Friday, March 29, 2024
Homeபொதுபன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு

பன்னிரண்டு மரணங்களின் துயர் நிரம்பிய தொகுப்பேடு

                    பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒரு சிட்டுக்குருவியை கல்லெறிந்து கொன்ற பிறகு கண்ணாடியில் என்ன தெரியும்?

ரு சிட்டுக்குருவி கல்லடிபட்டு விழுகையில் கல்லை எறிந்த கரத்திற்கு சொந்தமான மனிதனின் முகத்தைப் பார்ப்பதை விடவும் நிலத்தில் வீழ்வதற்கு பயணம் செய்ய வேண்டிய தொலைவை அளவிடும்.  பொறுக்க முடியாத வலியோடு சுழன்று விழும்போதும் பறக்கும் ஒன்றால் நிலத்தில் வேகமாக விழுந்துவிட முடியாது.பறக்கும் உயரம் அதிகமாக இருந்தால் நிலத்தில் மோதுவதற்கான காலமும் அதிகரிக்கும்.  விரைவில் மயக்கமடைவதற்காக கணக்கற்ற முறை சுழன்றாலும் நரம்புகளில் வலியின் வெள்ளம் குறையாத சிட்டுக்குருவின் உதிரத்துளி அதற்கும் முன்பாகவே நிலத்தில் விழுந்து அது விழ வேண்டிய இடத்தை அடையாளமிட்டு வைக்கும்.  மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றையும் அறிந்திராத பறவை அதன் மரணம் சின்னமிடப்பட்டு காத்திருப்பதை சத்தமின்றி ஏற்றுக் கொண்டு வலியோடு வீழும்.  பிறகு கல்லெறிந்த அந்த மனிதனின் குழப்பமான கனவுகளில் ஒரு துளி உதிரம் அந்தர வெளியிலிருந்து முகிழ்த்து ஒவ்வொரு முறையும் அவன் முகத்தில் சொட்டும். அவனால் அதைத் துடைக்க முடியாது.  ஒவ்வொரு நாளும் செந்நிறக் கறையோடு கண்ணாடியில் தெரியும் அவன் முகத்தில் ஒரு பறவையின் உருவம் தலைகீழாய் சுழலும்.

அறுந்த வால் பல்லியின் கேட்கப்படாத பிரார்த்தனை

குட்டிப் பல்லியின் எலும்புக் கூடு குளியலறையில் கிடந்தது.  வாலறுந்த குட்டிப் பல்லி நேற்றுத்தான் அதன் உடல் மீது வழியும் நீரில் நனைந்து, தடுமாறி, நீர்வழியும் துளைகள் நிரம்பிய தட்டிலிருந்து வெளியே வந்தது.  தட்டிலிருந்து வெளியேறும் வரை நிறுத்தப்பட்டிருந்த நீர் பெய்தல் பல்லி கொஞ்சம் நகர்ந்ததும் மீண்டும் பொழிந்தது. மீண்டும் நீர்வழியும் துளைகள் நிரம்பிய தட்டு. அறுந்த வால் பல்லி அதன் உடல் மீது சோப்பு மணமிக்க நீர் பொழிவது நிற்க வேண்டுமென்று பிரார்த்தித்தது.  வால் அதுவாகவே முளைத்துவிடும்.  தானாகவே நிகழ்பவைகளுக்காக யாரும் பிரார்த்திக்கத் தேவையில்லை. அதன் பிரார்த்தனை எல்லாம் கடைசித் துளி நீரும் உலகிலிருந்து உடனடியாக மறைவதே.  இன்று, எலும்புக்கூடான பல்லி இருட்டுக் குழி கண்களால் உலகைப் பார்த்தது.  அதன் பயங்கரத்தில் உலகம் அதிர்ந்து குலுங்கியது.  யூனிஃபார்ம் அணிந்த டிரம்பெட்டுகள் இசைக்கும் பேண்ட் வாத்தியக்காரர்களோடு கண்களைக் கொறித்து ஊர்வலம் எடுத்துச் சென்ற எறும்புகள் தின்ன விரும்பாமல் விட்டுப் போன குச்சி எலும்போடு, நீர் வழியும் துளைகள் நிரம்பிய தட்டின் ஒரு துளையில் மறைவதற்கு முன்பாக விடைபெறுபவர்களின் புன்னைகையோடு குளிக்கும் மனிதனைப் பார்க்கும்.  அவன் தண்டுவடத்தில் சொருகும் பனிக்கத்தி அதன் குருத்தெலும்பில் இரண்டு இருட்டுக் குழிகளை செதுக்கும்.

நாயின் மரணத்திற்கு சாட்சியாகும் சோடியம் வேப்பர் விளக்குகள்

டிபட்டு சாகும் நாய்களில் ஒரு நாய் இனி எக்காலத்திற்கும் சாலையின் மீது வெறுப்பைத் தரும்.  அவ்வளவு வேகத்தில் சாலையில் உருளும் யாருக்கும் அந்த நாய்க்காக பிரேக் அடிக்கத் தோன்றாது.  செத்துப் போன நாயின் பிதுங்கிய உறுப்புகள் தெரு நாய்களின் குண்டுப் பற்களை விடவும் அச்சமூட்டுவது என்றாலும் செத்துப் போன நாயின் மதிப்பு தெரு நாயின் மதிப்பை விட செட்டியார்கள் சொல்வதைப் போல கால்வீசம் குறைவானதுதான்.  தெருநாய்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  செத்துப் போன நாயைப் பற்றி தெருநாய்களும் கவலைப்படுவதில்லை.  ரப்பர் சக்கரங்களின் அழுத்தம் தாளாமல் வலி மிகுந்த ஊளையால் கிழிந்த அதன் தோலைப் பார்த்திருக்கும் விளக்குகளின் காதுகளில் இரவு முழுக்க கதையாகச் சொல்லும். செத்துப் போன நாய்களின் வலி மிகுந்த ஊளையை காதுகளால் கேட்க முடியாது.  மிகுந்த அஜாக்கிரதையோடு அந்த நாயின் கழுத்தில் பிணைத்திருந்த லெதர் பெல்ட்டின் கடவுளின் முனையை கைநழுவ விட்ட அவன் தான் இனி சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் செத்துப் போன நாயின் வாழ்க்கை சரிதத்தை தார்ச்சாலையின் ப்ரெய்லி பள்ளங்களில் வாசிப்பான்.

புகையாகக் கரைந்த சிகரெட்டிற்காக யாரும் துக்கப்படுவதில்லை

ரண்டு ஸ்தூபிகளுக்கு இடையே புகையாகக் கரையும் இலைத்துகள்களின் வாழ்க்கையை கரிசனம் மிகுந்த நுரையீரல்களின் ஆழக் கிளைகள் குறிப்புகளாக எழுதும்.  பூட்ஸ்கால்களால் நசுங்கும் பஞ்சு வடிகட்டிகள் வலியின்றி முணங்கும்.  வடிகட்டிளின் மீது நெருப்பு தீண்ட யாரும் அனுமதிப்பதில்ல பூட்ஸ்கால்களின் மீது அவை எப்போதும் நன்றியோடிருக்கும்.  சாதனைகளின் புத்தகங்களில் அதிக நேரம் எரிந்த சிகரெட்டைக் குறித்த செய்திகள் இல்லாததால் இலைத்துகள்களின் ஆயுட்காலம் அவரவர் கற்பனைக்கே விடப்பட்டிருக்கிறது.  இறந்த சிகரெட்டுகளுக்காக துக்கப்படுகிறவர்கள் அடுத்த சிகரெட்டை புகைக்க மாட்டார்கள்.  துக்கமில்லாதவர்களால் சிகரெட்டுகளை அனுபவிக்கவும் முடியாது. அதனால் சிகரெட் புகைத்தல் விரல்கள் சிக்கிக் கொள்ளும் ஒரு பொறி.  முடிவற்ற வெளியை விரல்களின் இடைவெளி நிதம்பத்தின் வழியே பார்க்கும் சிகரெட்டுகளின் கண்கள் சமிக்ஞை விளக்குகளின் சிவப்புப் புள்ளிகளால் ஆனவை.  நினைவில் இன்னும் மரித்திராத முதல் சிகரெட்டின் சிவப்புப் புள்ளிகளால் கடைசி சிகரெட் சிலையாக நிற்கும்.  காலம், ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் தண்டவாளத்தைக் கடக்கும் நத்தையாக தூரத்தில் புகை தெரிவதைப் பார்த்து நகரும்.  சிகரெட் பிடிப்பவனின் வாழ்க்கை ஒரு சிகரெட்டின் வாழ்க்கையை விட எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை.

ஷூ லேஸ்களின் இசை

ழையாலும் காலத்தின் ஈரப்பதத்தாலும் நனைந்து நைந்து போன ஒரு ஜோடி தோல் ஷூக்கள் மாடுகள் மேயும் குப்பையில் கிடக்கும்.  பசியாறாத நாய்கள் கடித்து பல்லுடைந்து விலகிய பிறகு, கீறல்கள் விழுந்த உடல்களை ஒரு ஜோடி ஷூக்கள் மாற்றி மாற்றி நக்கி ஆறுதல் சொல்லிக்கொள்ளும்.  கைவிடப்பட்ட துயரத்தை லேஸ்களின் குறுக்காகப் பிணைந்திருக்கும் தந்திகளில் ஒலியின்றி இசைக்கும்.  ஷூக்களின் அழியாத இசைக் குறிப்புகளை வாசித்தறியும் பறவைகள் கூடடைந்ததும் பேடைகளிடம் கள்ளச் சிரிப்போடு சேதியாகச் சொல்லும். மழைக்காலம் முழுக்க கொசுக்களின் முட்டைகளை அடைகாக்கும் ஷூக்கள் எதற்கும் இருக்கட்டுமென்று சில வளர்ந்த கொசுக்களை வெளிச்சம் படாத அவற்றின் உள்ளறைகளில் நீர்க் கண்ணிகளில் சிக்க வைத்திருக்கும்.  செத்துப் போன கொசுக்கள் செத்துப் போன நாய்களுக்கு நேர் எதிரானவை, தீங்கற்றவை.  கொசுக்களின் குடல், அடிபட்டு செத்து போன நாயின் குடல்களைப் போல அவற்றின் இருப்பை தம்பட்டம் அடிப்பதில்லை. ஆக…ஷூக்களில் நிகழ்ந்த ஒரு கொசுவின் மரணம் கிழவிகளின் மரணத்தைப் போல வெற்றிலை மெள்ளுவதற்கு ஒப்பானது.  குளிரில் நடுங்கும் கருமையான நீர் தேங்கிய ஷுக்களை மாநகராட்சி பணியாளர்கள் மழைக்காலத்திற்குப் பிறகு நெருப்பு மூட்டி ஜூவாலைகளின் கம்பளியால் மூடுவார்கள்.  புகையின் புலப்படாத கரையில் கரையேறும் ஷூக்கள் அவற்றை அணிந்திருந்த கால்களின் பித்தவெடிப்பு துர்நாற்றத்தை மெள்ள மறக்கும்.  கால் விரல்களின் ஞாபகம் சுமாரானது.  அவற்றால் ஷுக்களின் நினைவைத் தேக்கி வைக்க முடிவதில்லை.

மூடும் கதவுகள்

தாமரை விதைகளின் மூலத்தோற்றத்தை விளக்குவது தாமரைகளின் மூலத்தோற்றத்தை விளக்குவதை விடவும் கடினம்.  சதுப்பு நிலங்கள் எல்லா நீரையும் நன்னீராக மாற்றும் என்று புவியியலாளர்கள் அறிவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வலசைப் பறவைகள் அறிந்திருக்கின்றன. அவைதான் பரிசுத்த வெளிச்சம் நிரம்பிய காலை வேளையில் எவ்வளவு உற்சாகமாக பறக்கின்றன. சதுப்பு நிலங்களில் வளர்ந்த புற்களுக்கு இடையே மீன்குஞ்சுகள் சூரியனைப் பார்க்க துள்ளி வரும் செய்தியை வலசைப் பறவைகள் இரண்டு வரிசைகளின் கடைசிப் பறவைகளுக்கும் கடத்தும்.  அவைதான் பரிசுத்த வெய்யில் நிரம்பிய மதிய வேளையில் சதுப்பு நிலங்களின் வளர்ந்த தாவரங்களின் அடியில் நீரில் மிதந்தபடி ஓய்வெடுக்கும்.  அவைதான் பரிசுத்த ஆரஞ்சு வண்ணம் நிரம்பிய மாலை வேளையில் எவ்வளவு நிறைவோடு எழும்பிப் பறக்கின்றன. வலசைப் பறவைகள் இரண்டு வரிசைகளின் கடைசிப் பறவைகளிடமும் அவை உண்டு முடித்த மீன்களுக்காக மெளனம் காக்கச் சொல்லும்.  பரிசுத்த இருள் நிரம்பிய இரவில் அவைதான் எவ்வளவு அமைதியாக நாளைதான் பிறப்பவை போல மரங்களின் இலைப்பெட்டிகளில் அடைந்து கொள்கின்றன. மனிதன் அத்தனை குப்பைகளையும் சதுப்பு நிலத்தில் கொட்டுவான்.  மனிதன் மனிதனை வெறுப்பவன். மனிதன் மனிதன் அல்லாதவற்றையும் வெறுப்பவன். ஆக மனிதன் எல்லாவற்றையும் வெறுக்கிறான் என்கிற தர்க்கத்தின் அடிப்படையில் மனிதன் சதுப்பு நிலத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றி வைத்திருக்கிறான்.  நல்ல நிலங்களையும் குப்பைக் கிடங்காக மாற்றும்  மனிதனைப் பற்றி அறிந்திராமல், பிறிதொரு நாளின் பரிசுத்தமான வெளிச்சம் நிரம்பிய காலை வேளையில் நினைவுகளில் மீன்கள் துள்ள சதுப்பு நிலம் வரும் வலசைப் பறவைகள் எவ்வளவு பயங்கரமாக கூட்டாகத் தற்கொலை செய்துகொள்கின்றன.  சக உயிரிகளான பறவைகள் தற்கொலை செய்யும் அவலத்தை பார்க்க சகிக்காத நான் அத்தனை கதவுகளையும் மூடினேன், உலகின் மிகப் பெரிய கதவான எனது கண்கள் உட்பட.

மென்மையானவற்றை கிழிப்பதற்கு தேவைப்படும் உலோக நகங்கள்

னிதனைக் கொன்றால் அவனுடைய இதயமும் மரிக்கும் என்பது எளிமையான ஒரு புரிதல்.  ஆனால் ஓர் இதயத்தைக் கொன்றால் மனிதனும் மரிப்பான் என்பது அவ்வளவு எளிமையாகப் புரிந்துகொள்ளக் கூடியதல்ல.  இதயத்தை கொல்வதற்கு உங்களுக்கு ஒரு சமையலறைக் கத்தி போதும்.  ஆனால் அதன் துடிப்பைக் கொல்வதற்கு துரோகம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.  நுழைந்து வெளியேறும் ஒவ்வொரு இரத்த அணுவிலும் குறையாத அன்போடு உங்கள் முகத்தை பச்சை குத்தும் இதயத்தின் தசைகளில் இரத்தக்காட்டேரிகளின் உலோகப் பற்களை சொருகத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஜெ.சி.பியின் உலோக நகங்களால் கிழிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உலோகக் கலப்பைகளால் உழுது எள் விதைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது உலோகக் குண்டுகளால் சிதைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  மென் தசைகளால் இதயத்தைக் கொல்ல முடியாது.  அறுக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பல் நிரம்பிய இரம்பங்கள் எளிதாகக் கிடைக்கும்.  மேசையில் கிடக்கும் பல் நிரம்பிய இரம்பத்தின் முன்னே, அறுத்த பிறகும் ஓர் இதயம் துடிப்பதின் அறிய முடியாத விதியை வியப்போடு டிராகுலாக்களின் காதல் கடிதங்களில் தேடுகிறான் சிம்னி விளக்கின் ஒளியில் அப்போதுதான் துரோகம் புரிந்த ஒரு காதலன்.

அனைத்தும் நடனமாடும் காலி அரங்கு

ரவின் மரணத்தை வாசிப்பதற்கு முன்பாக நாம் பகலை புரிந்துகொள்ள வேண்டும்.  அற்பவமானவைகளின் மீதும், அபூர்வமானவைகளின் மீதும் ஒன்றுபோலவே வெளிச்சத்தைப் பாய்ச்சும் பகல் நீதியுணர்வு மிக்கது.  பகலின் அத்தனை வெளிச்சமும் ஒரு கண்ணிலிருந்து வருவதை நம்மால் பார்க்க முடியும்.  நகராத அந்த கண்ணின் மைய அச்சிலிருந்து ஒரு குரல் வெளிச்சத்தின் வழியாகக் கேட்கிறது அல்லது அது வெளிச்சத்தின் குரலேதான்.  ஹைட்ரஜன் கிதார்களின் மெல்லிய ஒலி பெருகிப் பெருகி ஹீலிய டிரம்ப்பெட்டாக ஒலிக்கும் அணுக்களின் குரலில் ஒரு ஜீகல்பந்தி.  வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு பதிலாக அதன் ஒலியைக் கேட்க வேண்டும்.  வெளிச்சம் மழையின் நேரெதிரானது இல்லையென்றாலும் மழையை கேட்பது போல வெளிச்சத்தையும் கேட்க வேண்டும்.  ஒன்று நீராலானது மற்றொன்று துகள்களால் ஆனது.  மழைக்கு நேரெதிர் என்று ஏதாவது இருக்கிறதா?…..

காதுயர்த்தி உறங்கும் எலிகள் பகல் வெளிச்சத்தின் குரலைக் கேட்காமல் வங்குகளில் பதுங்கியிருக்கும்.  அவை எப்போதுமே வெளிச்சத்தின் குரலை விடவும் இருளின் அமைதியில் சுகம் காண்பவை.  மலர்களின் மீதும் படகுகளின் மீதும் படரும் பகல், காம்பின் மீதும், நீரின் மீதும் அசையும் இரண்டின் அசைவுகளும் வேறுவேறுவானவை என்று கண்டுகொள்ளும்.  காம்பு ஒற்றை விரலால் மலரை அசைக்கிறது.  நீரோ எண்ணற்ற அலைகளால் படகை அசைக்கிறது.  ஆனால் வனங்களை அசைப்பதற்கு எரிமலைகள் பெருமூச்சு விட வேண்டும். பகல் அசைவதற்கு?… அவர்கள் எப்போதுமே சொல்வார்கள் எதிரெதிரானவை மட்டுமே ஒன்றை முழுமையாக்கும் என்று.  பகல் அல்லது இரவு இரண்டில் ஒன்று மட்டுமே இருப்பதை யாரும் விரும்புவதில்லை.  யாருமே விரும்பாத ஒன்று என ஒன்றுமே இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த மலத்தைக் கூட விரும்புகிறவர்கள். பகல் என்னவெல்லாம் செய்கிறதோ அதற்கு எதிரானவற்றை இரவு  செய்வதில்லை.  பகல் என்னவெல்லாம் செய்வதில்லையோ அவற்றையே இரவு செய்கிறது.  எதிரானது இல்லை, அது ஒரு நீட்சி.  பொறுப்புணர்வு மிகுந்த இரவுதான் அத்தனையும் செய்து முடிக்க வேண்டும்.

பகல் ஒற்றை விளக்கின் வெளிச்சத்தைத் தவிர வேறெந்த விளக்கும் ஒளிர்வதைப் பார்த்ததில்லை.  இரவோ விளக்குகளின் வரலாற்றையே சொல்லும்.  சுள்ளிகளைத் தின்னும் நெருப்பிலிருந்து இப்போது வந்த எல்.இ.டி விளக்குகள் வரை.  இரவு, விளக்குகளின் வரலாற்றை நிலவின் மறைந்திருக்கும் பின்பக்கத்தில் சுதந்திரமாக பாறைகளில் செதுக்கி வைத்திருக்கிறது.  வேறெவற்றையும் விட விளக்குகள்தான் இப்போது வரை நிகழ்பவைகளின் சாட்சியமாக இருக்க முடியும்.  விளக்குகளின் இருப்பில் அல்லது இன்மையில் மட்டுமே இப்போது வரை அத்தனையுமே நிகழ்ந்திருக்கின்றன.

உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போதும், இருட்பாதைகளில் நடக்கும் போதும், சுரங்களில் உலோகங்களைத் தோண்டும் போதும் நீரைப் போலவே மனிதனுக்கு விளக்குகளும் முக்கியமானவை.  சில நேரங்களில் இருளை அஞ்சுவதைப் போலவே விளக்குகளையும் மனிதன் அஞ்சுகிறான்.  கள்ள முயக்கத்தின் சமயத்தில், வங்கிகளின் அலார அமைப்பை உடைக்கும் போது, யாருமற்ற கடற்கரையில் நிர்வாணமாகக் குளிக்கையில் முகங்களில் எதிர்பாராமல் படும் விளக்குகளின் ஒளியை நான் உட்பட எல்லோருமே வெறுக்கின்றனர்.  இரவு, மலைகளின் மீதும் அதைவிட மரங்களின் மீதும் விரைவாகப் படரும்.  ஆனால் இரவுகளின் அந்திமக் காலத் துடிப்பை பறவைகள் மட்டுமே சொல்ல முடியும்.  இலைகள்தான் பறவைகளுக்கு அந்த இரகசியங்களை சொல்பவை.  மலைகளுக்கு இலைகள் இல்லை.  பகல் ஒரு மியூசியம்.  இரவு ஒரு காலி அரங்கு.

மாட்சிமை பொருந்திய ராணியின் துக்கப்படும் பதக்கம்

ந்தப் பதக்கம் நீலக் கோட்டின் மார்புப் பகுதியில் ஒரு வாழ்க்கையின் சாகசம் மிகுந்த பகுதியை பார்க்கின்ற கண்களுக்கெல்லாம் சொல்லும்.  ஜெனரல்களின் ஆர்டரின் பேரில் தூர நிலங்களுக்கு கப்பல் ஏறிய இந்திய சிப்பாய்கள் மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் ராணிக்கு வெற்றியையும் அவளது அரண்மனைக் கொடிக்கு பெருமையையும் தேடித் தர மட்டக் குதிரைகளோடும் விக்கர்ஸ் கம்பெனிக்காரர்களின் .303 பிரிட்டிஷ் இயந்திரத் துப்பாக்கிகளோடும் எடை மிகுந்த பூட்ஸ் அணிந்த அச்சு நாடுகளின் மூன்று இராணுவங்களுக்கு எதிராக போரிட்டவர்களுக்காக வழங்கப்பட்ட பதக்கம்.  உச்சபட்ச கெளரவமிக்க ”விக்டோரியா கிராஸ்” பதக்கம் அல்ல.  நீலக் கோட்டின் மார்புக் பகுதியை அலங்கரித்த அந்தப் பதக்கம் சாதாரண சிப்பாய்களுக்கானது.

பதக்கங்கள் கிடைக்கப் பெறாத சிப்பாய்கள் அவர்களது வாட்களோடு வீடு திரும்பினார்கள்.  போரின் நினைவாகவும் அவர்களது வாழ்க்கைக்கு ஒரு கெளரவத்தை அளிக்கும் விதமாகவும் வாளோடு வீடு திரும்பியவர்களை விடவும் பதக்கதோடு வீடு திரும்பியவர்களுக்கு சொல்வதற்கு துப்பாக்கிகளின் ஓசை மிகுந்த சாகசக் கதைகள் அதிகமிருந்தன.

டுனிசியாவில் இத்தாலிய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக வழங்கப்பட்ட அந்தப் பதக்கம் தினமும் துடைக்கப்பட்டதால் பளபளப்போடு, நீலக் கோட் அணிந்த கிழவன் பஸ் ஸ்டாண்டில் குவியும் வெளிநாட்டுப் பயணிகளிடம் சுட்டு விரலால் தொட்டுக் காட்டி உடைந்த ஆங்கிலத்தில் பெருமைப்பட்டுக் கொள்வதை வேடிக்கை பார்த்தது.  அத்தனை சாகசக் கதைகளின் முடிவில் சில்லறைக்காக கையேந்தும் நீலக் கோட் அணிந்த கிழவினின் முகத்தில் அவன் உறங்கும் போது ஆணியில் தொங்கும் பதக்கம் காறி உமிழும்.  சாதாரண சிப்பாய்களுக்கு இராணுவப் பென்சனுக்கான அடையாள அட்டைகள் பதக்கங்களை விடவும் பயனுள்ளவை.  நீலக் கோட் அணிந்த கிழவனின் கையில் விழும் சில்லறைகளின் மீது பதக்கம் சிறுநீர் கழிக்கும்.  ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியின் ரோஸ்நிறக் கைகளிலிருந்து நழுவி நீலக் கோட் அணிந்த கிழவனின் மார்பில் கிடைப்பதை நினைத்து கேவலுடன் அழும் பதக்கத்திற்கு அறுந்த நூலோடு தொங்கிக் கொண்டிருக்கும் கோட் பட்டன்கள் ஒவ்வொன்றாக ஆறுதல் சொல்லும்.

நள்ளிரவில் தூக்கமின்றி விழித்த பதக்கம் அசைவின்றிக் கிடந்த நீலக் கோட் அணிந்திராத கிழவனைச் சுற்றிலும் ஆட்கள் இருப்பதைப் பார்த்தது.  அந்தக் கோட்டோடு அவனைப் புதைத்தார்கள்.  பழைய பொருட்களை வாங்கும் சைக்கிள்காரனின் பாலிஎத்திலின் சாக்குப் பையில் நெருக்கியடிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளோடு சண்டையிட மனமில்லாமல் ஆறுதலுக்கு பட்டன்களும் இல்லாத வாழ்வை எண்ணி விதியை நொந்தது இரண்டாம் உலகப் போர் பதக்கம்.

கத்திரிக்கோல்கள் எனும் இரட்டைப் பிறவிகளும் வரலாறு தொங்கும் மீசையும்

கூர் மழுங்கிய கத்தரிக்கோல்கள் வீடுகளுக்குள் காணாமல் போய்விடும்.  அதுவும் மீசை வெட்டும் கத்தரிக்கோல்களை சாணை பிடிப்பதும் இல்லை, தூக்கி எறிவது இல்லை.  துருவின் செம்பழுப்புப் புள்ளிகள் வண்டுகடி போலப் பரவி அதன் இரட்டை உடலை நிறைக்கும்.  தலையில்லாத கத்தரிக்கோல்களை தூக்கி எறிவதற்கு முன்பு காகிதத்தின் முனைகளில் அதன் கூர்மை பரிசோதித்துப் பார்க்கப்படும்.  வீட்டிற்கு வரும் குழந்தைகள் கத்தரிக்கோல்களை விளையாடுவதற்கு எடுக்கும் போது அவை கூர்மை இழந்திருந்தாலும் பழைய நினைவில் விரல்களை வெட்டுவதற்கு முனையும் என்பதால் கவனமாக கையாளச் சொல்வோம்.  பிரிக்கப்படாத கத்தரிக்கோல்களின் முனைகள் சேர்ந்து மீன் வாயாக மாறும்.  ஒரு கத்தரிக்கோலை கிடைமட்டத்தில் வைத்தால் மீன் போலத் தெரியும்.  வெட்டும் போது அந்த மீன் அசைந்து அசைந்து துணிகளிலோ, காகிதங்களிலோ அதற்கான பாதையை உருவாக்கும்.  மீசை வெட்டும் கத்தரிக்கோல்களால் பால் அல்லது தயிர் பாக்கெட்டுகளைக் கூட யாரும் வெட்டுவதில்லை.  பெரும்பாலும் பெண்கள் தான் பால் பாக்கெட் முனைகளின் சுத்தம் குறித்து கவலைப்படுவார்கள். ஆனால் இந்த வாக்கியம் பேச்சலர் அறைகளுக்கு பொருந்தாது.

தையல்காரர்களின் கத்தரிக்கோல் எடை மிகுந்தது.  காகிதங்களை கத்திரிக்கும் கோல்கள் ஆரங்சு வண்ண விரல்பிடி உடையவை.  மீசை வெட்டும் கத்தரிக்கோல்கள் கருப்பு விரல்பிடி உள்ளவை.

பிளாஸ்டிக் உறைகளுக்குள்ளே இருக்கும் போதும் கூர்மையுள்ள கத்திரிக்கோல்களை எல்லோரும் அஞ்சுவார்கள்.  உறை பிரித்ததிலிருந்து ஒவ்வொரு முறை கையாளுகையிலும் கத்திரிக்கோல்களின் மீதான அச்சம் விலகுவதில்லை.  அவைகளுக்கு துணையாகக் கிடைத்த பிளேடுகள், சமயலறைக் கத்திகள், பிளாஸ்டிக் குமிழியை மேல் நோக்கி நகர்த்த எட்டிப்பார்க்கும், பேனா ஸ்டேண்டில் இருக்கும் பார்சல் உறைகளைப் பிரிக்கும் கூரான சிறு கத்திகளை விடவும் சின்னஞ்சிறிய கத்திரிக்கோல்கள் அப்படியொன்றும் ஆபத்தானவை இல்லையென்றாலும் தையல்காரர்களின் எடை அதிகமான கத்திரிக்கோல்கள் எப்போதும் ஒரு பழம்பொருருளுக்கான ஜமீன்தார் காலத்து பெருமிதத்தோடு பழைய வாட்கள், பாடம் செய்த விலங்குகள், ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்காரர்களின் துப்பாக்கிகள், சுவரோவியங்களுக்கு இணையாகவே அவற்றை நடத்தக் கோரும்.

தொழிலுக்கும், கொலை செய்யவும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பிருப்பதால் மட்டுமே தையல்காரர்களின் கத்திரிக்கோல்கள் பூஜைக்குரிய அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றன.  யாராவது மீசை வெட்டும் அல்லது சமையலறைக் கத்திரிக்கோல்களை ஆயுத பூஜை தினத்தன்று வழிபடுவார்களா?….சலூன்காரர்களின் கத்திரிக்கோல்கள் வேறு விதமானவை.

தையல்காரர்களுக்குத்தான் துணியை நேர்கோடாக வெட்டிவிட்டால் எவ்வளவு பெருமிதம்.  கச்சிதமாக வெட்டி முடித்ததும் கத்திரிக்கோல்களை முத்தமிடுகிறார்கள்.  துணிகளை முகர்ந்து பார்க்கிறார்கள்.  கண்பார்வை, ஊசி, கத்தரிக்கோல் மூன்றின் கூர்மையும் அவ்வப்போது பரிசோதிப்பதே தையற்காரர்களின் வேலைக்கு முன்பான தயாரித்தல்.

ஆனால் இந்த துருப்பிடித்த கத்திரிக்கோல்களை எவ்வளவு அச்சமின்றி ஏளனமாக வீசியெறிகிறார்கள். அப்படி ஒரு கத்தரிக்கோல் அதன் உடலின் புள்ளிகளைத் தடவி அழுவதைக் கேட்டேன்.  மறக்கப்பட்ட அதன் இருப்பை ஒப்பாரியாகப் பாடியது.  நான் மட்டுமே அதைக் கேட்டேன். என்னால் மட்டுமே செம்பழுப்பு புள்ளிகள் நிறைந்த கத்திர்க்கோல்களின் புலம்பலைக் கேட்க முடியும் என்று நம்பினேன்.  ஏனெனில் அடிக்கடி என்னையே ஒரு கைவிடப்பட்ட கத்திரிக்கோலாக கற்பனை செய்து கொள்வேன்.  அதுவும் கூர்மை மழுங்கிய, வரலாறு தொங்கும் மீசையால் மறக்கப்பட்ட கத்திரிக்கோலாக.

ஆதியிலே இருந்த வார்த்தையும் இறந்த வார்த்தையும்

மெத்தப்படித்தவர்கள் சொல்கிறார்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு படிமம் என்று.  ஒவ்வொரு வாக்கியமும் ஒரு மேற்கோள் என்று சொல்பவர்களும் உண்டு.  மொழி என்பதே முழுக்க மேற்கோள்களால் ஆன ஓர் அமைப்பு என்று இன்னும் ஆழமாகப் படித்தவர்கள் சொல்கிறார்கள்.  ஒரு பெயர் படிமமா?..மேற்கோளா?…அது ஒரு தலைப்பு.  புத்தகத்தை புரிந்துகொள்ள நமக்கு ஒரு தலைப்பு தேவைப்படுவதைப் போலத்தான் ஒவ்வொன்றிற்கும் அதனதன் பெயர்கள்.  சிலர் தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் சம்பந்தமே இல்லாத புத்தகத்தைப் போல அவர்களது வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள்.  உதாரணத்திற்கு பனி மூடிய சிகரம் என்று தலைப்பிடப்பட்ட பாலைவன மணல் அமைப்புகளைக் குறித்த புத்தகத்தைப் போல.  பாலைவனத்திற்கு மணல் எப்படியோ அப்படித்தான் அந்த சிகரங்களுக்கு பனியும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்கு காரணம் அவர்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் ஒரு படிமம் என்ற நம்பிக்கை இல்லாததால்தான்.   ஆதியிலே வார்த்தை இருந்தது என்கிற வாக்கியமே கூட ஒரு படிமம்தான்.  ஒரு வார்த்தை இறக்க முடியுமா?….மொழி என்பது இறந்த வார்த்தைகளை உயிர்ப்பிக்கும் ஒரு முயற்சியா?…நாமெல்லோரும் இறந்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.  அதனால்தான் தூங்குகிறவர்களை எழுப்புவதையும், கல்லறைகளை சிதைப்பதையும் அவ்வளவு எளிதாக நம்மால் செய்ய முடிவதில்லை.  வார்த்தைகள் மொழியில் ஓய்வெடுக்கின்றன.  மொழியைப் பயன்படுத்தும் போது ஓய்வெடுக்கும் வார்த்தைகளை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறீர்கள்.  அரைகுறை தூக்கத்தில் எழுந்தவர்களைப் போல வார்த்தைகள் சலிப்போடு கண் விழிக்கின்றன.  அதனால்தான் எந்த ஒரு மொழியும் முழுமையான மொழியாக இல்லை.

மரணம் என்கிற வார்த்தையால் மட்டுமே மரணமென்பதை புரிந்துகொள்ள முடியும்.  வாழ்க்கை என்னும் வார்த்தையால் மட்டுமே வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியும்.  இரண்டையும் விளக்குவதற்க்கு தனித்தனி வார்த்தைகள்.  வாழ்க்கை என்னும் வார்த்தையால் மரணத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள்.  மரணம் என்று உங்களுடைய காருக்கு பெயர் வைத்தால் அது சாலைகளில் உருள்வதைக் கூட அனுமதிக்க மாட்டார்கள்.  வாழ்க்கை என்று ஃபீரிஸர் பாக்ஸிற்கு பெயர் வைப்பதையும்.  இந்தத் தொகுப்பேட்டின் இறுதிப் பகுதி அப்படி ஒரு படிமமாகத்தான் இருக்கிறது.  ஆகவே அது ஒரு வார்த்தையாகவும் இருக்கிறது.

மண்டை ஓட்டின் நெடுந்தூரத்தைக் கடக்கும் நான்காவது புல்லட்

மொத்த உலகமும் ஒரு துப்பாக்கிச் சூட்டிலிருந்துதான் தோன்றியது.  ஒரு துப்பாக்கிச் சூடுதான் மொத்த உலகத்தையும் தோற்றுவித்தது.  எது எப்படியிருந்தாலும் முதல் துப்பாக்கிச் சூட்டில் அனைத்துமே தோன்றிவிட்டன.  துகள்கள், கோள்கள், நட்சத்திரங்கள், வெற்றிடம், தூரம்… இரண்டாவது துப்பாக்கிச் சூட்டில் மீதி அனைத்தும்…. பூக்களின் மகரந்தங்கள் வெடிப்பதிலிருந்து, துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தால் பிளவுறும் ஓட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவருவது வரை…. மூன்றாவது துப்பாக்கிச் சூட்டில் நாமெல்லோரும் பிறந்தோம்.  அத்தனை புல்லட்டுகளும் இன்னும் முடிவில்லாமல் பயணம் செய்கின்றன.  வெற்று வெளியின் அர்த்தம் என்னவோ அதுவேதான் வாழ்க்கையின் அர்த்தமும்.  வெகுகாலம் என்னால் இதை அறிந்துகொள்ள முடியவில்லை.  அந்த வெற்று வெளியை நிரப்புவதற்கு பல்லாயிரம் வருடங்கள் காலாவதி ஆகாத அனுமதிச் சீட்டை நாம் கையில் வைத்திருக்கிறோம்.  நாம் என்றால் அனைவரும் மற்றும் எல்லாம்.  இறுதியாக ஒரு துப்பாக்கிச் சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.  குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன.  நான்காவது புல்லட் என்னுடைய நெற்றியின் வலது ஓரத்திலிருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற மூன்று புல்லட்டுகளைத் துரத்துகிறது.  அது நெற்றியின் இடது வெளிப்புறத்திலிருந்து ஓட்டைப் பிளக்கும் கோழிக்குஞ்சாய் தலை நீட்டிய வரை ஒரு நெடுங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்தை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது.

 வெளி, வெற்றிடம், வெற்று வெளியின் அர்த்ததை என்னால் இப்போது முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.  எல்லாம் அந்த நான்காவது புல்லட்டால்தான்.  ஒருமையை விவரிப்பது எனக்குக் கடினம்.  நான் இப்போது அந்த ஒருமையைப் பார்க்கிறேன் என்பது ஒரு அரைகுறை விவரிப்பு.  எந்த மொழிக்கும் ஒருமையை விவரிக்கும் திறனில்லை என்பதால் நமக்குக் கிடைப்பதெல்லாம் நம்பத்தகுதியற்ற அரைகுறை வியாக்கியானங்கள் மட்டுமே.

ஆனால் மற்ற எல்லா இறந்த மனிதர்களைப் போலவே நானும் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  வாழ்க்கை என்பது தவறிழைத்தல், மரணமென்பது மன்னிப்புக் கேட்டல்.  நான் என்னுடைய தனிமையின் இருள் மண்டிய வீட்டில், ஆணியில் தொங்கும் நீலக்கோட்டில் சொருகப்பட்டிருக்கும் இரண்டாம் உலகப் போர் பதக்கத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  விடைபெறும் முன் அதனை சுட்டு விரலால் தொட முடியவில்லை. எத்தனை முறை அதன் கண் முன்னால் சில்லறைகளுக்காக கையேந்தியிருப்பேன்.  பாலிஎத்திலின் சாக்குப் பையில் பிளாஸ்டிக் குப்பைகளோடு ஆறுதலுக்கு பட்டன்களும் இல்லாத அதன் குலுங்கும் சைக்கிள் பயணத்திற்கு நான்தான் காரணம் என்பதால் அதனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  தசைகளால் ஆன உடலுக்கு மறுசுழற்சி மதிப்பு கிடையாது, ஆனால் உலோக உடல்களுக்கு உண்டு என்பதால் இறுதியாக ஒரு துப்பாக்கிச் சூடு நிகழும் வரை நான் அதற்காக காத்திருக்க வேண்டும்

*

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

[email protected]

நன்றி கணையாழி மார்ச் 2015
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular