Friday, March 29, 2024

கைமாறு

கா. சிவா

மூடியிருந்த ஜன்னல்களின் சிறிய இடைவெளிகளில் பனிக்காற்று பீறிட்டு உள்நுழைந்தது. தட் தட் எனக்கேட்கும் ஒலி எத்தனை விரைவாகக் கேட்கிறது என்பதை வைத்து ரயிலின் வேகத்தை உணர முடிந்தது. மெல்லிய பனி பலநூறு நுண்முட்களால் சந்துருவின் மேனியை துளைத்து உள்நுழைந்தன. கடும் வெயிலின் தகிப்பு சந்துருக்கு பொருட்டாகத் தெரிந்ததில்லை. ஆனால் பனியின் மென்தைப்பை அவனால் தாங்க முடியவில்லை. கைகளை கட்டிக்கொண்டு உடலை ஒடுக்கியபடி கழிவறையை ஒட்டிய பாதையில் அமர்ந்திருந்தான்.

அவனைப் போலவே இன்னும் பலரும் அமர்ந்திருந்தார்கள். ஓரமாக இவர்களின் பைகள் குவியலாக கிடந்தது. சந்துரு மற்றவர்களைப் பார்த்தான். பெரிதாக வருந்தாமல் துண்டையோ லுங்கியையோ போர்த்திக் கொண்டு சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இருவர் கால்களை நீட்டியபடியும் மற்றவர்கள் இவனைப் போல கால்களை கையால் கட்டியபடியும் இருந்தார்கள். சந்துருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையினால் முன்பதிவில்லாத இந்தப் பெட்டியில் இப்படி அமர வேண்டியதாகி விட்டது. இங்கே அமர்ந்து இப்படிக் குறுக வேண்டியதாகி விட்டதே என்ற எண்ணம் எழுந்ததுமே அப்பாவின் மேல் வெறுப்பு எப்போதும் இருப்பதைவிட பன்மடங்கு கூடியது. சில நேரங்களில் இவன் யோசித்திருக்கிறான், ஏன் இத்தனை வெறுப்பு தந்தைமேல் தோன்றுகிறதென. தான் சிறுவயதிலேயே செய்ததை கூறிக்கூறி இவனை குத்திக் காட்டுவதுடன் தன்னால் செய்ய முடியாமல் போனதையும் “என்னால் தான் முடியவில்லை. நீயாவது செய்யேன்” என நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக எண்ணிக் கொண்டு இவனை தன்னிரக்கத்தில் தள்ளிக்கொண்டே இருப்பதுதான் காரணம் எனத் தோன்றியது. அவர் செய்ததையும் செய்யத் தவறியதையும் நான் செய்தால்… நான் செய்ய வேண்டியதை யார் செய்வது. என் பிள்ளையா… இல்லையில்லை ஒருபோதும் என் பிள்ளைக்கு இப்படியொரு நெருக்கடியைக் கொடுக்க மாட்டேன் என்று எண்ணிக் கொண்டபோதே தற்போது இதற்கு எந்த அவசியமும் இல்லை, முதலில் வேலை வேண்டும், பிறகுதானே திருமணம் பிள்ளையெல்லாம் என்று தன்னையே கடிந்து கொண்டபோது திலகாவின் நீள்வட்ட ஏறு நெற்றி முகமும் சற்று மேடிட்ட இதழ்களும் நினைவுக்கு வந்து மறைந்தது.

ஜன்னலுக்கு வெளியே தெரிந்த இருளின் கரிய போர்வை கிழிந்தது போல அவ்வப்போது தூரத்து வெளிச்சம் தெரிந்து மறைந்தது. மாட்டேன் மாட்டேன் என எத்தனை தடவை கூறினான். அப்பா அவரின் முடிவில் தகர்க்க முடியாத உறுதியுடன் இருந்தார். ஒவ்வொரு முறை சந்துரு முடியாதெனக் கூறியபோதும் அந்த உறுதி வலுப்பெற்றது. எப்போதும்போல கடைசியாக “அவர் பிடிவாதம்தான் தெரியுமே. போய் பாத்துட்டு வாடா” என அம்மா கூறி சந்துருவை நகர்த்தினாள். இருவருக்கும் இடையில் நசுங்கி கண்ணீரைப் பொழியும் அம்மாவை காணச் சகியாமல்தான் இந்தமுறையும் ஒப்புக் கொண்டான்.

டிப்ளமோ படித்த அப்பா அவர் படிக்க எண்ணிய பொறியியலை சந்துருவைப் படிக்க வைத்தார். இவனுக்கு என்ன பிடிக்கிறது எனக் கேட்கவேயில்லை. தன்னைக் கேட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பான் என சிலமுறை தன்னையே கேட்டுக் கொண்டபோது இவனால் அதைக் கணிக்க முடியவில்லை. ஆனாலும் வேலை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் “நீங்கதானே எஞ்சினியரிங்ல புடிச்சு தள்ளுனீங்க. நெறவேறாத ஒங்க ஆசைக்காக இப்ப நான் பாடுபடறேன்” என்று அவர் முகத்தைப் பார்க்காமல் கத்துவான். பிறகு அம்மா சொல்வார் “அவர் கம்பீரம் மெதுவாக தளர்ந்து, வருந்துவதாக”. அப்போதும் “தப்பு செஞ்சிட்டு வருத்தப்பட்டா சரியாயிடுமா” என மனதிற்குள் கறுவிக் கொள்வான்.

அப்பாவின் நண்பர் கோதண்டத்தைப் பார்ப்பதற்காக காலையில்தான் திருப்பூருக்கு வந்தான். ஐந்து வருடங்களுக்கு முன் மிகவும் நலிந்த நிலையில் இவரிடம் உதவி கேட்டுவந்த கோதண்டத்திற்கு வேலை கிடைக்க உதவி செய்தாராம். அவர் இரண்டு வருடங்களில் தன் சொந்த ஊருக்கு அருகில் இருப்பதால் திருப்பூருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டார். அவரைப் பார்த்து தன் பேரைக் கூறினால் உடனே வேலைக்கு வழி செய்வார் எனக் கூறித்தான், விருப்பமில்லா சந்துருவை அனுப்பினார். சென்னையில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபோதும் முரண்டு பிடித்தபடியே கிளம்பினான்.

கோதண்டத்திடம் பேசிவிட்டுச் செல்லலாம் என இவன் முயன்றபோது அப்பாவிடம் இருந்த அவரின் எண் தொடர்பு கொள்ளமுடியாத நிலைக்குச் சென்றிருந்தது. செய்த உதவிக்கு பதில் உபகாரம் கேட்பதுபோல் இருக்குமென்றே அப்பா இத்தனை நாள் தயங்கியிருக்கிறார். வேறுவழி இல்லாமல்தான் இவனை அனுப்புவதாக அம்மா கூறினார். அதனால்தான் அப்பா நேரில் வராமல் அவர் முகவரியைக் கூறி அனுப்பினார்.

ஆங்கங்கே கேட்டு வீட்டை அடைவதற்குள் மதியம் ஆகிவிட்டது. அவர் மாலைதான் வருவார் என்று வாசலில் நின்ற இராணுவத்தில் ஓய்வு பெற்றவர் சொன்னார். கம்பெனியின் முகவரியைக் கேட்டான். அதன் தொலைவு அதிகமாக இருந்ததால் அங்கேயே காத்திருக்க முடிவுசெய்து அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே கிடந்த திண்டின்மேல் அமர்ந்திருந்தான். தேடிக் கண்டுபிடித்தபோது வீட்டைச் சரியாகக் கவனிக்கவில்லை. இப்போது சற்றுத் தள்ளி நின்று பார்த்தபோது ஏதோவென்று சரியாக இல்லாததுபோலத் தோன்றியது. சுற்றியிருந்த கட்டடிடங்களெல்லாம் புதுவடிவத்துடன் பொலிவாக இருக்க இவர் வீடு பழைய காலத்து வீடுபோல தோற்றம் கொண்டிருந்தது. வண்ணமடித்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். வெண்மையைப் போல மாறியிருந்த வண்ணம், அடித்தபோது நீலமாக இருந்திருக்க வேண்டும் என்பதை சிறிய மடிப்புகளின் வெயில்படாத இடங்களில் தொக்கி நின்ற வண்ணத்தைக் கொண்டு அறிய முடிந்தது. இதைப் பார்த்தவுடன் சந்துருவுக்கு தங்கள் கிராமத்து அரியநாயகி அம்மன் கோவில் நினைவு எழுந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அதன் நேர்த்தியும், வடிவ ஒழுங்கும், பழமையும் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஆவலுடன் கோயிலின் உள்ளே சென்றான். சிலைகளுக்கும் சுவருக்கும் இடையே விரிசல்விட்டிருக்க, சிலை விழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. பூச்சுகள் உதிர்ந்து இரண்டு மூன்று அடுக்கு வண்ணங்கள் வெளிறித் தெரிந்தன. அரசமரம் ஒன்று தன் வேரைப் பரப்பி சுவர்களை கவ்விக்கொண்டு வானத்தை எட்டித்தொட முயன்றது. ஏன் இப்படி கைவிட்டுள்ளார்கள் எனக் கேட்டபோது, அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அரசுதான் மராமத்து செய்ய வேண்டும், ஆய்வு செய்ய வரவேண்டுமென பல வருடங்களாக மனு கொடுத்து வருகிறார்கள். ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, மதிப்பீடு செய்து, பணம் ஒதுக்கி அரசு பீடம் வருவதற்குள் என்னவாகுமோ. ஊர்க்காரர்கள் கை வைத்தல் பெருங்குற்றமாகும் எனக் கூறினார்கள். கோவில் மெதுமெதுவாக அது தோன்றிய பழங்காலத்திற்குள் நுழைந்து மறைந்துவிடும் என அப்போது தோன்றியது. இப்போது அது தன் இலக்கை அடைந்திருக்கக் கூடும் என்று எண்ணியபோது ரயிலின் கதவு உக்கிரமாகத் தட்டப்பட்டது.

ரெயில் ஏதோவொரு நிலையத்தில் நின்றிருந்தது. இதில் ஏறுவதற்காக வெளியில் நின்று கதவை தட்டி “தொறங்கய்யா, கதவத் தொறங்கையா” என்று சற்று வயதானவரின் குரல் ஒலித்தது. “ரயில் கதவை, லீவரை கீழே அழுத்தி திறக்க வேண்டியதுதானே. எதற்காக தட்டிக் கொண்டிருக்கிறார்” என்று சினம் தோன்ற அலுப்புடன் எழுந்தான். உறங்கிக் கொண்டிருந்த இருவரை தாண்டிக்கொண்டு கதவருகில் சென்றான். அவர் தட்டிக்கொண்டே இருந்தார். “ஏன் கத்துறீங்க கொஞ்சம் நில்லுங்க” எரிச்சலுடன் லீவரை இழுத்தபோதும் கதவைத் திறக்க முடியவில்லை. கதவுக்கு அருகில் இருந்தவர் “தம்பி மேலே பாருங்க. அந்தக் கொண்டிய எடுங்க அப்பதான் தொறக்க முடியும்” என்றார்.

ரயிலில் ஏறியவர் கையில் இரண்டு பெரிய மூட்டைகளை வைத்திருந்தார். அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரின் நிலையும் சற்று குலைந்தது. இவர் தன் மூட்டையை ஏற்கனவே கிடந்த பைகளுக்கருகில் நிற்கவைத்தார். கால்களை நீட்டி அமர்ந்திருந்தவர்கள், மடக்கி அமர வேண்டியதானது. கல்பட்டு கலைந்த குளம் சிறிது நேரத்தில் தன் பழைய நிலைக்குத் திரும்புவதென அனைவரும் ஒருங்கியமர்ந்து துயிலுக்குள் செல்ல முயன்றனர். இப்போது ஏறியவர் நன்றி தொனிக்கும் முகத்துடன் “ரெண்டு நிமிசந்தான் நிக்கும். ஏற்கனவே ரெண்டு வண்டில தொறக்கல. அதாலதான்” என்றபடி இவனைப் பார்த்து கூறிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் கதவின்மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டார். பாதி நரைத்த தலையில் துண்டை உருமா கட்டியிருந்தார். சுத்தமாக நரைத்திருந்த மீசையுடனும் சில நாட்கள் வளர்ந்த ரோமங்களுடனும் இருந்த முகத்தில் கவலை மையெனப் படிந்திருந்தது. இவர் முகம் எவரையோ நினைவுபடுத்தியது. யாரையென்று சட்டென நினைவுக்கு வராததால் சலிப்புடன் சாய்ந்தமர்ந்து தனக்குள் ஆழ்ந்தான்.

அப்பா எப்பவுமே இவனிடம் அதிகமாக பணம் புழங்காதவாறு பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்தார். “பணம் என்பது கூரான ஆயுதம் போல. அதை பயன்படுத்த தெரியாதவன் தன்னை காயப்படுத்திக் கொள்வதோடு பிறரையும் துன்பப்படுத்துவான்” என்று தத்துவம் போல சொல்வார். அதன் அர்த்தம் இதுவரை இவனுக்குப் புரிந்ததில்லை. பணம் கையில் இன்னும் கிடைக்கவில்லையே. திருப்பூருக்கு வர ரெயில் பயணச்சீட்டுடன் நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தார். வேலைக்கு சேர்ந்தால் கம்பெனியிலேயே முன்தொகை தருவார்கள். தங்க வசதியும் உணவும் கிடைக்கும் எனக்கூறினார். அவருக்குத் தெரியாமல் தான் தருவதாக அம்மா நூறு ரூபாய் கொடுத்தார். ரெயில் நிலையத்திலிருந்து கோதண்டம் வீட்டுக்குச் செல்வதற்கும் மூன்று வேளை சாலையோரம் இருந்த கடையில் உண்டதற்கும் போக இருபது ரூபாய்தான் பையில் இருக்கிறது. டிக்கெட் பரிசோதகர் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் வேறு ஒரு குமிழியாக உள்ளே உருண்டு கொண்டிருந்தது.

கோதண்டம் முகம் நினைவுக்கு வந்தது. சூரியன் மறைந்து மங்கலாக முகம் தெரியுமாறு வெளிச்சம் இருந்தபோது பழைய வடிவக் காரொன்றில் வந்தார். தொலைவில் அதன் சத்தத்தை கேட்டவுனேயே காவலாளியின் உடல்மொழி மாறுவது தெரிந்தது. அப்போதே சந்துரு உணர்ந்து கொண்டான். கார் உள்ளே சென்ற பிறகு வாயிலின் அருகே சென்றான். காவலாளி இவனைப் பற்றிக் கூறியவுடன் இவனைப் பார்த்தார். தயங்கியபடியே நடந்து அவரருகே சென்றான். மிகுந்த களைப்புடன் இருந்த முகத்தில் முறுவலைக் காட்ட முயன்றார். அது பொருந்தாமல் செயற்கையாக மெல்லிய அசூசையை சந்துரு மனதில் உண்டாக்கினாலும் இவனும் புன்னகைக்க முயன்றான். இது அவர் பார்வைக்கு எப்படித் தெரியும் என்று எழுந்த எண்ணத்தை அடக்கியபடி.

சந்துரு அவன் அப்பாவின் பெயரைச் சொன்னவுடன் கோதண்டம் முகத்தில் ஒளி கூடியதாகத் தோன்றியது. இப்போது அவரின் புன்னகை விரும்பத்தக்கதாக மாறியிருந்தது. “நீங்க சாயங்காலம்தான் வருவீங்கன்னு இவர் சொன்னாரு. கம்பெனிக்கு வரலாம்னு அட்ரஸ் கேட்டேன்…” என்று சந்துரு கூறத் தொடங்கிய போதே, “கம்பெனிக்கு வந்தாயா…” என்று அவரின் குரலில் வெளிப்பட்ட அதிர்ச்சி முகம் வெளிப்படுத்தியதில் கால்வாசிதான் இருக்கும். இந்த தளர்ந்த முகத்தில் இத்தனை உணர்வு மாற்றங்களை குறுகிய நேரத்திலேயே பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் அதை ரசிக்க நேரமில்லை. “இல்ல சார். தூரமா இருக்கேன்னு இந்த பஸ் ஸ்டாப்லயே ஒக்காந்திருந்தேன்” ஊதிய பலூனுலிருந்து காற்று இறங்குவது போல அந்த அதிர்ச்சி அவர் முகத்திலிருந்து வெளியேறி ஆசுவாசமடைந்தார்.

“சொல்லுப்பா… அப்பா நல்லாருக்காரா. என்ன விசயமா வந்திருக்கீங்க”
வந்த நோக்கத்தைக் கூறியவுடன் அவர் முகம் எப்படி மாறப்போகிறது என்பதைக் காணும் ஆவல் மனதில் எழுந்தது. “நான் என்ஜினியரிங் முடிச்சிருக்கேன். சென்னையில சரியான வேலை அமையல. அதான் ஒங்க கம்பெனியில ஒங்க மூலமா கிடைக்கும்னு அப்பா அனுப்பினார்”
சட்டென முகத்தைத் திருப்பி வெளியே பார்த்தார். அவரின் முகத்தை இவன் கூர்ந்து நோக்குவதை உணர்ந்து முக உணர்ச்சிகளைக் காட்டிவிடக் கூடாதென திரும்பியிருப்பார் என தோன்றியபோது சற்று ஏமாற்றமாக இருந்தது. இவன் அவரின் தளரந்திருக்கும் சற்று பூசினாற்போன்றிருந்த உருவத்தை நோக்கினான். ஏனோ பெரியநாயகி கோவில் சட்டென நினைவுக்கு வந்தது.

இவன் பொறுமை கரையத் தொடங்கியபோது திரும்பினார். மிகவும் தீர்மானமாக கூறும் தொனியில், “தம்பி, இப்ப நெலம சரியாயில்ல. நான் வேற ஏதாவது எடத்துல விசாரிச்சுட்டு அப்பாக்கிட்ட சொல்றேன்னு சொல்லுங்க” என்று கை கூப்பினார்.

இவன் திகைத்தபடி நிற்பதைப் பார்த்தவர் “தம்பி செலவுக்கு பணம் இருக்கா. எதுவும் தேவையா..”

“இல்ல சார் அப்பா கொடுத்திருக்கார்… வர்றேன் சார்” அப்பாமேல் எத்தனை வெறுப்பிருந்தாலும் அந்த நேரத்தில் வேறொருவருக்கு முன் அப்பாவை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை.

“தம்பி பணம் இருக்கான்னு நான் கேட்டேன்னு அப்பாக்கிட்ட சொல்லாதீங்க. அவரப்பத்தி குறைவா நெனச்சிட்டேன்னு நெனச்சு வருத்தப்படுவாரு” என்றவரிடம் பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியே வந்தான்.

ரெயிலின் ஹார்ன் ஒலி கூர்மையாக செவிக்குள் நுழைந்தது. ஏதோ ஸ்டேசனுக்குள் நுழைவதை உணரமுடிந்தது. நிர்கதியாய் நின்றவருக்கு, வேலை வாங்கிக் கொடுத்தவருக்கு எப்படியொரு நன்றிக்கடனை செலுத்திவிட்டார் இந்த கோதண்டம். வீட்டினுள்ளே அழைக்கவில்லை. அமரச் சொல்லவில்லை. குடிக்கவோ உண்ணவோ எதுவும் கொடுக்கவில்லை. இவரைப்போய் நம்பி அனுப்பினாரே, அப்பாவைச் சொல்ல வேண்டும். இந்த அவமானம் அவருக்கு வேண்டும் தான். ஆனால் இதுமாதிரி ஏதேனும் நேரக்கூடும் என்பதை எண்ணியே அவர் யாரிடமும் உதவி கேட்காமல் தன் மரியாதையை காத்துக் கொண்டிருக்கிறார் போல. ஆனால் அதை மொத்தமாக சரித்து அழித்துவிட்ட கோதண்டம் மேல் தோன்றிய கோபத்தில் கையை தொடையின் மேல் ஓங்கித் தட்டினான். சத்தம் பெரிதாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கதவை யாரோ தட்டினார்கள். வண்டி நிற்பதை உணர்ந்தான். கதவருகே அமர்ந்திருப்பவர் எழுந்து திறந்துவிடுவார் என்ற எண்ணத்துடன் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் தட்டல் சத்தம் நிற்கவேயில்லை.

சலிப்புடன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அமர்ந்திருந்தவர் ஜன்னல் கண்ணாடியை மூடிக்கொண்டிருந்தார். இவன் முகத்தைப் பார்க்காதது போல பார்வையை தாழ்த்திக் கொண்டு கீழேயே அமர்ந்து கொண்டார். இவன் நினைத்தாலும் அவரை இந்தப் பக்கம் இழுக்காமல் கதவைத் திறக்க முடியாது. வெளியில் இருந்து குரல் மன்றாடியது. திறங்கப்பா… என்று ஆரம்பித்த அந்தக் குரல் திறங்கடா… என்று ஒரு வசைச் சொல்லுடன் முடிந்தது. அதைக் கேட்காதது போலவே கதவருகில் இருந்தவர் அமர்ந்திருந்தார். அருகில் அமர்ந்திருந்தவர்கள் கண்விழித்து நோக்கியபின் எதுவுமே கூறாமல் கண்களை மூடிக்கொண்டார்கள். ரயில் நகர ஆரம்பித்தது. கூடவே நடந்தபடி தட்டிய கையை எடுத்துக்கொண்டு திட்டியவை எதிர்காற்றில் சிறிதளவே செவியை எட்டியது.

சந்துரு வெறுப்பும் சினமும் பொங்க கதவையொட்டி இருந்தவரை நோக்கினான். குனிந்து அமர்ந்திருந்தவர் இவனின் நோக்கின் கூரிய தீண்டலால் நிமிர்ந்தார். ஒருகணம் கோதண்டத்தைப் போலவே தோன்றினார். இவன் சினத்தின் உச்சிக்கு சென்றான். அவர்மேல் இருந்த கோபமும் வெறுப்பும் உள்ளத்தை உலுப்ப “ஏங்க, நீங்க அங்க குளிருல நின்ன மாதிரிதானே இவரும் நிக்கிறாரு. ஒங்களுக்கு அவரோட கஷ்டம் தெரியலையா. ஒங்களுக்கு நான் கதவத் தொறக்கலையினா இப்படி இங்க கதவ மூடிக்கிட்டு திறக்கமுடியாம ஒக்காந்திருக்க மாட்டீங்க…” அவர் இவன் முகத்தை கோபமோ குற்றவுணர்ச்சியோ இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அது சந்துருவின் சினத்தை மேலும் தூண்டியது.

“ஒங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே கெடயாதா. ஒதவி தேவைப்பட்டப்ப நமக்கு ஒருத்தன் ஒதவுனானே. அதே மாதிரி ஒதவி கேக்குற ஒருத்தனுக்கு ஒதவணுமேன்னு தோணலையா. ஒருத்தன் கதறும்போது, ஒதவுற இடத்துல இருக்கிற ஒங்களால எப்படி அவன கைவிட முடியுது. மத்தவங்க பரவாயில்ல. ஆனா அவர் நிக்கிற எடத்துல இருந்து மேல வந்த ஒங்களுக்கு அவர் கஷ்டம் தெரியுமில்ல… தெரிஞ்சே இப்படி மரக்கட்ட மாதிரி ஒக்காந்திருக்கிறது மனுசத்தனந்தானா…” கோபத்தில் வார்த்தைகள் தடுமாற வேகமாக மூச்சிளைக்க அவரையே நோக்கினான்.

“தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க. ஏன் இத்தன ஆவேசப்படறீங்க. என்னமாரி தான் அவரும் நிக்கிறாரு. அவரோட கஷ்டம் என்னன்னு எனக்கு தெரிஞ்சதாலதான் தொறக்கல” அவர் பதில் சொல்ல ஆரம்பித்ததே இவன் கோபத்தை பாதி குறைத்துவிட்டது. அவர் கூறவருவதை கவனித்தான். எப்படி தன் மனச்சாட்சியிடம் தனக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறார் என்பதைப் பார்க்கும் ஆர்வம் சந்துருவுக்குள் எழுந்தது.

“ஜன்னலத் தொறந்து பார்த்தேன் ரெண்டு பேரு நிக்கிறாங்க. மூனு மூட்டைய வச்சிட்டுருக்காங்க. அவங்களுக்காக பாத்து தொறந்திருந்தா இங்க இருக்குற யாரும் தூங்க முடியாது. எல்லோரும் இடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டுதான் போவணும்” என்று அவர் கூறியபோது சுற்றிலும் பார்த்தான். ஒருவரையொருவர் நெருங்கியமர்ந்துதான் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

“இன்னும் ரெண்டு வண்டி அடுத்து இருக்குது. அதுல ஒன்னுல அவங்களால ஏறிட முடியும். ஒங்கள மாதிரி யாராச்சும் தொறக்க இருப்பாங்க. அந்த மூட்டைகளோட, இதுல ஏறவிட்டுருந்தா உள்ள இருக்கிறவங்க எல்லாரும் நசுங்கிக்கிட்டுதான் போவணும். அதுதான் ஒதவியா…” என்று கூறியபின் கதவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். அப்போது அவரது உதட்டில் மெல்லிய ஏளனச் சிரிப்புடன் சிறு நிறைவும் இருந்ததை சந்துரு கண்டான்.

சந்துருவிற்கு ஏனென்றியாமல் மெல்லிய புன்னகை தோன்றியது. நாளை திலகா சொன்ன மாதிரி அவள் அப்பாவைச் சந்திக்க வேண்டும் என எண்ணியபடி கண்களை மூடி தூக்கத்தை வரவழைக்க முயன்றான்.

***

கா. சிவா – தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் இவரது “விரிசல்” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்: [email protected]


கா. சிவா
[email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular