Wednesday, April 24, 2024
Homesliderவீட்டிலிருந்தே வேலை (கட்டுரை)

வீட்டிலிருந்தே வேலை (கட்டுரை)

பாரதிராஜா

ண்பதுகளில் படித்த இளைஞர்கள் என்றாலே வேலையில்லாமல் தாடி வைத்துக்கொண்டு அலையும் கூட்டம் என்கிற ஒரு நிலை இருந்தது. அதுவே தாராளமயமாக்கத்துக்குப் பிந்தைய புதிய ஆயிராண்டில் வேகமாக மாறி, இந்தப் படிப்பு – அந்தப் படிப்பு என்றில்லாமல் எல்லாப் படிப்பு படித்த இளைஞர்களும் கணிப்பொறித் துறைக்குள் வந்து குவியத் தொடங்கினர். நாமெல்லாம் படித்து முடித்த பின் வளர்ப்பதற்கு தாடி ஒழுங்காக வளருமோ வளராதோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த தலைமுறை திடீரென்று முற்றிலும் புதிய உலகம் ஒன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு விதவிதமான புதிய அனுபவங்களால் திக்குமுக்காட வைக்கப்பட்டது.

அப்படியான அனுபவங்களில் ஒன்று, முதலில் பெரும் பெரும் மேசைக்கணினிகளை வைத்துக்கொண்டு டொக் டொக்கென்று தட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, மடிக்கணினிகள் வந்த பின்பு கூடுதலான சுதந்திரம் கிடைத்தது. முதலில் மேலாளர்கள், பின்னர் மூத்த பணியாளர்கள் என்று தொடங்கியது, சில நிறுவனங்களில் எல்லோருக்குமான வசதியாக அளிக்கப்பட்டது. மடிக்கணினிகளோடு சேர்த்து எந்த நேரமும் வேலை செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டிய எதிர்பார்ப்பும் வந்திறங்கியது. கூடுதல் பொறுப்போடு சேர்த்துக் கூடுதல் சுதந்திரமும் வந்து சேர்ந்தது.

“இரவெல்லாம் விழித்து வேலை பார்த்தவனுக்குக் காலையில் சிறிது தாமதமாக வருவதற்கு உரிமையில்லையா!” என்ற கேள்விக்கான பதிலாக எந்த நேரமும் வந்து எந்த நேரமும் சென்றுகொள்ளலாம் என்ற சுதந்திரம் வந்து சேர்ந்தது. அப்படியே எந்த நேரமும் அழைத்துத் தொல்லை செய்வோம் என்கிற தலைவலியும் வந்தது. கொடுத்து வாங்கும் இந்தப் பணியிடப் பண்பாட்டுக்கு முழுதும் பழகிவிட்டவர்களாகத்தான் ஒரு தலைமுறையே உருவானது. மதியம் வந்து இரவில் திரும்பினாலும் பரவாயில்லை, அவ்வப்போது அலுவலகமே வராவிட்டாலும் பரவாயில்லை போன்ற வசதிகள் வழங்கப்பட்டன. இரவெல்லாம் விழித்து வேலை பார்க்கத் தயாராக இருக்கும் பணியாளர் படையின் மூலம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் வாடிக்கையாளர்களோடு கூடுதல் நேரம் உரையாட முடிகிறது, அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடிகிறது என்பவை போன்ற வசதிகள் நிறுவனங்களுக்கும் நன்மை பயத்தன.

இதுவே சொந்த வேலைகள் இருக்கும் போது, வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன் என்று சொல்லி உட்கார்ந்துகொள்ளும் உரிமையைக் கொடுத்தது. அப்படியே மெதுவாக எப்போதுமே வீட்டிலிருந்து வேலை செய்துகொள்ளும்படியான உரிமையுடைய ஒரு பிரிவினரை உருவாக்கியது. பிரசவ விடுப்பில் சென்ற பெண்கள், விபத்தில் அடிபட்டு நகர முடியாமல் வீட்டில் மாட்டிக்கொண்டவர்கள், நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு வீட்டில் இருக்க வேண்டியவர்கள் போன்றவர்கள், கொடுக்கப்படும் இந்த உரிமைக்குப் பதிலாகக் கூடுதல் உழைப்பைக் கொடுக்கவோ, குறைந்த ஊதியத்துக்குப் பணிபுரியவோ தயாராக இருப்பின், அவர்களே திறமை மிக்கவர்களாகவும் இருப்பின், அதுவும் நிறுவனத்துக்கு ஆதாயந்தானே! இப்படித்தான் இந்த வீட்டிலிருந்தே பணிபுரியும் பண்பாடு நம் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டது.

கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கு முன்பே இப்படியான ஒரு சூழ்நிலையில் தொடர்ந்து ஓராண்டு காலம் வரை வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் கிடைத்த அனுபவங்களையும் பாடங்களையும் எழுத வேண்டும் என்கிற திட்டம் அப்போதிருந்தே தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்து, இப்போது கொரோனா கொடுத்திருக்கும் அனுபவங்களின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது.

சில நிறுவனங்கள், சில குழுக்கள், சில பணியாளர்கள் என்று ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் இருந்த பண்பாடு கொரோனாவின் புண்ணியத்தில் எல்லோருக்குமானதாக மாறியிருக்கிறது. இதற்கு முன்பு, “எனக்கென்னவோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லைங்க. நம் கண் முன்னால் இருந்துகொண்டே டேக்கா கொடுப்பவர்கள், வீட்டில் உட்கார்ந்துகொண்டெல்லாம் வேலை பார்ப்பார்கள் என்ற கதையை நான் நம்பத் தயாரில்லை” என்று சொன்னவர்களும் சேர்த்து எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய – வேலை வாங்க வேண்டிய கட்டாயம் நம் மீது திணிக்கப்பட்டது. இப்படித்தான் வேலை செய்தாக வேண்டும் என்று ஆன பின்பு எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாகவே அந்த முறைமை வெற்றியடைந்துவிட்டது போலத் தெரிகிறது.

அதே வேளையில், முதலில் சில மாதங்கள் எல்லோருமே வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதில் உற்பத்தி கூடியுள்ளது என்று கூப்பாடு போட்டவர்களில் ஒரு பகுதியினர் மெதுவாகக் குரல் ஓய்ந்து, “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது” என்று பின்வாங்குகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. எதையுமே அப்படியே நம்பிவிடவும் முடியாது. இப்போது ஆதாயம் அளிப்பதாக இருந்தாலும் தொலைநோக்கில் திருப்பி அடிக்கும் என்ற அச்சம் வந்தால் கூட, இப்போதே அது சரியாக எடுபடவில்லை என்று கூச்சமில்லாமல் இறக்கிவிடுவதுதான் பெருநிறுவனங்களின் தொழில் தர்மம்!

உண்மையாகவே காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள். பயணத்தில் வீணாக்கிய சில மணி நேரங்களையும் சேர்த்து இப்போது அவர்களுக்குக் கூடுதல் நேரம் கிடைக்கிறது. அதையும் தன் நிறுவனத்துக்கே அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் இப்போது உழைக்கிற மாதிரியே எப்போதும் உழைப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் இந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. இப்போது எங்கும் போக முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு முடங்கிக் கிடப்பதால் இப்படி உழைக்கிறார்கள். நாளை எல்லாம் சரியாகிவிட்ட பின் வண்டியைப் பூட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார்களே! அவசரப்பட்டு இந்த வெற்றியைக் கொண்டாடிவிட்டால் நாம்தானே நாளை அனுபவிக்க வேண்டும் என்றெண்ணி இப்போதே தெளிவாக அடக்கி வாசிக்கக் கூடும்.

பெருநிறுவனங்கள் என்பவை தனிமனிதர்களைப் போல ஒற்றை மூளையில் இயங்குபவை அல்ல; எந்தச் சிறு நகர்விலும் இருக்கும் எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் துல்லியமாகக் கணக்குப் போட்டு அதற்கேற்றபடி உலகையே நகர்த்தும் ஆற்றலும் அதற்குத் தோதான அமைப்புகளையும் கொண்டவை.

அடுத்தது, “எல்லோருமே இப்படி உழைப்பவர்களா?” என்கிற கேள்வியும் இருக்கிறது. வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டிய இந்த வேளையில் கூட, சரியான நேரத்துக்கு வந்து நிற்க முடியாத – வேலையில் கவனம் செலுத்தத் திணறும் – கிடைத்திருக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திவிடும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர்களையும் சேர்த்துத்தான் இந்த முறைமை எடுபடுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது.

இன்று தொழில்நுட்பம் இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வளர்ந்திருப்பதால் இது சாத்தியப்பட்டிருக்கிறது. இதுவே இருபது – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முடிந்திருக்குமா? நிச்சயமாக இல்லை. இந்தியா முழுக்கவும் இணையம் புகுந்துவிட்டது. குறிப்பாகத் தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் இணையம் வந்துவிட்டது. கடைசியாக மின்சாரத்தைப் பார்த்த கடைக்கோடிப் பாட்டாளிகளின் பிள்ளைகளும் கூட இப்போது ஓட்டு வீட்டில் அமர்ந்துகொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் அழைப்புகளில் கலந்துகொள்கிறார்கள். அதை நமக்குச் சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அந்தத் தொழில்நுட்பத்தை மக்கள்மயப்படுத்தியதும் அதற்கொரு முக்கியக் காரணம். அதில் தமிழகம் முன்னணியில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே!

இதன் முடிவில் எந்தத் தொழில் எல்லாம் வீட்டிலிருந்தே செய்ய முடியாதவை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். “இவ்விடம் வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்னும் பேச்சுக்கே இடமில்லை” என்று அட்டை மாட்டிவிடுவார்கள். எந்தத் தொழிலுக்கெல்லாம் வீட்டைவிட்டே வெளியேற வேண்டியதில்லை என்கிற தெளிவும் கிடைத்துவிடும். கணிப்பொறித் துறையினர் மட்டுமல்ல, மருத்துவர், ஆசிரியர், கணக்காளர் போன்ற பணிகளே வீட்டிலிருந்தே செய்யத்தக்க பணிகளாக உருவெடுப்ப. வீட்டில் இருந்து செய்யத்தக்க வேலையா என்பதன் அடிப்படையில் தனிமனிதர்கள் தமக்கான சரியான துறையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு வளரும். மனித வாடை பிடிக்காதவர்கள் வீட்டிலிருந்தே செய்யும் வேலைகளை நோக்கி நகர்வார்கள். அதனால் பல புதிய உளவியல் பிரச்சனைகளும் நோய்களும் உருவாகலாம். காடுகளுக்குள் அலைந்துகொண்டிருந்த விலங்கொன்று சமூக விலங்காகி அதுவும் சுருங்கி ‘வீட்டு’ விலங்காகிப் போதல் எவ்வளவு பெரிய பரிணாம மாற்றம்! அதற்கான விலை சாதாரணப்பட்டதாகவா இருக்கும்! அப்படியானவர்களைக் குறி வைத்து தியானம், யோகா, உடற்பயிற்சி, நோகாமல் நுங்கு தின்கிற மாதிரியான குறிப்பிட்ட விதமான கேளிக்கைகள் என்று விற்கும் குருமார்கள் கூடுவார்கள்.

“நம்மளாலல்லாம் நாலு நாளைக்கு மேல் வீட்டுக்குள் இருக்க முடியாதப்பா!” என்கிறவர்கள் இப்போது வீட்டுக்குள் இருந்து செய்ய முடிகிற வேலைகளில் இருந்தாலும் அவற்றைவிட்டுத் தப்பி ஓட என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் பலரின் குடும்பங்களில் மற்ற வீடுகளைப் போலல்லாமல் எப்போதும் வீடு தங்காமல் திரியும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் ஆத்திரத்தால் பூகம்பங்கள் வெடிக்கும். இன்னொரு பக்கம், எந்நேரமும் தன்னோடே வீட்டுக்குள்ளேயே கிடக்கும் துணையின் மூஞ்சியைப் பார்க்கச் சகியாமல் வரும் கோபத்தாலும் பல குடும்பங்கள் உடைவ. அதுவும் எந்நேரமும் வேலையே கிறுக்காகக் கிடக்கிற துணைகளால் வரும் பிரச்சனைகள் மேலும் உக்கிரமாக இருக்கும். எட்டு மணி நேரத்தைப் பத்து மணி நேரத்துக்குள்ளாவது முடித்துக்கொள்ளத் தெரியாவிட்டால் சிக்கல்தான்.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், வாரத்தில் ஒரு நாள் பணியிடம் செல்பவர்கள், இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், இரண்டு நாட்கள் பணியிடம் செல்பவர்கள் என்று வெவ்வேறு விதமான ‘இனக் குழுக்கள்’ உருவாகிவிடுவார்கள்.

பணியாளர்கள் ஓரிடத்தில் கூடிப் பணிபுரிவதைவிட அவரவர் வீட்டிலேயே கிடந்து பணிபுரிவதன் மூலம் நிறுவனங்களுக்கு இன்னொரு பெரிய வசதியும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் புலம்புவதை எல்லாம் வீட்டில் இருப்பவர்களிடமே புலம்பிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். ஒரு வேலையை வெறுத்து இன்னொரு வேலை தேட வேண்டும் என்கிற உந்துதலோ சங்கம் வைத்து உரிமையைக் கோர வேண்டும் போன்ற எண்ணங்களோ எழவே எழா. அதே வேளையில், பணியிடத்துக்கு வந்தால் மற்றவர்கள் முன்னால் செய்ய முடியாத வேலைகள் பலவற்றை வீட்டில் இருந்தால் கூச்சமில்லாமல் செய்ய முடியும். அதில், வேலை தேடுதல், நேர்காணல்களில் கலந்துகொள்ளல், தனிப்பட்ட திறமையை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல் ஆகியவை அடக்கம்.

வீட்டிலிருந்தே வேலை செய்தல் வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்குச் சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. தனியாக அமர்ந்து வேலை செய்ய – இணைய வழிச் சந்திப்புகளில் கலந்துகொள்ள ஏதுவான தனி அறையோ அமைதியான இடமோ இருக்க வேண்டும். தனி அறை இருந்தாலும் வெளியிலிருந்து சத்தம் புகாத வகையில் அவ்வறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியான வீடுகளைக் கட்டுவதும் ஏற்கனவே இருக்கும் வீடுகளில் மாற்றங்கள் செய்வதும் கட்டுமானத்துறையில் சில புதுமைகளைப் புகுத்தும். நல்ல இணைய இணைப்பு இருக்க வேண்டும். வீட்டிலிருப்பவர்கள், எந்த நேரமும் “கறிவேப்பிலை வாங்கி வா”, “கொத்தமல்லி வாங்கி வா” என்று நொச்சுப் பண்ணிக்கொண்டே இருக்கக் கூடாது.

வீட்டிலிருந்தே வேலை என்பதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை தேடுதல் என்பதும் கூடிவிடும் என்பதால், அதனால் உருவாகப் போகும் பிரச்சனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது அதனால் கூடப் போகும் மோசடிகளின் எண்ணிக்கை. “வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் வாங்க” பேர்வழிகளுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு. இவர்கள் எளிதில் ஏமாறக்கூடிய பாவப்பட்ட ஒரு கூட்டத்தை வைத்து நன்றாகக் காசு பார்த்துவிடுவார்கள். கட்டடம் வேண்டியதில்லை, முகவரி வேண்டியதில்லை, ஒரேயோர் இணைய இணைப்பும் தேன் வழிய ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலும் இருந்தால் போதும். ஒரு பெரும் எண்ணிக்கையை ஏமாற்றிவிடலாம்.

இது போன்ற சில்லறைப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக் கொரோனாக் கொள்ளை நோயின் புண்ணியத்தில் நிகழ்ந்திருக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்தல் சார்ந்த மாற்றங்களால் மனித குலமே ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அருகில் இருக்கும் மனிதர்களுடனான நெருக்கம் மனிதர்களுக்கு வேகமாகக் குறைந்து வந்துகொண்டிருந்தது. ஒரே வீட்டில் இருக்கும் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வதைவிட உலகின் வேறு ஏதோ ஒரு மூலையில் இருக்கும் முகமே தெரியாத அல்லது உண்மை முகமே தெரியாத எவர் எவருடனோ மணிக்கணக்காக நேரம் செலவிடுவதை அனுபவித்துச் செய்கிற போக்கு கூடிக்கொண்டே வந்துகொண்டிருந்தது. இத்தனை இலட்ச ஆண்டு காலப் பரிணாம வளர்ச்சியில் உருவாகி வந்திருக்கும் மனிதனுக்குள் இருக்கும் ஏதோவொரு தேவைதானே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் அப்படிப்பட்டவர்களே கூட வேலை என்று வந்துவிட்டால் நேரில் இருந்தால்தான் எளிதாக இருக்கிறது என்று எண்ணுபவர்களாகத்தான் இருக்கிறார்கள்; புதிதாக ஏதொவொன்றைப் பற்றிப் படிப்பதற்கோ பயிற்சி பெற்றுக்கொள்வதற்கோ நேரில் இருந்து கலந்துகொள்ளாவிட்டால் தன்னால் கவனிக்கவே முடியாது என்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே வெகுவிரைவில் இந்தப் புதிய முறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள். உணவுக்காக நாடோடியாக வாழ்ந்த மனிதன் விவசாயம் கண்டுபிடித்ததும் ஓரிடத்தில் நிலைகொண்டுவிட்டதும், ஆனாலும் உள்ளுக்குள் இருந்து அரித்துக்கொண்டிருக்கும் ஊர் சுற்றும் ஆசையைச் சுற்றுலா என்ற பெயரில் அவ்வப்போது செய்துகொள்வது போல, காலமெல்லாம் நாளெல்லாம் உடலுழைப்பே செய்து பழகியிருந்த போதும், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளின் மூலம் உடலுழைப்பு குறைந்துவிட்ட பின்பு அதனால் உருவான கேடுகளைக் களைவதற்காக ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்துகொள்ளும் வகையில் உடற்பயிற்சி கண்டுபிடித்ததைப் போல, தொழில் தொடர்பான எல்லா வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்துகொண்டு, அதனால் ஏற்படப் போகும் மனிதர்களுடனான இடைவெளியையும் அதனால் ஏற்படப் போகும் உளவியல் பிரச்சனைகளையும் சரிசெய்துகொள்வதற்கு, அதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் மனிதர்களையும் ஒதுக்கி அதை வேலைக்கு வெளியில் வைத்துக்கொள்வார்கள்.

இந்த வேகமான மாற்றத்தை எளிதாக்கும் வேலையை மாய மெய்மை (Virtual Reality) என்கிற வேகமாகச் சந்தைக்கு வந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்திவிடும். அதன் பின்பு நடக்கப் போவதுதான் மனித குலத்துக்குப் பெரும் பாய்ச்சலாக இருக்கப் போகிறது. உடலால் ஒரே இடத்தில் இருந்துகொண்டு, அமெரிக்காவில் நடக்கிற அலுவலக மாநாட்டிலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த அடுத்த நிமிடமே மதுரையில் நடைபெறும் ஒன்னுவிட்ட சித்தப்பா மகனின் திருமணத்திலும் கலந்துகொள்ளலாம்; அது முடிந்த மறு நிமிடமே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நேரில் காண்பது போலவே மாடத்தில் நின்று காணலாம். கையில் ரிமோட் வைத்துக்கொண்டு சேனல் மாற்றுவது போல, ஒன்று சலிப்பாக இருந்தால் இன்னொன்றைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம். இது அரசியல், பொருளியல், அறிவியல், வணிக, மருத்துவ ரீதியாக நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களை நிகழ்த்தப் போகிறது. அது ஒரு புறமென்றால், “வாழ விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க விரும்பும் இடம் ஒன்றாக இருக்கிறது, இருக்க வேண்டிய இடம் ஒன்றாக இருக்கிறது!” என்று உழலும் எளிய மனிதர்களுக்கும் இது பெரும் மாற்றமாக இருக்கும்.

“பிழைப்புக்காக ஊரைவிட்டு வந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. நாமெல்லாம் இவ்வளவு மாறிவிட்டோம். நம் ஊரும் நம்மைப் போலவே மாறியிருக்குமே! அது எப்படி மாறிவிட்டது என்று போய்ப் பார்க்கக்கூட முடியவில்லையே! தைப் பொங்கலுக்கும் பங்குனிப் பொங்கலுக்கும் ஊரில் இருந்து கொண்டாடுவது போல வருமா!” என்று நினைவில் ஊர் உள்ள மிருகமாகவே வாழும் கிராமத்து – சிறுநகரத்து மனிதர்களுக்கெல்லாம் இது ஒரு வாழ்வைப் புரட்டிப் போடும் மாற்றமாக இருக்கும். பெரும்பாலான வேலைகளை – அதுவும் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும் வேலைகளை – தன் சொந்த ஊரில் இருந்துகொண்டே செய்துகொள்ள முடியும் என்கிற மாற்றம் சாதாரணப்பட்ட மாற்றமா! ஊரில் இருக்கும் தன் உறவினர்களோடே வாழ்ந்துகொண்டே உலகின் தலைசிறந்த பள்ளிகளில் கூட தன் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும் என்கிற மாற்றம் எப்பேர்ப்பட்ட மாற்றம்! உருப்பட வேண்டுமென்றால் பெருநகரங்களுக்குப் போயாக வேண்டுமென்கிற விதி தளர்த்தப்படப் போகிறது. “கெட்டும் பட்டணம் போ!” என்கிற பழமொழியெல்லாம் வழக்கொழியப் போகிறது.

உலகம் முழுமைக்குமே நகர – கிராம இடைவெளி என்பது பெரிய பிரச்சனையாகி வருகிறது. குறிப்பாக ஏற்கனவே சாதிய மனநோயில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சீரழிந்து கிடக்கும் நம் போன்ற சமூகத்துக்கு இது ஒரு கூடுதல் தலைவலி. இந்த வீட்டிலிருந்தே வேலை என்கிற புதிய பண்பாடு அதற்கொரு பெரும் நிவாரணமாக இருக்கும். நகரங்களின் நெரிசல் குறைவது மட்டுமல்ல, நகர அமைப்பே கேள்விக்குள்ளாகலாம். பெரும்பாலானவர்கள் அவரவர் ஊருக்குத் திரும்ப நேர்ந்தால், வளர்ச்சியும் வசதிகளும் பரவலாக்கப்பட்டு, முதலில் அவை எல்லா ஊர்களுக்குமானவையாகி அப்படியே பின்னர் எல்லோருக்குமானவையாகலாம்.

“கதை செம்மையாக இருக்கிறதே! இதெல்லாம் நடக்குமா?” என்கிறீர்களா? அது நம் எல்லோருடைய தலைவிதியையும் நிர்ணயிக்கும் பெருநிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. பின்னர் சிறிது நம் கைகளிலும் இருக்கிறது. அவர்கள் நம் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்றால், நாம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். வீட்டிலிருந்தே வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதாயம் மட்டுமே இருக்கிற மாதிரிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தொழுவத்திலேயே கிடந்தாலும் மாடாக உழைக்க வேண்டும். ‘மாடு தொழுவத்திலேயே கிடப்பதை விரும்புகிறது, எனவே அதற்காகப் புல்லைச் சிறிது குறைத்துப் போட்டாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு கூடுதலாக உழைக்கும்’ என்று அவர்கள் நம்பும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

***

பாரதிராஜா

தொடர்புக்கு : [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular