Sunday, February 9, 2025
Homesliderஹார்லிக்ஸ் பேபி

ஹார்லிக்ஸ் பேபி

-வா.மு.கோமு

ஜோதிடர்கள் பலர் குணசீலனின் ஜாதகத்தைக் கணித்து பெரிய கண்டம் ஒன்று வரவிருப்பதாகவும் அதில் மட்டும் தப்பித்து விட்டானென்றால் அப்புறம் அவனுக்கு ஆயுசு கெட்டி என்றும் சொல்லியிருந்தார்கள். இனி எந்த ஜோதிடரிடமும் சென்று இவனது கட்டங்கள் பற்றி கணிக்கச் சொன்னாலும் எல்லோரும் பேசி வைத்தது மாதிரி இதையேதான் சொல்லப் போகிறார்கள் என்பதையுணர்ந்த குணசீலனின் தாய் வள்ளியம்மாள் குணசீலனின் எழவை தன் உயிர் இருக்கும் காலத்தில் முன்நின்று எடுக்கக் கூடாது என முடிவெடுத்தாள்.

கண்டத்திலிருந்து குணசீலன் தப்பிப்பதற்கான வழிவகைகளை ஜோதிடர்களிடம் இரண்டாம் முறையாகப் படையெடுத்துச் சென்று கேட்டறிந்தாள் வள்ளியம்மாள். அவர்கள் முதலாகச் சொல்வது பூர்வீக வீடு ஆகாது என்பது தான். ஏற்கனவே அந்த வீட்டில் விழுந்த இழவுகளுக்கெல்லாம் காரணம் அந்த வீட்டின் அமைப்பும் அது கட்டி முடிக்கப்பட்ட ஆண்டும் தான் என்றார்கள். போக மூன்று முக்கு பாதை உள்ள இடத்தில் இருக்கும் வீடுகள் கூடிய சீக்கிரமாக குட்டிச்சுவர்களாகி விடும் என்றும், அப்படி ஆவது தான் நல்லதென்றும் ஜோடித்து அதில் மின்விளக்குகள் பொருத்திச் சொன்னார்கள்.

தனக்கு என்னவானாலும் கவலையில்லை என்றே நினைக்கும் வள்ளியம்மாள், தான் பெற்ற மகன் அந்த கண்டத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஒருநாள் ராத்திரியில் படுக்கையில் கிடந்த போது குணசீலன் தன் வயிற்றில் இருந்த போது தான் பட்ட இன்னல்களைச் சொல்ல ஆரம்பித்தாள். அப்படியாக தன் தாய் ராத்திரி நேரத்தில் உயிர் வாழ்வை நீட்டிப்பதற்கான தடத்தை கைநீட்டிக் காட்டியதால் குணசீலன் வயிற்றுப்பாட்டிற்காக சென்றுவரும் குறுநகரிலேயே வாடகைவீடு பார்க்கத் துவங்கினான்.

குணசீலனின் நல்லநேரமோ என்னவோ ஒரு வாரத்தில் பாத்ரூம் வசதி, தண்ணீர் வசதியுடன் கூடிய புதிதாய் கட்டிமுடிக்கப்பட்டிருந்த வீடே குறுநகரின் ஒதுக்குப் புறத்தில் கிட்டியது. புதுவீட்டில் நுழைந்து பால் காய்ச்சும் நிகழ்வுக்கு வந்திருந்த தாயார் வள்ளியம்மாள் டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்த தரையில் நடக்கத்தெரியாமல் நடந்து நான்கைந்து முறை பொதுக் பொதுக்கென வீழ்ந்தெழுந்தாள். நான்காவது முறையாக வீழ்ந்த போது தான் இடுப்பில் கொஞ்சமாய் வலி இருக்கிறது என்றவளுக்கு ஐயோடெக்ஸ் டப்பியும் மூவ் பேஸ்ட்டும் வாங்கி வந்து கொடுத்தான் குணசீலன். வீட்டினுள் நுழைந்த முதல் நாளிலேயே தன் தாயாருக்கு சம்பவத்தை நிகழ்த்தி விட்ட வீட்டின் மீது குணசீலனுக்கு கொஞ்சம் கோபம் இருந்தாலும் அந்த வீட்டின் அழகு அவனுக்கு பிடித்திருந்தது. கூடவே ஹார்லிக்ஸ்பேபியும் இருந்தால் பாயும், தலயணையுமின்றியே மொசைக் தரையில் உருண்டு மகிழலாம் என்றும் நினைத்து மகிழ்ந்தான்.

கிராமத்தில் ஒருபாடு வேலைகளை விட்டு விட்டு பால்காய்ச்ச வந்திருந்த வள்ளி இடுப்பைப் பிடித்துக் கொண்டே நடந்து சென்று ஊருக்குச் செல்லும் ஒருமணி பேருந்தில் ஏறிப் போய்விட்டாள். தாயார் சென்றதும் ஒரு குளியலைப் போடுவோமென பாத்ரூம் நுழைந்த குணசீலனுக்கு ஜோதிடர்கள் சொன்ன கெடு காலம் வர இன்னமும் இரண்டு மாதங்கள் இருந்தது.

குணசீலன் தன் தாயார் கிராமச் சாலைகளினோரம் வளர்ந்திருந்த புற்களை மேய விட்டு மேய விட்டு வளர்த்திருந்த ஆடுகளில் பலவற்றை விற்றும், மூன்று வருடங்களுக்கும் முன்பாக கொளப்பலூரிலிருந்து காதலித்து கட்டி வந்திருந்த மனைவியின் ஏழுபவுன் நகைகளை விற்றும் இப்போது இவன் தங்கியிருக்கும் குறுநகரில் ஃபேன்ஸி கடை துவங்கி ஒருவருடம் முழுதாய் முடிந்திருந்தது. பேன்ஸி கடை துவங்கிய நாளிலிருந்து வீட்டில் சண்டையும் சச்சரவும் அதிகமாகவே இவனது காதல் மனைவி நகை ஏழுபவுன் போனால் போகிறது உயிர் தப்பித்தால் போதுமென கட்டிய சேலையோடு பேருந்து ஏறிச் சென்று விட்டாள்.

குணசீலன் அவளை ஹார்லிக்ஸ்பேபி என்றே பலவருடங்களாய் அழைத்து வந்ததால் அவளது உண்மையான பெயரை சுத்தமாக மறந்திருந்தான். இதற்காக அவன் கடந்து சென்ற கோடைக்காலத்தில் புழுக்கத்தில் கிடந்த நான்கு நாட்களிலும் விடிய விடிய தூங்காமல் யோசித்தும் அவளது பெயரை ஞாபகத்திற்கு கொண்டுவர முடியவேயில்லை. அதற்குக் காரணம் ஹார்லிக்ஸ் பேபி கடைசியாக இவன் வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லுகையில் சொல்லிப்போன வசனமாகவும் இருக்கலாமென குணசீலன் நினைத்துக் கொண்டான். “பொண்டாட்டியோட அருமையெல்லாம் உனக்கு சீக்கிரமா வரப்போற கேடு காலத்துல தான்டா தெரியும்! நீ சீப்பார்த்து சின்னப்பட்டுத்தான் சாவெடா”

பத்தினிகள் எதாவது கோபம் மிகுதியில் சாபம் விட்டால் பச்சை வாழை பத்திட்டு எரியும் என்று பலரும் சொல்வதால் வீட்டின் தென்புறத்தில் இவன் வளர்த்தி வரும் வாழைமரத்தை ஓடிச் சென்று பார்த்து திருப்தியானான். நல்லவேளை இருவருக்கும் பெயர் சொல்ல பிள்ளை ஒன்று உதிக்கவில்லை. உதித்திருந்தால் அதைக் காரணம் காட்டி வீட்டோடு அமர்ந்திருப்பாள் ஹார்லிக்ஸ்பேபி.

அவள் கோபித்துக் கொண்டு சென்ற மூன்று மாதங்கள் கழித்து அவளது தாயாரும், தந்தையாரும் இவர்களது வீட்டிற்கு சோக முகத்தை வைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ‘இப்பிடியே இதுக ரெண்டு கோவிச்சுட்டு திக்காலுக்கு ஒன்னா இருந்தா நல்லாவா இருக்கு? நாம தான் சமாதானம் பண்டி வெக்கோணும். இதென்ன அழிச்சாம் புழிச்சான் விளையாட்டா?’ என்றெல்லாம் சோக வடிவாய் அவர்கள் பேச வள்ளியம்மாளும் சோக வடிவெடுத்தாள். ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒருத்தனை பெத்து மாடாட்டம் வளர்த்தினேன். அந்த மனுஷன் இவன் பொறந்து ஒரு மாசத்துல போயிச் சேர்ந்துட்டாரு. படிக்கப்போறேன்னு பத்தாங்கிளாசு வரைக்கிம் போனான். வேலைக்கிப் போறேன்னு அவனாத்தான் போனான். கலியாணத்தையும் அவனாத்தான் பண்டி உங்க பிள்ளையை கூட்டிட்டு வந்தான். நல்லாத்தான் இருந்தாங்க ரெண்டு பேரும். எந்தக் கண்ணு பட்டுச்சோ இப்பிடி ஆயிப் போச்சு. இவனா உங்க பிள்ளையை அனுப்பியுடலை தாயி, அவளாத்தான் சாபம் விட்டுட்டு போயிட்டா! அவளா வந்தா நாங்கென்ன வெரட்டியா உடப்போறோம்? ஊரு போயி பிள்ளையை தாட்டி அனுப்புங்க!” என்றாள். ஆனால் ஹார்லிக்ஸ் வரவேயில்லை.

வாரத்தில் ஒருநாள் வள்ளியம்மாளுக்கான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்த குணசீலன் ஒருமணி நேரம் போல தாயாருடன் அமர்ந்து, தான் அறிந்திருந்த உலகச் செய்திகளையும் குறுநகரச் செய்திகளையும் சொல்லிப் போனான். வள்ளியம்மாள் குணசீலனிடம் சொல்வதெல்லாம் ஒன்றே தான். ‘வண்டியில போறப்ப மெதுவா பதனமாப் போ! யாருகிட்டயும் வம்பு தும்புக்குப் போகாதே!’ குணசீலன் ஒவ்வொரு இரவிலும் படுக்கையில் படுத்ததும், ‘நான் வாகனத்தில் செல்கையில் கவனமுடன் இருப்பேன்.” என்று நான்கைந்து முறை சொல்லிவிட்டு தூங்க முயற்சித்தான்.

உணவு விடுதிகளில் சாப்பிடும் பழக்கமில்லாத குணசீலன் சமையல் செய்வதில் நிபுணன். ஹார்லிக்ஸ்பேபி இவன் எதை சமையல்கட்டில் நின்று செய்தாலும் நாக்கைச் சப்புக்கொட்டிச் சாப்பிடுவாள். நல்லமுறையில் உணவை வாயை மூடி மென்று கூழாக்கி விழுங்கும் பழக்கமுடைய ஹார்லிக்ஸ்பேபி எப்போதுமே ஐம்பது கிலோ எடையைத் தாண்டாமலேயே இருந்தாள்.

ராக்காலங்களில் குணசீலன் மீது ஏறிப்படுத்துக் கொண்டே தூங்கும் வழக்கம் அவளுக்கிருந்தது. முதலாக திருமணமான புதிதில் அவளின் இந்தப்பழக்கத்தால் சிரமத்திற்குள்ளான குணசீலன் நாட்கள் போகப் போக அதற்கும் பழகிக் கொண்டான். அவள் அம்மாவும் அப்படித்தான் தூங்குவாள் என்று ஒருநாள் ஹார்லிக்ஸ்பேபி சொல்லப்போக, அதைக் கற்பனையில் நினைத்துப் பார்த்து இரண்டு நாட்களுக்கும் மேலாகக் குறுநகரில் மிரண்டு திரிந்தான் குணசீலன்.

குணசீலனுக்கு ராக்காலங்களில் விழிப்புத்தட்டுகையில் பல்லி ஒன்றின் உச்சுக் கொட்டும் சப்தம் வீட்டினுள் கேட்கத் துவங்கியிருந்ததை அறிந்தான். குணசீலனுக்கு பல்லிகளைப் பிடிக்காது. வீட்டினுள் அவைகளைக் கண்டால் கொன்றுவிடும் பழக்கத்தை வைத்திருந்தான். களைப்பில் படுக்கையில் கிடப்பவனுக்கு அதை எழுந்து போய் விளக்குப் போட்டு தேடிக் கொல்வது சிரமம் என்று அப்படியே தூங்கியும் விடுவான். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்றால் இவன் எழுந்து சமையல் செய்து, குளித்து, கிளம்புவதற்கே நேரம் சரியாக இருந்தது. பல்லியை காலைநேரத்தில் மறந்திருந்தான். போக அதன் சப்தம் விடிந்ததும் இருப்பதுமில்லை.

குணசீலன் தன் பேன்ஸி கடைக்கு விடுப்பு என்று வாரத்தில் எந்த நாளும் விடுவதில்லை. கடையில் மாதச் சம்பளத்திற்கு இப்போது ஒரு பணிப்பெண்ணை சேர்த்தியிருந்தான். குறுநகரின் மையப்பகுதியிலேயே அந்தப்பெண்ணிற்கு வீடு இருந்தது. வந்த மூன்று மாதத்தில் அந்தப்பெண்ணுக்கு வியாபார நுணுக்கங்கள் அத்துபடியாகிவிட்டது. இவனை அந்தப்பெண் வந்தநாளிலிருந்தே பாஸ் என்றே அழைப்பது இவனுக்கு ஏனோ பிடித்தமில்லாமல் இருந்தது. அப்படி அந்தப்பெண் கூப்பிடுகையிலெல்லாம் தானொரு கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் என்கிற நினைப்பு வருவதை உணர்ந்து அவனாக புலம்பிக் கொண்டிருந்தான்.

வேலைக்கு சேர்ந்த நாளில் அந்தப் பெண் தன் பெயரை சொல்லியிருந்தாள். அது என்னவென்று மூன்று மாதமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறான். பெண் பிள்ளைகளின் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பது இவனால் முடியாத காரியமாகவே இருந்தது. அந்தப்பெண்ணுக்கும் இவனொரு புதிய பெயரை சூட்டியிருந்தான். அதுமட்டும் எப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது அவனுக்கு. ஜிமிக்கி!

ஜிமிக்கி என்று இவன் அழைப்பது அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருந்தது. வீட்டில் அவள் தாயாரும் ஜிமிக்கி என்றே அழைத்துப் பழகி விட்டதாய் மகிழ்வாய் சொன்னாள் அவள். காலம் போன கடைசியில் அந்தப்பெண் காதில் மெலிதான வளையம் போன்ற தொங்கட்டான் அணிந்திருந்ததால் அப்படி அழைத்திருப்பேனோ? என்றும் நினைத்தான் குணசீலன்.

“பாஸ் உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சுங்ளா பாஸ்?” என்று ஒரு திங்கள் மதிய நேரத்தில் வீடு போய் உணவு சாப்பிட்டு விட்டு வந்த ஜிமிக்கி குணசீலனிடம் கேட்டாள். குணசீலன் ‘இல்லை’ என்றே சொன்னான் அவளிடம். இவன் கேட்காமலேயே ஜிமிக்கி அவளுக்கு திருமணமாகி டைவர்ஸ் ஆன விசயத்தை சொன்னாள். “அவன் ஒரு ஆகாவழி பாஸ். இதே ஊரு தான். இப்பக்கூட டாஸ்மார்க் கடைக்கிட்ட மரத்தடியில குடிச்சுட்டு நாலுபேர்த்தோட நின்னுட்டிருக்கான்.” என்றாள்.

“உங்களுக்கு குடிக்கிற பழக்கம் இருக்குங்ளா பாஸ்?”

“நான் குடிக்கிறதில்ல ஜிமிக்கி. ஆமா ஏன் நீ டைவர்ஸ் வாங்கிட்டே? அப்படி என்ன சண்டை உங்களுக்குள்ள?”

“அவன் வெத்துவேட்டு பாஸ். எனக்கொரு பிள்ளை குடுக்க அவன் கிட்ட விசயமில்ல. சரி தத்து எடுத்துக்கலாம்னு கூட அவன்ட்ட பேசினேன். சரின்னு தான் சொன்னான். அதுக்குள்ள எங்கம்மா குளிக்கிறப்ப அவன் செல்போன்ல வீடியோ எடுத்து வச்சி சாமத்துல பார்த்துட்டே இருந்தான் பாஸ். அவன் ஒரு சில்றை பாஸ்”

“இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு டைவர்ஸ் வாங்கிக்கலாமா ஜிமிக்கி?”

“என்ன பாஸ் அவனாட்டமே பேசுறீங்க? எங்கம்மாவும் பார்த்தா பார்த்துட்டு போச்சாறான்னு தான் பேசிச்சு! எனக்குத்தான் பைத்தியம் பிடிக்கிறாப்ல ஆயிடிச்சி! பாஸ் அவன் இந்தூர்ல நிறையப்பேரு குளிக்கிறபோது படம் எடுத்து அவன் போன்ல வெச்சிருக்கான் பாஸ்! நான் குளிக்கிறப்பவும் எடுத்து வச்சிருக்கான். ஆனா இதையெல்லாம் எதுக்கு எடுக்கான்னு தான் எனக்குத் தெரியல! அவனைப் பார்த்தா செல்போனை கையில பிடிச்சுட்டு என்னைப் பார்த்துட்டே வர்றாப்ல இருக்கவும் தான் டைவர்ஸ் கேட்டு வாங்கிட்டேன். இப்பவும் என் வீட்டுப்பக்கமா சுத்துவான் பாஸ். என்னைப் பார்த்தா ‘மாமியா தண்ணி வாக்குறாளா?’ அப்படின்னே கேப்பான். அவன் பாருங்க பாஸ் ஒருநாளைக்கி லாரி மோதிச் சாவான்! சட்னியா கிடப்பான் பாஸ் ரோட்டில!”

“உங்க வீட்டுல உங்கம்மாவும் நீயும் மட்டுமா ஜிமிக்கி?”

“ஆமா பாஸ். எங்கம்மா சந்தை சந்தையா காய்கறி ஏவாரத்துக்கு போகுது. வீட்டுல சும்மா இருக்கமேன்னு நானாத்தான் உங்க கிட்ட வந்து வேலை கேட்டேன். என்னை ஏன் பாஸ் உடனே வேலைக்கு வான்னு சொல்லிட்டீங்க?”

“நீயி அழகா இருந்தே ஜிமிக்கி”

“போங்க பாஸ் தமாஸ் பண்ணாதீங்க! எம்பட அழகெல்லாம் ஒரு அழகா? நம்ம கடைக்கே எத்தனை பொண்ணுக அழகழகா வர்றாங்க! அவங்க கூட வெச்சிப் பார்த்தா நானு ஜுஜுபி பாஸ். சொல்லுங்க பாஸ் உடனே சரின்னு சொன்னீங்களே ஏன்?”

“ஏன்னா யாரும் என்கிட்ட வந்து வேலை வேணும்னு கேக்கவே இல்லையே! ஒருத்தன் தனியா நின்னுட்டு சிரமப்படறானேன்னு நீ தான் வந்து கேட்டே! அதனால தான். அப்புறம் ஃபேன்ஸி கடையில ஒரு பொண்ணு இருந்தா வியாபாரம் நல்லா ஓடும்னு மனசுல நினைச்சிட்டு தான் இருந்தேன்.”

“நான் வந்த பிறகு நல்ல வியாபாரமா பாஸ்?”

“ஆமா! நீ ரொம்ப ராசியானவ ஜிமிக்கி”

“நீங்க தான் சொல்றீங்க பாஸ். எங்கம்மா கூட அத்துட்டு நிக்கா அவுசாரின்னு பேசுறா!” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள். அன்றிரவு குணசீலன் கனவில் ஜிமிக்கி ஸ்லோமோசனில் மரங்களை சுற்றிலும் இவனுக்கு போக்கு காட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருந்தாள். அப்போது பல்லியின் சப்தம் அவனுக்கு கேட்டது. வழக்கத்தை விட சற்றுப் பெரிதாக இருக்கவே போர்வையை உதறி வீசிக் கொண்டு கோபமாய் எழுந்தான் குணசீலன்.

முகப்பு அறையில் கிடந்த ஷோபாவில் கிடந்தவன் எழுந்து போய் அறை விளக்கைப் போட்டான். சுற்றிலும் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்வையை ஓட்டினான். முகப்பு அறையின் மூலை முடுக்கெல்லாம் பார்வையை ஓட்டி ஏமாந்தான். பல்லி எங்குமில்லை. பின் எப்படி, காதுக்கு அருகாமையிலே சொச்சு சொச்செனக் கேட்டதே! மீண்டும் சமையல் அறை, சுவாமி அறை, பாத்ரூம் எனத் தேடிச் செல்ல சலிப்படைந்து விளக்கை அணைத்து விட்டு வந்த ஷோபாவில் சாய்ந்தான் குணசீலன்.

போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டு ஜிமிக்கியை நினைத்தான். ஜிமிக்கி தன் முன் நின்று சுடிதாரை கழுத்து வழியே உருவி நடு அறையில் வீசுவதாய் நினைத்தான். நினைப்பே அவ்வளவு அழகாய் இருந்தது அவனுக்கு.

விடிந்த சமயம் பாத்ரூம் சென்று முகம் அலம்பி, பல் துலக்கிவிட்டு டீ வைக்க சமையல் அறைக்குள் நுழைந்தவன் கண்களுக்கு தெரிந்த பல்லியைப் பார்த்து ஒரு கணம் பயத்தில் கத்துவதற்கு வாய் வரவில்லை. இதயம் திடும் திடுமென அடிக்கத்துவங்கிவிட்டது. அங்கிருந்து நழுவி விடாலாமென நினைத்தவனுக்கு கால்களும் வேலை செய்ய மறுத்து விட்டது. இது எப்படி சாத்தியம்? ஒரு பல்லி இத்தனை பெரிதாய் இருக்குமா? சமையலறைச் சுவற்றின் மேல்ப்புறத்தில் அப்பியிருந்த பல்லி ஐம்பது கிலோ இருக்கலாம். நேர்நிமிர்த்தி நிறுத்தினால் இவன் உயரத்திற்கு வரும். பல்லியின் இரு கண்களும் இவனைப் பார்த்தபடிதான் இருந்தது. அதன் வாலின் நுனி லேசாக ஆடுவதைக் கண்டவன் மிரண்டான். பின் வாங்க முயற்சித்தவனுக்கு கால்கள் தான் ஒத்துழைக்க மறுத்தது.

பல்லி இரையைக் கண்களால் கண்டு விட்டால் வாலை ஆட்டுமா? ஆட்டாதா? இவனுக்குத் தெரியவில்லை. போக நாய்கள் வேண்டுமானால் இரையைக் கண்டால் வாலை ஆட்டும் என்று தெரியும். முதலில் இது பல்லி தானா? இல்லை டினோசர் குட்டியா? இப்படி ஒரு விலங்கினம் தன் வீட்டிலிருப்பதை யாரிடம் சென்று முதலாகத் தெரிவிக்க வேண்டும்? குறுநகர நிர்வாக அதிகாரியிடமா? வனத்துறையிடமா? இல்லை காவல்துறையிடமா? இவனுக்கு குழப்பமாயிருந்தது.

பல்லி நகர்ந்து வந்து இவனைத் தாக்கியிருந்தால் கூட இவனுக்கு நிம்மதியாய் இருந்திருக்கும். ஆனால் அது இருந்த இடத்தை விட்டு நகராமலேயே இருந்தது. அது சும்மா வெறுமனே இருப்பது தான் இவனுக்குள் பீதியைக் கூட்டிற்று. கால்களை இப்போது பின்னுக்கு நகர்த்தினான்         !

மீண்டும் இவன் சமையலறையின் முகப்பிற்கு வந்து பார்க்கையில் பல்லி நகராமல் இருந்தது அதே இடத்தில். இவன் நான்கைந்து புகைப்படங்கள் எடுக்கையில் அமைதியாக இவனைப் பார்த்தபடியே தான் சுவற்றில் அப்பியிருந்தது. பல்லி இளமஞ்சள் நிறத்தில் இருந்தது. மரப்பல்லிகள் வீட்டினுள் வாழாது. அவைகள் கறுப்பு நிறத்தில் உடலெங்கும் செதில் செதிலாய் இருக்கும். இது மொழு மொழுவென நல்ல உணவு சாப்பிட்டு வளர்ந்தது போன்றிருந்தது.

ஆக இது தனித்திருக்க வாய்ப்பிருக்காது தான். இதன் ஜோடி ஒன்று இந்த சுற்று வட்டாரத்தில் யாரேனும் வீட்டில் இருக்கலாமென நினைத்தான் குணசீலன். குணசீலன் பின்பாக பதட்டத்தை தணித்துக் கொண்டான். இந்தப்பல்லியை பகலில் இப்போது இரும்புக்கம்பி கொண்டு அடித்துக் கொன்றுவிட முடியாது தான். டெட்பாடியை எங்கே இழுத்துப் போய் புதைப்பது? பாத்ரூமில் இவன் குளித்து முடித்து விட்டு வந்த போது முகப்பு அறையில் மேல் சுவற்றில் அது அப்பிக் கொண்டிருந்தது. எப்படியோ சமையல் அறையிலிருந்து வெளிவந்து விட்டதே என நிம்மதியானான்.

அன்று பகலில் ஃபேன்ஸி கடையில் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. இந்த விசயத்தை யாரிடமேனும் சொல்லாமல் விட்டால் மண்டை வெடித்து விடும் என்றே தோன்றியது. ஆனால் அது நல்லதற்கல்ல. செய்தி சேனல்காரர்கள் பறந்து கட்டி வந்து விடுவார்கள். குணசீலன் வீட்டினுள் மர்ம விலங்கு என்று பேப்பரில் செய்திகள் வந்துவிடும். “பாஸ் நேத்து தூக்கத்துல என் கனவுல வந்தீங்க பாஸ்! வந்து அழகா இருக்கே ஜிமிக்கீன்னு சொன்னீங்க பாஸ்” என்று மகிழ்ச்சியாய்ச் சொன்ன ஜிமிக்கியோடு மகிழ்வாய் பேச முடியவில்லை இவனால். அவன் மனமெங்கும் பல்லியே நிரம்பியிருந்தது.

மதிய உணவு உண்டு விட்டு ஜிமிக்கி வந்த பிறகு, தன் யமஹாவை எடுத்துக் கொண்டு வீடு வந்தான் குணசீலன். பூட்டப்பட்டிருந்த வீட்டினுள் யாரும் இருக்கப் போவதில்லை என்றாலும் காலிங் பெல்லை அழுத்தி விட்டு பூட்டைத் திறந்து வீட்டினுள் சென்றான். காலிங் பெல் ஓசை கேட்டதும் பல்லி பாதுகாப்பான இடத்திற்கு ஓடிச் சென்று விடுமென நம்பினான். பல்லி இருந்த சுவடே இல்லாமலிருந்தது வீடு. சமையலறையிலும், முன் அறையிலும் பல்லி இல்லை.

அது வீட்டை விட்டுச் சென்றிருக்கலாமென நினைத்து மதிய உணவை வட்டிலில் போட்டுக் குழம்பை ஊற்றிக் கொண்டு வந்து முகப்பறையில் அமர்ந்தான். டீவியை ஆன் செய்து செய்திச் சேனல் பார்த்தபடி சாப்பிட்டான். பூஜை அறையில் எதோ தட்டு விழும் ஓசை கேட்டது. பல்லியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்.

மாலையில் வளரும் தென்னை மரத்தில் குருத்தை கடித்துண்டு வாழும் வண்டுகளைக் கொல்வதற்காக விற்கும் மருந்துப்புட்டியை வாங்கி வந்தான். அதைத் தண்ணீர் கலந்து வீட்டினுள் எல்லா அறையிலும் அடித்து விட்டு வந்து கதவை வெளியில் பூட்டி விட்டு திண்ணையில் படுத்து இரவில் தூங்கினான். காலையில் வீட்டினுள் பல்லியின் பிணம் கிடக்க வேண்டுமென நம்பினான். சாக்கினுள் போட்டேனும் வண்டியில் கொண்டு போய் ஏரிக்குழியில் வீசிவிடவேண்டும். அப்புறம் அந்த அதிசயத்தை யார் பார்த்தால் என்ன?

பல்லியைப்பற்றிய யோசனையிலேயே கிடந்தவன் எப்போது தூங்கினானோ தெரியவில்லை. விடிந்து சூரியன் முகத்தில் பட்டபோது தான் விழித்தான். வீட்டைத் திறந்த போது மருந்தின் வாசத்தில் இவனே மயக்கமடைந்து விழுந்து விடுவான் போல இருந்தது. முன்னறையில் மூக்கைப் பொத்திக் கொண்டே பல்லியைத் தேடினான். பாத்ரூமில் பைப்பில் தண்ணீர் கசியும் ஓசை கேட்டது. இதை ஏன் சரியாக குளோஸ் செய்யாமல் வந்தேன்? என பாத்ரூம் கதவைத் திறக்க முயற்சித்தான். அது உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினான் குணசீலன். இதென்ன இந்தப்பல்லிக்கு இவ்ளோ அறிவா? ஒருவேளை பெண் பல்லியோ?

எல்லா அறைகளிலும் ஜன்னல்களைத் திறந்து வைத்தான். முகப்பு அறையில் இருந்த மின்விசிறிகள் இரண்டையும் வேகமாய் சுழல விட்டான். மருந்தின் வாசம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது வீட்டினுள். சமையல் செய்து சாப்பிடும் எண்ணமே இல்லாமல் ஒன்பது மணியைப் போல பசியுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினான். அவன் கிளம்புகையிலும் பாத்ரூம் கதவு அப்படியே தானிருந்தது.

மதிய உணவை பார்சல் கட்டிக் கொண்டு வீடு வந்த குணசீலன் காலிங் பெல்லை அழுத்தி விட்டுத்தான் வீட்டின் கதவை நீக்கி உள்ளே சென்றான். பாத்ரூம் கதவு இப்போது திறந்திருந்தது. உணவுப் பொட்டணத்தை டேபிள் மீது வைத்து விட்டு படுக்கை அறைக்குள் வந்தான். படுக்கை அறைச்சுவற்றின் மேல் அப்பிக் கொண்டிருந்த பல்லியின் கண்கள் மூடியவாக்கில் இருந்ததைப் பார்த்தான். தூக்கம் ஒரு கேடு இதற்கு! என்று நினைத்தவன் ஏனோ அப்படி நினைத்ததற்கு சங்கடப்பட்டான். என்ன இருந்தாலும் இவன் வீட்டில் வசிக்கும் பல்லி. இதைக் கொல்வதற்காக வீட்டினுள் மருந்து அடித்தவன். சாவதற்கு பயந்த பல்லி பாத்ரூமில் போய் பதுங்கி விடிய விடிய தண்ணீரில் நனைந்தபடி இருந்திருக்கிறது.

குணசீலன் பேண்ட்டை உருவி பெட்டின் மீது போட்டு விட்டு லுங்கியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றான். காலைக் குளியலை மதியமாகப் போட்டான். எப்போது குளித்தாலும் ஒரு புத்துணர்ச்சி வருவது நடப்பது தானே! குணசீலன் நல்ல பசியில் இருந்தான். தலையைத் துண்டால் துவட்டிக் கொண்டே முன் அறைக்கு வந்தான். டேபிளில் பொட்டணம் பிரிக்கப்பட்டிருந்தது.

ஒற்றைப்பருக்கை கூட இலையில் இல்லை. யாரேனும் அல்லது நாயேனும் உள்ளே வந்து.. கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருக்கிறதே! இது பல்லியின் வேலையாகத்தானிருக்க வேண்டும். ஒரு ஆள் சாப்பாட்டை முழுசாக சாப்பிட்டு விட்டது. பொரியல், தயிர் என ஒன்றுமில்லை. குணசீலனுக்கு வயிற்றுப் பசியில் காதுகள் அடைக்க கோபமாய் இருந்தது. இப்போது எங்கே அந்தப் பல்லி? படுக்கையறைக்குத் திரும்பினான்.

படுக்கையறைக் கட்டிலில் குப்புறடித்துக் கிடந்தது அந்தப் பல்லி. கட்டிலில் இவன் கழற்றிப் போட்டிருந்த பேண்ட் டேபிளின் மீதிருந்தது. பேண்ட்டை எடுத்து அணிந்து கொண்டவன் பல்லியின் முதுகில் இரும்பு ராடு ஒன்றை எடுத்து வந்து ஒரு போடு போடலாமா? என நினைத்தபடி வீட்டை விட்டு வெளியேறினான்.

இனிமேல் உணவு சமைத்தால் பல்லிக்கும் சேர்த்து சமைக்க வேண்டும் போல! பல்லிக்கு உருளைக்கிழங்கு ஒத்துக் கொள்ளுமா எனத் தெரியவில்லை! இவனுக்கு உருளைக்கிழங்கு ஒத்துக் கொள்வதில்லை. பல்லியோடு வாழப்பழகிக் கொண்டு தான் ஆகவேண்டுமோ என்னவோ!

வீட்டு ஓனரிடம் சென்று விசயத்தை சொல்லி வேறு வீடு பார்த்து குடியேறிப் போய்விடலாம் தான். ஆனால் விசயத்தை அவர் கேட்டாரென்றால் ஆட்களைக் கூட்டி வந்து பல்லியைக் கொன்று விடுவார். பல்லியைக் கொன்ற பாவம் அவரை சும்மா விடாமல் சுகர், பிபி என்று என்று எக்கச்சக்கமாய் ஏற்றி அவர் குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி செலவீனங்களை அதிகப்படுத்தி விடுவார். அப்படியே பிழைத்து வந்தாலும் பல்லிப் பாவம் சும்மாவா விடப்போகிறது?

அன்றிரவு குணசீலன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அருகில் இவன் போர்வையை யாரோ இழுப்பது போன்றிருக்கவே சிரமப்பட்டு விழித்து முனகிக் கொண்டே பார்த்தான். படுக்கையறையில் எரிந்து கொண்டிருந்த நீலவர்ண ஜீரோ வாட்ஸ் விளக்கொளியில் இவனருகில் பல்லியானது படுத்திருக்க மிரண்டு போய் எழுந்தான். இதென்ன குடும்பம் நடத்த ஆரம்பித்து விடும் போல இருக்கிறதே! விளக்கைப் போட்டான் குணசீலன். கண்களை இறுக மூடிக் கொண்டு இவனது போர்வையை முன்னங்கால்களால் நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு சுவர்ப்புறம் பார்த்து திரும்பிப் படுத்தது பல்லி. இவன் விளக்கை அணைத்து விட்டு முன் அறை ஷோபாவில் வந்து வீழ்ந்தான்.

குணசீலன் அடுத்த நாள் சமையலில் காளான் பிரியாணி செய்தான். மிளகாய் அதிகம் போட்டு விட்டான் போலிருக்கிறது. செமையான காரமாயிருந்தது. இதற்காக பிரியாணியை அப்படியே எடுத்துப் போய் தூர வீச முடியுமா? சாப்பாடல்லவா! தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டு வந்து கலந்து சாப்பிட்டால் போகிறதென வீட்டைப் பூட்டிக் கொண்டு வண்டியில் சென்று வாங்கி வந்தான்.

வழக்கம் போல காலிங்பெல்லை அடித்து விட்டு குணசீலன் கதவை நீக்கி வீட்டினுள் சென்ற போது முன் அறையெங்கும் பிரியாணி சிதறிக் கிடந்தது! சமையலறையிலிருந்து பின்னங்கால் இரண்டிலும் மனிதர்களைப் போன்றே நடந்து வந்த பல்லி முன்னங்காலில் பிடித்திருந்த அன்னக்கரண்டியை இவன் முகத்துக்கு நேராய் வீசிற்று.

இப்படித்தான் ஹார்லிக்ஸ் பேபி முன்பொருமுறை காரமாய் சமைத்திருந்தான் என்று சட்டுவத்தை கோபத்தால் இவன் முகத்தில் வீசியிருந்தாள்.

இப்போது கதையின் ஆரம்ப வரியை ஒருமுறை வாசிக்கவும்.

***

ஆசிரியர் தொடர்புக்கு – vaamukomu@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular