Thursday, March 28, 2024
Homesliderகன்னிமார் சாமி

கன்னிமார் சாமி

சுஜாதா செல்வராஜ்

ல்லம்மாள் தரையில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தாள். கொல்லைப்புறம் இருக்கும் ஒற்றை மல்லிகைச்செடி தான். பூத்துக்கொட்டித் தீர்க்கும். அவைகளை ஒன்றுவிடாமல் பறித்துத் தருவாள் அம்மா. பூக்களைக்கட்டி சாமிக்கு, அம்மாவுக்கு, தங்கைக்கு, தனக்கு என்று பிரித்துக் கொடுப்பது இவள்தான். நான்கு கண்ணி பூக்கள்தான் இவள் வைத்துக்கொள்வாள். அம்மாவும் அப்படித்தான். தங்கையும் சாமியும்தான் பூக்களில் திளைப்பவர்கள்.

அறையில் இருந்தபடியே கூடத்துப் பேச்சைக் கேட்க முடிந்தது. கல்யாணப்பேச்சு. அப்பா சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான், அப்பாவின் அக்காவுக்கு ஒரே மகன். பேர் ராசு. மிலிட்டரியில் சிறிது காலம் இருந்துவிட்டு தாக்குபிடிக்க முடியாமல் ஓடிவந்து விட்டவன். அதனால் எப்போது வேண்டுமானாலும் மிலிட்டரியில் இருந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாருமே அவனுக்கு பெண் தர முன்வரவில்லை. பயந்தது போலவே வெள்ளைக்காரர்கள் அவனைத் தேடிக்கொண்டு சிலமுறை வந்தும் இருக்கிறார்களாம். அப்பொழுதெல்லாம் ராசு அட்டாலியில் ஏறி ஒளிந்து கொள்வானாம். மறுநாளே அத்தை இங்கு வந்து அப்பாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்த்துவிட்டு போவாள். பாவம் புருசனை இழந்து தனிமரமாய் பிள்ளையை வளர்த்து ஆளாக்கியவள். அப்பாதான் அக்கா மகனுக்காக பெண் தேடி அலைந்தார்.

தூரத்து சொந்தக்காரர் ஒருவர் நாளு கிராமம் தாண்டி இருக்கிறார். வண்டி கட்டித்தான் போகவேண்டும். அங்கு போய்விட்டு வந்துதான் அப்பா கோபமாக இறைந்து கொண்டிருக்கிறார். போன இடத்தில்,

“உன் வீட்லயே பொண்ண வச்சுக்கிட்டு, அக்கா மகனுக்கு பொண்ணு கேட்டு இங்க வந்துருக்கயே! உன் மவளயே கொடுக்கலாம்ல”னு சொல்லவும் அப்பா ரோசமாக, சரி என் மவளுக்கே கட்டி வைக்கிறேன்னு எழுந்து வந்துவிட்டார்.

“பிள்ள இன்னும் வயசுக்கே வரல, ஒரு வருசம் போகட்டுமே” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா இந்த மாசமே கல்யாணம் பண்ணியாக வேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறார். நாளு ஊர் தாண்டி அவர் விட்டுவிட்டு வந்த மானத்தை இந்த மாசமே திருப்பி எடுத்துவிடத் தவித்துக் கொண்டிருந்தார்.

ஒன்னுவிட்ட சித்தப்பா, பக்கத்து வீட்டு பொன்னய்யா தாத்தா, அக்கம்பக்க உறவுகள் சிலர் என்று அதற்குள் கூடிவிட்டிருக்க, அம்மா முடிவாகச் சொன்னாள்,

“சரி, கட்டிக்கொடுக்கலாம் ஆனா நல்லம்மாளையும் சேர்த்துக் கட்டணும். அதுக்கு சம்மதமான்னு உங்க அக்கா மவன்கிட்ட கேட்டுடுங்க”.

அப்பா பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். பூக்கட்டிக் கொண்டிருந்த நல்லம்மாளின் கைகள் தானாக நின்றன.

எறும்பு ஒன்று எங்கிருந்தோ இழுத்து வந்த ஒரு பருக்கைச் சோற்றை கவ்விக்கொண்டு வழியை மறித்தபடி கிடக்கும் நல்லம்மாளின் கால்களிடம் தடுமாறிக் கொண்டிருந்தது. தட்டில் உணவாகாமல் தவறி தரையில் விழுந்துவிட்ட ஒரு பருக்கை எறும்புக்கு உணவாகிறது.

ஒருமுறை அம்மாவுடன் கோயிலுக்குப் போனபோது அம்மா இவளை கருவறை முன் இறக்கி விட்டுவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவரச் சென்றிருந்தாள். கீழே அமர்ந்தபடி சாமியைப் பார்த்துக் கொண்டிருந்தவள். அர்ச்சனைக்கு மாலை, தேங்காய், எண்ணெயோடு வந்த ஒருத்தி தட்டை அர்ச்சகரிடம் கொடுத்தாள். மாலையிலிருந்து ஒற்றை மலர் மட்டும் உதிர்ந்து படியில் விழ அர்ச்சகர் தட்டோடு கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்தார். பார்த்துக் கொண்டிருந்த நல்லம்மாளுக்கு சொல்லவொண்ணாத் துயர் மிகுந்தது. விதையிலிருந்து முளைத்து, கிளைவிட்டு மொட்டாகி மலர்ந்து கடவுளுக்கென்று மாலையாகி கருவறை வாசல் வரை வந்து படியில் நழுவி விழுந்துவிட்ட அந்த மலரை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல ஏந்திக்கொண்டாள். பின் மெல்ல நகர்ந்து முன்னால் அமர்ந்திருந்த நந்தியின் தலையில் அந்த மலரை வைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள்.

நல்லம்மாள் எறும்பின் வழியை அடைத்துக் கொண்டிருந்த தன் சூம்பிய இரு கால்களையும் அள்ளி இடப்பக்கம் போட்டுவிட்டு நகர்ந்து அமர்ந்தாள். அப்பா கனைத்துக் கொண்டு “சரி ராசுக்கிட்ட பேசறேன்” என்று சொன்னது காதில் விழுந்தது. பிறகு என்னென்னவோ எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நல்லம்மாள் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள். கல்யாணத்தை எல்லாம் அவள் கனவிலும் எண்ணியவளில்லை. தங்கையின் கணவனே தனக்கும் கணவனாவதா?! முடியாது என்று அம்மாவிடம் சொல்லலாமா? நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா பேயாட்டம் ஆடிவிடுவாள். நல்லம்மாளை காடுகரைக்கு, கோயிலுக்கு என்று சலிக்காமல் சுமந்து செல்பவள் அவள்தான். நல்லம்மாளும் ஒன்றும் சும்மாக் கிடப்பவள் இல்லை. உட்கார்ந்து கொண்டே காய் நறுக்குவது, அரிசி புடைப்பது, மாவரைப்பது, வெங்காயம் ஆய்வது, கடலை ஆய்வது, கொட்டமுத்து தட்டுவது என்று ஓயாமல் இயங்கிக் கொண்டிருப்பவள்தான். வேலைசெய்து சிறுவாடு கூட சேர்த்து வைத்திருக்கிறாள்.

அம்மா என்னைச் சுமையாக நினைக்கிறாளா? இல்லை. எனக்கும் இந்தச் சாக்கில் கல்யாணம் பண்ணி பார்த்துவிட நினைக்கிறாள். அவள் காலத்திற்குப் பின் எனக்கொரு நிழல் வேண்டுமென்று பார்க்கிறாள். ஆனால் இது சரியா? தங்கை ராமாயியை நினைத்துக் கொண்டாள். துறுதுறுவென்று இருப்பவள். தன் தோழிகளையெல்லாம் வீட்டுக்கு அழைத்து வந்து அக்காவிற்கும் சிநேகமாக்கியவள். தின்பதை எல்லாம் மறக்காமல் அக்காவுக்கு பங்கு வைப்பவள். ஆனால் இந்தக் கணவனைப் பங்கு வைக்கும் ஏற்பாட்டை ஏற்பாளா? முதலில் நான் ஏற்பேனா? துவண்ட அவள் கால்களைப் போலவே மனம் துவண்டு போனது. கட்டிய பூக்களை ஓரமாக வைத்துவிட்டு அப்படியே தரையில் சாய்ந்து படுத்தாள்.

மனக்கண்ணில் ராசு. அத்தை மகன்.

நல்ல கருவேல மரம் போன்ற தேகம்தான். மிலிட்டரி பழக்கத்தில் ஒட்ட வெட்டி, எண்ணை வைத்து, இடப்புறம் வாகெடுத்துப் படிய வாரிய தலைமுடி. அதிகம் இந்தப் பக்கம் வரமாட்டான். ஆனால் திருவிழாவுக்கு வருகையில் பை நிறைய தீனி வாங்கி வருவான். கடலை மிட்டாய், பொரி, ரவா உருண்டை, மாம்பழம் என்று வகையாகத் திங்கலாம். இத்தனை நாள் அவனுடன் அதிகமாகப் பேசியதே இல்லை என்று இன்றுதான் உறைத்தது. அவனை எனக்குப் பிடிக்குமா? மனதைக் கேட்டுப் பார்த்தாள். அவனுக்கு என்னைப் பிடிக்குமா? கேள்வி விழுந்தது. எதுவும் தோன்றாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

ஒரே வாரத்தில் எல்லாம் சுமூகமாக முடிந்தது. ராசு நல்லம்மாளைக் கட்டிக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டான். தாலிலாம் கட்ட மாட்டேன். ராமாயிக்கு துணையா எங்க வீட்லயே வேணா இருக்கட்டும். கடைசிவரை அவள பாத்துக்கறது என் பொறுப்பு என்று கூறிவிட்டான். அப்பா அம்மாவுக்கு அவன் பதில் திருப்தியைத் தந்தது. மூஞ்சைத் தூக்கிக்கொண்டு திரிந்த ராமாயி கூட இயல்பாக சிரித்துப் பேசத் தொடங்கினாள்.

அந்த மாதமே ஒரு நல்ல நாளில் கோயிலில் வைத்து திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. தங்கைக்கு கூரைச்சேலை வாங்குகையில் நல்லம்மாளுக்கும் பாவாடை, சட்டை (செவப்புல மஞ்ச பூ போட்டது) எடுத்துத் தைத்தார்கள். அன்று நல்லம்மாள் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக பூ வைத்துக் கொண்டாள். தாலி கட்டிய கையோடு அக்காளும், தங்கையும் புகுந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடும் ஒன்றுதான். அதே திண்ணை, அதே கூடம், சமையலறை, வசதிக்கு ஏற்ப ஒன்றோ இரண்டோ அறைகள். அத்தை வீடும் அப்படித்தான் இருந்தது. ஆனால் மாடு, கன்னு கொஞ்சம் அதிகம் இருந்தது. வாசலில் சாணி போட்டு மெழுகிய பெரிய களம் இருந்தது. பக்கத்திலேயே வேப்பமரம் ஒன்று செழிக்கக் காய்த்துப் பழங்களை உதிர்த்துக் கொண்டிருந்தது. பொண்ணு மாப்பிள்ளையைக் காட்டிலும் சட்டைப் பாவாடை அணிந்த நல்லம்மாளின் மேல் அங்கிருந்த வாண்டுகளுக்கு ஆர்வம் அதிகமாய் இருந்தது. அவள் பெரிய மனுஷியா அல்லது தங்களைப் போலவே சட்டைப் பாவாடை அணிந்திருப்பதால் தங்களுடன் கூட்டு சேருவாளா என்று குழப்பத்தில் இருந்தார்கள் அவர்கள். மெல்ல நெருங்கி வந்து பேசி இரண்டொரு நாளிலேயே நல்லம்மாளுடன் சிநேகமானார்கள்.

நல்லம்மாள் இடம் மட்டும்தான் மாறி இருந்தாள். மற்றபடி தன் வழக்கமான வேலைகளை இங்கும் தொடங்கிவிட்டாள். கடலைத்தொலி உடைப்பது, உளுந்து அரைப்பதுடன் வாசலில் விழும் வேப்பம்பழங்களைப் பொறுக்குவதும் இப்போது கூட சேர்ந்திருந்தது. நெல் மூட்டைகளை ஓரமாக அடுக்கி ஒழுங்கு பண்ணி அந்த அறையை அக்காவும் தங்கையும் தங்கள் ட்ரங்குப்பெட்டியை வைத்துக் கொள்ளவும், படுத்து உறங்கவும் அத்தை தந்திருந்தாள். காலையில் எழுந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு ராசுவோடு ராமாயி தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் நல்லம்மாள், வீட்டில் அத்தைக்கு கூடமாட சமையலில் ஒத்தாசை செய்வாள். சோறாக்கி எடுத்துக்கொண்டு அத்தையும் தோட்டத்துக்கு போய்விட்டால் மூவருமாக வீடுவந்து சேர பொழுதாகிவிடும்.

தனித்துவிடப்படும் உச்சி வெயில் பொழுதுகளில் வேப்பமரத்துக் காக்கைகள் தான் அவளுக்கு துணை. திண்ணையில் அமர்ந்து கடலைத்தொலி உடைத்துக்கொண்டு கண் கூசும் வெயிலில் காக்கைகளைப் பார்த்தபடி இருப்பாள். ஓரிரு கடலைகளை உடைத்து வாசலில் வீசுவாள். வேப்பம்பழத்தை விட்டுவிட்டு கடலைக்கு வந்து அமரும் காகங்களிடம் ஆசையப் பாரு என்று செல்லக் கோபம் கொள்வாள். வெயிலுக்கு வீட்டில் அடைந்து உறங்கிவிடும் பிள்ளைகள் சாயங்காலம் இவளுடன் கதைபேச வருவார்கள். தலைசீவி விடவும், பேன் பார்க்கவும் என்று அவள் காலடியில் பிள்ளைகள் மொய்க்கும்.

இரவில் அருகில் படுத்திருக்கும் தங்கையிடம் ஏதாவது கதை பேசுவாள். அக்கம்பக்க பிள்ளைகள் சொன்ன ஊர் தகவல்கள், பிறந்த ஊரின் கதைகள் என்று பேச்சு போகும். நாளெல்லாம் தோட்டத்தில் வேலை செய்த களைப்பில் ராமாயி சீக்கிரமே உறங்கிப் போவாள்.

அசந்து உறங்கும் தங்கையின் சற்று பிளந்த வாயைப் பார்க்கும்போது குழந்தை போல தோன்றும். மனம் இளகிப்போகும். அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அவளும் களைத்து உறங்கிக் கொண்டுதான் இருப்பாள். அம்மாவின் வெடித்த பாதங்களில் சரியாகக் கழுவாத களிமண் ஒட்டியிருக்கும். தங்கையின் பாதத்தை எழுந்து பார்த்தாள். நகங்களில் மண் சேர்ந்திருந்த்து.

ராமாயி அடுத்த நான்கு மாதங்களில் வயசுக்கு வந்தாள்.

பொறந்த வீட்டில் சீர் செய்து பத்துநாள் வைத்திருந்து பிறகு புகுந்த வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அன்றிலிருந்து ராமாயி புருசனோடு தூங்கப் போனாள். நல்லம்மாள் மீண்டும் தனியானாள். அவளின் இரவுகள் மிக நீண்டதாக மாறின. முற்றிய நெல்மணிகளின் வாசனை அவள் அறையெங்கும் நிறைந்திருக்கும். மூச்சை நீண்டு உள்ளிழுத்து சுவாசிப்பாள். சோறு உண்டது போல நெஞ்சு நிறையும். சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி தன் கால்களை மேலே தூக்கிப் பின் விடுவாள். அது பொத்தென்று தரையில் விழும். எடுப்பாள், விடுவாள், எடுப்பாள், விடுவாள்.. பொத்.. பொத்..

ஒருமுறை காகம் கவ்விக்கொண்டு போன செத்த எலி இப்படித்தான் வாசலில் பொத்தென்று வந்து விழுந்தது.

ராமாயி அடுத்த வருடத்தில் குழந்தை பெற்றாள். அம்மா கையில் இருந்த குழந்தையை ராசுதான் வாங்கிக்கொண்டு வந்து நல்லம்மாள் கையில் தந்தான். அது கருத்த மேனியோடு பட்டு போன்ற உதட்டை சுழித்துக்கொண்டுக் கொண்டு சிணுங்கியது. அன்றிலிருந்து அது அவள் பொறுப்பில் விடப்பட்டது. பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் குழந்தை இவள் காலடியில்தான் உதைத்துக் கொண்டு கிடந்தது. நல்லம்மாள் அவள் சிறுவாட்டுக் காசில் குழந்தைக்கு காப்பு செய்து போட்டாள். அடுத்த மூன்று வருடத்தில் அடுத்தக் குழந்தை பிறந்தது. ராமாயி சட்டென்று முதிர்ந்தவள் போல் ஆனாள். மாராப்பு சரிவதில் கவனமற்றவளாய் சரியாக வாராத தலையோடு அவள் தோட்டத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து களைத்தாள். பேச்சில் பெரியமனுசியின் தோரணை வந்திருந்தது. காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, நல்லம்மாள் தன் தளர்ந்த கால்களுடன் கால ஓட்டத்திடம் தோற்று தேங்கி நின்றாள். அவளிடம் சடைப்பின்னிக் கொள்ளவரும் வள்ளி ஒருநாள் தாவணியில் வந்து நின்றபோது இவள் மலைத்துப் போனாள். இன்னும் சட்டைப் பாவாடையிலேயே இருக்கும் தன்னை எண்ணி மருகினாள்.

அன்று களத்தில் மஞ்சள் வேக வைத்துக் கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த அத்தையுடன் கிழங்கு அவிக்க வந்த மரகதம் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு ராமாயி பிள்ளைகள் பற்றி வந்தபோது, அத்தை சொன்னாள்,

“பெத்தவ எங்க பிள்ளைய பாக்குறா, அவளுக்கு காடு கரைல கெடந்து அல்லாடவே சரியா இருக்கு. பெரியவ கைலதான் பிள்ளைங்க வளருது. அவ கன்னிமார் சாமி மாதிரி. அவ வளக்கறது சாமியே வளக்கறாப்ல.”

வெந்து வரும் முற்றிய மஞ்சள் கிழங்கின் மணம் தெருவெங்கும் மணந்தது.

நல்லம்மாளுக்கு ஒவ்வாத நாட்கள் என்றால் அது வீட்டுக்கு விலக்காகும் நாட்கள்தான். கோவணமாக இழுத்துக் கட்டியிருக்கும் தீட்டுத்துணி அவள் தரையில் பிட்டத்தை இழுத்துக்கொண்டு நகர்கையில் எல்லாம் விலகி விடும். யாரும் அறியாமல் அதை இழுத்து இழுத்துச் சரிசெய்ய வேண்டும். அதனால் பெரும்பாலும் பின்கட்டுத் திண்ணையை விட்டு அவள் நகர மாட்டாள்.

நான்கு பக்கமும் மறைப்பு வைத்துக் கட்டப்பட்ட குளியல் அறைக்குள் இழுத்து இழுத்துப் போனாள் நல்லம்மாள். துணிகளைக் களைந்தாள். மேற்கூரை அற்ற மறைப்பினுள் பகல்நேர வெயில் மஞ்சள்நீர் போல் கொட்டியது. நல்லம்மாள் தன் ஆடையற்ற மேனியைப் புதிதாய் பார்ப்பவள் போல் தனித்தனியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இடுப்புக்கு கீழே துவண்ட அந்த உடலில் தோள்கள் இறுகிப் படர்ந்திருந்தன. மொத்த வலிமையையும் காட்டிவிடத் துடிப்பது போல அவள் உறுதியான கைகள், திரண்ட மார்புகள், இறுகிய தோள்கள், படிந்த வயிறு என்று அங்கங்கள் அத்தனையும் திமிறிக்கொண்டு நின்றன. அவள் தன் மார்புகளைப் பார்த்தாள்.

ஒருமுறை அம்மா வீட்டில் தோழிகளுடன் திண்ணையில் தாயம் ஆடிக்கொண்டிருக்கையில் தோழி ஒருத்தி, விலகும் தன் மாராப்பை இழுத்து விட்டுக்கொள்வதைப் பார்த்த இன்னொருத்தி, அங்க என்ன இருக்குதுன்னு இழுத்து இழுத்து விடுற என்று கேலி செய்தாள். சுற்றி அமர்ந்திருந்த மொத்தப் பெண்களும் சத்தமாக சிரிக்கவும் அவமானப்பட்டவள் விடாமல், ஆமாம் பின்ன உனக்காட்டம் மூஞ்சில வந்து இடிக்கணுமா, கொஞ்சம் அடக்கி வைடி, விட்டா பறந்துடும் போல என்று எதிர்கேலி செய்ய கூட்டம் மொத்தமும் வயிறு வலிக்க சிரித்து, அவளுக்கு எப்படி, இவளுக்கு எப்படி என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்து விளையாடும்போது நல்லம்மாளை யாருமே கவனிக்கவோ, கேலி செய்யவோ மறந்து போனதை இப்போது நினைத்துக் கொண்டாள்.

சூம்பிய அந்த உடலில் திரண்டு நிற்கும் மார்புகள் மதிக்கப்படுவதில்லையா?! அவள் தீட்டுத்துணியைச் கழற்றி அலசத் தொடங்கினாள். உதிரம் தோய்ந்த அந்தத்துணி அப்பொழுதுதான் பிறந்த குழந்தை போல் இருந்தது. குளிர்ந்த நீரை ஊற்றித் தேய்த்துத் தேய்த்துக் கழுவினாள். பிள்ளை அழாமல் நீராடியது. இரும்பின் துரு வாசனை முகத்தில் மோதியது. அவள் மூச்சை நன்கு உள்ளிழுத்து விட்டுக்கொண்டு அலசிக்கொண்டே இருந்தாள்.

உதிரம் ஒரு குட்டி ஆறு போல அவள் காலடியில் இருந்து பிறப்பெடுத்து ஓடியது.

***

சுஜாதா செல்வராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular