Monday, October 14, 2024
Homesliderவெற்றிடம்

வெற்றிடம்

ஐ.கிருத்திகா.

வெயில் தங்கப்பாளமாய் தரையில் அடர்ந்து கிடந்தபோதே மழையடிக்கத் தொடங்கிவிட்டது. ராதை நடுமுற்றத்தில் ஒரு குவளையை வைத்தாள். ச்சட், ச்சட் சத்தத்தோடு கனமாக விழுந்த துளிகள் பாத்திரத்தை நிறைக்கையில் பாட்டி அறையிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்தாள்.

“வேற வேலையே இல்ல இதுக்கு. சும்மா நசநசன்னுட்டு..”
முகத்தை கடுகாக்கி முணுமுணுத்துவிட்டு தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

வெயிலடித்தால்,
“பிராணனை வாங்குது” என்பாள்.

ராதை முற்றத்திலிறங்கி குவளையை எடுத்துக்கொண்டு சடுதியில் மேலேறினாள். கால்படியளவு குவளைக்குள் முக்கால்வாசி நீர் நிரம்பியிருந்தது. நீரின் குளுமை கையில் சில்லிட்டது. ராதை குவளையை கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

குளுமைத்துளிகள் தளும்பின. கூடல்வாய் நிறைந்து முற்றத்தில் கொட்டியது. மொத்தமாய் கொட்டிய நீரின் வெளியில் பளிங்கு கற்களாய் சில உருண்டன. ராதை குவளையைப் பருகினாள்.

பருகப்பருக தாகம் அடர்ந்து கிளைத்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இன்னொரு கால்படியில் நீர்ம மேகம் நிறைந்திருந்தது.

“மழைத்தண்ணி குடிக்காதே. சளி பிடிச்சிக்கும்.”
பாட்டி அறைக்குள் இருந்தபடியே குரல் கொடுத்தாள்.

“சரி பாட்டி..”

அவள் இரண்டாவது குவளையையும் மொத்தமாக குடித்து முடித்தாள். தொண்டையில் சரிந்த நீர் மார்பு சேலையை நனைத்தது. கூடல்வாயில் வழிந்த நீரை அவள் உள்ளங்கையைக் குழித்து ஏந்தி விளையாடினாள். கைக்குள் கண்ணாடிப்பாளம்.

கொஞ்சம் நீரைப் பிடித்து முகம் கழுவினாள். துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே நின்றிருந்தாள். தூறலில் நனைந்த காற்று சேலைக்குள் சிலுசிலுத்தது. மயிர்க்கால்களில் குளிர் ஏறிற்று.

அன்றொருநாள் குளத்தில் ஒற்றைத் தாமரைப்பூ தனித்து பூத்திருந்ததைக் கண்டது ஞாபகத்துக்கு வந்தது. மலர்ந்த இதழ்களில் சூரிய ஒளியைத் தாங்கி அது தண்ணீருக்குள் வெம்மையடைந்து கிடந்ததாய் ராதை நினைத்துக் கொண்டாள். அவளின் மனதுக்கு அது கொஞ்சம் ஆறுதல் தருவதாயிருந்தது.

இரவின் விளிம்பில் நீலவானம் நின்றிருந்தபோது மணி ஆறாகியிருந்தது.
ராதை பித்தளை பில்டரில் காபிபொடி இட்டு கொதிக்கும் நீரூற்றி டிகாஷன் இறக்கி வைத்தாள். வெண்கல உருளியை அடுப்பிலேற்றி நுரைத்துத் ததும்பும் பாலை ஊற்றினாள்.

இரண்டு தம்ளர்களில் சர்க்கரைப் போட்டாள். சர்க்கரை வைரத்துணுக்குகளாய் மின்னிற்று. அதில் மணக்கும் டிகாஷனைச் சேர்த்தாள். பொங்கிவந்த பாலை தம்ளர்களில் ஊற்றியபோது பாட்டி குளித்துவிட்டு வந்திருந்தாள்.

அவள் கண்களில் காபிக்கான ஆவல் மிதந்தது. அவசரமாய் நரம்போடிய கையால் தன்னுடைய தம்ளரை எடுத்துக் கொண்டாள். ராதை தம்ளரோடு கொல்லைப்புறம் வந்தாள். துணி துவைக்கும் கருங்கல் குளிர்ந்து கிடந்தது.

மகிழமரத்தின் சில பூக்கள் அதில் உதிர்ந்திருந்தன. ராதை பூக்களை ஒதுக்கிவிட்டு கல்லில் அமர்ந்தாள். காதோரப் பொன்முடிகள் கழுத்தில் உரசிய போது மாறனின் தொடுகை ஞாபகம் வந்தது. நினைவுகளைப் புனருத்தாரணம் செய்து கன்னம் சிவந்தவள் காபியை ரசித்துப் பருகினாள்.

“பூப்பறிச்சு தர்றியா ராதை..?”

பாட்டி உள்ளிருந்து கேட்டாள். ஈரம் சொட்டிய வெண் கூந்தல் காய்வதற்குள் பூஜையை முடித்தாக வேண்டும் அவளுக்கு. நிமிடம் தள்ளினாலும் பொறுக்காது. ராதை அடுத்த அரைமணி நேரத்தில் துவைத்து, குளித்து வந்துவிட்டாள்.

ஆரஞ்சு கோளம் மேலெழுந்து அதில் வெயில் பூக்கத் தொடங்கியிருந்தது. கொட்டுக்கூடையில் செம்பருத்தியும், அரளியும், கொஞ்சம் வெண்சங்கும், நீல சங்கும்.. பார்த்ததும் பாட்டிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அன்றைய பூஜை ஒருமணி நேரம் நீடித்தது.

பூஜை முடிந்தபோது பாட்டியின் கூந்தலில் சொட்டிய துளிகள் புடவையை நினைத்திருந்தன. சாமி படங்களில் பளபளத்த கண்ணாடி பிரேமில் சூடச்சுடர் திகுதிகுத்தது. சாம்பிராணி புகை சூழ்ந்திருந்த அறையை சாத்திவிட்டு பாட்டி கேட்டாள்.

“மாறன் பேசினானா..?”

“உம்..”

ராதை ஒற்றை வார்த்தையோடு தட்டெடுத்து வைத்தாள். பேரனுடன் பேசுவதற்கு பாட்டிக்கு வார்த்தைகளைத் தேட வேண்டியிருந்தது.

‘நல்லா சாப்பிடு’, ‘உடம்பை கவனிச்சுக்கோ’ போன்ற வார்த்தைகள் காலாவதியாகிவிட்டன. பேரன் மனைவியிடம் அவனைப் பற்றி விசாரித்து திருப்திப்பட்டுக் கொண்டாள்.

காலை வெயில் முற்றத்தில் இறங்கத் தொடங்கியிருந்தது. சூரியக்கதிர்களின் அடர்த்தியான பரவலில் தூசுகளும், மாசுகளும் தொடர்பில்லாத அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன.

வீடு பெருக்கி, பாத்திரம் கழுவி வேலைக்காரப்பெண் சென்றபின் வீட்டுக்குள் நிலவும் மௌனத்தின் அடர்த்தி கூடிப்போனது. நார்த்த மரத்தின் முட்களை சட்டை செய்யாது கல்லுக்குருவிகள் விளையாடிக் கொண்டிருந்தன. கொல்லையில் துணி உலர்த்த சென்ற ராதை ஓட்டுச்சரிவின் நிழலில் ஒதுங்கி அதை கவனித்தாள்.

அடுப்பு மேடையை அழுந்தத் துடைத்து, அலமாரியில், சமையல் அவசரத்தில் இடம் மாற்றி வைத்த சம்படங்களை சீராக அடுக்கி, வெங்காயக்கூடையில் உலர்ந்து கிடக்கும் சருகுகளை சேகரித்து அப்படி, இப்படி கொஞ்ச நேரத்தை கடத்தியாயிற்று.

குருவிகளின் வெயில் பொழுது அட்டகாசத்தை பார்ப்பதும், செல்போனில் படம்பிடித்து மாறனுக்கு அனுப்புவதும் பொழுதுபோக்கு பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டது.

“சீக்கிரமே தேர்ந்த போட்டோகிராபர் ஆயிடுவேன்னு நினைக்கிறேன் “என்று மாறன் அனுப்பும் பதிலிகளுக்கு அவள் ஸ்மைலியும், ஹார்ட்டும் அனுப்புவாள்.

ஊரின் தெருக்களில் வெயில் மட்டுமே நடமாடும் பகல் பொழுதில் ராதை திண்ணையிலமர்ந்து வேலியோரம் நின்றிருக்கும் கிளேரியா மரத்தைப் பார்த்தவாறிருப்பாள்.

வெயிலின் பகலைவிட மழையின் பகல் சுவாரசியமானதாக அவளுக்குத் தோன்றும். திண்ணையின் தரைகள் வழுவழுப்பானவை. ரெட் ஆக்சைடு பூசப்பட்டவை. அதில் அமர்ந்து ஈரம் தொடும்வரை மழையை ரசிக்க அவளுக்குப் பிடிக்கும். எஃம் ரேடியோவில்
‘அந்திமழை பொழிகிறது’ கட்டாயம் போடுவார்கள். ராதையும் சேர்ந்து பாடுவாள்.

மருதாணிச்செடி முடிவெட்டாத குழந்தையின் தலை போல பம்மலாக அடர்ந்து கிடந்தது.

“மருதாணி போட்டுக்க பிடிக்கும்னா செண்பகத்துகிட்ட சொல்லு. பறிச்சு மையா அரைச்சுத் தருவா. போட்ட ஒருமணி நேரத்துல செவப்பு அப்பிக்கும்.”

பாட்டி சொன்னது போல விரல்கள் தீப்பாளங்களாய்ச் சிவந்து கிடந்தன. உள்ளங்கைகள் மாணிக்கப் பதக்கங்களாக மின்னின. ராதை கைகளை போட்டோ எடுத்து மாறனுக்கு அனுப்பினாள்.

ஆறு மணிக்கு பெரியகோவிலில் சாயரட்சைக்கான மணி அடிக்கும். காற்றில் இழைந்து வரும் மணியோசை கேட்டதும் பாட்டி அறை உள்ளிருந்து குரல் கொடுப்பாள்.

“கொல்லைக் கதவு தாழ் போடு ராதை.. “

ராதை கதவுகளைச் சேர்த்து மூடும்பொழுது இடுக்கின் வழியே மெல்லிழையாய் காற்று வீசும். சில நிமிடங்கள் நின்று காற்றின் தழுவலை மாறனின் ஸ்பரிசம் போல் எண்ணிச் சுகித்திருப்பாள்.

நிலவின் பொழிச்சலில் நனைந்து கிடந்த தென்னை ஓலைகள் முற்றத்தில் நிழலுருவமாய் விழுந்து கிடந்தன. வரிவரியான ஓலைகளிலிருந்து ஈர்க்குகளைப் பிரித்தெடுக்க பாட்டி சொல்லித் தந்திருந்தாள். ஒரு துடைப்பத்திற்கு தேவையான அளவு ஈர்க்குச்சிகளை ராதை சேகரித்து விட்டாள்.

நிலவு முழு வட்டமாய் தகதகத்தது. சில மேகங்கள் அதை உரசி விலகின. நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்திருந்தன. மதியம் கிளாசிக் மூவி வரிசையில் சபாபதி படம் ஒளிபரப்பினார்கள்.

அதன் காட்சிகள் மனத்திரையில் ஓட ராதை தன்னை மறந்து சிரித்தபடி நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள். பாட்டி கந்த சஷ்டி கவசத்தை முடித்துக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“இன்னைக்கு என்னமோ மதியம் சாப்பிட்டதே செரிக்கலை. எனக்கு ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுத்துடு. அது போதும்” சொல்லிவிட்டு திரும்பியவள் நின்று,

“நேரத்தோட சாப்பிட்டு படுத்துக்கோ” என்றாள். ராதையின் தலை தன்னிச்சையாக அசைந்தது.

ராதை பூனைக்குட்டித் தலையணையை இறுக அணைத்துக் கொண்டாள். மாறன் அரைமணி நேரம் அவளை அலைபேசி வழியே கொஞ்சிவிட்டு அப்போதுதான் தொடர்பை துண்டித்திருந்தான். ராதை எழுந்து விடிவிளக்கை ஒளிரவிட்டு விளக்கணைத்தாள்.

கை இருட்டில் பூனைக்குட்டித் தலையணையைத் துழாவியது. எழுந்த வேகத்தில் அது கட்டிலிலிருந்து நழுவி விழுந்திருந்தது. தட்டுத்தடுமாறி அதைக் கைப்பற்றி அவள் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

தூக்கம் ஒரு பந்து போல அவளிடமிருந்து நழுவியோடியது. அதை எட்டிப்பிடிக்க முயன்று அவள் தோற்றாள். வெகுவாக முயற்சித்து கண்கள் மூடினால் விழிமணிகள் உருண்டு கலகம் செய்தன. பூனைக்குட்டித் தலையணையை அவள் பற்றுக்கோடாய் பற்றிக்கொண்டு வெகுபிரயாசையுடன் உறங்க முயற்சித்தாள்.

பூனைக்குட்டித் தலையணை அவள் மார்பில் பொதிந்து மாறனின் ஸ்பரிசத்தை ஞாபகமூட்டியது. அவன் விட்டுப் பிரிந்துசென்று ஆறு மாதங்களிருக்கும். கல்யாண மருதாணியின் சிவப்பு கலையும்முன்பே விடுமுறை முடிந்து போயிருந்தது. இமைகளில் நீர்ச்சரங்கள் கோர்த்துக்கொண்டு நின்றவளை மாறன் கன்னம் தட்டி விடைபெற்றான்.
வேலை வடநாட்டின் கடைக்கோடி ஊரில். புது இடத்தில் காலூன்றிக் கொண்டானபிறகு பாட்டியையும், அவளையும் அழைத்துக் கொள்வதாக கூறியிருந்தான். அவன் கூறியிருந்ததன் பேரில் அவளுக்கு ஆசுவாசம் ஏற்பட்டிருந்தது.

இடையில் ஒருமுறை அவன் வருவதாயிருந்தது. எதிர்பார்ப்பு நாட்கள் ஏகாந்தத்தைப் பூசிக்கொண்டன. ஒவ்வொருநாளும் அனிச்சம் போலும், செங்காந்தள் போலும், குவளை மலர் போலும் அவ்வளவு மென்மையாக எப்படி மலருமென்று ராதைக்கே ஆச்சர்யமாயிருந்தது.

“மாறனுக்குப் பயத்த உருண்டை ரொம்பப் பிடிக்கும். சாயந்தரம் செஞ்சு வச்சிடலாம்” என்றாள் பாட்டி. ராதை குஷியாக தலையாட்டினாள்.

“வறுத்த பயத்தமாவுல பொடிச்ச சர்க்கரை சேர்த்து நெய்யுருக்கி ஊத்தி உடைச்ச முந்திரி கலந்து சூட்டோட பிடிக்கணும்..”

பாட்டி பக்குவம் சொன்னாள். ராதை அன்பையும், காதலையும் கலந்து பிடித்தாள். பாட்டி சொல்லவில்லை. அவளாக சேர்த்துக் கொண்டாள். நாட்கள் நெருங்க, நெருங்க ராதைக்கு இருக்கத் தரிக்கவில்லை.

பூசினாற்போன்ற தன் உடலைக் கண்டு அவன் அதிசயமாகக்கூடும் என்ற எண்ணம் எழுந்த வினாடி வயிறு குழைந்தது. களிம்பேறாத கால்கொலுசை அவள் அவிழ்த்து பூந்திக்கொட்டையில் ஊறவைத்து தேய்த்துக்கழுவி அணிந்து கொண்டாள். மஞ்சள் இழைத்த தாலிச்சரடு சரக்கொன்றை மலர்போல மினுமினுத்தது. குளியலறையில் கிழங்குமஞ்சள் கரைந்து கிடந்தது. பாட்டிக்கும் பேரனைக் காணாது கண்கள் பூத்திருந்தன. ஒற்றையாளாக அவனை வளர்த்தவள்.

மாறன் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், கொடுக்கப்பட்டிருந்த விடுமுறை மேலதிகாரியின் குறுக்கீட்டால் நிர்தாட்சண்யமாக நிராகரிக்கப்பட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்தான்.

“ரொம்ப ஏமாற்றமா இருக்கு..”

மாறனின் குரல் அலைபேசியில் மங்கி ஒலித்தது. ராதை பாட்டிக்குத் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பாட்டி எதுவும் சொல்லவில்லை.

பதினோரு மணிக்கு ஊரைக் கடக்கும் விரைவு ரயில் காற்றைக் கிழித்துப் போனது மெலிதான சத்தமாகக் கேட்டது. கூடத்தில் இருந்த கடிகாரம் பதினொன்றடித்து ஓய்ந்தது. ராதை புரண்டு படுத்தாள்.

“ராத்திரி ஒழுங்கா தூங்கறியா..?”

பாட்டி எப்படிக் கண்டுபிடித்தாளென்று தெரியவில்லை. அவளிடம் புருவம் நெரித்து, தலையசைத்து,

“நல்லாத் தூங்கறேனே பாட்டி” என்று ராதை இயல்பாகச் சொல்லி வைத்தாள்.

மதியம் தூணில் சாய்ந்தமர்ந்தபடியே கண்ணயரும் போது பாட்டி அந்தப்பக்கமாக வந்திருப்பாளோ என்னவோ. இரவு விழிப்புக்குப் பயந்தே ராதை மதியம் தலை சாய்ப்பதில்லை. கால்நீட்டி தூணில் சாய்ந்தபடி டீவியை வெறித்திருப்பாள். எப்போதாவது தன்னையும் மீறி கண்கள் சொருகிவிடும்.

இரவு குளிர்ந்து கிடந்தது. மார்கழியின் இரவுகள் ஆயிரம் ஊசிகள் வைத்திருந்தன போலும். உடம்பெங்கும் நறுக், நறுக்கென்று குத்தின.

“ஓட்டு வழியா பனி இறங்கும். விஷப்பனி.. ஸ்வெட்டர் வச்சிருந்தா போட்டுக்கோ” என்றாள் பாட்டி.

முழுக்கை ஸ்வெட்டர் அணிந்து, கால்களைக் குறுக்கி தலையணையை இறுக அணைத்தபடி ராதை படுத்துக் கிடந்தாள்.

இரவுப்பனியை விட அதிகாலைப்பனிக்கு அதிக வீரியமிருப்பதாக அவளுக்குப் பட்டது. செடிகளின் இலைகள் நீரைச் சொட்டின. பூக்களில் கூடுதல் மினுமினுப்பு. கிணற்றுச் சகடையிலும் நீர்முத்துகள்.

“பேருக்கு நாலு பூ பறிச்சிட்டு வா, போதும்..”
பாட்டிக்கு அவளின் வெடவெடப்பு புரிந்தது.

“மார்கழி ரொம்ப குளிருது” என்று ராதை மாறனிடம் அங்கலாய்த்தாள்.

இடுப்பை வருடும் பனிக்கு உன் கையின் சாயலிருப்பதாகச் சொல்ல அவளுக்கு வெட்கமாக இருந்தது.

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ராதை கொல்லை வெயிலில் குளிர் காய்ந்தபடி நின்றிருந்தாள். பக்கத்துக் கொல்லையில் ஆட்கள் வேலைசெய்து கொண்டிருந்தனர். விறகுகள் படீர், படீர் சத்தத்தோடு பிளக்கப்பட்டன.

செடிகள் கழிக்கப்பட்டு வேலிக்கு அந்தப்பக்கம் பளீரென்று தெரிந்தது. வெயில் உடம்பில் ஊர்ந்தபோது ராதைக்கு இதமாயிருந்தது. இடுப்பில் ஊர்ந்து, முதுகில் படர்ந்து, மார்பில் குவிந்து, கைகளைத் தழுவி வெயில் ஆலிங்கனம் செய்தது.

கால் வலித்தபோது ராதை துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டாள். காலை உணவுக்கும், மதிய சமையலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் கொல்லையே கதியென்று கிடந்தாள்.

சாக்கடையோரம் ஊரும் ரயில் பூச்சிகளையும், குட்டைத் தென்னை மரங்களில் காய்த்திருந்த குடுக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பாவம், குளிர் தாங்காம ரொம்ப சிரமப்படறா..”
பாட்டி அடிக்கடி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

ராதை வெகுநாட்களுக்குப் பிறகு திண்ணையில் அமர்ந்திருந்தாள். மஞ்சள் வெயில் தெருவில் விரிந்து படர்ந்திருந்தது. குளிருடனான வெயில் காற்றைத் தழுவியதில் காற்று வெதுவெதுப்பாய் வீசியது.

“பாப்பா, நல்லா இருக்கீங்களா..?”

ஆடுகளோட்டிச் சென்ற பூவரசி கேட்டுவிட்டுப் போனாள். ராதை தலையசைத்து விட்டு நழுவிச்சரிந்த முந்தானையை சரிசெய்து கொண்டாள். ரெட் ஆக்சைட் தரையில் கட்டங்கள் விரிந்து கிடந்தன. மொத்தம் ஒன்பது கட்டங்கள்.

ராதை விரல் நீட்டி கட்டங்களை எண்ணினாள். ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தும் எண்ணுவது சுவாரசியமானதாய் இருந்தது.

முதலில் மூன்று, ஆறு, ஒன்பது என்று கிடைமட்ட வாக்கில் எண்ணினாள். பின்பு செங்குத்துவாக்கில். எதிர்த்திண்ணையில் இருந்த ஒன்பது கட்டங்களையும் இப்போது சேர்த்து எண்ணினாள். பதினெட்டு கட்டங்களை மும்மூன்று கட்டங்களாக வகுத்தாள். ஆறு சரியானதா என்று கட்டங்களை எண்ணிப்பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாள். கால்களைச் சம்மணமிட்டு வெகு தீவிரமாக கட்டங்களிலிருந்த கோடுகளை விரல் நீட்டி எண்ணத் துவங்கினாள். கொலுசு காலோடு அழுந்தி வலித்தபோது அதை தளர்த்திவிட்டுக் கொண்டாள்.

கட்டங்களில் கோடுகள் அதிகமிருந்தன. இரண்டுமுறை எண்ணிப் பார்த்து விடை சரியாக வந்ததில் கைகளை சேர்த்து குலுக்கிக் கொண்டாள். வெயிலின் நிறம் மங்கத் தொடங்கிற்று. வழக்கமாக ஐந்து மணிக்கு கூவும் குயில் தன் கடமை போல கூவியது.

உள்ளிருந்து மல்லிகையின் வாசம் காற்றில் மிதந்து வந்தது. பூக்காரனிடம் வாங்கிய பூவை பாட்டி சாமிப்படங்களுக்குச் சாற்றிக் கொண்டிருந்தாள். ராதை மெல்லக் கையூன்றி எழுந்தாள். வெகுநேரம் அமர்ந்திருந்ததில் வலது கால் மரத்துப் போயிருந்தது. லேசாய் உதறி சரிசெய்து கொண்டவள் தெருவிளக்கைப் போட்டுவிட்டு உள்ளே போனாள்.


ஐ.கிருத்திகா – தொடர்புக்கு – kiruthigaiyyappan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular