Thursday, March 28, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்அடியேந்திரம்

அடியேந்திரம்

சுஷில் குமார்

பாலும் தேனும் தயிரும் இளநீரும் விட்டு அபிஷேகம் செய்துமுடித்த போது அப்பாவின் எலும்புச்சில்லுகள் கடல் சிப்பித் துண்டுகளைப் போல பளிச்சென்று தோன்றின. முந்தைய பகலில் கதற ஆரம்பித்த அண்ணன் இன்னும் முடித்த பாடில்லை. நான் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் இருந்ததைப் பார்த்து பலரும் பலவும் நினைத்திருக்கக் கூடும். ஒன்றும் செய்வதற்கில்லை.

வாழையிலையின் மீதாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த எலும்புச் சில்லுகளின் மீது ஒரு பாக்கெட் திருநீற்றைத் தூவி அதன் மேலாக சந்தனத்தைக் குழப்பி வைத்து குங்குமப்பொட்டு வைத்த போது அப்பா தெய்வமாகிறார் என்று எனக்கு நானே சொல்லியபடி கையெடுத்து மார்பில் வைத்துக் கொண்டேன்.

சடங்குகளைச் செய்துகொண்டிருந்த பெரியவரின் செல்போன் மிகச் சத்தமாக அலறியது. ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து…’

அந்த நொடி சட்டென மேல்கரை மாமாவின் குரல் என் காதுகளுக்குள் ஒலித்தது. அந்த கணீர்க்குரலின் ஞாபகம் பல வருடங்களுக்குப் பிறகு சட்டென அப்போது தோன்றியதை உணர்ந்த கணத்தில் கண்கலங்கியதோ என்னவோ, மனது படபடத்தது. இதே பாடலை மாமா பாட அப்பா கண்கலங்க கேட்டுக் கொண்டிருப்பார். அப்பாவும் அவரும் எப்படித்தான் அவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களோ என எப்போதும் ஆச்சரியப்படுவேன். பேசுவதை விடுவோம், மாமா பாடிக்கொண்டேயிருப்பார், அப்பா கண்களை மூடி தலையசைத்துக் கேட்டுக்கொண்டேயிருப்பார். முச்சந்திக் கடையிலானாலும் இரயில் தண்டவாளக் கரையோர நடையானாலும் குளத்தங்கரை படித்துறையானாலும் அப்பாவுக்கும் மாமாவுக்கும் இடையில் எவரையும் பொருட்படுத்தாத ஓர் உரையாடலோ சங்கீதக் கச்சேரியோ இருந்து கொண்டேயிருக்கும்.

“ரெட்டப் புள்ளயோ மாதில்லா சுத்துகானுவோ. அப்படி என்னத்த தான் பேசுவானுவளோ!” என்று மேல்கரை வீட்டுப் பாட்டியும் என் பாட்டியும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் கையைப் பிடித்து மஞ்சளரிசியில் முதலெழுத்தை எழுதியவர் மேல்கரை மாமா தான். அது மட்டுமில்லாமல் எனக்கான பல விசயங்களில் முதலாக வந்து நின்றவர் மாமா தான். அம்மா எப்போதுமே அப்பாவிற்குக் காப்பி கொண்டுவரும் போது தட்டில் இன்னொரு காப்பியும் இருக்கும். மாமாவை உட்கார வைத்து அவரது குடும்பப் பாடுகளைக் கேட்காமல் அனுப்பவே மாட்டாள் அம்மா. என்ன முக்கியமான விசயமானாலும், “அண்ணா கிட்டயும் ஒரு வார்த்த கேட்டுட்டு செய்ங்கோப்பா,” என்பாள் அம்மா. அம்மாவிற்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. மாமாவின் உருவில் தன் இல்லாத அண்ணனுக்கான ஏக்கத்தை நிறைவு செய்து கொண்டாள் அம்மா.

சடங்கு செய்துகொண்டிருந்த பெரியவரின் சத்தம்.

“தம்பி, அண்ணங் கூட சேந்து தொட்டுக் கும்பிட்டுட்டு போணியத் தூக்கிக் குடுப்போ. ரெண்டு வேரும் போயி வடக்கப் பாத்து நின்னு தலைக்கு மேலாட்டு பின்னாடி போட்டுட்டு முங்கிட்டு வாங்கோ. திரும்பிப் பாக்காம வரணும், என்னடே!”

அண்ணன் சொன்னபடியே செய்து முங்கிக் கொண்டிருந்தான். என்னையும் பார்த்து தலையசைத்தான். மேல்கரை மாமா பழையாற்றில் என்னைக் கைகளில் தாங்கி நீச்சலடிக்கச் சொல்லித் தந்தது ஞாபகம் வந்தது. அப்பாவின் சாம்பலோடு முங்கியபோது மேல்கரை மாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்சென்றேன்.
“நேரமாச்சில்லா மக்ளே, செனம் முங்கிட்டுப் போ. அம்மயப் போயி பாரு. என்ன நெலமைல கெடக்காளோ!” என்று அழைத்தார் மேல்கரை மாமா. சட்டென மேலெழுந்து போணியையும் சிவப்புத் துணியையும் எடுத்தபடி மேலேறினேன்.

“போன் பண்ணி வீட்டு நடைக்கு வரலாமான்னு கேளுங்கோ.”

“அதெல்லாம் செரியா இருக்கும். பொறப்படு மக்ளே.”
….

வீட்டு வாசலில் சென்று நின்றபோது அழுது கருத்து ஓய்ந்த முகத்துடன் கால்கழுவி விட்டாள் என் மனைவி. மைனி அண்ணனுக்குக் கழுவிவிட, அவன் மீண்டும் கதறியபடி அவள் மீது சாய்ந்தான். அவனைத் தாங்கிக்கொண்டே மைனியும் அழுதபடி உள்ளே சென்றாள். அம்மாவின் சத்தமில்லை. அவள் சத்தமில்லாத வீடு தேரிக்காட்டின் மூர்க்கமான மௌனத்துடன் இருந்தது.

அந்த அறையினுள் நிறைந்திருந்த மாமாவின் சிரிப்புச் சத்தம். மேல்கரை மாமா அந்த முதல் அறையைத் தாண்டி வந்ததே இல்லையோ? ஏன்? அவரது வீட்டிற்குள் மட்டும் எல்லோரையும் தூக்கிக்கொண்டு போய் விடுவாரே!

“மேக்கர மாமாவாக்கும் ஒங்கப்பாக்கு தாலியெடுத்துக் குடுத்தது. மனுசன் சரியான தொட நடுங்கில்லா? கெட்டு மக்களே, வரத பாப்போம்ன்னு கத்துனா மேக்கர மாமா. பயந்து போயாக்கும் இந்தாளு கெட்டுனது,” என்று சொல்லிச் சிரிப்பாள் அம்மா. திருமணம் முடிந்த சில வருடங்களுக்கு அப்பாவிற்கு சரியான வேலை வராமல் அலைந்து திரிந்திருக்கிறார். அப்போது பெரும்பாலும் மேல்கரை மாமாவின் வீடு தான் எங்கள் பசியை அடக்கியது.

அப்பாவைக் கிடத்தியிருந்த அதே இடத்தில் மயங்கிக் கிடந்தாள் அம்மா.

“அம்ம எதும் குடிச்சாளா?”

“எந்திக்கவே மாட்டுக்காங்கோ. எந்திச்சா ஒரே கத்தக்கம். தொண்டத்தண்ணியும் வத்தியாச்சி. ஒன்னும் எறங்காட்டா என்னத்துக்கு ஆகும்? நீங்க கூப்ட்டுப் பாருங்கோ.”

“எம்மா, எம்மா, எந்திச்சி கொஞ்சம் தண்ணியக் குடி.”

அம்மாவிடம் எந்த அனக்கமும் இல்லை.

மெல்ல அவளருகே உட்கார்ந்தேன். கைகள் சில்லிட்டிருந்தன. நான் தொட்டதும் மெல்ல வெட்டி இழுத்துக் கொண்டாள்.

“எம்மா, இங்கப் பாரு. பிள்ளக்கில்லாம் சோறு குடுக்காண்டாமா? எல்லாம் பசில கெடக்கு. நீ எந்தி மொதல்ல.”

நெற்றிச் சுருக்கம் விரிந்து மெல்லத் திறந்த கண்களில் இருந்த அறியாமையும் வெறுமையும் என்னை விரட்டுவதைப் போலிருந்தது.
“மக்ளே…” அதன் மேல் அவள் சொல்லிய எதுவும் கேட்கவில்லை.
அம்மாவை மெல்லத் தூக்கி என்னோடு சேர்த்துக் கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் கொடுத்தேன். சில மடக்குகள் உள்ளே சென்றதும், அம்மா ஓவெனக் கதறியபடி, “மக்ளே. மேக்கர மாமாவ இப்பிடி மறந்துட்டோமே மக்ளே. எங்கண்ணே, மேக்கர அண்ணே, எங்கையால எத்தனக் காப்பி குடிச்சண்ணே. ஒங்கூட்டுக்காரன் போய்ட்டான், பாக்க வரல்லியா? நா ஒனட்ட எப்பிடிச் சொல்லுவேன்? மக்ளே, ஒங்கப்பா… அந்தா பாரு, வாசல்லயே நிக்கா மக்ளே. மேக்கரையான்ட்ட யாமுட்டி சொல்லலன்னு கேக்காளே. நா எங்கன்னு போயித் தேடுவேன். மக்ளே, மாமாட்ட சொல்லு மக்ளே. நீ போயி மாமாவக் கூட்டிட்டு வா. அப்பாக்க நெஞ்சு அப்பத்தான் நெறையும் மக்ளே. அந்தா பாரு, சிரிச்சிட்டே நிக்கா பாரு.” என்றவள் மீண்டும் மயங்கிச் சரிந்தாள்.

அப்பாவும் மேல்கரை மாமாவும் நீண்ட காலம் ஒன்றாகவே பணிபுரிந்தவர்கள். அதிகம் படித்தவர் என்பதால் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார் மாமா. தனது நிறுவனத்து பெரியவர்களிடம் பேசி அப்பாவிற்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மாமா. அப்பா மில் இயந்திரங்களுடன் மொத்த வாழ்க்கையையும் ஓட்டினார். மாமா தனக்குக் கிடைத்த பல சிறந்த வேலைகளுக்குச் செல்லாமல் அப்பாவுடனே இருந்து விட்டதாக அப்பா சொல்வார். இத்தனைக்கும் மேல்கரை மாமாவிற்கு வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஊர்ப்பண்ணையார் வம்சம். யானைகட்டிப் போரடித்த பெருமை கொண்ட குடும்பம். பல தங்கைகள், தம்பிகள், எல்லோரும் வேறு வேறு இடங்களில் வசதியாக இருந்தார்கள். மாமா மட்டும் பூர்வீக வீட்டோடு ஒன்றிவிட்டார். கடைசியாக மேல்கரை வீட்டிற்குச் சென்று மாமாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பச்சென்ற அப்பாவைப் பார்க்காமல் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்திருக்கிறார் மாமா. அப்பா அன்று கிளம்பியிருக்காவிட்டால் இந்த வாழ்க்கையே இல்லாமல் தான் ஆகியிருக்கும். இல்லை, வேறேதோ விதமாக இருந்திருக்கலாம், நன்றாகவோ மோசமாகவோ!
..

சட்டென கண் விழித்த அம்மா, “மக்ளே, மேக்கர மாமா எப்பிடி இருக்கான்னு கேளு மக்ளே, எனக்கு படபடன்னு வருகு பாத்துக்கோ. கெட்ட சொப்பனம். மக்ளே, யார்ட்டயாம் கேளு, எங்க இருக்கான்னு கேட்டுப்பாரு. அவ்வோ தெரிஞ்சா ஓடி வந்துருவா மக்ளே. அவ்வோளுக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லு மக்ளே. நீ கேளு மொதல்ல. அம்மக்கி நெஞ்சு வலிக்கி, மேக்கர, மேக்கரைக்கி வேணும்னா போயிப் பாரு மக்ளே. யாரையாம் அனுப்பு. கேட்டுப் பாரு, போ, போ..” என்றாள்.

முகநூலைத் திறந்து ஒரு பதிவிட்டேன்.

“அப்பா தெய்வமாகிவிட்டார். அப்பாவின் பால்யகால சினேகிதர் ஒருவரைத் தேடிச்சென்று சேதி சொல்ல வேண்டும். சேரன்மாதேவி அருகே உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.”

பதிவிட்ட அடுத்த இரண்டு நிமிடங்களில் நாகர்கோவிலில் இருந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்.

“கேள்விப்பட்டேன் டா. நீ சரியான பொறவு போன் பண்ணலாம்னு பாத்தேன். அம்மா ஓகே வா? அண்ணன் எப்பிடி இருக்கான்?”

விசயத்தைச் சொன்னதும், “அதுக்கென்ன மக்ளே, இந்தா இப்போ வண்டிய எடுத்தா ஒரு மணிக்கூர்ல சேரன்மாதேவி. ஆளத் தூக்கிருவோம். ஊரு எங்கன்னு சொன்ன? மேக்கரயா? ஓ மேல்கரை யா? கேட்ட மாதிதான் இருக்கு. போயிப் பாப்போம். ஆமா, என்னன்னு சொல்லதுக்கு?” என்றார் ஸ்ரீநிவாசன்.

“அப்பா பத்தி தகவல் சொல்லணும். ஆனா, மொதல்ல மேக்கர மாமா எப்பிடி இருக்கார்னு பாக்கணும். அவர கண்டுபிடிச்சிட்டு நீங்க எனக்குக் கூப்டுங்க. பாருங்க, நீங்க இருக்கதயே மறந்துட்டேன்.”

“அதுசரி. நீ எங்கடே நம்மளல்லாம் ஞாபகம் வைக்கப் போற? பாரு ஒங்கப்பாவ, எத்தன வருசமா கூடவே இருந்திருக்காரு அந்த மாமா கூட!”

ஸ்ரீநிவாசனும் அவரது மனைவி சுதாவும் அவசரமாகக் காரை எடுத்துக் கொண்டு சேரன்மாதேவிக்குச் சென்றார்கள். மேல்கரையை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர் முகப்பில் இருந்த கோவில் பலகையைப் பார்த்து தற்செயலாக நிறுத்தினார் ஸ்ரீநிவாசன்.
“ஏம்ப்பா, என்ன தகவல் சொல்ல வந்திருக்கோம், இப்ப தான் கோவிலுக்குப் போற நேரமா? செனம் யார்ட்டயாம் கேளுங்கோ, இன்னும் ஊரயே கண்டுபிடிக்க முடியல. இதுல அந்த மேக்கர மாமாவ எங்கன்னு போயி தேட?”

“மொதல்ல கோவில் போர்டப் பாரு. இந்த ஊராத்தான் இருக்கும். இரி, கேக்றேன்.”

சற்று நேரத்தில் கார் ஊரின் மையத்திலிருந்த மேக்கரையான் பழைய கோவில் தெருவிற்குள் சென்றது.

“ஆச்சரியம் தான்டி. ஒரு ஊரையே மறந்துட்டு எப்பிடி இருக்க முடியுதோ? எத்தன வருசமிருக்கும்? அவனுக்கே ஞாபகமில்லையாம். பத்தோ பதினொன்னோ படிச்சேன்னு சொன்னான். ஆனா, ஒரு ஒட்டுறவு கூடவா இருக்காது?”

“ஊரென்ன ஊரு? நாம மட்டும் சொயம்பா என்ன? இத்தோட பத்து ஊராச்சு. இந்தா நாரோயில் வந்து அஞ்சு வருஷம் ஆயாச்சு. நமக்கு மட்டும் சொந்த ஊருன்னு ஏதும் இருக்கா என்ன? இதுல, வி.ஆர்.எஸ் குடுக்கறப்ப கண்டிஷன் வேற, ஒரு ஊர்லயும் நெலைக்கக் கூடாதுன்னு. இனி அடுத்த ஊர் பாக்க வேண்டியதான?”

“எட்டி, நம்ம கத வேற, நமக்கு இதுக்குன்னு ஒரு பேஷன் இருக்கு, வசதியும் இருக்கு, அதான் ஊரூரா சுத்துகோம்.”

“அதுசரி, ஒங்க ஃபிரண்டோட அப்பாக்கு என்ன நெலமையோ என்னவோ! ஊர விட்டு ஒட்டு மொத்தமா காலி பண்ணிட்டுப் போறதுன்னா சும்மாவா என்ன? சரி..சரி, மொதல்ல அந்த மாமா, ம்ம்‌ம்… பேரென்ன? அவரு பேரே மேக்கர மாமா தானா? எப்பிடி இருப்பாருன்னு கேட்டீங்களா? அதெல்லாம் கோட்டைய விட்டுருப்பீங்க.”

ஸ்ரீநிவாசன் காரிலிருந்து இறங்கிச் சென்று ஒரு சில கடைகளிலும் வீடுகளிலும் விசாரித்தார். யாருக்கும் மாமாவைப் பற்றித் தெரிந்த மாதிரியில்லை. ஒரு ஊரின் கதை பேசும் மரங்களும் வீடுகளும் மண்ணும் ஒரு மனிதனின் அத்தனை நீண்ட வாழ்வை அவ்வளவு எளிதாக மறந்து விடுமோ? ஒருவனது கைதொட்டுப் பேசிப் பழகியவர்களும் அவனால் வாழ்ந்தவர்களும், ஏன், அவனைப் பார்க்கக் கூட சகிக்க முடியாமல் திருப்பிக்கொண்டு போனவர்களும் கூட அவனது பெயரையோ முகத்தையோ நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் நிற்பதும் மிக இயல்பான விசயமாகி விடுகிறதோ? ஆனால், ஒருவன் வாழ்ந்த வீடு அவனது சுவாசம் நிறைந்த வீடு அவன் மிச்சம் வைத்த கொஞ்சம் காற்றைத் தாங்கி வைத்திருக்கும் தான், இல்லையா? மேல்கரை மாமாவின் வீட்டுத் திண்ணையை எப்படி மறந்து விட முடியும்? அவரது ஊஞ்சலின் க்ரீச் சத்தத்தை ஒரு நொடி நினைத்துக் கொண்டால் மேக்கரைப் பாட்டியின் தாளிசம் வாசம் மூக்கின் முன் வந்து விடுமே! நானே கிளம்பிச் சென்றிருக்க வேண்டும் என தோன்றிக் கொண்டேயிருந்தது.

அந்தத் தெரு மிக நீண்ட மிக அகலமான தெரு. கோவிலின் முன் இடப்புறம் இரண்டாம் வீட்டில் நாங்கள் இருந்தோம். வலப்புறம் மூன்றாம் வீட்டில்தான் மேல்கரை மாமா இருந்தார். ஸ்ரீநிவாசனிடம் சொல்லியபோது பல வீடுகள் இடிக்கப்பட்டு நவீன பாணியில் கட்டப்பட்டிருந்ததாகச் சொன்னார். சட்டென ஏதோ யோசனை வந்தவனாக, “ஸ்ரீனி, நீங்க நேரா கோவில் வாசல்ல போயி கேளுங்க. பாட்டு பாடுவாருல்லா, அந்த மாமான்னு சொல்லிப் பாருங்க. பண்ணையாரு குடும்பம்னு சொன்னா தெரிஞ்சிருக்கணுமே!” என்றேன்.

காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடுவது, சில சமயங்களில் நிலையாக, சில சமயங்களில் தற்காலிகமாக. எல்லாம் ஒரு விதியோ இல்லை அதிருஷ்டமோ என்று சொல்லியபடிக் கடந்து சென்றிருக்க முடியும். எது எங்களை விடாமல் விரட்டியது? எது மேல்கரை மாமாவை அப்படியே வைத்துக் கொண்டது? சரி, பிறகேன் இந்தவொரு விளையாட்டு?

காருக்குத் திரும்பிய ஸ்ரீநிவாசன் கோவிலை நோக்கிச் சென்றார். சுதா ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். ஸ்ரீநிவாசன் பதிலேதும் பேசாமல் வண்டியை நிறுத்தினார். இடப்புற வீட்டின் இருண்ட திண்ணையில் யாரோ உட்கார்ந்திருந்ததைப் போலிருந்தது. இறங்கி திண்ணையின் அருகே சென்ற ஸ்ரீநிவாசன் ஒரு நொடி யோசித்தபடி சுதாவைப் பார்த்து வருமாறு கண்ணசைத்தார்.

திண்ணையில் பாதியும் வீட்டு வாசல் நடையில் பாதியுமாக இருந்த என் அம்மா வயதையொத்த ஒரு பெண்மணி வளைந்து குனிந்து உட்கார்ந்து ஏதோ செய்துகொண்டிருந்தாள்.

“அம்மா, அம்மா..”

அந்த அம்மாவிற்குக் காது கேட்கவில்லை. சுதா மெல்ல அவளருகே சென்று நின்றாள். அதையும் அந்த அம்மா கவனிக்கவில்லை. அம்மாவின் முன்புறமாகக் குனிந்து சுதா வணங்கியபோது காணாத எதையோ கண்டுவிட்டதைப் போல சட்டென முகத்தில் ஒரு புன்னகையுடன் திரும்பினாள் அவள். ஒரு நொடியில் சுதாவையும் ஸ்ரீநிவாசனையும் மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு நீண்ட ஒரு பெருமூச்சு விட்டாள். அவள் என்னென்னவோ யோசித்துக் கொண்டிருக்கக் கூடும். ஸ்ரீநிவாசனும் சுதாவும் அப்படியே நிற்க, அவர்களைப் பார்த்து உட்காருமாறு கையசைத்தாள்.

“தண்ணி கொண்டாரவா மக்களு, வெயில்ல வந்துருக்கியள..”

அக்குரலைக் கேட்டு, அவள் அந்த வயதிற்குள் ஒளிந்திருக்கும் ஒரு இளம்பெண்ணோ என்று யோசித்தபடி ஸ்ரீநிவாசன் நிற்க, சுதா அந்த அம்மாவின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினாள்.

“நல்லாயிரி மக்களு. அம்மக்கிக் கைல ஒன்னும் இல்லய தரதுக்கு. இந்தா இந்த வெத்தலய வச்சிக்கோ. போடுவேன்னா போடு. இல்லன்னாலும் ஒன்னுல்ல.”

ஸ்ரீநிவாசனும் கால் தொட்டு எழ, அம்மா அவர் தலையில் கைவைத்து ஏதோ முனகினாள்.

“அம்ம தனியாத்தான் இருக்கேன் மக்களு. பின்ன, தனின்னும் சொல்லாண்டாம் தான்.” சொல்லியபடி நிமிர்ந்து இருவரையும் மீண்டும் கூர்ந்து நோக்கினாள். சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா, இங்க நாராயண மூர்த்தின்னு.. பாட்டு பாடுவாராம். ரொம்ப வருசம் இங்கதான் இருந்தாராம்,” என்றாள் சுதா. கேட்ட அந்த நொடியில் அம்மாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்து கண் கலங்கியே விட்டார் ஸ்ரீநிவாசன். மிக நிதானமாக மெல்லிய புன்னகையுடன் சுதாவைப் பார்த்து தலையாட்டினார் அம்மா.

“உங்களுக்குத் தெரிஞ்சவராம்மா? இப்ப எங்க இருக்காருன்னு தெரியணும்.”

அம்மா தனக்கேயான நினைவுகளுக்குள் ஆழ்ந்து சென்று கொண்டிருந்தது தெரிந்தது. ஸ்ரீநிவாசன் சுதாவைப் பார்த்து கண் காட்ட இருவரும் அமைதியாகக் காத்திருந்தனர்.

அம்மாவின் கைவிரல்கள் மெல்லத் தாளம் போட ஆரம்பித்தன. கண்களில் ஏதோ ஒரு ராகம் அதன் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவளது புன்னகை மட்டும் மாறவேயில்லை. அந்தச் சுருக்கங்களைத் தாண்டி அது நிரம்பி வழிந்தபடியிருந்தது.

சற்று நேரத்தில் விரல்கள் நின்றன. அம்மா நிலைப் படியில் கையூன்றி மெல்ல எழுந்து உள்ளே சென்றாள்.

“இன்னா வாரேன் மக்களு.”

“ஏம்ப்பா, பெரிய கதையே கெடைக்கும் போலயே! ஒருமாதிரி சங்கடமா ஆய்ட்டு எனக்கு,” என்றாள் சுதா.

“நான் நெனைக்கறது சரியா இருக்கணும்,” என்று சொல்லிவிட்டு திண்ணையில் சாய்ந்துகொண்டார் ஸ்ரீநிவாசன்.

“அவ காதுக்குள்ள என்ன பாட்டு கேட்டிருப்பா சொல்லுங்க பாப்போம்?”

“அவ என்ன கேட்டாளோ என்னமோ! அவ மொகத்தப் பாத்தப்போ எனக்கு பாரதியோட கண்ணம்மா பாட்டு ஒன்னொன்னா வந்துட்டே இருந்து. அமேசிங். அவ ஒன்னும் தனியா இல்ல பாத்துக்கோ.”

“ஆமாப்பா, எனக்கும் அப்பிடித்தான் தோனிச்சு. இப்பிடியே திரும்பிப் போய்ட்டாலும் ஒன்னுல்ல. ஒங்க ஃபிரண்ட் கிட்ட தகவல் சொல்லியாச்சுன்னு சொல்லிரலாம்.”

ஸ்ரீநிவாசன் சுதாவைப் பார்த்து முறைக்க அவள் புன்னகைத்தாள். அம்மா வரும் சத்தம் கேட்டது.

கையில் எதையோ மிகக் கவனமாகத் தாங்கி வந்தாள். “மக்களு இங்க வா, அம்மயப் புடி.”

சுதா எழுந்து அம்மாவைத் தாங்கி படியில் இறங்க வைத்தாள்.

கைகளில் பழைய கருப்பு வெள்ளை புகைப்படச் சட்டங்கள்.

ஒவ்வொன்றாக திண்ணையில் பரப்பி வைத்தாள்.

“அம்மா, இது?”

“நீங்க கேட்டேளே. இதோ, எல்லாம் அவ்வோ போட்டோ தான். இது திருக்குறுங்குடி கோயில்ல பாடுனது. இது இங்க மேக்கரையான் கோவில்ல. இது கூட்டுக்காரன் கூட,” என்றபடி ஒவ்வொரு புகைப்படத்தையும் சுட்டிக் காட்டினாள்.

அந்தக் கூட்டுக்காரன் அப்படியே என்னைப் போலிருந்ததாகச் சொன்னார் ஸ்ரீநிவாசன்.. அவருக்கு அப்படியொரு சந்தோசம்.
அம்மா நிமிர்ந்து பார்த்து, “ரெண்டு வேரும் பண்ணாத்த அழிச்சாட்டியம் இல்லன்னு சொல்லுவா ஊர்ல. சரி, எதுக்காக தேடி வந்திருக்கியோ?” என்றாள்.

என்ன சொல்வதென சுதாவும் ஸ்ரீநிவாசனும் பேச்சற்று நின்றார்கள். அம்மா மீண்டும் தன் நினைவுகளுக்குள் செல்லத் துவங்கினாள்.

“ஏம்ப்பா, எப்பிடிச் சொல்ல? அவரு எங்க இருக்காருன்னு கேளுங்க மொதல்ல,” என்று ஸ்ரீநிவாசனின் காதுகளுக்குள் சொன்னாள் சுதா.

“அம்மா, அவரு இப்போ எங்க இருக்காருன்னு….”

“காப்பி வாங்கிட்டு வரவா, இருங்கோ, பக்கத்துல யாரும் இருக்காளான்னு பாக்கேன்,” என்றபடி எழ முயற்சித்தாள் அம்மா.

“அம்மா, பரவால்ல, வர வழியில சாப்டுட்டு தான் வந்தோம். பெரியவரு எங்கன்னு…”

சற்று நேரம் அசைவின்றி பதிலேதும் சொல்லாமல் இருந்தாள் அம்மா. பின், மெல்ல சுதாவை நோக்கிக் கை நீட்டினாள். சுதா ஸ்ரீநிவாசனின் முகத்தைக் குழப்பத்துடன் பார்க்க அவர் சற்று பதறியபடி தலையசைத்தார்.

சுதாவின் கைகளைப் பிடித்துக் கொண்ட அம்மா எதுவும் பேசாமல் மெல்ல அதை வருடிக்கொடுக்க ஆரம்பித்தார். மெல்ல தனக்குள்ளேயே பேசுவதைப் போல முனகினார். இருவரும் அவருடன் ஒன்றி நிற்க, சில நிமிடங்களில் சுதாவின் மார்பில் சாய்ந்துகொண்டு ஓவெனக் கதறினார். எத்தனை வருட மிச்சமோ!

பக்கத்து வீட்டு மாமி ஒருவர் வந்து எட்டிப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பிச் சென்றார். எதிர்த்த வீட்டிலிருந்து ஒரு முதியவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது அப்போது தான் தெரிந்தது.

சற்று நேரத்தில் அம்மா அமைதியடைந்து, “அவ்வோ போயி பத்து வருசத்துக்கும் மேலயே இருக்கும்…” என்றார்.

சுதா படபடத்து, “அம்மா, புரியல, என்ன சொன்னீங்க?” என்றாள்.

“அது…. அவ்வோள ஒன்னும் கொற சொல்லதுக்கில்ல, போயிதான் ஆகணும்னு வந்தா யாரு என்ன செய்ய முடியும். போய்ட்டா..”

ஸ்ரீநிவாசன் பொறுமையாக இருக்கும்படி கண்ணசைத்தார்.

“இந்தத் திண்ணையே தான் கதின்னு கொஞ்ச காலம் இருந்தா. பாட்டும் கலாட்டாவும்னு, ஒரே பெகளமா இருக்கும். எல்லாம் ஒரே மாதிரி நீடிக்காதுல்லா, கடவுளுக்கே பொறுக்கல. வீடும் ஊரும் எல்லாம் சுத்தமா சத்தமே இல்லாம ஆயிட்டு..”

“அம்மா, என்ன ஆச்சு? எப்பிடி?”

“எங்கயோ தூத்துக்குடி பக்கத்துல இருக்கதாட்டு தகவல் உண்டும். நா ஒன்னும் அங்க போயெல்லாம் நிக்க மாட்டேன். அது பின்ன, அப்பிடியே இருக்கட்டும். நமக்கு இந்தத் திண்ண தான்னு எழுதிருக்குப் போல!”

ஸ்ரீநிவாசன் ஆர்வமாக, “அம்மா, அவரு யாரு கூட இருக்காரு, நாங்க எங்க போயி பாக்கறது? அட்ரெஸ் எதுவும் இருக்குமா?” என்று கேட்டார்.

அம்மா சற்று நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளேயிருந்து கடிகாரம் அடிக்கும் சத்தம் வந்தது.

“இரி மக்ளே..” என்றபடி எழுந்து உள்ளே சென்றார் அம்மா.

ஒவ்வொரு தூணாகப் பிடித்து உள்ளே சென்றவர் ஏதோ முனகியபடி அங்குமிங்கும் அலைந்ததைப் போலிருந்தது. பாடிக் கொண்டிருந்ததைப் போலவுமிருந்தது. எதிர்பக்கச் சுவற்றின் அருகே போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியின் அருகே சென்று நின்றார். ஒரு துணியை எடுத்து அதன் சட்டங்களைத் துடைத்தார். பின், திரும்பிச் சென்று ஒரு வெள்ளைத் துண்டுடன் வந்தார். அதை நீள்வாக்கில் மடித்து அந்த சாய்வு நாற்காலியின் வலப்புறக் கையில் வைத்தார். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய எழுத்து மேசையின் மீதிருந்த வெண்கலச் சொம்பை எடுத்துச் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தவர் அந்தச் சொம்பை அந்த மேசையின் மீது வைத்தார். அதிலிருந்து தளும்பிய நீர் கீழே சிந்தியது. சற்று நேரம் அப்படியே நின்றார். பிறகு மெல்லத் திரும்பி இடப்பக்க அறைக்குள் சென்றார். மீண்டும் பாடுவதோ முனகுவதோ கேட்டது.

“ஏம்ப்பா, என்ன பண்ணுகா? பாக்கதுக்கும் சங்கடமா இருக்கு. ஒன்னும் புரிய மாட்டுக்கு.”

“இரி, வருவாங்க பாரு.”

அம்மா வரும் அனக்கம் கேட்டது.

கையில் எதையோ கவனமாகப் பிடித்தபடி வந்து உட்கார்ந்தார்.

“அது… எங்கயோ வச்சிருந்தேன். மறந்துட்டேன். நா யாருக்கு போன்லாம் போடப் போறேன்? அதான்…” என்றபடித் தன் கையிலிருந்த ஒரு சிறிய டைரியைத் திறந்து கண்களைச் சுருக்கியபடி ஒவ்வொரு பக்கமாகப் பார்த்தார்.

“ரகுன்னு.. அவ்வோ தூரத்துச் சொந்தம் ஒருத்தரு உண்டும். அண்ணன் மொற. அவர்தான் கூட இருக்கணும். அவர் போன் நம்பர எங்கயோ எழுதி வச்சேன்.”

சுதா கண்கள் விரிய ஸ்ரீநிவாசனைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டாள்.

“இதோ இருக்கே! இந்தாங்கோ, குறிச்சிக்குங்கோ,” என்றபடி அந்த டைரியை நீட்டினாள் அம்மா.

கிட்டத்தட்ட இரண்டு துண்டுகளாகப் பிரிந்து போய்விடவிருந்த அந்தக் காகிதத்தில் இப்படி எழுதப் பட்டிருந்தது.

‘ரகுவரன் – தூத்துக்குடி அண்ணன் – 9894690082’

அந்த எண்ணை ஸ்ரீநிவாசன் குறித்துக் கொண்டார்.

“என்ன விசயம்னு சொல்லவேல்ல மக்களு,” என்று சுதாவின் முகத்தைப் பார்த்தார் அம்மா.

சுதா ஸ்ரீநிவாசனைப் பார்த்துத் தயங்க அவர் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

அம்மாவிடம் எந்தவொரு சலனமும் அசைவும் இல்லை. குத்திட்ட கண்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். கைவிரல்கள் சற்று படபடத்தன. ஸ்ரீநிவாசன் சொல்லி முடித்து அமைதியாக நின்றார். அம்மா ஆழ்ந்த யோசனைக்குள் இருந்தாள்.

நீண்ட ஒரு பெருமூச்சுடன், “எல்லாத்தயும் பாக்கணும்னு எனக்கு எழுதியிருக்கு. காளிக் குட்டன் தான் ஒங்கள அனுப்பிருக்கான், என்ன? ம்ம்.. ஏம் மடிலயே கெடத்தித் தூங்க வச்சிருவேன் காளிக்குட்டன. இப்ப என்ன வயசிருக்கும் அவனுக்கு? கோழிமுட்டக் கண்ணும் பிள்ளயார்த் தொப்பையுமா, கல்யாணம்லாம் கழிஞ்சிருக்கும் என்ன? எத்தன பிள்ளையளோ?” என்றார் அம்மா.

“அம்மா, அவனும் நானும் ரொம்ப நெருக்கம். இப்போ சென்னைல இருக்கான். ரெண்டு பொண்ணுங்க. அவன் தான் காலைல…. அவங்க அம்மா ரொம்ப பதறிப் போய் ஆளனுப்பிப் பாக்கணும்னு….”

“தெரியும், அவ தான் சொல்லிருப்பா. அவளுக்கு ஒடம்பொறப்பு மாதில்லா அவ்வோ. கூட்டுக் காரன விட்டுக் குடுத்தாலும் தங்கச்சிக் காரிய விட்டுக் குடுக்க மாட்டா..ம்‌ம்‌ம்‌ம்‌ம்..”

“அம்மா, நீங்க…” என்று குறுக்கிட்டாள் சுதா.

“செரி மக்களு. பொறப்படுங்கோ. வழி பாத்துப் போணும், என்னா? அம்ம இங்கயேதான் இருப்பேன். மேக்கரக்கி வந்தா வரணும். கூட்டுக்காரன் இல்லன்னு அவ்வோளுக்கு தெரிஞ்சா தாங்கவே மாட்டா. அதான் கெதம், கெதம்னு கெடந்து அடிக்கி.”

சுதாவும் ஸ்ரீநிவாசனும் அவர் கால்தொட்டு வணங்கி விட்டு திண்ணையை விட்டு வெளியே வந்தார்கள்.

“ஒன்னு நில்லு மக்களு,” என்றபடி அவர்களை நோக்கி வந்தாள் அம்மா.

வீட்டு முற்றத்தில் வந்து நின்று சுதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“அது, ஒன்னுல்ல, இன்னிக்கி மாசக் கடைசில்லா? இன்னிக்கிச் சொல்லாண்டாம் மக்களு. ஒரு நாளு பொறுத்து நாளக்கிச் சொல்லுங்கோ. இங்க நாங்கெடந்து பரிதவிச்சிட்டுக் கெடக்கணும்..என்ன மக்களு?”

சுதாவின் கண்கள் கலங்க ஸ்ரீநிவாசன், “அம்மா சொல்லது மாதியே செய்வோம். சரிம்மா….” என்றார்.

மேல்கரை மாமாவின் குரலைக் கேட்ட நொடியில் அதுவரை தேக்கி வைத்த மொத்த அழுகையும் பீறிட்டுக் கொண்டு வந்தது. என் மனைவியும் அம்மாவும் பதறியபடி என்னருகே வந்து நின்று என்னைப் பிடித்துக்கொள்ள, மாமாவிடம் செய்தியைச் சொன்னேன். ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார் மாமா.

சில கணங்களுக்குப் பிறகு, “மக்களு, அம்ம சும்மாயிருக்காளா?” என்று கேட்டார். அவரை அம்மாவிடம் பேசச் சொன்னபோது வேண்டவே வேண்டாமென மறுத்து விட்டார். பிறகொரு நாளில் ஸ்ரீநிவாசனை நேரில் அனுப்பி எவ்வளவு அழைத்தும் சென்னைக்கு வந்து அம்மாவைப் பார்ப்பதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை மேல்கரை மாமா. அப்பாவிற்கு அடியேந்திரம் நடத்திய நாளில் அவர் அனுப்பிய கோடித் துணிகள் வந்து சேர்ந்தன.

***

சுஷில் குமார் சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். மூங்கில், சப்தாவர்ணம் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்” க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020 -ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular