Thursday, March 28, 2024
Homesliderகார்னர் சீட்

கார்னர் சீட்

பிரவீன்குமார்

ன்னும் சற்று நேரத்தில் திரைப்படம் துவங்க இருப்பதை அவன் கைகடிகாரம் நினைவுப்படுத்தியது. அனுமதி சீட்டை அடையாளப்படுத்திக் கொண்டு சிற்றெறும்பின் வரிசையை பழகியவர்களாக பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். பாதி கிழித்து கையில் திணிக்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் இருளின் இருப்பிடத்தை உறுதிபடுத்தின. விடுமுறை தவிர்த்த நாட்கள் பெருமளவில் திரையரங்கு இருக்கைகள் ஆக்கிரமக்கப்படுவதில்லை. இரைச்சல், முன்பதிவு, கூட்டம் என்று எவ்வித இடர்பாடுகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாத பலர் தாங்கள் விரும்பும் நாட்களில்தான் திரையரங்கை தேர்வு செய்கிறார்கள். வெறுமனே கழியும் நேரத்தை செலவழிப்பதற்கும், மனதை அரித்துக் கொண்டிருக்கும் துயரங்களிலிருந்து கொஞ்சமேனும் விடுபடுவதற்கும், தனது அந்தரங்க தேவையை நிவர்த்தி செய்வதற்கும் இப்படி காரணங்கள் பல திரையரங்கிற்குள் நுழைந்து கொண்டிருந்தவர்களிடம் இருந்தன. அவர்களுக்கும் ஓர் காரணம் இருந்தது. தங்கள் வாழ்வின் முக்கியமெனக் கருதும் விஷயங்களைக் குறித்து மனம்விட்டு பேசவும் அதைச் சார்ந்து முடிவுகளை எடுக்கவும்.

பின்தொடரும் கண்கள் பல அவர்களின் வாழ்தடத்தில் எந்நேரமும் முழித்துக் கொண்டிருந்தன. அதனிடமிருந்து தப்புவிப்பதற்கும், விடுபடுவதற்கும் இரண்டரை மணிநேர இருளின் இருக்கை ஓரம் தேவைப்பட்டது. அவர்கள் தேர்வு செய்த நாள், நேரம், திரையரங்கு, காட்சி என்று அனைத்தும் அவர்களுக்கு பொருந்துவதாக இருந்தன. திட்டமிட்டது போல் தங்களுக்கான கார்னர் சீட்டுகளை ஆன்லைன் வழி கொண்டு தக்கவைத்தனர்.

தனது ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு திரையரங்கை நெருங்கியவள் அவன் காத்திருப்பதைப் பார்த்ததும் கண்களின் அசைவைக் கொண்டு முன்செல்லும்படி செய்கை கொடுத்தாள். கைப்பேசிக்குள் தேடி எடுத்த குறுஞ்செய்தி F 24 & F 25 எனும் விவரங்களோடு அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதிபடுத்தியது.

அவனது கரத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நடப்பதுதான் அவன் வழக்கம். அவனும்கூட அதையேதான் விரும்புவான். ஆனால் ஆட்கள் யாரும் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அவ்விருளிலும் அவன் கரம் பிடிக்கத் தயங்கினான். F 1 & F 2 என்று முன்னமே பதிவு செய்திருந்த கார்னர் சீட்டின் இருப்பிடம் தேடி விரைந்தான். அவன் நடையின் பாதம் தேடி அவனை பின்தொடர்ந்து கொண்டிருந்தவனுக்கு ஓர் பிடிமானம் தேவைப்பட்டது. சட்டென்று அவன் மணிக்கட்டை பற்றிக்கொண்டான். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு கைபேசியின் டார்ச் லைட் வெளிச்சத்தின் மூலம் இருப்பிடத்தைக் கண்டடைய முடிந்தது. எவ்வித சமிக்ஞையும் இல்லாமல் அமர்ந்தவனைப் பார்த்து இவனும் பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். கொஞ்ச நேரத்திற்கு இருவரும் திரையில் தோன்றும் விளம்பரங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன் இருக்கைக்கு அருகில் எவரேனும் வந்து அமரக்கூடுமோ எனும் பயம் நீண்ட நேரமாக அவனை நச்சரித்துக் கொண்டிருந்தது. அவள் சமூக வலைதளத்திற்குள் உள்நுழைவதும் வெளியேறுவதுமாக தன்போக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். திரையரங்கை அலங்கரித்த மின்விளக்குகள் அவன் அணிந்திருந்த வெள்ளை நிறச்சுடிதாரை பலவண்ண தோற்றத்தில் காட்சிப்படுத்தியது. அவனுக்குள் வெதும்பிக் கொண்டிருந்த நடுக்கம் அவனை நிலைகொள்ளாமல் அவ்விருளிலும் பரிச்சயமான முகங்களை தேடி அலைந்து கொண்டிருந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள தான் பதிவு செய்திருந்த J 24 & J 25 இருக்கைகளுக்கு அருகில் ஏதேனும் இருக்கைகள் பதிவு செய்யப்படுள்ளதா என்று அத்திரையரங்கின் வலைதளத்திற்குள் சென்று துவங்க இருக்கும் காட்சியின் இருக்கைகளை சோதித்தான். தன் இருக்கைகளுக்கு அருகில் எந்த ஒரு இருக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்பதை அறிந்ததும் அவனுள் இருந்த பயமும் நடுக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விருளில் இருந்து மறைந்தது. அவனது நடவடிக்கைகளைப் பார்த்து அவள் எரிச்சலடைந்தாள்.

“இப்போ எதுக்கு தேவ இல்லாம பயந்துட்டு இருக்க. நீ சொல்லி தானே இந்த தியேட்டருக்கு வந்தேன். இப்போ நீயே பயப்படுற”

“இல்ல… என் வீடு பக்கம்தான். தெரிஞ்சவங்க யாராவது வந்துடுவாங்களோனு பயமா இருக்கு. அதுவுமில்லாம எந்த பொண்ணு கூடவும் நான் இதுவரைக்கும் தனியா படம் பார்த்ததே இல்ல”

“ஏன்டா… நாம என்ன இங்க மேட்டர் போடவா வந்தோம். நீ கூப்புட்டேனு ஆபிஸ் லீவு போட்டு வந்தா.. இப்படி பேசுற. உனக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா கூட ஒன்னும் பிரச்சன இல்ல. தேவ இல்லாம பயந்துட்டு இருக்காத”

தொடுதிரையில் தோன்றிய வெளிச்சத்தில் மிருதுவாகப் புலப்படும் அவளது முகத்தையே ஒருவித கிறக்க நிலையில் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடனான இந்நெருக்கம் இதுவரை அவன் அனுபவித்திராத ஒன்று. தொடுதலற்ற ஓர் ஸ்பரிசத்தை அவள் உடலின் வாசத்தால் உணர முடிந்தது. குளிரூட்டப்பட்ட அத்திரையரங்கம் இருவருக்குமான வேறு தேசத்தில் தனித்து சஞ்சரிப்பதாய் அவன் உணர்ந்தான்.

திரையரங்கிற்குள் அந்த அளவிற்கு கூட்டம் இல்லை. ஒருவழியாக C 24 & C 25 இருக்கையைக் கண்டடைந்து இருவரும் சௌகர்யமாக அமர்ந்தார்கள். நகரும் நிழல்களாக மனித உருவங்கள் அவரவரது இருக்கையைத் தேடி அலைந்து கொண்டிருந்தன. கல்லூரி காலத்தின் போது காதல் திரைப்படங்களின் மீது இருந்த மோகம் நரை படிந்த பின்னும் கூட இருவர் மனதிலும் நீடித்திருந்தது. சொல்லப்போனால் திரையரங்கில் அவர்கள் ரசித்த காட்சிகள்தான் அவர்களின் இளமை பருவக் காதலை வளர்த்துக் கொண்டிருந்தது. சரியாக முப்பத்தி எட்டு வருடங்கள் கழித்து இன்றுதான் இருவரும் ஒருசேர திரையரங்கிற்குள் நுழைந்தார்கள். அப்போதிருந்த டூரிங் டாக்கிஸ் நினைவுகள் எதிரில் தோன்றிய திரையில் காட்சிகளாக விரிந்தன. கைகள் இரண்டையும் குறுக்காகக் கட்டிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து தனக்குத்தானே சிரித்தபடி பழைய நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தான்.

“என்ன சிரிப்பு…?”

“இல்ல… நம்ம காலேஜ் டேஸ்ல சினிமாக்கு போகும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வந்துச்சு அதான் சிரிச்சுட்டு இருந்தேன்”

“ஆமா பிளாக்ல டிக்கெட் வித்தது… மத்த காலேஜ் பசங்க கூட சண்ட போட்டது… இது எல்லாம் ஞாபகம் வராமையா இருக்கும்”

திரையை பார்த்துப் புன்னகைத்தபடியே தன் மூக்குக்கண்ணாடியை சரிசெய்து மீண்டும் அணிந்து கொண்டான். திரைப்படத்திற்கான சான்றிதழ் திரையில் தோன்றியதும் இருளின் பல திசைகளிலிருந்து கூக்குரல்கள் எழுந்தன.

“நமக்கு ஏன் இப்படி ஓரமா சீட் கொடுத்து இருக்காங்க… பக்கத்துல ஒருத்தரையும் காணோம். நாம இந்த சீட்லதான் உட்காரணுமா? ஓரமா இல்லாம கொஞ்சம் முன்னாடி போய் நடுவுல எங்கனா சீட் பார்த்து மாறி உட்காரலாமே”

“நாம சினிமா பார்த்த காலம் இல்ல இது. வேற சீட் மாறி உட்கார்ந்தா… அங்கேயும் யாராவது வந்து அந்த நம்பர் சீட் டிக்கெட் காட்டி பாதிலேயே எழுந்துக்க சொல்லுவாங்க. நமக்கு எதுக்கு வம்பு. இங்கேயே உட்காருவோம்”

மனித வாழ்வில் காலத்தின் தண்டனையாய் பலருக்கும் கிடைப்பதென்னவோ பிரிவு ஒன்றுதான். அதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பலரும் காலப்போக்கில் அதையே தன் வாழ்வென பழகிக்கொள்கிறார்கள். பிரிவும் தனிமையும் மட்டுமே நிலைத்திருந்த தன் வாழ்வில் காலம் இப்படியான ஒரு சந்திப்பை அமைத்துக் கொடுக்குமென்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுடன் கழித்த காதலின் நினைவுகளே இத்தனை வருட வாழ்வை கடக்க வைத்தது. அந்நினைவுகளை அவன் பரிசோதிக்க விரும்பினான். திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நாயகனின் அறிமுகக்காட்சியை பார்த்துக்கொண்டே.

“நாம கடைசியா பார்த்த படம் எதுன்னு ஞாபகம் இருக்கா?”

“புதுக்கவிதை. அந்த படமும் ஞாபகம் இருக்கு அந்த படத்த பார்த்து நீ அழுததும் ஞாபகம் இருக்கு”

பாடலும் நடனங்களுமாக திரையில் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தாலும் அவள் கடந்தகால வாழ்வின் சிந்தனைகளிலேயே மூழ்கிக்கிடந்தாள்.

எதுவும் பேசாமல் தன் போக்கில் மெளனமாக அமர்ந்து கொண்டிருந்தவளைப் பார்க்கும்போது மேலும் அவன் எரிச்சலடைந்தான்.

“எதுவும் பேசாம இப்படி அமைதியா உட்கார்ந்துனு இருக்கத்தான் என்னப் பார்க்க வந்தியா?”

“ப்ளீஸ்…! நீ என்கிட்ட சிரிச்சு பேசலனா கூட பரவால… ஆனா இப்படி எரிஞ்சு மட்டும் விழாத”

நாயகனின் நடனத்தை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருப்பதை அவள் உதடுகளின் அசைவு வழியே தெரிந்துகொள்ள முடிந்தது. அவள் உதட்டின் சிவப்பும் தேகத்தின் நறுமணமும் அவன் கவனம் ஈர்த்தது. அதிலிருந்து விடுபட எத்தனிக்கவும் அதனுடன் லயித்து ஊடல் கொள்ளவும் ஒருசேர அவன் மனம் விரும்பியது. திரையைப் பார்ப்பதும், திரையில் தோன்றும் வெளிச்சத்தில் அவளது முகத்தை பார்ப்பதுமாக அவதிபட்டுக் கொண்டிருந்தான்.

“டேய் என்னடா உன் பிரச்சன… எதுக்கு இப்போ நெளிஞ்சுட்டு இருக்க. என்ன கிஸ் பண்ணனுமா?”

“எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லனா கூட நீயே வரவெச்சுடுவ போல”

சொல்லி முடித்ததும் முகத்தை பாவமாக கீழே தொங்கவைத்துக் கொண்டான். அவள் விழி அகலாது திரையில் தோன்றும் காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்க”

“ம்.. இத்தன நாளா ஆபிஸ்ல உன்ன தொலைவா நின்னே பார்த்துட்டேன். இவ்ளோ கிட்ட உன்ன பார்த்ததே இல்ல. ரொம்ப அழகா வேற இருக்க. அதான் பார்த்துட்டே இருக்கேன்”

அவளிடம் நட்பு பாராட்டுவதற்கென்று அலுவலகத்தில் பலரும் அவளை ஆராதனை செய்யும் வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் சூட்சமங்களையும் அவர்கள் சிரிப்பின் வழியே வெளிப்படும் தேவையையும் அவள் அறிந்திருந்தாள். பாசாங்கு இல்லாத இவனது முகஸ்துதி அவளுக்கு பிடித்திருந்தது. உதட்டின் வழியே தனது வெட்கம் மேலிடுவதை அவளால் உணர முடிந்தது. உதட்டை கடித்துக்கொண்டு திரையை பார்த்து லேசாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

“நம்மள யாரும் வாழவிட மாட்டாங்கடா…”

தன் சுய துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் தன் மனதின் பாரத்தை இறக்கி வைக்கவும் அவனுக்கு ஒரு மடி தேவையாய் இருந்தது. அவன் கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அவன் தோளின் மீது சாயும் தருணங்களில் உள்ளார்ந்து அனுபவிக்கும் ஓர் அன்னையின் மடியை போலவே அவன் உணர்ந்தான். திரையின் மீது பதிந்துள்ள பார்வை சிறிதும் விலகாமல் அவன் தோளின்மீது சாய்ந்து கொண்டான்.

“நீ ஒன்னும் கவலப்படாதடா. என்கிட்ட இருந்து யாரும் உன்ன பிரிக்க முடியாது. நான் எப்போவும் உன்கூட தான் இருப்பேன்”

வலதுகரத்தால் அவனது தோளை தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் இடதுகரம் கொண்டு தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.

“அதுக்கு அப்புறமும் நான் நிறைய நாட்கள் அழுது இருக்கேன். நாம சேர முடியாம போனத நினைச்சு”

சோகம் படிந்த அவனது முகத்தில் காலத்தின் சாட்சியாக வெண் மயிர்கள் இருபக்க கன்னங்களிலும் தலையிலும் அங்கங்கே முளைத்திருந்தன.

“ம்.. நாம பிரிஞ்சதுக்கு அப்புறம் அழுகைதான் என் வாழ்க்கைல நிரந்தரம்னு ஆய்டுச்சு… ஆனா அழுதுட்டு இருக்கும் போதே சட்டுன்னு கண்ண துடைச்சுட்டு சிரிக்க யாரு கத்து கொடுத்தாங்கனுதான் தெரில. கல்யாணம் ஆகி கொழந்த பொறந்து ஏன்… பேரன பார்த்ததுக்கு அப்புறமும் கூட இந்த வயசுலேயும் இதையேதான் பண்ணிட்டு இருக்கேன்”

திரைப்படத்தின் நாயகனும் நாயகியும் பின்னணி இசையோடு சந்தித்துக்கொள்ளும் காட்சியை திரைக்கு முன் அமர்ந்திருந்தவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

கடந்து வந்த பிரிவின் துயரங்கள் ஓய்ந்து நின்ற மழையின் தூறலென அவள் மனதிற்குள் ஓர் நீரோடையை தோற்றுவித்தது. சேற்றுக்கடியில் சிக்கி மெல்ல அதிலிருந்து விடுவித்துக்கொள்ளும் பாதச்சுவடுகளைப் போல் பிரிவின் கடைசி உரையாடல்களும் கண்ணீரின் ஆற்றாமைகளும் அவள் மனதிற்குள் தோன்றி தோன்றி மறைந்தன. சட்டென்று அவன் பக்கம் திரும்பினாள்.

“ஒரு வகைல பார்த்தா திரைக்கு முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்க நாம எல்லாருமே நடிகர்கள் தான்ல”

அவள் குரலின் திசை பக்கம் அவன் திரும்பியபொழுது கண்கள் கலங்கிய நிலையில் சிரித்த முகத்தோடு காட்சியளித்தாள்.

“சரி முடிவா உங்க அப்பா என்ன சொல்லுறாரு…?”

அவள் தயங்கிக்கொண்டே அவன் கரத்தின் மீது தன் கரத்தை வைத்தாள்.

“கோவப்படாத… லட்சியத்து பின்னாடி போரவனால காலத்த மட்டும்தான் வீணடிக்க முடியும்னு சொல்லுறாரு. படிப்ப முடிச்சு நாலு வருஷம் ஆச்சு மாத சம்பளம்னு இதுவரைக்கும் அவன் எவ்வளவு சம்பாதிச்சு இருக்கான்னு கேட்குறாரு. நான் என்ன சொல்லி அவர சமாதானப்படுத்துறது”

அவளது கரங்களிலிருந்து தன் கரத்தை மெல்ல விடுவித்துக்கொண்டே தொடர்ந்தான்.

“வெளிப்படையாவே சொல்லலாமே இது உன்னோட கேள்வினு. எந்த ஒரு லட்சியத்தையும் நேரம் காலம் தீர்மானிக்குறது இல்ல. உண்மையான உழைப்புதான் தீர்மானிக்கும். நான் உழைச்சுட்டு இருக்கேன். கண்டிப்பா என் லட்சியத்த அடைஞ்சுடுவேன்… எத்தன வருஷமானாலும் சரி என் லட்சியத்துல இருந்து பின்வாங்கப் போறது இல்ல”

“கொஞ்சமாச்சு பிராக்டிகலா இரு… நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குறதே நமக்கு கிடைக்குற வாய்ப்புகள்தான். நீயேதான சொன்ன.. உண்மையா உழைச்சுட்டு இருக்கேன்னு. உன் உழைப்புக்கு இதுவரைக்கும் ஏதாவது வாய்ப்பு கிடைச்சிருக்கா சொல்லு…? உனக்கு முன்னாடி எவ்ளோ பேரு இருக்காங்கனு பாரு. இப்போ நாம உட்கார்ந்துட்டு இருக்க சீட்டையே உதாரணத்துக்கு எடுத்துக்க. இந்த இருட்ட கடந்து, உனக்கு முன்னாடி வரிசைல இருக்க ஆட்கள கடந்து போனா மட்டும்தான் அந்த மேடைய தொட முடியும். உன்னோட அனுபவங்களும் நீ சந்திச்ச புறகணிப்பு கூடவா உன்ன யோசிக்க வைக்கல..? எந்த காலத்துல இருக்க நீ. சும்மா சும்மா உழைப்பு லட்சியம்னு பேசிட்டு இருக்க. எல்லாருக்குமே பொருந்துற விஷயம் என்ன தெரியுமா…! இந்த உலகம் நமக்கு கொடுக்குற வாழ்க்கைய ஏத்துட்டு அதுக்கூட வாழுறது தான்… அத புரிஞ்சுக்க”

அவனது லட்சியத்திற்காகவும், ஆசைகளுக்காவும் எப்போதும் அவனுக்கு ஆறுதலாய் இருந்தவள் எதிர்கால பற்றிய பயத்தால் இப்போது அவன் வாழ்வின் லட்சியங்களை துச்சமென நினைத்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை அவளது லட்சியமென்பது அவன் மட்டும்தான். அவனுடைய உலகம் மட்டும்தான் அவள் வாழ்க்கையாக இருந்து வந்தது. தான் நேசிக்கும் உலகத்திலிருந்து அவன் விலகி வந்தால் மட்டுமே தன் எதிர்கால உலகத்தில் அவனை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடியும் எனும் முடிவிற்கு வந்திருந்தாள். அவரவர் வாழ்வின் தேவையை நிவர்த்தி செய்ய முனையும் தேடலில் ஆதரவிற்கும் காத்திருப்பிற்கும் அங்கு இடமிருப்பதில்லை. எதன் வழியிலாவது அவனை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ளவே அவள் விரும்பினாள்.

“கொஞ்சம் நிறுத்துறியா…! இந்த உலகம் கொடுக்குற வாழ்க்கைய எல்லாம் என்னால வாழ முடியாது. நான் எதை விரும்புறேனோ அதைத்தான் செய்வேன். எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படித்தான் இருப்பேன்”

நாயகன் தன் காதலை நாயகியிடம் தெரிவிக்கும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. பெரும்பாலானோரின் எண்ண ஓட்டங்களில் அக்காட்சி வலை கொண்டு இழுப்பது போல் காதலின் நினைவலைகளை வெளிக்கொணரச் செய்தது. அந்நினைவுகளில் கிடைத்த சந்தோஷ தருணங்களை சிலர் மனதிற்குள் ரசித்தும் அந்நினைவுகளினால் கிடைத்த துயரங்களை மறக்க நினைத்தும் சிலர் தன் காதலின் நினைவு பக்கங்களை பின்னோக்கி புரட்டிக் கொண்டிருந்தார்கள்.

தன் காதலைத் தெரிவிக்கவும் இதுதான் தக்க சமயமென்று அவனுக்குத் தோன்றியது. தன் நெஞ்சின் படபடப்பையும், தயக்கத்தையும் சமநிலைக்கு கொண்டுவர எத்தனித்தான். சட்டென்று அவள்,

“நீ என்னைய லவ் பண்ணுரியாடா…?”

திரையரங்கின் சத்தத்தில் அவளது வார்த்தைகளை சரிவர கேட்க முடியவில்லை என்றாலும் தன் செவிகளுக்கு கேட்ட வார்த்தையை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள காதருகே அவளை நெருங்கினான்.

“என்ன கேட்ட சரியா விழல”

அவனுக்கு நன்கு கேட்கும்படி சத்தமாக “நீ என்னைய லவ் பண்ணுறியானு கேட்டேன்”

தான் சொல்ல நினைத்த விஷயத்தை அவள் கேள்வியாக முன்வைப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதிலேதும் சொல்லாமல் தலையை கீழே தொங்கவைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.

“சும்மா சொல்லுடா. எனக்கு எல்லாம் தெரியும். ரெண்டு வருஷம் ஒரே ஆபிஸ்ல வேலை செய்யுறோம் இதகூட தெரிஞ்சுக்க முடியாமலா இருப்பேன். நீயும் உன் லவ்வ சொல்லனும்னு தானே வெளிய கூட்டிட்டு வந்த. தயங்காம சொல்லு”

“பொறுமையா சொல்லலாம்னு தான் இருந்தேன். நீயும் வேற ஆபிஸ் மாறிட்ட. முன்ன மாதிரி சந்திக்கவும் முடியல. அதான் இப்போவே சொல்லிடலாம்னு…”

“இப்போ கூட நீ எங்கடா சொன்ன. நானா தானே கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”

சொல்லி முடித்ததும் அவள் போக்கில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“சரி இப்போ சொல்லு நாம லவ் பண்ணலாமா…?”

வெட்கத்தினூடே தனக்குள் சிரித்துக்கொண்டு அவன் காதருகில் சென்றாள்.

“நாம இப்போ கிஸ் பண்ணலாமா?

“ம்… அது எல்லாம் தப்பு. நீ என்ன லவ் பண்ணுறேனு சொல்லு அப்புறம் கிஸ் பண்ணலாம்”

தலையில் அடித்துக்கொண்டு “போடா ட்யூப்லைட்” என்று சொல்லி சத்தமாக சிரித்தாள். அவள் சிரிப்பிற்கு அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியாமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இடைவேளை நேரத்தை உணர்த்தும் வகையில் மேற்பரப்பு சுவற்றில் பொருத்தப்பட்ட பல மஞ்சள் மின்விளக்குகள் எரிய ஆரம்பித்தன. நேரத்தை மறந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டிருந்தவன் சட்டென்று சுதாரித்து எழுந்துக் கொண்டான்.

“டேய் சாப்பிட எதனா வாங்கிட்டு வரேன். உனக்கு என்ன வேணும்..?”

“எனக்கு எதுவும் வேணாம் நீ கொஞ்ச நேரம் இங்கியே இரு”

இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் வண்ணங்களற்று இருக்கும் வெள்ளை திரையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் வரிசைக்கு எதிர்வரிசை ஓரத்தில் ஒரு இளம் காதல் ஜோடி வளைத்து வளைத்து செல்பி எடுத்துக் கொண்டிருப்பதையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கையில் பார்ப்கானும் கோக் பாட்டிலுடன் அவள் அருகில் அமர்ந்ததும் அவளது கவனம் முழுவதுமாக கலைந்தது.

தான் பாத்ரூம் வரை சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்துச் சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் அவன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு சற்று தள்ளி எதிர்வரிசையில் ஒரு இளம் காதல் ஜோடி கைகோர்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே செல்வதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய அளவிலான பாப்கார்ன் ஒன்றையும் கோக் பாட்டில் ஒன்றையும் வாங்கிவிட்டு சிரித்துக்கொண்டே அவளை நெருங்கினான்.

“என்னடா ஆசைதீர செல்பி எடுத்துக்கிட்டியா… இப்போ உடனே ஐ யம் கமிட்டட்னு போஸ்ட் போட தோணுமே”

“அதுக்கு என்ன இப்போ அவசரம்… மேரேஜ் ஆகுற வரைக்கும் நம்ம சீக்ரேட்ஸ் எல்லாம் யாருக்கும் தெரியாம பார்த்துக்கனும்”

“ஓ.. அப்பிடியா…! சரி உன்னோட சீக்ரேட்ஸ் எல்லாம் நீ யாருக்கும் தெரியாம பார்த்துக்க. நான் உன்ன டாக் பண்ணி போஸ்ட் போட்டுட்டேன்”

இருவரும் சிரித்துக்கொண்டே தங்கள் இருக்கையை தேடி நகரத் தொடங்கினர்.

“ஏன்டா எதுவும் பேச மாட்டேங்குற. இப்படி அமைதியா இருந்தா எப்படி? அடுத்து என்ன பண்ணலாம் ஏதாவது சொல்லு”

“நம்மளால என்ன பண்ணமுடியும்னு நினைக்குற… அங்க பாரு ஜாலியா சிரிச்சுகிட்டே ஒரு லவ்வர்ஸ் வராங்களே அவங்களோட காதலுக்கு மட்டும் தான் இந்த உலகம் ஆதரவா இருக்கும். பெத்தவங்க எங்களோட காதலுக்கு தடையா இருக்காங்கனு அவங்களால நாளைக்கு கமிஷ்னர் ஆபிஸ் முன்னாடி போய் நிக்க முடியும், அவங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்க எங்கெங்க இருந்தோ பிரண்ட்ஸ் வருவாங்க, ஏன் அவங்களுக்கு அறிமுகம் இல்லாதவன் கூட அவங்க காதலுக்கு உதவி செய்வான். நமக்கு அப்படியா… நம்மள மனுஷனாவே மதிக்காத இந்த உலகம் நம்ம உணர்ச்சிகள மட்டும் எங்க புரிஞ்சுக்க போகுது..”

பின்பக்கமாக சீட்டின் மீது சாய்ந்துகொண்டு நீண்டு வளர்ந்திருந்த தன் சிகையை கோதிக்கொண்டிருந்தான். இடைவேளை முடிய இருக்கும் ஒருசில நிமிடத்திற்குள் மீண்டும் இருக்கைகளைத் தேடி பார்வையாளர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.

“அப்போ சினிமா பார்க்கும் போது சாப்ட சமோசா கோன் ஐஸ் எல்லாம் இப்போ இல்ல. பார்ப்கார்ன் தான் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ”

தான் வாங்கி வந்திருந்த பார்கார்னை சிரித்துக்கொண்டே அவளிடம் நீட்டினான். அதில் ஒன்றை எடுத்து சாப்பிட்டவள் அசைபோட்டுக்கொண்டே அவனை ஒருவிதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நாம இதுவரைக்கும் ஒன்னா சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்தது இல்லல”

“நாம காதலிக்குற காலத்துல இப்போ இருக்க செல்போன் எல்லாம் இருந்திருந்தா இந்த உலகத்துலேயே நாமதான் அதிகமா போட்டோ எடுத்திருப்போம்”

“இப்போ எடுக்கலாமே…”

நிராசைகளால் மட்டுமே சூழப்பட்ட அவனது வாழ்வில் விருப்பம் எனும் கதவு மட்டும் பல வருடங்களாக அடைபட்டுக் கொண்டிருந்தது. அதை தகர்த்தெறியும் வலிமையும், பொறுமையும் எப்போதோ அவன் இழந்திருந்தான். அவ்வெக்கையில் வாழ பழகியவனால் சட்டென்று எதிலும் தன்னை இணைத்துக்கொள்ள மனம் வரவில்லை. அவளுக்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.

“இத்தன வருஷத்துக்கு அப்புறம் ஒரு போட்டோ மூலமா நாம சேர முடிஞ்சதா இருக்கட்டுமே”

அவன் பதில் சொல்லவதற்கு முன் தன் பையில் வைத்திருந்த செல்போனை எடுத்து காமிராவை ஆன் செய்து அவனிடம் கொடுத்தாள். செல்பி எடுப்பதற்கு ஏதுவாய் இன்னும் அருகில் வந்து சிரித்துக்கொண்டே காமிராவை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கிளிக் செய்ய தயாராகும் அந்நொடியில் சட்டென்று விளக்குகள் அனைத்தும் அணைந்து இடைவேளைக்கு பிறகான காட்சி திரையில் ஓடத்தொடங்கியது. ஏமாற்றத்துடன் செல்போனை அவளிடம் கொடுத்தவன்.

“நாம கடைசியா சேர்ந்து படம் பார்த்தது இந்த கார்னர் சீட்டா இருந்துட்டு போகட்டும்… போட்டோ எல்லாம் வேண்டாம்”

நாயகனும் நாயகியும் ஒருவர் மீது வைத்துள்ள காதலின் நன்மதிப்பை வரிகளைக்கொண்டும் முகபாவனைகளைக் கொண்டும் டூயட் பாடலின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்திச் சென்றார்கள். தன் காதலின் முடிவு என்னவென்பதை யூகிக்க முடியாமல் விருப்பமற்று இருவரும் அமர்ந்திருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவனே பேச்சைத் தொடங்கினான்.

“எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல. எல்லாம் தெரிஞ்சு தானே என்ன லவ் பண்ண ஆனா மேரேஜ்னு வரும்போது எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு உன்ன கல்யாணம் பண்ணனும்னு எதிர் பார்க்குற. இது எந்த வகைல நியாயம்”

“என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா…? சாதி, குடும்பம்னு எல்லாத்தையும் தாண்டி எங்க வீட்ல இருக்குறவங்ககிட்ட சம்மதம் வாங்கி இருக்கேன். ஆனா உன்னோட வேலைன்னு எத சொல்லி அவங்கள சமாதனப்படுத்துறது. உன் லட்சியத்துக்கு பின்னாடி நானும் திரிஞ்சுட்டு இருக்கணும்னு நினைக்குறியா?”

“என்னோட லட்சியத்தைதையும் காதலையும் மதிக்காத காதல் காதலே இல்ல. அது ஒரு சுயநலம்”

சட்டென்று கோபமாக அவன் பக்கம் திரும்பினாள்

“அப்படியே வெச்சுக்க. உனக்கு உன் லட்சியம் முக்கியம்னா எனக்கு என் காதல் முக்கியம். உன்ன இழக்க கூடாதுன்னு நினைக்குறேன்ல என்னோட காதல் சுயநலக் காதல்தான்”

“காதலுக்காக நானும் என் லட்சியத்த இழக்க விரும்பல”

எந்த ஒரு விவாதத்தின் முடிவிலும் இதுவரை அவளிடம் அவன் சரணடைந்தது கிடையாது. விளங்கிக்கொள்வதற்கும் விளக்குவதற்கும் இனி எதுவும் இல்லை எனும் நிலை வரும்பொழுது மௌனம் மட்டுமே அவளிடத்தில் நிலைத்து நின்றது. எதுவும் பேசிக்கொள்ளாமல் கண்கள் இரண்டும் துடிக்க மெளனமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கும் வீட்ல பொண்ணு பார்க்க வர ஆரம்பிச்சுட்டாங்கடா. நம்ம விஷயத்த வீட்ல எப்படி சொல்லுறது… யாருகிட்ட சொல்லுறதுனு… ஒன்னும் புரியல”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன… உன்கிட்ட இருந்து யாரும் என்ன பிரிக்க முடியாதுனு”

“இப்போவும் சொல்லுறேன் யாருக்காகவும் உன்ன இழக்க மாட்டேன்… ஆனா நம்ம பெத்தவங்களையும் சுற்றி இருக்குறவங்களையும் எப்படி சமாளிக்குறதுனு தான் தெரில”

“அவசியம் இல்ல… நாம என்ன சொன்னாலும் யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. நம்மள சேர்த்துக்கவும் மாட்டாங்க. நாம அவங்ககிட்ட இருந்து விலகி இருக்குறது தான் நமக்கு நல்லது”

இறுக்கமாக அவனது கரத்திற்குள் தனது கரத்தை புதைத்துக்கொண்டே அவ்விருளில் அவனது விழிகளை கண்டடையும் முனைப்போடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“புரியலையா..? நாம இங்க இருக்க வேணாம். எங்கையாவது போய்டலாம். நமக்கான உலகத்த நாம தேடிப்போம்”

அவன் சொல்வது நல்ல யோசனையாக அவனுக்குத் தோன்றினாலும் சட்டென்று அதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. எந்த பதிலும் சொல்லாமல் நீண்ட நேரமாக அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

“சொன்னா நம்புவியானு தெரியல… கல்யாணம் ஆன இத்தன வருஷத்துல நான் தியேட்டருக்கு வந்து பாக்குற முதல் படம் இதுதான். புருஷன், குழந்தைகள்னு அமைஞ்சுட்டாலும் ஒருசில நினைவுகள் நாம விரும்புறவங்களுக்கு மட்டும்தான் சொந்தம். ஏதேதோ காரணம் சொல்லி அப்படியே சமாளிச்சுட்டேன். இப்போ இத்தன வருஷம் கழிச்சு உன்கூட தியேட்டருக்கு வரேன்”

“நானும் ஒரு ஒரு விசயம் சொல்லுறேன். நம்புவியானு தெரியல… நாம பிரிஞ்ச இத்தன வருஷத்துல யார் கூடவும் சேர்ந்து இதுவரைக்கும் தியேட்டருக்கு வந்தது கிடையாது. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் தனிமைல இருந்து வெளிய வந்த மாதிரி இருக்கு”

நாயகனும் நாயகியும் தீவிரமாக வாக்குவாதம் செய்து தங்கள் காதலை முறித்துக்கொள்ளும் காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. தங்களின் நிலைதான் திரையில் ஓடிக்கொண்டிருப்பதாக அவளுக்கு தோன்றியது. நீண்ட நேரம் மெளனமாக அமர்ந்திருந்தவள் ஒரு முடிவிற்கு வந்தவளாய் பேசத் துணிந்தாள்.

“அப்போ என்ன பத்தி எல்லாம் நீ யோசிக்க மாட்ட. உனக்கு உன் ஆசை லட்சியம்தான் முக்கியம்ல”

“உன்ன பத்தி யோசிக்காம எல்லாம் இல்ல… ஆனா உன்னவிட என் லட்சியத்த பத்திதான் அதிகமா யோசிச்சுட்டு இருக்கேன்”

இதற்கு மேலும் வார்த்தைகள் பயனற்றுப் போக அவள் விரும்பவில்லை. விழியோரம் தேங்கி நிற்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மௌனமாக திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஒரே ஆபிஸ்ல ரெண்டு வருஷம் வேல செஞ்சுருக்கோம். என்ன பத்தி நானே உனக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. உன் ஃலைப்க்கு நான் செட் ஆவேனான்னு நல்லா யோசிச்சியா…?”

“உன்கிட்ட எப்படி லவ்வ சொல்லணும்னு தான் அதிகமா யோசிச்சு இருக்கேனே தவிர இத பத்தி எல்லாம் யோசிச்சதே இல்ல… ஒருத்தங்கள பத்தி நல்லா தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவங்கள காதலிக்கணும்னு எதனா இருக்கா என்ன?”

“அப்படி இல்லடா… லவ் பண்ணுறது வெறும் டைம் பாஸ்னு இருக்க கூடாதுல. எனக்கு புடிக்குற விஷயம் உனக்கு புடிக்காம போகலாம், நீ விரும்பாத விஷயத்த நான் நேசிக்கலாம், நான் செய்யுறது தான் சரினு ரெண்டு பெரும் அடிக்கடி விவாதம் பண்ணிக்கலாம். இப்படி நிறைய இருக்கு. இது எல்லாம் கடைசில ப்ரேக்கப்ல கொண்டு போய்தான் நிறுத்தும். அதான் கேட்குறேன்.”

“நமக்குள்ள எது செட் ஆகுது ஆகல… இத பத்தி எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். நீ எப்படி இருப்பியோ எனக்கு தெரியாது. ஆனா நான் எந்த காரணத்துக்காகவும் என் காதல இழக்க கூடாதுனு தான் இருப்பேன்”

அவனை ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவனது தோளின் மீது சாய்ந்துகொண்டே தனது இரண்டு கைகளாலும் சிசுவை அரவணைப்பது போல் அவன் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

காட்சி நிறைவடைந்ததும் திரையரங்கின் விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. படத்தின் முடிவை ஆதரித்தும் இது இப்படி முடிந்திருக்கக் கூடாது என்று புலம்பிக்கொண்டும் கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியது. அவர்களும் ஓர் முடிவிற்கு வந்திருந்தார்கள்.

“சரிடா… நீ சொல்லுறது நல்ல யோசனையாதான் இருக்கு. நமக்கு யாரும் வேணாம். இன்னைக்கு நைட்டே நாம கிளம்புவோம்”

இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தார்கள்.

“கல்யாணம் பண்ணிக்காமலே நீ இத்தன வருஷம் தனியா இருந்துட்ட… அந்த குற்ற உணர்ச்சி இனிமேல் என்ன தூங்க விடாது. நம்மளோட கடைசி சந்திப்பு இதுவா இருக்கட்டும்”

பிரிவின் கடைசி நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருவரும் வெளிக்கதவை நோக்கி நடந்தார்கள்.

“டேய்… இப்போ நாம பிரிய கூடாதுனு இருக்கோம். ஆனா பிரிவு எந்த ரூபத்துல வேணும்னாலும் வரும். அதனால சீக்கிரம் வீட்டுக்கு வந்து பொண்ணு கேளு”

செல்லமாக அவன் தோள்களை தட்டிகொடுத்து அவனைப் பார்த்து சிரித்தாள். ஒருவரின் கரத்தை ஒருவர் பிடித்துக்கொண்டே நடந்து சென்றார்கள்.

“வாழ்க்கைல ஜெயிச்சி பெரிய ஆளா வானு இப்போ என்னால வாழ்த்துகள் மட்டும்தான் சொல்ல முடியும். நீ சாதிக்குற வரைக்கும் எல்லாம் என்னால காத்துட்டு இருக்க முடியாது. பாய்…”

அவள் அவனை கடந்தும் பிரிந்தும் சென்றாள். அவள் முடிவை ஏற்றுக்கொண்டவனாக அவள் சென்ற பின்பும் இருக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்துவிட்டு கடைசி ஆளாய் திரையரங்கில் இருந்து வெளியேறினான்.

அடுத்த காட்சியைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் தயாராய் இருந்தார்கள். கார்னர் சீட்டுகள் பல அடுத்த காட்சிக்காக காத்திருக்க தொடங்கின.

***

பிரவீன்குமார்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular