சுஷில் குமார்
தூரத்தில் இருந்து பார்த்தபோதே அந்த உச்சிப் பாறைகளின் இடுக்கில் சிறிய முக்கோண வடிவில் தெரிந்தது மந்தார மலைக்குகை. இருபுறமும் அளவெடுத்தது போன்று இரு பாறைகள் சாய்ந்திருக்க, அவற்றை மேலாக மூடியிருந்தது உயர்ந்த மரங்களின் காலடியில் கிடந்த ஒற்றைப் பெருங்கல். ஒவ்வொரு முறை அந்தச் சாலையைக் கடந்து செல்லும் போதும் அனிச்சையாக என் கண்கள் அக்குகையை நோக்கி மேலெழும். விரல்கள் தானாக நெஞ்சுக்குழியைத் தொட, கண்கள் ஒரு கணம் மூடி என் முதல் அனுபவத்தை நினைவு கூறும். குகைக்கோயிலின் அந்த சிறு குடைவில் நிற்கும் ஏதென்றறியா தெய்வமும், அதன் காலடி மணலும்.
பேருந்திலிருந்து இறங்கியது முதல் ஒன்றும் பேசாமல் நடந்து கொண்டிருந்தான் ஏசுவடியான். எத்தனையோ முறை நான் அழைத்தும் இங்கே வந்திராதவன் முந்தைய நாள் இரவில் அழைத்து, “நாளைக்கி காலம்பற மந்தார மலைக்கி போணும் மக்கா. ரெடியா இரி.” என்றான். சரி, அவனுக்கே ஓர் ஆர்வம் வந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மந்தார மலையின் இரகசியங்கள் மீது யாருக்குத்தான் ஆர்வமில்லாமல் இருக்கும்.
எல்லா ஊரிலும் உள்ளதைப் போலவே மந்தார மலைக்கும் ஓர் அனுமார் கதை உண்டு. சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் பறந்து சென்ற அனுமனின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு சிறுதுண்டு கல் இங்கே ஊன்றிப் பெருகி வளர்ந்து மந்தார மலையாகிப் போனது. இம்மலையின் ஒவ்வொரு செடியும், மரமும், அவற்றின் ஒவ்வொரு இலையும், வேரும், பட்டையும் மனிதகுலத்தின் பிணி தீர்க்கும் மருந்துகள். மலையேறும் செங்குத்துப் பாதையின் நடுவே தானாய்த் தோன்றி தானாய் பெருகிக் கிடக்கும் அக்னி தீர்த்த ஊற்றின் நீரைப் பருகினால் உடல் சூடும் மனச்சூடும் குறைந்து தெளிவு கிடைக்கும். பதினெட்டு சித்தர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த குகைகளும் புற்றுகளும் சில தெரிந்தும் சில மறைந்தும் உள்ளதாகவும் நம்பிக்கை. தேவையான நேரத்தில் ஏதேதோ வடிவில் உருவில் அச்சித்தர்கள் தோன்றி தேவையானவர்களுக்கு வரம் கொடுப்பதாகவும் சொல்வதுண்டு. அவர்களின் சீடர் பரம்பரையில் வந்தவர்களென இரு சித்தர்கள் இன்னும் இம்மலையில் வாழ்வதாகவும் பேச்சுண்டு.
பிரதான சாலையிலிருந்து இறங்கி சற்று நடந்து குறுக்கே ஓடிய சிறு கால்வாயைக் கடந்தோம். ஏசுவடியான் என் பின்னால் மெதுவாக நடந்து வந்தான். பொதுவாகவே அவன் அமைதியானவன் தான். ஆனால், அன்று ஏதோ கூடுதலாக வித்தியாசமாகப்பட, நின்று அவனை நோக்கிக் கேட்டேன், “லேய், நில்லு. ஒனக்கென்ன பேய் புடிச்சிருக்கா? ஒரு மாரியால்லா வார!”
ஏதோ நினைவிலிருந்து மீண்டு வந்தவனாக, “என்ன? என்ன சொன்ன?” என்றான்.
“அது செரி, ராவு எவ கூடயாம் போனியான்னு கேட்டேன். மூஞ்சி செத்த பய மாறி இருக்கு, என்னல மேட்டர்?”
“ஒன்னுல்ல மக்கா, நா ஏதோ யோசனைல வந்தேன்.”
“ஓஹோ, இவரு பெரிய பண்ணையாரு, தென்னந்தோப்புல தேங்கா வெட்டு, நூறு ஏக்கரு வயலறுப்பு, எல்லா மயிரயும் இவருதான பாக்காரு?” என்று அவன் கையைப் பிடித்து முறுக்கினேன்.
கையை வெடுக்கென இழுத்தவன், “சரவணா, எங்க அத்தயப் பத்தி சொன்னேன்லா, ஓர்ம இருக்கா?” என்று கேட்டான். அவன் என்னைப் பார்க்காமல் பக்கத்தில் வேறு யாரையோ பார்த்து கேட்பதைப் போலவிருந்தது.
“அத்தையா? எந்த அத்த?”
அவனிடமிருந்து பதிலில்லை. என்னை விடுத்து முன்னே நடக்க ஆரம்பித்தான். குழம்பியவாறு எட்டு வைத்து அவன் அருகே சென்று அவனைப் பிடித்து நிறுத்தினேன்.
“லேய், என்னல? என்னாச்சி ஒனக்கு?”
“எனக்கா? ஒண்ணுல்ல. வா, செனம் போவம்.”
“லேய், அத்தயப் பத்தி ஏதோ சொன்னல்லா, பாதில விட்டுட்டு ஒம்பாட்டுக்குப் போவம்ங்க, என்னல பிரச்சன, சொல்லு மக்கா.”
அப்படியே நின்று தனக்குள்ளாக ஏதோ பேசியவாறு என் முகத்தைப் பார்த்தான். பின் அமைதியாக தலைகுனிந்து நின்றான். பின், மீண்டும் என்னைப் பார்த்தான், முன் நோக்கி மலையைப் பார்த்தான்.
“அப்பாவோட தங்கச்சி இருந்தால்லா, நீ பாத்ததில்லன்னு நெனைக்கேன். எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா? எனக்கு கல்யாணம் பண்ணா அவள மாறி பொண்ணுதான் பாக்கணும்னு எங்கம்மாட்ட சொல்வேன்.”
“ஆமா, செத்துப் போய்ட்டாங்கல்லா, அவங்க தான?”
ஒன்றும் பேசாமல் நின்றான் ஏசுவடியான். சட்டென என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான். ஓவென்று கத்தினான். கதறி அழுதான். எனக்கு கைகால் நடுங்கி விட்டது. சுற்றி யாரும் வருகிறார்களா என பார்த்தேன். மலையடிவார பெட்டிக்கடையைத் தவிர அப்பகுதியில் வேறேதும் கிடையாது. தூரத்தில் வந்த ஒரு சைக்கிள் மெல்ல மெல்ல எங்கள் அருகே வந்து கடந்து சென்றது. நல்ல பதநீர் வாசம்.
அவனாகவே அமைதியடைந்தான். நான் அவனருகே அவன் கையைப் பிடித்து நின்றேன். மீண்டும் மலையைப் பார்த்தவன் என்னைப் பார்த்து, “அத்த சாகதுக்கு முந்துன நாள் ராவு எம்பக்கத்துல தான் படுத்துக் கெடந்தா பாத்துக்கோ. என்னிக்கும் இல்லாத ஒரு ஐஸ்வர்யம் அவகிட்ட அன்னிக்கி பாத்தேன். என் தலைல கைய வச்சி கோதிட்டே இருந்தா. நா சொகமா கெடந்தேன். எனக்கு அவள ரொம்ப புடிக்கும் மக்கா. நா ஒறங்கி விழுந்தப்போ அவ என்கிட்ட என்னல்லாமோ பேசிட்ருந்தா? என்ன பேசுனான்னு முழுசா தெரில, ஆனா அவ சிரிச்சி சிரிச்சி பேசுனா. எடைல என் கைய புடிச்சி முத்துனா, என் தலைய அவ மடில வச்சி ஏதோ பாட்டு பாடினா. இதெல்லாம் நெஜமா நடந்தான்னு எனக்கு தெரில, ஆனா, அப்டியே கண்ணுல அடிக்கடி வரும் பாத்துக்கோ. நல்லா சிரிச்சிட்டே இருந்தவ திடீர்னு அழ ஆரம்பிச்சா, நா என்ன ஏதுன்னு யோசிச்சிட்டே கெடந்தேன். அத்த என் கையப் புடிச்சி அவ நெஞ்சுக்கூட்டோட வச்சி புழுங்கிப் புழுங்கி அழுதா. நா நல்லா ஒறங்கிட்டேன்னு நெனச்சி அவ மனசுல உள்ள எல்லாத்தயும் கொட்டிட்டான்னு நெனைக்கேன் மக்கா. எனக்கு வெப்ராளமா வந்து, கண்ண இறுக்கிட்டு படுத்துக் கெடந்தேன் பாத்துக்கோ. ஒருவேள எல்லாமே கனவாவும் இருக்கும்.” என்றான். எனக்கு குழப்பம் மேலும் அதிகமாகியது.
“செரி மக்கா. விடு, அத்த பாவம். என்ன பண்ண? போய்ட்டாங்க.” நான் கேட்க நினைத்தது அத்தை என்ன சொன்னார்கள் என்றுதான். ஏனோ அதை கேட்காமல் விட்டுவிட்டேன்.
“இல்ல சரவணா, அத்த என்கிட்ட சாகப்போறேன்னு சொன்னா.”
எனக்கு நெஞ்சு படபடத்தே விட்டது. “லேய், என்னல சொல்லுக?”
“கேளு மக்கா. அடுத்த நாளு விடியக் காலைல, லேசா முழிப்பு தட்டிச்சி, அத்த அப்பவும் எம் பக்கத்துல தான் இருந்தா, குத்த வச்சி ஒக்காந்து கால் முட்டிய கட்டிப்புடிச்சி அழுதுட்டே இருந்தா. பொறவு நல்லா சிரிச்சா. என் காதுகிட்ட வந்து ரகசியமா ‘மக்ளே, அத்த கர்த்தர் கிட்ட போகப் போறேன், என்னா’ன்னு சொன்னா. அவ சொன்னப்போ நா நல்லா கொறட்ட விட்டு ஒறங்கிட்டு தான் இருந்தேன். ஆனா, அவ சொன்னது எனக்கு கேட்டு பாத்துக்கோ. அத்த வேண்டாம்.. அத்த வேண்டாம்.. அத்தன்னு தூக்கத்துலயே சொல்லுகேன்.”
ஒரு நொடி நிறுத்தியவன் தன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “லேய், உச்சிக்கிப் போக எவ்ளோ நேரமாவும்?” என்று கேட்டான்.
“ஒரு மூனு மணிக்கூர், யாம்ல கேக்க?”
மீண்டும் தன் கடிகாரத்தைப் பார்த்தான்.
“அத்த இன்னும் நெறைய சொன்னா மக்கா. எனக்கு எல்லா வார்த்தையும் உள்ள திரும்பத் திரும்ப கேக்கு. ஆனா, சொல்ல வரமாட்டுக்கு. ஆனா, சாகப்போறேன்னு சொன்னவ எப்பிடி மக்கா சிரிச்சிட்டே இருந்தா? அதான் எனக்குப் புரியல பாத்துக்கோ.” என்றவன் விருவிருவென்று என் முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
“யேசு, லேய், நில்லு, யேசு.” அவன் தனக்கேயான பாதையில் நடப்பதாகத் தெரிந்தது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு பயம் எனக்குள் சட்டென தொற்றிக் கொண்டது. திரும்பிப் போய்விடலாமா என ஒரு கணம் யோசித்தேன். இல்லை, அவனை விட்டுவிட்டுப் போக முடியாது. எப்போதும் போலில்லாமல் மந்தார மலை அன்று என்னைப் பார்த்து உறுமியது. தன் நெடிய கைகளை நீட்டி என்னை வாவாவென்று அழைத்தது.
விரைந்து சென்றவன் அந்தப் பெட்டிக்கடையில் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தான். நான் ஓடிச்சென்று அவனருகே நின்றேன். தண்ணீர் பாட்டில்களும் நொறுக்குத்தீனியும் வாங்கியிருந்தான்.
“இவ்ளோ போதும்லா மக்கா?” என்று கேட்டான். நான் தலையாட்டினேன். இருவரும் மலையடிவார புற்றுக்கோயிலுக்குச் சென்றோம். கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டு நின்று கண்மூடி வேண்டினான் ஏசுவடியான். நான் இன்னும் குழப்பத்திலிருந்து வெளிவராமல் புற்றுச்சித்தர் முன்னால் நின்றேன். அரைப் பனை உயரப் புற்றின் சிறு துளைகளில் பால்வடிந்து காய்ந்த தடங்கள் தெரிந்தன. கூர்ந்து பார்த்தபோது அவை தோலுரிக்கப்பட்ட பாம்புச் சட்டைகளாக மாறின. உடலெங்கும் புல்லரித்து விட்டது.
“சரவணா, மேல இருக்க அந்தக் குகைல என்ன நெனச்சாலும் நடக்கும்னு சொன்னேல்லா?”
ஏசுவடியானின் ஒவ்வொரு கேள்விகளும் எனக்கு புதிராகவே தெரிந்தன. “அது, எதாம் நெனச்சிட்டு கண்ண மூடி இருந்தா, அந்த சாமி முன்னால இருக்க மண்ணுல ஒரு கொழந்த பாதம் தெரியுமாம். அப்பிடி தெரிஞ்சா நம்ம நெனச்சது நடக்குமாம்.”
“ஓ, தெரியலன்னா?”
“இல்லாட்டா கோழி கிண்டுன மாறி தடம் தெரியுமாம்.”
“தெரிஞ்சா?”
“அப்பிடித் தெரிஞ்சா நம்ம நெனச்சது நடக்காதுன்னு சாமி சொல்லுகுன்னு அர்த்தம்.”
“சூப்பர், செனம் ஏறுவோம்.” என்று சொல்லிவிட்டு மலையேறும் படிக்கட்டை நோக்கிச் சென்றான். புற்றின் அருகே படுத்துக் கிடந்த கருத்த நாயொன்று வாலாட்டியவாறு என்னருகே வந்து நின்றது. தயங்கித் தயங்கி மோப்பம் பிடித்து என் கால் பாதத்தைத் தொட்டு நக்கியது. நான் என் காலை இழுக்க, மீண்டும் வாலாட்டிவிட்டு ஏசுவடியானை நோக்கிச் சென்றது. முதல் படியில் உட்கார்ந்திருந்த அவன் ஏதோ நீண்ட கால நண்பனைப் பார்ப்பதைப் போல அந்த நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டே கையசைத்துக் கூப்பிட்டான். அது ஓடிச்சென்று அவன் காலடியில் படுத்து அங்குமிங்கும் உருண்டது. அவன், அதைத் தூக்கி தன் மடிமீது கிடத்தி தடவிக் கொடுத்தான். எனக்கு நடப்பதெல்லாம் அதிசயமாகத் தெரிந்தது. யாரையும் முகம்பார்த்து பேசக்கூட மாட்டான் ஏசுவடியான். எப்போதும் குனிந்த தலை, ஒடுங்கிய நடைதான். அன்று எல்லாமே புதியதாய்த் தோன்றின. நான் அவனருகே சென்றதும் அந்த நாய் துள்ளியேறி மலைப் படிக்கட்டில் செல்ல ஆரம்பித்தது. ஒரு பத்து படிகள் கடந்து நின்று திரும்பி எங்களைப் பார்த்தது. அது எங்களுக்காக காத்துதான் நின்றது. பாறைகளைச் செதுக்கி, கற்களை அடுக்கி ஏற்படுத்தப்பட்ட படிகள். ஏசுவடியான் உற்சாகமாக ஏற ஆரம்பித்தான். நானும் தொடர்ந்தேன்.
மலைப் படிக்கட்டின் இருபுறமும் பச்சைப் பசேலென புதர்கள். சற்று முன் சென்றதும் சிறு மரங்கள், மேல் செல்லச்செல்ல உயர்ந்து வான் மறைத்து நின்ற மரங்கள். சில நூறு படிகளைக் கடந்து ஒரு திருப்பத்தில் நின்றோம். சற்று மேலே ஒரு சுற்றுச்சுவர் தென்பட்டது. பூதலிங்க சாமி கோவிலைச் சுற்றி புதிதாகக் கட்டியிருந்தார்கள். அதன் வழி மேலேறியதும் ஒரு துண்டு நிலம், அதன் நடுவே ஒற்றை வேப்பமரம் அதன் பின்னால் இருந்த சிறிய கோயிலை முழுவதும் மூடியவாறு நின்றது. இருவருக்கும் வேர்த்து சட்டை ஈரமாகி விட்டது. அந்த நாய் வேம்பின் அடியில் சென்று குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. ஏசுவடியானும் நானும் கோயிலுக்குள் சென்றோம். வெளியேயிருந்ததைக் காட்டிலும் மிக குளிர்ச்சியான காற்று கோயிலின் பக்கவாட்டிலிருந்த பாறையிடுக்குகளின் மூலம் உள்வந்தது. கருவறையின் வெம்மை மெல்ல நீண்டு வந்து எங்களை இழுத்தது. அச்சிறு லிங்கத்தின் முன்னமர்ந்து கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்தேன். அதுவரையிருந்த பயமும் பதட்டமும் மெல்ல வெளியேறி என் சுவாசம் என் கவனத்தில் வந்தது. சில கணங்கள் அப்படியே லயித்திருந்தேன். திடீரென, என் காதிற்குள் ஒரு விசும்பல் சத்தம். அந்த ஆழ்நிலையிலிருந்து வெளிவர விருப்பமில்லாமல் அச்சத்தத்தைத் தவிர்த்து உள்ளத்தைக் குவியச் செய்ய முயற்சித்தேன். அவ் விசும்பல் இன்னும் இரைந்து கோயிலின் கற்சுவர்களில் பட்டு எதிரொலித்து என் முகத்தில் வந்து அறைந்ததைப் போலிருந்தது. அது ஏசுவடியானின் குரல்தான் எனத் தோன்ற, சட்டெனக் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். அவனைக் காணவில்லை. வெளியில் அந்த நாயின் குரைப்புச் சத்தம் கேட்க, பதறி எழுந்து ஓடினேன்.
ஏசுவடியான் அவ்வேப்பமரத்தைச் சுற்றி ஓடி அந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நான் வந்து நின்றதைப் பார்த்ததும் அந்த நாய் கோயிலின் இடப்புறமாக மேலேறும் பாதையில் சென்று நின்று எங்களைத் திரும்பிப் பார்த்தது. இதென்ன நமக்கு வழி காட்ட வந்திருக்கிறதா? இதுவரை எத்தனையோ முறை வந்திருக்கிறேனே? இந்த நாயைப் பார்த்ததேயில்லையே?
“என்ன டே, ஏறுவோமா?”
“இரி மக்கா, இங்க வந்து பாரு, ஸ்ரீ இந்திரம் கோயில் கோபுரம் ஒரு குச்சி மாறி தெரியி பாரு.”
“லேய், எங்கிட்டயேவா? வா, வா, இன்னும் நெறைய காட்டுகேன்.”
தலையாட்டி என்னருகே வந்தவன், “ஒனக்கு ஞாபகமிருக்கா மக்கா, எங்க வீட்டுக்கு மொத மொத நீ வந்தேல்லா?” என்று கேட்டான்.
“ஆமா, ஆச்சிக்கி ராவு முழிப்பு சமயம் தான அப்போ?” என்று பதில் சொல்லும்போதே எனக்குள் மீண்டும் ஒரு நடுக்கம் வந்தது.
“ம்ம். அப்போ எங்க அப்பா ஒன்ட்ட என்னவோ கேட்டால்லா?”
“தெரிலயே? எந்த ஊரு, என்னான்னு கேட்டுருப்பாங்கோ. யாம்ல கேக்க?”
ஏசுவடியானின் முகம் இறுகியது. இல்லையெனத் தலையாட்டினான். மீண்டும் ஆட்டினான். தனக்குள்ளாக முனகியவாறு மீண்டும் மீண்டும் தலையாட்டினான். நான் அவன் கையைப் பிடித்து உலுக்கி, “யேசு, என்ன செய்ய?” என்று கேட்டேன்.
“என்ன மக்கா? ஒன்னுல்ல…” என்றவன் சற்று நேரம் அப்படியே நின்றான். “எங்கப்பா ஒரு ஃபிராடு மக்கா, அயோக்கிய ராஸ்கல், கொலகாரப்பய.” என்று கத்தினான். அவனது முகம் கோவத்தில் நடுங்கியது. சட்டென வியர்த்து வழிந்தது.
“லேய், என்னல சொல்லுக? வீட்ல எதாம் பிரச்சினயா மக்கா? வந்ததுலேந்து நீ ஒரு மாறி நடக்க? என்ட்ட சொல்லு மக்கா, என்னாச்சி?”
“என்ன சொல்ல ல? அந்த வீட்டுல இருந்தேன்னா அந்தாள நா அடிச்சே கொன்னுருவம் பாத்துக்கோ. பெரிய மிலிட்டரி மயிருன்னா நா ஒன்னும் பயப்பட மாட்டேன், கேட்டியா?”
எனக்கு பிரச்சினை ஓரளவு புரிந்தது மாதிரி இருந்தது. ஏசுவடியானின் அப்பா பயங்கர கோவக்காரர், அவர் வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்று எல்லோரையும் தன் கையசைப்பில் வைத்திருப்பார். இதெல்லாம் நண்பர்கள் சொல்லியும், என் அப்பா அம்மா சொல்லியும் கேள்விப்பட்டதுதான். ஏசுவடியான் பெரிதாக ஒன்றும் சொல்லிக் கொண்டதில்லை. ஆனால், அவன் வீட்டிற்கு நான் சென்றபோதெல்லாம் அவர் நன்றாக சிரித்துப் பேசிதானே இருந்தார்? சாப்பிடாமல் போக விடவே மாட்டாரே?
“எங்க ஆச்சி நல்லாதான் இருந்தா மக்கா.. சாவதுக்கு முந்துன நாள் நாந்தான் அவ கூட சர்ச்சுக்குப் போனேன். பாஸ்டர் கிட்ட போயி ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தா. திரும்பி வரும்போ எனக்கு ஒரே அட்வைசு. நல்லா படிக்கணும், அம்மாவ நல்லா வச்சி பாக்கணும், அம்மா சொல்பேச்சக் கேக்கணும்னு, என்னல்லாமோ சொன்னா பாத்துக்கோ. நைட்டு தூங்கும்போ என் நெத்தில வந்து கிராஸ் போட்டுட்டு ஜெபம் சொல்லிட்டு போனா, எப்பவும் அவ கைய விட்டு போவாத்த மாலயும் வச்சிருந்தா. அடுத்த நாளு காலைல பாக்கேன், செத்துக் கெடக்கா.”
அவன் முகத்தைப் பார்த்து அப்படியே நின்றேன்.
“அவருக்கு வக்கணையா எல்லாம் செஞ்சி வைக்கணும், ஓராயிரம் கொற மயிரு, ஏட்டி வெந்நீர் போடு, ஏட்டி சட்டைய எடு, ஏட்டி செருப்பத் தொட, ஏட்டி வெத்தலய கொண்டா, ஏட்டி கால அமுக்கு. ஒருநாளு சூடு ரசத்த எங்கம்மா மூஞ்சிலயே ஊத்திட்டாரு மக்கா.”
“என்ன மக்கா சொல்லுக? எதுக்கு?”
“ரசத்துல உப்பு இல்லயாம். இன்னொரு நாள் ராவு அம்மாவ ஓங்கி ஓங்கி மிதிச்சாரு, நா எடைல போயி தடுக்கப் போனேன், என்னப் புடிச்சி சொவத்தோட வச்சி நெருக்கிட்டாரு. அம்ம வந்து அவரு காலப்புடிச்சி கெஞ்சுகா, விட மாட்டுக்காரு. எனக்கு கண்ணு சொருகி மயக்கமே வந்துட்டு. ஒரே விஸ்கி வாட வேற.”
“யேசு, நெஜமாவா? அப்பா மிலிட்டரி ஆபீசருன்னு நீதான பெருமையா சொல்லுவ?”
“மிலிட்டரில இவர எப்பிடி எடுத்தான்னு யாருக்குத் தெரியும்?”
“லேய், விடு, அப்பா எதாம் கோவத்துல அப்பிடி செஞ்சிருப்பாரு.”
“இல்ல மக்கா, ஒனக்கு ஒன்னும் தெரியாது. எங்க அத்த… எங்க ஆச்சி… எங்க அம்மா.. எந் தங்கச்சி..” என்றவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். நான் ஒன்றும் செய்ய வேண்டாமென அப்படியே அவனருகே நின்றேன். பெருமூச்செறிந்து அழுது ஓய்ந்தவன் மேலேறும் பாதையில் நடக்கத் தொடங்கினான். நான் அவனைத் தொடர்ந்து ஏதேதோ யோசித்தவாறு நடந்தேன். அந்த நாய் அதே உற்சாகத்தோடு எங்கள் முன்னால் துள்ளி ஓடியது.
அடுத்த ஒருமணி நேரம் தொடர்ந்து ஏறினோம். ஏசுவடியான் திரும்பிக் கூட பார்க்காமல் அந்த நாயைப் பின்தொடர்ந்து சென்றான். அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளாக பேசிச்சென்றதைப் போலிருந்தது. சில பாறைகளின் அருகே அந்த நாய் நின்று சுற்றிலும் மோப்பம் பிடித்தது. ஓரத்துச் செடிகளில் மூத்திரம் கழித்தது.
ஒரு பாறையின் அருகே நின்று அதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஏசுவடியான். அருகே சென்று பார்த்தபோது அதில் வெட்டப்பட்டிருந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாக சேர்த்து வாசிக்க முயற்சித்தான். மலையாள எழுத்துகள், அருகே சிவப்பும் பச்சையுமாக குறியீட்டு ஓவியங்கள்.
“கர்த்தர் எத்தனை மலை, எத்தனை குகை, எத்தனை பாலைவனம்லாம் பாத்துருப்பாரு என்ன மக்கா? நம்மெல்லாம் கன்னியாரிய தாண்டி ஒரண்டயும் போனதில்ல. என்ன நம்பிக்கைல அவரு அப்பிடி திரிஞ்சிருப்பாரு? நமக்கு கும்புட சாமி இருக்கு.. அவரு யாரு மேல நம்பிக்க வச்சி அலஞ்சாரு? கல்லால அடிச்சானுவோ, காட்டிக் குடுத்தானுவோ. கொன்னே போட்டானுவளே மக்கா. ஒன்னும் வெளங்க மாட்டுக்கு பாத்துக்கோ.” சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தான்.
பாதி மலையைக் கடந்து விட்டோம். சுற்றியிருந்த சுக்குநாறிச் செடிகளின் மணமும், சிறுவண்டுகளின் க்ரீச் ஒலியும், சூரியனை மறைத்த உயர் மரங்களின் நிழலும், இடையிடையே கருத்து உயர்ந்து நின்ற பாறைக் குன்றுகளின் கனத்த மௌனமும் சேர்ந்து சூழல் முற்றிலும் மாறியது. எனக்குள் எதற்கென்றில்லாத நடுக்கமும் ஏசுவடியான் அடுத்தது என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆர்வமும் சேர்ந்து ஒருவித கலவையான மனதுடன் அங்கிருந்த ஊற்றுச்சுனையின் அருகே நின்றேன். நாயுடன் சீசரும் அவ்வூற்றில் நீரெடுத்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
“சரவணா, ஒனக்குத் தெரியும்லா? இந்த ஊத்துத் தண்ணி ஒரு மருந்தாக்கும். என்ன நோய் இருந்தாலும் செரி ஆயிருமாம், பாத்துக்கோ. நெறைய வேருக்கு பைத்தியம் கூட தெளிஞ்சிருக்காம். ஹா ஹா ஹா..” என்று சிரித்தவன் தொடர்ந்து சிரித்துக் கொண்டேயிருந்தான். அந்த நாய் மேலேறி பாதையின் நடுவே நின்று வாலாட்டிக் கொண்டிருந்தது.
“எங்க அத்தயையும், ஆச்சியையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம் மக்கா. நீ எத்தன வாட்டி கூப்ட்ட, நாந்தான் வரல்ல.” என்றான் ஏசுவடியான்.
நான் அவன் சொல்வதையெல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்து ஒரு முடிவிற்கும் வரமுடியாமல் நின்றேன். ஊற்று நீரை அள்ளி முகத்தைக் கழுவி, தலையை நனைத்தேன். திடீரென தாகம் உடலெங்கும் பரவியதைப் போலிருந்தது. கூடிய மட்டும் அள்ளியள்ளிக் குடித்தேன்.
“அம்மாவையாவது கூட்டிட்டு வந்துருக்கலாம் சரவணா.” என்று சொல்லிவிட்டு ஏசுவடியான் விரைந்து ஓட, அவன் முன் பாய்ந்தோடியது அந்த நாய்.
அதற்கு மேல் பாதை தெளிவின்றி பாறைகளில் செதுக்கப்பட்ட அம்புக்குறிகளைச் சார்ந்தே இருந்தது. ஓராள் மட்டுமே செல்லும் அளவு குறுகலான பாறை இடுக்குகள், திடீரென செங்குத்தாக மேலேறும் முரட்டுக் குத்துக்கற்கள், தடத்தை மறைத்து திரைபோல படர்ந்திருக்கும் பலவித கொடிகள், முற்செடிகள், நிறம் ஒன்றி ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லிகள், பூச்சிகள், அட்டைகள் என வான் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு காடாக மேற்சென்றது. சில குடைவுகளின் உட்சென்று வெளிவருவதற்குள் இதயத்துடிப்பு என் காதுகளில் அதிர்வாகக் கேட்க, வானமற்ற அந்தப் பாறைக் குடைவுகள் எத்தனை ஆயிரமாண்டு மௌனத்தைத் தாங்கி நிற்கின்றன என்று எண்ணம் தோன்ற தொண்டை அடைத்துக் கொண்டது. ஏசுவடியானோ நான் உடனிருப்பதையே மறந்தவன் மாதிரி தீவிரமாக ஏறிக்கொண்டிருந்தான். ஏதோ பலமுறை வந்து பழக்கப்பட்டவனைப் போல, துளியும் யோசிக்காமல் திருப்பங்களைக் கடந்து சென்றான். நான் அவனை அழைத்து வந்திருக்கிறேனா? இல்லை அவன்தான் என்னை கூட்டிச் செல்கிறானா?
மந்தார மலையின் மூன்றாம் அடுக்கில் இருந்தோம். எங்கள் கால்களுக்குக் கீழே பரந்து விரிந்து தரை தெரியாத அளவிற்கு இருந்தன முதலிரண்டு மலைகள். காற்று குளுமையேறியிருந்தது. இன்னும் சில நிமிடங்கள் நடந்தால் மேகங்கள் எங்கள் தலைமீது மோதும் போலிருந்தது. அன்று சூரியன் மேகங்களுக்குள்ளேயே இருக்க விரும்பியது. எப்போது வேண்டுமானாலும் சிறு சாரலோ, மழையோ வரக்கூடும். ஏசுவடியான் சட்டையைக் கழற்றி இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டான். கைகளை விரித்துப் பறப்பதைப் போல தாவித்தாவிச் சென்றான். அப்போதுதான் கவனித்தேன் அந்த நாயைக் காணவில்லை. ஆனால், ஏசுவடியான் அந்த நாயுடன் சேர்ந்து சென்றதைப் போலவும் இருந்தது. சில கணங்களில் அவனும் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டான். படபடத்து நடையில் வேகம் கூட்டினேன்.
முக்கோணக் குகையின் மேல் கல்லை நான் அடைந்தபோது ஏசுவடியான் அதன் முனையில் நின்று கீழே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நாய் அவன் காலருகே படுத்துக் கிடந்தது. அது காய்ந்த மரக்கட்டையொன்றைக் கடித்துக் கொண்டிருந்தது. ஏசுவடியான் நிற்பதைப் பார்த்ததும் என் கைகால்கள் பரபரக்க ஆரம்பித்தன. ஒன்றும் பேசாமல் நான் வந்ததை காட்டிக் கொள்ளாமல் மெல்ல அவனருகே சென்றேன். அவனது முகம் இறுகிப் போயிருந்தது. மூச்சு வேகம்கூடி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.
“என்ன டே, ஒம்பாட்டுக்கு பாஞ்சு வந்துட்ட, நீ இங்க வந்ததில்லல்லா மக்கா? பொறவு எப்பிடி அசால்ட்டா ஏறி வந்துட்ட?”
ஏசுவடியான் பதில் சொல்லாமல் கீழே பார்த்து நின்றான்.
“நல்லா குளுருகுல்லா மக்கா? கீழ செம வெக்கையா இருக்கும். இங்க சொர்க்கம் மாறில்லா இருக்கு, என்னா?”
ஏசுவடியான் திரும்பி என்னைப் பார்த்தான். “நான் கீழ குதிச்சிருவேன்னு நெனச்சியோ?” அவன் முகத்தில் சிரிப்பில்லை.
“ஆமா, தோனிச்சி. ஆனா, சாவதுக்கு இது எடமில்ல மக்கா, பால் ஊத்ததுக்கு எலும்பு கூட தேறாது. ஆமா, ஒங்க இதுல பால் எல்லாம் ஊத்துவீங்களா?”
அப்படியே அக்கல்லின் மீதமர்ந்து என்னையும் உட்காரச் சொன்னான்.
“போன வாரம், ஒருநாள், எந்தங்கச்சியும் நானும் செஸ் வெளயாடிட்டு இருந்தோம். அவ பயங்கர மண்ட, தெரியும்லா? ஜெயிக்கப் போறோம்னு தெரிஞ்ச ஒடனே, என்ன போட்டு கொமைக்க ஆரம்பிச்சா. கொஞ்ச நேரம் நானும் மாத்தி அவள ஒட்டிட்டு இருந்தேன். கடைசில ஒரு செக் மேட் வச்சிட்டு சொன்னா, ‘ஆமாமா, மிலிட்டரி மூள தான உள்ளருக்கு, பொறவு எப்பிடி ஜெயிப்ப?’. ‘நா மிலிட்டரி மூளைன்னா நீ யாராக்கும்?’ன்னு நா கேட்டு அவ கையப்புடிச்சி நுள்ளி விட்டேன்.”
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தேன் நான்.
“ஓங்கி ஒரு சமுட்டு சமுட்டிட்டாரு மக்கா. அவ்ளோ நேரம் நின்னு ஒட்டு கேட்டுட்டு இருந்துருக்காரு. எந்தங்கச்சி வந்து அவர புடிக்கப் போறா, அவள பச்ச பச்சயா ஏசிட்டாரு. அதெல்லாம் ஒரு அப்பன் பேசுக வார்த்தையா மக்கா? அதுவும் அண்ணன் தங்கச்சியப் பத்தி! எனக்கு ‘சீ’ன்னு ஆயிட்டு பாத்துக்கோ. அவளுக்க அறிவுக்கும் குணத்துக்கும் இந்தாளு அவ பக்கத்துல வர முடியுமா மக்கா? அப்பன்னா என்ன வேண்ணா பேசுவாரா? பிட்டு பட தேட்டர்ல இவர பாத்துட்டு வந்து சிரிக்கானுவோ பையம்மாரு. மிலிட்டரி ஒழுங்கு மயிரெல்லாம் மத்தவொளுக்கு மட்டுந்தானா, கேக்கேன்?”
“பொறவு நீ என்ன செஞ்ச ல?”
“வா, கொகைக்குள்ள போவம்.” என்று சொல்லிவிட்டு எழுந்தான். அந்த நாய் மெல்ல இடப்புறமாக இறங்கி அப்பெருங்கல்லின் ஓரத்தில் தெரிந்த இடுங்கிய துளையில் நுழைந்தது. ஏசுவடியான் பக்கத்துப் பாறை நீட்சிகளைப் பிடித்து இறங்கினான். பாறை பிசிபிசுப்பாக பாசி படிந்து இருந்தது. சற்று கவனமின்றி ஓரடி வைத்தாலும் முடிந்தது. அந்த இடுக்கில் நுழைந்து சில அடிகள் சென்றதும், பாறையோடு படுத்துத் தவழ்ந்து இறங்க வேண்டும். துளி வெளிச்சமும் கிடையாது. வானமும் நிலமும் காடும் காற்றும் ஏதுமற்ற இருள் பாறைக்கூடு போல.
கீழிறங்கி தளமாகவிருந்த பாறையில் நின்றோம். இருபுறமும் சாய்த்து வைக்கப்பட்ட மாதிரி இரு பெரும் பாறைகள். ஆங்காங்கே குங்குமம் சாற்றிய மாதிரி சிவப்புத் திட்டுக்கள். முன்னால் வானம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானம் மட்டுமே. இடப்புறப் பாறையில் குடைந்து உருவாக்கப் பட்டிருந்த அச்சிறு குகையைப் பார்த்து ஏதோ யோசித்தவாறு நின்றான் ஏசுவடியான்.
“நா போய் கேட்டுட்டு வாரேன் மக்கா.” என்று சொல்லிவிட்டு குனிந்து அக்குடைவின் உள்ளேறி உட்கார்ந்தான். சரியாக இருவர் உட்காரும் அளவு தான் அக்குடைவு. அதன் சுவர் பகுதியில் ஒரு புடைப்புச் சிற்பம், உருவத் தெளிவின்றி இருந்தது. பார்ப்பதற்கு கையில் கமண்டலம் தாங்கி நிற்கும் ஒரு முனிவரைப் போல இருந்தது. அதன் முன் தளமாக ஆற்று மணல், தோண்டி விளையாடும் அளவிற்கு இருக்கும். ஏசுவடியான் உள்ளமர்ந்து அசையாமல் இருந்தான். அந்த நாய் அக்குடைவின் அருகே சென்று உற்றுப் பார்த்து நின்றது.
நான் தனியாக வெட்டவெளி வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்தேன். ஏசுவடியான் என்ன நினைத்து உள்ளே போயிருக்கிறான்? அவனுக்கு குழந்தைப் பாதமா? கோழிக் கீச்சலா? மெல்லிய குளிர்காற்று என் முகத்தில் வந்து தீண்டியது. மலையேறிய களைப்பில் உடல் நீட்டி நிமிர்ந்து படுக்கச் சொன்னது. அப்படியே சரிந்து படுத்தேன். சில நிமிடங்களில் நான் உறங்கியிருக்க வேண்டும். என்னென்னவோ கனவாக வந்ததாக நியாபகம். ஒரு கடற்கரையில் நானும் ஏசுவடியானின் தங்கையும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், ஏசுவடியான் நீண்ட தாடியுடன் எங்கோ புறப்பட்டுச் செல்கிறான், அவன் அப்பா நடுவீட்டில் உட்கார்ந்து விஸ்கி குடித்துக் கொண்டிருக்கிறார், அம்மா வந்து அப்பளப் பொரி வைக்கிறாள், அத்தையின் உடல் அவரது காலடியில் கிடக்கிறது, ஆச்சி அருகே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிறாள், பின், அதே ஆச்சி பிணமாகக் கிடக்கிறாள், தங்கை உட்கார்ந்து அழுகிறாள், ஏசுவடியானும் நானும் மந்தார மலைக் குகையில் கண்மூடி உட்கார்ந்திருக்கிறோம், பக்கத்தில் ஒரு வெள்ளை நாய், பனித்துளி போன்ற வெண்மை.
நாய் குரைப்பதைக் கேட்டுக் கண்விழித்த போது மனம் முதலில் ‘ஏசுவடியான்’ என்றது. என்னைச் சுற்றிலும் ஒரே புகை மூட்டம். இல்லை, மேக மூட்டம். வெண்ணிறப் பெரும் மேகமொன்று அந்தக் குகையோடு சேர்த்து எங்களை மூடிக் கொண்டிருந்தது. உடல் நடுங்குமளவு குளிர். கைகளை அசைத்து மேகமூட்டத்தை விலக்கப் பார்த்தேன். மேகத்திலிருந்து மேகம் விலகி மேகமாக மாறிக்கொண்டேயிருந்தது.
பயத்தில், “யேசு, லேய் யேசு, மக்கா” என்று கத்தினேன். நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது.
“யேசு, எங்கருக்க யேசு?”
எந்த பதிலுமில்லை. இருக்குமிடத்தை விட்டு எழுந்து நிற்கக்கூட தைரியமின்றி அப்படியே உட்கார்ந்திருந்தேன். எசுவடியானின் உடல் பாறையில் மோதி தலை சிதறிக் கிடக்கும் காட்சி என் கண்முன் வந்து போனது.
“லேய், பயமாருக்கு மக்கா, யேசு, யேசு.”
அப்போது அந்த வெண்ணிற மேகத்தின் வெளிப்புறம் சரசரவென சத்தம். கூர்ந்து கவனித்துக் கேட்டேன். மழை! சாரல்! அச்சாரல் துளிகள் மேகத்தைத் துளைத்து என்மீது விழுந்தன. உடல் சிலிர்க்க மெல்ல கையூன்றி எழுந்து நின்றேன். கைநீட்டி மேகத்தின் ஊடாக அச்சாரல் துளிகளைப் பிடித்து என் முகத்தில் தேய்த்தேன். அக்கணம் நிச்சயமாக ஏசுவடியானை மறந்துவிட்டிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த நாயின் குரைப்புச் சத்தம் அடங்கியபோது அவன் நினைவு வர அதிர்ந்து அப்படியே உட்கார்ந்தேன்.
“யேசு, யேசு.”
மேகத்தின் ஊடே அந்த நாய் மெல்ல வந்து என்னருகே நின்றது. அதன் கூடவே மெல்லிய ஓசையாய் என் காதுகளை வந்தடைந்தது வலப்புறமிருந்து ஒரு குரல். ஒரு பாடல். ஏசுவடியான்தான்!
“எந்தன் ஆத்ம நேசரே, வெள்ளம்போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில்,
தஞ்சம் தந்து, இயேசுவே, திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன்.”
ஏசுவடியான் நீலாம்பரியில் மனமுருகி பாடிக் கொண்டிருந்தான். நான் அப்படியே கண்மூடி உட்கார்ந்திருந்தேன். என் மூச்சு என் கவனத்தில் வந்தது.
“வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே எந்தன் நம்பிக்கை, நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர்.”
பாடல் நின்றது. ஏசுவடியான் அழுதுகொண்டிருந்தான். அந்தக் குகை முழுதும் அவனது அழுகை எதிரொலித்து நிறைந்தது. நான் அசையாமல் இருந்தேன். சில நிமிடங்கள் கழித்து எங்களைச் சூழ்ந்திருந்த வெண்மேகம் மெல்ல கலைய ஆரம்பித்தது. எனக்கு ஐந்தடி தூரத்தில் நின்று கொண்டிருந்தான் ஏசுவடியான். என்னைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.
“மலைக்கு மேல, மழைக்கும் மேல நாம இருந்தோம்லா மக்கா? அப்போ, மழையா பெஞ்சது நாமதான், என்ன?” என்று கேட்டு என் பதிலுக்காகக் காத்திராமல் என்னைக் கடந்து சென்று மேலேறினான்.
கீழிறங்கும் வழியில் ஒரு சொல்கூடச் சொல்லாமல் நடந்தான் ஏசுவடியான். முகத்தில் அப்படியொரு பிரகாசம், நீங்காப் புன்னகை. அடிவாரத்தில் சென்று அந்த பெட்டிக்கடைக்காரரிடம் ஏதோ பேசினான். ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி அந்த நாய்க்குக் கொடுத்தான். அது சாப்பிட்டு முடித்து அவனது காலருகே அணைந்து நின்றது. ஏசுவடியானிடம் குழந்தைப் பாதமா? கோழிக் கீச்சலா? என்று கேட்கத் துடித்தது என் மனம். ஆனால், கேட்க வேண்டாமெனவும் தோன்றியது. அடுத்த சில வாரங்களில் ஏசுவடியான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் போய்விட்டான். அது அப்படித்தான் நடக்கும் என்பது ஒருவேளை எனக்கும் தெரிந்திருந்ததோ என்னவோ!
***
சுஷில் குமார் – 35க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”..
ஆசிரியர் தொடர்புக்கு : sushilkumarbharathi2020@gmail.com