Sunday, November 10, 2024
Homesliderஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் மற்றும் சில கதைகள்

ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் மற்றும் சில கதைகள்

பெருந்தேவி

1. பாலின பேதம் பார்க்காத சலூன்

எல்லா நாற்காலிகளிலும் ஆட்கள் சலூனில் நிரம்பியிருந்தார்கள். ரிசப்ஷனுக்கு  அருகே எப்போதும் எனக்கு முடிவெட்டுகிற எலிஸபெத் கத்திரியும் கையுமாக மும்முரமாக இருந்தாள். எனக்கோ வெளியூருக்குக் கிளம்பும் அவசரம், சலூனுக்கு முன்பதிவு செய்யாமல் செல்லவேண்டியிருந்தது. நுழைவிடத்தில் வாக்-இன் பகுதியில் ஒரு முதியவரும் ஒரு பெண்மணியும் நின்றுகொண்டிருந்தார்கள்.

“உடனடியாக உன்னைக் கவனிக்கமுடியாது” என வருந்திய எலிஸபெத் “ஏற்கெனவே முதியவர் காத்துக்கொண்டிருக்கிறார், பார். நாளைக்கு அவர் மனைவியின் சவ அடக்கம் வேறு,” எனச் சொன்னாள்.

”சரி, முதியவருக்குப் பிறகு என்னைக் கவனி, ஆனால் அந்தப் பெண்ணுக்கு முன்னால் செய்யவேண்டும். ஏற்கெனவே நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதாகச் சொல்லிவிடு” என்று கிசுகிசுத்தேன்.

“எந்தப் பெண் காத்திருக்கிறாள்?” என்று அந்தப் பக்கம் பார்த்தாள், “யாருமில்லையே?” “வழக்கம் போல எனக்கு ஷார்ட் க்ரூ கட்டே செய்துவிடுங்கள். அதுதான் செய்துகொள்ள வேண்டும் என்கிறாள் அவள்” என்று கூறியபடி எங்களை  நோக்கி வந்தார் முதியவர்.

***

2. ஒரு ஷூவின் கதை


இந்த நகரத்தில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை. இங்கே மாணவியாக இருந்த ஆறு வருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கவேண்டியிருந்தது. இதில் பனித்தரையில் வழுக்காதிருக்க முட்கள் பதிக்கப்பட்ட ஷூ வாங்கவேண்டுமென்கிற ஆசை கனவாகவே இருந்தது. ஆனால் சென்ற மாதம்  வேலை கிடைத்து  இம்மாதம் முதல் சம்பளம் கிடைத்தபின் அது நிறைவேறியது. எல்.எல். பீன் இணையதளம் ஷூக்களுக்குச் சிறப்பு வாய்ந்தது. அதில்தான் ”டோஸ்டி ஷூ” என்று விளம்பரம் செய்திருந்தார்கள். சுளையாக நூற்றுப்பத்து டாலர். இன்று காலை அதை அணிந்த ஒரு மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்காய பஜ்ஜியானது. அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல் வேலையாக ஷூவைக் கழட்டிப் பிய்த்துத் தின்றேன்.

***

3. மலைப்பாம்பு

தினத்தந்தியில் அந்த மலைப்பாம்பையும் ஒரு பெண்ணையும் பற்றிப் போட்டிருந்தது. பத்தடி நீளம், முக்காலடி தாட்டி. கரும்பச்சை மஞ்சள் வளையங்களோடு தோல் அலங்காரம் கொண்ட பாம்பு அது. சாதுப்பிராணியென்று அந்தப் பெண் வளர்த்து வந்திருக்கிறாள். சில நாட்களாகச்  சோர்ந்திருந்த பாம்பு இரவில் மெதுவாக ஊர்ந்து அந்தப் பெண்ணருகே அவள் படுக்கையில் நெருங்கிப் படுத்துக்கொண்டதாம். அந்தப் பெண் மன ஆதுரத்தோடு அதை அழைத்துக்கொண்டு (எடுத்துக்கொண்டு)  அதற்கான மருத்துவரிடம் சென்று காட்டியிருக்கிறாள். சோர்வெல்லாம் ஒன்றுமில்லை, உங்களை அளவெடுத்துக்கொண்டிருக்கிறது எப்போது திங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது என்றாராம் மருத்துவர். செய்தியைப் படித்த அன்று, இரவில் படுக்கையில் படுத்தபடி பக்கத்தில் ஒருமுறை பார்த்தாள். தன்னை அளவெடுத்தால் ஒரு போடு போடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தபின் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.

***

4. மேடைகள்

இருபது வருடங்களுக்கு முன்னால் கடலூரில் நாங்கள் வசித்த ஓட்டு வீடு வினோதமானது. இருக்கும் அறைகளிலேயே மிகப் பெரிய, முற்றம் இருந்த சமையலறையில் இருபது மேடைகள் இருந்தன. பால், தயிர் வைக்கத் தலா ஒன்று, வெந்நீர் அடுப்புக்கு, தவலைக்குத் தலா ஒன்று, விளாவத் தண்ணீருக்கு ஒன்று, விறகுக்கு ஒன்று, காப்பிப் பொடிக்கு ஒன்று, பெரிய, சிறிய பாத்திரங்கள், கரண்டிகளுக்குத் தலா ஒவ்வொன்று, வால் பாத்திரங்களுக்கு ஒரு மேடை, மாவடு ஜாடி, மாகாளி ஜாடி, கல் உப்பு கச்சட்டிக்குத் தலா ஒன்று, கடையிலிருந்து வாங்கிவந்திருக்கும் காய்கறி பழங்களோடு அப்பா உட்கார ஒன்று, வாங்க வேண்டிய மளிகை சாமான்கள் பட்டியலுக்கு ஒன்று, வழக்கம்போல அடுப்புக்கு, சமைத்ததை வைக்க இரண்டு, சாமி படங்களுக்கு ஒன்று.  ஸ்பூன்கள் வைக்க மேடையில்லை என்று அம்மாவுக்கு ஒரே மனக்குறை. விறகு மேடையில் ஒரு நாள் விறகோடு விறகாகச்  சாரைப் பாம்பு படுத்திருந்தது. மாகாளி ஜாடியை ஒரு நாள் குட்டி மரநாய் ஒன்று நக்கிக்கொண்டிருந்தது. அப்பா அமர்ந்திருந்த மேடையில் ஒரு நாள் பூசணிக்காயை மடியில் வைத்துக்கொண்டு கடவுள் அமர்ந்திருந்தார்.

***

5.ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்


எங்கள் கல்லூரி ஹைன்ஸ் ஹாலில் பேய் நடமாட்டமிருக்கிறதென கல்லூரி முழுதும் பரவலான பேச்சு. ஒரு சிங்கிள் பாதிரியார் ஆவி என்று ஒரு மாணவி பதற்றத்தோடு சொன்னபோது எல்லா பாதிரியாரும் சிங்கிள்தான் என்று ஒரு மாணவன் பல்பு கொடுத்ததைக் கேட்டேன். ஒவ்வொரு செமஸ்டரும் பின்மாலை வகுப்புகள் நடக்கும் இடத்தைக் கல்லூரி தீர்மானிக்கும்போது என் வகுப்புக்கு ஹைன்ஸ் ஹால் வரக்கூடாதென்று நான் வேண்டாத தெய்வமில்லை. இந்த முறை தெய்வம் சதிசெய்துவிட்டது. முதல் நாள் இரவு பத்து மணிக்கு வகுப்பு முடிகிறது. வெளியே வருகிறேன். ஜிலோவென்றிருக்கிறது. இருபுறமும் காலி வகுப்பறைகள். நடுவே பாதையில் நடக்க நடக்கக் கதவு இன்னும் இன்னும் தூரமாகப் பாதை செல்கிறது. அப்போது கதவில் சாய்ந்தபடி ஓர் உருவம். பாதிரியாரின் நீல அங்கி. மங்கலாகப் புகைமுகம். அது என்னைக் கேள்வி கேட்டதோ? இந்த செமஸ்டரில் இங்கேதான் வகுப்பு என்றேன்.  பயப்படுபவர்கள் வழக்கமாகக் கத்துவதைப் போல அதே ”ஆ” என்ற சத்தம். கதவைத் திறந்து வெளியே ஓரே ஓட்டம். நான் அடிக்கக்கூட இல்லையே, பின் ஏன் இப்படி?

***

6. இப்படித்தான் சமயத்தில்

அவள் வீட்டுக்கு வந்த அவன் உரிமையாகச் சமையலறைக்கு வந்தான். டீ போட்டுக்கொண்டிருந்த அவளைக் கட்டியணைத்தபடி பேசிக்கொண்டிருந்தவன் இந்தப் புடவையில் உன் பின்புறத்தைப் பார்த்தால் அச்சு அசல் அந்த நடிகையேதான் என்றான். அந்த நடிகையின் பின்புறங்கள் அத்தனை சிறப்பில்லை. அந்த நடிகைக்குப் பதிலாக எடுப்பான பின்புறங்கள் இருக்கும் வேறொரு நடிகையின் பெயரை அவன் சொல்லியிருந்திருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றியது. அந்த வேறொரு நடிகையின் பெயர் அவள் வாய்வரை வந்துவிட்டது. ஆனால் உடனே நாக்கைக் கடித்துக் கொண்டாள். அந்த வேறொரு நடிகை ஹார்ட் போர்ன் படங்களில் நடிப்பவள். வார்த்தையை விட்டிருந்தால் அவள் ஹார்ட் போர்ன் பார்ப்பது அவனுக்குத் தெரிந்து விட்டிருக்கும். இந்தக் கதையில்கூட அந்த நடிகை, வேறொரு நடிகை என்று எழுத வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் தமிழ் வாசகர் மனதில் பெண் எழுத்தாளரின் மதிப்பு என்னாவது?

***

7. அந்தக் கிரகத்தில்

எத்தனை எத்தனை விண்வெளிக் கலன்கள் அவர்களை அங்கே அழைத்து வந்தன என இன்னும் யாருக்கும் கணக்கு சரியாகத் தெரியவில்லை. பூமியிலிருந்து தொற்று நோயாளர்களை அப்புறப்படுத்தும் ’Project Healthy Planet’ உலகளாவிய திட்டமாக இருந்தது. புதிய கிரகத்தின் சாம்பல் நிறத்திலான பாறை போன்ற தோற்றமளித்த தரைமீது பல நாட்டவர்களும் தனித்தனிக் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். இந்தியாவின் கலன்களில் வந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்களருகே அங்கிருந்து வந்த கடைசிக் கலன் இறங்கியது. சிலர் இறங்கினார்கள். நூற்றுக் கணக்கான வெள்ளை, கறுப்பு நிறப் பெட்டிகளை இறக்கினார்கள். ஒருவர் உரக்க அறிவித்தார்: “வெள்ளை நிறப் பெட்டிகளில் கத்திகள் இருக்கின்றன, கூர்மையானவை. கறுப்பு நிறப் பெட்டிகளில் கரம் மசாலா, மிளகாய்ப்பொடி பாக்கட்கள் இருக்கின்றன. தரமும் மணமும் கூடியவை. நீங்கள் உங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.” பல அரசாங்கங்களும் இப்படி பெட்டிகளை அவர்கள் நாட்டவர்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றன. அந்தக் கிரகத்தில் தாவரமில்லை, விலங்குகள் இல்லை. அங்கே விடப்பட்டவர்களுக்கான உணவு குறித்து அரசாங்கங்களுக்கு அக்கறை இல்லாமல் இல்லை.

***

8.என்ன குழந்தையோ!

அவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் அந்தச் சின்னக் குழந்தையிடம் முதலில் இதைத்தான் கேட்கிறார்கள்: “உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா?” சின்னக் குழந்தைக்கு “சாக்லேட்தான் பிடிக்கும்” என்று பதில் சொல்லத் தெரியாது. ஆனால் இந்தக் கேள்வி கேட்கப்படும்போது அதன் குட்டிக் கை நீட்டப்படும் சாக்லேட்டுக்கு கிட்டக்கிட்ட போகிறது. அந்த வீட்டுக்கு வரும் சாமர்த்தியசாலிகளோ சாக்லேட்டைத் தந்துவிடாமல் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அப்போது குழந்தை வாயில் ம வந்தால் ம்மா என்கிறது. ப வந்தால் ப்பா என்கிறது. அதன் பின் தரப்படுகிற சாக்லேட்டை பெருந்தன்மையாக வாங்கிக்கொண்டு பொக்கைவாயாய்ச் சிரிக்கிறது. குழந்தை அம்மாவைச் சொல்லும்போது அப்பாவுக்கு, அப்பாவைச் சொல்லும்போது அம்மாவுக்கு முகம் தொங்கிப்போகிறது. ’நேற்று பிறந்ததாகவே இருக்கட்டுமே, இரண்டு பேருக்கும் சமமாகப் பொன்னாடை போர்த்தாவிட்டால் என்ன குழந்தை அது?’

***

பெருந்தேவி – இதுவரை இவருக்கு எட்டு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள சியனா கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நுண் கதைகள் வழி உரைநடை புனைவு இலக்கியங்களிலும் தடம்பதித்துவருகிறார். தொடர்புக்கு -sperundevi@gmail.com

RELATED ARTICLES

2 COMMENTS

  1. நுண்புனை கதைகள் அத்தனையும் ஒவ்வொரு பரிமாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular