Friday, March 29, 2024
Homeஇலக்கியம்அபுனைவுகனவு மெய்ப்படும் கதை - 4

கனவு மெய்ப்படும் கதை – 4

பரிமலை மலைக்கு செல்லும் போதுதான் முதன்முதலில் சூஃபி இசையைக் கேட்கத்துவங்கினேன் (ஏன் இங்கிருந்து கட்டுரையை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை). சினிமாப்பாடல்கள் கேட்கக் கூடாது என்றும், இறைநிலையில் கவனம் குவிந்திருக்கும் என்கிற கட்டளைக்குப் பணிய விரும்பிய எனக்கு, ‘சந்நிதியில் கட்டும்கட்டியில்’ கவனம் கோர்க்கவில்லை. செயற்கையான பஜனையை செய்வதால் என்ன நஷ்டம் ஆகப்போகின்றது? ஆனால் எழுதப்போகும் பரிட்சைக்கு கேட்கப்படும் துணைப்பாடப்பிரிவில் முதல் மூன்று பாடங்களில் ஏதோ ஒன்று இறுதித்தேர்வில் வந்துவிடும் என்று வாசித்துச்செல்ல என்னால் இயலாது. விடுபடும் இடங்களில் தான் மனம் லயிக்கிறது. முட்டாளென்று உங்களைப் போலவே அவளும் என்னை ஏசுவது என் காதில் விழுகிறது. என்ன செய்ய சூஃபி இசையில் அடிபணிதலும், ஒப்படைத்தலும் இயல்பாக செலுத்துகிறது, பதினெட்டுப்படிகளேறும் போது களைப்பைக் காட்டிலும், வலியைக் காட்டிலும், தவறான இசையைக்கேட்டுவிட்டேனோ என்று குழம்பியபடியே தூக்கிவிடப்பட்டேன். மேலே ஏறியவுடன் முதலில் தெரிந்தது தத்வமஸி. நானே அதுவாக இருக்கிறேன் என்று அதுவே சொன்னது. ‘இன்ஷா அல்லா’ என்றும் சொல்ல வேண்டிய அவசியம் வரவில்லை, அதற்குப் பின்னர் தரிசனம் செய்ய அழைத்துச்சென்றார்கள் எதுவும் நினைவில் இல்லை. என்னைப் பொருத்தவரை ‘தத்வமஸி’ என்கிற தத்துவத்தைப் புரிவதற்கு தான் குறைந்தபட்சம் பதினெட்டு முறை வரவேண்டுமென்று காரணம் வைத்திருக்கலாம். உண்மையான தரிசனம் எதுவென்றால் அதுவே. எனக்கு இரண்டாம் முறை என்பதில் லேசான பெருமிதம் தான். அவளிடமும் அதைத்தான் சொன்னேன், நான் வேறுயாராகவும் இல்லை அதுவாக உருமாறிக்கொண்டிருக்கிறேன் என்று.

சூப்பர் ஈகோ, ஈகோவை அடுத்த கீழடுக்கில் தான் அது இருக்கிறது என்று ஃப்ராய்ட் சொல்கிறார். அது(ID) மேலான நிலையில் இருப்பது. சூப்பர் ஈகோவைத் துறந்து, ஈகோவை ஒப்படைத்தால் தான் அதுவாக இருக்க முடியும், அவளை அடையும் வழியும் கூட அதுதான். அவ்வாறே அந்தவழிமுறை தான் கலையாகிறதோ என்று பேசுமிடம், மனிதர்களற்றப் பகுதியில் ஓடும் தொந்தரவு அற்ற நதியைப் போன்றது.

கணபதியோடு அகமும்,புறமும் கலைவசப்பட்ட மாலையொன்றைப் பகிர்ந்த வேளையில், ஏதோ ஒரு வேலை ஒன்று தயாராவதைக் கடலுக்குச் சொல்லிவிட்டேன். அவர் சொந்தமாக தனக்கேயான ஒரு கதையை கிராஃபிக் பண்ணுவதற்காகத் தயாரித்து வைத்திருந்தார். அதில் சில பகுதிகளை வாசித்திருக்கிறேன். கைத்தறியில் இங்குமங்கும் போய்வரும் கட்டை போல் தத்துவங்களோடு தர்க்கங்கள் புரிந்து கொண்டிருந்த ஒரு கதை அது, நாவலாகவும் சொல்லலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. பத்துவருடங்களுக்கு மேலாகவும் அவர் கனவிலிருந்த கிராஃபிக் நாவல் வரும்போது தமிழில் என் கதை எனும் தற்செயலின் அற்புதம்.

கடந்த 19(மார்ச்17)ஆம் தியதி கூவ நதிக்கரையில் இருக்கின்ற சிவஸ்தலங்களை தொடர்ந்து கொண்டிருந்த என்னுடன் வரலாற்றறிஞர்களும், ஆர்வலர்களும் இருக்க, மனம் தனித்திருந்தது. கிட்டதட்ட நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தனது கிராஃபிக் நாவல் வேலைகளுக்காக, ஒரு ட்ரான்ஸ் கிரியேட்டராக தன்னைப் பாவித்துக்கொண்டு கதையினை உருவங்களாக்கிக் கொண்டிருந்த அவருக்கு அந்த மாலை சுமார் 4.30 மணி போல நாம் ஏன் இப்படி வரைந்து கொண்டிருக்கிறோம் என்கிற கேள்வி எழுந்திருக்க வேண்டும். நானும் அதே கட்டத்தில் தான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் என்று தெரியாமலே பயணித்துக்கொண்டிருக்கும் சுவாரஸ்யத்தின் ரஸவாத மோகத்தில் என்னை ஆழ்த்தியபடியும் குழம்பியபடியும் போய்க்கொண்டிருந்தேன்.

குசத்தலையும் கூவம் ஆறும் பிரியும் இடத்திலிருந்த கேசவராம் சிவன்கோயிலில் இருந்து தக்கோலம் நோக்கிச் செல்ல ஆரம்பித்த பாதை குசத்தலை நதியின் தடத்தில்.. ஆற்றினுள் இறங்கி செல்லும் வழியில் மேடும் பள்ளமுமாக இறங்கி ஏறிக்கொண்டிருந்தோம். புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகள் தென்படும் இந்நதியென்று உடனிருந்த ஆய்வாளர்கள் செல்ல வண்டி நின்றது. இப்போது மாஃபியாக்கள் மண்ணைச் சுரண்டியதால் மழைபெய்தால் கூட மண்ணில் மழை தங்குவதில்லை, ஆனால் அவ்விடத்திலிருந்து ஐம்பது அறுபது அடிக்கும் மேலே நதிநீர் ஓடிய தடயமிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

images (1)அமெரிக்காவின் பிரபல இல்லஸ்ட்ரேட்டரான நார்மென் ராக்வெல் – தன் வாழ்நாளில் நிறைய அவமானங்களைச் சந்தித்ததாக அவரது நண்பரான உளவியலாளர் எரிக்சன் சொல்லியிருக்கிறார். ஒரு விபரணப்பட ஓவியராக இருப்பது சமகாலத்தில் தாழ்வாகப் பார்க்கப்படுவதாக அவர் மனம் வெதும்பியிருப்பதாக அவர் சொல்கிறார். அவரது ஓவியங்கள் யதார்த்த பாணியில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டின் மத்திமத்தில் உருவாகியிருந்த புதியபுதிய கோட்பாடுகளின் பின்னேயிருந்தும், அரூபங்களுக்கு மாறியிருந்த பல ஓவியர்களும் விமர்சகர்களையும் உருவாக்கியிருந்தார்கள். இன்றைக்கு அவரது ஓவியங்கள் யாவுமே கிளாஸிக்குகளாக சந்தையில் முக்கிய இடம்வகிக்கின்றன. அவரது ப்ரேக்கிங் ஹோம் டைஸ் எனும் ஓவியம் கிட்டதட்ட 90 கோடிகளுக்கு* விற்பனையாகி இருக்கிறது. இங்கும் கூட கே.மாதவனின் ஒர் சிற்றிதலில் கே.மாதவனின் ஓவியங்களைக் கிளாசிக்காக பாவித்துக் கட்டுரை எழுதமுடியும், கொண்டாட முடியும். (தமிழ் சிறுபத்திரிக்கையுலகில் அட்டைப்படத்தில் வந்தால் – வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு சமானம் தானே). நார்மென் ராக்வெல் ஓவியத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி, சமூக மாற்றம், உலகப்போர், வாழ்வியல் மாற்றங்கள் குறித்த அவரது ஏக்கம் ஒன்று தென்படுவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஒரு அரூபம் தருகின்ற உணர்வைப் போன்றே அவரது ஓவியங்களும் கலையம்சமானது என்று சொல்லலாம். இதைப்பற்றிய கவலை அவருக்கு இல்லை, தன் பாணியிலேயே அவர் தொடர்ந்தார். இன்று அவர் பெயரில் உள்ள அருங்காட்சியகம் உலக அளவில் பெயர்பெற்றது.

”அது ஒரு கனவு” இந்த இருபது பக்க கதையை, திரைக்கதை போல ஷாட் ஷாட்டாகப் பிரித்துக்கொடுத்தால் அதனை கிராஃபிக்காக மாற்றுவது சரியான பேட்டர்னாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் ஏற்கனவே சொன்னது போல வெறும் கதைக்கு உருவம் கொடுப்பதாக மட்டும் இந்த வேலை இருந்துவிடக்கூடாது. இப்படியான ஒரு வாழ்நாள் கனவு நனவாகும் போது,  தொடர்ந்து வேலை செய்ய பாதை அமைத்துக்கொடுக்குமா என்பது பிங்க் நோட்டு பத்து லட்ச ரூபாய் கேள்வி(எத்தனை காலம் மில்லியன் டாலர்னு மட்டும் சொல்ல – டினாமினேஷனையும் சேர்த்து சொல்வோம்).

தமிழ் வாசிப்புலகத்தின் எண்ணிக்கையைத் தெரிந்தும் இப்படியான முயற்சியில் இறங்கியபின்னர், இருபது பக்கங்களையும் கிராஃபிக்காக விரிப்பதற்காக அவர் இதுவரை அறுபது பக்கங்களைத் திட்டமிட்டிருக்கிறார்.

இந்த அறுபது பக்கங்களில் சுமார் 350 சட்டகங்களில் ஓவியங்கள் வரையவேண்டும். அதுவும் அவர் திட்டமிட்டிருக்கின்ற பாணி முற்றிலும் பரிட்சார்த்த முறையும் கூட என்பது கூடுதலான சுமை.

  1. முதலில் கதைக்கான காட்சிகளுக்கு உருவம் கொடுக்கும் சாத்தியக்கோடுகளை உருவாக்குதல்
  2. நாவலுக்குத் தேவையான ஃப்ரேம்களின் எண்ணிக்கைகள், பக்க அளவுகள்
  3. முக்கியமான தருணங்களுக்கு ஏற்றவாறு பின்னர் மாற்றி அமைத்துக்கொள்ளுதல்
  4. உருவங்கள், நிலக்காட்சி எதுவும் மடிப்பினில் இருக்கின்ற விஷயங்கள் குறித்த முடிவு, திட்டமிடல்
  5. காட்சிகளை வரைதல்
  6. கதையோடு ஆசிரியரின் ஒப்பிடல் மற்றும் திருத்தம்
  7. இறுதி வடிவம் நோக்கி வரைதல்
  8. கணினித் தரவேற்றத்துடன் – அதை சரிபார்த்தல் மெருக்கூட்டல்
  9. புத்தகத்திற்கு ஏற்ற மாதிரியான வடிவமைப்பு
  10.  அலங்காரங்கள்
  11. அட்டைப்படம்

அதற்குப்பின்னர் வேலை பப்ளிஷரின் கைக்கு மாறுகிறது.

உருவச்சித்திரங்களிலிருந்து அரூபத்திற்கு இயல்பாக நகர்ந்துக் கொண்டிருந்த கணபதியின் பயணத்தில், திடீரென்று ரோலர் கோஸ்டர் பயணமாக ஒரு பழமையான மாங்கா ஓவியரைப் போல தரையில் அமர்ந்து சமணமிட்டு வரைந்துகொண்டிருந்த நாளொன்றில் தான் இது தோன்றியிருக்க வேண்டும். அவர் சொன்ன போது நான் உணர்ந்து கொண்டேன். அவர் மனதிற்குள் தன் செயல்கள் குறித்த கேள்வியாய் எழுந்த சுயம்சார்ந்த கேள்வி அது.

*

ஒரு நூறு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலே, ஆற்றின் தடையமாக அங்கு குவிந்திருந்த கூழாங்கற்களை வெவ்வேறு வடிவத்தில் கண்டோம். சின்ன பால்ரஸ் குண்டுகளைப் போன்ற கற்களை, எங்கள் சாரதியாக வந்திருந்த வைட்காலர் சம்சாரி தன் குழந்தைகளுக்காக சேமித்துக்கொண்டிருந்தார். ஆனால் எனக்கோ ஓவல் வடிவத்தில் தான் அந்த வெயிலில் பொறுக்க முடிந்தது. சுப்ரமணியசாமியாய் தெரிந்த ஒரு அன்பர் என்னை தேர்ந்த பொறுக்கியெனப் பாராட்டினார். பொதுவாக இந்த மாதிரியான கற்களை எடுத்து நாம் விரும்பும் தெய்வமாக நினைத்து வழிபட்டால், அது அதுவாகவே பலனளிக்கும் என்றார்.

அரூபம் ரூபம் என்கிற எல்லாவகையான அளவுமே மனிதனுக்குத் தானே, கற்களுக்கோ, பிரபஞ்சத்திற்கோ அதற்கான அக்கறை எதற்கு வைக்கனும் ? கல்லெனும் அரூபத்தில், ஒரு உருவத்தை மனதளவில் Install செய்வதற்கும், இன்றைய installation கலையைப் புரிந்துகொள்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன?  இப்படியே கேள்விகேட்டு எழுதிக்கொண்டிருந்தால் – எந்த இதழிலும் பத்தி எழுத வாய்ப்பே கிடைக்காது. பதிப்பிக்க வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்று சொன்னபோது தான் அதுவாகவே ஆனேன். இப்போது என்னென்னவோ ஓடிகின்றது அந்த காலத்திற்குள் தன்னைப் புதைத்துவைத்த குசத்தலை நதியென அவை ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சுப்ரமணியசாமியிடம் இந்தக் கல்லை நதியென நினைத்து வழிபட முடியுமா என்றேன் நதியை அழித்துவிட்டு கேன்சர் கிருமியாக உலகத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பவனாகிய நான்.

அன்றைய உலா முடித்து திரும்புகையில் திநகரில் பார்கிங்கில் போட்டிருந்த வண்டியை எடுக்கும்போது, ஏனோ பிள்ளையாராக வழிபடவிருந்த கூழாங்கல்லினை கணபதிக்கு கொடுக்கத் தோன்றிற்று. நேரே அவரிடம் சென்று கூழாங்கல்லினை நீட்டுகையில் அவர் உணர்வு வயப்பட்டிருந்தார்.

”நானும் நினைத்துக்கொண்டிருந்தேன் நான் வரைவது ஏன் கூழாங்கல்லைப் போல இல்லை” என அவர் என்னிடம் சொல்லும்போது அதற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. ஆனால் அக்கல்லினை அவரிடம் கொடுத்துவிட்டு மட்டும் வந்துவிட்டேன். அதை அவர் புத்தருக்கு அருகில்  வைத்திருப்பார் போல, முதன்முதலில் புத்தருக்கு அமைதி கிட்டியிருக்கும், என்று சிரிக்கையில் அதில் அரசியலும் கலந்திருந்தது.சித்தார்த்தருக்கும் சரி, நாமும் சரி எல்லாவற்றிட்கும் மொழியில் பதில்கூறிவிட முடியும் என்று முயற்சிக்கையில் தான் கலவரப்பட்டுக்கிடக்கிறோம்.

தத்வாக்களை நான் தெரிந்துகொள்ளும் போது தான் அவளையும் தெரிந்துகொண்டிருந்தேன் இருந்தபோதும் அவற்றை அடைவதற்கு முயற்சிக்கும் வினைகள் பயனற்றே போயின. ஆனால் ஒரே ஒரு சாத்தியம் அதுவாக ஆவதுதான்.

ஒரே சமயத்தில் கோடுகளோடு காகிதத்தில் உருவப்படங்களை வரைந்துகொண்டும் அதற்கிணையாக அரூப ஓவியத்தீட்டல்களை செய்துகொண்டிருந்தக் கலைஞன் ஏன் கூழாங்கல் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும். இத்தனை ஒலியாலும், காற்றாலும் மாசுபட்ட சூழலில் ஒருமித்த மனநிலையில் வேலை செய்யும் ஒருவன் கல் தானே, அதிலும் அவன் கலையைச் செய்பவனாக இருந்தால் அவனே கூழாங்கல் தானே.

17362891_1347311718640631_2232863452001051435_n

             * Isn’t it amazing the Buddha and the pebble are of same color and texture? amusing!

             * Stunned to see this… Pebbles are senior to Buddha..

             * Not only by Time… But also by the Zen

– ஜீவ கரிகாலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular