பதிப்புத் தொழில் – அரணும், அறமும்!

0

கார்த்திகேயன் புகழேந்தி

பதிப்புத் துறையைப் பொறுத்த வரையேனும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகாலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். கலைஞர்தான் அதில் ராஜராஜன். குலம், குட்டை, ஏறி, அணை என்று நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற கட்டமைப்பாக ஊரக, மாவட்ட, ஒன்றிய நூலகங்கள் வடிவில் பலமாக நிறுவப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்தின் பெருமிதம். புதிய தொழில்நுட்பத்தை அரவணைத்துக் கொண்ட அச்சகங்களால், ’அச்சுத்தொழில் நச்சுத்தொழில்’ போன்ற சொலவடைகள் வழக்கொழிந்துவிட்டன என்றே தோன்றியது. இதை இரண்டு தலைமுறைகளாக பார்த்து வளர்ந்த நான் படித்து முடித்து வேலை பார்த்து இந்தத் தொழிலுக்குள் வரும்பொழுது அது ரியல் எஸ்டேட்காரர்களிடம் கைமாறிவிட்டது. எந்தெந்த ஏரிகள் பிளாட் போட்டு விற்கப்பட்டன, எந்தெந்த கால்வாய்கள் அடைக்கப்பட்டன என்பது வற்றிப்போன நூலக ஆணைகளின் ஊற்று வற்றுவதைப் பார்க்கும்பொழுது மூடு மந்திரமாகவே இருக்கிறது.

இருந்தாலும் நிலத்தடி நீரையாவது விட்டு வைத்தார்களே என்று பதிப்பாளர் சங்கங்கள், புத்தக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் ஊரல் போட்ட புத்தகக் காட்சிகளையே ஆழ்துளைக் கிணறுகள்போல தோண்டி எடுத்தனர். சமையல், குடிநீருக்கு அடிபம்புகளை எந்த அளவுக்கு நம்ப முடியுமோ அந்த அளவிற்குத்தான் அங்காடி விற்பனையை ஒரு பதிப்பகம் பணத் தேவைக்கு நம்ப முடியும். அடைமழைகாலத்தில் அணைகள் கொள்ளளவை எட்டிவிட்டபோது தினமும் குழாயில் நீர் வரலாம். அக்னி வெயிலில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட வராமல் போகலாம். புத்தகக் கடைகளும் திறக்க வழியில்லாமல், புத்தகக் காட்சிகள் நடத்தும் சாத்தியங்களும் அருகிவருவதால் இந்தக் கரோனாக் காலம் பதிப்பகங்களை மழையும் பொய்த்துப் போய், கிணறும் வற்றிப் போகும் அபாயத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

நடிகர் கிஷோர் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைமுறை பற்றிய ஒரு கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். சொந்தப் பண்ணையும், தோட்டமும், இயற்கையான உணவும், தேவைக்கேற்ற உழைப்பும் ஊதியமும். நிச்சயம் எல்லோரும் கனவு கானும் ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார். அந்த பேட்டியின் நிறைவுப் பகுதியில் அவர் சொன்ன தகவல் மிக முக்கியமானது. பக்கத்து பண்ணைகளில் பலா, வாழை போன்ற பழங்களை பயிரிட்டால் பறவைகள், காட்டு விலங்குகளால் மற்ற பயிர்களும் பாழாகும் என்பதால் அவற்றைப் பயிரிடுவதில்லை. நாங்கள் அப்படி இல்லை பறவைகளும், விலங்குகளும் உண்டது போகத்தான் எங்களுக்கு. இந்த முறை எங்கள் இத்தனையாண்டு முயற்சியின் பலனாக யானைகளை விருந்தாளிகளாக வரவேற்கக் காத்திருக்கிறோம் என்று முத்தாய்ப்பாக அவர் சொல்லியிருக்கிறார். விலங்கியலின்பால் உள்ள ஈர்ப்பால் இணைந்த கிஷோர்- விஷாலா தம்பதி பல்லுயிர் ஓம்பும் ஒரு காட்டை தங்கள் இரு மகன்களுக்காக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு யானைகளின் வருகைதான் அத்தாட்சி.

பதிப்பக உலகுமும் ஒரு நூல்வனம்தான். மண் புழுவின் வேலையை மண்வெட்டிவைத்து மனிதன் செய்ய முடியாது. புதிய பாதைகள் உருவாக்குவதில் யானைகளின் பங்கு அளப்பரியது. பதிப்பாளர்,அச்சகர், விற்பனையாளர்கள் தொடங்கி மூட்டைகளை ஏற்றிச் சென்று ஊர் ஊராகச் சேர்க்கும் கூலித் தொழிலாளர்கள் வரை இங்கு பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பின்னிப் பிணைந்துள்ளது. அரசாங்கத்தால் நட்டாற்றில் விடப்பட்ட இந்தச் சூழலில் நல்ல எழுத்தை ஒருவித பெருமிதத்தோடு பதிப்பித்து, அச்சிட்டு, ஊரூராக முதுகில் சுமந்து சென்று கூவிக் கூவி விற்ற ஒரு கூட்டத்தில் அடிமட்ட ஊழியனின் பசி தீர்ந்தால்தான் அச்சகங்களும், விற்பனையாளர்களும், பதிப்பகங்களும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்ற அடிப்படை அறத்தின் வழி நடந்தால்தான் நாளை சமூகத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் நாம் தலை நிமிர்ந்து கேள்வி கேட்க முடியும்.

அசோகமித்ரனின் புலிக்கலைஞனைப் போன்ற நலிந்துவரும் கலைகள், தொழில்கள் பற்றிய செய்திகள், படைப்புகளையெல்லாம் ஒரு விதப் பச்சாதாபத்தோடு கடந்து வந்திருக்கிறேன். இன்றைய தேதியில் வெள்ளம், புயல், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி, கொள்ளை நோய் என்று அடுத்தடுத்து பின்னடைவுகளைச் சந்தித்த சோர்வில் இருக்கும் பதிப்பக உரிமையாளர்களுக்கும், கடை நிலைப் பணியாளர்களுக்கும் நிரந்தர விலாசத்தைத் தக்கவைத்துக் கொண்டவர், விலாசமற்றுப் போனவர் என்ற வித்தியாசம்தான். எல்லோருமே மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

பதிப்புத்துறை சார்ந்த எந்தவொரு பாதிப்பையும் முதலில் எதிர்கொள்பவர்கள் எழுத்தாளர்கள் தான். அவர்கள் ஒரு ஊடகம் தொய்வடையும்பொழுதே மாற்றுவழியைத் தேர்ந்தெடுக்கும் மகரந்தத் தூதுவர்கள். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், மின்\இணைய ஊடகங்களுக்கு ஏற்றார்போல் புதுப்பொலிவுடன் தங்கள் படைப்பை மெருகேற்றிக் கொள்ளும் மாற்றத்தின் முகவர்கள் அவர்கள். நல்ல எழுத்தை வாசகர்கள் பின் தொடர்ந்து புதிய ஊடகத்தின் வாடிக்கையாளர்கள் ஆகிறார்கள். சூழல் கனிந்து வரும்பொழுது அதைச் சுற்றி பதிப்பகங்களும், அச்சகங்களும், ஊடகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அப்படித்தான் இப்போது மின்னூல்களுக்கான முன்னெடுப்புகளையும் நாம் பார்க்க வேண்டும்.

எந்தவொரு புதிய வர்த்தக வாய்ப்பைச் சுற்றியும் கள்ளச் சந்தைகள் உருவாவதைத் தவிர்கவே முடியாது. ஈ களையாமல் தேன் எடுக்க நினைக்கும் கயவர்கள் தான் செய்யும் திருட்டுத்தனத்திற்கு சேவை என்று பெயர் வைத்துக்கொள்வார்கள். நல்ல புத்தகங்களை மலிவுப் பதிப்பாக அச்சிட்டபோதும், நகலெடுத்தபோதும், இப்போது மின்னூல்களுக்கு கண்ணுக்கோள் போடும்பொழுதும் இவர்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள். புத்தகங்களின் அச்சு, நேர்த்தி, விலை ஆகியவற்றில் எல்லா பதிப்பகங்களுக்கும் இடையே ஒருவித ஒத்திசைவும், ஒழுங்குமுறையும் வந்தவுடன் மலிவுப் பதிப்புகளையும் திருட்டுப் புத்தகங்களையும் ஒன்றுசேர்ந்து எப்படி நம்மால் அழிக்க முடிந்ததோ அப்படி இந்த மின் புத்தகத் திருட்டையும் பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் ஒன்றினைந்தால் திறம்படத் தீர்க்க முடியும். ஆனால் அதைவிட முக்கியமான பிரச்னை தொழில் சார்ந்து இயங்குபவர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பர நட்பையும், அன்பையும், நன்மதிப்பையும் பேணிக் காப்பது. தற்சார்பு என்பது அதுதானே!

~கார்த்திகேயன் புகழேந்தி
நிறுவனர், வானவில் புத்தகாலயம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here