Monday, September 9, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்வேம்பலையும் இன்றைய உலக சவால்களும்

வேம்பலையும் இன்றைய உலக சவால்களும்

நெடுங்குருதி” பற்றிய பார்வை

சுரேஷ் பாபு

நெடுங்குருதி நாவலைப் பற்றி எழுத நினைக்கும்போது The Origins of Political Order எழுதிய Francis Fukuyama இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி சொன்ன ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது. சீனாவின் சர்வாதிகாரமோ அல்லது இந்தியாவின் ஜனநாயகமோ திடீரென இன்று உருவாவனதில்லை, மாறாக இந்த இயல்புகள் பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் நீடிக்கின்றன, பல ஆட்சியாளர்கள் மாறியபோதும் இந்த நாடுகள் அவற்றின் ஆதார குணம் மாறாமல் தான் இருக்கின்றன. Three Gorges போன்ற ஒரு மாபெரும் அணையை பல நகரங்களையும் ஊர்களையும் பலிகொடுத்து எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சீனாவால் அமைக்க முடிகிறது. அதே சமயம் இந்தியாவில் கடும் எதிர்ப்புகளும் மக்கள் எழுச்சிகளும் இரு தரப்பு உரையாடல்களும் சமரசங்களும் இணைந்தே ஒவ்வொரு பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதே போல இன்னொன்று சொல்வதென்றால் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வு பாஸ்டன் டீ பார்ட்டி. அன்னிய வரிவிதிப்பை எதிர்த்து செய்யப்பட்ட வன்முறையான போராட்டம் அது, கிட்டத்தட்ட அதே போன்ற அன்னிய அதிகாரத்துக்கு எதிரான ஒரு நிலையில் இந்தியாவில் செய்யப்பட்டது உப்பு சத்தியாகிரகம். போலீஸ் அடித்தாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாங்கி வன்முறையில்லா போராட்டத்தின் ஒரு சான்றாக அந்த நிகழ்ச்சி வரலாற்றில் நிற்கிறது.

ஒரு நிலத்துக்கென்று ஒரு பண்பு எப்போது உருவாகிறது, அது எங்கு உறைகிறது. அது காலச்சூழலில் எப்படி தன்னை மாற்றிக்கொண்டு தாக்குப்பிடிக்கிறது. அந்த மாற்றங்கள் நடக்கும் போதும் அதன் ஆதார குணம் எப்படி கடத்தப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக நம்முன் நிற்கிறது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் நெடுங்குருதி என்ற இந்த நாவல் வேம்பலை என்ற கிராமத்தின் வழியாக இந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவலுக்கு பல வாசிப்புகள் வந்திருக்கும். மாறிவரும் இன்றைய உலகச் சூழ்நிலையில் நிற்கும் ஒரு இலக்கிய வாசகனாக என் பார்வையை இந்தக் கட்டுரையில் முன்வைக்கிறேன்

வேம்பலை:

கதையில் மைய நிலமான வேம்பலையின் கதை நமக்கு இரண்டு வழிகளில் சொல்லப்படுகிறது. ஒன்று யதார்த்தவாத சம்பவங்கள் வழியாக, இன்னொன்று வேம்பலை பற்றிய தொன்மங்கள் வழியாக. அப்படி ஒரு தொன்மம் இந்த கிராமம் உருவான கதையைச் சொல்கிறது. கொள்ளையடிப்பதைத் தொழிலாகக் கொண்ட கூட்டம் ஒன்று காயமுற்று கையறு நிலையில் இருக்கும்போது வேப்ப மரங்கள் சூழ்ந்த இந்த நிலம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. அப்படியே அது அவர்கள் வாழும் கிராமம் ஆகிறது.

கொள்ளையடிப்பதற்கும் அதன்பின் உலகத்தின் கண்ணில் படாமல் தனியே மகிழ்ந்து இருப்பதற்கும் வெயிலும் வேம்பின் கசப்பும் இருக்கும் அந்த கிராமம் அவர்களுக்கு பொருத்தமாக அமைகிறது.

வெள்ளையனான வெல்சி துரை அவர்களை வேட்டையாடும் வரை வெற்றியை மட்டுமே பார்த்த அவர்களின் மனத்தில் பயம் என்பதைக் குடியேற்றுவது ஒரு பெரும் நிகழ்வு. 42 வேம்பர்களைக் கொன்று பெண்கள், குழந்தைகள் குரல்வளையை கூட அறுக்கும் கொடும் நிகழ்வு அது. கிட்டதட்ட வெல்சி துரைக்கு முழு வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய அந்தச் சம்பவம் அப்படி முடிவதில்லை, அந்த துரையின் மனத்தில் ஒரு வேம்பனும் அரூபமாக குடியேறுகிறான். உடனடி வெற்றி அதன்பின் பதவியுயர்வு எல்லாம் கிடைத்தாலும் அவர் மர்ம மரணத்துக்கு காரணமாக அவன் மனத்தில் ஏறிய வேம்பன் காரணமாக இருக்கின்றான். வெல்சி துரை வேம்பர்களை வென்றாலும் அவர்களது உக்கிரம் அவனை வெல்கிறது.

வேம்பலையில் சிங்கி ஒரு தனி பாத்திரம். அவன் கொள்ளையடிப்பதில் கில்லாடி. நிறைய மக்கள், மாடுகள் எல்லாம் இருப்பது போல அவனே குரலால் மாயம் உருவாக்கத் தெரிந்தவன். அவன் ஒரு வியாபாரிக் குடும்பத்தை மடக்கி கொள்ளையடிக்க முற்படும்போது தங்கள் நகைகளை பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கிறார்கள். எந்த நிலையிலும் அவன் பெண் குழந்தைகளிடம் கொள்ளையடிப்பதில்லை என்பதை அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவனை வென்று அவர்கள் செல்லும்போது அந்தக் குடும்பப் பெண்கள் இவனை வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் அங்கு வணங்குவது சிங்கி என்ற கொள்ளையனை அல்ல, வேம்பர்களின் அறத்தை.

வேம்பலையின் வேம்பர்களின் முரட்டுத்தனமும் அவரகளுக்கேயான குழு அறமும் இங்கு வெளிப்படுகின்றன. பொதுவாக இயற்கை என்று நாம் நினைக்கும்போது பனி சார்ந்த மலைகளும் ஆறுகளும் நம் மனதில் வரும்படி கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் வெயிலும் இயற்கை தான். அது நமக்குத் தரும் வாழ்வும் காத்திரமானது என இங்கு காண்கிறோம்.

எந்த அளவு Bird’s eye view முக்கியமோ அதே அளவு Worm’s eye view-ம் முக்கியம். பறவைக்கோணம் ஒரு பெரிய சித்திரத்தை அளித்தாலும்.. வார்ம்ஸ் ஐ எனப்படும் கீழிருந்து பார்க்கும் பார்வை தனிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது. இங்கு கீழிருந்து பார்க்கும் பார்வையான வார்ம்ஸ் ஐ என்பதை எறும்புப் பார்வை என்று கூட நாம் வைத்துக்கொள்ளலாம்.

இந்த நாவலில் நாம் நாகு என்ற சிறுவனின் வழியாக அந்தப் பார்வையை அடைகிறோம். அவனும் எறும்புகள் சாரை சாரையாக ஊரைவிட்டுப் போவதை பார்த்துக் கொண்டிருப்பதாக நமக்கு அறிமுகம் ஆவதே அவன் நமக்கு ஒரு கூரிய பார்வையை தரப்போகிறான் என்று அறிவிப்பதாக இருக்கிறது. கடவுளின் சடையில் இருக்கும் எறும்புகள் பூமிக்கு வரும்வரை பேசிக்கொண்டேயிருக்கும். இப்போதும் மீண்டும் அவை சாமியிடம் போக வழிதேடிக் கொண்டுதான் இப்படி வேக வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன என நாகுவும் அவன் தோழி ஆதிலட்சுமியும் சேர்த்து உருவாக்கும் ‘உண்மை’ மிக சுவையானதாக இருக்கின்றது.


பொறுப்பில்லாத அப்பா, வீட்டைப் பார்த்துக்கொள்ளும் அம்மா மற்றும் இரு அக்காக்களுடன் வளரும் அவனுக்கு மிக நெருங்கிய நட்பாக இருப்பது ஆதிலட்சுமி தான். கிராமத்தின் மாயங்களை குழந்தை மனம் கொண்டு இந்த இருவரும் உருவாக்குகிறார்கள். இரு அக்காக்களில் நாகுவுக்கு நெருக்கமாக இருப்பது நீலா தான். அப்பா சண்டையிட்டு வீட்டை விட்டு போனபோது அம்மா மற்றும் பெரிய அக்கா வேணி ஆகியோருக்கு நியாயமான கோபம் இருந்தபோதும் அவரிடம் சென்று நீலா பேச நினைப்பது அன்பினால் மட்டுமே. நாகுவும் அவளுக்காக அதை ஏற்கிறான். அவளது திடீர் மரணம் எல்லா சமன்பாடுகளையும் குலைத்துவிடுகிறது. அதுவே வேம்பலையின் விளையாட்டாக இருக்கிறது.

அதன் பின் அந்தக் குடும்பம் கிட்டத்தட்ட சிதைந்து வேம்பலையில் இருந்து வெளியேறினாலும் வேம்பலையின் கைதொடும் துரத்தில் தான் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சில சமயம் விரும்பி திரும்பி வருகிறார்கள் வருகிறார்கள், சில சமயம் வலுக்கட்டாயமாக.

வேம்பலை கிராமத்தைப் பற்றி இன்னொரு சுவையான நிகழ்வு. வேம்பலைக்கு வழக்கமாக வரும் பரதேசிகள் ஒருமுறை வேம்பலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். பயந்து ஓடுகிறார்கள். பின்னர் தான் தெரிகிறது அது இன்னொரு வேம்பலை என்று தெரிகிறது. இப்போதைய வேம்பலையில் இங்கு அழிந்தவை அங்கு வாழ்கின்றன.

ஒரு நிலத்தில் இருந்து மறைபவை நிஜமாகவே மறைகிறதா. அவை எங்கே வாழ்கின்றன என்ற சிந்தனையை இது அளிக்கிறது. நாம் வாழும் நகரங்களுக்கு உள்ளேயும் இப்படி அழிந்த நகரங்கள் இருப்பதை கவனிக்க முடியும்.

பாத்திரங்கள்:

இந்த நாவலில் வரும் சின்னப் சின்னப் பாத்திரங்களைப் பற்றி கூட, அவர்களுக்கான முழு வாழ்க்கைச் சித்திரத்தை இந்த நாவல் காட்டுகிறது. உதாரணமாக சில பாத்திரங்களைப் பார்க்கலாம்.

நாகுவின் அப்பா – மிகவும் பொறுப்பற்ற தந்தையாக, நம்பி வந்த பக்கீரின் மரணத்துக்கும் காரணமானவராக அறிமுகமாகும் நாகுவின் அப்பா, பின்னர் ராமேஸ்வரத்தில் ஒரு பிச்சைக்காரராக இருந்து இளைஞனான நாகுவால் மீட்கப்படுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் நாகுவின் தாத்தா கோபத்தில் அவரைக் கொல்ல முற்படும்போது தயவு செய்து கொன்றுவிடுங்கள், சாக தைரியம் இல்லாமல் தான் வாழ்கிறேன் என்று முழுத் தோல்வியடைந்த மனிதனான இருக்கிறார். ஆனால் அவரே நாகுவின் மரணத்துக்குப் பின் அவன் மனைவி மல்லிகாவை ஒரு தந்தையைப் போல் பார்த்துக்கொள்கிறார். அகால மரணடைந்த நீலா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு மண்புழுவை கையில் எடுத்து வந்து வீட்டில் இருந்துக்கொம்மா என்று வீட்டில் விடும் இடத்தில் அவர் முழு நிறைவை அடைகிறார்.

குருவன் – திருவிழாவுக்கு தாயுடன் செல்லும்போது போலீசால் அவமானப்படுத்தப்படும் சிறுவனாக இருந்து, பெரும் கொள்ளையனாக மாறி, காயம் பட்டு, பின் தெய்வானையின் காதலில் கனிகிறான் குருவன். தெய்வானை இறந்த பின் அவன் அவள் கையில் இருந்து இவன் கைக்கு ஏறும் தேள் ஒரு அபூர்வ அனுபவம். அவன் மரணத்துடன் விளையாடும் ஆடு புலி ஆட்டம் ஒரு புது அனுபவம்.

ரத்னாவதி – பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளுக்கு நாகு மீது இருப்பது உண்மையான காதல். ஆனால் இருவருமே அதைச் சொல்லிக் கொள்வதில்லை. தன் திருமணம் முடிவான போதும் நாகு ரத்னாவதியைத் தேடுகிறான். குழந்தை பெற்ற பின் அவள் நாகுவைத் தேடி வருகிறாள். நாகுவின் மரணத்துக்குப் பின், இன்னொரு திருமணம் அதுவும் அகாலமாக முடிந்த பின், பழைய வாழ்க்கை என அவளது வாழ்க்கை திசைமாறிச் செல்கிறது. முன்பு அறத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தவள் கடைசியில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்தாலும் தன் வைராக்கியம் தளராமல் இருக்கிறாள். இந்த நாவலில் பல மரணங்கள் வந்து கொண்டேயிருந்தாலும், துல்லியமாக திட்டமிடப்பட்ட மரணம் ரத்னாவதியின் மரணம் மட்டும் தான்.

மனித பாத்திரங்களுக்கு நிகராகவே உயிரற்ற பாத்திரங்களும் இந்த நாவலைக் கொண்டு செல்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குணத்தில் இருக்கும் வெயில், ஆமை, கொள்ளைக்கு அதிசய சக்தி தரும் ஆட்டு நாக்கு, அணையா விளக்கு, வேம்படி, வனத்துடன் காத்திருக்கும் ஊமை மரம், அரவணைக்கும் வேப்ப மரம் எனப் பல சொல்லலாம்.

வேம்பலையின் வெளியாட்கள்:

என்னதான் வேம்பர்கள் இந்த கிராமத்தை அமைத்திருந்தாலும் அங்கு மாற்றங்களைக் கொண்டு வருவதில் வேம்பலையின் வெளியாட்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. கனவில் வந்த ஒரு தெய்வம் இங்கு கண்டடையப்பட்டு வளரும்போது அதை வைத்து தானும் வளரும் காயம்பு கிட்டத்தட்ட இந்த கிராமத்துக்கு வெளியாள் தான். மின்சாரம் முதன்முதலில் வரும்போது அவனே கிராமத்துக்கு மின்சாரம் வர காரணமாக அமைகிறான். ஆனால் அந்த மின்சார வெளிச்சம் அந்த கிராமத்தின் இயல்பான பிசுபிசுத்த இருட்டை வெளியேற்ற, அந்த கிராமத்தினர் அமைதியிழக்கிறார்கள். அடுத்த கோயில் திருவிழாவில் சாமி கோபமாக இருப்பதை உணர்ந்த காயம்பு தானே அந்த விளக்குகளை அடித்து நொறுக்கி சமநிலையை உருவாக்குகிறான். படிப்படியான மாற்றத்தின் ஒரு படிக்கு அவன் காரணமாக அமைந்தாலும் அவனும் அந்தக் கிராமத்துக்காரன் தான் என்ற உணர்வை அளிக்கிறான்.

இரு பெண் குழந்தைகளுடன் அபலையாக வரும் பக்கீரின் மனைவியும் இன்னொரு உதாரணம். உதவி கேட்டுவரும் அவளே பலருக்கும் உதவியாக இருக்கிறாள். அவளே தன் செலவில் கிராமத்துக்கு மணிக்கூண்டு அமைத்துத் தரும் அளவுக்கு அங்கு வேர்பிடித்து முன்னேறுகிறாள்.

கிராமத்தின் வாழ்விலும் நாகுவின் குடும்ப வாழ்விலும் இவளது பங்கு இதே போல் தொடர்கிறது. காயம்புவின் மனைவியின் தம்பிக்கும் நாகுவின் அக்காவான வேணிக்கும் ஒரு சின்னக் காதல் அரும்பு விடுகிறது. அதையும் அவளே கையாள்கிறாள். நீலாவின் மரணத்தின் பின் நிலைகுலைந்து இருக்கும் நிலையில் தெளிவாக முடிவெடுத்து வேணியின் திருமணத்துக்குக் காரணமாக அமைவதும் அந்தப் பக்கீரின் மனைவி தான்.

இந்த அன்னிய பாத்திரங்களும் ஒரு மாய கணத்தில் வேம்பலைக்காரர்களாக மாறிவிடுகிறார்கள்.

இங்கு குருதி என இந்த நாவல் இதை உருவகிக்கிறது என்ற சிந்தனையைத் அளிக்கிறது. மைய பாத்திரமான நாகுவின் மகன், பின்னர் கம்யூனிசம் எல்லாம் படித்த பின் வேம்பலைக்கு திரும்ப வந்தால் அவனே அன்னியனாக இருப்பானோ என்றும் தோன்றுகிறது. இதுவும் தற்செயலல்ல, அவனது அம்மாவான ரத்னாவதி வேறொரு குருதியின் தொடர்ச்சியாக அவனை வளர்க்க முடிவெடுக்கிறாள் என்று வாசிக்கவும் இடம் இருக்கிறது.

இது எந்த நாடுக்கும் பொருத்திப் பார்க்க முடிவதாக இருக்கின்றது. இன்றைய தமிழ்க் கலாச்சாரத்தை உருவாக்கியதில் விஜயநகரப் பேரரசர்கள் உடட்பட பலரின் பங்கும் இருக்கிறது. ஆன்னிபெசண்ட், பெரியார் தொடங்கி இன்றைய ரஜினி வரை பல “வெளியாட்கள்” பண்பாட்டிலும் அரசியலிலும் கலையிலும் உருவாக்கும் பதிவுகள் கவனிக்கத் தக்கவை.

மனிதகுலத்தின் சவால்கள் – மகிழ்ச்சியும், மரணத்தை வெல்வதும்:

வேம்பின் கசப்பும் சுட்டெரிக்கும் வெயிலும் எந்த நேரத்திலும் மரணத்தைத் தரும் கடும் விஷப்பூச்சிகளும் இருக்கும் இந்தக் கிராமத்தை விட்டு விலகினாலும் ஏன் அதன் மக்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார்கள் என்பது ஒரு விடை தெரியா கேள்வியாக இருக்கிறது.

இந்த நாவலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வருகிறது. அந்த தூர கிராமத்துக்கு வித்தியாசமான வெளியாள் ஒருவன் வருகிறான். அவன் தூக்கத்தை ஆராய்ச்சி செய்பவன். முதலில் கிராமத்தினர் அவனைச் சந்தேகப்பட்டாலும் பிறகு அவனது ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனை அன்று தூங்க அனுமதிக்கிறார்கள்.

ஒரு நாள் தூங்கி ஆராய்ச்சி செய்த அவன் அதிர்ச்சிடைகிறான். இந்த ஊரில் பகலை விட இரவு மிக உக்கிரமாக இருக்கிறது, களவு செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது போல என்று சொல்லி அதிர்ச்சியாகி ஊரை விட்டு ஓடுகிறான். அது அவனுக்குத் தான் அதிர்ச்சி, அந்த முடிவை கிராமத்தினர் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கே எது மகிழ்ச்சி என்ற ஒரு கேள்வியை இது எழுப்புகிறது
இந்த நூற்றாண்டு மனிதன் முன் இருக்கும் கேள்வியே அது தானே. ஹோமோடியஸ் என்ற முக்கியமான புத்தகத்தில் யுவால் நோவா ஹராரி, மனிதன் போன காலகட்ட பிரச்சனைகளான பஞ்சம் போர் மற்றும் பெரும் நோய்களை வென்ற மனிதனின் முன் இருக்கும் முக்கிய இரு சவால்கள் மகிழ்ச்சியும் மரணத்தை வெல்வதும் தான் என முன்வைக்கிறார்.

இந்த நாவல் இந்தப் பிரச்சனைகளை இதன் போக்கில் எதிர்கொள்கிறது.

காட்டில் இருக்கும் மிருகங்களை விட பண்ணை மிருகங்கள் பாதுகாப்பானவை. ஆனால் அவை அதில் மகிழ்ச்சியாக இருக்குமா? பிறந்ததில் இருந்து கூண்டில் இருந்து வெளியே செல்ல முடியாத கால்நடை எத்தனை வருடம் வாழ்கிறது என்பது அதன் வெற்றியாகக் கொள்ள முடியுமா?

இந்தப் பார்வையில் உக்கிரமான வேம்பலை அவர்களுக்கு ஒரு மகிழ்சியைத் தருகிறது என்று கொள்ளலாம். வெயில் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் நிழலும் காத்திரமாக இருக்கிறது. கடுமையான கொள்ளையர்கள் இருக்கும் இடத்தில் தான் அதிக அன்பின் வெளிப்பாடும் அமைகின்றது. பக்கிரியின் மனைவி, செல்லையா, மல்லிகா, அவளைப் பார்த்துக் கொள்ளும் நாகுவின் அப்பா என காத்திரமான அன்பின் இடங்கள் பல நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

ரத்னாவதி-நாகு காதலுக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.

நடைமுறையில் பாலியல் சார்ந்ததாக இருந்தாலும் இவர்கள் உறவில் அதைத் தாண்டிய தருணங்கள் வெளிப்படுகின்றன. தனது தோழியின் கனவு தனது குழந்தைக்கு முடியிறக்குதல் என அறிந்து, தனக்காக எதுவும் கேட்காமல் தன் தோழியின் விருப்பத்தை நிறைவேற்ற நாகுவுக்கு ஆணையிடுகிறாள். நாகு நிறைவேற்றுகிறான். அந்த தாய் கை கூப்புகிறாள். ஒவ்வொருவரின் அற உணர்வு மட்டுமல்ல காதலின் உச்சமும் அங்கே வெளிப்படுகிறது.

இந்த நாவலின் வாழ்வில் மரணங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அதைத் தாண்டியும் வாழ்வு சென்று கொண்டேயிருக்கிறது. இன்றைய அறிவியலில் மரணம் என்பதே ஒரு டெக்னிகல் விஷயம் என மூளை மாற்று சிகிச்சை அளவுக்கு பேசப்படுகின்றது. ஆனால் இந்த நாவல் மரணத்தை பல இடங்களில் தன் வழியில் வெல்கிறது.

சாயக்கார சென்னன்மா உடல்குருகி குடுவையில் இட்டபின் அவள் மரணத்தை வெல்கிறாள். திடீர் மரணமடைந்த நீலாவின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து அவளது அப்பா ஒரு மண்புழுவை கையில் எடுக்கிறார். வீட்டில் இருந்துக்கோம்மா என பாசத்துடன் வீட்டுக்கு கொண்டுவந்து விடுகிறார், நீலா மரணத்தை வென்று வாழ்கிறாள். இன்னும் சொல்லப்போனால் வேம்பலையில் மறந்தவை எல்லாம், பரதேசிகள் பார்க்கும் இன்னொரு வேம்பலையில் வாழ்கின்றன, அந்தக் கிராமமே மரணத்தை வெல்கிறது. நாகுவும் கடைசியில் மரணத்தை வெல்கிறான் அவனது மகளான வசந்தா தனது கணவனின் குழந்தைக்க்கு நாகு என்று பெயர் வைத்து வேம்பலைக்கு திரும்புவதுடன் நாவல் நிறைவடைகிறது.

வசந்தா பள்ளியில் படிக்கும்போதே அவளுக்கு ஜெயக்கொடியுடன் உருவாகும் நட்பு வேம்பலையின் அழைப்பாகத் தோன்றுகிறது. தான் மனம் குழம்பியிருக்கும் நிலையில் வெள்ளைப் பறவைகள் வரும் அனுபவம் நாகுவை நேரடியாகப் பார்த்திராக வசந்தாவுக்கும் வருவதும் அவளே வேம்பலையால் தேர்ந்தடுக்கப்பட்டவள் என்று தோன்றுகிறது. நெடுங்குருதியாக தொடர்ந்து வரும் தொடர்பில், நேரடி குருதித் தொடர்பில்லாத குழந்தை நாகு என்று பெயரிடப்பட்டு திரும்ப வேம்பலை கதை ஆரம்பமாவது குருதி என்பதற்கே அர்த்தம் தருவதை கவனிக்க முடிகிறது.

“வேம்பலை விரிந்த உள்ளங்கை ரேகைகள் போல தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானில் இருந்து வேம்பலையில் இறங்கிக் கொண்டிருந்தன’

கடும் வெயிலும் கசப்பும் பல மரணங்களும் தொடரும் இந்த நாவல் நாவல் நிறைவடையும்போது நாகுவின் பார்வையில் பார்க்கும் நமக்கு மிக நிறைவான வாழ்க்கையாகவே தெரிகிறது.

அத்துடன், நாவல் வெளிவந்து பத்து வருடங்களுக்குப் பின்னரான வாசிப்பில், இன்றைய புதிய உலகம் எதிர்கொள்ளும் பல சவால்களையும் இந்த நாவலில் போட்டுப் பார்க்கும்போது இன்னும் புதியதாக இருப்பதும் நிறைவளிக்கிறது.

***

சுரேஷ்பாபு – மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். மனித இன வளர்ச்சி, அதன் வரலாற்றில் வாசிப்பு கொண்டவர். இவற்றில் இன்றைய தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் தாக்கம் குறித்து தொடர்ச்சியாக எழுதியும் உரையாடியும் வருபவர்.வேழவனம் எனும் இணையதளம் மற்றும் Repairkadai என்ற யுடியூப் தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மின்னஞ்சல்: s.sureshbabu@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular