Tuesday, March 19, 2024
Homesliderநேர்காணல் - சோமிதரன் ; நேர்கண்டவர் : அகர முதல்வன்

நேர்காணல் – சோமிதரன் ; நேர்கண்டவர் : அகர முதல்வன்

கிழக்கில் நிகழ்வது  ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன்

சோமிதரன்.ஈழத்தின் ஊடகவியலாளர்.சிங்கள இனவெறி அரசினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் குறித்து இவர் இயக்கிய “எரியும் நினைவுகள்”  என்ற ஆவணப்படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். பல ஆவணப்படங்களை இயக்கிய இவர் இப்போது திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.

ஈழத்தில் கவிஞர்கள் அதிகம், எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை. ஆனால் உங்கள் துறையான ஆவணப்பட இயக்கம் சார்ந்து செயற்படுவதற்கு செயற்பாட்டாளர்கள் பெரியளவில் முன் வருவதில்லை. எப்படி ஆவணப்படங்களை உருவாக்க வேண்டுமென தோன்றியது. அதுவும் ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளை தொட்டு இருக்கிறீர்களே?

ஆவணங்களை பெருமளவில் இழந்து விட்டவர்கள். நாங்கள் இண்டைக்கு ஒரு வேர்ச்சுவல் ரியாலிட்டியில் வாழுகின்ற இனக்குழுமம். எங்கள் கதைகளை, வாழ்வை, வரலாற்றின் உண்மைகளை இந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் ஆவணப்படுத்தலின் ஊடாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.

இன்று நான் எடுக்க நினைக்கிற ஒரு கற்பனைக் கதைப்படத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் இன்று எடுக்கத் தவறும் ஒரு ஆவணப்படம் நாளை அதனைக் காட்சிப்படுத்த முடியாதபடி வேறொன்றாக மாறலாம். நாங்கள் இன்று இந்த புதிய உலகில் புனைவுகளின் வரலாற்றில் வாழ்பவர்கள்.

பல புனையப்பட்ட கதைகளைத்தான் வரலாறு எண்டு நம்ப வைக்கப்படுகிறோம். நானும் ஆரம்பத்தில் கதை கவிதை என்று எழுதத் தொடங்கியவன் தான். ஆனால் அது என்னுடைய வேலையல்ல என்று தெளிவு பெற்ற பின்னால் என் பயணத்தை மாற்றிக் கொண்டேன்.

நான் அடிப்படையில் ஒரு ஊடகவியலாளன்.  தினக்குரல் பத்திரிகையில் தொடங்கிய பணி பின்னர் தராக்கி சிவராம், திஸ்ஸநாயகம் ஆகியோரோடு  “நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்” ஆங்கில வாரப் பத்திரிகையில் தொடர்ந்தது. அந்த காலப்பகுதியில் பிபிசி ஆங்கில சேவைக்காக தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி ஆவணப்பதிவுகளில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.

 பிரான்சிஸ் ஹாரிசனோடு இணைந்து ஆவணப்படங்களில் வேலை செய்தேன். குறிப்பாக காணாமல் போனவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை அடியொற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணப்படம்தான், நான் முதன்முதலில் வேலை பார்த்தது.

அந்த படத்தின் கமெராமென் ஈராக் போர் மற்றும் ஆப்கான் போர்களில் பிபிசிக்காக களத்தில் வேலை பார்த்தவர். அவரிண்ட அனுபவங்களைக் கேட்கவும் இந்த ஆவணப்படுத்தல்களில் ஈடுபடும் போது எனக்குள்ள உருவான காட்சி ஊடகம் மீதான ஈர்ப்பும் தான் எனக்குள் விழுந்த முதல் விதை எண்டு நினைக்கிறன்.

இதற்குப் பிறகு நாம் சுயாதீனமாக ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நானும் சரிநிகர் ஆசிரியர் சிவகுமாரும் முயற்சிக்கத் தொடங்கினோம். யாழ்ப்பாண  நூலக எரிப்பை முதன் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் என்ர முதல் படம் யாழ் நூலக எரிப்பு பற்றியதல்ல.  போபால் நச்சு வாயுக் காசிவால் பாதிக்கப்பட்ட வாழ்விழந்தவர்கள் குறித்த படம்தான் .

அதன் பின்னர் கடலூரில் சிப்காட் இரசாயனத் தொழிற்சாலைகளால் உருவான சூழலியல் பற்றிய ஆவணப்படம். அதற்குப் பிறகு 2004 சுனாமி போரழிவு குறித்து ஒரு படம். இவைகளை எடுத்த பின்னர்தான் யாழ் நூலக எரிப்பு பற்றிய  “எரியும் நினைவுகள்” ஆவணப்படத்தை எடுத்தேன்.  

2006 இல் இலங்கையில் மாற்றமுற்ற அரசியல் சூழல் அந்தப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடிப்பதில் பெரும் தடங்களை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நூலகம் எரிக்கப்பட 25 ஆவது ஆண்டில் அந்த படத்தை எடுத்தோம். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால்  யுத்தம் முடிந்த கையோடு ஒரு ஆவணப் படத்தை எடுத்தேன். “முல்லைத் தீவின் பெருங்கதை (mullaithivu saga)” என்ற அந்த ஆவணப்படம் தான் போர் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட முதல் படம். இலங்கையில் வாழ்வதை விட சற்று சவுகரியமான ஆனால் அதே கண்காணிப்புக்குள் தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழனான எனக்கு அந்த படத்தை உலகெங்கும் பிரச்சாரப்படுத்த அப்போது முடியவில்லை. கடும் புற நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

தமிழகத்தில் வாழும் ஈழச் செயற்பாட்டளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி உங்களுக்கும் தெரிந்ததுதானே அகரன்.  அதன் பின்னர் இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்த எனது ஆவணப்படம். வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி என்ற ஈழ வரலாற்றுப் படம் என இப்போது வரை என் ஆவணப்பட வேலைகள் தொடர்கிறது. இன்னும் சில படங்களை போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில் பதிவு செய்திருகிறேன். அவற்றின் பிற தயாரிப்பு வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் நிலவியகாலத்தில் ஊடகவியலாளராக செயற்பட்டீர்கள் என நிறையத் தருணங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்தக்காலத்தில் இலங்கைத் தீவெங்கும் நிறைய ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் எந்த மாதிரியான நெருக்கடிகளைச் சந்தித்தீர்கள்?

இலங்கையில் ஊடகவியலாளராக அந்த நாட்களில் வேலை செய்வது என்பது துப்பாக்கிகளுக்கு நடுவிலே வேலை செய்வது. 2004 இல் முதல் தடவையாக நான் சென்னைக்கு வந்தேன் ஆனாலும் என் பணி இங்கும் அங்குமாகவே இருந்தது. 2007 வரை நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். 2007 இற்கு பிறகான சூழல் என்னை சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கச் செய்தது.

 நான் இறுதியாக வேலை செய்த நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட் பத்திரிகை இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு அதன் ஆசிரியர் திசநாயகம் கைது செய்யப்பட்டார். இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டதற்காக அவருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது.  அந்த பத்திரிகையில்  2003 இல் என்னைச் சேர்த்துக் கொண்டவர் தராக்கி என்கிற சிவராம்.  இலங்கையின் மூத்த பத்திரிகையாளர். தமிழ்நெற்செய்தித் தளமும் அவரின் நெறிபடுதலில்தான் செயற்பட்டது. 2005ஏப்பிரல் இறுதியில் ஒருநாள் நான் வவுனியாவில் இருந்து இரவுப் பேருந்தில் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தேன். 

அப்போது சரிநிகர் சிவகுமார் போன் பண்ணி, சிவராம் கடத்தப்பட்டதாகச் சொன்னார். அந்த இரவு முடிந்த போது அவருடைய உடல் கொழும்பில் உள்ள இலங்கைப் பாரளுமன்றத்திற்குப் பின் புறமாக வீதியோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தது. 2002 இல் இலங்கையில் உருவான அமைதிப் பேச்சுக்காலத்திற்கு முன்னரும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பேச்சுகள் தொடங்கி அமைதிக்காலம் வந்த பின்னர் கிழக்கில் கருணா  – புலிகள் பிளவால் உருவான நெருக்கடி ஊடகவியலாளர்களைக் காவு வாங்கத் தொடங்கியது.

2004 இல் மட்டக்களப்பில் பத்திரிகையாளர் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு கிழக்கில் பத்திரிகையாளர்களே போக முடியாத சூழல் ஒன்று இருந்தது, சிவராம் கொலை தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பெரும் அச்சுறுத்தலாகவே மாறியது. எல்லோரிடமும் ஆயுதம் இருந்தது. ஆகவே யாரைக் குறித்தும் அல்லது எந்தவொரு தரப்பையும் விமர்சித்தோ அல்லது யாருக்கேனும் விரும்பமில்லாதவாறு எழுதினாலோ பேசினாலோ யார் வேண்டுமானாலும் துப்பாக்கிகளால் நமக்கு பதில் தருவர்கள் என்பதே நியதியாகிவிட்டது.

அமைதி காலத்திலேயே இந்த அச்சுறுத்தல் இருந்தது. அமைதி காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தினக்குரலில் பணியாற்றிய போது ஒரு செய்தி போட்டேன். அமைதி காலம் தொடங்குவதற் கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களோடு இருந்த அரச ஆதரவு இயக்கம் ஒன்றின் அலுவலகத்தில் இருந்து அழைப்பெடுத்தார்கள். எதிர் முனையில் பேசியவர்  “என்ன பயம் விட்டுட்டுது போல கண்டபடிக்கு செய்தி போடுறியள்” எண்டார். உண்மைதான் 2002 இற்கு முதல் எண்டால் அந்த தொலைபேசிக் குரல் கடும் அச்சுறுத்தல்தான். இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுதாமல் பணியாற்றியதால்தான் அந்த காலப் பகுதியில் நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டர்கள். 

அரசாலும், அரசு சார்பு தமிழ் ஆயுதக் குழுக்களாலும் மட்டுமல்ல புலிகளாலும் கருத்து நிலை வேறுபாடுடைய ஊடகவியலாளர்கள் சிலர் அந்த நாட்களில் கொல்லப் பட்டிருகிறார்கள். ஆனால் யாரை யார் சுட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது எந்த விசாரணையும் இருக்காது. கொல்லப்பட்டவர் செய்த வேலை அவரின் அரசியல் ஆகியவற்றைக் கொண்டே இவர் யாரால் சுடப்பட்டார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும். இலங்கையில் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள்  “இனம் தெரியாத ஆயுததாரிகள்” என்றே காலகாலமாக அழைக்கப்பட்டார்கள்.

உங்களுடைய  “எரியும் நினைவுகள்” ஆவணப்படமானது யாழ்ப்பாண நூலக எரிப்பையும் அதன் அரசியல் பின்னணியும் பதிவு செய்தது. அந்த வகையில் அது ஈழத்தமிழருக்கும் ஒரு அரசியல் ஆவணமே. இந்தியளவில் அந்த ஆவணப் படத்திற்கு எப்படியான வரவேற்பு இருந்தது?

அந்த ஆவணப் படம் 2008 இன் ஜூன் ஒன்றாம் திகதி வெளியானது. அந்த காலப்பகுதியில் போரும் உச்சமாக இருந்ததால் அந்த படம் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழகத்தில் பரவலாகத் திரையிடப்பட்டது. நான்  அப்போதைய நிலையில் அதிக டிவிடிக்கள் விற்பனையான தமிழ் ஆவணப்படமாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில்தான் இன்னும் அதிகமாக ஆவணப்படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

எரியும் நினைவுகள் ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு,  ஜேர்மன்-டொச்  மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தமிழில் சரிவர புரிந்து கொள்ள முடியாத எங்கள் அடுத்த தலைமுறைக்கும் கூட அது போக வேண்டும். தமிழர் அல்லாதவர்களுக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதே. அந்த படம்  ஜேர்மன், போலந்து, அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டது .

தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையிடப்பட்டது. அதே போல்  கேரளாவிலும் இருபதிற்கும் அதிகமான இடங்களில் அது திரையிடப்பட்டது. எரியும் நினைவுகளைவிடவும் முல்லைதீவு சாகா கேரளாவில் அதிக இடங்களில் திரையிடப்பட்டது. அதற்க்கு காரணம், அந்த படம் புலிகளுக்கு பிரச்சாரம் செய்வதற்காக நான் திரையிடுகிறேன் என்று கேரள உளவுத்துறையை ஆதாரம் காட்டி மாத்ருபூமியில் வந்த முதல் பக்கச் செய்தியும் அதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்  மன்றத்தில் கருத்துரிமைக்கு சார்பாக நிகழ்ந்த போரட்டம் மற்றும் அந்த படத்தை  திரையிடுவதற்கு கட்டுப்பாடுகளை கேரள காவல் துறை விதித்ததும்தான்.

பிறகு அந்தப்படத்திற்கு கேரள திரைப்பட விழாவில் முதலமைச்சரால் விருது வழங்கப்பட்ட போது இந்த நெருக்கடிகள் தளர்ந்து அது பல இடங்களில் திரையிடுவதற்கு வழியேற்பட்டது. அதன் பின்னர் அது இந்தியா முழுவதும் நூற்றுக்கு அதிகமான திரையிடல்களைக் கண்டது. நம் அழிவைக் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எமது அரசியலைக் குறித்து பேசும் வாய்ப்பை அது ஏற்படுத்தியது.  

முள்ளிவாய்க்கால் போன்றதொரு பேரழிவின் பின்னராக இன்றைக்கிருக்கும் ஈழத்தமிழர் அரசியலின் போதாமைகளை கவனிக்கிறீர்களா? குறிப்பாக  தமிழ்தேசியக் கூட்டமைப்பினரின் பரிவு தேடும் மிதவாதம் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத் தருமா?

எதையும் யாரிடமும்  இறைஞ்சிப் பெற முடியாது அரசியல் செய்துதான் பெற முடியும். நாம் நமக்கான நீதியையும் அரசியல் தீர்வையும் பெறுவதற்கு எந்த வகையான அரசியலைச் செய்தோம் செய்து கொண்டிருக்கிறோம்  என்பதை சீர்தூக்கிப் பார்த்தால்) எங்கட அரசியல் ராஜதந்திரத்தின் வங்குறொத்து  நிலை தெரியும்.

உலகில் போர் நடந்த பல நாடுகளிலும் பிற்போர்காலம் என்பது சீரழிவுகளையும் துயரங்களையும் கொடுத்திருக்கிறது. பல இனக்குழுக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நுகர்வுப் பண்பாட்டுக்குள் சிக்குண்ட மக்களாக மாற்றப் பட்ட உதாரணங்கள் வரலாற்றில் நமக்கு முன்னான பாடங்களாக இருந்தன. பல இடங்களில் போர் முடிவு என்பது அரசியல் போராட்டமாகவோ அல்லது அரசியல் தீர்வாகவும் கூட மாறியிருக்கிறது. ஆனால் ஈழத்தின் பிற்போர்காலம் என்பது ஒரு கதம்பமாக கழிந்திருக்கிறது. உலகம் சிறிதளவும் கரிசனம் கொள்ளாத ஒன்றாகவே பிற்போர்க்காலம் இருக்கின்றது. பிற்போர்கால அரசியலை முன்னெடுக்கக் கூடிய தலைமைகள் இல்லாமல் குழப்ப அரசியலே அதிகம் இருந்திருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் உள்ள தமிழர்கள், தமிழகத்தில் உள்ளவர்கள், புலம்பெயந்தோர் என மூன்று தளங்களாக பிற்போர்காலத்தில் அரசியலைப் பேச ஆரம்பித்தார்கள். ஈழத்தில் ஒற்றை அரசியல் சக்தியாகவும் , தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பல குழுகளாகவும் செயல்பட ஆரம்பித்தனர். காலப் போக்கில் ஈழத்திலும் பல குழுக்களாகப் பிரியத் தொடங்கினர். தமிழகம் பிற்போர்கால ஈழத்தை மறந்து தமிழகத்தின் நெருக்கடிகளை எதிர் கொள்வதை நோக்கித் திரும்பிவிட்டது.

புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் லாபிகளை தாம் வாழும் நாடுகளில் உருவாகுவதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை போதிய அளவு முன்னெடுக்கவில்லை. மாறாக இலங்கையில் லாபிகளை உருவாக்கி தமக்குத் தோதாக அரசியல் அமைப்புகளை கட்டமைத்து புதிய குழு அரசியலைச் செய்வதும் அதேபோல் புலத்திலும் குழுகளாக பிரிந்து எமக்குள்ளேயே லாபி செய்வதையும் அதிகமாக சிரத்தை எடுத்து முன்னெடுக்கிறார்கள்.

 ஈழத்தில் மிக முக்கியமான 10 ஆண்டு கால பிற்போர்க்காலத்தில் எந்த அரசியல் முன்னேற்றமும் நடைபெறவில்லை. போர் நடந்த போது இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு  கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அதே போல போர் முடிவுறும் நிலையில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளிடம் சர்வதேச சமூகமும் இந்தியாவும் ஈழத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. போருக்கு பிறகு அரசியல் தீர்வுகள் குறித்து எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.

ஐநா மனித உரிமை அவையில் சம்பிரதாயச் சடங்காக அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஒரு வேளை உலகின் ஒழுங்கு இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து மாறும் போது அவர்கள் புதிய நாட்டைக்கூடப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் அதற்காக நாம் இலவு காத்த கிளிகளாக ஐநா மனித உரிமை அவை வாசலையே  மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பத்தாண்டுகளை சாவகாசமாக இலங்கை அரசு காலம் கடத்துவதற்கே மனித உரிமை அவை உதவியிருக்கிறது.  

இப்போது மீண்டும் ஒரு சிறு ஓய்வுக்குப் பிறகு ராஜபக்சே வம்சத்திடம் இலங்கையின் அத்தனை அதிகாரங்களும் போயிருக்கிறது அவர்களாகப் பார்த்து ஏதும் செய்தால் உண்டு. இந்த நிலையில் அவர்களோடுதான் திரும்பவும் பேச வேண்டியிருக்கிறது. முறுக்கி கொண்டு நாங்கள் மீண்டும் சண்டையிட்டு பிடித்துவிடலாம் என்பது போன்ற கற்பனைகளில் தமிழ்நாட்டில் சினிமா மனோநிலையில் அரசியல் பேசும்  வாய் வீரர்கள் வேண்டுமானால் நினைக்கலாம் நான் நாம் நினைக்க முடியாது.

ஆங்… நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி ஏதோ கேட்டீங்கள். தங்களுக்கு அரசியல் செய்வதற்கு கிடைத்த சிறந்த காலமொன்றை அவர்கள் தவறவிட்டு தமிழர்களின் தலைமைக் கட்சியாக தங்களைத் தக்க வைக்கும் அதிகாரப் போட்டியில் அதிக கவனம் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அரசியல் செய்ய தெரிந்த அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.

போர் வாழ்க்கை தொடர்ச்சியாக எழுதப்ட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்னும் ஈழத்தமிழரின் திரைக்கலை முழுத்தீவிரத்தோடு ஆரம்பிக்கவில்லை. நாவல்களும்,சிறுகதைகளும் திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டுமென  நிறைய பேர் என்னிடமே கூறுகிறார்கள்.உங்களுக்கு அது போன்று முழுநீளத் திரைப்படம் இயக்க ஆசை இல்லையா?

நான் என்னுடைய முதல் முழு நீளப்படத்திற்கான வேலையில்தான் தற்போது இருக்கிறேன். அது என் மக்களின் கதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறேன். எனது முதல் முழுநீளப்படம் எனக்கு நெருக்கமான கதையாக இருக்க வேண்டும் என்கிற விருப்பு உண்டு. முடிந்தவரை என் நண்பர்களில் படங்களில் திரைக்கதை சார்ந்து வேலை செய்கிறபோது ஈழம் பற்றிய எதாவது ஒரு விசயம் வருவதற்கு முயல்கிறேன். ஈழம் பற்றிய கதைகள் உரையாடல்களில் உள்ள அந்நியத் தன்மை இதன் மூலம் சினிமாவில் இருந்து விலகும். அது தமிழ் வணிக சினிமாவிலும் ஈழக் கதைகள் வரும் காலத்தை உருவாக்கும்

90களில் புலிகளின் நிதர்சனம் விஎச்எஸ் கமெராவில் எடுத்தஉறங்காத கண்மணிகள்படம் என்னை இன்றளவும் பாதித்த படங்களில் ஒன்று. வேவு பார்க்கும் போராளிகள் பற்றிய கதைதான். எனக்குத் தெரிந்து அதனைத் திரும்பவும் இண்டைக்கு எடுத்தால் அது வணிக வாய்ப்புள்ள ஒரு சாகச சினிமாதான்இதைப் போன்ற பல கதைகள் வணிக வாய்ப்புள்ள சினிமாக்களாக வரும் என நம்புகிறேன். சயந்தனின் ஆறாவடு, குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, தாமரைச் செல்வியின் உயிர்வாசம் என சில நாவல்களும் பல சிறுகதைகளும் படமாக்குவதற்கான வலுவுள்ள எழுத்துக்கள்.

நான் பாலுமகேந்திரா சேரோடு பணியாற்றிய காலத்தில் அவர் ஒருமுறை தாமரைச் செல்வியின் ஒரு மழைக்கால இரவு தொகுப்பைக் கொடுத்து தினம் ஒரு சிறுகதைக்கான சினொப்சிஸ் எழுதச் சொன்னார். அப்படி எழுதியதில் இருந்து சில கதைகளை அவர் படமாக்க வாய்ப்புள்ளது என தேர்ந்தெடுத்துச் சொன்னார். அவை அவரின் கைபட்ட திருத்தங்களோடு இன்னமும் என்னிடம் இருக்கிறது. அவருக்கும் கூட ஈழம் பற்றிய கதையைப் படமாக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. 80களில் நடந்த புகழ்மிக்க ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் ஒரு கதையும் வைத்திருந்தார்.

80களில் பாலுமகேந்திரா சேர் எடுக்க நினைத்த கதையை அவரால் எடுக்க முடியாது போய்விட்டது.

ஈழப்பிரச்சனையை மையப்படுத்தி, அல்லது அதனை ஊறுகாயாக தொட்டுக்கொண்ட தமிழ்நாட்டு திரைப்படங்கள் பெரிதும் கற்பனையாக எமது வாழ்க்கையை அணுகியிருக்கின்றன. மேலும் “நந்தா” போன்ற ஆத்மார்த்தமான திரைப்படத்திலும் புரிதலற்ற தன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக படகுகளில் வந்த ஈழ அகதிகள் – தாயகம் திரும்பிய மக்கள் என சுட்டும் ஓரிடம் அந்தப்படத்தில் வருகிறது. இதுபோன்ற சிந்தனைகள் இன்றும் தொடர்கின்றனவா?

ஈழம், அங்குள்ள வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றிய புரிதல் குறைபாடு தமிழ் சினிமாவில் இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் இந்தியாவில் சந்தித்த ஒரு காஷ்மீரியிடமோ, வடகிழக்கு இந்தியனிடமோ ஏன் சத்தீஸ்காரிலோ, ஜார்கண்டிலோ இருப்பவனிடமோ கூட போர்க்கால ஈழ வாழ்வியலை இலகுவில் புரிய வைத்து விடுவேன். ஏனெனில் அவர்கள் மொழியால் வேறாயினும் இராணுவம் சூழ் போராட்ட வாழ்க்கையை வாழ்பவர்கள். தமிழ்நாடு அப்படியல்ல.

துப்பாக்கியுடன் வீதியில் பொலிசைப் பார்ப்பதுகூட அரிதிலும் அரிதுதான். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு போர்க்கால வாழ்வியலைப் புரிய வைப்பது பெரும்பாலும் கடினமாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் நம்முடைய வலிகளோடு உணர்வால் கலந்திருக்கிறார்கள். அவர்களால் நமது வலிகளை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. திரைத் துறையிலும் அவ்வாறு உணர்வு மேலிட்ட ஏராளமான படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்த போர் திரைப்படங்களின் வழியாக நமது கதைகளைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈழப் போரியல் கதைகளைப் படமாக்க வேண்டும் என்கிற விருப்பமும் ஈழ மக்கள் மீதான பற்றும் கொண்டிருக்கிற நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் வணிக சினிமா எல்லைக்குள் ஊறுகாயாக தொட்டுக் கொள்வதைத் தாண்டி அவர்களால் அதிகம் செய்ய முடிவதில்லை.

அல்லது பலரும் அந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை

ஈழத்தில் எப்போதும் வசித்திருக்காத ஒரு முறை கூட அந்த மண்ணிற்கு சென்றிருக்காதவர்கள் எடுக்கக் கூடிய திரைப்படங்களில் குறைபாடுகள் இருப்பது இயல்பானதே. ஈழத்தவர்களுக்கு என திரைப்படங்கள் பெருமளவில் இல்லாத போது. ஒரு படத்தைப் பார்த்து அதன் மூலம் அந்த வாழ்க்கையை அறியும் வாய்ப்பு கூட இல்லை. ஈரான், தென்கொரிய வாழ்க்கையை அமெரிக்க வாழ்க்கையை அறிந்த அளவிற்க்கு கூட அவர்களால் ஈழ வாழ்க்கையை அறிய முடியாத நிலை இருந்தது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சமூக ஊடகங்கள் மூலம் பரவும் ஈழம் குறித்த சில வீடியோக்கள் மற்றும் பல்கிப்பெருகி விட்ட ஈழ எழுத்துகள் மூலம் ஓரளவு ஈழத்துக் கதைகள் படைப்பாளிகளை சென்றடைகிறது.

நீங்கள் நத்தா படத்தைப் பற்றிக் கேட்டீர்கள். உண்மையில் தாய் தமிழகம் என்ற சொல்லாடலின் ஊடாக இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள்தான் ஈழத்தமிழர் அல்லது எஸ்பொ தமிழில் சொன்னால் தமிழ்ஈழர் என்று சொன்னாலும் தாய் தமிழக உணர்வில் தாயகத்திற்கு அவர்கள் வரவேற்கிறார்கள். நாங்கள் தனித்த பூர்வகுடிகள் என்ற அரசியல் விளிப்பு பெரும்பாலான தமிழக தமிழர்களுக்கு இல்லை என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்தானே.

ஆனால் சில குறைகளால் மட்டும் வணிக சினிமாவில் வரும் ஈழம் பற்றிய கதையாடல்கள் முழுவதையும் நாம் நிராகரிக்கவோ தூக்கியெறியவோ வேண்டியதில்லைகன்னத்தில் முத்தமிட்டால் படத்தை அது வெளியான காலத்தில் பார்த்தபோது எரிச்சல் எரிச்சலாக வந்தது. ஆனால் இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து ஈழம் பற்றிய சினிமாக்கள், நீங்கள் சொல்லுவது போல ஊறுகாயாக தொட்டுக்கொண்ட படங்கள், ஈழப் பிரச்சினையை முன் வைத்து எடுக்கப்பட்ட அரசியல் படங்கள் என பல படங்களைப் பார்த்துவிட்ட பிறகு மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்க்கிற போது சில குறைகள் இருந்தாலும் சினிமாவாக அது ஈழக்கதையின் சில காட்சிகளை மனதுக்கு நெருக்கமாக பாதித்திருக்கிறது.

இன்றைக்கு ஈழத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நிறைய குறும்டங்கள் எடுக்கப்படுகின்றன. சில குறும்படங்கள் உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டிருக்கின்றன. ஆனால் பெருமளவிலான குறும்படங்கள் தமிழகத் திரைப்படங்களின் பாதிப்பில் உருவாகி இருக்கின்றன. உரையாடல்கள் “பேசப்படுகிறது”, கதைக்கப் படுவதில்லை. இதுபோன்ற சீரற்ற போக்குகளை அவதானிக்கிறீர்களா?

நான் சிறுவயதுகளில் சினிமா பார்க்கிற போது எனக்கு ஒரு ஏக்கம் இருந்ததுஇந்த படங்களில் எங்கள் ஊர் பாசை வராதா எங்கட ஊரைக் கட்டமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. சினிமா என்கிற ஊடகம் எங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்து வருகிற ஒன்று எண்டே எனக்கு எண்ணத் தோன்றும். பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் குருதிஸ் இயக்குனர் ஹினர் சலீம் தனது பால்ய காலத்து அனுபவங்களை எழுதிய அப்பாவின் துப்பாக்கிஎன்ற புத்தகத்தில் இதே போல அவருக்கும் இருந்த ஆசையை சொல்லியிருப்பார். எப்போதாவது இந்த பெரும் திரையில் விரிகிற கதைகளின் மாந்தர்கள் என்னுடைய குருது மொழியைப் பேச மாட்டார்களா என்று அவர் ஏங்கியிருக்கிறார். பிற்பாடு அவர் புலம்பெயர்ந்து  சென்று திரைப்படக் கல்வியைப் பயின்று தனது கனவை நிறைவேற்றினார். அப்படித்தான் எனக்கும் ஆசை. அந்த ஆசை ஈழத்திலும் புலத்திலும் இருக்கும் பல திரைப் படைப்பாளிகளிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் சினிமா என்றால் அது தமிழ்ச் சினிமாதான். தமிழகத்திற்கு எந்தளவிற்கும் குறைவில்லாத, சில வேளை அதனிலும் சற்று அதிகமான திரைப்பட மோகம்  ஈழத்தவர்களிடம் இருக்கிறது. அன்றைய எம்ஜிஆர் சிவாஜியில் இருந்து இன்று விஜய் அஜித் வரைக்கும் கட்டவுட் வைத்து பட ரிலீசை பெருவிழாவாகக் கொண்டாடும் பெரும் ரசிகர்கள் ஈழத்திலும்  புலத்திலும் இருக்கிறார்கள். போரும் புலிகளின் நிர்வாகமும் இருந்த போது ஈழத்தில் அது இல்லாமல் இருந்தது.

ஆகவே அவர்கள் குறும்படம் என்கிற திரை ஊடகத்தைக் கையில் எடுக்கிற போது அவர்களுக்குத் தெரிந்த சினிமாவைப் போலஒன்றை உருவாக்க முனைக்கிறார்கள்அந்த மொழியையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு சினிமா மொழியென்பது தமிழ்சினிமாவில் பேசும் மொழிதான். ஏன் இப்போது எழுதத் தொடங்கியுள்ள சில எழுத்தாளர்களின் மொழியிலும் கூடத்தான் தமிழக வாடை வருகிறது. புலம்பெயர் மற்றும் இலங்கைத் தொலைக்காட்சி வானொலி பத்திரிகைகளின் மொழியிலும்தான் தமிழ்ச்சினிமா மொழி வருகிறதுகுறும்படங்களில் உள்ள இந்த போக்கு படிப்படியாக மாறவும்  கூடும். அது ஒரு பக்கம் இருக்க இதில் இருந்து சினிமாவைக் கற்றுக் கொள்ளும்  புதியவர்கள் வருங்காலத்தில் நல்ல படங்களை எடுக்கவும் கூடும்.

உங்களுடை முந்தைய கேள்வியில் கேட்டது போல தமிழகத்தில் ஈழ வாழ்வியலை, அரசியலை சரியாக பதிவு செய்யாததற்க்கு அவர்கள் ஈழ வாழ்க்கையைப் படத்தில் கூட பார்க்கவில்லை. ஆகவே ஈழத்தவர்களின் படங்கள் அந்த வாழ்வியலை பதிவு செய்கிற போது அதனைப் பார்க்கிற தமிழ் திரைப்படப்படைபாளிகளுக்கும் அந்த வாழ்வை திரையினூடே பார்க்கும் வாய்ப்பு கிட்டும். ஈழத்து படைப்பாளிகளாலேயே அந்த வாழ்க்கையை செழுமையாகச் சொல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

மலையாளத் திரைப்படங்களில் இருக்கிற “தமிழ்வெறுப்புவாதம்” தமிழகத்தின் எல்லையைக் கடந்து ஈழத்தமிழ் மக்களையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் வெளியான மலையாள திரைப்படத்தில் நாயொன்றுக்கு “பிரபாகரா” என பெயர் சூட்டப்பட்டிருப்பது அதில் ஒன்று. இதன் பின்னணியில் இயங்கும் மனநிலை எந்த அரசியலில் இருந்து உருவாகிறது என எண்ணுகிறீர்கள்?

தமிழகத்திற்கு வெளியே ஈழ அரசியலை நாட்டு நிலவரங்களை அதிகம் தங்கள் ஊடகங்களில் பதிவு செய்யும் இந்திய மாநிலம் கேரளம்தான். நான் 2007 இல்மிசன் நைன்றி டேய்ஸ்என்ற மலையாளப்படத்தில் வேலை செய்தேன். அது ராஜிவ் கொலை பற்றிய படம். மேஜர் ரவி என்கிற முன்னாள் ராணுவ அதிகாரி இயக்கியபடம். அவர் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுடன் நடித்தவர். இப்போது நீங்கள் உங்கள் கேள்வியில் சொல்லியிருக்கும் படத்திலும் கூட சுரேஷ்கோபி நண்பராக நடித்திருக்கிறார். அவர் இந்திய அமைதி காக்கும் படையிலும் இருந்தவர்.

இயல்பிலேயே மலையாளிகள் ஒன்று காங்கிரஸ்காரர்களாகவோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளாகவோ இருப்பார்கள். இருவருமே இந்திய பெரும் தேசியத்தின் அரசியலை பின்புலமாகக் கொண்டு தமது அரசியலைச் செய்பவர்கள் ஆகவே புலிகள் மீதான விமர்சனம் அவர்களுக்கு இருக்கும்ஆனால் இதனை கொண்டு ஒட்டுமொத்த மலையாளப் படைப்பாளிகளையும் பொத்தம் பொதுவாக இனவெறுப்பாளர்களாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனக்கு மலையாளப்படைப்பாளிகள் பலரோடு நல்ல பரிச்சயம் உண்டு அவர்களில் பலரும் ஈழப்பிரச்சினை குறித்து கரிசனையான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். நான் அங்குள்ள சினிமாவில் வேலை செய்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல என்னுடைய ஆவணப்படங்களை அதிகமாகத் திரையிட்டதும் கேரளாவில்தான். எனக்கு கேரளாவில் ஒரு சிக்கல் வந்த போது எழுத்தாளர் பால் சாக்கரியா முதலான பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் படைப்பாளிகளுமாக இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழகத்தில் திரையிடுவதற்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்ட என் படத்திற்கு கேரளத் திரைப்பட விழாவில் அந்த மாநில முதலமைச்சர் விருது தந்தார். அந்த படைப்புச் சுதந்திரம் அங்கு இருக்கிறது. ஆகவே   எமது அரசியலை எமது படைப்புகளின் வழி அவர்களோடு பேசுகிற போது ஈழம் குறித்த சரியான பதிவுகளை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். கேரளா உன்னத சினிமாக்களை எடுக்கவல்ல இடம். எங்கள் கலைஞன் பாலுமகேந்திரா கேரள சினிமாவின் ஊடாகவே அறிமுகமானார்.

இன்னொன்றையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். 2012 இல் என்று நினைக்கிறேன். கேரளத் திரைப்பட விழாவில் ஐந்து சிங்களத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக நினைவு. சிறிலங்கன் படங்களின் சிறப்புத் தொகுப்பென அந்த படங்கள் திரையிடப்பட்டன. இலங்கை அரசும் பல வெளிநாடுகளைப் போல அந்த  திரைப்பட விழாவின் ஸ்பான்சர்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இப்ப விசயம் என்னவென்றால் திரையிடப்பட்ட பெரும்பாலான படங்கள் இலங்கை அரசு சொல்ல விழைகின்ற சிங்கள மனோநிலையின் திரை வடிவங்களே.

இப்ப சொல்லுங்கள். அந்த படங்களை பார்க்கிற பார்வையாளனுக்கு என்ன போய்ச் சேரும். அப்படியெனில் இந்த பத்தாண்டுகளில் இத்தனை பெரிய வணிக வளத்துடன், இந்தியில் பாலிவூட்க்கு அடுத்து உலகம் முழுவதும் வியாபித்துள்ள திரைப்படத்துறையை வைத்திருக்கும் தமிழ் சினிமா என்ன செய்திருக்கிறது என்கிற கேள்வியை வக்கணையாக மறந்து விட்டு விடுகிறோம். அல்லவா.

நான் நாய்க்கு பிரபாகரன் என்று பெயரிட்டு அழைத்ததை நியாயப்படுத்தவில்லை. நான் அந்த படத்தைப் பார்க்கும் போது எனக்கு பளீர் என்று அந்த இடம் தாக்கியது. அந்த பெயருக்கான மரியாதையை  அவர்கள் புரிந்திருக்க வேணும். மக்களின் உணர்வைக் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். படைப்பாள மனோநிலையில் கேரளத்தை மையமாக வைத்து யோசிக்கப்பட்ட கதையில் தெரியாமல் இப்படிப் பெயர் வைத்து விட்டோம் என்கிறார்கள்அது அந்த நோக்கத்தில் வைக்கப்பட்டதில்லை என்று மன்னிப்புக் கோரிவிட்டார்கள்.

மற்றபடி நானும் பார்த்திருக்கிறேன். தமிழர்களை  கிண்டல் செய்வதும் நகையாடுவதும் மலையாள சினிமாவில் இருக்கத்தான் செய்கிறது. அது பழைய சேர சோழ பாண்டிய சாம்ராச்சியங்களின் பகையோ என்னவோ.   

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டார். அவர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த  படுகொலைகளை கண்டித்து எழுதியவர் கிடையாது. மாறாக அன்றைய அரசின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக காட்டமாக எழுதியவர். இதுபோன்ற பத்திரிக்கையாளர் படுகொலைகளுக்கான நீதியைக்கூட சர்வதேச சமூகம் பெற்றுத்தர முன்வரவில்லையே, அதற்கான காரணம் எதுவாக இருக்கும்?

முதலில் லசந்த தமிழர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை ஆதரித்தவரல்ல. இலங்கை அரச பயங்கரவாதத்தினை வலுவாக எதிர்த்த குரல் அவருடையது. சிவராம் கொலை செய்யப்பட்ட பின்னர் நான் லசந்தவைப் பேட்டி கண்டிருந்தேன் ஆகையால் என்னால் இதைச் சொல்ல முடியும். அவர் புலி அதரவாளரோ தமிழீழத் தனி நாட்டுக்கான ஆதரவாளரோ அல்ல. ஆனால் நியாயமான அரசியல் தீர்வுடன் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ள இலங்கையை விசுவாசிக்கின்ற சிங்களவர்தான். அவருடைய இறுதி ஆசிரியர் தலையங்கத்தைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்அது இருக்க, சர்வேதசம் என்றால் யார்.

அது யாரிடமிருந்து நீதியைப் பெற்றுத் தரும். லசந்தவுக்கு முன்னரும் பின்னரும் கூட பத்திரிகையாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் கடத்தப்பட்டும் இருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளின் காலத்திலும் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரிச்சட் டி சொய்சா கொல்லப்படும் போது ஐதேகதான் ஆட்சியில் இருந்தது.

அப்போது மகிந்த ஐதேகாவின் அராஜகத்திற்கு எதிராக மனித உரிமை பேசிக் கொண்டிருந்தார். சிவராம் கொல்லப்படும் போது அதிபராக இருந்த சந்திரிக்காதான் மகிந்தவின் ஊடக ஒடுக்குமுறை குறித்துப் பேசுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திரிக்காவை தந்தை செல்வா நினைவுப் பேருரை ஆற்றுவதற்கு அழைத்த வரலாறெல்லாம் நிகழ்ந்தது. இதுவரையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் எவருக்கும் எந்த நீதியும் கிடைக்கவில்லை.

காட்டுனிஸ்ட் பிரகீத் எங்கலிய கொட மகிந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனார். அவர் கடத்தல் வழக்கை விரைந்து விசாரித்து நீதி வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ரணில்மைத்திரி கூட்டு தங்கள் நான்கு ஆண்டு ஆட்சியில் ஒன்றையும் வெளிக்கொணரவில்லை. அவரும் தமிழருக்காக காட்டூன் போட்டதற்காக காணாமல் ஆக்கப்படவில்லைநீங்கள் சொல்லுகிற சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத்தரும் என்றுதான் தமிழர்களும் இலவு காத்த கிளியாக பத்து வருசமாகக் காத்து இருக்கிறார்கள்.

என்ன ஒன்று சர்வேச அழுத்தங்கள் உருவாகிறபோது மேலும் இது போன்ற கொலைகள் தொடராமல் இருக்க வாய்ப்புள்ளது என்பதைத் தாண்டி நீதி கிடைப்பது என்பது நாடுகளுக்கிடையிலான அரசியல் ஒழுங்கில் உருவாகும் மாற்றத்திலேயே தங்கியுள்ளது.

தமிழ் – முஸ்லிம் உறவானது இன்றைக்கு இன்னும் விரிசலடைந்து இருக்கிறது. தமிழ் மக்களின் சுடுகாடிருக்கும் காணிகளை வன்கவர்ந்து அதற்குள் மசூதி கட்டி, அதனையே தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டி வாக்குகள் வாங்கும் அளவிற்கு கிழக்கில் இனத்துவேச அரசியல் கொதிக்கிறது. ஆனால் இதனை ஜனநாயக சக்திகள் யாரும் கண்டிப்பதில்லையே ஏன்?

தமிழ் முஸ்லிம் உறவு இண்டைக்கு இன்னும் விரிசலடைந்து இருக்கிறது என்கிறீர்கள்  அப்படியெண்டால் நேற்று  கொஞ்சம் குறைவான விரிசலோடு இருந்தது என்று அர்த்தம். இந்த விரிசலில் குளிர்காய்வதற்கும் அரசியல் செய்வதற்கும் இரண்டு தரப்பிலும் நிறையபேர் இருக்கிறார்கள். சிங்கள அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களும் கூட இதனைத்தான் விரும்புகிறார்கள்.

எப்படியாவது தமிழ் பேசும் இனங்களைப் பிரித்து எதிர் நிலையில் நிறுத்த வேண்டும் என்பது அவர்களின் நீண்டகாலக் கனவு. உங்களுக்கும் தெரிந்திருக்கும். கடந்த வருடத்தில், கல்முனையில் தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்று பெளத்த பிக்குக்கள் உண்ணாவிரதமிருந்தார்கள். சிங்கள கடும்போக்காளர்களின் இனத்துவேசத்தால், இனவாதத்தால் தமக்கென தனிநாடு கேட்டுப் போராடியவர்களை முஸ்லிம் பகுதியில் இருந்து பிரித்து தனியான தமிழ் பிரதேச செயலகம் என்கிற ஒன்றைப் பெறுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க வைத்ததின் மூலம் வெற்றியடைந்தது எந்த தரப்பு என்பதை இரு தமிழ் பேசும் சமூகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

1977 தேர்தலில் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவு வேண்டி தமிழர் விடுதலைக்  கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னின்ற எம் எச் எம் அஷ்ரப் 80 களின் இறுதியில் முஸ்லிம்களுக்கென தனி இயக்கம் காணத் தலைப்பட்டதும் தமிழ் இயக்கங்களோடு இணைந்து செயற்பட்ட முஸ்லிம் போராளிகள் அஷ்ரப்புக்குப் பின்னாலும் தனி இஸ்லாமிய அமைப்புகளாகவும் சுருங்கிவிட்டதும் ஏன் நடந்தது என்கிற விசாரணை நமக்குத் தேவை.

80 களில், கிழக்கில் ஏறாவூரில் என் நான்கு வயதில் முஸ்லிம்கள் வீடுகளை எரித்து வருகிறார்கள் என்று குரல் எழுப்பியவாறு தமிழர்கள் ஓட அவர்களோடு நாங்களும் காடுகளை நோக்கி ஓடித் தஞ்சமடைந்த அனுபவத்தில் இருந்து முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் இயக்கங்கள் நிகழ்த்திய படுகொலைகள் பதிலுக்கு பதிலென முஸ்லிம்களும் அவர்களின் ஊர்காவல் படையினரும் நிகழ்த்திய வன்முறைகள் என கிழக்கில் இந்த விரிசலை அதிகப் படுத்திய நீண்ட வரலாற்றில் என் பதின்மங்களின் அனுபவங்கள் சாட்சி. நான் இங்கே இயக்கங்கள் என்று குறிப்பிடுவது பலருக்கு கேள்விகளை எழுப்பலாம்.

ஏறாவூரில், காத்தான்குடியில், மூதூரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதற்கு விடுதலைப்புலிகள் பொறுப்பாளிகள் ஆனார்கள். ஆனால் அதற்கு முன்னரே 85 வாக்கில் அம்பாரையில் முஸ்லிம்கள் முதன் முதலில் படுகொலை செய்யப்பட்டது ஈபிஆர்எல்எப் தோழர்களால் என்று சொல்லப்பட்டது. இந்த படுகொலைகள் நடந்திருக்கக் கூடாத ஒன்று.

தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் புட்டும் தேங்காய்ப் பூவுமாக பிணைந்திருந்த கிழக்கின் ஊர்களில் ஒன்றுதான் ஏறுவூர். அங்குதான் வீடு இழந்து நாங்கள் ஏதிலிகளானதும் நிகழ்ந்தது. அப்போதெல்லாம் நம் நண்பர்களான முஸ்லிம்கள் நம்மை நம்பவைத்து இரணுவத்தோடு சேர்ந்து கழுத்தறுத்து விட்டார்கள் என தோன்றும். ஆனால் பின்னாளில் அரசியல் கற்று வரலாறு புரிகிறபோதுதான் தமிழர்கள் தரபில் நிகழ்ந்த அரசியல் பிழைகளும் சிங்களர் அரசின் பிரித்தாளும் சூட்சிக்கும் உணர்ச்சி அரசியலுக்கும் பலியான தமிழ் இயக்ககால அரசியலும் விளங்கியது. மற்றும் படி அருகருகே வாழும் இரண்டு இனக்குழுகளின் இயல்பான, சமரசத் தீர்வுகாணக் கூடிய பிரச்சினைகளைக் கொம்பு சீவும் எத்தனிப்பில் இருந்து என்னால் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.

 உணமைதான் 90 களுக்கு பிறகான அரசியலில் சிங்கள அரசுகளோடு ஒத்தோடத் தொடங்கிய முஸ்லிம் அரசியல் சக்திகள் இன்று அதே சிங்களத்தால் கைவிடப்பட்ட யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். இப்போது நாங்கள் அவர்களோடு அரசியல் பேச வேண்டும் சிண்டு முடியக் கூடாது. ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகத்தை இலங்கை அரசு கைப்பற்றி விட்டது என்பதால் புளகாங்கிதம் அடைந்து. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகான முஸ்லிம்களுக்கு எதிரான பொது மனோநிலையால்பார்ரா என்னை ஒடுக்கும்போது பாத்துக் கொண்டிருந்தாயே, இப்போது பார் உன்னை ஒடுக்கும் போது நான் சிரிக்கிறேன்என்கிற சிறு சந்தோசம் கொள்ளும் கும்பல் மனோநிலைக்கு மேலும் தூபம்  போடுவதன் மூலம் எதையும் செய்ய முடியாது

புலிகள் ரணில் அமைதி காலத்தில் இரு இன மக்களுக்குமான உறவைப் பலப்படுத்த எடுத்த முயற்சிகளையும் குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக கெளசல்யன் மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட போது முரண்பாடுகளைக் களைவதற்க்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அது தொடரப்படுவதற்கு முன்னர் அவரும் கொல்லப்பட்டு எல்லாமும் மாறிவிட்டது.

முஸ்லிம் ஊர்காவற்படையினர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து  செய்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அனுபவம் உங்களுக்கிருக்கிறது.ஆனால் இதனைச் சொன்னால் உங்கள் மீதும் “தமிழ் இனவெறியன்”என்ற குற்றச்சாட்டு எழுமே?இன்றைக்கும் முஸ்லிம்களின் “ஒடுக்குதல்”தமிழர்களை நோக்கி இருக்கிறதே?

எனது வீடு இஸ்லாமிய ஊர்காவல் படையினரால் சூறையாடப்பட்டது. அவர்கள் சிங்கள சிப்பாய்களோடு இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பயந்துதான் என் பால்யங்களின் நினைவுகளை காவிக் கொண்டு அந்த ஊரைவிட்டு ஓடினேன் என்பதைச் சொல்வதால் நான் ஏன் இனவெறியன் ஆகப் போகிறேன். ஒருவேளை இதற்க்குப் பதிலடியென விடுதலைப் புலிகள் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த அப்பாவி இஸ்லாமியர்களை கொன்று குவித்ததை நான் ஆதரித்தால் என்னை நீங்கள் தமிழ் இனவெறியன் என்று சொல்லலாம்.

நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் ஏதும் இல்லாத அமைச்சரவை ஒன்று பதவியில் இருக்கிறது. இஸ்லாமிய வெறுப்புவாதம் அதாவது இஸ்லாமோபியா வலுவாக உள்ளது. ஆகவே, இன்றைக்கும் முஸ்லிம்களின் ஒடுக்குதல் இருக்கிறது என்கிற உங்கள் கேள்வியில் உள்ள ஒடுக்குதல்என்பதன் அர்த்தம் வலுவற்றது.

ஏனெனில் சிங்கள இனவாத அரசு தமிழர்களை ஒடுக்குகிறது என்று சொல்கிற அதேஒடுக்குமுறைஎன்ற சொற்பிரயோகத்தை நீங்கள்  இந்த இடத்தில் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் கிழக்கில் இருப்பது ஒருவகைப் பங்காளிச் சண்டைதான். பெரும்பாலான இந்தக் குடும்பச் சண்டைகள் தவறான புரிதல்களால் மேலும் கூர்மைப் படுத்தப் படுபவை. ஆகவே பேசித்தீர்க்க கூடிய பிரச்சனைதான்.

இந்த பங்காளிச் சண்டையை கூர்மைப்படுத்த பெளத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனாவும் கிழக்கில் புதிதாக உருவெடுக்கும் இந்துத்துவ பின்புலத்தில் இயங்கும் செயற்பாட்டாளர்களும் ஒரு புறம் முனைப்பாக இருக்க வகாபிச கடும் பிற்போக்கு இஸ்லாமிய சக்திகள் மறுபுறமும் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும் போது இஸ்லாமியருக்கும் ஏனைய தமிழர்களுக்கும் இடையில் பெரிய வித்தியசங்கள் எதுவும் இருந்ததில்லை.

ஆனால் காலப் போக்கில் ஒரு அன்னியத் தன்மை உருவக்கப்பட்டுவிட்டது. அரேபிய பேரிச்சை மரங்களை அரேபியாவில் இருந்து தருவித்து காத்தான் குடியில் நட்டதும் தமிழ் மட்டுமே தெரிந்த முஸ்லிம் ஊர்களில் அரேபிய எழுத்துகளில் தெருப்பெயர்களையும் விளம்பர தட்டிகளையும் வைக்க ஆரம்பித்ததும் இந்த அன்னியத் தன்மையை வெளிப்படையாக்கி விட்டது. மட்டக்களப்பில் வருசத்திற்கு ஒருகால் கதவு திறந்து கலையாடி சாராயம் படைத்து பலியிட்டு குளிர்வித்துப் பாடி, சடங்கு முடிந்து நேர்த்திக்கு வந்த கோழி,ஆடுகளை ஏலத்தில் எடுத்து ஆக்கித் தின்பதோடு முடியும் மக்கள் வழிபாட்டிடங்கள் பலவும் இப்போது ஆறுகாலப் பூசையும் புரியாத சமஸ்கிருத மந்திரமும் பிராமணக் குருக்களும் என்று மாறிவிட்டதைப் போலத்தான் முஸ்லிம்களும் புரியாத அரபிக்குள் என்றும் சொல்லலாம். இவை இரண்டுமே மத காலனியாதிக்கம் தானே.  

தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுமென இராணுவவாத கண்ணோட்ட மிக்க இயக்கமாக சித்தரிக்கும் போக்குகளை தமிழ்நாட்டில் சில இடதுசாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதற்கும் மேலாக தமிழ்தேசியம் என்பதே வெள்ளாளத்தேசியம் என்கிறார்களே?

அவர்கள் தமிழ் தேசியம் என்றா சொல்கிறார்கள்? இல்லை புலித்தேசியம் என்கிறார்களா? தமிழ்நாட்டின் சில இடதுசாரிகள் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈபிஆர் எல் எவ்) இயக்கத்தை மார்க்சிய இயக்கம் என்று எப்படி நம்புகிறார்களோ அப்படியே புலிகளையும் வெறும் இராணுவக் கண்ணோட்டமுடைய இயக்கம் என நம்புகிறார்கள்.

ஆயுதப்போராட்ட இயக்கங்களின் காலத்திற்கு முன்னர் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் உருவான தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதிகம் மேட்டுக்குடி வெள்ளாள தலைமைகளை மையப்படுத்தியே இருந்தது. அதே காலப்பகுதியில் தமிழரசின் இனவிடுதலை கருத்தியலை முன்னெடுக்காமல் வர்க்க அரசியல் பேசிய இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கும் தமிழர்களிடமிருந்தது.

சாதிய அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் இடதுசாரி இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டது. அதில் முக்கியமானவர் தோழர் சண்முகதாசன். இலங்கையில் முதல் ஆயுதப் புரட்சியைச் செய்த ஜேவிபியின் ரோகன விஜயவீர சண்முக்தாசன் முகாமில் இருந்தவரேபாரளுமன்ற அரசியலை நிராகரித்து இளைஞர்கள் எழுச்சிகொள்ள வேண்டுமென ஒலித்த முதல் குரலாக சண்முகதாசனின் குரலைக் கொள்ள முடியும்ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்ற போது தமிழ் இடதுசாரிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வர்க்க விடுதலை என்கிற தங்கள் எண்ணத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை சிங்கள இனவாதம் உருவாகியது.

சண்முகதாசனே தனது இறுதிக்காலத்தில் தாயகப் போராட்டத்தை ஆதரிக்கும் மனோநிலைக்கு வந்திருந்தார். அதே போலத்தான் இடதுசாரிகள் பலரும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இருந்த புதுவை இரத்தினதுரையும் அப்படி இடதுசாரி இயக்கத்தில் இருந்து வந்தவர்தான்.

இதிலே வெள்ளாளத் தேசியம் என்ற கண்டுபிடிப்பு எப்படியெனத் தெரியவில்லை.  90களில் புலிகள் வீதிகளுக்குப் போராளிகளின் பெயர்களை வைத்த போது எங்கள் ஊரில் வெள்ளாளர்கள் 90(%) வீதத்திற்கும் சற்று அதிகமாகவே உள்ள ஒரு தெருவிற்கு ஒரு நல்லவர் பிரிவைச் சேர்ந்த பெயரைப் புலிகள் சூட்டினர். யாழ்ப்பாணச் சாதிய சனாதன அமைப்பினை உடைத்து நிகழ்த்தப்பட்ட மாற்றம்தான் இது. புலிகளின் தலைமைப் பொறுப்புகளில் இருந்த பெரும்பான்மையினர் வெள்ளாளர் அல்லாதோரே

தமிழகத்தில் பிராமணர் போல இலங்கையில் வெள்ளாளர் அளவில் சிறியவர்கள் அல்ல. மற்றைய அனைத்துச் சாதிகளையும் விட வெள்ளாளரே அதிகம். அதாவது 60(%) வீதத்திற்கும் மேல். ஆனாலும்  புலிகளின் தலைமைப் பொறுப்புகளில் இந்த சாதி விகிதாச்சாரமெல்லாம் இருந்ததில்லை.

ஆனால் புலிகளை வெள்ளாளச் சாதிய அமைப்பாக முன்னிறுத்துகிற போக்கு 90களில் .மார்க்ஸ் போன்றவர்களால் தமிழகத்தில் உருவாகியது. இதேகாலப் பகுதியிலேயே புலம்பெயர்ந்த நாடுகளிலும், வெள்ளாள நலன்சார் அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக புலிகளை நிறுவுவதற்கு  முயற்சிகள் நடந்தன.   60களில் தமிழரசுக் கட்சி மீது இருந்த விமர்சனத்தை புலிகள் மீது வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றே கருதுகிறேன்.

ஈபிஆர் எல் எவ் இயக்கத்தின் முக்கியஸ்தரும் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கால செயற்பாட்டாளரும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலை எழுதியவருமான புஸ்ராஜாவை, அவர் இறப்பதற்கு சிறிது காலம் முன்பு ஒரு நீண்ட பேட்டி கண்டேன். அந்தப் பேட்டியில் இயக்கங்களில் சாதியம் பாற்றி பேசியபோது அவர் சொன்னார். “ஈழத்தில் உருவான இயக்கத் தலைவர்களிலேயே வெள்ளாளர் அல்லாத சாதியைச் சேர்ந்த ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான். அத்தோடு, நாங்கள் அனைவரும் கட்டமைக்க கனவு கண்ட ஒரு இராணுவ பலமிக்க இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்என்றார்.

சரி அது இருக்க, ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன்.

2002 இல் விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் ஈழம், தமிழகம், தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைவரும் இணைந்த மானுடத்தின் தமிழ்கூடல் என்ற மாநாடு நடந்தது. அதில் தமிழகத்திலிருந்து வந்து கலந்துகொண்ட தொல்.திருமாவளவன் அவர்கள் தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இனஒடுக்குமுறைக்கு எதிரானது மட்டும் தானா என்று கேள்வி எழுப்பியதன் பின்னால் ஈழத்துச் சாதியம் தொடர்பாக புலிகளின் நிலைப்பாட்டை அறிய முற்பட்டார்.

நாவலர் வழிவந்த சைவமும் அந்த சைவம் பாதுகாக்கும் யாழ்ப்பாண வெள்ளாளக் கட்டமைப்பும் அவரின் இந்த கேள்விக்கான பின்புலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். ஆனால் அதே மேடையில் புலிகளால் ஒரு பிரகடனம் பதிலாகச் சொல்லப்பட்டது. அதுவே இந்தக் கூற்று.

ஈழப்போராட்டம் இனவிடுதலைப் போராட்டம் மட்டுமல்ல அது சாதிய, வர்க்க, பால் பேதங்களைக் கடந்த மானுட விடுதலை போராட்டம்”   

போருக்கு பிறகான ஈழத்தில் கிறிஸ்தவ மதமாற்ற சபைகள் உருவெடுத்து, போரில் பாதிக்கப்பட்ட சனங்களை மூளைச்சலவை செய்துவருகின்றனவே, இது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

உண்மைதான் புற்றீசல் போல நிறையச் சபைகளை போர் தின்ற பூமியெங்கும் காணமுடிகிறது. எப்படி புதிய அய்யப்பன் கோயில்களும் கல்கிபகவான் முதல் கொண்டு இந்தியாவில் உள்ள எல்லாச் சாமியர்களுக்கும் மடங்களும் நிலையங்களும் உருவாக்கப்படுகிறதோ அப்படி நாம் இதுவரை கேள்விப்படாத பெயர்களில் எல்லாம் கிறிஸ்தவ சபைகள் அங்கே உள்ளது.  எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் எங்கே போவார்கள்.

அவர்களுக்கு அருகே வந்து ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளை யார் சொல்கிறார்களோ அவர்களைத் தஞ்சமடைவார்கள். மனதளவிலும் பொருளாதார வலுவிலும் தளர்ந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள மக்களை இத்தகைய மத நிறுவனங்கள் இலகுவில் வசியப்படுத்திவிடுகின்றன. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். பாவப்பட்ட மக்களை வைத்து அரசியல் வியாபாரமும்,மத வியாபாரமும் நடப்பது ரகசியமானதல்லவே.

காணாமல் போன மகன் இத்தனையாம் திகதி உங்களிட்ட வருவான் என்று சொல்லும் சோதிடரை நம்பிக் காசை செலவழித்து, அந்த நம்பிக்கையின் தைரியத்தில் வாழும் தாய்களும், உறவுகளும்  வாழும் மண் அது. ஒரு வேளை பழையகடவுள் கைவிட்டுவிட்டார் என புதிய கடவுளர்களைத் தேடியும் அவர்கள் இந்த சபைகளில் விழக் கூடும்.  பழைய அரசியல்வாதி சரியில்லை என புதிய அரசியல்வாதி நாந்தான் மீட்பர் எனக் குதிப்பது போலத்தான் இதுவும்.

ஆனால் அதற்காக இந்திய இந்துத்துவ கருத்தியல்களோடு குதித்துள்ள இந்துத்துவ அமைப்புகள் வடக்கில் உருவாக்க முனையும் மதப் பதற்ற நிலை ஆபத்தானது.

உங்கள் அரசியல் கொள்கை குறித்து விளக்க முடியுமா?

என் பால்ய காலத்தில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட இன உணர்வும் விடுதலை வேட்கையும் அத்தனை சீக்கிரத்தில் மறைந்து போகக் கூடியதல்லஆனால் அதற்காக கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம். போரை நான் துளியும் விரும்பவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தாயகத்திலும் வெளியேயும் நான் சந்தித்த மனிதர்கள் கேட்ட கதைகள் பார்த்த அவஸ்தைகள் எல்லாம் என்னை அழுத்திக் கொண்டே இருக்கிறது. பகமை எல்லாவற்றையும்  அழித்துவிடும். அன்பும் அறவழியுமே சேதாரம் குறைந்த விடுதலைப்பயணம். ஈழத்துக்கும் இப்போது அதுவே அவசியம்.

மானுட விடுதலையும் சமத்துவமும் தனிமனிதனின் வாழ்வுரிமையும் சுய மரியாதையும் மதிக்கப்பட வேண்டும். என் முதல் ஆவணப்படம் போபால் மக்களுக்கு எதிரான அநீதியைப் பற்றியது. அந்த ஊர் எங்கிருக்கிறது என்றுகூட சரியாகத் தெரியாத ஈழத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்தவன் நான்.  1984 இல் விசவாயு கசிந்து இறந்த அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகளை காப்பாற்றிய  காங்கிரஸ் அரசு 2004 இல் அதே குற்றவாளிகளோடு புதிய ஒப்பந்தத்தைப் போட்டது.

20 ஆண்டுகளில் நச்சு வாயுவின் தாக்கம் அந்த மக்களின் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்தது. குற்றவாளியான அந்த நிறுவனம் புதிய காப்பிரேட் நிறுவனத்தின் பெயரோடு மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது. போர்குற்றம் மட்டுமல்ல கார்ப்பரேட்டுகள் நிகழ்த்தும் குற்றங்களும்  அத்தகையதுதான்ஈழத்தில் போரின் வடுக்களை தலைமுறைகள் கடந்தும் உடலிலும்  மனதிலும் தாங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வலியும் இந்த மக்களின் வலியும் வேறானதல்ல.

இப்போது என் அரசியல் கொள்கை உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். வியாபாரத்திற்காக எல்லைக் கோடுகளைத் தகர்த்தும், அரசியலுக்காக மேலும் மேலும் சுருங்கிக் கொண்டும், வெறுப்புணர்வை வளர்த்தும் வருகிற பெரும்பான்மையினரின் விருப்பங்களுக்காக சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் அரசியலுக்கு எதிர் அரசியல் எதுவோ அதுவே எனது அரசியலும்.

இன்றைய காலகட்டத்தில் ஈழப்போராட்டம் தேக்கம் அடைந்திருப்பதாக ஒரு கருத்துண்டு.என்.ஜி.ஓக்களின் அரசியல் அதிகரித்திருக்கிறது. அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை உருவாக்குகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என்ஜிஓகளின் அரசியல்தானே இன்று உலகம் முழுவதையும் வியாபித்துள்ளது. அவை உருவாக்கும் கருத்தியல்தானே உலகநாடுகளின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் உருமாறுகிறது. நமது உணவில் இருந்து மருந்துகள், தடுப்பூசிகள் வரை நமது பண்பாடு விவசாயம் எல்லாவற்றையும் அவைதான் முடிவு செய்கிறது. இந்த என் ஜி ஓ லாபி இலங்கை இனச்சிக்கலில் மட்டும் எப்படி இல்லாது போகும். எந்த ஒரு இனமும் தமக்கான தனித்துவத்தைப் பேணமுடியாத தங்கி வாழும் கைப்பாவைகளாக மனித உயிரிகள் உருமாற்றப்படுகின்றது.

உதாரணமாக 20 ஆண்டுகள் கடும் பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்ட போதும், தற்சார்ப்பு பொருளாதார அமைப்பு முறையால் தாக்குப்பிடித்து நின்றது புலிகளின் போராட்டம். எதுவுமே வெளியில் இருந்து வராவிட்டாலும் வாழமுடியும் என்ற நிலை இருந்தது ஆனால் இன்று கொரொனா ஊரடங்குக்கே பதட்டமாகும் நுகர்வுநிலையில் இருக்கிறோம். போர் முடிந்த கையோடு நடந்த முதல் அழிப்பு இந்த தற்சார்பு கட்டமைப்புத்தான். செயற்கை உரங்களாலும் மருந்துகளாலும் பாழ்படாத வன்னி நிலத்தில் வகைதொகையின்றி கிருமிநாசினிக்கடைகளையும் விதைக் கடைகளையும் ஆரம்பித்ததுடன் தொடங்குகிறது புதிய யுத்தம். சரி வேறு பதிலுக்காக கேட்ட கேள்விக்கு நான் இந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

  ஈழப்போராட்டத்தின் கடந்த அத்தியாயம் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டதாக அறிவுப்பு வெளியிடப்பட்ட போதே முடிவுக்கு வந்துவிட்டது. அதில் இருந்து இன்னொரு போராட்ட வடிவம் முகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. The Battle of Algiers என்ற படம் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் பற்றியது 1966இல் வெளியானதுஅன்ரன் பாலசிங்கம் தமிழ்படுத்தலில் புலிகளே தொண்ணுறுகளில் அந்த படத்தை திரையிட்டதாகச் சொல்கிறார்கள். அந்த படத்தின் இறுதிக் காட்சிகளைச் சொல்கிறேன்

அல்ஜீரிய விடுதலைப் போராட்டக் குழுவின் தலைவரை பிரன்ஞ்சுப் படைகள் முன்னரே கொன்றுவிடும். இறுதியில் அந்த போராட்ட இயக்கத்தின் தளபதியை ஆயிரக் கணக்கானோர் வாழும் குடியிருப்புக்குள் வைத்து இராணுவம் சுற்றிவளைத்துவிடும். சரணடையச் சொல்லி இராணுவம் அறிவிக்கும். வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேறுவர்.அந்த மக்கள், தங்கள் ஆயுதப் போராட்டத்தின் இறுதித் தளபதியின் விரும்பாத முடிவை துயரத்தோடு பார்த்துக் கொண்டிருப்பர். தளபதி இருந்த வீடு குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.

அத்தோடு முடிந்தது அவர்கள் போராட்டம் என்று நினைத்த ஆக்கிரமிப்பாளர்களைத் தூங்கவிடாமல் செய்தது அந்த மக்களின் எழுச்சி. மக்கள் வீதிகளுக்கு வந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து  அவர்கள் விடுதலை பெற்றபோதுதான் வீட்டுக்குத் திரும்பினார்கள். அவர்களின் ஆயுதப் போராட்டம் மவுனித்த போது அது வேறு வடிவங் கொண்டது. 90களில் புலிகள் இந்தப் படத்தை திரையிடும்போது என்ன நினைத்திருந்தார்களோ தெரியவில்லை ஆனால் 2009இற்க்கு பிறகு அப்படியெதுவும் நிகழவில்லை என்பது கண்கூடு.

தமிழகத்தின் சில வாய்ச்சொல் வீரர்களின் புரூடாக்களையும், ஈழத்து அரசியல் தலைவர்களின் காலம் கடத்தும் வாக்குறுதிகளையும் தானே நாங்கள் பத்தாண்டுகளில் கடந்திருக்கிறோம். ஆகவே இது தேக்க நிலை என்று நீங்கள் சொல்லுகிற என் ஜி ஓ க்கள் சொல்லக் கூடும்.

***

RELATED ARTICLES

2 COMMENTS

  1. மிக சிறந்த நிதர்சனமான பதிவு.

  2. முக்கியமான நேர்காணல். இரண்டு கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
    1.
    தமிழ் முஸ்லிம் கருத்து வேறுபாடுகள் தொடர்பான நிதானமான பதிவு. ”ஏனெனில் சிங்கள இனவாத அரசு தமிழர்களை ஒடுக்குகிறது என்று சொல்கிற அதே ”ஒடுக்குமுறை” என்ற சொற்பிரயோகத்தை நீங்கள் இந்த இடத்தில் பயன்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் கிழக்கில் இருப்பது ஒருவகைப் பங்காளிச் சண்டைதான். பெரும்பாலான இந்தக் குடும்பச் சண்டைகள் தவறான புரிதல்களால் மேலும் கூர்மைப் படுத்தப் படுபவை. ஆகவே பேசித்தீர்க்க கூடிய பிரச்சனைதான்.

    இந்த பங்காளிச் சண்டையை கூர்மைப்படுத்த பெளத்த கடும்போக்கு அமைப்பான பொதுபலசேனாவும் கிழக்கில் புதிதாக உருவெடுக்கும் இந்துத்துவ பின்புலத்தில் இயங்கும் செயற்பாட்டாளர்களும் ஒரு புறம் முனைப்பாக இருக்க வகாபிச கடும் பிற்போக்கு இஸ்லாமிய சக்திகள் மறுபுறமும் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும் போது இஸ்லாமியருக்கும் ஏனைய தமிழர்களுக்கும் இடையில் பெரிய வித்தியசங்கள் எதுவும் இருந்ததில்லை.” முக்கியமான பதிவு. தமிழ் முஸ்லிம் மோதலில் பாதிக்கபட்ட ஒருவர் என்கிற வகையில் இது தமிழ் முஸ்லிம் இன மோதலல்ல பங்காளிச் சண்டைதான் என்கிற வாக்குமூலம் சத்திய வசனமாகிறது.
    2.
    இலங்கையில் வெள்ளாளர் தமிழருள் 60% என்பது தவறு. எனது ஆய்வுக்கட்டுரைகளில் 1800 – 1947 வரையிலான கலோனியல் பதிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத் தமிழர் மக்கள் தொகையில் 60 என்று பதிவு செய்தேன். 100 ஆண்டுகளுக்கும் மேலாக வன்னிக்கும் கொழும்புக்கும் கிழக்கு மாகாண நகரங்களுக்கும் யாழ்பாணத்தில் இருந்தே வெள்ளளர் புலபெயர்வுகள் ஏற்பட்டன. யாழ் குடாநாட்டுக்கு வெளியே வன்னிக் குடியேற்றங்கள் புறநடையாக மக்கள் தொகையில் வெள்ளாளர்தொகை குறைவு. ஆனால் யாழ்பாண அரசின் காலத்தில் இருந்தே தமிழ்பகுதிகளைப்பொறுத்து கல்வி செல்வம் வளங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் குவிந்து வெள்ளார் கட்டுபாடில் உள்ளமையே வெள்ளார் ஆதிக்கத்தின் அடிப்படையாகும். புலபெயர்வில் வெள்ளாளர் தொகை விழுந்துள்ளது ஆனால் செல்வம் பெருகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular