காங்கயம்பாளையம் கிராமம். மூன்று கிலோமீட்டர் தொலைவில் செங்கப்பள்ளியிலும் ஊத்துக்குளியிலும் மருத்துவமனைகள் இருந்தபோதும் பாலனின் பொழப்பு ஓடிக்கொண்டிருக்கக் காரணம், அதுவாகவே சரியாகிவிடும் சில கோளாறுகள், இவர் மந்திரத்தால் சரியானதாக ஏற்பட்ட நம்பிக்கை. கூடவே, பாலனின் அப்பா கந்தசாமியின் பெருமையும்.

*

குமரேசனுக்கு தன் தாத்தாவின் நினைவு வந்தது.

கந்தசாமி இருக்கும்வரை உள்ளூர் மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம், செரகடிக்கவும், திருநீறு மந்தரிக்கவும் ஆட்கள் வருவதுண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒரு சின்னத் திருவிழாக்கூட்டமே அத்தெருவில் கூடும். வயித்துப்பாட்டுக்கு தோட்டம் தொரவு இருந்தாலும், கந்தசாமி இந்த செரகடிக்கும் வேலையை மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்து செய்தார். திங்கள் மற்றும் புதன் இரவுகளில் சாமி அறைக்கு முன்பிருக்கும் திண்ணைப் பகுதியை அவரே கரைக்கட்டி சாணி போட்டு வழித்துவிட்டுப் படுத்தாரென்றால், அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு பூஜையில் அமர்வார். ஆறு மணியிலிருந்து மக்களின் வருகை துவங்கிவிடும். காலை ஒன்பது மணிவரைதான் மந்திரிப்பது. மாலையில் இதேபோல் ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை. மந்திரிக்கும் நாட்களில் ஒருவேளை உணவு மட்டும்தான் எடுத்துக்கொள்வார். அவ்விரு நாட்களும் பெருமளவு பேச்சும் குறைந்துவிடும். நெருங்கிய பங்காளி வீடுகளில் எழவு, எடஞ்சல் நிகழ்ந்திருந்தால் மட்டுமே இம்முறைமை தடைப்படும். மற்றபடி அவர் இருந்தவரையில் நிரல் மாறாமல் நிகழ்ந்துவந்த நிகழ்ச்சிதான் இது. அவரின் பக்தியும் கட்டுப்பாடுகளும் வெகு பிரசித்தம். அவரின் கைபட்ட துன்னூறு பூசினாலே ஆளானப்பட்ட வியாதியெல்லாம் பறந்துபோயிடும் என்பது சுத்துப்பட்டு மக்களின் பெரும் நம்பிக்கை.

அந்நாட்களிலெல்லாம், கந்தசாமியின் வேட்டி நுனியைப் பிடித்துக்கொண்டே திரிவான் குமரேசன். மற்ற நாட்களில் எட்டு மணிவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினாலும் மந்திரிக்கும் நாட்களிலெல்லாம் தாத்தாவுடனே எழுந்து குளித்துத் தயாராகி அவனும் பூஜை அறைக்குச் சென்றுவிடுவான். புத்தம் புதுத்துணி போல வெளுக்கப்பட்ட காவி வேட்டி, எண்ணை தேய்த்துப் படிய வாரிய தலை. குளித்த ஈரம் சரிவர உலராத நெற்றி. அதன் முழுவதும் பூசப்பட்டு நன்கு துலக்கமாகத் தெரியும் திருநீறு என அப்போதிருக்கும் தாத்தாவைப் பார்க்கப் பார்க்க குமரேசனுக்கு ஆசையாயிருக்கும். பக்தியுடன் கதர்கடை ஊதுபத்தி இரண்டைக் கொளுத்தி சுவரில் மாட்டப்பட்டிருக்கும் குலதெய்வத்தின் படத்துக்கும், பழனி முருகன் படத்துக்கும் முதலில் காட்டுவார். படங்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் மரப்பெட்டிக்கும் அதே மரியாதை செய்யப்பட்ட பின்னர் பூஜையறையில் இருக்கும் அத்தனை சாமி படங்களுக்குமாக ஒட்டுமொத்தமாகக் காட்டிவிட்டு பழத்தில் ஊதுபத்தியைக் குத்திவைப்பார். கண்மூடி சிறிது நேரம் நின்ற பின்னர் மூன்றுமுறை அந்த மரப்பெட்டியைத் தொட்டு வணங்கி, அதை எடுத்துக்கொண்டு பூஜையறையின் முன்பாக வந்து அமர்வார். அந்த மரப்பெட்டி கந்தசாமியின் தாத்தா கருப்பணனுடையது. மேல் மூடி இழுக்கும் வண்ணம் செய்யப்பட்ட அப்பெட்டியில் சிறியதும் பெரியதுமாக இரண்டு அறைகளிருக்கும். பெரிய பாகத்தில் திருநீறும் அதற்கடுத்த சிறிய அறையில் நறுக்கப்பட்ட பனையோலைகளும் இருக்கும்.

கந்தசாமி வந்து அமரும்போதே வாசலில் நாலைந்து பேர் காத்திருப்பார்கள். அவருக்கு முன்னால் தூபக்காலில் தீக்கங்குகள் தயார் நிலையில் இருக்கும். தூளாக்கப்பட்ட சாம்பிராணியை தீக்கங்குகள் மீது தூவி புகையில் மீண்டும் ஒருமுறை பெட்டியைக் காட்டிவிட்டு வந்தவர்களின் குறைகளைக் கேட்பார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, வயித்துப்போக்கு என்பதும் பெரியவர்களுக்கோ கைகால் வலி என்பதும்தான் பெரும்பாலும் பிரச்சனையாய் அமையும். கண்முடி விறைத்துக்கொண்டு நிற்பது, உதடுகளில் தென்படும் வறட்சி, தாண்டுக்குணம் என்றால் கால் வீக்கத்தில் தென்படும் மினுமினுப்பு என சில அறிகுறிகளை முதலில் கண்டு உறுதிப்படுத்திக் கொள்வார். அதற்குத்தக்கபடி திருநீறு மந்திரித்தோ, தாயத்தோ கொடுப்பார். புதிய ஆள் என்றால் வந்தவரின் குலதெய்வத்தின் பெயரைக் கேட்டுக்கொள்வார், உள்ளூர் மக்களின் குலதெய்வங்கள் அவருக்கே அத்துப்படி. மரப்பெட்டியைத் திறந்து கொஞ்சம் திருநீறு எடுத்து அதைக் காய்ந்த அரசிலையிலோ வாழையிலையிலோ போட்டுவிட்டு, வலதுகை ஆட்காட்டி விரலால் திருநீறை மெல்லத் தடவிக்கொடுப்பார். கூடவே, மந்திரங்களை ஓசையின்றி உச்சரிப்பார். எதிரில் அமர்ந்திருக்கும் குமரேசன் அவர் செய்கைகளைக் கூர்ந்து கவனிப்பான். விளைவாக, அவனாலும் அந்தச் சிறுவயதிலும் சில அறிகுறிகளை இனம் காண முடிந்தது. கூடவே, அவர் வாயசைவைத் தொடர்ந்து கவனித்தே முதல் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டான் குமரேசன். ”ஆத்தா, கரியகாளியம்மனே”. அது கந்தசாமியின் குலதெய்வம்.

*

பலமாகத் தட்டப்பட்டது பாத்ரூம் கதவு. குமரேசனின் நினைவுகளைக் கலைத்தது அப்பாவின் குரல். “டேய், மயிராண்டி. இன்னும் என்னடா பண்ணுற? பாத்ரூம்ல தூங்கீட்டையா? சீக்கிரமா வெளில வாடா வெண்ண” மந்தரிக்கும் நாட்களில் ஒருபோதும் தாத்தாவின் வாயிலிருந்து அவன் கேட்டறியாத சொற்கள், தொனி. கதவைத் திறந்து பாலன் முகத்தைப் பார்க்காமலே சென்றான் குமரேசன். “ஒரு நா வேலக்கி போனா ஒம்போது நா சும்மா சுத்துறான். சோத்துக்குக் கேடா திரியறான் தண்டத்துக்கு” முதுகுக்குப் பின்னால் பாலனின் குரல் கேட்டது. அவரையே சொல்லிக்கொள்கிறார் போல என எண்ணியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. உள்ளூர் தறி குடோனில்தான் குமரேசனுக்கு வேலை. நல்ல வேலைக்காரன்தான். இரு தினங்களாக பாவு வரத்து குறைவு என்பதால் பாதிப்பேருக்குத்தான் வேலை இருந்தது. இல்லாதப்பட்டவர்களுக்கு உதவட்டும் என குமரேசன் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறான்.

ஆசாரத்தில் உக்கார்ந்திருந்த குமரேசனை லட்சியம் செய்யாமல் நேராக சமையலறைக்கு சென்றார் பாலன். தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டிருந்த பழைய சோற்றுப் பானையில் கைவிட்டு நிறைய சோறும் கொஞ்சம் தண்ணியுமாக தட்டம் வழிய வழிய எடுத்து நின்றுகொண்டே சாப்பிட்டார். குறு ஏப்பத்துடன் தன்னைக் கடந்துபோகும் தகப்பனை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் குமரேசன்.

*

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் குமரேசன் வீட்டில் கறியெடுப்பது. அதுவும் உள்ளூரில் கூட்டுச் சேர்ந்து அறுக்கப்படும் ஆட்டின் கூறுக்கறி. ஆட்டின் எல்லாப் பாகங்களும் கொஞ்சம் கொஞ்சம் கலந்து கூறுகளாக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப ஒரு கூறோ இரு கூறுகளோ வாங்கிக்கொள்ளலாம். நான்கு பேர் இருக்கும் வீட்டுக்கு ஒரு கூறு சரியாக இருக்கும். கந்தசாமி எப்போதும் இரண்டு கூறுகள் எடுப்பார். “அந்த தாந்தின்னிப் பெயலுக்கே ஒரு கூறு பத்தாது” என்பது அவரது கணக்கு. என்னதான் மருமகள் கைப்பக்குவம் நல்லா இருந்தாலும் கறிக்கொழம்பு மட்டும் தான் வைத்தால்தான் கந்தசாமிக்குத் திருப்தி. குமரேசனுக்கு கறிக்கொழம்பு வாசம் கேட்டதுமே பசியெடுக்கும். கொதிக்கும் குழம்பில் வெந்தும் வேகாதுமாய் இருக்கும் கறித்துண்டுகளை எடுத்து வெந்திருக்கா பாரு சாமி என பேரனிடம் ஊதி ஊதிக் கொடுப்பார் கந்தசாமி. அந்த அரைகுறை வேக்காட்டு கறிக்காகவே சமையலறை முன்பு தவம் கிடப்பான் குமரேசன். கறி வெந்ததும் மறக்காமல் மருமகளுக்கென தனியாக கொஞ்சம் கறியை மறைத்துவைத்துவிட்டு, சுடுசோற்றில் குழம்பு கொஞ்சமாகவும் கறி நெறையாவும் போட்டுக்கொண்டு பேரனுடன் ஆசாரத்தில் அமர்ந்துகொள்வார். நன்கு வெந்த சதைத்துண்டுகளாக, ஈரலாக தேடி எடுத்து பேரனுக்கு ஊட்டுவார். எங்கிருந்தாலும் சரியாக அச்சமயத்துக்கு வந்து சேர்ந்துவிடும் பாலன் ஒரு குண்டாவில் சோறும் சோறளவுக்கே கறியும் எடுத்துக்கொண்டு அதே ஆசாரத்தின் மூலையில் அமர்வார். குனிந்த தலை நிமிராமல் தின்றுவிட்டுப் போகும் அப்பாவைப் பார்த்துக்கொண்டேயிருப்பான் குமரேசன். ”அவங்கெடக்கான் தாந்தின்னிப் பெய. நீ சாப்பிடு கண்ணு” சமாதானப்படுத்தும் குரலில் சொல்வார் கந்தசாமி. அந்நேரத்துக்கு யார் வந்தாலும் அரை வயித்துச் சோறாவது சாப்பிட வைத்தால்தான் கந்தசாமிக்குத் திருப்தி. அதுவும் குழந்தைகள் என்றால் அவரே ஊட்டியும் விடுவார். அப்போது தாத்தாவின் முகத்தில் தெரியும் மலர்ச்சியை குமரேசன் ஒருபோதும் மறந்ததேயில்லை.

*

பொழுது அணையும் நேரம்.

தோட்டத்திலிருந்து திரும்பி வந்த பாலனின் மனைவி பூவத்தாள், “அப்பனெங்கடா?” கேட்டவாறே நுழைந்தார்.
“என்னிய கேட்டா? காலைல வட்டலு ரொம்ப பழைய சோத்தை குடிச்சிட்டு தட்டத்துல இருந்த பத்து ரூபாயோட போனவெ தான். இன்னும் வரல”.
“செரகடிக்க வேற ஆராச்சும் வந்தாங்களா? ஆமா, ஆரு வருவாங்க இந்தாளு பவுசுக்கு. அதும் ஊத்துக்குளில கவர்மெண்டு ஆசுபத்திரி வந்ததும் தொட்ட தொண்ணூறுக்கும் அங்கியே போயி பழகிட்டாங்க. வார ஒன்னு ரெண்டு பேத்துக்கும், இந்தாளு பல்லுகூட வெளக்காம போடுற மந்திரம் பலிக்குமாங்கற சந்தேகம் வேற. சுத்த பத்தமா இருக்கோணும். சாமீ ரூம்முக்குள்ள போறதுக்கே, மனசு சுத்தமில்லாம பயந்துக்கற மனுசன், இவன நம்பியா வாறாங்க? எல்லாம் இந்த வூட்டு மேல இருக்குற நம்பிக்கைதா. சும்மா சுத்தறதுக்கு தோட்டத்துப் பக்கம் வந்தாலாவது கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். அதுக்கும் வக்கில்லை. எல்லாம் நான் வாங்கிவந்த வரம்” கேள்வியும் பதிலும் கலந்த புலம்பலுடன் சமையலறைக்கு செல்லும் அம்மா பாவமாகத் தெரிந்தாள். தாத்தா இருக்கும்வரை அவள் இவ்வளவு வெசனப்பட்டதில்லை. எப்போதாவது பாலனைப் பற்றி அவள் கூறும் முறையீடுகளுக்கும், தாத்தா “எந்தப்புத்தா தாயி. அம்மாவைத் தின்ன பய அப்படின்னு ரொம்ப செல்லங்கொடுத்து கெடுத்துப்புட்டேன். எனக்கோசரம் அனுசரிச்சுப்போ ஆத்தா” எனச் சொல்லும் சமாதானமே போதுமானதாக இருக்கும். ஆனால், எப்போதுமே தாத்தா மனசு விட்டுப் பேசியது தன்னிடம் மட்டும்தான் என்பது குமரேசனுக்குப் பெருமை.

அடுத்த நாள் புதன்கிழமை ராத்திரி. இப்போதெல்லாம் தனக்கு தாத்தாவின் நினைவும், அவர் செயல்களும் அடிக்கடி தோன்றுவதை எண்ணியபடியே படுத்துக்கொண்டிருந்த குமரேசனிடம் பூவாத்தாள் சொன்னாள் “நாளைக்கி சஷ்டி வெரதம். கயித்தமலை போகோணும் மறந்துறாத”. அவன் ஒருபோதும் மறந்திறாத அந்த நாள் மீண்டும் நினைவில் எழுந்தது.

*

குமரேசன் பெரும் பக்திமான் இல்லை. அவனாக விருப்பப்பட்டு சாமி கும்பிட்டதில்லை. அம்மாவுடனோ, தாத்தாவுடனோ போவதற்குச் சுணங்கியதுமில்லை. ஆனால் கந்தசாமி பெரும் பக்திமான். சஷ்டி விரதம் கடைப்பிடிப்பவர். மாதாமாதம் வருகின்ற வளர்பிறை சஷ்டிதிதியன்று மதியம் ஒருவேளை மட்டுமே உண்பார். அதுவும் காங்கயம்பாளையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கைத்தமலை முருகனை தரிசித்துவிட்டு வந்த பின்னர்தான். மூன்று வருடங்களுக்கு முந்தைய, அந்த நாள் வைகாசி வளர்பிறை சஷ்டி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு விடுமுறையில் இருந்த குமரேசனும் தாத்தாவுடன் கைத்தமலை சென்றான். காலை ஏழு மணி, வானம் மோடம் போட்டிருந்தது, தாத்தாவுடனான உரையாடலினால் அவருடன் நடப்பது எப்போதுமே அவனுக்குப் பிடிக்கும். வயதினாலோ, சகவாசத்தினாலோ குமரேசனுக்கு நிறையக் கேள்விகள் தோன்றிக்கொண்டிருந்த சமயம் அது. கடந்த சில வருடங்களாகவே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாகக் கேட்கப்பட்ட கேள்வியை அன்றும் கேட்டான். ஆனால் இம்முறை தாத்தா மழுப்பப் போவதில்லை என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது.

“இப்ப ஒனக்கென்ன, நா இந்த மந்திரிக்கற வேல செஞ்சு ஊர ஏமாத்துறனா இல்லீயான்னு தெரியணும். அவ்வளவுதான?” சிரித்தபடிதான் கேட்டார் தாத்தா.

“அப்பிடியில்ல. என்ன ஏதுன்னு வெகரம் தெரிஞ்சுக்கதான் தாத்தா”

“ம் ஆகட்டும்.”

கொஞ்ச நேரம் சிந்தனையுடன் அமைதியாக நடந்த தாத்தா, அவரே தொடர்ந்தார்.

“இப்ப மாதிரி ஊருக்கு ஊரு பஸ்ஸோ ஆசுபெத்திரியோ அப்ப ஏது? அப்புடியே இருந்தாலும் செலவு செய்ய காசு வேணும்ல. எந்தாத்தன் கருப்பணன் பெரிய வித்தைக்காரரு. பெரிய பெரிய ஆளுங்க செஞ்சு வெச்ச செய்வெனை எல்லாம், அப்புடிங்கறதுக்குள்ள முறிச்சுப் போடுவாரு. அவரு காலத்துக்கப்புறம் எங்கப்பா அப்படியொன்னும் பேரெடுக்கல, எனக்கொன்னும் கத்தும் தரல. எனக்கொரு பத்துப் பதினைஞ்சு வயசிருக்கும், தோட்டத்துக்கு போன அப்பா வரப்புல திடுதுப்புன்னு வுழுந்து செத்துப்போனாரு. பொறகென்ன, நாம்பாட்டுக்கு தோட்டந்தொரவுன்னு பொழப்ப பாத்துக்கிட்டிருந்தேன். அவிங்க ரெண்டு பேரு காலத்துக்கப்புறம், ஒடம்புக்கேதும் பிரச்சனைனா, என்ன ஏதுன்னு புரியாம அல்லாடுற, காசில்லா சனத்துக்கு ஆறுதலா இருக்கட்டும்னுதான், தேடி வாரவங்களுக்கு, எல்லாம் அவம் பாத்துக்குவான்னு மனசில நெனச்சு வேண்டிகிட்டு துன்னூறு கொடுக்க ஆரம்பிச்சேன்.”

பள்ளத்தோட்டம் முக்கு வந்தது. தாத்தா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். இதுவரை ஏகதேசம் அவன் கேள்விப்பட்ட கதைதான். முக்கு திரும்பியதும் தூரத்தில் தெரிந்த கைத்தமலை கோபுரத்துக்கு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்ட தாத்தா கொஞ்சம் முறுவலித்தார்.

“அப்பெல்லாம் என்னமோ ஊரு சனத்தபூரா நா ஏமாத்துற மாதிரி ஒரு நெனப்பு எனக்குள்ளெயே உறுத்தும். அதனாலயே துன்னூறு தாராதுக்கு ஆருகிட்டயும் கையேந்தி பைசா வாங்கினது கெடயாது. அவிங்களா கொண்டுவர பத்தி, கல்பூரம், காசு எதுன்னாலும் நேராக் கொண்டுவந்து இந்தக் கயித்தமலை ஆண்டவன் காலுல சேத்தாத்தான் நிம்மதியே. ஆனாலும், அப்பயுமே நா பத்துப்பேருக்குத் துன்னூறு தந்தா கண்டீசனா ஒம்போது பேரு அடுத்த நாளே ரெடியாயிடுவாங்க. யாராச்சிம் ஒருத்தர் ரெண்டு பேருதான் சரியாகலைன்னு அடுத்த தடவ வருவாங்க, இல்லீன்னா வைத்தியத்துக்குப் போவாங்க. நானும் ஒரு கூறில்லாம, யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் வெறுமனே வேண்டி துன்னூறு கொடுத்திட்டிருந்தேன். நம்மள மீறுன சக்தி, நம்ப கிட்ட சில விசயங்கள சொல்லிட்டேதான் இருக்கும். அத புரிஞ்சுக்கற அறிவு நம்மளுக்கு இருக்கோணும். அப்புடி நானும் புரிஞ்சுக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்ச்சுது”
கைத்தமலை அடிவாரம் நெருங்கியிருந்தது. தைப்பூசத்தின் போது தண்ணீர் பந்தல் போடுவதற்கென கடப்பட்டிருந்த திண்ணையில் “அப்பா, முருகா, ஞானபண்டிதா” என்றவாறே ஏறி அமர்ந்தார் தாத்தா. பக்கத்து ஆலமரத்தின் நிழலும் நடந்துவந்த களைப்பும் அவருக்கு ஓய்வெடுக்கத் தூண்ட தூணில் சாய்ந்து அமர்ந்தவாறு அமைதியாக மலை கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“அது ஒரு வெள்ளிக்கெழம, நம்ம தோட்டத்து வளவு பிரசிடெண்டு மாமன் இருக்காருல்ல.” பதிலை எதிர்பார்க்காமல், நான் ஒருவன் அங்கிருப்பதையே மறந்தவராக தொடர்ந்தார் தாத்தா.

“அவரோட அம்மா வெடியக்காத்தால செத்துப்போச்சு. ஒரு வாரமாவே, கைகால் கொடையுது தூக்கமில்லன்னு சொல்லிட்டிருந்தது. ரெண்டு நாள் முன்னாடி செவ்வாக்கெழம, என்கிட்டதான் துன்னூறு வாங்கிட்டுப் போச்சு. ராத்திரி படுத்த ஆயா, காலைய எந்திரிக்கல. பேரம்பேத்தி எடுத்து அவிங்க கலியாணத்தயும் பாத்தாச்சி. பாத்தா, நெறவான சாவு. ஆனா, மாமனால அப்புடி நெனக்க முடியல. பங்காளிக சொத்தப் புடுங்கிட்டு உட்ட பின்னாடி தனியொரு மனுசியா வம்பாடுபட்டு இவர கரயேத்துன சீவன். இருந்திருந்த மாதிரி செத்ததும் ஒடைஞ்சு போயிட்டாரு. பதினாறாம் நாள் காரியம் முடிஞ்சும் முடியாம சாயங்காலம் நம்மூட்டு வந்தவரு. சாமீ ரூம் முன்னால உக்காந்துட்டு எம்பட மூஞ்சியவே பாத்துட்டிருந்தாரு. சொல்லுங்க மாமா அப்புடின்னேன்”

“கந்தா, உங்கிட்ட ஒரு பழம கேக்கோணும். பத்து நாளா மனசுக்குள்ள ஒரே ரோசன, கேட்டா தப்பா கிப்பா நெனச்சுக்க மாட்டீல்ல.”

“பெரிய பேச்செல்லாம் எதுக்குங் மாமா. ஒங்களுக்கில்லாத உரிமையா. கேளுங்க”

“எங்கம்மா எறக்கறதுக்கு முந்துன செவ்வாக்கெழம உங்கிட்ட வந்து துன்னூறு வாங்கிட்டுப் போனாங்கள்ள, அப்ப நீ எதாச்சிம் சொன்னியா? இல்ல உனக்கெதாச்சும் தோனுச்சா?”

“இல்லீங் மாமா. அப்புடியொன்னும் இல்லீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு அப்புடியொன்னும் மந்திர தந்திரமெல்லாம் தெரியாதுங்க. வாராவங்க…”

“இரு இரு” தொடரவுடாமல் இடைமறித்தார் பிரசிடெண்டு மாமன் “உன்னிய பத்தி நானும் அப்புடித்தான் நெனச்சிட்டிருந்தேன். ஆனா, துன்னூறு வாங்கிட்டு வந்ததும் அம்மா ரொம்ப பொக்குன்னு ஆயிட்டாங்க. செரியா ஆருகூடயும் பேசுல. வெகரம் கேட்டப்ப சொன்னாங்க. துன்னூறு கொடுத்தப்ப ஒம் மூஞ்சில களையே இல்லையாம். துன்னூறு மந்திரிக்கறப்பக் கூட, ரெண்டு மூனு சளக்கா துன்னூற பொட்டில போட்டுட்டு மறுபடியும் எடுத்தியாமா. ஏன் அப்புடி ? ஒனக்கெதாச்சும் குறிப்பு கிறிப்பு காட்டுச்சா? தயங்காம சொல்லு”

“இல்லீங்களே மாமா. நீங்க கேட்கற அளவுக்கு விசியம் தெரிஞ்ச ஆளு நானில்லங்க”

“”இதப்பாரு கந்தா, எங்காத்தா ஆயுசு முடிஞ்சு போச்சு. நெறவா வாழ்ந்த மனுசி. தப்பில்லை. அவ ஒரு வார்த்த சொன்னா, அதுல சத்தியம் இருக்கும். நல்லா ரோசன பண்ணிப் பாரு ஏதாச்சிம் குறிப்பு காட்டிருக்கும் நீ வெளயாட்டுத்தனமா உட்டுருப்ப. அது என்னன்னு தெரிஞ்சுகிட்டீன்னாதான் மத்தவங்களுக்கு நல்லது. புரியுதா ? வாரன்” பதில எதிர்பாக்காம போயிட்டாரு மாமன்.

சின்ன இடைவெளி விட்டு, என்னைப் பார்த்தபடி தொடர்ந்தார் தாத்தா, “நாலஞ்சு நாளு பொட்டுத் தூக்கமில்ல. நாளு முச்சூடும் சாமி ரூமுக்குள்ளாறயே ஒக்காந்து ரோசன பண்ணிட்டே இருப்பேன். ரவக்கி, ஆசாரத்துல படுத்து விட்டதைப் பாத்தும் அதே ரோசனதான். அஞ்சாவது நாள் ராத்திரி, ஊட்ல எல்லாரும் தூங்கிட்டிருந்தாங்க. நானும் சித்த கண்ணசந்தேன். சித்தங்கூரந்தா தூங்கிருப்பேன். இருந்திருந்த மாதிரி, மேலெல்லாம் கொதி கொதிக்குது. செரியான காய்ச்சலு. மொணங்கிட்டே படுத்திருந்தேன். அப்பதான், எப்பயோ மந்திரிக்க வாரவங்ககிட்ட எந்தாத்தன் சொன்னது, வார்த்த பெசகாம நியாபகம் வந்துச்சு. அதும் அவரு பக்கத்துல இருந்து சொல்லுற மாதிரி.

“எப்பயுமே ஒன்னு நெனப்புல வச்சுக்க சூடு நல்லது. குளுந்து போனாத்தான் சிக்கல்”.

எனக்கு குப்புன்னு வேத்திருச்சி. சட்டுன்னு எழுந்துட்டேன். ஏன், நான் அன்னிக்கு, என்னையும் அறியாமா மறுக்கா மறுக்கா துன்னூற மாத்திட்டு இருந்தேன்னு அப்பத்தான் புரிஞ்சிது. எப்பயுமே துன்னூறு மந்திரிக்கறதுன்னா, வாராவங்க பிரச்சனய கேட்டுட்டு, அது செரியாக குலதெய்வத்துக்கிட்டயும் முருகங்கிட்டயும் வேண்டிக்குவேன். வேண்டும்போது, வரவங்களுக்கு ஒரு நம்பிக்க உண்டாகணும்னு, கொஞ்சம் துன்னூற எலைல போட்டு அதை நீவிக்கொடுத்துட்டே சாமி பேர சொல்லிட்டே இருப்பேன். நேரமெல்லாம் கணக்கில்ல, ஒரு கட்டத்துல, வேண்டுதல நிறுத்திட்டு துளி துன்னூற நெத்தில பூசிவுட்டுட்டு, மிச்சத்த அதே எலைல மடிச்சு கொடுத்துடுவேன். எப்பயுமே, நான் வேண்டுதல நிப்பாட்டுறது நீவிக்கொடுக்கற துன்னூறு கொஞ்சம்போல வெதுவெதுன்னு ஆனதுக்கப்புறம்தான், அது எனக்கே அதுவரைக்கும் தெரியல. அன்னிக்கு துன்னூறு சூடாகாமயோ குளுந்தோ கெடந்திருக்கு. அதான், எலய மாத்துறது துன்னூற மாத்துறதுன்னு எதையாச்சிம் செஞ்சிருக்கேன். இந்த சூட்சுமம் புரிஞ்சதுக்கப்புறம், மந்திரிக்கறதையே முழு மனசோட செய்ஞ்சிட்டிருந்தேன், பெரும்பாலும் நான் நெனச்ச மாதிரி துன்னூறு கொஞ்சம் போல சூடாகும். எப்பயாச்சிம் குளுந்தே கெடந்தா அவங்கள, ஆசுப்பத்திரிக்கோ இல்லாட்டி வைத்தியர்கிட்டயோ போகச்சொல்லிடுவேன் அவ்வளவுதான். இதுல யாரையும் நான் இதுநா வர ஏமாத்துனதில்ல. போதுமா?” கேட்டவாறே நடையைத் தொடர்ந்தார் தாத்தா.

மலைக்குச் செல்ல படிகள் இருந்தாலும், மரங்களினூடே அமைந்த மலைப்பாதையில்தான் எப்போதும் செல்வார்கள். குமரேசனுக்கு சமாதானமாகவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அரைகுறை நம்பிக்கையுடன் தாத்தாவிடம் கேட்டான் குமரேசன், “செரி தாத்தா. என்ன மந்திரம் ஓதுறீங்கன்னு சொல்லவேயில்லை”. ”அதெல்லாம் நேரம் வரும்போது சொல்லுறேன். ஒனக்கில்லாததா” திரும்பிப் பார்க்காமல் சென்ற தாத்தாவைத் தொடர்ந்தான் குமரேசன். அன்றிரவு எப்போதும் போல, ஆசாரத்தில் தாத்தாவின் வியர்வை நெடி எட்டும் தூரத்தில் தூங்கிக்கொண்டிருந்தான் குமரேசன். நள்ளிரவில் அவனை உசுப்பினார் கந்தசாமி. அரைகுறை தூக்கத்தில் விழித்த குமரேசன் காதில் “அடுத்தவன் கவலைய போக்கடிக்க, நாம எதச்சொல்லி ஆண்டவன்கிட்ட வேண்டுனாலும் அது மந்திரந்தான்” என்பதை மட்டும் சொல்லிவிட்டுப் படுத்தவர், மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை.

*

அதிசயமாய் அந்த வியாழன் அதிகாலையிலே முழிப்பு வந்துவிட்டது குமரேசனுக்கு. சஷ்டி என அம்மா சொன்னது நினைவுக்கு வந்ததும் எப்போதும்போல் கைத்தமலை செல்லும் திட்டத்தில் குளித்து முடித்தான். இது தாத்தாவுக்காக. சாமி ரூமில் தாத்தாவை எண்ணி கும்பிட்டுவிட்டு, சைக்கிளை எடுத்தவனை பூவாத்தாளின் குரல் மறித்தது. “அடேய், கொமரேசா, சித்த நில்லு”

“ஏம்மா? கோயிலுக்கு போயிட்டு வந்துடறேனே”

“அடேய், நம்ம தோட்டத்து வளவு மாரியம்மக்கா வந்திருக்காங்க. அவுக பேத்தி ராவு முச்சூடும் தூக்கலையாமா. விருக்கு விருக்குன்னு பயந்துட்டே இருந்தாளாமா. கூடவே காய்ச்சலும் இருக்காமா.”

“அதுக்கிப்ப என்னம்மா? அதான் ஊர ஏமாத்துறத்துக்குன்னே நம்மூட்ல உம்மட புருசன் இருக்காருல்ல. அப்புறமென்ன?”

“அந்த சொரண கெட்ட சென்மந்தா எங்க போயித்தொலைஞ்சதுன்னே தெரியலையே. வா கண்ணு தாத்தன நெனச்சுட்டு, நல்லா சாமி கும்பிட்டுட்டு கொஞ்சம் துன்னூறு எடுத்துக்கொடு சாமி” பூவாத்தாள் சொல்லி முடிக்கவும், மாரியம்மாக்கா குமரேசனை நெருக்கி வருவதற்க்கும் சரியாக இருந்தது.

“ஏக்கா, கொழந்தக்கி ஒடம்பு முடியலைன்னா ஒடனே ஊத்துக்குளி ஆசுப்பெத்திரிக்கு போகவேண்டியதுதான. இங்க யாருக்கு என்ன தெரியும்ன்னு இங்க வந்து நிக்கற?”

“இங்க பாரு கொமரேசா, நேத்தே போனேன். அங்க ஒருத்தருமில்ல. கண்ணன் டாக்டர்கிட்டயும் செரியான திருவிழாக் கூட்டம்ன்னு திரும்பி வந்துட்டேன். புள்ள ரவமுச்சூடும் கண்ணு மூடி தூங்கல. செத்தங்கூரங் கழிச்சு ஆசுப்பத்திரிக்கும் போறதுதான். அதுக்கு முன்னாடி கொஞ்சம் துன்னூறு வாங்கிட்டுப்போனா மனசுக்கு ஒரு தெம்பா இருக்கும்ன்னுதான் வந்தேன். சாமி மாதிரி உன் தாத்தன், அவருக்கொசரம்தான் இங்க வந்து நிக்குறதே. ஒனக்குத்தான் எல்லாந் தெரியும்ன்னு ரொம்ப பிலுக்காதே. வா”.

குழந்தையின் வறண்ட உதடுகளையும், விறைத்து நிற்கும் இமைமுடிகளையும் பார்த்துக்கொண்டே இருந்த குமரேசன், மாரியம்மக்காவின் குரலில் தெரிந்த ஆணைக்குக் கட்டுப்பட்டவன் போல சாமி ரூமுக்குள் நுழைந்தான்.

“எங்கொல தெய்வம், வலுப்பூரம்மன். அவ பேர நல்லா நெனச்சி மந்திரிச்சு கொடு கண்ணு”

பூஜையறையில் காமாட்சி விளக்கை பற்ற வைத்தான். இருட்டிலிருந்து துளி வெளிச்சத்துக்கு மாறிய அக்கணத்தில் தாத்தா தன்முன் நிற்பதைக் கண்டான். சில நொடிகள்தான் அவ்வெண்ணம். சாமியறை கொடியில் எப்போதும் இருக்கும் காவி வேட்டியின் அசைவு அது என ஆசுவாசம் அடைந்தான் குமரேசன். கட்டளை இடப்பட்டது போல ஊதுபத்தியைப் பற்ற வைத்தான். சாமி படங்களுக்கும் பெட்டிக்கும் காட்டுகையில், தன் கை நடுங்குவதை அவனால் நிறுத்த முடியவில்லை. தான் யாராலோ இயக்கப்படுவது போன்ற குழப்பம் அவனுக்கிருந்தது. தாத்தாவின் ஸ்பரிசம், வியர்வை நெடி, பார்வை, பேச்சு எனத் தொடர்பில்லாமல் அவரின் நினைவுகள் மனதில் கொப்பளித்துக்கொண்டே இருந்தது. பத்தும் பத்தாததற்கு, எங்கோ ஒரு மூலையிலிருந்து தாத்தாவின் சிரிப்பு கொப்பளிக்கும் பார்வை தன்னை நோக்கிக்கொண்டிருப்பதான எண்ணம் எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்வதின் மேலிருந்த கவனம் குமரேசனை விட்டு அகன்றது.

அன்னிச்சைச் செயலாக, தன் குலதெய்வம் கரியகாளியம்மன் பெயரைச் சொல்லி, பின்னர் கைத்தமலை முருகனை வேண்டிக்கொண்டு, வலுப்பூரம்மன் பெயரை மனதில் நினைத்துக்கொண்டே திருநீறை ஆட்காட்டி விரலால் தடவிக்கொண்டே இருந்தான். ஓரிரு நிமிடங்களில் நிறுத்திவிட்டு, திருநீறில் கொஞ்சம் எடுத்து குழந்தையின் நெற்றியில் பூசிவிட்டு, மிச்சத்தை அதே பேப்பரில் மடித்து மாரியம்மக்காவிடம் தந்து. தன்னையுமறியாமல் சொன்னான் “ஆசுப்பத்திரியெல்லாம் வேண்டியதில்லக்கா, பொழுதுக்குள்ள புள்ள செரியாகிடுவா”.

***

காளீஸ்வரன்[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular