Sunday, September 24, 2023
Homesliderவெண்ணிலா

வெண்ணிலா

சர்மிலா வினோதினி

அம்மாவ பாக்கோணும். அவோக்குப் பக்கத்தில இருக்கோணும். அம்மாளாச்சி என்ர அம்மாட்ட கூட்டீற்றுப் போங்கோ.

இவைதான் வெண்ணிலாவின் பிரார்த்தனைகளாய் இருந்தன. இன்றைக்கு மட்டுமல்ல நேற்று, முந்தநாள், அதற்கு முதல்நாள் எல்லாமே இவற்றைத்தான் அவள் திரும்பத் திரும்ப சாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். மனிதர்கள் தங்களுக்கு ஆக வேண்டியவைகள் குறித்த விண்ணப்பங்களை மனிதர்களைத் தாண்டி தெய்வம் என்கின்ற நம்பிக்கையிடத்தில் தானே கொட்டித் தீர்க்கிறார்கள்.

வெண்ணிலாவின் பிரார்த்தனைகள் அம்மனின் செவிகளைச் சென்றடைந்ததோ இல்லையோ அந்தக் கோயிலின் பூசாரிக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது.

என்ன குழந்தை அம்மனிட்ட சொல்லீற்றீங்களோ, அம்மாட்ட போகோணும் எண்டு?

ஓம் சொல்லீற்றன்.

அப்பச்சரி, இதில வந்து நந்தியின்ர காதிலயும் சொல்லுங்கோ. நந்தியும் அம்மனிட்டச் சொல்லுவார்.

சரி, சொல்லீற்றுப்போறன்.

குழந்தைக்கேயுரிய தொனியில் வெண்ணிலா விழிகளை விரித்துப் பதில் சொல்லியபடி திரும்பவும் பாடசாலையின் முதல் மணியோசை கேட்கவும் சரியாக இருந்தது.

சரி பூசாரி, நேரம் போயிற்றுது நான் நாளைக்கு வந்து சொல்றன்.

அன்றைக்கு அவசர அவசரமாகச் சொல்லியபடி சென்ற வெண்ணிலாவா இது?  

பூசாரி சண்முகத்தார் ஒரு கணம் நின்று நிதானித்தார்.

அவர் வெண்ணிலாவைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் சண்முகத்தாரைப்பற்றி நானிங்கு சொல்லியாக வேண்டும்.

சண்முகத்தார்தான் அந்த ஊரின் அம்மன் கோயில் பூசாரி. பரம்பரை பரம்பரையாக அவரது அப்பா, அப்பப்பா என்று இரண்டு மூன்று தலைமுறைகளாக அம்மனுக்கு தீபம் காட்டுவது அவர்களது குடும்பம்தான்.

சண்முகத்தார் அம்மனுக்குத் தீபம் காட்ட ஆயத்தமாகுவதே ஒரு கலை போலத்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து வளவடிக் கிணற்றடியில் குளிர்ந்திருக்கும் நீரை அள்ளி தலையில் ஊற்றி நீராடுவார். தலையில் நெட்டென நிமிர்ந்து நிற்கின்ற நான்கைந்து முடிகளிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட இடுப்பில் கட்டியிருக்கும் வெள்ளை வேட்டியோடு கோயிலுக்குப் புறப்படுவார்.

சிற்றாறு ஒன்று உள்ளிறங்கி விட்டதைப்போல கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி ஊற்றி மண்டபங்களை எல்லாம் கழுவிச் சுத்தம் செய்வார். பின்னர் வேலிக்கரையோரமாகப் பூத்துக்கிடக்கின்ற செம்பருத்தி, நந்தியாவட்டை, மயில்கொன்றையென நான்கைந்து வகையான பூக்களைப் பறித்து சேகரித்து வைப்பார். பலவண்ண நிறங்களில் பூத்திருக்கும் அந்தப் பூக்களோடு செம்பருத்தி இலைகளும் சேர்ந்திருக்கும்.

என்ன சண்முகத்தார் இலைய பறிக்கிறியள், இலை பூவாகுமே?

அதிகாலையில் கோயில் கிணற்றடிக்கு நீரள்ள வருகின்ற யாராவது இந்தக் கேள்வியை  கேட்கத் தவறமாட்டார்கள்.

பூவும், பிஞ்சும், காயும், பழமும் ஒண்டுதான். ஆத்மார்த்தமா மனசில அன்போட எதச் செய்யிறமோ அது அம்மனிட்ட போய்சேரும். அன்புதானே கடவுள், அன்புதானே சாமி.

சித்தாந்தமும் வேதாந்தமும் ஒன்றுசேரப் பேசி முடிப்பார் சண்முகத்தார்.

அதற்கிடையில் மடப்பள்ளி அடுப்பில் வைத்திருந்த வெண்பொங்கல் பதமாக அவிந்திருக்கும். வெண்பொங்கல் என்றால் பால், பயறு, சீனி எல்லாம் போட்டுச் செய்த பொங்கல் அல்ல அது. வயலில் விளைந்த பச்சை அரிசியும் குளிர்ந்திருந்த கிணற்று நீரும் மட்டும் கலந்து பொங்கிய வெண்பொங்கல்தான் அது.

தங்களுடைய வயலில் விளைந்த நெல்லிலிருந்து குற்றிய அரிசியை ஊர்க்காரர்கள் மாதப்பூசை அடிப்டையிலும், வேண்டுதல்களுக்காகவும் அம்மனிற்கென கொண்டுவந்து கொடுப்பார்கள்.

அம்மாளாச்சி, என்ர பிள்ளைக்கு வலிப்பு சுகமாகோணும்.

அம்மாளாச்சி, வாற வருசம் சோதினையில என்ர மகள் நல்லா சித்தியடையோணும்…

இப்படியாக ஊர்க்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுலுக்கு காணிக்கையாக பச்சை அரிசியும் விளக்கெண்ணையும் கற்பூரமும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அம்மாளாச்சி எங்கள கைவிடமாட்டா.

இது அந்த ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஆலயத்தில் அரிசிக்கு குறை வைக்கவில்லை. அதனால் ஊரில் எந்தச் சிறுவர்களும் பசித்திருக்கவில்லை.

கோயிலுக்கென ஊரார் கொடுக்கின்ற நேர்த்திக் கற்பூரங்களே அம்மனுக்கு தீபம் எரியப் போதுமானதாக இருந்தது. ஊரின் துன்பங்கள் எல்லாம் எரிந்து உருகுவதைப் போல மிளாசி எரிகின்ற தீபத்தில் அம்மாளாச்சி, அம்மாளாச்சி என்று கசிந்து உருகுவார் சண்முகத்தார்.

அவருக்குத் தெரிந்ததெல்லாம் சிறிய வயதில் அவரது தந்தை சொல்லிக் கொடுத்த தேவார, திருவாசகப் பதிகங்களும், திருக்குறளும்தான். தனக்குத் தெரிந்த மெட்டில் தேவாரப்பதிகங்களை உரக்கப் பாடியபடி கற்பூரதீபம் காட்டும் அவரின் பூசை ஊர்ச்சனங்களுக்குப் போதுமானதாக இருந்தது.

சனங்கள் கேட்கின்ற பிரார்த்தனைகளை அம்மனிடம் சொல்லி,

அம்மா தாயே! இந்தப்பிள்ளையை சுகம் ஆக்கிவிடு, நீதான் கருணை காட்டோணும் என்று பிரார்த்தித்தபடி சேகரித்திருந்த பூக்களை அள்ளி அம்மனின் திருவுருவத்தில் மழையெனச் சொரிந்து வணங்கும் தோரணையில் ஊர் மக்கள் திருப்தி அடைந்தார்கள்.

சங்கும் சல்லாரியும் ஒலிக்க நிறைவுபெறும் அந்தப்பூசையில் ஊரின் ஒவ்வொரு விடியலும் சில்லென விடிந்தது.

பூசை முடிந்ததும் அம்மனுக்குப் படைத்த வெண் பொங்கலை அன்று ஒடித்த தேக்கம்  இலையில் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு ஒரு இலைப்பொங்கலை மட்டும் வைத்துக்கொண்டு காத்துக் கொண்டிருப்பார்.

விடிந்து சில நாழிகைகள் கடந்த நிலையில் காலை ஏழு மணிக்கு முன்பாக முடிந்து விடும் இந்தப்பூசை வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் பின்பு அம்மனிடம் தன் பிரார்த்தனைகளைச் சொல்வதற்காகவும் வெண்பொங்கல்  உண்பதற்காகவும் வந்து சேருவாள் வெண்ணிலா.

வெண்ணிலா, படித்துக் கொண்டிருந்த பாடசாலைக்கு அம்மன் கோயிலைக் கடந்துதான் செல்லவேண்டும். வெள்ளைச்சீருடை அணிந்து, தலைவாரி அவளது பெரியம்மா பின்னிவிடும் இரட்டைச்சடையுடன் வந்து நிற்கும் வெண்ணிலாவிற்கு மட்டும் விசேட சலுகை ஒன்றை வழங்கியிருந்தார் சண்முகத்தார்.

‘வா குழந்தை’,

கால கழுவீற்றுப்போய் அதில இருக்கிற பூவ எடுத்து நந்தியின்ர தலையில வைச்சிற்று, அதின்ர காதில உன்ர வேண்டுகோளச் சொல்லு.

உன்ர பிரார்த்தன நிறைவேறும்,  நீயும் நல்லாப் படிப்பாய்.

சண்முகத்தாரின் இந்தச் சலுகைகளால் மகிழ்ச்சியடையும் வெண்ணிலாவிற்கு தேக்கம் இலையில் எடுத்து வைத்திருந்த வெண் பொங்கலையும் உண்ணக் கொடுப்பார்.

நந்தியாவட்டைப் பூக்களின் நறுமணம் வீசும் அந்தப் பொங்கலின் வாசத்தை நுகர்ந்தபடி வெண்ணிலா சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து அவளை அனுப்பிய பின்பே நடையைச் சாத்திவிட்டுப் புறப்படுவார் சண்முகத்தார்.

நெற்றியில் பட்டையாக பூசியிருக்கும் திருநீறு துவட்டாத தலையிலிருந்து சொட்டுகின்ற நீரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிவிட ஆரோக்கிய தேகியாகவும், ஊரின் மூத்த குடிமகனாகவும் வாழும் வரம் சண்முகத்தாருக்குக் கிட்டியது.

அவர், அப்படி இருப்பதில் ஒன்றும் ஆட்சரியம் இல்லை தான். ஆனால் வெண்ணிலா..

அன்றைக்குக் குழந்தையாகப் பார்த்த சிறுமியை இருபது வருடங்களின் பின்னர் இதே அம்மன் கோயிலில் எதிர்பாராமல் காண நேர்ந்ததில் சண்முகத்தார் வாயடைத்துப் போயிருந்தார்.

சனங்கள் கும்பிடுவதற்காக நீட்டிய கற்பூர தீபத்தின் ஒளியில் வெண்ணிலாவின் முகம் சூரியனைப்போலத் தெரிந்தது அவருக்கு.

வெண்ணிலா..

குழந்தை..

ஒரு குழந்தையின் தாயாகியிருந்த அவளை குழந்தை என்றே சண்முகத்தாருக்கு அழைக்கத் தோன்றியது.

குழந்தை என்று விழித்தவர், கற்பூர தீபத்தை அவளுக்கும் வணங்கக் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக உள்ளே சென்று அம்மனின் பாதத்திலிருந்த பூக்களை அள்ளியெடுத்து வந்து கைநிறையக் கொடுத்தார்.

அத்தோடு நிற்காமல் உடனே ஓடிச்சென்று, தேக்கம் இலையில் வெண் பொங்கலையும் எடுத்துவந்தார்.

இம்முறை அவரது கையில் இரண்டு தேக்கம் இலைகளில் பொங்கல் இருந்தது. ஒன்றை வெண்ணிலாவிடம் கொடுத்தவர், மற்றையதை அருகில் நின்ற குழந்தையிடமும் கொடுத்துவிட்டு,

சந்தோசம் அம்மா உன்ன பாத்தது.

எத்தின வருசம் ஆகீற்று..

அவர் பெருமூச்சொன்றை உள்ளிளுத்து வெளியிட்டார்.

அம்மாவ பாத்திற்ரியா?

பாத்திருப்பாய்தானே, நான் மடையன்,  இப்பிடிக் கேக்கிறன்.

கேள்வியைக் கேட்டு,  தனக்குத் தானே பதிலையும் சொல்லிக் கொண்டார்.

ஓம் பாத்திற்றன். வெண்ணிலா பதில் சொல்லியபடி பொங்கலில் வீசிய நந்தியாவட்டைப் பூக்களின் வாசத்தை நுகர்ந்தாள். அந்த வாசமும் சண்முகத்தாரின் கேள்விகளும் காலச்சக்கரத்தில் அவளை பின்நோக்கி அழைத்துச் சென்றது.

பள்ளிச்சீருடையில் பாடசாலைக்குச் செல்வதற்கு முன்பாக அவள் இந்தக் கோயிலிற்கு வந்து சென்ற காலமது. யாழ்ப்பாணமும் வன்னி நிலமும் கடலால் மட்டுமல்ல, ஆட்சியாலும் பிளவுபட்டிருந்த காலம். தரைவழிப் பிரயாணங்கள் முற்றிலுமாகத் தடைப்பட்டு கிளாலிக் கடல் மார்க்கமான பயணங்களே அப்போது சாத்தியமாகியிருந்தன. பலாலியும் ஆனையிறவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எறிகணைகளை தம்முடைய மடியில் சுமந்தபடி எந்த நேரத்திலும் உயிர் குடிப்பதற்குத் தயாராகி இருந்தன.

யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திலும், வன்னி நிலப்பரப்பில் இருப்பவர்கள் வன்னியிலும்தான் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருந்தது. சதாரண பயணங்கள் தவிர்க்கப்பட்டு அத்தியாவசியமான பயணங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. சாவகச்சேரி வழியாக பளைக்குச் சென்று அங்கு தங்கியிருந்து பணய அனுமதியைப் பெற்ற பின்னர் படகுச்சேவை மூலம் கிளாலிக் கடலைக் கடந்து பூநகரியின் நல்லூர்ப் பிரதேசத்தை சென்றடையலாம். அங்கிருந்து வன்னியின் ஏனைய பிரதேசங்களுக்குப் பயணப்படலாம்.

சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் கடலால் பயணப்பட வேண்டிய அந்தப் பயணம் கிளாலிப்பயணம் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது. கிளாலிக் கடற்கரையில் தென்னைமர நிழலில் பயணத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் கிபிர் விமானங்களின் குண்டு மழையில் உடல் சிதறிப் பலியாகியவர்கள் பலர். வானத்தில் இருந்து கவிழ்த்துக் கொட்டப்படும் கற்களைப் போல வீசப்படும் குண்டுகளின் சன்னங்கள் கிழித்த பயணிகளின் உயிர் அவர்கள் காத்திருந்த தென்னை மரங்களின் மேலிருந்த கிளிகளென வான்வெளியில் பறந்த பின்னர், குய்யோ முறையோ என்று அழுது மாயும் சனங்களை அமைதிப்படுத்தி, உயிரற்ற உடல்களை அப்புறப்படுத்திய பின்னர் எஞ்சியிருக்கின்ற பயணிகளோடு புறப்படும் துயர் சுமந்த கிளாலிப்படகு.

திறந்த படகில் சுமார் இருபது இருபத்தியிரண்டு பயணிகளோடு நல்லூரின் கரையை நோக்கிப்போகும் அந்தப்படகின் இரு மருங்கிலும் காவலுக்கு வருவார்கள் காவலர்கள். நடுக்கடலில் திடீரெனத் தோன்றும் பிணந்தின்னிப் படகுகளிலிருந்தும் வான்கலங்களிலிருந்தும் மக்களைக் காத்தன அவர்களது காவற்படகுகள்.

இத்தனை சவால்களையும் தாண்டி, உயிர் பயத்தைச் சுமந்தபடி சாவகச்சேரியிலிருக்கும் வெண்ணிலாவை பார்ப்பதற்கென வருடத்தில் ஒரிரு முறை வந்துசெல்லும் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு போய்விட வேண்டும்போல இருக்கும் அவளுக்கு.

அம்மா வந்து நிற்கின்ற நாட்கள் இவளது குழந்தை உலகில் குயில்கள் கூவும், மரங்கள் குளிர்ந்த காற்றை அள்ளி வீசும். ஏன்?.. பூக்கள் கூட புதிதாகப் புன்னகைப்பதாகத் தோன்றும் இவளுக்கு.

அம்மா வந்து நிற்கும் நாட்களில் இவளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

அம்மா குளிக்கத் தண்ணி அள்ளித் தந்தவா,

அம்மா குளிப்பாட்டி விட்டவா,

அம்மாதான் தலையும் இழுத்து விட்டவா,

நான் வீட்ட போக பின்னேரம் அம்மா நிப்பன் எண்டு சொன்னவா..

வகுப்பில் ஆசிரியர் சொல்லும் பாடங்களை விட வெண்ணிலாவின் குட்டிக் கதைகளே வகுப்பறையை நிறைத்து நிற்கும். 

சுமார் ஒரு வாரம் முடிந்து அம்மா புறப்படும் நாளில் வெண்ணிலாவிற்கு காலையுணவு பிடிக்காமற்போகும், பாடசாலையிருக்கின்ற எல்லோரும் வேண்டப்படாத முகங்களாகத் தெரிவர். கண்களில் கண்ணீர் முட்ட நிற்கும் இவளின் மனமறிந்த வகுப்பாசிரியரும்  சண்முகத்தாரைப் போல சலுகைகளைக் கொடுத்து விடுவார். 

பாடசாலைக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் வீட்டிற்கு ஓடிவந்து அம்மா புறப்பட்டுப்போகும் பேருந்து கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டு நிற்கும் அவளின் பார்வையை கண்ணீர் மறைத்து விடும். அவளது கண்களின் சிறிய விழித்திரை அம்மா சென்ற பேருந்தை மட்டுமல்ல அம்மா உடுத்தியிருந்த சேலை, அம்மா தண்ணீர் குடித்த செம்பு, அம்மா பயன்படுத்திய சவர்க்காரம், அம்மா நித்திரை கொண்ட இடம் என்று எல்லாவற்றையும் நினைவுக் காட்சிகளாய் பத்திரப்படுத்திக் கொள்ளும். அடுத்த ஆறு மாதமோ, ஏழு மாதமோ கழித்து அம்மா வரும்வரை பற்றிப்பிடித்துக் கொள்ள ஏதோ ஒன்று அவளிடம் மிக நெருக்கமாய் இருந்தது.  அந்த நினைவுத் தடங்கள் அவளோடு காலையில் எழுந்தன, பள்ளிக்கூடம் சென்றன, மாலையில் வீட்டிற்கு  வந்தன, இரவு உணவை உண்டன, உறங்கின   மொத்தத்தில் அவளோடே பயணித்தன.

யார் சிரித்தாலென்ன? யார் அழுதாலென்ன? இரவுகள் முடிந்து பகல்கள் நீண்டன, பின்னர் அந்தப்பகல்கள் கழிந்து இரவுகள் நீண்டன, இப்படியே காலம் தன்னை உருட்டி உருட்டி ஆண்டுகள் பல ஓடி மறைந்தன.

வடக்கின் பெருந்துயரென யாழ்ப்பாண இடப்பெயர்வும் நிகழ்ந்து பலாலியிலிருந்து ஆனையிறவு வரையான பகுதிகள் சமாதானத்திற்கான யுத்தம் என்ற பெயரில் அரச படைகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. 

இப்போது வெண்ணிலாவின் அம்மா அவளைப் பார்க்க வருவதாக இருந்தால் திருகோணமலைக்குச் சென்று நாட்கணக்கான பயணங்களைக் கண்டு, காத்திருந்து, காங்கேசன்துறைக்கு கப்பல் மூலம் வந்திறங்கித்தான் யாழ்ப்பாணத்திற்கு வந்துசேர வேண்டும்.

அம்மா வராமலேயே போனாள், அம்மாவிடமிருந்து கடிதம் மட்டும் வந்து சேர்ந்தது. 

இப்படி ஒரு படிப்புத்தேவையா?

பேசாம அம்மாவோட போய் இருக்கிறத விட்டிற்று சா…

வெண்ணிலா தன்னைத்தானே நொந்துகொண்டிருக்க, காலம் நத்தையென வருடங்களைக் கடத்திக்கொண்டிருந்த ஒருநாளின் பின்மாலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த ஆறு மணிக்கு முன்னராகவே ஊர் அடங்கத் தொடங்கியது.

பின்மாலை வானத்தில் வழமைக்கு மாறான பரபரப்பொன்று தொற்றிக் கொண்டது. அதர்வவேதத்தை நன்கு கற்றுத் தெளிந்த சூனியக்காரி ஒருத்தி அள்ளிப்பூசிய கரிய மையென இருண்டிருந்த வானத்தை எட்டிப் பார்த்தன பரா லைற்றின் வெளிச்சங்கள். எந்தத் திசையிலிருந்து வெளிச்சம் வருகின்றதென்று அறிய முடியாத அளவிற்கு வானம் ஒளியைக் குடிப்பதும் பின்னர் சூனியக்காரியின் இருளைக் குடிப்பதுமென இரட்டை வேடமிடத் தொடங்கியது.

என்ர தாயே! அம்மாளாச்சி!

என்ன சோதன வரப்போகுதோ? ஊர் முணுமுணுக்கத் தொடங்கியது. 

அன்றைய இரவு யாருக்கும் நிம்மதியைக் கொடுக்கவில்லை. தென்மராட்சியின் தென்பகுதி வெடியோசைகளால் அதிரத் தொடங்கியது. ஒருசீர் இடைவெளியில் சத்தங்கள் கேட்பதும், ஓய்வதும் பின்னர் உக்கிரவேகம் எடுப்பதுமாக தென்மராட்சிப் பிரதேசமே குண்டுகளால் துளையிடப்பட்டுக் கொண்டிருந்தது. உறக்கமற்ற விழிகள் வானத்தில் கூவிக்கொண்டு செல்லுகின்ற எறிகணைகளின் நெருப்புப் பொறிகளை துயருடன் பார்த்துக்கொண்டிருந்தன.

மறுநாட்காலை உள் ஒழுங்கைகளில் தலையை நீட்டிக் கதைத்த ஊர்ச்சனங்களின் வாய்கள் ஆனையிறவுச் சமர்க்கதைகளை அளவாகப் பேசிக்கொண்டன.

இரவு ஆனையிறவில அடிபாடாம், செய்தியில சொன்னவங்கள்.

நாவற்குளிப்பாலம் உடைச்சாச்சுதாம், சனங்கள் எல்லாம் இடம்பெயரத் தொடங்கீற்றுதுகள்.

கற்பூரத் தட்டுடன் மூச்சிரைக்க ஓடிவந்தார் சண்முகத்தார்.

வெளிக்கிடுங்கோ எல்லாரும், அம்மாளாச்சி எங்களக் கைவிட மாட்டாள்.

நான் பாத்து வாறன். 

சண்முகத்தாரின் வார்த்தைகளைக் கேட்ட ஊர்ச்சனங்களின் விழிகளில் ஏக்கம் படரத் தொடங்கியது.

இடம் பெயர்தல் என்பது சாதாரணமாக வார்த்தைகளில் சொல்லிவிடக் கூடிய சொல்லல்ல, அது ஒருவகையான உளவியல் யுத்தம். தாங்கள் வாழ்ந்து வந்த மண்ணோடும், மரம் செடி கொடிகளோடும் நாளுக்கு நாள் கட்டிக்காத்த பந்தத்தை விட்டுவிட்டு வெளியேறுகின்ற அந்த உளவியல் யுத்தத்தினால் இரத்தம் வடித்தவர்கள் பலர். குண்டுகளின் காயங்கள் அவர்களது மேனியை சிதைப்பதற்கு முன்னமே மனதில் காயங்களைச் சுமந்து கொண்டு புறப்படத் தயாராகின ஊரின் கால்கள்.

எங்க போகப்போறம் பெரியம்மா?

அப்பாவியாய் கேட்டாள் வெண்ணிலா.

பாப்பம்,  எங்கயாவது போவம்.

பெரியம்மாவிடம் தெளிவான பதில் இருக்கவில்லை. அவளுடைய வார்த்தை வங்கியில் சொற்கள் தொலைந்திருந்தன.

ஆனால், எங்கேயோ போகப்போகிறோம் என்பது மட்டும் வெண்ணிலாவிற்குப் புரிந்தது.

தூரத்தில் வெடி ஓசைகள் அதிர்ந்த வண்ணம் இருந்தன, நேரம் செல்லச்செல்ல வேட்டொலிகளின் உக்கிரம் அதிகரிக்கத் தொடங்கியது. தூரத்தில் ஏவப்படுகின்ற எறிகணைகள் புறப்படுகின்ற சத்தமும் அவை வந்து வீழ்கின்ற சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் ஒருசீர் இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. உயிர் பற்றிய பயம் மட்டுமே நிறைந்திருந்தது மனத்தில். ஊர் அடங்கிப் போயிருந்தது. இடம்பெயர விரும்பாத சில சனங்கள் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்தார்கள். வீதிகள் வெறிச்சோடியிருந்தன. தொடர் எறிகணைகள் நிறுத்தப்படுகின்ற போது பதுங்கு குழிகளுக்குள் இருந்து பயத்தோடு வெளிவந்து பசிக்கு மட்டுமாக ஒரு குழை சாதமோ, கஞ்சியோ அவசர அவசரமாகச் சமைத்து எடுத்துக்கொண்டு மீண்டும் பதுங்கு குழிகளுக்குள் புகுந்து கொண்டார்கள். இடத்திற்கும் நிலத்திற்கும் ஏற்ப எல் பங்கர் பகர வடிவ பங்கர் என்றெல்லாம் பங்கர்கள் வெட்டப்பட்டன. உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே ஆகப்பெரும் அடிப்படை நோக்கமாக இருந்தது.

கொஞ்சம் அரிசி, பருப்பு, சீனி என்று அவசரச் சமையலுக்குத் தேவையான பொருட்களையும், மாற்றுவதற்கெனச் சில உடைகளையும் பெரியவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அப்ப நாங்கள் வீட்ட போவமா?

வெண்ணிலா பெரியம்மாவைக் கேட்டாள்.

மனதில் மகிழ்ச்சியின் இலையொன்று மெல்ல அரும்பத் தொடங்கியது.

நான் அப்ப அம்மாவ பாக்கலாமோ?

யுத்த களத்தில் அரும்பிய கொடியின் மலரென அவளுடைய குழந்தை உள்ளத்தில் மகிழ்ச்சி புகுந்து கொண்டது. 

எல்லோரும் உடைகளையும் உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு இடம்பெயர ஆயத்தமாக, வெண்ணிலா ஓடிச்சென்று ஒரு செம்பினை எடுத்துக்கொண்டாள். அது அவளுடைய அம்மா கடைசியாக அவளைப் பார்க்க வந்திருந்தபோது நீரருந்திய செம்பு.

காலையில் தேநீருக்காக கறந்த பாலை அவளுடைய செம்பில் நிறைத்திருந்தார் பெரியம்மா. கைகொள்ளக் கூடிய உடமைகளைக் காவியபடி வெறித்தோடிப் போயிருந்த ஏ9 பிரதான வீதியைக் கடந்து கிராமத்திற்குள் இறங்கினால் அங்கிருந்த உறவினர்கள் ஏற்கனவே வெளியேறியிருந்தார்கள்.

வழியெங்கும் செல் தின்ற மரங்கள் முறிந்து வீழ்ந்திருந்தன. வீடுகள் சனங்களை இழந்திருந்தன, சில வீட்டின் கதவுகள் மூடப்படாமல் இருந்தன, ஒரு வீட்டின் சமையலறை பகுதியிலிருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது. தொடர் எறிகணைகள் கூவத்தொடங்க நிலத்தில் விழுந்து படுத்து காதுகளைப் பொத்திக் கொண்டார்கள். நெஞ்சுக்கும் நிலத்திற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு படுத்திருந்துவிட்டு எழுந்தபோது வெண்ணிலா கொண்டு வந்திருந்த பாற்சொம்பும் அவளுடன் சேர்ந்து படுத்திருந்தது.

தொடர் நடை, தொடர் ஓட்டம் என்று இரண்டு கிழமைகள் தொடர்ந்த அந்தப் பயணத்தின் ஒருநாளில் வெண்ணிலா பதுங்கியபடி படுத்திருந்த கூரை வீட்டின் ஒரு மூலையில் எரிகுண்டுகள் வீழ்ந்திருந்தன. சாம்பல் பூத்த அடுப்பிலிருந்து வெளிவந்த கோழியைப்போல தலையை சிலுப்பியபடி வெளிவந்த அவளுடைய உடல் முழுவதும் சாம்பலாக இருந்தது. அவளுக்குமுன் படுத்திருந்த உறவினர் ஒருவரின் தொடையிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

இனி ஏலாது. இங்க இருக்க ஏலாது. வெளிக்கிடுவம் பூநகரிப்பக்கம் போவம். அங்கால சனங்கள ஏத்திக்கொண்டு போறாங்களாம்.

கூட்டத்திலிருந்த பெரியவர்கள் அவசரகதியில் முடிவெடுத்தார்கள்.

வெண்ணிலாவிற்கு அந்தக்கணத்தில் அந்த கொடிய சமர் பிடித்திருந்தது, குண்டுகள் பிடித்திருந்தன. அவள் குண்டுகளுக்கு நன்றி சொன்னாள்.

உடைகள் அழுக்காகி,  கால்களில் செருப்புக்களற்று பூநகரியை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த அவர்களை உழவு இயந்திரத்தில் ஏற்றி சங்குப்பிட்டிக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு சனங்களை ஏற்றிச் செல்வதற்காக படகுகள் தயார் நிலையில் இருந்தன.

வெண்ணிலாவிற்கு இருப்பு கொள்ளவில்லை. நீலவரிச் சீருடை அணிந்திருந்த அக்கா ஒருத்தி படகைச் செலுத்திய விதத்தை கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.

நான் அம்மாட்ட போறன்.

அந்தப் படகோட்டிக்கும் சொல்லிவிட்டு சிரித்தாள் வெண்ணிலா. 

தூரத்தில் கடலில் எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்தவண்ணம் இருந்தன. அவற்றைத் தன்னுடைய மடியில் தாங்கி அலைகளை எழுப்பி இவர்களை வழியனுப்பி வைத்தாள் கடலன்னை.

தாங்யூ குண்டு.

உன்னாலதான் நான் வீட்ட போறன்.

வெண்ணிலா எறிகணைக்கு நன்றி சொல்லிவிட்டு செம்பை இறுகப்பிடித்தபடி நடந்தாள்.

சிறியவளுக்கு உயிர் பயம் தெரியவில்லை.

உயிரைப் பிடித்துக் கொண்டு வந்த அவர்களை பச்சையரிசிச் சோற்றோடும் சம்பலோடும் வரவேற்றது வன்னி நிலம். சாப்பாடு, தண்ணியற்று அலைந்து ஓடியவர்களின் வாய்களுக்கு அறுசுவை உணவைப்போல இருந்தது அங்கு வழங்கப்பட்ட உணவு.

வெண்ணிலாவிற்குப் பசிக்கவில்லை. அவள் வீட்டைப்பற்றி கனவு காணத் தொடங்கியிருந்தாள். அவளுடைய பகற்கனவில் அம்மா அவளுக்குப் பிடித்த சர்கரைப் பொங்கல் சமைத்துக் கொண்டிருந்தாள்.

ஓடிய களைப்பு தீர்ந்தபின் அவர்களது பெயர் விபரங்கள் பதியப்பட்டு பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. தட்டிவான் ஒன்று இவர்களை எற்றிச்சென்று வெண்ணிலாவின் வீட்டிற்குச் செல்லும் சந்திக்கருகில் இறக்கி விட்டது. இனி அங்கிருந்து சுமார் ஐநூறு மீற்றர்கள் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

அவளுடைய பிஞ்சுக் கால்களில் வலி தெரியவில்லை.

அம்மாட்ட வந்திற்றன்.

இண்டைக்கு இரவு அம்மாக்குப் பக்கத்தில படுக்கப்போறன்.

அவள் துள்ளிக்குதித்து ஓடும் சிறு முயலாகி அந்தச் செம்மண்சாலையில் பெரியம்மாவைப் பின்தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.

ஐயோ, கிபிர் கிபிர்

சுத்துறான். எல்லாரும் கீழ படுங்கோ,  படுங்கோ

இது முதலாம் தரம் சுத்துறான், படுங்கோ

விமானத்தின் இரைச்சலைமீ றி யாரோ கத்துவது காதுகளில் விழவும் பழக்கப்பட்ட எல்லோரும் இயந்திர வேகத்தில் பாதுகாப்புத் தேடிக்கொண்டனர்.

கறிவேப்பிலை மரமொன்றின் அடியைப் பற்றிக்கொண்டு குப்புறப்படுத்திருந்த வெண்ணிலா பயத்தோடு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவதற்குள் செவிப்பறை கிழிந்ததைப்போல பெருஞ்சத்தங்கள் காதை அடைக்க, கரிய புகைமூட்டம் ஒன்று எழுந்தது மட்டும் அவளது நினைவிற்குத் தெரிந்தது.

கண் விழித்தபோது அவள் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள், தலை சுற்றியது. தலையைப் பிடிக்க கையைத் தூக்கினாள், கை வலித்தது, கையில் கட்டொன்று போடப்பட்டிருந்தது. அவளது இடது கை செம்பை இறுக்கிப் பிடித்திருந்தது.

வெண்ணிலா எழும்பீற்றாள் ,  வெண்ணிலா கண் முளிச்சிற்றாள்

யாரோ  உரக்கக் கூவிக்கொண்டு ஓடுவது காதுகளில் விழுந்தது.

வாசலில் இருந்து பறை மேளங்களின் சத்தம் கேட்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அழுகுரல்கள்…

பெரியம்மா இவளைப் பிடித்தபடி முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள்.

சனங்கள் கூடியிருந்தார்கள்.

இப்பதான் குளிக்கவாக்கக் கொண்டு போனது,  காயம் பட்ட உடம்புதானே நிறைய நேரம் வச்சிருக்கவும் ஏலாது.

பிள்ள கண்முளிக்கட்டும் எண்டுதான் பாத்துக் கொண்டிருந்தது.

பந்தலின் கீழிருந்த யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெள்ளை கட்டிய பந்தலின் பின்பக்கத்தில் கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

பெரியம்மா இவளின் கையைப்பிடித்து அரப்பெண்ணை வைத்தாள்,

செம்பில் நீர் நிறைத்து ஊற்றச் செய்தாள்,

பொட்டு வைப்பித்தாள், 

பூ வைப்பித்தாள் ,

அம்மாவைக் கும்பிட வைத்தாள்.

வெண்ணிலா, அம்மா அம்மா என்று கத்தினாள். அவளுடைய வார்த்தைகள் தொண்டையிலிருந்து வெளிவர மறுத்தன. அவள் மறுமுறை மூர்ச்சையானாள்.

அன்றிரவு கூடத்தில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. ஊர்க்காரர்களில் யாரோ ஒரு சிலபேர் சாவு வீட்டிற்குத் துணையிருந்தார்கள்.

பெரியம்மா அழுது களைத்திருந்தாள்.

வெண்ணிலாவிற்கு நள்ளிரவில்தான் மீண்டும் விழிப்பு வந்தது, மெல்லக் கண்களைத் திறந்தாள், அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

அம்மா என்று அழைக்க முயன்றாள். முடியவில்லை,  குரல் வெளிவரவில்லை. வலித்த கையைத் தடவிக்கொண்டு பந்தலின் பின்பக்கத்திற்குச் சென்றாள். அம்மாவிற்கு நீரூற்றிய செம்பு அங்கு உருண்டுபோய்க் கிடந்தது. குனிந்து அதை எடுத்துக்கொண்டு பந்தலுக்கு வந்து, அம்மாவை படுக்க வைத்திருந்த இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.

சூனியக்காரியின் இரவுகள் தொடர்ந்தன.

அவை பகல்களாகின.

பின்னர் இரவுகளாகின.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular