Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்அன்றொரு மழை நாள்

அன்றொரு மழை நாள்

ரெ. விஜயலெட்சுமி

ழைக்கால மாலைநேரத்திற்கென எங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரத்தியேகக் களை கூடிவிடும். அம்மா தயாரித்துக் கொடுத்த தேநீர் கோப்பைகளைக் கைகளில் ஏந்தியபடி நடுவில் இருக்கும் திண்பண்டத் தட்டைச் சுற்றி ‘கொல கொலயா முந்திரிக்கா’ விளையாடுவதைப் போல நாங்கள் அமர்ந்துகொள்ள, கதை சொல்லும் படலம் ஆரம்பமாகும். அவை இட்டுக்கட்டிச் சொல்லப்படும் கதைகள் அல்ல, தினந்தோறும் பட்டுத் தெரிந்துகொள்ளும் அனுபவக் கதைகள். அப்பா தான் வேலை செய்யும் இடத்தில் நடந்த சம்பவங்களையும், அம்மா அக்கம்பக்கத்து மனிதர்களையும், தங்கை தன் வீரப்பிரதாபங்களையும் பற்றிக் கூற நானும் பள்ளிக்கூட சாகசங்களைப் பற்றி அள்ளி வீசுவேன். எப்படியோ… என்ன மாயமோ எல்லோரின் கதைகளும் எங்கள் எல்லோருக்கும் பிடித்து போய்விடும். ஒருவேளை பிடிக்கும்படியான விஷயங்களை மட்டும்தான் பகிர்ந்து கொண்டோமோ என்னவோ தெரியவில்லை.

*

அன்றொரு மழை நாள்

நான்குகோப்பை தேநீரும் நடுத்தட்டில் வாழைப்பூ வடையுமாக மழையைப் பார்த்தபடி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். அத்தை மகள் கனகாம்பாளும் நானும் விவரம் தெரிந்த நாள்முதல் ஒன்றாகச் சுற்றித் திரிபவர்கள். அவளுக்கும் எனக்கும் இன்றைய மதியபொழுதில் நடந்த புத்தக கிரிக்கெட் விளையாட்டில் மாபெரும் கலகம் மூள இனி இந்த ஜென்மத்தில் பேசப்போவதில்லை என்று அவள் எச்சில் தொட்டு சத்தியம் செய்துவிட்டுப் போய் இருந்தாள்.

இப்படியான சத்தியங்கள், அவளுக்கு கொடுக்கப் போகும் தெற்குத்தோப்பு திருட்டுப் புளியங்காய் மூலமாகவோ அல்லது பள்ளிக்கூட வாசல் பாட்டியின் ஊற வைத்த நெல்லிக்காய் மூலமாகவோ அதிகபட்சம் ஒரு வாரத்தில் சரிசெய்யப்பட்டு விடும். அந்த ஒருவார காலம் என்பதுதான் மிகவும் அவஸ்தையானது. அதுவரை யாரோடு சேர்ந்து பள்ளிக்கு செல்வது, யாரோடு டிபன் பாக்ஸ் மாற்றிக்கொள்வது, யாரோடு கூட்டு சேர்ந்து மாங்காய் திருடுவது என்பதெல்லாம் பெரும் கேள்விகளாய் முன் நின்று கொண்டிருந்ததால் அம்மாவையும் அப்பாவையும் கவனிக்கத் தவறி இருந்தேன்.

தங்கை வாழைப்பூ வடையைக் கறுக்முறுக் என்று கடித்த சத்தத்தில் சட்டென நினைவு அறுந்தபோதுதான் என்னைப் போலவே பேரமைதி ஒன்றும் அமர்ந்திருப்பது மூளைக்கு உறைத்தது. இது போலொரு அமைதியை இதுவரை வீட்டிற்குள் அனுபவித்ததே இல்லை. அதுவும் மழை நாட்களில்.

மூண்டுவிட்ட போரை நிறுத்துவதை விட சற்றே கடினமானது மாண்டு கிடக்கும் பேச்சுகளை உயிர்ப்பிப்பது. அதனால் செய்வதறியாது சற்றுநேரம் விழித்துக் கொண்டிருந்தேன். தங்கையின் கறுக்முறுக் சத்தம் திட்டம் வகுத்துக் கொடுத்தது. வாழைப்பூ வடை ஒன்றை எடுத்து அப்பாவின் கைகளில் வைத்து உதவிக்கு அழைத்தேன். சட்டென உடைந்து அழுதபடி என்னைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டார். எப்போதேனும் அம்மா கண்கசக்கிப் பார்த்திருக்கிறேன். நான் பார்க்க, முதன்முறையாக கண் கலங்கும் அப்பா. அழக்கூடாது என்று சொல்லிக் கொடுத்திருந்த அப்பாவின் கண்ணீரைப் பார்த்தவுடன் எனக்குக் கட்டுப்படுத்த முடியாமல் அழுகை வந்தது. நான் என்ன செய்தாலும் அதை அப்படியே பின்பற்றும் தங்கை அழ ஆரம்பித்தாள். இப்பொழுது அடுத்தபடியாக அம்மா அழப்போகிறாள் என எதிர்பார்த்து அவள் முகத்தை பார்க்க, அதற்கான எந்த ரேகையும் புலப்படவில்லை. மாறாக ஒரு மெல்லிய நிதானம் அவள் முகத்தில் கோடிழுத்திருந்தது. அன்றுதான் நான் புது அம்மாவைப் பார்த்தேன்.

“என்ன மாமா… சின்னப்புள்ள மாட்டுக்க…  கண்ணத் தொடைங்க… இப்ப என்னாயிப் போச்சுனு கலங்குறீஹ”

அம்மா அப்பாவை அன்பொழுக மிரட்டியபடியே அவர் கைகளில் ஒரு வாழைப்பூ வடையைப் பிட்டு வைத்தாள். கண்களில் இருந்து வழியும் கண்ணீரோடு சேர்த்து வடையையும் விழுங்கினார் அப்பா.

அப்பா மடியில் அமர்ந்தபடியே உறங்கிப் போயிருந்த நான், கனகாம்பாளிடம் இனி ஒருபோதும் சண்டை போடுவதில்லை என்று சத்தியம் செய்தபோது கண்விழித்தேன்.

நாங்கள் எப்போதும் படுத்துக்கிடக்கும் கோரைப்பாயில் என்மீது கால்போட்டு என் விரலைச் சப்பிக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் தங்கையின் வாயிலிருந்து விரலை உருவி எடுத்தேன். அப்போதும் அம்மாவும் அப்பாவும் அதே இடத்தில் அமைதியாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். கண்களை முழுமையாகத் திறந்தால் உறக்கம் போய்விடும் என்கிற பயத்தில் பாதிக்கண்களை மூடியபடியே நடந்து சென்று அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டேன்.

“அப்புறம் என்னங்க… அத வச்சு முடிச்சுப்புடலாம்”

“இல்லத்தா… அது நம்ம பாப்பா கல்யாணத்துக்குன்னு”

“மூக்கு சிந்தவே பழகாத புள்ளைக்கு முடிச்சு போடுறத பத்தி இப்ப என்னா பேச்சு? அதெல்லாம் காலம் கெடக்கு. ஆத்தா மீனாட்சி பாத்துக்குவா. நீங்க ஆக வேண்டியத பாருங்க”

“சரித்தா” எனும்போது நான் மீண்டும் உறங்கி போனேன்.

மறுநாளிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு அழகான புதுப்பணி ஒன்று தொடங்கியது. விடுமுறை நாட்களில் மொத்த குடும்பமும் அப்பா வண்டியில் ஏறிக்கொள்ள அம்மாவும் அப்பாவும் வீடுகட்ட இடம்தேட ஆரம்பித்தனர். ஒருநாளும் அப்பா எங்களை விட்டு தனித்துச் சென்றதில்லை. எங்களால் வரமுடியாமல் போகும் நாட்களில்.

“புள்ளைஹ ஆளப்போற வீடு. அதுஹ இல்லாம என்னத்த போய் பாத்துக்கிட்டு” என்று மறுத்துவிடுவார்.

*

அன்றொரு மழை நாள்

அவசரமாக வீட்டுக்குள் நுழைந்த அப்பா,

“ஆத்தா… புள்ளைங்கள கூப்ட்டுக்கிட்டு ஒடனே கெளம்புத்தா… ஒரு நல்ல மனை தொகஞ்சு வந்திருக்கு”

“மழ கொட்டுதே மாமா”

“வாழப்போற எடத்த பாக்க மழய விட நல்ல சகுனம் என்னத்தா இருக்கு?”

என்றவுடன் மறுவார்த்தையின்றி எங்களைக் கிளப்பினாள். மழையைக் குடும்பத்தோடு வேடிக்கை பார்த்தே பழகிய நாங்கள், அன்றுதான் முதன்முறையாக மழையில் நனைந்தோம்.

வண்டியில் முன்னே நான் ஏறிக்கொள்ள பின்னே அம்மாவும், அம்மா மடியில் தங்கையுமாக எங்கள் முதல் மழைப்பயணம் தொடங்கியது. மழை நிற்பதற்கும் அப்பாவின் வண்டி ஓரிடத்தில் நிற்பதற்கும் சரியாக இருந்தது.

எந்தெந்த இடத்தில் என்னென்ன கட்டிக்கொள்ளலாம் என அம்மாவும் அப்பாவும் ஏதேதோ பேசிக் கொண்டனர். புதர் மண்டிக்கிடந்த அந்த மேட்டுக்காட்டைப் பற்றி எனக்கொன்றும் புரிபடவில்லை. எனக்கும் தங்கைக்கும் மழைக்காற்றின் குளிரில் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்பதென்பதே போதுமானதாக இருந்தது.

“இங்கனக்குள்ளயே முத்தத்த கட்டிவுட்ருவோம்த்தா. இன்னிக்கு மாட்டுக்க என்னிக்குமே இங்கன நின்டு நனைஞ்சுக்கிறலாம். என்னடா மாரிக்கண்ணு சந்தோஷமா?” என்று கேட்க படுவேகமாகத் தலையாட்டி வைத்தேன்.

*

அன்றொரு மழை நாள்

வீடு என்பது வெறும் செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டி முடிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஆயிரம், ஏன் லட்சம் கதைகள் கூட புதைந்து கிடக்கலாம். புதைந்து போன கதைகளைப் புதையலாக்கி அவற்றை காவல் காக்கும் பூதங்களாகிப் போகின்றன வீடுகள். நாங்கள் அன்று பார்த்த அந்த மண்மேடு நிலமாகி பின் பள்ளமாகி இறுதியில் காவல் காக்கும் பூதமாக நாளொரு சுவரும் பொழுதொரு செங்கலுமாக‌ வளர ஆரம்பித்தது. எங்கள் வீட்டிற்கு தினமும் ஒரழகு எங்கிருந்தேனும் வந்து சேர்ந்து கொள்ளும்.

வீடு வளர வளர அம்மாவும் அப்பாவும் தேய்ந்து கொண்டே சென்றனர். தினமும் பள்ளிக்கூடம் விட்டவுடன் நானும் தங்கையும் புதுவீடு கட்டுமிடத்திற்குச் சென்று விடுவோம். எங்களால் முடிந்த வேலைகளைச் செய்துவிட்டு உறங்க மட்டுமே பழைய வீட்டிற்கு வருவோம். புதுவீட்டிலிருந்து பழைய வீட்டிற்கு நடந்துவரும் வழியில் வீட்டைப் பற்றி அப்பா நிறைய கதைகளைச் சொல்லுவார். இரவில் உறங்கச் செல்லும் முன் சொல்லப்படும் கதைகளும், அதன் பிறகான கனவுகளும் கூட புதுவீட்டைப் பற்றியதாகவே இருந்தன.

பள்ளி விடுமுறைக்கு பெரியப்பா வீட்டிற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய அன்று புதுவீட்டுத் தெருமுனைக்குள் நான் காலடி எடுத்து வைத்ததும் தெருமுனை டீக்கடை அருகே தரையில் குத்த வைத்து டீ குடித்துக் கொண்டிருந்த அப்பா வேகமாக ஓடிவந்து என்னைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடந்தபடி,

“மாரிக்கண்ணு அப்பாவ தேடி வந்தீங்களா?” என்று ஏக சந்தோஷத்துடன் கேட்டார். உண்மையில் எனக்கு அன்று அப்பாவைப் பார்க்க வேண்டும் என்பதைவிட புதுவீட்டைப் பார்ப்பதற்கான ஆவல்தான் மிதமிஞ்சி நின்றிருந்தது. என்னிடமிருந்து பதில் வராததைப் புரிந்துகொண்ட அப்பா, மகிழ்ச்சி ஒரு துளியும் குறையாமல் ஓடாத குறையாக புதுவீட்டிற்குச் சென்றார். தரையிலிருந்து என் உயரத்திற்கு சுவர்கள் எழுப்பப்பட்டு வீடு பிரம்மாண்டமாக தெரிந்தது. ஆனால் அப்பா தோளில் இருந்ததால் பறவையைப் போல வீட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இங்கனக்குள்ள நீயும் தங்கச்சியும் வெளாடலாம்.‌ இங்கன படிக்கலாம். இங்கன ஒறங்கலாம். இது மாரிக்கண்ணு வளந்து பெரியவனானப்பறம். இது தங்கச்சி வளந்தப்புறம்”

ஒரே ஒரு அறையில் வாழ்ந்து வந்த எங்களுக்கு மூன்று அறைகளும் ஒரு முத்தமும் கொண்ட இடம், வெறும் வீடாக இல்லாமல் அரண்மனையாகத் தெரிந்தது.

“அப்பா, மழ வாரப்ப எங்கனக்குள்ள ஒக்காந்து டீ குடிக்க போறோம்?”

“அப்டிக் கேளுடா எந்தாமரக்கொளமே” என்று சட்டென என்னைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் பின்னால் சென்று காட்டினார். அங்கே ஒரு தனிக்குடில் தெரிந்தது. மந்தைக்கு நடுவே ஊர் பஞ்சாயத்து நடத்தும் திண்ணைப்போல கட்டி அதன்மீது பனையோலை வேய்ந்து வைத்திருந்தார் அப்பா.

“அதுதேன் மாரிக்கண்ணு நம்ம சொர்க்கம்”

“நீ கேட்டாத்தேன் காட்டணும்னு ஒங்கப்பாரு சொல்லிக்கிட்டே கெடந்தாரு. நல்லவேள குடி வருமுன்ன கேட்டுபுட்ட” என்றாள் அம்மா சிரித்தபடி.

*

அன்றொரு மழை நாள்

வீடுகட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஓடிப்போயிருந்தது. இன்னும் வேலைகள் பாக்கி இருந்தாலும் குடியேறிய பிறகு அதை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டு அன்று நாங்கள் அந்த வீட்டில் குடியேறினோம். மழையோடு மழையாகக் குடியேறிய கையோடு நாங்கள் முதன்முதலில் அமர்ந்தது அந்தக் குடிலில் தான். அப்பா முதன்முதலாகக் கண்கலங்கிய நாள் அன்றுதான் என்பதை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். மிகச்சரியாக அன்றைய தேதிக்கு நாங்கள் குடிவந்த காரணமும் புரிந்தது. வைராக்கியத்தின் மறுபெயராகத் தெரிந்தனர் இருவரும்.

அன்றைய தினத்தைப் போல அப்பா குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததை என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. அதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வர, தங்கையும் கெக்கலி போட்டு சிரிக்க ஆரம்பித்தாள். அம்மா அப்பொழுது முகம் முழுதும் பூரிப்போடு காலண்டரில் இருக்கும் ஒரு சாமியின் புன்முறுவலை நினைவுபடுத்தியபடியே இருந்தாள். வெளியே கொட்டிக் கொண்டிருந்த மழையில் குடிலுக்குள் இருந்தபடியே நாங்கள் நனைந்து கொண்டிருந்தோம்.

*

அன்றொரு மழை நாள்

என் அப்பா வீட்டிற்கும் என் அம்மா வீட்டிற்கும் ஏதோ பிரச்சனை. பெரியவர்களின் சம்மதம் இல்லாமல் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் நடந்தேறி இருக்கிறது. எங்களுக்கு மட்டும் அம்மா வழி தாத்தா பாட்டி இல்லாததன் காரணம் அன்றுதான் விளங்கியது. இரு வீட்டாரும் ஏதோ நல்ல காரியத்தில் சந்திக்கும்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் அம்மா வீட்டிலிருந்து வந்த யாரோ சில நபர்கள் அப்பாவையும் அம்மாவையும் திட்டிக் கொண்டிருந்தனர். என்னையும் தங்கையையும் மழைக்குடிலில் உட்கார வைத்து கைநிறைய தின்பண்டங்களைக் கொடுத்திருந்தார் அப்பா. தின்பண்டங்களைத் தின்றபடியே உறங்கிப் போயிருந்த என்னையும் தங்கையையும் அன்றிரவே மழையோடு மழையாகத் தூக்கிக்கொண்டு எங்கள் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அப்பாவும் அம்மாவும் கிளம்பினார்கள். கிளப்பப்பட்டார்கள்.

எங்களுக்காக மழை அன்று ஒருபாடு அழுது தீர்த்தது.

*

அன்றொரு மழை நாள்

வீட்டை விட்டும் ஊரைவிட்டும் விரட்டப்பட்டு பலநாட்கள் ஓடிப்போயிருந்தன. ஏதோ ஓர் ஊரில் யாரோ ஒருவரின் வீட்டின் ஓர் அறையில் நாங்கள் நால்வரும் இன்னும் உயிரோடு இருந்தோம். கை விரல்களையும் கால் விரல்களையும் எண்ணித் தீர்த்த பிறகும் தீராமல் நாட்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே இருந்தது. அதன் பிறகு வழக்கமான ஏதோ ஒரு சலிப்பான தினத்தில் தனிக்குடிசைக்கு மாறினோம். பல நாட்களாக மழையும் பெய்யவில்லை, எங்களிடம் சந்தோஷ வாசமும் வீசவில்லை. அம்மா, அப்பா இருவரும் தினக்கூலிகளாகச் சென்று வந்தனர். பகல் முழுவதும் நானும் தங்கையும் குடிசை வாசலில் வெயில் குடித்தபடி அமர்ந்திருப்போம்.

அந்த ஊர் ஒரு புழுதிக்காடு. எந்நேரமும் வெக்கைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடியே இருக்கும். அந்த ஊர் முன்ன பின்ன மழையைப் பார்த்திருக்குமோ என்றுகூட சந்தேகம் தோன்றியது. இரவில் கடுங்குளிராக இருக்கும். பகலுக்கும் இரவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாத ஒர் ஊர் அது, ஒன்றே ஒன்றைத் தவிர. அது மழை. மழைக்காக நான் ஆழமாக ஏங்கிப் போயிருந்தேன்.

அப்படியான ஒருநாளில் அப்பாவும் அம்மாவும் கிளம்பிய பிறகு நானும் தங்கையும் வாசலில் அமர்ந்து வெயிலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது வெக்கையும் புழுக்கமும் மெல்லத் தணிவது போல இருந்தது. திடீரென ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வது போலிருக்க, வெயிலின் பிரகாசம் மெலிதாக மங்க, எங்கிருந்தோ காற்று ஈரப்பதத்தை கர்ப்பம் தாங்கி வர, நீலத்தின் மீது கருமை படரத் தொடங்கியது. வைத்த கண்ணை எடுக்காமல் அந்தக் கருப்பினுள் ஊறிக் கொண்டிருந்தபோது மெல்ல தரையிலிருந்து மேல்நோக்கிப் பறப்பது போலிருக்க, ஒன்றும் புரியாமல் கீழே குனிந்தபோது அப்பாவின் தோள்களில் அமர்ந்திருந்தேன்.

“மாரிக்கண்ணு, அப்பாவுக்கு வெளியூர்ல வேல கெடச்சுருச்சு”

என் நெற்றியில் மழையின் முதல் துளி பட்டென விழுந்தது. வலியோடு சிரித்தேன்.

*

அன்றொரு மழை நாள்

வெளியூர் என்கிற பெயரில் நாங்கள் குடிபெயர்ந்திருந்த ஊர் அவ்வபோது சொந்த ஊரை நினைவூட்டும். மீண்டும் பழைய நிலை நோக்கி எங்களைத் திருப்ப முயன்று கொண்டிருந்தது காலம். தனிவீடு, தனி சோறு என்று ஒரு அறைக்குள் வாழ்ந்து தொலைத்த வசந்த காலத்தை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருந்தோம். மழையில் ஊறிப்போன கால்களில் ஈ மொய்க்க அப்பா கொண்டுவரப் போகும் இரவு உணவுக்காய் நாங்கள் காத்திருந்தபோது மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது.

“மழ சத்த நின்னு பேஞ்சாத்தேன் என்ன?”

என அம்மா சடைத்துக் கொண்டாள். “அப்டிச் சொல்லாதம்மா” என்று சொல்ல வாயெடுத்த என்னை தங்கை அடக்கினாள். வீடு முழுவதும் ஒழுகி உட்கார இடமின்றி ஒடுங்கிய நிலையிலும் என்னால் ஏனோ மழையைச் சபிக்க முடிவதில்லை. மழை உக்கிரமாக ஊற்றத் தொடங்கி இருந்தது. மழைச்சத்தம் மனதிற்குள் இறங்க இறங்க சகலமும் மறைந்து போனது.

“அத்த” என்கிற அந்த ஒற்றைக் குரலில் தூக்கிவாரிப் போட்டு எழுந்தேன். அம்மாவும் தங்கையும் எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தனர். அந்தக் குரல் அவர்களுக்குக் கேட்கவில்லையா? இல்லை கேட்டிருக்கும். அழுத்தமான நிதானமான குரல் கனகாம்பாளுக்கு. எப்படிக் கேட்காமல் இருக்கும். அவள்தான். அவள் குரல்தான்.

“ஒனக்கு எதாச்சும் சத்தம் கேட்டுச்சா?”

“இடிச்சத்தந்தேன் ஊருக்கே கேக்குதேண்ணே”

தங்கைக்குமா கேட்கவில்லை. கனவிலும் நினைவிலும் அடிக்கடி கேட்டுப் பதிந்து போன குரல் கனகாம்பாளின் குரல். தெள்ளத்தெளிவாக மீண்டும் கேட்டது. அம்மா எழுந்து போய் கதவைத் திறக்க அப்பா அருகே கனகாம்பாளின் அம்மா நின்றிருந்தாள்.

சொந்த ஊரில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தை அனைவருக்கும் சட்டென ஒரு நொடியில் முடித்து வைத்தது சிகப்பி அத்தையின் வருகை. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தது குடும்பம். என்னைத் தவிர. என்னை எனக்குக் கண்டெடுத்துக் காட்டியிருந்த கனகாம்பாளின் திருமண சேதியோடு வந்து சேர்ந்த அத்தையின் இருப்பு மழை வரப்போவதற்கு முந்தைய அவியலை எனக்குள் கசப்பாய் ஊற்றிக் கொண்டிருந்தது.

*

அன்றொரு மழை நாள்

அம்மாவும் தங்கையும் எதிர்பாரா விபத்தில் எங்களை விட்டு பிரிந்த பிறகு நானும் அப்பாவும் அனாதைகளாக விடப்பட்ட பின்னர் அப்பாவிடம் பேச்சு வெகுவாக குறைந்து போயிருந்தது. இயக்கம் கூட அவசியப்பட்டால் மட்டுமே என்று வைத்துக் கொண்டுவிட்டார். இந்த நகர வாழ்க்கையின் எந்த இழையும் அவருக்குள் பின்னிக் கொள்ளவேயில்லை. இன்னும் தீராத வாழ்க்கையை எந்தவிதக் கேள்விகளுமின்றி அவர் கடந்து கொண்டிருந்தார்.

அப்படியான கடத்தலின் ஒருபொழுதில், வழக்கம்போல திரை விலக்காத ஜன்னல் அருகே இருக்கும் அவரது கட்டிலில் சாய்ந்தபடி வானம் பார்ப்பதுபோல வெற்றுச் சுவரைப் பார்த்தபடி இருந்தார் அப்பா. அலுவலக வேலையாக அவசரமாக வெளியூர் கிளம்பியபடியே

“அப்பா… மணிக்கடையில மூனு வேள சாப்பாட்டுக்கும் மூனு நாளைக்கு காசு குடுத்திட்டேன்”

“ம்”

“நேரத்துக்கு சாப்ட்ருங்க”

“ம்”

“சாலாக்கா 6 மணிக்கு பால் கொண்டு வரும். வாங்கி காபி போட்டுக்கிருங்க”

“ம்”

“மாத்திரை மருந்தெல்லாம் இருக்கா?”

“ம்”

“மறந்துறாம போட்டுக்கங்க”

“ம்”

“என்னப்பா, ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா?”

“ம்ஹூம்”

நிதானமாக நடந்து அப்பா அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்து கண்ணை நேருக்கு நேராகப் பார்த்தேன்.

“என்னப்பா வேணும்?”

“மாரிக்கண்ணு… உங்கம்மாவும் தங்கச்சியும் என்னைய வீட்டுக்கு வான்னு கூப்டாஹப்பா. நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறியா?”

அம்மாவிடம் மட்டுமே எதையும் கேட்டுப் பழகிய அப்பா, முதன்முறையாக என்னிடம் கேட்கும் விஷயம். அவரிடம் எந்த பதிலும் சொல்லாமல் எனது கைபேசியை அணைத்தபடி நான் சரியெனத் தலையாட்டும் போது வானம் தன் முதல் கண்ணீர்த் துளியை வழிய விட்டது.

*

அன்றொரு மழை நாள்

மந்தைக்கு நடுவே நடக்கும் ஊர் பஞ்சாயத்தின் திண்ணை போல கட்டி அதன் மேலே பனையோலை வேய்ந்து அப்பா செய்து வைத்த குடிலின் நடுவே நானும் மழையும் தனித்து விடப்பட்டிருக்கிறோம். வாழப் பணித்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்ப்பதை தவிர வேறெதையும் யாராலும் எப்போதும் செய்துவிட முடிவதில்லை.

அம்மா, அப்பாவின் கைகளில் வாழைப்பூ வடையை வைத்து, “என்ன மாமா… சின்னப்புள்ள மாட்டுக்க? கண்ணத் தொடைங்க. இப்ப என்னாயிப் போச்சுனு கலங்குறீஹ”

கண்களைத் துடைத்த அப்பா சிரித்தபடி, “புள்ளைஹ ஆளப்போற வீடு”

அம்மா சற்று தயக்கத்துடன், “மழ கொட்டுதே மாமா”

அப்பா மலர்ந்த முகத்துடன், “வாழப் போற எடத்த பாக்க மழய விட நல்ல சகுனம் என்னத்தா இருக்கு?”

“ஆமாப்பா… மழைய விட நல்ல சகுனம் என்னப்பா இருக்கு?”

எனக்கான கடைசி மிடறு தேநீரை மழையோடு சேர்த்துப் பருகி அதை ஆழமாக ரசிக்க கண்களைமூடிச் சிரித்தபோது மழையோடு மழையாக மாறி, குடிலின் நடுவே அமர்ந்திருந்த அப்பா அம்மா தங்கையோடு கண்திறந்து அடுத்த‌ மிடறை விழுங்கினேன்.

***

திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர். தனது காணொளி வலைப்பூ வாயிலாக இலக்கிய அறிமுகங்கள் செய்து வருகிறார்.

RELATED ARTICLES

4 COMMENTS

  1. ஒரு நல்ல கவிதை போலவே கதை நகர்கிறது. குடும்பத்தின் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சரிவிகிதமாய்க் காட்டிக்கொண்டே மழையையும் காட்டும் பாங்கு சுவைக்க வைக்கிறது.வீடு படிப்படியாக கட்டப்படும் காட்சிகளோடு நாமும் இணைகிறோம்.அதேபோல வீட்டை இழக்கும் அந்தத் தருணத்திலிருந்து, குடும்பம் சிதையத் தொடங்கும் போது நாமும் சிதைகிறோம். சலசலக்கும் நீரோடை ஒழுக்குக்கு நிகரான நடை.

  2. அன்றொரு மழை நாள்
    வாசித்த உணர்வை கட்டாயம் நான் இங்கு பகிர்ந்தே ஆகவேண்டும்
    நாம ஒரு ஹோட்டலுக்கு சென்று ஒவ்வொருக்கும் பிடித்தவாறு இட்லியோ தோசையோ கேட்டு சாப்பிடுவோம் உணவு சட்னி சாம்பார் மிகவும் சுவையாக இருந்தால் மீண்டும் இன்னொன்றை ஆர்டர் செய்து தின்று தீர்ப்போம், அது மாதிரி தாங்க அன்றொரு மழை நாள் வாசித்து முடித்ததும் அதன் சுவையோ சுவை அப்பப்பா அலாதியானது போங்க, உடனே கமெண்ட் எழுத முடியல மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும் என்று தோன்றியது, மீண்டும் வாசித்து முடித்து விட்டேன் இப்போதுதான் ஒரு அடை மழையில் ஆசை தீர ஆட்டம் போட்ட உணர்வு.
    சாமானியனின் வாழ்வியல் பயணத்தை மழை நீரில் புதிதாக உருவாகும் நீரோடைகளில் நினைவுகள் எனும் காகித கப்பல்களை செய்து பால காண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை நீரோடையில் விடுகிறார் மாரிக்கண்ணு, மழை வாழைப்பூ வடையின் கருக்முறுக், கனகாம்பாளில் ஊடல், அப்பாவின் அழுகையும், சிரிப்பும் தொடர் ஓட்டம் போல் மாரிக்கண்ணுக்கும் தங்கச்சிக்கும் தொற்றி கொள்வது ஆஹா.. பாசமழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது,
    இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்களுக்கு சொந்தமாக ஒத்த வீடு கட்டுவது மட்டுமே வாழ்வின் மிக பெரிய லட்சிய கனவாக இருப்பதை வெகு அழகாக நேர்த்தியாக பட்டு சேலையை நெய்வது போல நிதானமாக நெய்து கொடுத்திருக்கிறார் எழுத்தாளர், இதில் கால ஓட்டத்தை மிக அனாயசமாக குழப்பமே இல்லாமல் அதற்குள் தாவி குதிக்க வைத்து அலுப்பே தெரியாத வண்ணம் மழையில் நம்மையும் நனைய வைத்தே இருபது வருடங்களுக்கு மேலாக கூட்டி செல்கிறார்,
    மொத்தத்தில் நாம் இந்த மழையில் நனைந்தால் ஜுரம் ஜலதோஷம், தலைவலி எதுவும் வராது மாறாக நாம் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கடந்து வந்த வாழ்க்கை நீரோடை பாதையை மீண்டும் திரும்பி பார்த்து அழகான நினைவுகளை அசைபோட வைக்கும் பாசமழை இது..
    சுகமாய் இருக்கும்.

  3. அருமை விஜிமா. பொதுவாக பெண் எழுத்தாளர்கள் மேல கொஞ்சம் பயம் இருக்கும். ஆண்கள் எழுத்தை போல ஒரு பரந்த பார்வை இருக்காது என. அதை எல்லாம் உங்க எழுத்து உடைத்து விட்டது. மழையோடு நானும் ஒருத்தியாக அந்த குடும்பத்தில் இருப்பது போல ஒரு மாய தோற்றம் உண்டாகி விட்டது.

    “மூண்டுவிட்ட போரை நிறுத்துவதை விட சற்றே கடினமானது மாண்டு கிடக்கும் பேச்சுகளை உயிர்ப்பிப்பது”

    “புதைந்து போன கதைகளைப் புதையலாக்கி அவற்றை காவல் காக்கும் பூதங்களாகிப் போகின்றன வீடுகள்” அருமை.

    மனங்களுக்கு ஏற்றார் போல் மழையின் பரிணாமம் கூட அழகாக மாறுகிறது. Awesome.

    வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular