Friday, March 29, 2024
Homesliderபெருந்தொற்று (மொழிபெயர்ப்பு)

பெருந்தொற்று (மொழிபெயர்ப்பு)

டினோ புஸ்ஸாட்டி (தமிழில் : நரேன்)

டினோ புஸ்ஸாட்டி (Dino Buzzati) – (1906-1972) : இத்தாலிய எழுத்தாளர். இவர் தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு பத்திரிக்கையாளனாக நுழைந்து நாவல்கள், சிறுகதைகள், ஓவியம்,  நாடகங்கள், கவிதைகள் என பல்துறையில் மிகப் பிரபலமாக விளங்கியவர். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் மீயதார்த்தவாதத்தையும் குறியீட்டியத்தையும் இத்தாலிய இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியது. முக்கியமாக அவரது எழுத்துகளில் மேற்படரும் அபத்தம் இவரைத் தனித்துவமான புனைவிலக்கியவாதியாக முன்னிறுத்தியது. தான் ஒரு ஓவியன் என்பதால் அவரே காமிக்ஸ் புத்தகங்களையும் உருவாக்கினார். இத்தாலிக்கு வெளியே பிரான்ஸில் மட்டுமே பிரபலமாக அறியப்பட்ட இவர் தற்போதுதான் ஆங்கில வாசக உலகம் இவரின் படைப்புகளை மெல்ல கவனிக்கத் தொடங்கியிருக்கிறது.

இவரின் சிறுகதைகள் நாம் அன்றாடம் காணும் உலகின் சிதைவை மிகவும் விசித்திரமானதொரு  உணர்வுடன் நிறுவுகிறார். மெல்லிய அங்கதமுடன் நம் வாழ்வின் நகை முரண்களை யதார்த்தமாகச் சொல்லிச் செல்பவை இவரின் கதைகள். எளிய மக்களின் வாழ்வை நோய்த்தொற்று போன்ற ஒரு பேரிடர் கைப்பற்றும்போது அரசியல் சித்தாந்தங்கள் அதன்மீது சூழ்ந்து அச்சூழலைத் தனதாக்கிக் கொள்ள முனையும் ஒரு அபத்தம் இச்சிறுகதையில் வெளிப்படுகிறது. மனிதர்களின் உயிரிலும் காக்கும் மருந்திலும் தன் வண்ணத்தைப் பூசிட ஒவ்வொரு அரசும் ஒரு நோய்க்கிருமியின் வேகத்தைவிட அதீதமாகச் செயல்படுகிறது. அப்படியான அரசாங்கங்களையும் அவற்றை அண்டிப்பிழைக்கும் அனேகர்களையும் விட எந்தக் கிருமியால் ஒரு பெருந்தொற்றை கொடுத்துவிடமுடியும் என்ற கேள்வி எழுகிறது.

                                                            பெருந்தொற்று 

                                                            – டிநோ புஸ்ஸாட்டி

ஒருநாள் காலை நேரம் மிகச் சரியாக எட்டு மணியைக் கடந்து முப்பது நிமிடங்கள் ஆகியிருந்தபோது கர்னல் என்னியோ மொலினாஸ் சி.ப்.பில்[1] உள்ள பெரிய அறையொன்றின் தலைமைப் பீடமான தனது மேஜையில் அமர்ந்திருந்தார். அவ்வமைச்சகத்தைச் சேர்ந்த மற்ற பணியாட்களைப் போல அவரும் சீருடையின்றி பொது உடையில் இருந்தார். அவர் அத்துறையின் தலைவர் என்பதால் அவரின் மேசை ஒரு உயர்ந்த பீடத்தின் மீது போடப்பட்டிருந்தது, அங்கிருந்தவாறே தன்னிடம் பணிபுரியும் குறிமுறை[2] நீக்குபவர்களின் மேஜைகளை அவர் கண்காணிக்க முடியும். சுவர்களிலெல்லாம் வரிசையாக உயர்ந்த அலமாரிகள் பொருத்தப்பட்டு அவை முழுதும் புத்தகங்களாலும் ஒலிநாடாக்களாலும் நிறைக்கப்பட்டிருந்தன: அகராதிகள், களஞ்சியங்கள், நிலப்படங்கள், கோப்புகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளின் தொகுப்புகள், ஆராய்ச்சிகளுக்கும் குறிப்புகளெடுக்கவும் அடிப்படையாகத் தேவையான அத்தனையுமிருந்தன. இந்த மிகப்பெரிய அலுவலகம் முழுவதும் போரை எதிர்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்று, இப்பொழுதெல்லாம் மந்தகதியில்தான் இயங்குகிறது; ஆனால் அத்துறையின் ஊழியர்கள் தற்போதும் முழுவதுமாக பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு பணிபுரிந்த ஆட்கள் அக்குறிப்பிட்ட வேலையைச் செய்வதில் நாட்டிலேயே மிகச் சிறந்தவர்கள். அமைச்சகத்தில் அவர்கள் “இருபத்தி நான்கு மேதைகள்” என்று விளையாட்டாக அறியப்படுபவர்கள்.

கர்னல் தனது மீசை மயிர் முனையை மென்மையாகத் தடவிக் கொடுத்தார், தினசரி வருகைப்  பதிவேட்டைத் திறந்தார், அதில் தன் செயலாளர் சற்று முன் எழுதியிருந்த காலைக் குறிப்புகளைப் பார்த்தபின் பெயர்ப் பட்டியலை வாசிக்கத் தலை நிமிர்த்தினார். இருபத்தி நான்கில் எட்டு மேசைகள் காலியாக இருந்தன. “ஹ்ம்ம்ம்…”, என்று தனக்கேயுரிய பாணியில் முணுமுணுத்தார். முன்வரிசையிலிருந்த ஒருவன் அவரின் வருத்தமுற்ற கண்களைக் கண்டு அவரை நோக்கிப் புன்னகைத்தான். நம்பிக்கையிழந்தவரைப் போல் தன் தலையை அசைத்தார். பொதுவாக  இனிமையானவராயினும் மற்றவர்களிடமிருந்து தன்னைச் சற்று தொலைவில் இருத்திக்கொள்ளும் வழியறிந்தவர் இந்தக் கர்னல். அந்த இளைஞனின் புன்னகை மேலும் விரிவடைந்தது, “சார், இது இப்படியே போனால் நமது இலாகா இன்னும் இரண்டு நாட்களில் மொத்தமாக காலியாகிவிடும்.” மொலினாஸ் அதைத் தலையசைத்து ஆமோதித்தார்.

இந்த நேரத்தில்தான் ஸ்பிரின்ஸெல் கட்டுக் கட்டாக குறிமுறை அவிழ்க்கப்படவேண்டிய தகவல்கள் கொண்ட கோப்புகளுடன் உள்ளே நுழைந்தான். து.இ.ம. இலாகாவின் (துருப்புகள் இயக்கம் மற்றும் இடைமறிப்பு இலாகா) செயலாளரான அவன் அநியாயத்திற்கு மெலிந்தும் பசி வெறிப் பார்வையும் கொண்டவனாகக் காணப்பட்டான். ஸ்பிரின்ஸெல் எளிய பதவியிலிருப்பவனாயினும் அதிக மரியாதை பெறுபவனாக இருந்தான். சிலர் அவன் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னார்கள், ஆனால் அது சுத்த முட்டாள்தனமான கூற்றாகவே இருக்க முடியும். மற்றவர்கள் ஒரேயடியாக அவன் ஒரு உளவாளி என்றே அறிவித்துவிட்டனர். சுருக்கமாக, அவனை அத்தனை பேரும் அஞ்சினர். அவன் உடனிருக்கையில், மக்கள் மிகக் கவனமாகவே பேசினார்கள்.

ஸ்பிரின்ஸெல் உள்ளே நுழைவதைக் கண்டதும், ஸ்பிரின்ஸெல் ஏதோ தன்னுடைய மேலதிகாரி என்பதைப் போலவும் அவனுக்கு முன் விரைப்பாக எழுந்து நிற்கும்படியும் தன்னுடைய உள்ளுணர்வு தன்னை உந்துவதைக் கவனித்து அதைக் கட்டுப்படுத்தினார் கர்னல். அதற்குப் பதிலாக வெறும் பெரிதாகப் புன்னகைத்தார்.

ஸ்பிரின்ஸெல் மேடையின் மீதேறிச் சென்று கோப்புகளைக் கீழே வைத்துவிட்டு, மூன்றில் ஒரு பங்கு காலியாக இருந்த மேசைகளைச் சுட்டிக் காட்டி கண்ணடித்தான். “என்னா சார், களையெடுப்பு போல ஏதேனுமா…ஆஹ்?” எதனாலேயோ அவனுடைய கேலிப்பேச்சுகள் குழப்பமானதாக… புரிந்து கொள்ளமுடியாததாகவே இருந்தன.

“எனதருமை ஸ்பிரின்ஸெல், குளிர் காய்ச்சல்…. இந்த வருடம் அது உண்மையிலேயே ஒரு பெருந்தொற்று நோய்தான்.. அதிர்ஷ்டவசமாக இதுவரையிலும் கொடும் துன்பத்தைக் கொடுக்காத ஒரு வடிவத்தைத்தான் எடுத்திருக்கிறது. சிக்கல்களே இல்லை… படுக்கையில் நான்கே நாட்கள், பிறகு எல்லாம் சரியாகிவிடும்…”

“ஹ்ஹே.. நான்கு நாட்கள்! சிலசமயங்களில் நான்கு வருடங்கள், ஹா ஹா..!” என்று நீட்டிக் குழைந்தபடி சற்றும் அகமகிழ்வற்ற வறண்ட, கடுமையான வெறுப்புமிழும் தன்னுடைய சிரிப்புகளில் ஒன்றை உதிர்க்கத் தொடங்கினான் ஸ்பிரின்ன்ஸெல். 

மொலினாஸுக்குப் புரியவில்லை. “நான்கு வருடங்களா? அதெப்படி குளிர் காய்ச்சல் ஒருவருக்கு நான்கு வருடங்களுக்கு நீடிக்கும்?”

“ஹ்ஹே” – ஸ்பிரின்ஸெல் எப்போதும் தன்னுடைய பேச்சுகளைத் தொடங்குவதும் முடிப்பதும் இந்த அருவருப்பான நாசியொலியுடந்தான். “அது தற்போது எடுத்திருக்கும் வடிவம் மிதமானதுதான் என்பதை நானும் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் “ஸ்பானிஷ்” வகையறாவைத்தான் விரும்புவேன், உடனிருப்பவர்களுக்கு அது ஏற்படுத்தக்  கூடிய அத்தனை அபாயங்களையும் மனதில் கொண்டேதான் இதைச் சொல்கிறேன். இந்த நோய்த்தொற்று எவரையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைக்கக் கூடியதாக இல்லை, ஆனால் அதேயளவிற்கு எவராலும்  விரும்பத்தகாததாக இருக்கிறது”

“அது சரி, அதுதானே இயல்பு. குளிர்காய்ச்சல் ஒருபோதும் யாருக்கும் இனிமையானதாக இருப்பதில்லையே!”

“ஹ்ஹே… சார், உங்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது… ஹ்ஹே!”

“எதைப் பற்றி? எனக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?”

ஸ்பிரின்ஸெல் ஏமாற்றத்தில் தலையசைத்தான். “நான் இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும் சார், சி.ப்.பின் தலைவரான ஒருவருக்கு இது கொஞ்சம் அதிகம்தான். என்னையே எடுத்துக்  கொள்ளுங்கள், யாருடைய உதவியுமின்றி அதை நானே புரிந்து கொண்டேன்.”

“எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?” தற்போது சற்றே தளர்வடைந்து கலக்கமுற்ற குரலில் கர்னல் கேட்டார்.

“ஹ்ஹே, ஹ்ஹே-உங்கள் மீது நம்பிக்கை வைத்துச் சொல்லலாம் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான மனிதர், கூச்ச சுபாவமுடையவர்; அப்படிப்பட்டவராக இல்லாதிருந்தால் உங்களால் இந்தப் பதவியைப் பெற்றிருக்கவே முடியாது.“ – கர்னலின் பதற்றத்தை ரசிப்பதற்காக ஒரு நீண்ட இடைவெளிவிட்டு பின்பு மர்மமான தொனியில், சன்னமான குரலில் சொன்னான் – “ஆனால் சார்.., நீங்கள் கவனிக்கவில்லையா.. இந்த குளிர் காய்ச்சல் தன்னுடைய இரையை தற்போக்காகத் தேர்வு செய்வதில்லை என்பதைக் கவனிக்கவில்லையா.. ஹ்ஹே?”

“எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை, எனதருமை ஸ்பிரின்ஸெல். எனக்கு உண்மையிலேயே…..”

“ஹ்ஹே.. அப்படியென்றால் நான் உங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையாக புட்டு புட்டு வைக்க வேண்டும். இந்த நுண்ணுயிரிகள் அல்லது நோய்க் கிருமிகள் அல்லது அது என்ன எழவோ… அவற்றுக்கு ஒரு சிறப்பான தனித்தன்மை இருக்கிறது. அவற்றால் ஒருவனின் இதயத்திற்குள் புகுந்து அவனைப் புரிந்து கொள்ளமுடியும் என்பதைப் போல ஆட்களைப் பிரத்தியேகமாகத் தேர்வு செய்கிறது…. அவைகளை ஏமாற்றுவதற்கு வழியே கிடையாது, ஹே..!”

மொலினாஸ் கலவரத்துடன் அவனைப் பார்த்தார். “இங்கே பார், என் அன்பு ஸ்பிரின்ஸெல், உனக்குக்  கிண்டல் செய்து விளையாடவேண்டும் என்பது போன்ற எண்ணம் இருக்கலாம்…. ஆனால் நீ இப்படியே புதிர் போட்டபடி பேசிக் கொண்டே போனால் என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நீ எப்படி எதிர்பார்க்கலாம்? ஒருவேளை இன்று என் சிந்தனையின் வேகம் சற்று குறைந்துபோயிருக்கலாம். நான் தலைவலியோடுதான் இன்று காலை எழுந்தேன். எனக்கு எதுவும்…”

“ஹ்ஹே.. உங்களுக்கு ஒன்றுமில்லை இல்லை சார், உங்களுக்கில்லை! உங்களுக்குக் குளிர் காய்ச்சல் தொற்று ஏற்படாது! ஒழுக்கத்தின் முழு மனித உருவமே நீங்கள்தானே, ஹ்ஹே..!”

“இதில் ஒழுக்கம் எங்கிருந்து வருகிறது?”

“ஹ்ஹே.. நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் சார். இன்று நீங்கள் சற்று மந்தமாகத்தான் இருக்கிறீர்கள்..”. அவன் தன் குரலை மேலும் தாழ்த்திச் சொன்னான், “சார்.., உண்மை என்னவென்றால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால்: உங்களுக்குத் தொற்றுக் காய்ச்சல்   வந்தால், நீங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று அர்த்தம்.”

“அரசாங்கத்திற்கு எதிராகவா?”

“ஹ்ஹே.. நம்புவதற்கு எனக்கும் கூட கடினமாகத்தான் இருந்தது… ஆனால் கடைசியாக நானும் ஏற்றுக்கொண்டேன். என்னை நம்புங்கள், நம்மை வழிநடத்தும் தலைவரின் பெருந்திறமையைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமேயில்லை… நாட்டின் நாடித்துடிப்பை உணர்ந்துகொள்வதற்கு என்னவொரு சிறப்பான யோசனை… அரசு காய்ச்சல்! இதுவொரு அற்புதமான விஷயம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? நாடு முழுவதும் ஊடுருவியிருக்கும் தேசத் துரோகிகள், அவநம்பிக்கையாளர்கள், அரசின் மீது சந்தேகம் கொள்பவர்கள், எதிரிகள் இவர்களை மட்டும் தேடிப் பிடித்துத் தாக்கும் காய்ச்சல்… அதே நேரத்தில் அர்ப்பணிப்புள்ள குடிமகன்கள், தேசபக்தர்கள், மனசாட்சிப்படி வேலை செய்யும் தொழிலாளர்கள் இவர்களையெல்லாம் தொடவே தொடாது!”

கர்னல் தனது ஆட்சேபக் குரலை இப்போது எழுப்பினார். “ஆனால் எனதன்பு ஸ்பிரின்ஸெல், இப்படி ஒரு விஷயம் எப்படிச் சாத்தியப்படும்? இன்றைக்கு இங்கே இல்லாதவர்களெல்லாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்கிறாயா? “

“ஹ்ஹே.. உங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றால் மிகக் கவனமாகச் சிந்தியுங்கள், ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகச் சிந்தித்துப் பாருங்கள்… இதெல்லாம் எவ்வளவு சரியாகப் பொருந்திப் போகிறது என்பது உங்களுக்குப் புரியவரும்… உதாரணத்திற்கு, அதோ அந்த முதல் மேசை, யாருடையது அது?”

“லெஃப்டினெண்ட் ரெக்கார்டினியுடையது”

“ஹ்ஹே, ரெக்கார்டினி நம் தலைவரின் ஆட்சிக்கு எதிரானவர் அல்ல என்று சத்தியம் செய்ய நீங்கள் தயாரா? கொஞ்சம் பின்னோக்கி யோசியுங்கள்… ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவர் தன்னை மீறி உங்களிடம் உண்மையாக வெளிப்பட்டிருப்பார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்தானே.. ஹ்ஹே?”

“அட ஆண்டவா, ரெக்கார்டினி ஆட்சியின் மீது பெரும் ஆர்வத்தைக் காட்டியவர் இல்லைதான், ஆனால் அதற்காக அவர் மீது குற்றம் சுமத்த முடியாது இல்லையா?”

“ஹ்ஹே.. ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள், அரசுக் காய்ச்சல் ஒருபோதும் தவறு செய்யாது… அதோ அங்கிருக்கும் காலியான மேசை, அது யாருடையது?”

“அது பேராசிரியர் கியூரிகோவினுடையது, மூன்றடுக்கு சங்கேத மொழியில் வல்லவர் அவர்…. இந்த இலாகாவிலேயே மிகவும் திறமையான மூளை.”

“ஹ்ஹே, பார்த்தீர்களா மறுபடியும்! நான் சொல்வது சரியென்றால், அவர் ஏற்கனவே பல அதிகாரிகளிடம் உரசிக் கொண்டவர்… அவர் சென்ற வருடம் கிட்டத்தட்ட வெளியேற்றப்பட இருந்தார் இல்லையா?”

“நீ சொல்வது சரிதான்,” ஒப்புக்கொண்ட கர்னல் சற்றே கவலையுற்றவராகச் சொன்னார், “ஆனால்.. ஆனால் இதில் சிலருக்கு வேறு காரணங்களுக்காகவும் உடல் நலமில்லாமல் போயிருக்கலாம்தானே?… இது மிக அபாயகரமான முறையாக இருக்கிறதே… ஒருவரை மிகச் சுலபமாகத் தவறானவராகக் கருதிவிடக் கூடும்”.

“ஹ்ஹே, அதைப் பற்றி பயப்படவேண்டாம் சார், உளவுத் துறை அதைக் கவனித்துக் கொள்ளும்… வருகைப் பதிவேட்டைப் பாருங்கள்… இன்று வராதவர்களின் பெயர்களுக்கு எதிராகச் சிவப்புக் குறி போடப்பட்டிருந்தால் அவர்களுக்கெல்லாம் இக்காய்ச்சல் என்று அர்த்தம்.. எவ்வளவு நேர்த்தி!!”

கர்னல் தன் நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்தார். தனக்கும் உடல் நலமில்லாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தார். துரதிர்ஷ்டவசமாக நானும் சில சமயங்களில் தலைவரைச் சபித்திருக்கிறேன். தன் எண்ணங்களை வலுக்கட்டாயமாக ஒருவர் எப்படி தடுத்து நிறுத்துவது?

“ஹ்ஹே.. நீங்கள் தலைவலி என்று சொன்னீர்கள் இல்லையா? நீங்கள் இன்று வெளிறிப்போய்தான் காணப்படுகிறீர்கள் சார், ஹ்ஹே..! ஸ்ப்ரின்ஸெல் வில்லத்தனமான சிரிப்பைச் சிறிதாக உதிர்த்தான்.

“இல்லை.. இல்லை, இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன்,” தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னார் மொலினாஸ். “நல்லவேளை, நான் மிக நலமாகவே உணர்கிறேன்.”

“ஹ்ஹே… அப்படியென்றால் நல்லது…. பிறகு பார்ப்போம் சார், ஹ்ஹே?” தனக்குத்தானே கொக்கரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போனான்.

இது என்ன மாதிரியான விளையாட்டு? ஸ்பிரின்ஸெல் என்னைக் கேலி செய்கிறானா? அல்லது மக்களின் மனசாட்சியைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக உண்மையிலேயே அரசாங்கம் இப்படியான ஒரு கொடூரச் செயலை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறதா? இன்று வராத தன் கீழ்நிலை ஊழியர்கள் எட்டு பேரையும் கருத்தில் கொண்டார். அவர்களைப் பற்றி அவர் யோசிக்க யோசிக்க அரசு காய்ச்சல் – அப்படி ஒன்று இருக்குமானால் – தன்னுடைய இரையை மிகச் சரியாகத்  தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்பவராக அவர் மாறினார். ஒன்றில்லாவிட்டாலும் மற்றொரு காரணத்திற்காக இந்த எட்டு பேரும் உண்மையான தேசபக்தி உடையவர்கள்தானா என்று சந்தேகங்கொள்ளத்தக்கவர்கள்தான். எட்டு பேரும் மிகவும் புத்திசாலிகள், நிச்சயமாக பெரும் புத்திசாலிகள், ஆனால் அரசியல் நம்பிக்கையைப் பொறுத்தவரையில் அது எதிர்மறையான அம்சமாகக் கருதப்படுகிறது! ஆனால் இப்போது அவர் தன்னையே கேட்டுக் கொண்டார், “நிச்சயமாக இந்த இழிவான கிருமி தவறுகள் இழைக்கக்கூடும், ஒன்றுமறியாத அப்பாவிகளையும் தாக்கக்கூடும் தானே? என்னையும் தாக்குமா? நிச்சயமாக எல்லோருமே எப்போதோ ஒருமுறையாவது தலைவருடன் ஒத்துப் போகாமலோ அல்லது எதிர்ப்பாகவோ இருந்திருக்கக்கூடும் அல்லவா? நான் நோய்வாய்ப்பட்டால் என்னை என்ன செய்வார்கள் அவர்கள்? பதவி விலக்குவார்களா? நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவார்களா? என் உடல் நிலை சரியில்லாமல் போவதை உணரத் தொடங்கினாலும் நான் விட்டுக் கொடுக்கக்கூடாது“.

அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது தலைவலி மிகவும் மோசமடைந்தது. அவரது காதுகளில் இரைச்சலொலி பெருகியது. அரவணைப்பிற்காகவும் ஓய்விற்காகவுமான வேட்கை கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. ஸ்பிரின்ஸெல் கொண்டு வந்த கோப்புகளை பெரும் பிரயத்தனத்தோடுதான் அவரால் திறக்க முடிந்தது. அதிலிருந்த செய்திகளைப் படித்துப் பகுத்து வைத்தார். ஆனால் அவை அவர் கண்களுக்கு முன்னால் உருக்குலைந்து மிதக்கத் தொடங்கின. புரிந்து கொள்ளமுடியாத புள்ளி விவரங்கள் கூடிய ஒரு தாளைக் குனிந்து உற்று நோக்கி அதை ஆய்வதைப் போல பாவனை செய்து, நாடித் துடிப்பை அழுத்தி கைக்கடிகாரத்தின் துணை கொண்டு எண்ணத் தொடங்கினார்: தொண்ணூற்றி எட்டு. உடல் வெப்பம் இருக்குமோ? ஒருவேளை வெறும் பயம்தானா?

அவர் தன் வீட்டை அடைந்ததும் வேகமாக வெப்பமானியை எடுக்க ஓடினார். கால் மணி நேரத்திற்கும் மேலாக அதை தன் வாயில் வைத்திருந்தார். இறுதியாக வெளியில் எடுத்துப் பார்க்க போதுமான தைரியத்தைச் சேகரித்து பின் பார்த்ததும் மூச்சற்றுப் போனார்: நூற்றி இரண்டு.

மலேரியா மருந்தை நன்கு அளந்து தேவையானளவு உட்கொண்டார். இரைச்சலொலியில் காதுகள் அதிர ஒவ்வொரு அசைவிலும் தலைவலி கூடிக்கொண்டே போக, அம்மதியம் அவர் தன் அலுவலகத்திற்குத் திரும்பச் சென்றார். ஆச்சரியம்: ஸ்பிர்ன்ஸெல் அவருக்காக அவரது மேசையருகில் காத்திருந்தான், தன்னுடைய பழிக்கும் பார்வையை அவர் மேல் நிலை குத்தியிருந்தான்: “ஹ்ஹே சார், நான் இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும், ஆனால் உங்கள் மதிய உணவின் போது நீங்கள் அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டீர்கள் போலிருக்கிறது… உங்கள் கண்கள் இவ்வளவு மோசமாக வெளுத்திருக்கிறதே, ஹ்ஹே!”

“இரண்டு குடுவைகள்தான், கண்டிப்பாக அதற்கு மேலே எடுத்துக்கொள்ளவில்லை,” தன் மீது வீசப்பட்ட பழியைப் புறந்தள்ளும் பாவனையில் சொன்னார் மொலினாஸ்.

“ஹ்ஹே.. அது சரி, தலைவலி எப்படியிருக்கிறது?”

“சுத்தமாக போயே போச்சு,” சற்றும் தணியாத பதட்டத்துடன் சொன்னார் மொலினாஸ். காகிதக் குவியலிடையில் எதையோ பரபரப்புடன் துழாவி தனக்கு நிறைய வேலை இருப்பதைப் போல ஒரு காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.

ஸ்பிரின்ஸெல் அங்கிருந்து சென்றான், ஆனால் சற்று நேரத்திலேயே திரும்ப வந்தான். இப்படி இங்கே அடிக்கடி திரும்ப வருவதற்கான காரணங்களை யோசிப்பதையே அவன் வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தான். தன்னுடைய புதிர்க் கேள்விகளை வரிசையாகத் தொடர்ந்து அடுக்குவான் : கர்னல் தன் கழுத்தைச் சுற்றி எதற்காகக் கம்பளித் துண்டைச் சுற்றியிருக்கிறார்? அவருக்குச் சளி பிடித்திருக்கிறதா? அல்லது அவருக்கு இருமல் இருக்கிறதா? லேசாகக் குரல் கம்மியது போல் இருக்கிறதா?

மொலினாஸ் தன் மீது விழும் தாக்குதல்களைத் தொடர்ந்து தடுத்தபடியே இருந்தார் எனினும் அவர் சோர்வடைந்து போனார். ஸ்பிரின்ஸெலின் வார்த்தைகள் அவரது தலைக்குள் மணியோசையைப் போல எதிரொலித்தபடி இருந்தன. பெரும் எடை மிகுந்த ஈயக் குண்டு ஒன்று அவரின் பிடரியில் கட்டி  தொங்கவிடப்பட்டது போலிருந்தது அவருக்கு. நடுக்கம் ஒரு அலையென அவரைத் தாக்கியது.   நெஞ்சம் கூர்மையாகப் பற்றியெரிவது போன்றதொரு உணர்வு. நிச்சயமாக இது முழுமையான காய்ச்சல்தான். அதை யாரிடமும் குறிப்பிட்டுச் சொல்லவும் முடியவில்லை, நிலைமையை அது மேலும் மோசமாக்கிவிடும். அதுவும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதைத் தெளிவாகவே கண்டுபிடித்துவிட்ட அந்த உளவாளி ஈனன் ஸ்பிரின்ஸெல் அவர் இறுதியாக நிலைகுலைந்து சரிவது வரை கூட காத்திருக்கும் பொறுமையிழந்து கொண்டிருந்தான்.

இல்லை, அவர் தன்னை விட்டுக்கொடுக்கக் கூடாது. அதற்கடுத்த நாள், தன் உடலின் வெப்பம் நூற்றி மூன்றை நெருங்கியிருந்த போதிலும், தன் தலை உருக்கிய ஈய உருண்டை போலக் கனப்பதாகத் தோன்றினாலும், தன்னுடைய அலுவலக மேஜையில் வந்து அமர்ந்திருந்தார் கர்னல். “என்ன ஆச்சு சார்,  உங்கள் முகம் இப்படி செக்கச் சிவந்து இருக்கிறதே, ஹ்ஹே?”

“குளிரினால் இருக்கலாம்,” தளர்ந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் பதிலளித்தார் கர்னல்.

“ஹ்ஹே, சார், நீங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எதனால் உங்களுக்கு இப்படியொரு நடுக்கம் ஏற்படுகிறது?”

“நடுக்கமா? சுத்த பேத்தல்.”

“ஹ்ஹே சார், உங்களுக்கு உடம்புக்குச் சரியில்லையென்றால் எனக்கு உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருக்கும்.”

“அபத்தம்.. அபத்தம்..  தொண்டையில் வெறும் லேசான கரகரப்புதான்…” நூற்றிரெண்டு புள்ளி ஆறு, நூற்றிரெண்டு புள்ளி எட்டு. கர்னல் ஒரு ரோபோவின் ஒழுங்கைப் போல வழக்கமான நேரத்திற்குத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்தார், வேலைகளை அவருக்குக் கீழ் பணிபுரியும் ஆட்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு தன்னுடைய மேஜையில் அசைவின்றி அமர்ந்து கொள்வார், வறட்டு இருமல்களால் வெடித்துத் துன்புறுவார்.

“ஹ்ஹே, சார், உங்களுக்குச் சுவாச நோய் வந்துவிட்டது போல் இருக்கிறதே, ஹ்ஹே?”

“இல்லையில்லை.., வெறும் தொண்டைப் பிரச்சினைதான். நான் முற்றிலும் நன்றாகவே இருக்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன்.”

நான்காவது நாள் அவர் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டார். “வாங்களேன் நாம் வெளியில் போய் ஒரு காஃபி சாப்பிட்டு வருவோம்,” தூண்டில் போட்டான் ஸ்ப்ரின்ஸெல். அவரை ஏதோ சோதனைக்குள்ளாக்கத்தான் இதைச் செய்கிறான் என்பது வெளிப்படை! வெளியே கடுமையான குளிர், கதகதப்பான அலுவலகத்திற்குள்ளேயே அவருடைய பற்கள் தந்தியடித்துக் கொண்டிருந்தன.

“அழைப்பிற்கு நன்றி. ஆனால் வேண்டாம். இன்று எனக்கு நிறைய வேலை இருக்கிறது.”

“ஹே.. அதிக நேரம் ஆகாது: இரண்டே நிமிடங்கள்தான்.”

“இல்லை வேண்டாம், என் அன்புத் தோழனே…”.

“ ஒருவேளை உங்களுக்கு உடம்பு முடியாமல் இருக்கிறதோ, ஹ்ஹே..?”

“இல்லை.. இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்.”

“ஹ்ஹே.. என்னை மன்னிக்கனும் சார். நீங்கள் ஏதோ வலியில் இருப்பதைப் போலக் காணப்பட்டீர்கள் அதனால்தான்….”

ஐந்தாவது நாள் அவரால் எழுந்து நிற்பதே சிரமமாகிப் போனது. காய்ச்சல் வந்த அவரது வேலையாட்களில் ஒருவர் கூட (இப்போது கணக்கு மொத்தம் பதினாறாகியிருந்தது) திரும்ப வரவேயில்லை. எங்கே இருக்கிறார்கள் அவர்கள்? என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அவர்கள் வீடுகளுக்கு தொலைபேசியில் அழைத்தால், உறவினர்கள்தான் எடுக்கிறார்கள். எடுத்து, “அவர் இங்கு இல்லை” என்று மட்டும் பதிலளிக்கிறார்கள், மேலதிக விளக்கம் எதுவும் கொடுக்காமல். சிறையிலிருக்கிறார்களா? எங்காவது தலைமறைவாகியிருக்கிறார்களா? நாடு கடத்தப்பட்டார்களா? தனக்கு நிமோனியாதான் என்பதில் மொலினாஸ் உறுதியாக இருந்தார், ஆனால் மருத்துவரிடம் செல்வதற்கு அவருக்குத் தைரியம் இல்லை. நிச்சயமாக அவர் படுக்கையில் அனுமதிக்கும்படி அறிவுறுத்துவார் பின்னர் அமைச்சரவைக்கு  அவரே தெரிவித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

ஆறாவது நாள். இருபத்தி நான்கு மேஜைகள் அத்தனையும் காலி: அவற்றை ஆக்கிரமித்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் காய்ச்சல். ஸ்பிரின்ஸெல் முன்னெப்போதையும்விட அதிகம் பழித்துச் சுட்டுவதைப் போல வாய் பொத்தி சிரித்தான்: “ஹ்ஹே, ஹே, அறிவுஜீவிகளின் மீது நம் தலைவர் அவநம்பிக்கை கொண்டிருப்பது அவ்வளவு தவறு என்று இனி சொல்லவிட முடியாது அல்லவா! இந்த புகழ் பெற்ற சி.ப்.பில் இனி மீதமிருப்பது என்ன? வெறும் தகவல் பட்டுவாடா செய்யும் ஆண்கள், சுமை தூக்கிகள், கிளார்க்குகள்… எளிய ஆத்மாக்கள். அவர்கள்தான் முழு மனதுடன் விசுவாசமாக இருப்பவர்கள்… ஆனால் மேதைகள் அத்தனை பேரும் அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டார்கள். மேதைகள், அரசை வெறுப்பவர்கள்!… ஹ்ஹே ஹ்ஹே, சார், நீங்கள் மட்டும்தான் ஒரே விதிவிலக்கு, இன்னமும் அசராமல் தனித்து நிற்கிறீர்கள்!” ஸ்பிரின்ஸெல் கண் சிமிட்டினான், ‘நீங்கள் அதே கூட்டத்தைச் சேர்ந்த ஆள்தான், நீங்களும் விரைவில் போய் விடுவீர்கள்!’ என்பதை மறைமுகமாகச் சுட்டுவதைப் போல.

எட்டாவது நாள். எரியும் நிலக்கரிக் குவியலைப் போன்ற நெஞ்சோடும் நூற்றி நான்கை நெருங்கிவிட்ட உடற் சூட்டோடும், கர்னல் தன்னுடைய அலுவலகத்திற்குள் வழக்கமான நேரத்தில் நுழைந்தார். பேயைப் போன்று காட்சியளித்தார். இன்னும் சற்று நேரத்தில் ஸ்பிரின்ஸெல் வந்துவிடுவான் என்றும் அவன் கணைகளை தடுத்தாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே தனக்குள்ளே  ஆழத்திலிருந்து சற்றே இனிக்கும் ஒரு அருவருப்பு மேலெழுந்தது… கை அலம்பும் வட்டிலில் நிறைந்து மேலெழும் நீரைப் போல மேலே மேலேவென அது எழுந்து வந்தது.

ஆனால் இந்தக் காலையில் ஸ்பிரின்ஸெல் நேரந்தவறிவிட்டான். ஒருவேளை அவன் எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஒருவேளை அவன் ஏற்கனவே இதைப்பற்றிய அறிக்கையைக் கொடுத்துவிட்டிருக்கலாம். எனக்கு பெரும் அவமானம் நேர்ந்துவிட்டது, எல்லாம் பாழாகிவிட்டது. அதனால்தான் அவன் இன்று வரவில்லை.

அதன்பிறகு சற்று நேரத்தில், அமைதியான வெற்று அறைகளைக் கடந்து காலடிச் சத்தம் தன்னை நோக்கி நெருங்கி வருவதைக் கேட்டார். ஸ்பிரின்ஸெல் அல்ல ஆனால் அவன் அடிமைகளில் ஒருவன், தகவல்கள் அடங்கிய கோப்புடன் வந்தான். “ஸ்பிரின்ஸெல் எங்கே?,” கேட்டார் கர்னல்.

அம்மனிதன் உடலசைவிலேயே தன் விரக்தியை வெளிப்படுத்தினான்: “அவர் இன்று வரவில்லை. அவர் வரப்போவதில்லை. அவர் படுக்கையில் இருக்கிறார்.”

“எதற்காக?”

“அவரின் உடல் வெப்பம் கட்டுக்கடங்காமல் எகிறிக்கொண்டிருக்கிறது.”

“யாருக்கு? ஸ்ப்ரின்ஸெலுக்கா?”

“அவருக்குக் காய்ச்சலும் கூட… மேல்மட்டத்தில் இஃதொரு முக்கியச் சம்பவமாகவும் பேசப்படுகிறது.”

“காய்ச்சலா? ஸ்பிரின்ஸெலுக்கா? என்னிடம் விளையாடாதே..”

“ஏன்? இதிலென்ன ஆச்சரியம்? அவர் நேற்றிலிருந்தே கொஞ்சம் நலமில்லாமல்தான் இருந்தார்.”

கர்னல் தன் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தார். பெரும் நம்பிக்கையும் வாழ்க்கையின் பூரிப்பும் அவருள் தோன்றியது. அவர் பாதுகாப்பாகத்தான் இருந்திருக்கிறார், மிகப் பாதுகாப்பாக. அவர் வென்றுவிட்டார்! அந்த பரிதாபத்திற்குரிய உளவாளிதான் வீழ்ந்தான், அவர் அல்ல! மொலினாஸ் தற்போதே நலமாகிவிட்டதைப் போல உணர்ந்தார், நோய்க்கூறு எதுவுமில்லை, நெஞ்சில் பற்றி எரிந்த நெருப்பு தற்போதில்லை, உடல் சூடும் இல்லை. மோசமான கட்டத்தை கடந்தாகிவிட்டது.

ஆழமாக மூச்சை இழுத்து விட்டார். இத்தனை வருடங்களில் முதன்முறையாகக் கண்களை உயர்த்தி ஜன்னலை நோக்கினார். உறைந்த மேற்கூரைகளுக்கு அப்பால், தெள்ளத்தெளிவான நீல வானத்தின் அடியில், தூரத்துச் சிகரங்கள் பனி போர்த்திய வெண்மையை மினுமினுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். வெள்ளி முகில்கள் மெல்ல ஊர்ந்தபடி பூமியின் துயரங்களையெல்லாம் கடந்து மேலே மகிழ்வுடன் அசைந்தாடி மிதப்பதைப் போலத் தோன்றியது. அவர் அவற்றைப் பார்த்தார்: எவ்வளவு காலமாக அவற்றின் இருப்பை அவர் பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார்? மனிதர்களாகிய நம்மிடமிருந்து அவை எவ்வளவு வித்தியாசமானவை, அவர் எண்ணினார். கடவுளே, எவ்வளவு பரிசுத்தம், எத்தனை அழகு!

***

[1] Cipher – சிஃபர், மறையெழுத்து அலுவலகம்.

[2] Decoder – குறிமுறை நீக்கி

தமிழில் : நரேன் – சொந்த ஊர் ராணிப்பேட்டை, பணி நிமித்தம் தற்போது வசிப்பது கோவையில். இவரது இந்த கதையை சரியாகச் சொல்வோம் எனும் சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நல்ல கவனம் பெற்ற தொகுப்பு எனச் சொல்லலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular