Tuesday, July 16, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்அகராதி கவிதைகள்

அகராதி கவிதைகள்

தவித்து தனித்து நின்ற சிறுபொழுதுகள்
துவண்டு விழுந்ததை
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

கேவலுடன் கசிந்து காத்திருந்த வேளைகளில்
சிதறியப் பூந்தாது நீரில் உவர்ப்பின் சுவை!

முதுவேனிற்கால இறுதியில் இருக்கிறோமென்கிறது பொழுது

நீள் அரும்புகளும், அடர் ஆரஞ்சும் சிவப்பும் கலந்தப் பூக்களாக வெட்சி மனங்கொள்கிறது
கார்காலத்தின் வரவை காற்று காதோடு ஓதிச்செல்கிறது
குயில்கள் பாடிக் கொண்டிருக்கின்றன

இன்றும் அதே நீயாக இருக்கத்தானே இதயத்தின் அத்தனை இச்சைகளின் நாக்குகளும்
எச்சில் விட்டுக் கொண்டிருக்கின்றன

மழைக்காற்றும் ஈரமண்ணும் கிளர்த்தும் நினைவடுக்குகளில்

நீ இல்லாத அடுக்கும் இருக்கக் கூடுமோ!

எந்நேரமும் தொலைந்து போகத் தயாரான விரல்களை
மனம் கோர்த்து அச்சப்பட்டுக் கழிய
சிறுபெரு பொழுதுகள் உவகைக் கொள்வதில்லை
வெட்சியும் கொன்றையும் வெளிற, வெளிற
கார்காலமும் கூதிற்காலமும் வேட்கையின் வெட்கையில்
வெதும்பிச் சாபமுற்றுக் கழியட்டும்
போதும்…
கனாவிலொரு முறைக் கட்டியணைத்து விலகு!

*

வியர்வை பிரசவிக்கும்
உட்கைச் சூட்டில்
பங்கெடுத்துக்கொள,
பிரிந்து பொருள் கொளும் கருப்பொருளின்
எண்ண விரவல்களில் விரிய

களியாட்ட நினைவில் களித்திட

கணப்பொழுதும் கழன்றிடாத
கருவறைத் திருகெனத் தங்கிட

நினைவுச் சுருண்டு
மட்டுமேயாகி ஸ்தம்பித்திட

உயிரின் நாடியில் துடித்திட
நான் இல்லையென்றால் நான் எதற்கு?

மறந்து, தொலைந்து, கடந்து போய்விட
ஒரு வழியுமின்றி
வெறுக்க விரும்புகிறேன்…

*

நரம்புகளின் வழி துளையிட்டு
நான் கொண்ட
அன்பைத் துளி துளியாகக் குருதியுடன்
வடிய வைத்திடும் கூர் ஆயுதமுண்டா

அந்திப் பொழுதுகளில்
சிணுங்கலாய்க் கொஞ்சிக் கொண்டிருந்த
மைனா கொடிய மிருகமாகி அச்சுறுத்தலை
மூடவியலா செவிப்பறை அதிர செவிமெடுத்ததுண்டா

மனவிருட்சம் ஒடித்து
தனித்த வேரறுத்து
புவியதிர நீ சாய்த்துப் போகையிலும்
நிழலுக்கு என் செய்வாயென்று
சருகாய் உதிர்ந்து காற்றில் ஆடும்
இலைக்கு ஏதும் வார்த்தையுண்டா

உன் நினைவு நரம்பு
மூளையின் மடிப்புகளில் எங்கென்றறிந்தால்
உருவிப் போட்டுச் செல்…

குறைந்த பட்சம் உயிரையாவது

*
இடைவிடாத நினைவுத் துரத்தலில்
அயர்ந்து போய்
அழைத்த அலைபேசியின்
திரைத் துளைத்து
பாய்ந்து கட்டிக்கொள்ளத் துடித்த காதல்

சமாதானம் செய்யேனென்று
இதயம் நோக்க
என்னிடம் வார்த்தைகள் இல்லை
என மறுதலித்த இருதயம்

உன் பெயர் ஜபிப்பதைத் தொடங்குகிறது

மண்டியிடும் மூளை மன்னிப்பே கேட்பதில்லை…

சாத்தானே வா!

*

விகம நோய்மையிலும்
விரதம் கொண்டிருக்கும்
அடமான மனது
வியாபிக்க

ஏது வைத்திருக்கிறாய் இடும்பா!

நா சுழற்றிக் கேட்டுவிட
கூண்டிலேற்றிக் கதற விட
காத தூர புகார்கள்
கர்ஜனை கொண்டு
அலைகின்றன!

போகட்டும்…

கருமேகம் தவழ்ந்து கொண்டு இருக்கிறது

சில வார்த்தைகளில் நனை!

*
இருளைக்
கவிழ்த்துக்
கொட்டிவிட்டுப் போகும்

இரவிற்கு

பூனை நடை

*

ஆசுகனுடனிட்ட
ஒப்பந்தம் மீற
உடல் முழுவதும் பாதங்களாக்கிப்
பதுங்கி வந்த இரவு
அணைத்துக் கொண்டு
ஆகிரதம் செலுத்துகிறது

இதழ் வருடலுக்குள்
சுருண்டு கொள்ள
கண்கொட்டி கனவு கொள்கிறது
திமிர் கொண்ட
பின்கழுத்துப் பூனைமயிர்
நகங்களைப் பார்த்தப்படி…

தீட்டவிருக்கும் கோட்டோவியத்தின்
திட்டமிடலைத் தடுத்தாட்கொள்ள
முயங்கி முன்வரும் பற்தடங்களுக்கு
வால் சுருட்டி நிமிர்கிறது

இதழ் திமிர்!!

*
பாலொளி சிந்திய
அன்றைய நிலவிற்கு
வியர்த்திருந்தது

வெப்பம் காய்ந்தோம்

*
சாலை

என்னைத்
தேடிக் கொண்டிருக்கும்
எவரையோ
நான்
கண்டு பிடிப்பதெப்படி?

*

விழி முழுவதும்
வெட்டவெளியாகிப் புழுதியடைகிறது
அனல் தாங்கிய சுவாசம்
சுற்றிச் சுழன்று
ஆகிறது அகதேசி!

நணுக நாழியற்ற
நின் நிலைப்பாட்டில்
நீர்பருக மறந்து
முத்தம் தொலைத்த இதழில்
ஏற்பட்ட வரிவிரிசல்களில்
விழுந்து எழுந்த உச்சிப் பொழுது

கையருகில் கனைத்த
செல்பேசியெடுத்து எண்ணம் தடவி
விரல் ஒற்றி சேதி அனுப்பியது

“பேசித் தொலையேன்”

*

நசை விசை மறுத்து
மனதுள் உட்புதைந்த
விதை

பூனை மயிர் சிலிர்க்கும்
வாழை யிலை வயிற்றில்
மெது வாய் நகர்த்திய
ஸ்கேன ரினால் காட்சி

விரியும் குட்டித் திரையில்
தொப்புள் கொடி யோடு
மிதந்து தலை யசைக்கும்
சிசு போல

முனை யசைத்து துளிர்த்து நிமிர்ந்து
மனம் பார்த்த முத்தம் ஒன்று
முளை விட்டு முத்திரை பதித்தது

எண்ணம் துளைத்து
ஆணி வேர் பாய சல்லி வேர் பரவ
பார மாகிப் போன தற்கண
சுழி யத்திற்குள் சொர்க்க நரகத்தின்
வாயிற் படி யென வளர்ந்து
விருட்சமாகி நிற்கு மதன் கிளைகளில்

காயாகிக் கனிந்த முத்தங்கள்

*

கிளை களிலேயே வெம்பிக் கருகி
உருக் குலைய, விருட்சம் தன்னை
உள்ளிழுத்துக் கொள
ஆணி சல்லி வேர்களில்
அமிலம் பாய்ச்சப் படுகிறது
நிதானமாக

வலியின் சுவை சுகித்த கணம்,
கண் மூடி பிறழ்கிறது

இறந்ததாய் பதைத்த மார்க் ஆண்டனி
ஆயுதம் கொண்டு
மரணம் செய்து
கொள்கிறான் தன்னை

இறக்காத கிளியோபட்ரா
ஐயோ வென
அரவு கொண்டு
அழகியத் தன்
உடலைக் கொல்கிறாள்

படபடக்கும் பக்கங்களில் வரிகள் ஓடுகிறது
ஓயாதக் காற்று வாசித்துக் கொண்டே
இருக்கிறது…

*
உனக்கென சேமித்து வைத்த
வார்த்தைகள் உச்சரிக்கப்படாமல்
உதட்டோடு உறைந்து
உடைந்து அழும்போது
கிழித்துப் போகின்றன

ஒவ்வொரு முறை துகில் களைகையிலும்
உன்னை அணிந்து
குளியலறை செல்ல வேண்டியிருந்த
அசட்டுச் சிரிப்பு நேரங்கள்
கோரப்பற்கள்
முளைத்துச் சிரிக்கின்றன

தூரத்திலிருந்தும் தொலையாதத் தீண்டல்கள்
துயிலில் புரள வைத்து
தீராத கனவுகளினால் செந்தூரம் சிந்தியவை
விசாரணையின்றி
சிலுவையில் அறையப்படுகின்றன

கடற்கரையில் காலாறும் சிறுமி
கண்டெடுத்த வலம்புரி சங்காக
காலநேரமின்றி மனதில் கேட்டுத் திரிந்த
இரகசியச் சேதிகள் கடூரமாகி
வாளும் நீட்டுகின்றன

தவத்தில் மயங்கும் தேவர்கள்
மெளனத்தின் மொழிகளுக்கு
வரமத்தனையும் கொடுத்துவிட
வேண்டி காத்திருந்து
நிஷ்டூர அரக்கர்களாகிப் போயினர்

இறந்து கொண்டிருக்கிறது இதயம்

*

அகராதி
aharathi26@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular