வேர்விட்டு கிளைப் பிரியும் கதைகள்

1

ஜெயந்தன் படைப்புலகம்

– கவிதைக்காரன் இளங்கோ

*

னித இயல்பை எட்டிப்பிடித்துவிட எல்லோருக்கும் தான் ஆசை இருக்கிறது. அதன் சூட்சுமம் மட்டும் புரிந்துவிட்டால் குறைந்தபட்ச தனிநபர் உரையாடல் கூட இணக்கம் உள்ளதாக மாறிவிடுமே என்கிற சிறிய ஆர்வத் தூண்டல் எல்லாவற்றையும் தேடச் செய்கிறது. கதைகளையும் புனைவுகளையும் கேட்டும் அறிந்தும் பழகிய காதுகளுக்கு மற்றும் மனத்துக்கு ஒவ்வொரு காலக்கட்டதிலேயும் வெவ்வேறு கதைசொல்லிகள் அவரவர் தாம் கைவரப்பெற்ற ரீதியில் கதைகளை நம்மிடம் எழுத்து வடிவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

1937-ல் பிறந்து 2010-ல் மறைந்த திரு.ஜெயந்தனின் படைப்புலகில் சிறுகதைகளுக்கென்று ஒரு தனித்த இடமுண்டு. அவருடைய சிறுகதைகளை மட்டும் முழுமையாகத் தொகுத்து ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள்’ என்ற கனமான நூலாக அசோகமித்திரன் முன்னுரையுடன் 2008–ல் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது. அவருடைய ஞானக்கிறுக்கன் கதைகளையும் சேர்த்து மொத்தம் 58 கதைகள் தொகுப்பில் உள்ளன.

இந்த 2018-ல், பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் முழுமையாக அத்தனைக் கதைகளையும் வாசித்த பிறகு மனம் கண்டறியும் புதிய தரிசனங்களை பகிரத் தொடங்கினால் அது முற்றுப்புள்ளியற்று நீண்டுவிடும் யோசனைகளை வம்புக்கிழுக்கிறது.

காலத்தைக் கடந்து நிற்கும்படியான கதைகள் என்று யாரும் திட்டமிட்டு எழுதிவிட முடியாது. ஆனால் காலத்தைக் கடந்துவந்து கொண்டிருப்பவனாக எப்போதும் மனிதனும் அவன் அமைத்துக்கொண்ட வாழ்வும் தொடர்கிறது. அதனைப் பதிவு செய்வதன் வழியாக ஒரு கதை, வாசிக்கப்படும்போதேல்லாம் வாசிப்பவனிடம் ரத்தமும் சதையுமாக அகக்கண்ணில் நிகழத் தொடங்குகிறது. அங்கு காலம் இல்லை. எஞ்சுவது ‘மனுஷப் பயலும் அவனோட செய்கையும் மட்டும் தான்’

*****

ம்மதங்கள் – கதையில் வருகிற வீரநாச்சி, அபலைகளாக அவளிடம் வந்து சிக்கிக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து விபச்சாரத் தொழில்  பண்ணுகிறாள். ஒரு கிராமத்தின் சுற்றில் தனித்த ராஜ்ஜியத்தையே உண்டுபண்ணி வைத்திருக்கும் அவளுடைய செல்வாக்கும் செயலும் இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று பெண்களையே திகைப்படைய வைக்கிறது. தொழிலுக்கு எளிதில் ஒத்துவராமல் தப்பியோடி மாட்டிக்கொள்ளும் பெண்களை அவள் அடித்து துவம்சம் செய்து வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள்.

//அந்த நேரத்தில் இவள் முகத்தில் தெரியும் வெறியைப் பார்த்தால் இவள், அந்தப் பெண்கள் அடிக்குப் பயந்து அடுத்த படி ஒழுங்காக இருக்கட்டும் என்று நினைப்பது போலிருக்காது. அடிப்பதால் தனக்குள் உண்டாகும் மிருக திருப்தியை அனுபவித்து அனுபவித்துக் கிறங்குவதுபோல் இருக்கும். அடக்கியாள நினைப்பவர்களுக்கு இதைவிடச் சிறந்த பண்பு வேறென்ன வேண்டும்?//

துப்பாக்கி நாயக்கர் – கதையில், ஊரையே தன்னிஷ்டத்துக்கு வளைத்துத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெங்கு நாயக்கருக்கு இருக்கும் ஆள் படைபலத்தையும் போலீஸ் செல்வாக்கையும், சித்தரித்துக்கொண்டே வரும்போது அவருக்கு கதைக்குள் ஒரு பெரும் பிரச்சனை வந்துவிடுகிறது. ஒரு சமயம் அவர் ஊரில் இல்லாதபோது அவருடைய இரண்டாம் தாரமான பாப்பம்மாள் மீது அவரின் நம்பிக்கைக்குரிய அடியாளான ராமசாமியே கைவைக்க முயன்றுவிடுகிறான். அவள் அலங்கோலமாக அலறியடித்து மாடியிலிருந்து ஓடி வருவதில் தான் காட்சியே தொடங்குகிறது. தப்பியோடிய ராமசாமி பால்டாயில் குடித்து செத்தும் போகிறான். அவனுக்கு அப்பன், பொண்டாட்டி பிள்ளையும் இருக்கிறது. ஊர் திரும்பிய துப்பாக்கி நாயக்கரின் மன நிலையையும் மற்றவர்கள் பார்வையில் அடுத்து என்ன ஆகுமோ என்கிற திகிலையும் சொல்லிக்கொண்டே வளரும் கதையில் அவர் முற்றிலும் விசித்திரமாக நடந்துகொள்கிறார். அடியாட்கள் செய்வதறியாமல் முழிக்கிறார்கள். ஊரே குழம்பிப் போகிறது.

ஒரு மனிதனின் எண்ணவோட்டத்தை விளக்காமலேயே அவனுடைய மாற்றம் நிறைந்த விசித்திர போக்குகளை மட்டும் நுணுக்கமாக சித்தரிப்பதன் வழியே வாசிப்பவனையும் ஊரில் ஒரு நபராக உருமாற்றி அந்தப் புதிரை நம்மிடமே மேற்கொண்டு யோசித்துக்கொள்ளும்படி விட்டுவிடுகிறார் ஜெயந்தன்.

தனிமனித உளவியலின் அபாயங்களையோ அதன் உட்சிக்கல்களையோ அத்தனை எளிதில் அறுதியிட்டுவிட முடியாது என்பது நிதர்சனம். ஆனால் அவற்றை நாம் தொடர்ந்து சகமனிதர்களிடம் அடையாளங்கண்டுகொண்டே இருக்கலாம். அவற்றைத் வெளிப்படுத்தவோ பிரதிபலிக்கவோ விடாமல் நிர்ப்பந்திக்கும் அழுத்தத்தை உற்பத்தி செய்யும் வாழ்வியலையே நாம் கட்டமைத்தும் வைத்திருக்கிறோம்.

இதையெல்லாம் ஒரு சாட்சியைப் போல அவதானித்து, அவற்றை நம்மிடம் தம் கதைகளின் வழியே தான் படைக்கும் அல்லது கண்டெடுக்கும் கதாபாத்திரங்களின் மூலம் ஒவ்வொரு கதையிலும் வழங்கியபடியே இருக்கிறார் ஜெயந்தன். அதன் நுட்பங்களை அணுகி அனுபவமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை வாசகனுக்கு இருக்கிறது. எளிதாக சொல்லப்பட்டதைப் போலதொரு தோற்றம் தரும் கதைகளாக அவை இருந்தாலும், அதில் நீரோட்டமாக அழுத்தம்திருத்தமான முறையில் பாயக்கூடிய தத்துவத்தை புறந்தள்ளிவிடலாகாது.

அவர் கட்டியெழுப்பும் காட்சிப்புலன்கள் வாசகனை கைப்பிடித்து தரதரவென்று இழுத்துப் போய் கதைக்குள் நிறுத்திவிடுகிறது. கதைமாந்தார்கள் அந்நியர்களாக இருப்பதில்லை. இச்சமூகத்தில் இருந்தபடி நம்மைத் தாண்டி நாம் கவனிக்கத்தொடங்கினால் நம் பார்வைக்கு எளிதில் தட்டுப்படக்கூடியவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அதே நேரம், கதைகளுக்குள் உருவாகும் சம்பவச் சூழலுக்குள் வெளிப்படும் ஏனைய முன்பின் உணர்வுகள் எல்லாமும் எந்தவொரு சாமான்யனும் தன்னுடைய சொந்த வாழ்வில் எங்கேயாவது தவறாமல் அனுபவிக்க நேர்ந்திருப்பவைகளில் ஏதோ ஒன்று தான். குறைந்தபட்சம் அவற்றைக் கேள்வியாவது பட்டிருப்போம். அல்லது செய்தியாகவாவது கடந்திருப்போம்.

அந்தந்த காலத்தின் மனித மனப்போக்குகளை அன்றைய சமூகப் பார்வையும் கட்டுப்பாடுகளும், சுதந்திரங்களும் எவ்வாறு அனுமதித்திருக்கின்றன அல்லது தண்டித்திருக்கின்றன. அதில், ஜாதிப் பெருமைகளும் ஆண்டான் அடிமை விகிதாசாரங்களும் முற்போக்கு சிந்தனைகளை உயர்த்திப்பிடித்து கட்சி சேர்த்துக்கொள்ளும் இளவட்டங்களும் என்னவாக இருக்கிறார்கள். இருந்தார்கள் – என்ற சாட்சியங்களைப் பல கதைகளில் பதிவு செய்கிறார். அவற்றை ஓர் அளவுகோலாக கணக்கில் எடுத்துகொள்வோமேயானால் இன்றைய சமூகப் போக்கு என்னவாக இருக்கிறது என்பதையும் லேசாக நாடிப்பிடித்துப் பார்த்துவிடலாம் போலத்தான் இருக்கிறது.

ஆண்-பெண் உறவுகளுக்கிடையே நிலவுகிற பரஸ்பரங்கள் எந்தெந்த வாழ்வு பின்னணியில் என்னவாக இருக்கிறது என்பதை அலசும் கதைகள் அநேகம் இருக்கிறது. உறவுகளின் வெவ்வேறு நிலைகளையும் அவற்றின் உள்-வெளி விவகாரங்களையும் ஒரு கலந்தாய்வுக்கு உட்படுத்துகிறார் ஜெயந்தன்.

மாரம்மா – கதையில் வருகிற மாரம்மா என்ற பெண், ஊர்ப் பார்வையில், பேச்சில் அதன் ‘க்கு’ வைக்கும் தொனியில் அவள் என்னவாக இருக்கிறாள் என்பதை இன்னொரு பெண்ணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிற விதம் வாசகரின் Genre ஐ அழிக்கிறது. மாரம்மா தான் இன்னொரு கதையான ‘மொட்டை’ யில் வருகிற பெண்ணாகவும் நமக்குப்படலாம். ஒரே கதாபாத்திரத்தின் வேறு வேறு வார்ப்பாகவும் அது இருக்கக்கூடும். வயது முதிரும்போது தனக்குள் உருவாகும் கருத்தாக்கங்களுக்கான விளக்கங்களை பொழுதன்னிக்கும் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாத சுயத்தேர்வாகவும் அது இருக்கலாம். அதை அந்தக் கதையில் மொட்டை செய்கிறாள். அவள் இயல்பு பிறர் கணக்கில் தப்பிவிட்டதாக ஆவதற்கான காரணம் ஓர் ஒப்பிடல் மட்டுமே. ஆனால் அவளுக்கு அதுவே சரி என்றாகும்போது, அதை மாற்றி எழுதும் முனைப்பை எழுத்தாளராக ஜெயந்தன் கூட முயல மாட்டார். அப்படி ஓர் ஆசைக்குக்கூட அங்கே இடமில்லைத்தான்.

பெரும்பாலும் கதைகள் முடிவை நோக்கி முடிவதில்லை. அதை வாசிப்பவர் வளர்த்துப் போவார். அல்லது நெஞ்சுக்குள் தேங்கிப் போய் காலத்துக்கும் அலுங்காமல் அது அங்கேயே கிடக்கும்.

*****

னித்தனிக் கதைகளாக எழுதப்பட்ட போதிலும் சில கதைகளுக்கு நச்சென்று ஒரு தொடர்பும் இருக்கவே செய்கிறது. ஒரு கதையின் கதாபாத்திரமே இன்னொரு கதையின் கதாபாத்திரமாகவும் இருப்பதை கூர்ந்து கவனித்தால் அடையாளம் பிடித்துவிடலாம். அது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. ஒரு முழுத் தொகுப்பையும் வாசிக்க நேரும்போது கிடைக்கக்கூடிய தொடர்புக் கண்ணிகள் இவை.

‘இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்’ கதையில் வருகிற ராகவன் கதாபாத்திரம் ‘எங்கும் மனிதனே’ என்ற கதையிலும் இருக்கிறான். அதே தொழில் மற்றும் உடற்மொழிகளோடும் சிந்தனைகளோடும் இருக்கிறான். ஆனால் இரண்டு கதைகளும் ஒரு மனிதனின் வாழ்வில் இருக்கக்கூடிய இரண்டுவித அம்சங்களை வெளிப்படுத்துகிறது. இரண்டு கதைகளிலும் செயல்படுத்தத் தூண்டுகிற எண்ணவோட்டங்களும் வேறு வேறு காரணங்களோடு கதைக்களனுக்கு தக்கவாறு பொருந்தி நிற்கிறது. ‘இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்’ நகைச்சுவைத் தொனியில் சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது. ‘எங்கும் மனிதனே’ கதை சீரியஸான இரண்டு விஷயங்களை கையில் எடுத்துக்கொண்டு பேசுகிறது. அப்போது, ஒரே மனிதனின் இருவேறு கூறுகளுக்கு நாம் சாட்சியாகிறோம்.

இங்கே ஒரு தனிமனிதன் அவ்விதமாகத்தானே இருக்கிறான். இருந்தாக வேண்டும்.

வீடு – என்கிற கதையில் அந்த வீடுதான் கதைசொல்லி. மழைக்கு ஒதுங்க அந்த வீட்டை அண்டும் ஒருவனிடம், தன் கதையை சொல்லத் தொடங்குகிற வீடு நம்மை வெகுவாக யோசிக்க வைக்கிறது. மனிதனின் சந்தர்ப்பவாதங்கள் எதையெல்லாம் செய்யத் துணியும். ஒருவனுடைய இயலாமை என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வைக்கும். இதையெல்லாம் மௌன சாட்சியாக சதா உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கட்டிடம் என்பதுதான் நாம் வாழும் வீடாகிறது என்று நினைக்கத் தொடங்கும்போது.. அந்தக் கதைக்குள் நாம் இயல்பாகவே ஈர்க்கப்பட்டுவிடுகிறோம். அந்த வீட்டில் வாழும் ஒரு ஜோடிகளைப் பற்றிய கதையை விஸ்தரித்துக்கொண்டே போகிற வீடு முடிவில் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவனை திட்டுகிறது. அது ஏன் திட்டியது என்பதை உணர்ந்து சிரிக்காமல் இருக்க முடியாது. ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தத் திட்டைக் குறித்து மேற்கொண்டு சிந்த்திக்காமலும் இருக்க முடியாது.

ஆகஸ்ட் – கதை ஒரு வழக்காடு மன்றத்தில் நீதிபதிகளுக்கு முன்னால் நடத்தப்படும் ஒரு வழக்கு விசாரணையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சாந்தி டீச்சர் ருத்ரா டீச்சரின் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளி மிதித்துத் தாக்கியிருக்கிறாள். ஏன்? என்பதற்கு அவள் சொல்லும் காரணங்கள் வியப்பாகவும் ஏற்புடையதாகவும் இல்லாமல் போகிறது. தொடர்ந்து நடக்கும் தர்க்கங்கள் வாக்குவாத மோதல்கள் எதனை நிறுவிட முயல்கிறது என்பது வாதப் பிரதிவாதங்களில் வெளிப்படுகின்றன.

அதில் சாந்தி டீச்சரின் நிலைப்பாடுதான் கதையின் போக்காகவும் இருக்கிறது. ஆண் பெண் என்கிற மனோபாவங்களில் உருவாகிற மன அழுத்தங்கள் ஒரு தனித்த மனித உளவியலை என்னவெல்லாம் செய்துவிடுகிறது என்பதையும் நீதி பரிபாலனங்கள் இறுதியில் என்ன மாதிரியான முடிவுகளை தீர்ப்பாக்குகின்றன என்பதையும் வெளிப்படுத்துகிறார் ஜெயந்தன்.

சர்வாதிகாரியும் சந்நியாசினியும் – கதையில் நாடு தழுவிய அரசியல் நிலவரத்தை கதைக்கென இரண்டு அடிப்படைக் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு வளர்த்துப்போகிறார்.

கதையின் தொடக்கம் இதுதான்..

வீட்டு முகப்பில் சர்வாதிகாரக் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருந்தது.எதிர் வரிசை எதிர்வீட்டில் சந்நியாசக் கொடி அதேபோல் உனக்கென்ன நான் இளைப்பு என்று.முதல் வீடான காசிநாதன் இல்லத்தில் எல்லா சர்வாதிகாரிகளும் – ஹிட்லர் முதல் இடிஅமீன் வரை.அதே போல் அங்கே தரணியம்மாள் இல்லத்தில் மகாத்மா விதுரனிலிருந்து, அன்னை தெரசா வரை.

காசிநாதனும் தரணியம்மாளும் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள். கதைக்குள் ஊர்ப்பொது பிரச்சனையிலிருந்து பொருளாதார சமத்துவம், சமதர்மம் முதற்கொண்டு ஈழப் பிரச்சனை வரையிலும் வெவ்வேறு கோணத்தில் அலசப்படுகிறது. வரலாற்றுத் தலைவர்கள் அநேகம் பேர் கதைக்குள் தஞ்சம் அடைந்துவிட்டார்கள். இவ்வாறாக கட்சிப் பிரிந்து நடக்கும் வாதப் பிரதிவாதங்கள் சமகால நவீன சிந்தனைக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. அந்த வகையில் கதைக்குள்ளே பேசும் கதாபாத்திரங்களாகவே நம் பார்வைக்குத் தட்டுப்படுபவர்களின் ஒரு பட்டியலை இங்கு பார்ப்போம்.

முசோலினி, பி.யூ.சின்னப்பா, மதர் தெரஸா, செயின்ட் ஜோன், கபீர்தாஸ், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒருவர், குணங்குடி மஸ்தான், ரவீந்திரநாத் தாகூர், வினோபாபாவே, இரட்டைமலை சீனிவாசன், பரசு.நெல்லையப்பர், வ.ரா, பி.இராமமூர்த்தி, என்.எஸ்.கிருஷ்ணன், பா.ஜீவானந்தம், மனு. தவிர, இவர்களைக் கடந்து, கதாபாத்திரங்களின் பேசுபொருளாக காந்தியும், அம்பேத்கரும், வேலுபிள்ளை பிரபாகரனும் கூட இருக்கிறார்கள்.

கதையின் இறுதி வரி அதுவரையிலான நமது எண்ணத்தையும் சிந்திக்கும் திறனையும் பார்த்து சவால் விடுகிறது.

நிராயுதபாணியின் ஆயுதங்கள் – கதை அன்றைய சமூக நடப்பின் சமகாலக் குற்றச் செய்திகள் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறது. அநீதிகளையும் அக்கிரமங்களையும் வெறுமனே கேள்விப்பட்டும் கடந்தும் போயே பழகிய சாமானியனின் உள்ளக் குமுறலுக்கு ஒரு வடிகால் போல பகல் கனவு போல பெயரற்று வந்து போகிறாள் அவள். தன்னை ஒரு கிருஸ்துவர் என்று சொல்லிக்கொண்டு தேவாலயத்துக்கு தொடர்ந்து வந்து பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டுப்போகிறாள். அவளும் அவள் தோழிகளும் தொடர்ந்து செய்ய  நேர்ந்த கொலைகளுக்குத்தான் அந்த பாவ மன்னிப்புக் கோருதல் நடக்கிறது. ஏன்? என்ற கேள்விகளுக்கு சிதம்பரம் பத்மினி, ஒரிஸா மாநிலம் கியோஞ்சர் மலை மாவட்டம் மனோகர்பூர் கிராமம் 1999 ஜனவரி 22 நள்ளிரவு, ஒரு பிரார்த்தனைக் கூடத்தின் முன் நின்ற வேனுக்குள் இருந்த போதகர் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸூம் அவரது மகன்கள் பிலிப்பும் டிமித்தியும் உயிரோடு எரிக்கப்பட்டது. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற பற்றியெரிந்த செய்திகளை உள்ளடக்கிய விவாதங்களும் மனப்போக்குகளும் கதையாக கையாளப்பட்டிருக்கின்றன.

தடுப்புக்கு இப்புறம் இருந்து கவலையோடு பாதிரியார் அவளிடம் கேட்கும் ஒரு குறுக்குக் கேள்விக்கு அவள் நிதானமாக ஒரு பதிலைச் சொல்லுகிறாள்.

‘நமது ஆயுதங்களை எதிரிகள்தானே தீர்மானிக்கிறார்கள் ஃபாதர்’

அரும்புகளை – என்ற கதையில் கதைசொல்லி ஓர் ஆராய்ச்சி மாணவி. நாட்டுப்புற பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு லாட்ஜில் வந்து தங்கியிருக்கிறாள். அங்கே பதினோரு வயது மட்டுமே நிரம்பிய சிறுவனைப் பார்க்கிறாள். அவன் அங்கே ரூம் பாயாக வேலை செய்கிறான். அவன் பெயர் பரணி. இருவருக்குமான உரையாடல்களும் அவனது வாழ்வும் நிலையும் அவன் இங்கு வந்து சேர்ந்ததற்கான காரணங்களும் அவளுடைய மனதை அலைக்கழித்து சங்கடப்படுத்துகிறது. அவனை அதிலிருந்து மீட்டுவிட அவள் துடிக்கிறாள். அவனிடம் இருக்கும் குழந்தமை அவளுடைய கண் முன்னேயே கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போவதை தடுக்க வழியின்றி திகைத்துப் போகிறாள். அவனைக் கூடுதல் சம்பாத்தியக்காரனாக மாற்றுவதற்கு லாட்ஜ் ஓனர் மெல்ல அவனுடைய வாழ்வை எதை நோக்கித் தள்ளுகிறான் என்பதையும், வேறு வழியற்றோ அல்லது அதன் காரணமாகவோ விரும்பியோ அவன் அடுத்து ஒரு Pimp ஆக எப்படி மாறிவிடுகிறான் என்பதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

குழந்தைத் தொழிலாளர்கள் என்கிற கருவை மட்டுமே அக்கதை முன்னெடுக்கவில்லை. அதற்குள் உழன்றாடும் நுணுக்கமான மன அவஸ்தையை எடுத்து நம் முன் வைக்கிறது. அவையெல்லாம் வாழ்க்கை என்ற அபத்தத்தை தோலுரித்துக் காட்டவும் செய்கிறது.

4வது பரிமாணம் கதையில் வருகிற ஜெயா மற்றும் தேனம்மா கதாபாத்திரங்கள் ஓர் ஆண் பெண் உரையாடலை நிகழ்த்தியபடியே தத்தம் எண்ணங்களை, ஆசைகளை, ஏக்கங்களை, குழப்பங்களை மற்றும் முடிவெடுத்தல்களின் மீது நிகழ்த்திப் பார்க்கும் தர்க்கங்களை, அவற்றில் உயர்ந்தெழுந்து தாழ்ந்து வீழ்ந்து அவஸ்தைப்படுகிற நியாயங்களை என்று ஒரு கலைடாஸ்கோப் அனுபவத்தைத் தந்து செல்கிறார்கள். சேர்ந்து ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள படித்து வேலைக்குப் போய்க்கொண்டிருக்கும் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் உட்கார்ந்து பேசத் தொடங்கினால், அந்தப் பேச்சில் எதுவெல்லாம் சாத்தியமாக உள்ளன என்பது அவ்வவர்களின் தனிப்பட்ட பர்சனல் விஷயமாகவே மட்டுமே இருந்துவிட முடியுமா என்கிற கேள்வியை முதன்மைப்படுத்துகிறது இக்கதை.

அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் – கதையில் பெண்ணியம் பற்றிய உரையாடல்கள் நிறைந்திருக்கிறது. அக்காள் தனத்தின் புதிய மணவாழ்வை அருகிலிருந்து தரிசிக்கும் கஸ்தூரி, பெண்ணியப் பார்வையில் பெண்ணின் நிலை மற்றும் ஆண்களின் கோணம் என்னவாகவெல்லாம் இருக்கலாம் என்கிற  தன்னுடைய கருத்துகளை சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தனம், தன்னுடைய கணவன் முரளி ஒரு முற்போக்குவாதி என்பதை பிரஸ்தாபிக்க முயல்கிறாள். அவர்கள் குடும்பமாக பிக்னிக் வந்திருக்கிறார்கள். முரளியின் அண்ணன், தங்கை குடும்பம், குழந்தை, மாமனார், மாமியார் இப்படி.

அவர்கள் இவர்களுக்காக கீழே தோட்டத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். தனம் தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள். கிளம்பியது கிளம்பியபடி அக்காளுக்கும் தங்கைக்கும் பேச்சு நடந்துகொண்டிருக்கிறது. கஸ்தூரி சிம்பிளாக இருக்கிறாள். அவள் மாதர் சங்கத்தில் மெம்பராக இருப்பவள். ஒருவழியாக கீழே இறங்கிவந்தபின் முரளியோடு இயல்பாகத் தொடங்கின இன்னோர் உரையாடல் கஸ்தூரி கேட்கும் ஒரு சாதாரணக் கேள்வியால், அதன் முக்கியத்துவத்தால் என்னவான விளைவை உண்டுபண்ணுகிறது. எதிர்பாரா ஒரு சிறிய விஷயம் எப்படி எதை நோக்கி பூதாகாரமாக விஸ்வரூபமெடுக்கிறது. காலங்காலமாக ஊறி புரையோடியிருக்கும் ஆண் என்கிற அதிகார மையம் தம்மை நங்கூரமிறக்கும் சதுப்பாகவே பெண்ணின் நிலை இருக்கிறது என்பதை கண் முன் கண்டும் செய்வதறியாமல் தவித்து போய் அங்கு நிற்கிறாள் கஸ்தூரி.

இன்றைய பெண்ணியம் எத்தனை சதவீதம் எந்தப் பாதையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதையோ அல்லது தேக்கமும் முட்டுக்கட்டையுமாக எந்த ரீதியில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது என்பதையோ கொஞ்சமாவது பல்ஸ் பிடித்துப் பார்க்க ஓர் எளிய கருவியாக இக்கதை இருக்கக்கூடும்.

வாழ்க்கை ஓடும் – தொகுப்பின் முதல் கதையாக அமைந்திருக்கிறது. குப்பிக்கிழவிக்கும் மருமகள் வள்ளிக்கும் குடிமிப்பிடி சண்டையாகிப் போகிறது. மகன் சின்னையா இரவு வீடு திரும்பும்போதே கோபத்தோடு வருகிறான். அவனுக்கு வெளியே யாரோடோ தகராறு. இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த இரவில் எப்படி மெல்ல ஒரு மனிதனின் நிம்மதி குலைதல் உச்சம் தொடுகிறது என்பதையும், அதுவே எப்படி நள்ளிரவுக்கு பிறகு தணிந்து போகிறது என்பதையும் அந்த மூவரையும் வைத்து உளவியலாக படம்பிடித்துக் காட்டுகிறது கதை. எளிய மனிதர்கள் தங்களுக்குள் தங்களை எப்படியெல்லாம் கடத்திவிடுகிறார்கள் என்கிற மாயம் அசாத்தியமான ஒன்றாகவும் பிரம்மாண்டமாகவும் எழுந்து நிற்கிறது.

எழுதியவனும் படித்தவளும் – கதையில் எழுத்தாளனுக்கும் அவனுடைய வாசகிக்குமான உறவுநிலையை பேசுகிறது. அவளுக்கு அவன் மீது உள்ள காதலைச் சொல்லி தன்னை வாழ்க்கைத் துணையாக்கிக்கொள்ள விண்ணப்பம் வைக்கிறாள். பிராக்டிகலாக எப்படியெல்லாம் அது சாத்தியமில்லை. ஏன் சாத்தியமில்லை என்கிற சுவாரசியமான கலந்துரையாடலாக இக்கதை தன்னை விஸ்தரித்து செல்லுகிறது. கற்பனை உலகும் நிஜ உலகும் மோதி விலகும் கணத்தின் அளவை மெல்ல மெல்ல பிரித்து எடுத்து மேஜை மீது வைத்து அதிலுள்ள புதிய அர்த்தங்களை கண்டடைய ஹார்மோன் ஜாலங்களை துடைத்தெறிந்து பார்க்கிற மீச்சிறு துல்லியம் இதிலுள்ள பாத்திர வார்ப்புகளில் துலங்குகிறது.

*****

ண் பெண் பாலியல் அவஸ்தை என்பது நுணுக்கமான உளவியல் தன்மைகளைக் கொண்டது. அவற்றை கதைக்குரிய தேவைப் பொருட்டு அசூசையாக இல்லாமல், வாழ்வில் இரண்டற ஒன்றென கலந்துவிட்ட ஒரு சங்கதியாக கையாள்கிறார் ஜெயந்தன்.

‘வெள்ளம்’ சிறுகதையில் வருகிற அந்தச் சிறுமிகள், சுப்புலெட்சுமி, மேலத்தெரு காமாட்சி, இரட்டை அர்த்தங்கள் பொதிந்து பேசுகிற வேலு கவுண்டர். ஒவ்வொருவருக்கும் ஒரு விதம் இருக்கிறது. மழைப்பொழுது சேகரனை உள்ளுக்குள் அவனுடைய மனம் எப்படி அனல் மூட்டி வெப்பம் கூட்டுகிறது என்கிற பார்வையில் கதையின் போக்கில் தொடக்கத்திலேயே ஓரிடத்தில் ஜெயந்தன் அழகாகச் சொல்லுகிறார்.

உடல் உடலுக்கு ஆயத்தமாகி எதிராளி இல்லாத நிலையில் அவனைச் சங்கடப் படுத்தியது.

மனம் ஒவ்வொரு பெண் மீதும் தாவித் தாவி கடைசியில் தன்னோடு அடங்கி நிற்கும் இடத்தில் மழை ஓய்ந்த காட்சியைப் பார்த்தபடி இருக்கிறான் சேகரன்.

நானும் என் மனக்குறளியும் – கதையில் ஹோட்டலில் எதிர் டேபிளில் வந்து உட்காரும் ஒரு நடுத்தர வயது ஜோடியின் பேச்சில் தெறிக்கும் காம ஜாடையும், இந்தப்பக்கத்தில் உட்கார்ந்தபடி பக்கத்திலிருக்கும் நண்பர் பேசும் இலக்கிய உரையாடலுக்கும் அவ்வப்போது காரியத்திலேயே கண்ணாயிருந்து மனக்குறளி கெக்கலித்து அடிக்கிற கமெண்ட்டுக்கும் மல்லுக்கட்டி வம்பெடுக்கும் உள் அர்த்தத்துக்கும் என எல்லாமுமாய் கை வீசி திசைகளை சிதறடிக்கிற நுணுக்கமான கதை.

கவிமூலம் – கதையில் வருகிற Inter relationship தான் சிவராமனின் பிரச்சனை. பிரச்சனையின் வடிவம் ‘என்னா கொழுந்தனாரே இப்பதான் எழுந்திருச்சாப்பலியா?’ என்று இவனைப் பார்த்ததும் பாதி சிரிப்பும் பாதி நாணமுமாக இவனை நோக்கி நடந்தபடியே விசாரிக்கிற அண்ணியின் வடிவமாக இருக்கிறது.

தொடர்ந்து உருண்டோடும் பேச்சில் பொதிந்து கிடக்கும் வெவ்வேறு அர்த்தங்களை மனம் அடையாளங் காணுவதோடல்லாமல் அதன் இழுப்புக்கெல்லாம் இஷ்டம் போல வளைந்து போகும் போக்கில் சிக்கித் திணறிவிடும் மூச்சின் இழுவையில் அல்லாடுகிறான் அவன்.

கதையின் தொடக்கத்தில்..

ஒரு ஜடப்பொருள், ஒரு ஜடப்பொருளாய், ‘என்னை எனக்குத் தெரியாதே’ என்று கிடந்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு உயிர்ப்பொருளாகிய தனக்கு, தான் யார், தன் யோக்கியதை என்ன என்பது தெரிந்திருக்க வேண்டாமோ? Brain is the finest form of matter  என்று மற்ற விஞ்ஞான மூளைகள் சொல்லிக் கொடுத்த கிரீடத்தை சூட்டிக் கொண்டாகிவிட்டது.

என்கிற அறிவியல் கோட்பாட்டுத் தத்துவ அடிப்படையோடும் அதில் மனம் என்னவாக உருமாறி பாடுபடுகிறது என்கிற ஹார்மோன் விளையாட்டும், ஒரு சுயமதிப்பீடும் எங்கெங்கே இழுத்துப் போய் இறுதியில் என்னவாகக் கொண்டு போய் அவனை நிறுத்துகிறது.

*****

தொகுப்பின் கடைசி பதினோரு கதைகளான பச்சை, பட்டம், வாணிகம், சங்கிலி, பரிணாமம், துக்கம், பவிசு, உனக்கு ஒரு அய்யோ, நாய் வளர்ப்பு, 542, தலைமுறை வரை ‘ஞானக்கிறுக்கன் கதைகள்’ என்று தனித்துப் பிரித்துத் தரப்பட்டிருக்கின்றன. அத்தனைக் கதைகளின் பிரதானக் கதைசொல்லி கதாபாத்திரம்தான் ஞானக்கிறுக்கன். அவனுடைய பார்வையில்தான் ஒவ்வொரு கதைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.

சாதாரணமாக நாம் எதிர்கொள்ள நேர்ந்த அல்லது இதை இப்படித்தான் யோசித்துப் பழக்கம் என்கிற அன்றாட இயல்பை வேறொரு தத்துவ நோக்கில் அவதானிப்பதும், அவற்றின் தொடர்பாக கேள்விகளை எழுப்புவதும் அல்லது ஓர் ஆழ்ந்த தர்க்க விவாதத்துக்குள் நுழைந்து பார்ப்பதுமே ஞானக்கிறுக்கனின் தனித்துவம். எதுவேண்டுமானாலும் கொட்டிக்கவிழ்க்கப்படும் ஆபத்து அக்கதைகளில் எப்போதும் இருக்கிறது. சாதாரணம் என்பது அசாதாரணத் தொனியைத் தொட்டுக்கொண்டு துருத்திவிடும் தருணத்தை கண்டடைகிற ஆள் ஞானக்கிறுக்கன்.

பதினோரு கதைகளின் வெவ்வேறு போக்கில் ஜெயந்தன் எழுதியிருக்கும் வரிகளில் என்னைப் பாதித்தவற்றில் சிலதை தனித்தனியாகப் பதிவு செய்கிறேன், அவை அக்கதைகளைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தூண்டும் என்றும் நம்புகிறேன்.

  • பாரபட்சமற்ற மதிப்பீடு.
  • தன்னைவிட தனக்குப் பிரியமான மனிதன் வேறு யார் இருக்க முடியும்?
  • ‘ஒரு நுகர் பொருளை முதலாவதாக ஞாபகத்திற்கு வரும்படி செய்து விடுவதே அந்தப் பொருளின் தரமாகிவிடுமா?’
  • முடிவுதான் எந்தக் காரியத்தையும் நியாயப்படுத்துகிறது. The result justifies the deed.
  • பரிணாமம் கதையில் யானை ஞானக்கிறுக்கனிடம் கனவில் பேசுகிறது. அங்கே அதன் முன்னே மாணவர்கள் போல நாற்பது ஐம்பது மிருகங்கள் நின்றுக்கொண்டிருக்கின்றன.

யானை பேசியது: ‘இந்த இடத்தில் நின்றுதான் அந்த மனிதக் குரங்கு எங்களிடம் விடை கேட்டது. எனக்கு பகுத்தறிவு என்னும் வரம் கிடைத்திருக்கிறது. நான் மனிதனாக, அப்புறம் அதி மனிதனாக, அப்புறம் தேவனாக, கடைசியாக கடவுளாக பரிணாமப்பட வேண்டும். நான் புறப்படுகிறேன். எனை ஆசிர்வதியுங்கள்’ என்று கேட்டது.

‘நாங்கள் சொன்னோம்: இல்லை நண்பா, இயற்கை ரொம்பவும் நியாயமானது. எந்த ஒரு ஜீவராசிக்கும் தனிச் சலுகைகள் கொடுக்க அதற்குத் தெரியாது. நீ எதையோ தவறாகப் புரிந்துகொண்டது போல் தெரிகிறது. நீ வரம் என்று சொல்வது சாபமாகக் கூட இருக்கலாம். நன்றாக யோசி. வேண்டாம் என்றோம். அது கேட்கவில்லை. புறப்பட்டுப் போனது. இப்போது மனிதனாகி அனுபவிக்கிறது.’

  • அழுகை என்பது மிகப்பெரிய விஷயம். அதற்கும் துன்ப துயரத்திற்கும் பாலியல் உறவே இருக்க வேண்டும்.
  • மனிதன் ஒரு பழக்கப் பிராணி. Habitual Animal.

*****

தைக்குரிய களத்தை உறுதிப்படுத்தும் காட்சிகளும் கதாபாத்திரங்களின் நறுவிசும் அவைகளின் பண்புகளுக்குரிய வார்ப்பும், அவற்றின் துணைக்கொண்டு  சொல்ல நினைக்கும் விஷயத்தைவிட்டு விலகாமல் ஜெயந்தன் அவர்கள் உருவகித்து உயர்த்துகிற கட்டுமானமும் அசாதாரணமான ஒன்று.

உரையாடல்களில் அவர் கையாளும் சொற்சிக்கனம் உற்றுக் கவனிக்க வேண்டிய ஓர் அம்சமாகும். மட்டுமல்லாமல் அதில் உள்ள வட்டார வழக்கு கதாபாத்திரத்தின் குணாதிசயத்தையும் எண்ணவோட்டத்தையும் நிஜத்தன்மையோடு நம் முன் நிலைநிறுத்துகிறது. அப்போது கதை கண் முன் நிகழ்கிறது என்பதையும் மீறி கதைக்குள் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்கிற மனோவேகத்தையும் உண்டுபண்ணுகிறது.

உரையாடல்களால் கதையை முன்னோக்கி நகர்த்தும் அவருடைய எழுத்து லாகவம் வியப்பை ஏற்படுத்துகிறது.

புதியத் தலைமுறை வாசகர்களுக்கும் எழுத்தார்வம் உள்ளவர்களுக்கும் ஜெயந்தனின் சிறுகதைகள் பாய்ச்சுகிற வெளிச்சம், அவர்கள் தேர்வு செய்ய விரும்பும் நெடிய பாதைக்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்த நிச்சயம் உதவும்.

*****

கவிதைக்காரன் இளங்கோ
சென்னை.
9840404714.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here