தனா
ஆவடையம்மாள் வீட்டின் உட்புற திண்ணையில் படுத்தபடி வெட்டவெளி நடுமுற்றத்தின் ஓரத்தில் கிடந்த பெரிய கருங்கல்லில் அமர்ந்து அலுமினிய பாத்திரங்களை உமி வைத்து தேய்த்துக் கழுவிக்கொண்டிருந்த செந்தட்டிக்கிழவனை “இந்தா” என்று அனத்திக் கூப்பிட்டாள். கிழவன் திரும்பி ஆவடையம்மாளைப் பார்த்துவிட்டு அலுமினிய வாளியில் இருக்கும் தண்ணீரை வாரிக் கைகளை அலசிவிட்டு எழுந்து வந்தார். ஆவடையம்மாளின் தோளில் ஒருகையும் வற்றித்தொங்கிய புஜத்தில் ஒரு கையும் கொடுத்துத் தூக்கி நிறுத்தினார். கிழவி, சரிந்து தொங்கிய சேலையை ஒரு கையால் உடலோடு அழுத்திப்பிடித்துக்கொண்டு மெல்ல முற்றத்திற்கு கிழவனுடன் இறங்கி வந்தாள்.
தரை சுட்டதால் கிழவன் அவளை சுவற்றோடு ஒட்டி விழுந்த நிழலின் வழியாக மெல்ல கூட்டிச்சென்றார். ஆவடையம்மாள் இரண்டு அடி எடுத்து வைத்தவள் அங்கேயே குத்தவைத்து அமர்ந்தாள். கிழவன் சுதாரிப்பதற்குள் ஆவடையம்மாளின் சேலையை நனைத்து முற்றத்தின் வாய்க்காலை நோக்கி மூத்திரம் ஓடியது. செந்தட்டி, கிழவியின் தோளைத் தாங்கியபடி அவளை பிடித்துக்கொண்டு நின்றார். அவள் அவர் தொடையில் கையை வைத்து அழுத்த கிழவன் அவளைத் தூக்கி சுவற்றின் ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு அவள் சேலையை உருவினார். அவள் சுவற்றில் சாய்ந்து கொண்டு அம்மணமாய் நின்றாள்.
செந்தட்டி, சேலையை ஒரு அலுமினிய வாளியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டு மண் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அந்த வாளியில் ஊற்றினார். கலைந்த பரட்டைத்தலையுடன் வெளுத்து வற்றித்தொங்கிய உடலுடன் மெல்ல நடுங்கியபடி கிழவி சுவற்றோடு ஒட்டி நின்றிருந்தாள். கிழவன் ஒரு சொம்பு நீரை கிழவியின் இடுப்புக்குக் கீழே விசிறி அடித்தார். நீர் இடுப்பிலிருந்து கால் வழியே ஓடியது. கொடியில் கிடந்த ஒரு சேலையை எடுத்து வந்து கிழவியின் உடலில் சுற்றி மெல்ல அவளை அழைத்துச்சென்று திண்ணையில் படுக்க வைத்தார் செந்தட்டி.
முற்றத்து வெயிலில் உமி தேய்த்த பாத்திரங்கள் காய்ந்து கொண்டிருந்தன. அவர் மீண்டும் கருங்கல்லில் சென்று அமர்ந்து பாத்திரங்களை தண்ணீர் விட்டுக் கழுவத்தொடங்கினார். கிழவி அவரையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். செந்தட்டி, வியர்வை வழியும் உடலோடு எழுந்து சென்று உரச்சாக்கை விரித்து அதில் காய வைத்திருந்த சுண்டைக்காய்களை ஒரு கைப்பிடி அள்ளிக்கொண்டு முற்றத்தை தாண்டி வலப்பக்கம் உள்ள சிறு அறைக்குள் சென்றார்.
ஆவடையம்மாளின் கண்களுக்கு அந்த அறையின் இருட்டில் கிழவன் புலப்படவில்லை. கண்களை மூடிக்கொண்டாள். வாசலில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்ற சத்தம் கேட்டது. கிழவி கண்களை மெல்ல திறந்து பார்த்தாள். எரசக்கநாயக்கனூரில் குடியிருக்கும் மூத்த மகன் பெரியசாமி மோட்டார் சைக்கிளிலேயே உட்கார்ந்து ஹார்ன் அடித்தான். பின்னால் அவன் மனைவி செந்தாமரை அமர்ந்திருந்தாள். அவளும் வண்டியை விட்டு இறங்கவில்லை. சமயலைறையில் இருந்து செந்தட்டிக்கிழவன் ஓடி வெளியே வந்தார். பெரியசாமி பாக்கெட்டிலிருந்து அம்பது ரூபாயை எடுத்து நீட்டினான். செந்தட்டி வாங்கி இடுப்பு வேட்டிக்குள் வைத்துக்கொண்டார்.
“எலே பெரியசாமி” என்று ஆவடையம்மாள் அனத்தினாள்.
பெரியசாமி “ஒரு கல்யாணத்துக்கு சின்னமனூரு வரைக்கும் போறோம். வரும் போது வர்றேன்” என்று வெளியே இருந்தவாறு கத்தினான்.
“ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்குறா ஒங்காத்தா” என்றார் கிழவன்.
“போனவாரந்தான போய்ட்டு வந்தீங்க. இப்ப திரும்ப எதுக்கு? வேற வேலக்கழுத இல்லாம. இதே சோலியாவா அலையிறது?”
மோட்டார் சைக்கிள் கிளம்பிச்செல்ல கிழவன் மறுபடியும் இருட்டறைக்குள் சென்றார். ஆவடையம்மாள் பரட்டை தலையை வறட்டு வறட்டென சொறிந்து கொண்டாள். சமயலறையில் சுண்டைக்காய் பொரியும் வாசம் எழுந்தது. கிழவன் ஒரு கிண்ணத்தில் கஞ்சியையும் சுண்டைக்காய்களையும் எடுத்து வந்து திண்ணையில் அமர்ந்தார். கிழவியை மெல்லத் தூக்கி சுவற்றில் சாய்த்து உட்கார வைத்து விட்டு கிண்ணத்தை அவளிடம் நீட்டினார். சின்னத்தட்டில் இருக்கும் சுண்டைக்காய்களை அவள் அருகில் நகர்த்தி விட்டு முற்றத்திற்கு சென்றார். அலுமினிய வாளியில் ஊறிக்கிடந்த சேலையை எடுத்துப் பிழிந்து கொடியில் விரித்துக் காயப்போட்டார்.
கிழவி அவரைப் பார்த்தவாறே கஞ்சியை அள்ளி வாயில் ஒழுக மெதுவாகக் குடித்தாள். செந்தட்டிக்கிழவன் வேட்டியை உருவி அலுமினிய வாளியில் போட்டு விட்டு தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து தலை வழியாக ஊற்றிக்கொண்டார். கைகளாலேயே உடலை அழுத்தித் தேய்த்தார். கிழவி பார்த்துக்கொண்டே இருந்தாள். அவர் துண்டால் உடலைத் துடைத்து விட்டு அதையே இடுப்பில் கட்டிக்கொண்டு கோமணத்தை உருவிப் பிழிந்து கொடியில் போட்டு விட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார்.
“ஆஸ்பத்திரிக்கு” என்றாள் கிழவி.
“இந்த வெயில்லையா?” என்றவாறு திண்ணை மேலே இருந்த ஜன்னல் திட்டில் இருந்த தேங்காய் எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கைகளில் கொஞ்சம் ஊற்றிக்கொண்டு திரும்ப திட்டில் வைத்தார். கிழவி கஞ்சியை ஓரமாக வைத்தாள். செந்தட்டி எண்ணெய்யை இரண்டு கைகளிலும் கால்களிலும் தேய்த்துக்கொண்டார். “மிச்சம் வைக்காம கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிரு” என்றார். கிழவி ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்தாள். கிழவனுக்கு வாடை அடித்தது.
“வர்றதுக்கு முன்னாடி சொல்ல வேண்டாமா. ஒரு நாளைக்கு எம்புட்டு சேலைய மாத்துறது” என்று கிழவியை அதட்டினார். ஆவடையம்மாள் வயிற்றில் கையை வத்து அழுத்தி உதட்டை வலியில் சுருங்கிய முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டாள்.
கிழவன் நைந்த பாயில் ஒட்டிக்கிடந்த பீத்துணுக்குகளை தட்டிவிட்டு, முற்றத்தில் காயப்போட்டு விட்டு வாசலுக்கு வந்து உட்கார்ந்தார். தெரு வெயிலில் வெறிச்சோடிக்கிடந்தது. நாலு வீடு தள்ளி உள்ள மஞ்சக்காரை வீட்டு வாசலில் சரசுக்கிழவி அமர்ந்து அவள் மருமகளுக்குப் பேன் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்புறம் இருந்து “ஆஸ்பத்திரிக்கு” என்று ஆவடையம்மாளின் குரல் கேட்டது.. செந்தட்டி திரும்பிப் பார்க்காமல் “வெயிலு எறங்கட்டும்” என்றார்.
மல்வீட்டின் வெளியே சுண்ணாம்புக்கரை உதிர்ந்த சுவற்றில் வில்லு வண்டியின் பெரிய சக்கரம் ஒன்று சாய்ந்து கிடந்தது. இன்னொரு சக்கரம் உடைந்து மரக்கட்டை குவியலாக கீழே கிடந்தது. அதில் குப்பை மேனிச் செடிகள் முளைத்துக் கிடந்தன.
செந்தட்டி எழுந்து வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சாய்ந்த சக்கரத்தை நிமிர்த்தினார். பல வருடங்களாக சாய்த்துவைக்கப்பட்ட சக்கரம் புழுதி சரிய நிமிர்ந்து நின்றது. அதை உந்தித்தள்ளி உருட்டி ஓட வைத்தார். சக்கரம் பல்லாண்டுகளுக்குப் பிறகு தெருவில் இறங்கி ஓடியது. மேடு பள்ளங்களில் தடுமாறியது. ஒழுங்கில்லாமல் இடவலமாக ஆடியது. வியர்வை வழிய சக்கரத்தைத் தட்டி தட்டி ஓட வைத்து மையச்சாலைக்கு வந்தார். எதிரே அரச மரத்தடியில் சீட்டு விளையாடும் கூட்டம் அவரை நிமிர்ந்து பார்த்தது. கிழவன் சக்கரத்தைப் பிடித்து நின்றபடி மூச்சு வாங்கிக்கொண்டார். பின் ஊரின் தெற்குப் பக்கமாக குயவர்கள் வாழும் பகுதிக்கு சக்கரத்தை ஓட்டிச்சென்றார்.
தேனி நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கானாவிளக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரிலேயே பஸ் ஸ்டாண்ட் இருந்தது. செந்தட்டிக்கிழவன் கம்பம் போகும் பஸ்ஸில் ஆவடையம்மாள் கிழவியை அவள் உடல் தாங்கி மெல்ல ஏற்றினார். தன் வலக்கையால் அவளது வலக்கையைப் பற்றியபடி இடக்கையால் கிழவியின் இடுப்பை அணைத்தவாறு படிகளில் ஏற்றினார். பஸ்ஸின் உள்ளிருந்து ஒருவர் படிகளில் இறங்கி வந்து கிழவனுக்கு உதவியாய் அவள் தோளைப்பற்றிக்கொள்ள இருவரும் கிழவியை பஸ்ஸிற்குள் கொண்டு வந்தனர். பஸ்ஸில் கூட்டம் இல்லை. பல இருக்கைகள் காலியாய் இருந்தன. முகூர்த்த நாளென்றால் நாள் முழுவதும் பஸ் கூட்டத்தால் தள்ளாடும்.
ஜன்னலோரத்தில் கிழவியை அமர வைத்துவிட்டு செந்தட்டி உட்கார்ந்துகொண்டார். அவருக்கு மூச்சிரைத்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெளிறிப்போன ஜிப்பாவில் கைவிட்டு காய்ந்த வாழை மட்டையில் மடித்து வைக்கப்பட்ட மூக்குப்பொடியை எடுத்தார். மட்டியை பக்குவமாய்ப் பிரிக்கும் பொழுது கைவிரல்கள் நடுங்கின. செந்தட்டி ஒரு சிமிட்டு பொடி எடுத்து மூக்கில் வைத்து ஆழ உறிஞ்சிக்கொண்டார். பஸ் கிளம்பும் பொழுது ஜன்னலின் வெளியே கிழவி கோழையாக எச்சிலை பலவீனமாக துப்பினாள். அது பஸ் கிளம்பிய ஆட்டத்தில் ஜன்னல் கம்பிகளிலேயே விழுந்து வழிந்தது.
குயவனிடம் சக்கரத்தை விற்ற பணம் நூற்றி ஐம்பது ரூபாயை ஒரு பழைய பாலீதின் பையில் போட்டு மடக்கி மஞ்சள் பையில் வைத்திருந்தார் கிழவன். அதை எடுத்துப் பிரித்து சின்னமனூருக்கு இரண்டு டிக்கெட் வாங்கிக்கொண்டார். டிக்கெட்டுடன் சில்லறையை மீண்டும் பாலீதின் பையில் போட்டு மஞ்சள் பையில் வைத்துக்கொண்டார்.
“சரியாயிரும்னாரா டாக்டரு?” என்றாள் கிழவி. செந்தட்டி ஆமாமென்று தலையாட்டினார்.
“எம்புட்டு காசு வாங்கினாரு?
“தர்மாஸ்பத்திரில எதுக்கு காசு. அதெல்லாம் ஒண்ணும் கேக்கல”
தோல் சுருங்கிப்போன கைகளால் முன்னிருக்கை கம்பியை பிடித்துக்கொண்டார். அவரது இடது கை மணிக்கட்டில் தொங்கிய மஞ்சள் பை பஸ் குலுங்கும் ஆட்டத்திற்கேற்ப முன்னும் பின்னும் இடது வலதுமாக ஆடிக்கொண்டே உடன் வந்தது. கிழவி தேனிக்குள் பஸ் நுழையும் பொழுது கிழவன் மேல் சரிந்து அவர் மடியில் படுத்து விட்டாள். செந்தட்டி அவளின் முந்தானையை இழுத்து அவள் உடம்பை மூடினார். பஸ் தேனி நகர நெரிசலால் மெதுவாக குலுங்கி குலுங்கி ஊர்ந்தது. ஒரு பெரிய பள்ளத்தில் பஸ் இறங்கி நகர்ந்த ஆட்டத்தில் செந்தட்டிக்கு கிழவியின் விக்கல் சத்தம் கேட்டது. செந்தட்டி குனிந்து பார்த்தார். கிழவி விக்கவில்லை சிரித்திருக்கிறாள். அவள் வாய் புன்னகைத்தபடி இருந்தது.
கிழவி “வில்லு வண்டி” என்றாள்.
கிழவருக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. ”என்னாது?” என்றார்.
கிழவியிடமிருந்து எந்த பதிலுமில்லை. அவள் முகம் புன்னகைத்தவாறே இருந்தது. என்ன நினைத்து சிரிக்கிறாள் என்று கிழவருக்கு தெரியவில்லை. பஸ் குலுங்க கிழவி மறுபடியும் வில்லுவண்டி என்று அனத்தினாள்.
2
அங்கனத்தேவன் பட்டியில் வில்லு வண்டி வைத்திருந்தது செந்தட்டி மட்டும் தான். கோயம்புத்தூரில் இருந்து ஒரு ஆள் உயரத்திற்கு ஜாதி மாடுகளை வாங்கி வந்து அதில் கட்டியிருப்பார். இரவங்கலார் மலையில் இருந்து பிரம்புகளை வெட்டி வந்து வண்டிக்கு கூடாரம் கட்டினார். உட்காரவும் சாயவும் இலவம் பஞ்சில் மெத்தை விரிப்பு. வெள்ளிப்பூண் போட்ட சாட்டை.
“செந்தட்டி ரொம்ப பவுசான ஆளுயா” என்று சொல்லிக் கேட்பதிலே சந்தோசம் அவருக்கு.
“அவன் பேருல எட்டு ஏக்கருக்கு தென்ன நிக்கிது. வடக்க பன்னென்டு ஏக்கரா தென்ன ஒத்திக்கு எடுத்திருக்கியான். மாசத்துக்கு ரெண்டாயிரம் சொளையா நிக்கிது தேங்கால. இந்தா பாரு வெள்ளச்சட்டய வெளுக்கப்போட்டு வாங்கி உடுத்திருக்கியான். முக்கா முக்கா பவுனுக்கு ரெண்டு மோதிரம். ஒன்னரப்பவுனுக்கு சங்கிலி. பத்தாக்கொறைக்கு கல்லு வச்ச மோதிரம் ரெண்டு. தேனியோ பெரியகொளமோ போகவர வில்லுவண்டி. பொண்டாட்டி செத்து 2 வருசமாச்சு. ஆனா படுத்து எந்திரிக்க பத்து வீடு. வக்காளி மைனருனா அவென் மைனரு” என்பார் கொத்துக்கார நாட்ராயன்.
செந்தட்டியின் பங்காளி தங்கையாவுக்கு வில்லு வண்டியில் சென்று நிச்சயம் முடித்துவர வேண்டும் என்ற ஆசையிருந்தது. செந்தட்டி தங்கையாவை வில்லுவண்டியில் ஏற்றிக்கொண்டு கோவிலாபுரத்திற்கு நடையோட்டதில் முன்னால் செல்ல பொம்பளையாட்களும் ஆம்பளையாட்களும் நிச்சயத்திற்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு பின்னால் நடந்தனர்.
கருங்கட்டங்குளம் கம்மா வழியாக அவர்கள் கோவிலாபுரம் சென்று ஆவடையம்மாள் வீட்டு முன்னால் இறங்கினர். ஏற்கனவே பேசி முடித்த நிச்சயம் தான். சடங்கிற்காக பூவும் பொட்டும் வைத்துத் தாம்பூலம் மாற்றி வர ஆம்பளைகள் வீட்டுத் திண்ணையிலும் பொம்பளையாட்கள் வீட்டிற்கு உள்ளும் உட்கார்ந்து காப்பித்தண்ணி குடித்தனர். செந்தட்டி வாசக் கதவோரமாக திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். உள்ளே ஆவடையம்மாளை உக்கார வைத்து அவளுக்கு சந்தனத்தை பூசி விட்டு கொண்டுவந்திருந்த பூக்களை சவுரி முடி சடையில் சூடினர்.
செந்தட்டி தலையைத் திருப்பி ஆவடையம்மாளைப் பார்த்தார்.
“இம்புட்டு வெள்ளையா எந்தப் பொம்பளையும் நம்மூரு பக்கம் இல்லடா தங்கையா” என்றார்.
தங்கையா பெருமிதம் கொண்டான்.
ஆவடையம்மாள் தலை நிமிர்ந்து செந்தட்டியைப் பார்த்தாள்.
“அவுகாத்தா தேங்கா நாறக்கொண்டி தேச்சு தேச்சு எடுத்த வெள்ளப்பா” என்றார் கொத்துக்கார நாட்ராயன்.
சிவப்பு கண்டாங்கி சேலை கட்டி தலையெல்லாம் பூ வைத்து ஒற்றை சங்கிலி நெஞ்சில் தொங்க கைகளுக்கும் கால்களுக்கும் மருதாணியிட்டு அமர்ந்திருந்த ஆவடையம்மாளுக்கு அப்பொழுது 15 வயது. ஆனால் உடல் இருபது வயதிற்குரிய மிதப்பு. தோளில் ஒரு கிளியைப் பச்சை குத்தியிருந்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்த செந்தட்டி வெடுக்கென்று எழுந்து வீட்டிற்குள் சென்றார்.
“ஆவடையம்மாள நான் கட்டிக்கிறேன். தங்கையாவுக்கு வேற நல்ல பொண்ணா பாத்துகிறலாம் என்னாங்கிறிய?” என்றார்.
வெளியில் இருந்த ஆண்கள் ஒரு கணம் திகைத்துப்போய் பின் சுதாரித்துக்கொண்டு உள்ளே வந்தனர். தங்கையாவுக்கு இன்னும் செந்தட்டி சொன்னது உறைக்கவில்லை. மலங்க மலங்க விழித்தபடி நின்றான்.
”இதென்ன பூவும் பொட்டும் வைக்க வந்த எடத்தில சண்டியர்தனம்.? ஒரு மொறையில்ல. ? ஆம்பளையாளுக இப்டி வேடிக்க பாத்துட்டு நிக்கிறீக?”
ஆவடையம்மாளின் ஆத்தாதான் முதலில் பேசினாள்.
எல்லோருக்கும் செந்தட்டியின் குணம் தெரியும். மேலும் காசு பணம் உள்ள பவுசான ஆள்.
கொத்துக்காரர் மட்டும் கொஞ்சம் கோவத்தை குரலில் ஏற்றிப் பேசினார்.
“இந்தாருப்பா. இதெல்லாம் நல்லால்ல. பேசி முடிக்க வந்தது உன் பங்காளிக்கு. பெரிய மனுசன்னு உன்னய கூட கூட்டி வந்தா இதென்ன மப்பெடுத்த வேல.. நீ மொதல்ல வெளிய வா. இங்க நிக்காத” என்றார்.
செந்தட்டி ஆவடையம்மாளைப் பார்த்தார். அவளும் அவரைப் பார்த்தபடிதான் உட்கார்ந்திருந்தாள்.
“என்னய கட்டிக்கிறியா? என்றார்.
“ஏண்டா வெண்ண மயிராண்டி. வெளிய வாடான்னு சொல்றேன். பொம்பளபிள்ளட்ட போயி பேசிக்கிருக்க” என்று சட்டையைப் பிடித்து இழுத்து செந்தட்டியை வெளியே தள்ளினார் கொத்துக்கார நாட்ராயன்.
“நீயெதுக்கு சின்னயா இம்புட்டு கோவப்பட்ற. இந்த பிள்ளைய பாத்ததும் இவள கட்டிக்கிறனும்னு தோணிப்போச்சு. இந்தா எல்லா பெரியவகளும் இருக்கீங்க. உங்களுக்கு சரின்னா குடுங்க. இல்லன்னா விடுங்க.”
ஆவடையம்மாளின் அப்பா வெளியே வந்து செந்தட்டியின் நெஞ்சில் கைவைத்து தள்ளி தோளில் ஓங்கி அறைந்தார்.
“வக்காளோலி உன் ரவுசு புண்டையெல்லாம் ஒங்கூர்ல வச்சிக்க. உன் வண்டிய எடுத்துட்டு கெளம்பிரு. ஊர்காரங்யெல்லாஞ் சேந்து உங்கையக்கால ஒடிச்சு போடுவும் பாத்துக்க” என்றார்.
செந்தட்டி அவரைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தார். ஆவடையம்மாள் உள்ளிருந்து அவரைப் பார்ப்பது தெரிந்தது. வில்லுவண்டியில் சொருகி வைக்கப்பட்டிருந்த நீள அருவாளை உருவிக்கொண்டு செந்தட்டி கத்தினார்.
“ஆவடையம்மா. இவிங்யளுக்கு சொல்லி புரியவைக்க முடியாது போல்ருக்கு. ஒனக்கு புடிச்சிருந்தா எந்திரிச்சு வா. இந்தா நம்ம வண்டி ஒனக்காகத்தேன் நின்னிகிருக்கு. எவன் தடுக்குறியான்னு நானும் பாக்குறேன்” என்றார்.
எல்லோரும் செந்தட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க ஆவடையம்மாள் அவர்களை பின்னால் இருந்து விலக்கிக்கொண்டு வந்து செந்தட்டியின் முகத்தை பார்க்காமல் வண்டியில் ஏறிக்கொண்டாள்.
எவருக்கும் எதுவும் மனதில் பதியவில்லை. திகைத்துப்போய் நின்றிருந்தனர்.
ஆவடையம்மாளின் அம்மா மட்டும் வண்டிக்கு அருகில் வந்து அவளிடம் நின்றாள்.
கண்ணீர் பொங்க பல்லைக்கடித்தபடி “எறங்கி வாடி தேவ்டியா முண்ட” என்றாள். குரல் எழவே இல்லை.
“நான் நல்லா சந்தோசமா இருப்பேன்” என்றாள் ஆவடையம்மாள்.
எல்லோரும் பார்க்க வில்லுவண்டி மேடு பள்ளங்களில் குலுங்கி குலுங்கி கோவிலாபுரத்தை விட்டுச் சென்றது.
ஊர் போய்ச் சேரும்வரை செந்தட்டி அவளிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆவடையம்மாளும் குனிந்த தலை நிமிரவில்லை. வீட்டில் நுழையும் போது செந்தட்டியின் அப்பா கை ஓங்கி அடிக்க வந்தார். ஆத்தா ஆவடையம்மாளை வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.
இரவு சாவடியில் வைத்து ஊர்க்காரர்கள் பேசினர். தங்கையா செந்தட்டியை வெட்டிக் கொல்வேன் எனத் திமிறினான்.
செந்தட்டி அமைதியாகக் கால் ஆட்டியபடி “சரி. இப்ப என்ன செய்யனும்ங்றீக? நான் என்ன அந்த புள்ள கையபுடிச்சா இழுத்துட்டு வந்தேன். அத்தன பேரு பாக்க அந்த பிள்ளயாத்தான எங்கூட வாழனும்னு எந்திருச்சு வந்திச்சு. நீங்க இப்ப எதுக்கு சாவடி கூட்டி பொழுத கடத்துறீகன்னு எனக்கு புரியல” என்றார்.
கல்யாணம் முடிந்த இரவு செந்தட்டி ஆவடையம்மாளின் கன்னத்தை நிமிர்த்திக் கேட்டார்.
“விறு விறுன்னு நீ பாட்டுக்கு எங்கூட கெளம்பி வந்தியே. அப்டி அன்னைக்கு என்னத்தடி கண்ட?
ஆவடையம்மாள் தலை நிமிர்ந்தாலும் கீழ் நோக்கி பார்த்தவாறு சொன்னாள்.
“வில்லுவண்டி” என்றாள்.
“எங்க கிழவி கத சொல்லும். விக்கிரமாதித்தியே குருதையில வந்து ராணிய தூக்கிட்டு போனாராம்.”
3
பஸ் முத்துதேவன் பட்டியைக் கடந்து வீரபாண்டி ஆற்றுப்பாலத்தில் ஏறியது. செந்தட்டிக்கிழவன் தன் காலின் அடியில் ஈரம் படர்வதை உணர்ந்தார். மெல்ல குனிந்து பார்த்தார். கிழவியின் சேலை முழுவதும் நனைந்திருந்தது. மூத்திரம் இருக்கைக்கு கீழே முழுதும் படர்ந்திருந்தது. வீரபாண்டி நிறுத்தத்தில் வந்து பேருந்து நின்றது. செந்தட்டி பஸ்ஸின் முன்னும் பின்னும் பார்த்தார்.
“இந்தா எந்திரி. எறங்கணும் எந்திரிங்கிறன்ல” என்றபடி செந்தட்டி ஆவடையம்மாளை அரட்டி தோளைப்பற்றி தூக்கி மெல்ல படிகளில் இறக்கினார். “சின்னமனூருக்குல டிக்கெட் எடுத்திங்க” என்றார் கண்டக்டர். ” கௌமாரி ஆத்தாள கும்புட்டுக்கலாம்னு” என்று சொன்னபடி கிழவியை கீழே இறக்கிக் கொண்டு வந்தார்.
பஸ் அவர்களைக் கடந்து சென்றது. ஆவடையம்மாள் நிற்க முடியாமல் அங்கேயே குத்த வைத்து உட்கார்ந்தாள். வாயிலிருந்து எச்சில் கோழையாக வழிந்தது. எதிரே கௌமாரியம்மன் கோவிலின் சிறிய கோபுரம் தெரிந்தது. வீரபாண்டி கோவிலுக்குள் இருக்கும் மண்டபத்தில் நடந்த கல்யாணத்தின் போது ஊரில் இருந்து யாரும் வரவில்லை. தேனி மற்றும் பெரிய குளத்தில் இருந்து தேங்காய் வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆவடையம்மாளின் வீட்டிலிருந்தும் யாரும் வரவில்லை. ஆனால் ஆவடையம்மாள் சந்தோசமாகவே இருந்தாள். கல்யாணத்திற்கு மதுரைக்கு சென்று மூன்று சேலைகள் எடுத்துக்கொண்டாள். ஆண்பிள்ளை பிறந்தால் கௌமாரிக்கு தீச்சட்டி எடுப்பதாக அப்பொழுதே வேண்டிக்கொண்டாள்.
அதன் பின் ஊரில் ஒவ்வொரு விசேஷத்திற்கும் முன்னால் போய் நின்றாள். எல்லா உறவு முறைகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு கூப்பிட்டு கூப்பிட்டு பேசினாள்.
“சக்கரையா பேசுறா கோய்லாபொரத்துக்காரி” என்றாள் தெக்கு வீட்டு சுப்புதாயி.
சில மாதங்களுக்கு அங்கனத்தம் பட்டியின் அத்தனை வீடுகளுக்குள்ளும் சென்று உட்கார்ந்து பெண்களுக்குப் பேன் பார்ப்பவளாக மாறினாள் ஆவடையம்மாள்.
பெரியசாமி பிறந்ததும் கௌமாரிக்கு பொங்கல் வைத்து தீச்சட்டி சுமந்தாள்.
செந்தட்டி அவளைப் பற்றி தூக்கி சாலையில் இருந்து இறங்கி வீரபாண்டி ஆற்றுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இறக்கினார். கிழவி எதுவும் கேட்டுக்கொள்ளாமல் அவரைப் பற்றியபடி கால்களை இறக்கத்தில் நகர்த்தி நகர்த்தி இறங்கினாள்.
இடுக்கி அணையில் இருந்து குமுளி மலை இறங்கி லோயர் கேம்பில் தடுக்கப்பட்டு முறைவைத்து மடை திறக்க கம்பம் பள்ளத்தாக்கை செழிக்க வைத்து ஓடும் சுரபி வீரபாண்டியில் அகல விரிந்து அரண்மனைப்புதூரில் வைகையுடன் கலக்கும்.
ஆற்றுக்கு அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லில் கிழவியை உட்கார வைத்தார் செந்தட்டி. பின் மஞ்சள் பையை அவள் அருகில் போட்டு விட்டு ஆற்றை நோக்கிச் சென்றார். லோயர் கேம்ப்பில் தண்ணீர் திறந்துவிட்டபடியால் ஆறு வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஒரு ஓரமாக நின்று தோளில் கிடந்த துண்டை ஆற்றுக்குள் முக்கி எடுத்து வந்து கிழவியின் சேலையை தொடை வரை இழுத்து விட்டு கால்களில் துண்டைப் பிழிந்து அப்படியே துடைத்து விட்டார். சேலையில் மூத்திர வாடை அடித்தது. துண்டால் சேலையை மெதுவாக துடைத்துப்பார்த்துவிட்டு பின் எழுந்து சென்று ஆற்றில் துண்டை நனைத்து பிழிந்தார். ஆவடையம்மாள் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். செந்தட்டி ஆற்றில் கால்களை கழுவிக்கொண்டு வந்து ஆவடையம்மாள் அருகில் உட்கார்ந்தார்.
கிழவியின் வாயிலிருந்து வழிந்த எச்சிலை துடைத்துவிட்டபடி “டீ குடிக்கிறியா” என்றார்.
கிழவி வேண்டாம் என்று தலையாட்டினாள்.
“பன்னு வாங்கி டீல முக்கித்தர்றேன்? என்றார். கிழவி வேண்டாம் என்று தலையாட்டினாள். செந்தட்டி நனைந்த துண்டை கல்லில் விரித்து காயப் போட்டுவிட்டு தலை குனிந்தபடி அமர்ந்தார். கிழவி அவர் மடி தேடி சாய்ந்து வந்தாள். தொடையில் ஊன்றிய கையை எடுத்துக்கொண்டு கிழவி தலையை மடியில் வைத்துக்கொண்டார்.
“நீங்க போய் டீய குடிக்கங்க” என்று கிழவி குழறினாள். செந்தட்டி எதுவும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தார். கிழவி இருமுறை இருமினாள். வாயில் வழிந்த கோழை அவர் மடியில் பரவியது.
செந்தட்டி மெல்ல கிழவியை தூக்கி நிமிர்த்தினார். கிழவி தலை குனிந்தபடி நிமிர்ந்து அமர்ந்தாள். உடலில் லேசாக ஆட்டம் இருந்தது. தலை லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.
“முடியலமா” என்றார் செந்தட்டி கிழவன்.
கிழவி தலை குனிந்தே இருந்தது. செந்தட்டி விக்கல் எடுப்பது போல மெதுவாக அழுதார். கிழவியின் தலை கொஞ்சம் அதிகமாக நடுங்கியது. குனிந்தபடியே இருந்தாள். எச்சில் வழிந்து கொண்டிருந்தது. செந்தட்டி சட்டென எழுந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து சாலையை நோக்கி விறுவிறுவென நடந்தார். கிழவி மெதுவாக நடுங்கிய தலையைத் தூக்கி அவரைப் பார்த்தாள். பாலத்தைக் கடந்து பெரிய இரைச்சலுடன் வந்த பேருந்து ஒன்று நிறுத்தத்தில் வந்து நின்றது. செந்தட்டி அதில் ஏறுவதை ஆவடையம்மாள் பார்த்தாள். பஸ் நகர்ந்து சென்று மறைவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ஆறு எதையும் பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தது.
ஆவடையம்மாள் தத்தி தத்தி ஆறு நோக்கி நகர்ந்தாள்.
***
தனா – தொடர்புக்கு – vedhaa@gmail.com
இந்த கதை இயக்குனர் இமயம் Dr Bharathiraaja ஐயா அவர்களின் திரைப்படம் சென்று வந்த உணர்வை தந்துள்ளது.. சிறப்பான எழுத்து..
ஆம்.அந்தக்கால மைனர்கள் எல்லாம் அனைத்து இன்பங்களையும் தாமே அனுபவித்தார்கள்.துன்பங்களை மட்டுமே அவர்கள் தம் குடும்பத்திற்கு விட்டு சென்றார்கள்.கோகிலாபுரத்திலேயே ஒரு உதாரணம் உண்டு.என் கண்ணெதிரே கண்டுள்ளேன்.ஒருவேளை அவருடைய கதைதானோ என்னவோ?