Monday, October 14, 2024
Homesliderவிம்லா

விம்லா

இளங்கோவன் முத்தையா

நானும் ராஜேந்திரன் சாரும் என்னுடைய இருசக்கர வாகனத்தில் இரவு பதினோரு மணிவாக்கில் அங்கு சென்று சேர்ந்தோம். மதுரையிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வலதுபுறம் கிளை பிரிந்து செல்லும் ஒற்றைச்சாலையின் மூன்றாவது கிலோமீட்டரில் இருந்தது அந்தச் சின்ன கிராமம். மாரியம்மன்கோவில் கொடைவிழாவின் உபயத்தில் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று கலர்கலராக சீரியல் பல்புகளும், சவுக்குக்கம்பத்தில் நெட்டக்குத்தலாகக் கட்டி வைக்கப்பட்டு கலர் காகிதம் சுற்றப்பட்ட ட்யூப்லைட்டுகளும் கோயிலை நோக்கிச்செல்லும் தெருக்களின் மீது கோடைகால இரவின் வெக்கையை மேலும் அதிகப்படுத்தியபடி பளீரென வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.

எளிதில் திரும்ப எடுப்பதற்கேற்றபடி வண்டியைத் தோது பார்த்து நிறுத்திவிட்டு, ராஜேந்திரன் சாருடன் மாரியம்மன் கோயில் வாசலுக்கு எதிரில், ஊரின் நடுமையத்திலிருந்த மந்தையை நோக்கி நடந்தோம். கோயில் கோபுரத்தின் உயரத்தை விட இருமடங்கு உயரமான கட்-அவுட்டிலிருந்த மாரியம்மன், பல்புகளின் உபயத்தில் தன் கைகளில் கரும்பு, வீச்சரிவாள், அபய முத்திரை போன்றவற்றை நொடிப்பொழுதில் மாற்றிக்கொண்டு பிரகாசமாக அருள் பாலித்துக் கொண்டிருந்தாள். முக்கிய தெருக்களில் இருந்து பிரிந்த சின்னச்சின்ன சந்துகளில் பெருசு, சிறுசு பேதமில்லாமல் நான்கைந்து நபர்களாகச் சேர்ந்து சரக்கடித்துக் கொண்டிருந்தார்கள். மதுவின் வீச்சம் ஊரெங்கும் மிதந்து கொண்டிருந்தது.

மந்தையின் மறுபுறத்தில் கோயிலுக்கு நேரெதிராக இல்லாமல் கொஞ்சம் விலகினாற்போல அந்தக் கலாமண்டபம் இருந்தது. விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மேற்கூரையோடு கட்டப்பட்ட சிமிண்டுக்கட்டிடம் அது. மதுரையிலிருந்து வந்திருந்த நடன நாட்டியக்குழுவின் நடன நிகழ்ச்சியின் ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்குமான இடைவேளை நேரத்தில் நானும் ராஜேந்திரன் சாரும் மேடைக்கு கீழே அமர்ந்து மைக்கில் அறிவிப்புகளைச் செய்து கொண்டிருந்த கந்தவேலை நெருங்கி நின்றபோது “ச்செக்க்க்… ச்செக்க்க்…. அடுத்த பாடல், இளைய தளபதி விஜய் நடித்த யூத் திரைப்படத்திலிருந்து ஆல் தோட்ட பூபதி நானடா பாடலுக்கு நடனமாடுபவர், உங்களது ஏகோபித்த ஆதரவைப் பெற்ற, தென்னகத்தின் சிம்ரன், உங்கள் அபிமான விம்லா” என்று நிறுத்தி, நிதானமாக அறிவித்தார் அவர். அவர் உச்சரித்த விம்லாவில் ’ம்’ என்ற எழுத்து மட்டும் அது ஒலிப்பதற்குத் தேவையான மாத்திரை அளவுக்கும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டது. கூட்டத்திலிருந்து கைதட்டல் ஒலிகளும், விசில்களும் காதைத் துளைத்தன. ஒருவன் எழுந்து ”தங்கத்தலைவி விம்லா வாழ்க” என்று கத்தியபடி தன் கையிலிருந்த கத்தையான காகிதங்களைக் கூட்டத்துக்குள் தூக்கி எறிந்தான். அதற்கும் நான்கு பேர் கைதட்டினார்கள்.

அறிவிப்பு முடிந்ததும் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த கூட்டத்தின் முதலிரண்டு வரிசைகளுக்கு நடுவே மேடையை நோக்கி முழித்துக் கொண்டிருந்த பெரிய சைஸ் ஃபோகஸ் லைட்டுகளும், மேடையின் சுற்றுச் சுவர்களில் இருந்த லைட்டுகளும் பளீரென்று எரியத்தொடங்கின. அந்த இடத்திலிருந்து பளீரென எரிந்த ஃபோகஸ் லைட்டுகளைத் தாண்டி கூட்டமாகத் தரையில் உட்கார்ந்திருந்தவர்களையும், அவர்களைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்களையும் பார்க்க எனக்குக் கண்கூசியது. ராஜேந்திரன் சார் கைகளை நெற்றியில் வைத்து வெளிச்சத்தை மறைத்தபடி மறுபக்கம் திரும்பிக்கொண்டார்.

முதலில் நான்கைந்து இளைஞர்கள் ஒரேமாதிரியான உடையில் இடம் வலமாக இரண்டு வரிசைகளாக வந்து நின்றதும் ஸ்பீக்கர்கள் அதிர பாடல் ஒலிபரப்பப்பட்டது. அவர்களுக்குப் பின்னாலிருந்து அந்தத் திரைப்பாடலில் சிம்ரன் அணிந்திருந்தது போன்ற நீல நிற ஜீன்ஸும், அடிப்பகுதி லூஸான, கையில்லாத பனியன் போன்ற சிறிய டாப்ஸ் ஒன்றையும் அணிந்து, சிம்ரனைப் போலவே இருபுறமும் கைகளைத் தூக்கியபடி, இடுப்பை வெட்டி நடந்து மேடையின் மையத்துக்கு வந்தாள் விம்லா. மேக்கப்பா அல்லது இயல்பான நிறமா என்று தெரியவில்லை, வட இந்தியப் பெண் போன்ற கோதுமை நிறம், சராசரிக்கும் சற்று கூடுதலான உயரத்தோடு ’சிம்ரன்’ என்று அழைக்கப்படுவதற்கான எல்லாத் தகுதிகளோடும் இருந்தாள் விம்லா. நடிகர் விஜயாக ஆடிய இளைஞனுக்கென்று வித்தியாசமான உடைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் நடன அசைவுகளில் அப்படியே விஜயின் உடல்மொழியைப் பிரதிபலித்தான் அவன். சிம்ரனின் ஆட்டத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தாள் விம்லா. நடனத்தில் அவள் நெஞ்சை நிமிர்த்தி, இடுப்பை வெட்டும் போதெல்லாம் கூட்டத்திலிருந்து விசில்கள் பறந்து கொண்டிருந்தன. உண்மையில் நானே அவளுடைய ஆட்டத்தில் மெய்மறந்து போயிருந்தேன். இடையே ராஜேந்திரன் சாரைப் பார்த்தேன். நடக்கும் எதற்கும் சம்பந்தமில்லை என்பதைப்போல அவர் அவரது மொபைல் போனின் சின்னத்திரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாடல் முடிந்ததும் கந்தவேல் ராஜேந்திரன் சாருடைய தோள்களில் கைவைத்து அழைத்து ”நீங்க போய்ப் பாருங்க சார்” என்றார். ராஜேந்திரன் சார் என்னைப்பார்த்து “வாடா” என்றபடி மேடைக்குப் பின்புறமாக என்னை அழைத்துச் சென்றார். வெண்ணிற டாப்ஸ் மீது ஒரு டர்க்கி டவலைத் துப்பட்டா போலப் போர்த்தி தனது மார்புகளை மறைத்து தன் நெற்றி, கழுத்திலிருந்து ஆறாக வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் ஒற்றியபடி நின்று கொண்டிருந்தாள் விம்லா. ராஜேந்திரன் சாரைப் பார்த்ததும் ஆச்சரியத்தை முகத்தில் காட்டியபடி அவரருகே வந்து “சார் என்ன சார் இங்க, எப்ப வந்தீங்க, நான் கவனிக்கவே இல்லை” என்றாள். எனக்கு வெகு அருகில் வந்து நின்ற அவளிடமிருந்து எழுந்த ரோஸ் பவுடர், பெர்ஃபியூம், வியர்வை வாடை என எல்லாம் கலந்த கலவையான ஒரு மணத்தில் எனக்கு மூச்சு முட்டியது.

“இப்பதான்” என்ற ராஜேந்திரன் சார், என்னைச் சுட்டிக்காட்டி “சார்தான் நான் சொன்ன ஆளு, உன்னை நேர்ல அறிமுகப்படுத்தனும்னுதான் ரெண்டு பேரும் வந்தோம். என்ன இருந்தாலும் நீ ஒரு விஐபி பாத்தியா, நேர்ல வரலைன்னா மரியாதையா இருக்காதுல்ல?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். விம்லாவின் ரோஸ் பவுடர் பூசிய கன்னங்கள் மேலும் வெட்கத்தில் சிவந்ததுபோல எனக்குத் தோன்றியது.

“போங்க சார்” என்றாள் விம்லா சிரித்துக் கொண்டே.

“சார் கிட்ட நம்பர் வாங்கிக்கோ, அவருக்கு போன் பண்ணி என்னைக்கு வரச்சொல்றாரோ அன்னைக்குப் போய் அவரோட ஆஃபிஸ்ல போய்ப்பாரு” என்றார்.

விம்லா ராஜேந்திரன் சாரைப் பார்த்த பார்வையில் அன்பும் என்னைப் பார்த்த பார்வையில் மரியாதை கலந்த பயமும் இருந்தது. அந்த மரியாதையை நான் உள்ளூர ரசித்தேன் என்றே நினைக்கிறேன். என்னுடைய மொபைல் நம்பரை ஒரு சின்னக் காகிதத்தில் எழுதி, அங்கே இருந்த ஒரு இளைஞனிடம் கொடுத்து “வச்சிரு, அப்புறம் வாங்கிக்கறேன்” என்றாள். அதற்குள் அடுத்த பாடல் முடிவடைந்து ஆடியவர்கள் மேடைக்குப் பின்புறம் வர ஆரம்பித்தார்கள். ஆடி முடித்து வந்த ஒருவன் ரொம்பவே இயல்பாக விம்லாவின் பின்புறத்தில் கையால் தட்டி “அடுத்து நீதான்” என்றான். விம்லா “ஷ்ஷ்” என்றபடி ராஜேந்திரன் சாரைக் கைகாட்டினாள். அவர் இது எதையுமே கவனிக்காதது போல என் பக்கம் திரும்பி ”போலாமா?” என்றார்.

அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, திருவிழா சத்தங்கள் காதில் விழுவது குறைந்ததும் வண்டியின் பின்னாலிருந்தபடி “இங்க பாக்கறதையெல்லாம் வச்சு விமலாவ எடைபோடாத, ஷி இஷ் டிஃபரண்ட். ஆக்ட்சுவலி, ஷி டெஸ்பரேட்லி வாண்ட்ஸ் டு கம் அவுட் ஆஃப் ஆல் தீஸ் திங்ஸ்” என்றார். நான் மையமாகத் தலையை மட்டும் ஆட்டினேன். அவருடனான எனது பெரும்பாலான உரையாடல்கள் ஒருவழிப்பாதைதான். அவர் சொல்லுவார். நான் கேட்டுக்கொள்வேன்.

ராஜேந்திரன் சாரைப் பற்றி யாரிடமாவது சொல்லும்போது ”அவர் என்னுடைய மென்ட்டார்” என்றுதான் சொல்லுவேன். தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வில் வெளியே வந்தவர் அவர். ஆடிட்டிங் டிபார்ட்மெண்ட்டில் இருந்த அவரை “தொரத்தி விட்டுட்டாய்ங்க” என்று அவரது நண்பர்கள் கிண்டலாகச் சொல்லுவார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். ”எதற்கும் வளைந்து கொடுக்காத நேரான கிளைகள்தான் முதலில் வெட்டப்படும்” என்பது சாணக்ய நீதி அல்லவா? ராஜேந்திரன் சாரும் எதற்கும் வளைந்து கொடுத்துப் போகும் குணம் கொண்டவர் இல்லை என்பதை அவருடன் பழகிய அந்த சில வருட காலத்திற்குள் புரிந்து வைத்திருந்தேன்.

விம்லாவை நாங்கள் பார்க்கப் போவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் நான் மதுரையிலிருந்த ஒரு தனியார் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். ஏஜெண்டுகளைச் சேர்த்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் மூலம் இன்ஷ்யூரன்ஸ் விற்பதுதான் என்னுடைய வேலை. நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் நான் போய் நின்ற இடம் ராஜேந்திரன் சாரின் அலுவலகம்தான். கம்ப்யூட்டர்களை அசெம்பிள் செய்து விற்கும் ஒரு சிறிய நிறுவனத்தை அப்போது பொழுதுபோக்கிற்காக நடத்திக் கொண்டிருந்தார் அவர். என்னிடம் ஏஜெண்டாகத் தகுதி உடையவர்களாக அவருக்குத் தோன்றிய நபர்கள் நான்கைந்து பேருக்கு போன் செய்து ”பையன் வருவான், பார்த்து செய்” என்று கட்டளையிடும் தொனியில் சொன்னார். அவர் பேசும் தொனியே அப்படித்தான் இருக்கும். ஒருநாள் “ஏஜெண்ட் வேலைக்கு இன்னோரு சூப்பர் ஆளு வச்சிருக்கேன், போன்ல வேண்டாம், நேர்ல ஒரு வித்தியாசமான இடத்துல அறிமுகப்படுத்தி வைக்கறேன், அதுதான் சரியா இருக்கும்” என்று சொல்லி, அறிமுகப்படுத்திய நபர்தான் விம்லா என்கிற விமலா.

ஒரு வாரம் கழித்து எனக்கு விமலாவிடமிருந்து அழைப்புவந்தது. “சார் நான் விமலா சார், ராஜேந்திரன் சார்” என்று ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே “தென்னகத்தின் சிம்ரன் விம்லாவா” என்றேன் விளையாட்டாக. எதிர்முனையில் இரண்டு நொடி மௌனம் நிலவியது. பிறகு என் கிண்டலுக்குப் பதிலளிக்காமல் “உங்க ஆஃபிஸுக்கு கீழதான் சார் நிக்கறேன்” என்றாள். அவள் வந்துவிட்டாள் என்றவுடன் எதற்காகவோ பரபரப்படைந்தேன்.

”ஆஃபிஸுக்கு வாங்க” என்று அவளை அழைத்துவிட்டு வேகமாக என்னுடைய கேபினை ஒழுங்குபடுத்தினேன்..

”விம்லா” என்று மைக்கில் அறிவித்தவுடன் ஃபோகஸ் லைட் வெளிச்சத்தில் விசில் சத்தங்கள் பறக்க இடுப்பை வெட்டி, துள்ளலாக மேடையேறிய பெண்ணுக்கும் என் முன்னால் உட்கார்ந்திருந்த விமலாவுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது எனக்கு ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தது. வெகு நேர்த்தியாகப் புடவை கட்டியிருந்தாள். முகத்தில் துளி மேக்கப் இல்லை. அது அவள்தானா என்றுகூட சந்தேகமாக இருந்தது. ”தென்னகத்தின் சிம்ரனா” என்று நான் விளையாட்டாகக் கேட்டது அவளை நேரில் பார்த்த பிறகு எனக்கே அபத்தமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், முகத்தை கொஞ்சம் தீவிரமான பாவனையில் வைத்துக்கொண்டு “பேப்பர்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?” என்று கேட்டேன்.
”சார் சொன்னாங்க” என்றபடி அவளது போட்டோ, பிளஸ்-டூ சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களை எடுத்து வைத்தாள். இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட் ஆவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை எடுத்து அவளது விவரங்களை நிரப்பச் சொன்னபோது ’தந்தை பெயர்’ என்னும் இடத்திற்கு நேராக ஒரு சின்னக் கோடு போட்டாள். “அம்மா பேர் கூட எழுதலாம்” என்றேன். எனக்குப் பதிலளிக்காமல் அந்த இடத்தில் கேர் ஆஃப் என்று எழுதி ஒரு பெண்ணுடைய பெயரை எழுதினாள். பிறகு “சார் இப்பொ பாக்கற தொழில் பியூட்டி பார்லர்னு போட்ருக்கேன், டான்ஸர்னு வேண்டாம்” என்றாள். ’ஏன்’ என்று நான் கேட்டுக்கொள்ளவில்லை. அது ஏன் என்றால் “அவ பர்ஸனல் டீட்டெய்ல்ஸ ரொம்ப நோண்டாத” என்று ஏற்கனவே ராஜேந்திரன் சார் சொல்லியிருந்தார். விமலாவின் விண்ணப்பத்திற்கான பணத்தை ராஜேந்திரன் சார் ஏற்கனவே என்னிடம் கொடுத்துவிட்டிருந்தார்.

“ஒரு வாரம் ட்ரெய்னிங் க்ளாஸ் கண்டிப்பா அட்டண்ட் பண்ணனும் அதுக்கப்புறம் எக்ஸாம் பாஸ் பண்ணனும், சரியா?” என்று ஒரு கண்டிப்பான அதிகாரியின் தோரணையில் சொன்னேன்.

“இன்னும் கொஞ்ச நாளைக்கு சீசன் இல்ல சார், அதுனால அது ஒண்ணும் பிரச்சனை இல்லை” என்று தலைமை ஆசிரியர் முன்னால் நிற்கும் ஒரு மாணவியைப் போன்ற உடல்மொழியோடு பதிலளித்தாள் விமலா. ஏஜெண்டுகளைச் சேர்க்க நாயாய் அலைந்து கொண்டிருந்த எனக்கு இப்படியான அதிகாரத் தோரணையில் ஒரு பெண்ணிடம் பேசுவதே உள்ளுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது. அப்போதே என் கேபினை சில தலைகள் எட்டிப்பார்த்தபடியே சென்றதை ஓரக்கண்ணில் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். ரிடையர்டு ஆன மக்கள்தான் சிறந்த ஏஜெண்டுகள் என்று சொல்லிக் கொடுத்திருக்கும் இடத்தில் ஒரு இளம்பெண் வந்தமர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

மூன்று நாட்கள் கழித்து விமலாவுடன் சேர்த்து மேலும் பலருக்கு பயிற்சி ஆரம்பித்தது. பயிற்சியின் போது விமலா ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. தினசரி வகுப்புக்குள் நுழையும்போது என்னைப் பார்த்து ஒரு வணக்கம் வைப்பதைத் தவறாமல் செய்தாள். மிக மெல்லிய மேக்கப், சிவந்த நிறம், வடிவான உடல், பாந்தமான உடைகள் காரணமாக ஆண், பெண் பேதமில்லாமல் எல்லாருடைய பார்வையும் அவள் மேல் திரும்புவதை அவள் என்னுடைய ஏஜெண்ட் என்கிற வெட்டிப் பெருமிதத்தில் நானும் ஒரு ஓரத்தில் ரசிக்கவே செய்தேன்.

பயிற்சி வகுப்புகளில் விமலா நன்றாகப் படிப்பதாக எங்களது பயிற்சியாளர் என்னிடம் ஒருநாள் சொன்னார். விமலாவும் வகுப்பில் புரியாத சந்தேகங்களை என்னை நேரில் பார்த்தால் கேட்க ஆரம்பித்திருந்தாள். “யார் மாப்ள அது, உன் ஏஜெண்டு, ஆளு ஒரு மார்க்கமா இருக்கே” என்கிற என் சக ஊழியர்களின் கேள்விகளை உள்ளுக்குள் ரசித்தாலும் சின்ன சிரிப்போடு கடக்கப் பழகியிருந்தேன். ஆனால், அவள் ராஜேந்திரன் சாருக்கு வேண்டப்பட்டவள் என்பதால் அவளுக்கும் எனக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை ஒன்று எப்போதுமிருந்தது. எனவே எனது மற்ற ஏஜெண்டுகளை ஒப்பிட கொஞ்சம் சிரமப்பட்டேனும் விமலாவைக் கொஞ்சம் தள்ளி வைத்தே பழகிக்கொண்டிருந்தேன். அவளும் அப்படியேதான் நடந்துகொண்டாள். கொஞ்ச நாள் கழித்து நன்றாகப் பழகிய பிறகு ராஜேந்திரன் சார் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

பயிற்சி முடிந்த முதல் சில வாரங்களுக்கு புதிய ஏஜெண்டுகளோடு களப்பணிக்குச் செல்வது என்னைப் போன்ற சேல்ஸ் மேனேஜர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்று. விமலாவிடம் ”டூ வீலர் இருக்கா?” என்று கேட்டதற்கு “இருக்கு சார், ஆனா லைசென்ஸ் இல்லை” என்றாள். “லைசென்ஸ் இல்லாம எப்படி?” என்று நான் என் கேள்வியை முடிப்பதற்குள் “போலீஸ் எங்களைப் பிடிக்க மாட்டாங்க சார்” என்று சிரித்தபடியே சொன்னாள். உண்மைதான்… ஆண்களைத் துரத்தித் துரத்திப் பிடிக்கும் போலீஸ்காரர்கள் லைசென்ஸே இல்லாமல் வண்டி ஓட்டும் பெண்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதைத்தான் பார்க்கிறோமே.

விமலாவிடம் லைசென்ஸ் இல்லை என்பது மட்டுமல்ல, அவளது வாகனமும் பியூட்டி பார்லர் நடத்திக் கொண்டிருந்த அவளுடைய அக்காவுடையது என்று தெரிந்ததும் வேறு வழியில்லாததால் அவளை எனது வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு அவளது வாடிக்கையாளர்களைச் சந்திக்க ஆரம்பித்தேன். அலுவலகப் பணிகளுக்காகத்தான் என்றாலும் ஒரு இளம் பெண்ணோடு அப்படி பைக்கில் ஊர் முழுக்கச் சுற்றுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

விமலா முதன்முதலில் என்னை அழைத்துச் சென்றது ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் வீட்டிற்கு. அந்தப் பெண் அதிகாரி அப்போது மதுரையில் அல்லாமல் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் உள்ளே நுழைந்ததும் சம்பிரதாயத்துக்கு சில வார்த்தைகள் பேசிய பின், அவரது செக் புக்கை எடுத்து நீட்டி “எவ்வளவு எழுதணும்?” என்று கேட்டார். விமலா “உங்க இஷ்டம் மேடம்” என்று சொன்னவுடன் சற்று யோசித்துவிட்டு ”வருஷத்துக்கு இருபத்தி ஐந்தாயிரம் போதுமா?” என்று கேட்டார். என்னுடைய அனுபவத்தில் ஒரு வார்த்தை கூட பாலிஸியைப் பற்றி விசாரிக்காமல் ஒரு வாடிக்கையாளர் செக்கில் கையெழுத்து போட்டது அதுவே முதல்முறை. வழக்கமாக வாடிக்கையாளர்களிடம் காசோலையை வாங்குவதற்குள் நாங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதிருக்கும்.

காசோலையை விமலாவிடம் நீட்டிவிட்டு என்னிடம் “இது இவளுக்காகப் பண்றது. இதுல சேர்ந்திருக்கறதா என்கிட்ட சொன்னா, லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டுட்டா, பார்த்து ஏதாவது நிரந்தரமான வருமானத்துக்கு இவளுக்கு ஏற்பாடு பண்ணிவிடுங்க தம்பி, நல்ல பொண்ணு இவ” என்றார் அந்த அம்மா. விமலாவைத் திரும்பிப் பார்த்தேன். எந்தவித எதிர்வினையும் காட்டாது தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். வெளியே வரும்போது “கொஞ்ச நாள் புதுப்பட சிடி வித்துக்கிட்டு இருந்தேன் சார். அது இல்லீகல்னே எனக்குத் தெரியாது. போலீஸ்கிட்ட ஒருதடவை மாட்டிக்கிட்டேன். இந்த மேடம்தான் விசாரிச்சாங்க” என்றாள்.

“ஐயோ அப்புறம் என்ன ஆச்சு?” என்றேன்.

”இந்த மேடம் என்னை வார்ன் பண்ணிட்டு அனுப்பி விட்டுட்டாங்க”

“ஓ”

”ஆனா அதுக்கப்புறம் எல்லா போலீஸ்காரவுங்களும் எங்கிட்டதான் சிடி வாங்குனாங்க, நான்தான் மேடம் சொன்னதுக்கு அப்புறமும் ஒரு தப்ப செய்யக்கூடாதுன்னு அத விட்டுட்டேன், ரெண்டாவது ஒரே தொல்லை சார், போலீஸ்காரவுங்களைப் பகைச்சுக்கவும் முடியாது, நிறைய பேரு பணமும் தர மாட்டாங்க” என்றாள்.

அடுத்தடுத்து விமலா கூட்டிச்சென்ற சில இடங்களில் நான் சந்தித்த நபர்கள் வெவ்வேறு வகையானவர்களாக இருந்தார்கள். விமலாவாக அவள் எனக்கு அறிமுகப்படுத்திய நபர்கள் ஒருவிதமாகவும், விம்லாவாக அறிமுகப்படுத்திய நபர்கள் வேறுவிதமாகவும் இருந்தார்கள். அப்படி இருவேறு பெண்களின் உலகிற்குள் மாறிமாறி என்னை இழுத்துச் சென்ற அவள் எனக்கு அறிமுகப்படுத்திய நபர்கள் ’இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று நாளும் எனக்கொரு ஆச்சரியத்தைத் தரக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அவர்களது நடனக்குழுவை நடத்தும் கந்தவேலின் வீட்டுக்கு ஒருமுறை சென்றோம். கந்தவேல் வீட்டின் உள்ளே இருந்தார். வாசலில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். விமலாவைப் பார்த்ததும் “அடியே என் சக்களத்தி வாடி இங்க” என்று தன் தொடையைத் தட்டிக் காட்டினார். விமலா சிரித்தபடியே அவரருகே சென்று, அவர் கன்னத்தைக் கிள்ளி “என்ன தாத்தா எப்பிடி இருக்கீங்க?” என்று கேட்டாள்.

”தாத்தான்னு சொல்லாதடீ, மாமான்னு சொல்லு” என்றார் அந்தக் கிழவர். எனக்கு அவரது பேச்சே பிடிக்கவில்லை. கையில் மளிகைப்பொருட்கள் கொண்ட ஒரு கூடையோடு ஒரு பெண் வீட்டுக்குள் நுழைந்தாள். விமலாவைப் பார்த்ததும் “வாடி எப்ப வந்த?” என்று கேட்டுவிட்டு என்னைப் பார்த்து “சார்…” என்று இழுக்கவும், விமலா “சார்தான் என்னுடைய மேனேஜர்” என்று அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ”கந்தவேல் அண்ணனோட வைஃப், ஒரு காலத்துல ரொம்ப ஃபேமஸான டான்ஸர் என்றாள். “ஏய் சும்மா இரு” என்று விமலாவைச் செல்லமாக அடித்துவிட்டு “வாங்க சார்” என்று என்னைப்பார்த்து சொன்னபடி அந்தப்பெண் வீட்டுக்குள் நுழைகையில் “கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தாதான் என்ன?” என்று கிழவனாரைப் பார்த்துக் கடிந்து சொல்லிவிட்டுப் போனாள்.

அந்தப் பெண்ணின் தலை மறையும்வரை காத்திருந்து விட்டு “எப்பிடி ஆட்டிக்கிட்டே போறா பாத்தியா?” என்று சொல்லிவிட்டு விமலாவைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தார் அந்தப் பெரியவர். “ச்சீ மருமகளைப் பேசற பேச்சா இது, சும்மா இருங்க தாத்தா” என்று வெகு இயல்பாக அதைக் கடந்தாள் விமலா. எனக்குத்தான் தூக்கிவாரிப் போட்டது. பிறகு கந்தவேல் வெளியே வந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரது சார்பாக விமலாவிடம் நான்கைந்து பேர்களைக் குறிப்பிட்டு “இவுங்களையெல்லாம் போய்ப்பாரு, எல்லாம் கொஞ்சம் காசுள்ள பார்ட்டிங்க, பாலிஸி போட்டாலும் போடுவாங்க” என்று சொல்லி அனுப்பினார்.

வழியில் சிறிது நேரம் பேசாமல் வந்து கொண்டிருந்த விமலா “சார் எங்க ஆளுக இப்படித்தான் சார் பேசுவாங்க, எங்க ஃபீல்டுல இதெல்லாம் சகஜம் சார். அதுலையும் அந்த தாத்தா அந்தக்காலத்துல எம்ஜியாரா ஆக்ட் கொடுத்த ஆளு. நல்ல கலரா இருப்பாரா, ஏகப்பட்ட பொம்பளைங்க அந்தக் காலத்துல நீ, நான்னு போட்டி போட்டுட்டு அந்தாள் கூட சுத்துவாங்களாம், பெருசு எப்பவுமே அப்படித்தான் பேசும், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க” என்றாள். என்னை வைத்துக்கொண்டு கிழவர் அப்படிப் பேசியதுதான் அவளுக்கு பிடிக்கவில்லையே தவிர, அவர் பேசியதை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவளது பேச்சில் தெரிந்தது.

இன்னொரு முறை அவளது குழுவிலிருந்த பெண்கள் பாலிஸி எடுப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அவளை அழைத்திருப்பதாகச் சொன்னாள். ”உன் ஃபிரண்ட்ஸ்தான நீயே போய்ட்டு வா” என்று சொன்னதற்கு “இல்ல சார், அதுனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நான் சொன்னா நம்ப மாட்டாளுக, நீங்கன்னா கம்பெனி ஆளு, மேனேஜரே சொல்றாருன்னு நம்புவாளுக” என்றாள்.

அவள் அழைத்துச் சென்ற வீட்டில் ஒரு குடும்பம் குடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக பத்து பெண்கள் சேர்ந்து வாழ்ந்த ஹாஸ்டல் போலத்தான் அது இருந்தது. இருபதிலிருந்து நாற்பது வயது வரை ஏழெட்டு பெண்கள் அங்கே இருந்தார்கள். அணிந்திருந்த உடைகளிலும், அணியப்பட்ட முறைகளில் இருந்த அலட்சியமும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய சுதந்திரமும் எனக்குத்தான் சங்கடமாக இருந்தது. ஆனால் அவர்கள் இன்னொரு அன்னிய ஆண் தங்களுடன் இருப்பதைச் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

அங்கிருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் உண்மையான அக்கறையுடன் இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் சும்மா வாய்பார்க்க வந்தவர்கள்தான் என்பதைப் அங்கே போன சில நிமிடங்களிலேயே கண்டுபிடித்துவிட்டேன். அவர்களது தாராளமான உடைகளின் மீதும், கூச்சப்படாமல் என்னருகே நெருங்கி அமர்ந்திருந்த அவர்களது உடலின் மீதும் என் கண்கள் அலைபாயாமலிருக்க நான் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.

ஒரு பெண் “சரி சார் நான் பாலிஸி போடறேன், இருபது வருஷம் உயிரோட இருந்தா எனக்கு பணம் தருவீங்க சரி, நடுவுல நான் போய் சேர்ந்துட்டா யாருக்கு தருவீங்க” என்று கேட்டாள்.

“அக்கா நீங்க யார நாமினியா போடறீங்களோ அவுங்களுக்குப் போய்ச் சேரும்” என்றாள் விமலா.

“நாமினினா அது யாரைப் போடணும்?” என்று கேட்டாள் அந்தப்பெண்.

“வழக்கமா பெண்கள் அவுங்க ஹஸ்பெண்ட் பேர நாமினியா கொடுப்பாங்க” என்று நான் இடையில் புகுந்து சொன்னேன்.

அப்படி நான் சொன்னதும் அந்தப் பெண் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு மற்ற பெண்களைப் பார்த்தார். ஒருவிதமான நக்கல் சிரிப்பு அறை முழுவதும் பரவியது. முப்பதுகளில் இருந்த ஒரு பெண் “ஹஸ்பெண்டெல்லாம் அக்காவுக்கு சீசனுக்கு சீசன் மாறுவானுகளே சார், ஒவ்வொரு வருஷமும் நாமினிய மாத்திக்கலாமா?” என்று சிரிக்காமல் கேட்டாள்.

என் காலுக்குக் கீழே தரை நழுவியது போல இருந்தது. நான் கையறு நிலையில் விமலாவைப் பார்த்தேன். அவளுக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. “ஏங்க்கா யார்கிட்ட விளையாடறதுன்னு இல்ல, சார் நம்மளப் பத்தி என்ன நினைப்பாரு?” என்று கடிந்து கொண்டாள். நாங்கள் பேசியதையெல்லாம் கடைசிவரை இறுக்கமான முக பாவத்துடன் இடையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்தான் முதல் ஆளாக புதிய பாலிஸி விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார். அதிலும் ”நாமினி யார்” என்று கேட்டதும் “அந்த சனியனாலதான் என் தலையெழுத்து இப்பிடி ஆச்சு, ஆனாலும் பரவால்ல எங்கம்மா பேரையே போடுங்க” என்றாள்.

இன்னொரு பெண் “சார் நான் நாமினி யார் பேரைப் போடறதுன்னு முடிவு பண்ணிட்டு விமலாகிட்ட சொல்றேன் சார். இப்ப இருக்கற நாய போட்டா, பணத்துக்காக அந்த நாய் என்னைப் போட்ரும்” என்றாள்.

“இப்ப மட்டும் அது என்ன பண்ணுது?” என்ற இன்னொரு பெண்ணின் கிண்டலோ, அதற்கு எதிர்வினையாக அவர்கள் சத்தமாகச் சிரித்ததோ என் காதில் விழுந்தது போலவே நான் காட்டிக்கொள்ளவில்லை. அங்கிருந்து வெளியேறும்போது ஒரு பெண் விமலாவிடம் தணிந்த குரலில் “என்னடி நீயும் எத்தனை நாளைக்கு சும்மா இருப்ப, உன் மேனேஜரைக் கரெக்ட் பண்ணி, சத்தம் போடாம செட்டிலாயிரு” என்றாள். விமலா “வாய மூடு” என்று சொல்வது கேட்டது. வண்டியில் ஏறி அமர்ந்ததும் விமலா அனிச்சையாக “சாரி சார்” என்றாள்.

“சேச்சே அதெல்லாம் ஒரு பிரச்சனையுமில்ல” என்று அவளுக்குப் பதில் சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு கலாச்சார அதிர்ச்சியில் இருந்தேன் என்பதுதான் உண்மை. ஆண், பெண் உறவுகளில் விமலாவைச் சுற்றியிருந்தவர்களிடம் எந்தவிதமான போலித்தனமும் இல்லை என்பது என் மூளைக்கு எட்டினாலும், அதை நடைமுறையில் அப்பட்டமாகப் பார்க்கும்போது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்குத்தான் இல்லை என்பது என் அலுவலகம் வந்து நிதானமாக யோசித்தபோதுதான் புரிந்தது.

எல்லோருடனும் ஒட்டிக்கொள்ளும் இயல்பினால், இரண்டு மூன்று மாதங்களில் விமலா என் அலுவலகம் முழுக்க அறிமுகமான ஆளாக மாறிப்போனாள். வாரத்திற்கு ஒரு பாலிஸியாவது எடுத்துவிடும் அவளது திறமையால் எனக்கும் அலுவலக அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது என்பதும் நிஜம்தான். “உனக்கென்னப்பா, ஓடுற குதிரைல சவாரி பண்ற” என்கிற என் சக பணியாளர்களின் வார்த்தைகளில் விமலாவின் திறமை மட்டுமல்ல, அவளது உடலும் சேர்த்தே பேசப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். அவள் எனது வாகனத்தில் ஏறி அமரும் ஒவ்வொரு முறையும் சில கண்கள் எங்களை உற்று நோக்குவது எனக்கும் புரியாமலில்லை. அலுவலக மேசைகளை விமலா கடந்து செல்லும் நேரங்களில் அவள் செல்லும் திசைகளிலெல்லாம் திரும்பும் தலைகளைப் பார்ப்பது எனக்கும் கொஞ்ச நாட்களில் பழகிப்போனது. ஆனால் இது எதையும் விமலா பொருட்படுத்தியதே கிடையாது.

எனக்கும் ஆரம்ப நாட்களில் அவள் மேல் இருந்த கிளர்ச்சியான உணர்வு குறைந்து அவளை எனது ஏஜெண்டாக மட்டும் நடத்தும் மனநிலை வந்திருந்தது.

சில மாதங்கள் கழித்து விமலாவுக்கு புதிய வாடிக்கையாளர்களைச் சந்திப்பதற்கு எனது உதவி என்பது அவசியமில்லாமல் போனது. நானும் வேறு புதிய ஏஜெண்டுகளை தேர்ந்தெடுப்பது, அவர்கள் மூலமாக இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளை விற்பது போன்ற எனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தேன். அதிக பணம் முதலீடு செய்யக்கூடிய பெரிய வாடிக்கையாளர் என்று விமலா நினைக்கும் நபர்கள், அல்லது நீண்ட நாட்களாக முடிவெடுக்காமல் இழுபறியில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவற்றை முடித்துக்கொடுக்க மட்டுமே அவளுக்கு என் உதவி தேவைப்பட்டது.

சில நேரங்களில் விமலா அவளது சக ஏஜெண்டுகள் சிலருடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். சில ஆண் ஏஜெண்டுகளுடனும் கூட அப்படிச் செல்வாள். அவளுடைய இயல்பு அது என்பதால் நான் பெரும்பாலும் அவளது முகம் பார்க்கையில் புன்னகைத்தபடி கடந்துவிடுவேன். என்னைப்பார்த்த நொடியில் உடல் மொழியில் ஒருவித மரியாதையைக் காட்டுவதில் விமலா ஒருதடவை கூடத் தவறியதில்லை.

அலுவலகத்தில் மற்றவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட என்னைக் கண்டதும் சிரிப்பைக் குறைத்து தலைகவிழ்ந்து கொள்வாள். அவள் எனக்குத் தரும் தனிப்பட்ட மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. ஒருவிதத்தில் என்னுடைய மற்ற ஏஜெண்டுகளிடமிருந்தும் எனக்கு அதே மரியாதை கிடைக்க விமலாவின் இந்தப் பழக்கம் எனக்கு உதவிகரமாக இருந்தது. விமலாவை முன்வைத்து “ஆனாலும் நீ ஒரு சாமியார்ப்பா” என்று என் சக ஊழியர்கள் கிண்டல் செய்யும்போது மட்டும் மனதுக்குள் சிரித்துக்கொள்வேன்.

என் சக சேல்ஸ் மேனேஜர் ஒருவரது ஏஜெண்டான இளைஞன் ஒருவனுடன் மிக நெருக்கமாகப் பழக ஆரம்பித்திருந்தாள் விமலா. அவன் நல்ல அழகான இளைஞன், வசதியான வீட்டுப்பையனும் கூட. நானே அவர்களைச் சேர்ந்தார்ப்போல ஊருக்குள் வேறுவேறு இடங்களில் வைத்து சிலமுறை பார்த்திருந்தேன். அது குறித்து அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவனும் நல்ல திறன் படைத்த ஒரு ஏஜெண்டாக வளர்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவனோடு பழக ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் விமலா மாதாமாதம் எனக்குக் கொடுத்துக்கொண்டிருந்த பாலிஸிக்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்த போதுதான் அதை ஒரு சிக்கலாக உணர ஆரம்பித்தேன்.

ஒருநாள் அவளை அழைத்து இது குறித்துக் கடிந்து கொண்டேன். அவள் கடந்த சில மாதங்களாக வாங்கிய கமிஷன் விவரங்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டு, அவள் அடுத்த மாதத்தில் வாங்கக்கூடிய கமிஷனோடு ஒப்பிட்டு கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தேன். அவள் அடுத்து பார்க்கவிருக்கும் வாடிக்கையாளர்களின் பெயர், என்ன தொழில் செய்கிறார்கள் என்பதையும், அவர்களிடமிருந்து எந்தந்த தேதிகளில் பாலிஸியை எதிர்பார்க்கலாம் என்பதையும் எழுதித்தரச் சொன்னேன்.

அவளை இதுபோல நடத்திய விதம் அவளுக்குப் பிடிக்கவில்லை என அவளது முகபாவம் சொன்னது. “”பணம் சம்பாதிக்கற ஆசை போயிருச்சா மேடம்?” என்று நான் கேட்டபோது “பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும் சார்” என்று விட்டேத்தியாகப் பதில் சொன்னாள்.

”ஆனா உங்க பர்ஃபாமென்ஸ் குறைஞ்சா, கம்பெனில என்னோட உயிர எடுப்பாங்க மேடம்” என்று சற்று கடுமையான தொனியில் சொன்னேன். இது போன்ற கார்ப்பரேட் நடைமுறைகளை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.


”இனிமே ஒழுங்கா இருக்கேன் சார்” என்று பள்ளி மாணவி போலப் பதிலளித்தாள். எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.

“சரி போய் வேலையைப் பாரு, ஏதாவது தேவைன்னா கூப்பிடு” என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அந்த உரையாடலில் அந்த இளைஞனைப் பற்றிய எந்த ஒரு வார்த்தையும் இடம்பெறாமல் கவனமாகத் தவிர்த்திருந்தேன். எனக்குத் தேவை என்னுடைய ஏஜெண்டுகளிடமிருந்து புதிய பாலிஸி விண்ணப்பங்கள், அவர்களது தனிப்பட்ட விஷயங்களில் தலையைக் கொடுக்கக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்.

நான் ஒருநாள் புதிய பாலிஸி விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் அலுவலரின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, புதிதாக பாலிஸி எடுத்த ஒரு வாடிக்கையாளரின் பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல இருந்தது. ”இவரு யாரோட கஸ்டமர்?” என்று கேட்டேன். விமலாவின் புதிய நண்பனின் பெயரில் அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்திருந்தது.

அந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளரைப் பற்றி விசார்த்தபோது “டயர் கடை வச்சிருக்கார்ல சார், அவர்தான்” என்று பதில் சொன்னார் அந்த அலுவலர். ஒரு சந்தேகத்தில் விமலா எழுதிக்கொடுத்த அவளது வாடிக்கையாளர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். அதே வாடிக்கையாளர்தான். வருடத்திற்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பாலிஸி, அது வந்திருந்தால் அந்த மாதம் என்னுடைய டார்கெட்டை நெருங்கியிருந்திருப்பேன். விமலாவின் மேல் கோபமாக வந்தது.

மறுநாள் விமலா வந்ததும் அவளை எனது கேபினுக்கு அழைத்து அந்த வாடிக்கையாளரது பாலிஸி விண்ணப்பம் அவளது நண்பனான அந்த இளைஞனது பெயரில் எப்படி வந்தது என்று நேரடியாகக் கேட்டுவிட்டேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் “சார், அவனோட மேனேஜர் புது பாலிஸி எடுக்கலைன்னு ரொம்பத் திட்டறாருன்னு சொன்னான் சார், ரொம்ப பாவமா இருந்தது, அதான் அவனுக்கு அத எடுத்துக்கொடுத்தேன், கமிஷன் வந்ததும் எனக்குக் குடுத்திருவான் சார்” என்றாள்.

“ஓ உங்களுக்கு கமிஷன் வந்திரும், அதுனால இப்ப உங்களுக்குப் பிரச்சனை இல்லை. அடுத்த வருஷம் ரெனிவல் கமிஷன் வருமே, அதையும் எடுத்து தருவாரா அவரு, சரி அதை விடுங்க, எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பிஸினஸ் போச்சே, அத யாரு மேடம் தருவாங்க, உங்க ஃபிரண்டு தருவாரா? இங்க என்ன சாரிட்டியா நடத்தறோம், உங்க இஷ்டத்துக்கு பாலிஸிய இன்னொரு டீம் ஏஜெண்டுக்குத் தானம் பண்றதுக்கு” என்று சத்தமாகக் கேட்டேன்.

அலுவலகத்தில் சில தலைகள் உயர்ந்து எங்களை நோக்கித் திரும்பியது. எல்லோருக்கும் கேட்கட்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சத்தமாகவும் பேசினேன்.

அவள் என்ன தவறு செய்திருக்கிறாள் என்பது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

தலை குனிந்து அமர்ந்திருந்தாள். எனது ஆற்றாமை அடங்கவே இல்லை. “உங்க பர்ஸனல் ரிலேஷன்ஷிப்பெல்லாம் ஆஃபிஸுக்கு வெளிய வச்சுக்கணும், ஆஃபிஸுக்கு உள்ள இல்ல, இங்க நான் என்ன சொல்றனோ அதைச் செய்ங்க, இல்லைன்னா எனக்கு இந்த மேனேஜர் வேண்டாம்னு கம்ளெய்ண்ட் எழுதிக்கொடுத்துட்டு நீங்க இஷ்டப்படற டீம்ல போய் சேர்ந்துக்கோங்க, நான் உங்கள ரெக்ரூட் பண்ணி, ட்ரெய்னிங் கொடுத்து, உங்க கூட சேர்ந்து ரோடு, ரோடா அலைஞ்சு மேல கொண்டு வருவேன், மத்தவன் நோகாம நொங்கு திங்கணுமோ?” என்று அவளைக் கடிந்துவிட்டு எழுந்து சென்று விட்டேன்.

இரண்டு கேபின் தள்ளி அவளது நண்பனின் மேனேஜரும் அமர்ந்திருந்தான். ஆனால் நடப்பது எதுவும் காதில் விழாதது போல வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் விமலாவின் மேல் இன்னும் கோபம் வந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகும் அவர்களது நட்பு குறையவில்லை. ஆனால் பழையபடி பாலிஸிகள் விமலா மூலமாக வருவது குறைவில்லாமல் நடந்தது. ஒருநாள் என்னிடம் வந்து “சார் அந்த டயர் கடைக்காரர் பாலிஸிக்கான பணத்த அவன் கரெக்டா கொடுத்துட்டான் சார்” என்று என்னிடம் தயங்கியபடியே சொன்னாள் விமலா.

“அத ஏன் எங்கிட்ட சொல்ற, வேணும்னா நீ அவனுக்குக் கொடுத்த மாதிரியே ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் பாலிஸிய உன் பேர்ல லாகின் பண்ண சொல்லு அப்ப சந்தோஷப்பட்டுக்கறேன்” என்றேன். அவள் முகம் உடனே வாடி விட்டது.

அதன் பிறகு ஒருவார காலத்திற்கு விமலாவைப் பார்க்கவே முடியவில்லை. ராஜேந்திரன் சாரிடம் சொன்னபோது அவரும் அவளைப் பார்க்கவில்லை என்றார். அவளிடம் அவருக்கு ஒரு வேலை இருக்கிறது என்றும், நான் அவளைப் பார்த்தால் சொல்லும்படியும் சொன்னார். எனக்கோ விமலா இந்த வாரம் எந்தெந்த வாடிக்கையாளர்களைச் சந்திக்கப் போகிறாள், அவள் மூலம் எத்தனை பாலிஸிகள் விற்பனை ஆகும் என்கிற தகவலை என்னுடைய மேனேஜருக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.

விமலா அவளது அக்கா வீட்டில்தான் தங்கியிருக்கிறாள் என்று எனக்கு தெரியும். ஒருமுறை அந்த வீட்டை எனக்குக் காட்டியிருக்கிறாள். அவளது அக்காவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறாள். வேறு வழியில்லாததால் நேரில்போய்ப் பார்ப்போம் என்று அவளது அக்கா வீட்டுக்குக் கிளம்பிப் போனேன்.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் இருந்த புறநகர்ப் பகுதியில் இருந்தது அந்த வீடு. நான் போய் வாசலில் நின்று பார்த்தபோது வீடே மயான அமைதியில் இருந்தது. ஆனால் வாசல் கதவு லேசாகத் திறந்திருப்பது தெரிந்ததும் “விமலா, விமலா என்று மெதுவாக அழைத்தபடியே நின்றேன். உள்ளிருந்து சத்தமே வராததால் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நடு ஹாலில் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரு படுக்கையறையின் உள்ளே மின்விசிறி ஓடும் சத்தம் கேட்டது. அந்த அறையும் லேசாகத் திறந்துதான் இருந்தது. ”விமலா” என்று மீண்டும் அழைத்தபடியே அந்தப் படுக்கை அறையைத் தயக்கத்தோடு மெதுவாகத் திறந்தேன்.

படுக்கையில் விமலாவின் அக்கா அரைகுறை உடையோடு படுத்திருந்தாள். அவள் மேல் காலைத்தூக்கிப் போட்டபடி டவுசர் மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண் குப்புறப் படுத்திருந்தான். அருகிலிருந்த சேரில் பாதி குடித்த மது பாட்டில்கள், டம்ளர்கள், மிக்ஸர் தட்டுகள், மென்று துப்பிய கோழி எலும்புகள், நசுக்கிப்போட்ட சிகரெட் துண்டுகள் என்று சகலமும் நிறைந்து கிடந்தன.

திறந்த வீட்டில் தேவையில்லாமல் நுழைந்துவிட்டோம் என்று புரிந்தது. கதவை மெல்லச் சாத்திவிட்டு மீண்டும் நடு ஹாலுக்கு வந்து விமலா என்று சத்தமாக அழைத்தேன். சமயலறைக்குப் பின்னால் இருந்து “சார் நான் இங்க இருக்கேன்” என்று விமலாவின் குரல் சன்னமாகக் கேட்டது. வேகமாக அங்கு சென்றபோது வெளிப்புறம் தாழிடப்பட்ட அறைக்குள்ளிருந்து விமலா “சார் கதவைத் திறந்து விடுங்க சார், ப்ளீஸ்” என்று குரல் கொடுத்தாள்.

அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று குழப்பமாக இருந்தது. கதவைத் திறந்தவுடன் வேகமாக வெளியே வந்தவள் “வீட்டுக்குள்ள எப்படி சார் வந்தீங்க?” என்று கேட்டாள்.

”கதவு திறந்துதான் இருந்தது” என்றேன்.

மெல்ல அடியெடுத்து படுக்கை அறையை எட்டிப் பார்த்தவள் உள்ளே இருவரும் போதையில் உறங்குவதைப் பார்த்ததும் “மட்டையாயிட்டாய்ங்களா, அப்பாடா” என்றாள்.

பிறகு அந்த அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு இன்னொரு அறைக்குச் சென்று அவளது துணிமணிகள், சான்றிதழ்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை இரண்டு பெரிய பைகளில் அவசர அவசரமாகத் திணித்தாள். என் பக்கம் திரும்பி “சார், தயவுசெய்து என்னை ராஜேந்திரன் சார் ஆஃபிஸ்ல விட்ருங்க சார்” என்றாள். அவள் சொல்லாவிட்டாலும் நான் அதைத்தான் செய்திருப்பேன். வெளியே கிளம்பும்போது அவளது அக்கா படுத்திருந்த படுக்கையறையின் தாழ்ப்பாளை மிக மெதுவாக ஓசையெழுப்பாமல் திறந்து வைத்துவிட்டு, வாசல் கதவின் தாழ்ப்பாளை உள்கூடிப் பூட்டிவிட்டு வந்தாள்.

நேராக ராஜேந்திரன் சாருடைய அலுவலகத்திற்குச் சென்று விமலாவை இறக்கிவிட்டேன். “நீ கொஞ்ச நேரம் வெளிய இரு” என்று என்னை அனுப்பினார். நான் அவரது அறையை விட்டு வெளியேறுகையில் விமலா வெடித்து அழும் ஓசை கேட்டது. அருகில் இருந்த ஒரு டீக்கடைக்குச் சென்று ஒரு டீ சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை வாங்கிப் புகைக்க ஆரம்பித்தேன். பத்துப் பதினைந்து நிமிடங்களில் நான் இரண்டாவது சிகரெட்டைப் பற்ற வைத்தபோது ராஜேந்திரன் சார் என்னை மொபைலில் அழைத்தார். நான் அவரது அலுவலகத்தை நெருங்கும்போது விமலா ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

ராஜேந்திரன் சார் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். பிறகு “யாரையோ லவ் பண்றாளாம்ல, உனக்கும் தெரியும்ங்கறா, யார் அது?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரியலையே சார்…” என்று ஆரம்பித்தவன் பிறகு “என்னோட ஆஃபிஸ்லையா சார்?” என்று கேட்டேன்.

“அப்படித்தான் சொன்னா”

”இன்னொரு டீம்ல ஒரு ஏஜெண்ட் இருக்கான் சார், நல்ல பர்ஃபார்மர்தான். அவன் கூடத்தான் பழகிட்டு இருந்தாப்ல, ஆனா அந்தப் பையன்தானான்னு எனக்கு உறுதியா தெரியல”

“ஏன்டா உன் டீம்ல உள்ளவ ஆஃபிஸ்ல யார்கூட, எப்பிடிப் பழகறான்னு உனக்குத் தெரியலைன்னா அப்புறம் நீ என்ன மயிரு மேனேஜர்?”

”சார் பிஸினஸ் சம்பந்தமா நான் பேசலாம் சார், அந்தப் பொண்ணோட பர்ஸனல் ரிலேஷன்ஷிப் பத்தியெல்லாம் நான் எப்படி சார் கேட்க முடியும்” என்று ஆரம்பித்தவன் பிறகு, “ஆமா சார், கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் பாலிஸிய அந்தப் பையன் பேர்ல லாகின் பண்ணிட்டாப்ல சார், அப்ப கடிச்சு விட்டுட்டேன் சார், அந்தப்பையந்தான், ஆனா அதுக்கப்புறம் அந்த மாதிரி எதுவும் நடக்கல சார்” என்றேன்.

“லூஸா இவ” என்றவர், “ஐம்பதாயிரம் ரூபாய் பாலிஸிக்கு எவ்ளோ கமிஷன்?” என்று நேரடியாகப் பாயிண்டிற்கு வந்தார்.

“அதெல்லாம் அந்தப் பையன் கொடுத்துட்டான்னு சொன்னாப்ல”

“உனக்கு பிஸினஸ் போச்சேடா?”

”அதுனாலதான் சார் கடிச்சு விட்டேன்.”

“ஸீ… இந்தப் பொண்ணு கிட்ட என்ன தெரியுமா பிரச்சனை, ஒருத்தன் கொஞ்சம் அன்பா பேசிட்டா போதும், அவனுக்காக உயிரையே கொடுத்திருவா, ஏன்னா அம்மா, அப்பா யார்னே தெரியாம அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவ பார்த்தியா” என்றார்.

அப்ளிகேஷனில் அவள் தகப்பனார் பெயருக்கு எதிராக ஒரு கோடு போட்டது என் நினைவுக்கு வந்தது. “சார் அப்ப அவுங்க அக்கா?” என்று கேட்டேன்.

“அக்கான்னா சொந்த அக்காவெல்லாம் கிடையாது. எல்லாம் அதே டான்ஸ் ட்ரூப்ல உள்ள ஆளுகதான். தூத்துக்குடி பக்கத்துல ஒரு அனாதை ஆசிரமத்துல வளந்தவ இவ. அடி, உதை எல்லாம் சின்ன வயசுலையே அவளுக்கு பழகிப்போச்சு, இவள அங்க இன்சார்ஜா இருந்த ஒருத்தன் ரொம்ப நாளா ஹராஸ் பண்ணிக்கிட்டே இருந்திருக்கான், செக்‌ஷுவலாவும். கொடுமை தாங்காம ஒருநாள் அங்க இருந்து ஓடி வந்திருக்கா, இதெல்லாம் அவ சொன்னது, இன்னும் அவ சொல்லாம விட்ட கொடுமையெல்லாம் என்னென்ன இருக்கோ தெரியாது. அந்த சமயத்துல பக்கத்து ஊர்ல நடந்த திருவிழால கந்தவேலோட டான்ஸ் ப்ரொக்ராம் நடந்துக்கிட்டு இருந்திருக்கு.

எப்பிடியோ அங்க போனவ அந்தாள் கைல கால்ல விழுந்து அழுது அந்தாள் கூடவே கிளம்பி வந்திருக்கா. டான்ஸ் கத்துக்கிட்டு கந்தவேல் வீட்லயே கொஞ்ச நாள் இருந்திருக்கா, பிறகு க்ரூப்புக்குள்ளையே வேற மாதிரி பேச்சு அடிபடவும் இவ அக்கான்னு சொல்றாள்ல, அவளும் கந்தவேல் க்ரூப் டான்ஸர்தான். அவ வீட்ல போய் கந்தவேல் தங்க வச்சிருக்காப்ல, அவ அக்கா கந்தவேல் க்ரூப்ல இருந்துகிட்டே ஒரு ப்யூட்டி பார்லர் நடத்தறா, அவ போக்கு கொஞ்சம் சரியில்லைன்னு விமலா கொஞ்ச நாளா சொல்லிக்கிட்டு இருந்தா, நிறைய ஆம்பள சகவாசம், இவுங்க யாரையும் கண்ட்ரோல் பண்றதுக்கு ஆளில்ல பார்த்தியா, அதுதான் பிரச்சனை. அவ அக்காக்காரியோட இப்போ சுத்தறவன் ஒரு வேலைவெட்டி இல்லாதவன், டெய்லி தண்ணியப் போட்டுட்டு இவளை டார்ச்சர் பண்ணியிருக்கான்”

“எதுக்கு சார்?”

“வேற எதுக்கு, பணம் கொடுன்னுதான். இத்தனைக்கும் மாசா மாசம் அந்த வீட்ல இருக்கறதுக்கு இவ பணம் கொடுத்துக்கிட்டுதான் இருந்தா” என்றார்.

”அவ அக்கா கூட இப்ப இருக்கறவன் ஒரு கடை நடத்தி நட்டமாயிட்டான். இன்னொரு தொழில் ஆரம்பிக்கப் போறானாம். இவகிட்ட பணம் கொடுன்னு அரிச்சிருக்கான். இவ இல்லைன்னு சொன்னவுடன அடிச்சிருக்கான். இந்த தடவை அவ அக்காவும் சேர்ந்து திட்டி அடிச்சிருக்கா. அவ அக்காவுக்கும் இங்க தொழில் ஒண்ணும் சரியில்ல. இன்னொன்னு அந்த க்ரூப்ல விமலா மெய்ன் டான்ஸர், அவ அக்கா சைடு டான்ஸர்தான். அந்த ஈகோ பிரச்சனை வேற ரெண்டு பேருக்கும் ஏற்கனவே உண்டு. சொந்த அக்காவா இருந்தா அது ஒரு பிரச்சனையா இருந்திருக்காது. அடிச்ச அடி தாங்க முடியாம இவ ரூமுக்குள்ள போய் கதவ பூட்டிக்கிட்டு ஒளிஞ்சிருந்திருக்கா. நல்லவேளை நீ போன, மொத நாள் ராத்திரியில இருந்தே அவ அந்த ரூம்லதான் ஒளிஞ்சிருந்திருந்தாளாம்” என்றார்.

“இப்ப எங்க சார் அனுப்பியிருக்கீங்க விமலாவ?”

“கே.கே நகர்ல ஒரு வொர்கிங் வுமன் ஹாஸ்டல் இருக்கு, எனக்குத் தெரிஞ்ச இடம், அங்க அனுப்பியிருக்கேன்”

“சார், ஒரு கேள்வி, ரொம்ப நாளா கேட்கணும்னு இருந்தேன். விமலாவ உங்களுக்கு எப்பிடிப் பழக்கம்?”

“அவ அக்கான்னு சொல்றாள்ல, அந்தப் பொண்ணு மொதல்ல நம்ம ஆஃபிஸ் பக்கம்தான் பியூட்டி பார்லர் வச்சிருந்தது. என் பொண்ணு கல்யாணத்தப்போ இவுங்க ரெண்டு பேரும்தான் ப்யூட்டீஷியன் வேலை பார்த்தாங்க, அந்தப் பழக்கம்தான், அப்புறம் ஒருநாள் இவ கதைய கேட்டேன், ரொம்ப கஷ்டமா இருந்தது, விமலாவுக்கு இந்த டான்ஸ் ஃபீல்ட விட்டு வெளிய போகணும், இப்ப இருக்கற அவ அக்காவ விட்டும் வெளிய போகணும், டான்ஸ விட்டுட்டு வேற எதாவது தொழில் செய்யணும்னு ஆசை. ஏன்னா இதுவும் கிட்டத்தட்ட சினிமா ஹீரோயினோட லைஃப் மாதிரிதான். மார்க்கெட் இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சரணும், கொஞ்சம் வயசானாலும் அடுத்த ஆளை ரெடி பண்ணிடுவாங்க, புதுமுகங்களுக்குத்தான் வரவேற்பு அதிகம். இப்ப இவ ஃபேமஸா இருக்கா, நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுல்ல, ஆனா இத்தனை நாள் அவள வச்சுப் பார்த்ததுக்கு அவ அக்கா பணம் கேட்கறாளாம், அதுக்குத்தான் உங்கிட்ட இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டா சேர்ந்து சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா, இதுக்கு முன்னாடி கிடைச்ச வேலையெல்லாம் பார்த்திருக்கா” என்றார்.

எனக்கு விமலாவைப் பற்றிய சித்திரம் ஓரளவு தெளிவாகத் துலங்கத் தொடங்கியது. அதற்கு மேல் ஏதாவது விசாரித்தால் “என்னவாம் ரொம்ப அக்கறைப்படற” என்று எதையாவது கிண்டலாகக் கேட்டு வைப்பார் என்பதால் “சரிங்க சார், விமலாவுக்கு எல்லாம் சரி ஆகிருச்சுன்னா ஆஃபிஸ் பக்கம் வரச்சொல்லுங்க” என்று கிளம்பினேன்.

”சரி அந்தப் பையனைப் பத்தி கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லு” என்றார்.

”சார் அத நான் எப்பிடி சார் விசாரிக்கறது?”

”என்னமோ அவன லவ் பண்றாளாமே?”

“சீரியஸா அப்படித்தான் சொன்னாப்லையா சார்?”

”ஆமாமா, அவதான் சொல்றா, அவன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கானாமே?” என்றார். அவர் கேட்ட தொனியிலேயே அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை என்பது புரிந்தது.

பதிலேதும் சொல்லாமல் நான் மெல்லச் சிரித்தேன். அவரும் சிரித்துவிட்டு “சரி கிளம்பு” என்றார்.

ஆச்சரியமாக விமலா மறுநாளே அலுவலகம் வந்திருந்தாள். எப்போதும் போல அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். விமலாவும் அந்த இளைஞனும் சேர்ந்து ஒரு ரெடிமேட் கடை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், அதற்காக இடம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளில் இருவரும் தீவிரமாக இருக்கிறார்கள் என்றும் எனக்கு என் சக ஊழியர்கள் மூலம் தகவல் வந்தது. அதை ராஜேந்திரன் சாரிடம் சொன்னபோது ”ஓஹோ அப்படியா?” என்றார். அவரது மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதை அவரது குரலை வைத்து என்னால் இனம்காண முடியவில்லை.
அதன் பிறகான சிறிது காலங்களில் விமலாவின் முகத்தில் ஒரு ப்ரத்யேகப் பூரிப்பு தெரிந்தது. ஏற்கனவே அழகான பெண்தான் அவள். இப்போது மேலும் அழகாக இருந்தாள். முன்பெல்லாம் அலுவலகம் வரும்போது சேலையை நேர்த்தியாகக் கட்டியிருந்தாலும் முகத்தில் மேக்கப்பெல்லாம் இருக்காது. ஆனால் கொஞ்ச நாட்களாக அலங்காரங்களில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தாள். நடையிலேயே ஒருவித துள்ளல் இருந்தது. காதலின் உச்சகட்டப் பரவசத்தில் இருக்கிறாள் என்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன். இதை ராஜேந்திரன் சாரிடம் நேரில் சொன்னபோது “பருவத்துல பன்னிக்குட்டி கூட அழகாத்தான் இருக்கும்” என்று அந்த உரையாடலை உடனடியாக முறித்தார். ஆனால் அதைத்தாண்டி இந்த விஷயத்தை அவர் தீவிரமாக யோசித்தார் என்று அவரது முகபாவம் சொன்னது.
புதிதாக இன்ஷ்யூரன்ஸ் பாலிஸிகளை எடுப்பதிலும் விமலா மிகத்தீவிரமாக இருந்தாள். ஒருமுறை ஒரேநாளில் மூன்று புதிய பாலிஸிகளுக்கான விண்ணப்பங்களை அவள் கொண்டுவந்தபோது நானே அசந்துவிட்டேன். ”என்ன பிஸினஸ் பட்டையக் கிளப்புது?” என்று நான் கிண்டலாகக் கேட்டதற்கு “தெரியாத மாதிரியே கேட்காதீங்க சார், அக்காவுக்கு பணம் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கேன். அது ஒரு செட்டில்மெண்ட் மாதிரின்னு வைங்களேன், இன்னொன்னு… ஒரு ரெடிமேட் கடை போடலாம்னு ஒரு ஐடியா” என்றாள்.

”தனியாவா, பார்டன்ஷிப்பா?” என்று கேட்டேன். அந்தக் கேள்வி அர்த்தமற்ற ஒன்று என்று எனக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால் அதற்கான பதிலை அவள் வாயால் சொல்ல வைக்க வேண்டும் என்கிற உந்துதல் எனக்கு இருந்தது. எங்களுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் உட்கார்ந்திருந்த அவளது காதலனைக் கண்களால் சுட்டி “அவரோடதான்” என்றாள். ‘அவன்’ எப்போது “அவர்’ ஆனார் என்கிற எனது ஆச்சரியத்தை “ஓ அவரு!!!” என்றபடி என் புருவங்களை உயர்த்தி அவளுக்குக் கடத்தினேன். “என்ன இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க போற ஆளில்லையா சார்?” என்றாள்.

“உனக்குப் பிரச்சனையில்லன்னு தெரியும், அவுங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டீங்களா?”

“வீட்ல சொல்லீட்டேன், எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்றாப்ல சார், பிரச்சனை எதுவும் பண்ணமாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கைதான்” என்றாள்.

அதைச் சொல்லும்போது உண்மையிலேயே அவளது முகம் கொஞ்சம் அவநம்பிக்கையோடுதான் இருந்தது. முதல் தடவையாக உண்மையிலேயே மனதின் அடியாழத்திலிருந்து அவளது எதிர்காலம் குறித்துக் கவலைப்பட்டேன். ’விமலா பெற்றோர்கள் யாரெனத் தெரியாதவள், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள், நடன நாட்டியக் கலைக்குழுவில் முக்கியமான, அந்த வட்டாரத்தில் சற்றே பிரபலமான நடனக்கலைஞர் என்பதெல்லாம் அந்தப் பையனின் வீட்டில் உள்ளவர்களுக்கு, ஏன் அந்தப் பையனுக்கேகூடத் தெரியுமா, தெரியாதா?’ என்ற கேள்விகளெல்லாம் எனக்குள் எழுந்தபடியே இருந்தன. அதை அவளிடம் நேரடியாகக் கேட்கும் மனது எனக்கு இல்லை. திருமணம் வரை யோசித்தவள் நிச்சயம் அதையெல்லாம் அந்தப் பையனிடம் சொல்லியிருப்பாள் என எனக்கு நானே பதில் சொல்லியபடி சமாதானமாகிக் கொண்டேன். ஆனால் ஒரு சாதாரண, சராசரி குடும்பத்தில் மேடைகளில் நடனமாடும் ஒரு பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்வார்களா என்கிற கேள்வியெல்லாம் எனக்குள் எழாமலில்லை.

இதே விமலாவைப் போன்ற நடனமாடும் பெண் ஒருவரை நான் திருமணம் செய்யப்போகிறேன் என்று என் அம்மாவிடம் சொன்னால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்துவிட்டு, என்னை ஓடவிட்டு விளக்குமாற்றால் அடிக்கும் காட்சி என் கண் முன்னால் ஓடியது. என்னுடன் வேலை பார்த்த காயத்ரி மேடத்தை ஒருநாள் அறிமுகப்படுத்தியதற்கே “இப்பிடி ஊர் சுத்தற வேலை பாக்குதே இந்தப் பொம்பள, அவ புருசன் இதுக்கெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டானா?” என்று கேட்ட ஆள்தான் என் அம்மா. அதனால் எனக்கு அந்தப் பையனை நினைத்துக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதன்பிறகு அந்தப் பையனை பார்க்கும்போது லேசாகப் புன்னகைக்கும் அளவுக்கு நான் அவர்களது காதலை எனக்குள் மெல்ல அங்கீகரிக்கவும் ஆரம்பித்திருந்தேன்.

ஒருநாள் இருவருமாக எனது கேபினுக்கு வந்தார்கள். நிமிர்ந்து பார்த்தவனிடம் “சார் ஒரு ரெண்டு மூணு நாள் வரமாட்டேன், வெளியூர் போறோம்” என்றாள்.

“ரெண்டு பேரும் சேர்ந்தா?”

“ஆமா சார்”

“என்ன எதுவும் பாலிஸி எடுக்கவா, எந்த ஊருக்கு?”

“பாலிஸிக்கு இல்ல சார், ரெடிமேட் கடை வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்குன்னு சொன்னேன்ல சார், அதுக்காக திருப்பூர் போறோம், எங்கெங்க பர்ச்சேஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியாவுக்காக”

“ஓ… ஓக்கே ஆல் த பெஸ்ட்” என்று எழுந்து இருவருக்கும் கை கொடுத்தேன். நான் அந்தப் பையனுக்குக் கை கொடுத்தபோது விமலாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் தெரிந்தது.

“ராஜேந்திரன் சார் கிட்ட சொல்லீட்டியா?” என்று கேட்டேன்.

கொஞ்சம் தயங்கிவிட்டு “சொன்னேன் சார், அதுக்கு ராஜேந்திரன் சார் ‘கொஞ்சம் பொறுமையா இரு, நீ ரொம்ப அவசரப்படற’ அப்படீன்னு சொன்னாரு, ஆனா இவரு இப்பவே போகணும்னு சொல்றாரு” என்றாள்.

ராஜேந்திரன் சாரின் பேச்சை மீறித்தான் போகிறாள் என்பதை நான் ரசிக்கவில்லை. அதை அவளும் புரிந்துகொண்டாள். “சரிங்க சார், நாங்க கிளம்பறோம்” என்று உடனடியாக நகர்ந்துவிட்டாள். இதை ராஜேந்திரன் சாரிடம் சொல்ல வேண்டுமா, கூடாதா என்று எனக்குத்தான் குழப்பமாக இருந்தது. ஆனால் விமலா சம்பந்தப்பட்ட எதுவானாலும் ராஜேந்திரன் சாரிடம் சொல்லிவிடுவது என்கிற என்னுடைய அப்போதைய நிலைப்பாட்டின் படி அவள் அங்கிருந்து சென்றது ராஜேந்திரன் சாருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டேன்.

ராஜேந்திரன் சார் அவளை அழைத்து விசாரித்தாரா இல்லையா என்பது குறித்தெல்லாம் அதன் பிறகு நான் யோசிக்கவில்லை. அடுத்த வாரம் முழுக்கவே விமலாவை நான் பார்க்கவும் இல்லை. அந்த நேரம் மார்ச் மாதக் கடைசி மற்றும் நிதி ஆண்டின் இறுதி என்பதால் என்னுடைய பிற ஏஜெண்டுகளை விரட்டி, புதிய பாலிஸிகளை எடுப்பதில் என் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருந்தேன். இடையில் ஒருநாள் விமலாவை அழைத்து அவள் திருப்பூரிலிருந்து திரும்பி விட்டாளா என்று விசாரித்துவிட்டு, நிதி ஆண்டுக்கடைசி ஆதலால் சீக்கிரமாக அலுவலகம் திரும்பி வந்து புதிய பாலிஸிகள் ஏதேனும் விற்றுத்தந்தால் எனக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டேன். உண்மையில் அந்த வருட இறுதியை அலுவலக ரீதியிலான, எந்தவித மேலிட அழுத்தங்களும் இல்லாமல் நான் கடந்ததற்கு விமலாவின் பங்களிப்பு பாதிக்கும் மேலாக இருந்தது என்பதும் உண்மைதான்.

மார்ச் முடிய இரண்டு வாரங்களே இருந்தது. எங்களது மொத்த அலுவலகமும் பரபரப்பாக இருந்தது. விமலாவும் அவளது பங்களிப்பாக இரண்டு மூன்று பாலிஸிக்களை விற்றுக்கொடுத்தாள். ஆனால் கொஞ்சக்கூடச் சுரத்தே இல்லாமல் வேலை பார்த்தாள். வருட இறுதியில் எனக்கு உதவியாக இருக்கும் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே அதையும் செய்தாள் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவள் ஏன் அப்படி இருந்தாள் என்பதை அவளிடம் கேட்டுத் தெளிவு பெறுவதற்கு என்னுடைய அப்போதைய அலுவலகச் சூழ்நிலை இடம் தராமல் இருந்தது.

மார்ச் மாதப் பரபரப்புகள் முடிந்ததும், ஏப்ரல் மாதத்தின் முதல் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்தது போல அலுவலகமே வெறிச்சோடிப்போய் இருந்தது. விமலா அலுவலகத்திற்கு வரவே இல்லை. என்னுடைய மற்ற ஏஜெண்டுகளிலும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானோர் வராததால் நான் அவள் வராததைக் குறித்து யோசிக்கவும் இல்லை. ஏப்ரலின் இறுதியில் பாலிஸி விற்பனையில் என்னுடைய ஏஜெண்டுகளும் நானும் எங்களுடைய மதுரைக்கிளையின் இரண்டாமிடத்தைப் பிடித்திருந்தோம் என அறிவிக்கப்பட்டு எங்களுக்கு பாராட்டு விழாவெல்லாம் நடந்தது. ஏஜெண்டுகள் விற்ற பாலிஸி எண்ணிக்கையில் மிகக்குறைந்த காலத்திலேயே விமலா மூன்றாமிடம் பிடித்திருந்தாள். தனிப்பட்ட முறையில் விமலாவை நான் அழைத்திருந்தும் பாராட்டு விழா நிகழ்வுகள் எதிலும் அவள் கலந்துகொள்ளவில்லை. அவளுக்குக் கிடைத்த பரிசுகளை அவள் சார்பாக நான்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

ஏப்ரல் மாதம் முழுவதுமே விமலா அலுவலகத்திற்கு வரவில்லை. மே மாத ஆரம்பத்தில் நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு தனியார் வங்கியிலிருந்து எனக்கு கூடுதல் சம்பளத்தில் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று ஒரு குழப்பத்தில் ஆழ்ந்துபோனேன். நான் குழப்பத்திலிருக்கும்போது அழைக்கும் நபர் ராஜேந்திரன் சார்தான். எனவே எப்போதும் போல அவரை அழைத்து எனக்குக் கிடைத்திருக்கும் புதிய வேலை வாய்ப்பைப் பற்றிச் சொன்னபோது, எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, மறுநாள் என்னை அவரது வீட்டுக்கு வரச்சொன்னார்.

மறுநாள் அதிகாலையிலேயே எனக்கு விமலாவிடமிருந்து அழைப்பு வந்தது. அடுத்த முனையில் விசும்பும் சத்தம் மட்டுமே கேட்டது. நான் “ஹலோ விமலா” என்றவுடன் வெடித்த அழுகைக்குப் பிறகு “சார், ராஜேந்திரன் சார் இறந்துட்டாங்க சார்” என்று தேம்பியபடி சொன்னாள் விமலா. மற்ற விவரங்களை விசாரித்தபின் அழைப்பைத் துண்டித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாகப் படுத்திருந்தேன். திடீரென ஒரு சூனிய வெளிக்குள் யாரோ என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டது போலிருந்தது. ராஜேந்திரன் சார் இறந்துபோனதை ஒரு நொடி மறந்து, இப்போது இந்த வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்று அவரைத்தவிர வேறு யாரிடம் போய்க் கேட்பது என்றேல்லாம் யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

எட்டுமணி வாக்கில் ராஜேந்திரன் சார் வீட்டுக்குப் போனபோது தெரு முனையிலேயே கூட்டம் கூட ஆரம்பித்திருந்தது. அவரது மகள் என்னருகே வந்து கைகளைப் பிடித்துக்கொண்டாள். “என்ன ஆச்சு?” என்று கேட்டேன். “நைட்டு ஒரு ரெண்டு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு, பக்கத்துல உள்ள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனோம். மாஸிவ் அட்டாக், ஏற்கனவே ஒரு அட்டாக் வந்த ஆள் வேற, வரும்போதே இறந்துட்டாருன்னு சொல்லிட்டாங்க” என்றாள். ராஜேந்திரன் சாரின் பேத்தியை விமலா தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தவளது கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன. அமைதியாக என்னருகில் வந்து நின்று கொண்டிருந்தாள். அந்தக் கூட்டத்தில் இருந்த இரண்டு மூன்று பேரின் பார்வை எங்கள் மேல் திரும்ப ஆரம்பித்ததும் அங்கிருந்து மெல்ல விலகி உள்ளே சென்று ராஜேந்திரன் சாரின் உடலைப் பார்த்து அமைதியாக நின்றேன். எனக்கும் அவருக்குமிடையே இத்தனை வருடங்களில் நடந்த சம்பவங்கள் நினைவின் இடுக்குகளிலிருந்து அலையலையாய் எழுந்து வந்தது. அவரது உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை அங்கிருந்தேன். அதுவரை விமலா என்னருகிலேயே அமர்ந்திருந்தாள். பிறகு விமலாவிடம் ஒரு தலையசைப்பின் மூலம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

புதிய நிறுவனத்தில் சேர்வதற்காக நான் எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோது எனக்கு ஒரு மாதம் நோட்டீஸ் பீரியட் என்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் விமலாவை அழைத்து நான் வேறு நிறுவனத்திற்குப் பணிபுரியப்போவதைப் பற்றிச் சொல்லிவிட்டு, நான் இங்கே பணியில் இல்லாவிட்டாலும் அவள் தொடர்ந்து இதே கம்பெனியில் ஏஜெண்டாகப் பணிபுரியலாம் என்று சொன்னேன். அவள் எதையும் சிரத்தை எடுத்துக் கவனித்ததாகத் தெரியவில்லை. “இல்ல சார் போதும், இனிமே இங்க எதுவும் பண்றதா இல்ல” என்றாள். ”ஏன் ரெடிமேட் கடைய டெவலப் பண்ணப் போறியா?” என்று கேட்டேன்.

”சார் அதைப்பத்திப் பேச வேண்டாம் சார் விட்ருங்க” என்றாள்.

“ஏன் என்னாச்சு எதுவும் செட் ஆகலியா”

“இல்ல சார், அதெல்லாம் நல்லாதான் செட்டாச்சு, நாந்தான் இப்போ வேணாம்னு நினைக்கிறேன்” என்றாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் என்ன பிரச்சனைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டபோது பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பிறகு..

”நாந்தான் என் தகுதி என்னன்னு தெரியாம வாழ்க்கைல சில விஷயங்களுக்கு தேவையில்லாம ரொம்ப ஆசைப்பட்டுட்டேன் சார்”

”கடை வைக்கறதுக்கு என்னம்மா தகுதி, ஏன் உன் அக்கா கூட எதுவும் பிரச்சனையா, பணம் கேட்டு டார்ச்சர் பண்றாங்களா?”

“அவ மேல என்ன சார் தப்பு இருக்கு, இன்னொன்னு உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். இப்ப நான் ஹாஸ்டல காலி பண்ணிட்டு திரும்பவும் அக்கா கூடத்தான் இருக்கேன்”

“ஏன் என்ன ஆச்சு, உங்க அக்காவோட ஒரு ஆள் இருந்தானே, அவன் உன்னை அடிக்கவெல்லாம் செஞ்சானேமா, திரும்ப எப்படி அங்க போன?”

”அக்காவையும் அவன் அடிப்பான் சார், பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு இப்போ அக்கா அவன கழட்டி விட்ருச்சு, அக்காவுக்கும் வேற ஆள் யாருமில்ல, எனக்கும் யாருமில்ல, திரும்ப வந்திருடின்னு கூப்பிட்டா, எனக்கும் அவள அப்படியே நட்டாத்துல விட இஷ்டமில்ல சார், நாங்க இப்பிடித்தான் சார், அடிச்சுக்குவோம், திரும்பி ஒண்ணா சேர்ந்துக்குவோம், அவளுக்கும் என்னை விட்டா ஆளில்லை, எனக்கும் அவள விட்டா வேற ஆளில்லை”

“சரி அப்ப உனக்கு கல்யாணமாயிருச்சுன்னா”

“அப்படி ஒண்ணு நடந்தா பார்க்கலாம் சார், அதுதான் நான் சொன்னேனே, நான் என் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டுட்டேன்னு, அதெல்லாம் எனக்கு ஒத்து வராது சார்”

“அந்தப் பையன்கூட எதாவது பிரச்சனையா”?

விமலா பதிலேதும் சொல்லவில்லை. சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள். பிறகு “இனிமே இங்க வரமாட்டேன்னு உங்க கிட்ட எப்பிடி சொல்றதுன்னுதான் சார் யோசிச்சுக்கிட்டே இருந்தேன். நல்ல வேளை நீங்களே வேற வேலைக்குப் போறீங்க. இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்டா வேலை பார்த்ததும் நல்லதுதான் சார், கொஞ்சம் கடன அடைச்சிருக்கேன். கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். போதும் சார்” என்றாள்.

“அடுத்து என்ன செய்யறதா ஐடியா?”

“இப்போதைக்கு எந்த யோசனையும் இல்ல சார், விதி போற போக்குல போக வேண்டியதுதான்”

எனக்கு அவள் எதிலோ மனதளவில் மிக மோசமாகக் காயமடைந்திருக்கிறாள் என்று உறுதியாகத் தெரிந்தது. முதலில் அது ராஜேந்திரன் சாருடைய திடீர் மரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். பிறகு நான் பல நேரங்களில் வேலை விஷயமாக அவளைக் கடிந்து பேசியதுண்டு, அதுதான் காரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். பின்பு அவளுக்கும் அவளது காதலனுக்கும் ஏதெனும் பிணக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று யோசித்து, அது மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் அதை நேரடியாக அவளிடம் கேட்டுவிடும் அளவுக்கு அவள் எனக்கு நெருக்கமான ஒரு வெளியை ஏற்படுத்தித் தரவில்லை, அல்லது நான் அப்படி நினைத்துக் கொண்டேன். ஒரு விதத்தில் ஆரம்பத்திலிருந்தே அவளது தனிப்பட்ட விவகாரங்களில் நானாக தலையைக் கொடுக்காமல் இருந்ததும் என்னுடைய அப்போதைய மனநிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

அதன் பிறகு நான் சேர்ந்திருந்த வேலைக்காக நான் திருநெல்வேலி செல்ல வேண்டியிருந்தது. புதிய அலுவலகம், புதிய ஊர். நான் அதில் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு வருடங்கள் உருண்டோடிப் போனதே தெரியவில்லை. இதற்கிடையே எனக்குத் திடீரெனத் திருமணம் நிச்சயமாகி, நடந்து ஒரு ஆண் மகவுக்குத் தகப்பனாகியிருந்தேன்.

கோவில்பட்டிக்கு அருகே இருந்த என் மாமனாரின் சொந்த ஊரான ஒரு சின்ன கிராமத்தில் வெகு விமர்சையாக வருடம் தோறும் நடக்கும் அய்யனார் கோவில் திருவிழாவிற்காக குடும்பத்தோடு சென்றிருந்தேன். முளைப்பாரியும், கெடாவெட்டும், முறைப்பெண்கள், முறைப்பையன்கள் மீது மஞ்சள் தண்ணீரை வாரியிறைத்தபடியான விளையாட்டுமாய் திருவிழா களை கட்டியிருந்தது. கெடாவெட்டி, பூசைகள் முடிந்து மதிய உணவே நான்கு மணிக்கு மேல் தயாராக, கழுத்துவரை தின்ற வெள்ளாட்டுக்கறி தந்த கிறக்கத்தில் உறங்கிப் போயிருந்தேன். நல்ல உறக்கத்தில் கனவைப்போல அந்த அறிவிப்பு கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். “உங்கள் விம்லா” கந்தவேலின் குரலேதான் அது.
இரவு பத்து மணி ஆகியிருந்தது. வேகமாக உடைகளை அணிந்து வெளியே வந்தபோது என் மாமனாரின் மொத்தக் குடும்பமும் வீட்டு வாசலில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்தவாறு மதுரையிலிருந்து வந்திருந்த நடன நாட்டியக் குழுவின் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் ஒரு சொந்தக்கார வாண்டு எழுந்து நின்று நான் அமர ஒரு நாற்காலியைக் காலி செய்து கொடுத்தது. “உக்காருங்க மாப்ள” என்றார் என் மாமனார். அது எதிலும் என் கவனம் செல்லவில்லை. கண்களை இடுக்கிக் கொண்டு ஏழெட்டு வீடுகள் தள்ளிப் போடப்பட்டிருந்த மேடையைக் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். முதலில் சற்று குழப்பமாக இருந்தாலும் மேடையில் ஆடிக்கொண்டிருந்தது விமலாவேதான்.

”ஏங்க சாப்பிடறீங்களா?” என்று என் அருகில் வந்து கேட்ட என் மனைவியின் கேள்விக்கு ’வேண்டாம்’ என்று கைகளாலேயே பதில் சொல்லிவிட்டு நேராக விடுவிடுவென்று மேடையை நோக்கி நடந்தேன். அருகே செல்லச்செல்ல அது விமலாதான் என்று உறுதியாகத் தெரிந்தது. லேசாக உடல் பூசினாற்போல இருந்ததைத் தவிர அவளிடம் வேறு வித்தியாசமில்லை. மேடைக்குக் கீழே இருந்த கந்தவேலைப் பின்புறமாக நெருங்கி அவரது தோள்களைத் தொட்டேன். திரும்பியவருக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. சின்னத் தடுமாற்றத்திற்குப் பிறகு “சார் நீங்களா?” என்று கேட்டுவிட்டு எழுந்து நின்று அவரது இருக்கையில் என்னை உட்காரச் சொன்னார். நான் கண்களால் விமலாவைச் சுட்டிக்காட்டினேன். “திரும்ப ஆட வந்து ரெண்டு வருஷம் ஆச்சு சார். நான் கூட வேண்டாம்னு சொன்னேன். பிடிவாதமா நான் ஆடறேன்னு வந்திருச்சு சார்” என்றார். அவரது உடல் மொழி ஏதோ குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒருவனின் உடல் மொழியோடு ஒத்திருந்தது.

“இந்தப் பாட்டு முடியட்டும் சார்” என்றார். நான் அமைதியாகத் தலையசைத்தேன்.
பாடல் முடிந்ததும் அங்கிருந்த ஒரு சிறுவனை மேடைக்குப் பின்புறம் அனுப்பி, விமலாவை அழைத்து வரச் சொன்னார்.

“என்னண்ணே கூப்பிட்டீங்களா?” என்று கேட்டபடியே வந்த விமலா முதலில் என்னைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.

பிறகு “சார்” எனச் சத்தமாகக் குரலெழுப்பியபடியே என்னருகே வந்தவள் என் கைகளை இறுக்கப் பிடித்துக்கொண்டு “எப்பிடி இருக்கீங்க சார், நல்லாருக்கீங்களா சார், என்ன சார் இந்த ஊர்ல, என்ன சார் தொப்பையெல்லாம் போட்டுட்டீங்க” என்றபடி கலகலவெனப் பேச ஆரம்பித்தாள். அது என் மாமனார் ஊரென்பதாலும், எனக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத என் மனைவி வழி உறவினர்கள் நிறைந்த ஊர் என்பதாலும், அவள் நடன உடையோடு, அதீத மேக்கப்போடு என் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசியது எனக்குக் கூச்சமாக இருந்தது.

என் மாமனார் வீட்டைச் சுட்டிக்காட்டி, அதுதான் என் மாமனார் வீடு என்று அவளிடம் சொன்னேன். “பார்த்தீங்களா சார், உங்க கல்யாணத்துக்குகூட என்னைக் கூப்பிடல, நீங்களும் என்னை அப்படியே கழட்டி விட்டுட்டீங்க பார்த்தீங்களா?” என்று கோவப்படுவது போலவே சிரித்தபடி பேசினாள். இரண்டு வருடங்களுக்கு முன் அவள் என்னிடம் வலிந்து கடைபிடித்த ஒரு சிறு விலகல் காணாமல் போய் மிக இயல்பாக என்னைத் தொட்டுப் பேசிக்கொண்டிருந்தாள். நீண்ட நாள் கழித்து என்னைப் பார்த்ததில் உண்மையிலேயே அவள் மகிழ்சியடைந்திருந்தாள் என்பது புரிந்தது.

”சார் இன்னும் ரெண்டே பாட்டுதான். அதுக்கப்புறம் ஏதோ மொளப்பாரி தூக்கிட்டுப் போவாங்களாம். அரை மணிநேரம் ப்ரேக். இங்கேயே இருங்க, முடிச்சுட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு மேடையின் பின்புறமாகச் சென்றுவிட்டாள்.

நான் சிறிது நேரம் கந்தவேலுடன் பேசிக்கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் மாமனார் வீட்டுக்கு வரச்சொன்னேன். “அவசியம் சார்” என்றார். நான் என் மாமனார் வீட்டுக்கு வந்து வாசலில் அமர்ந்து கொண்டேன்.

ஆடல், பாடல் நிகழ்ச்சி சீக்கிரமே முடித்துக்கொள்ளப்பட்டதும் ஊரின் ஒரு முனையிலிருந்து கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. என் மனைவியின் உறவினரான சில பெண்களும் அதில் கலந்துகொள்ளக் கிளம்பினார்கள்.

கந்தவேலும், விமலாவும் என் மாமனார் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். முழு மேக்கப்போடு சுடிதார் டாப்ஸ், ஜீன்ஸ் பேண்டில் இருந்த விமலாவின் மீது தெருவின் இருபுறமுமிருந்த நூற்றுக்கணக்கான கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அவர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்ததும் நான் என் மனைவியை அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். என் மனைவி, மாமனார் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு ஆட்டக்காரி என்னைத்தேடி வீட்டுக்கு வந்தது அசூயையாக இருந்தது என்பது அவர்களது முக பாவத்திலேயே தெரிந்தது.

என் மனைவியின் கையில் தூங்கிக்கொண்டிருந்த என் ஒரு வயது மகனை விமலா மெதுவாக வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். கந்தவேல் என் மகனின் முகத்தைக் குனிந்து பார்த்துவிட்டு “சார் பையன் உங்கள மாதிரியே இருக்கான் சார்” என்றார். பின்பு அனிச்சையாக அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து என் மகனின் பிஞ்சுக்கைகளில் திணித்தார். விமலா “அண்ணே ஒரு ஐநூறு கொடுங்க, அப்புறம் தர்றேன்” என்று சொல்லி அவரிடம் வாங்கி நானும், என் மனைவியும் மறுத்தபோதும் விடாமல் என் மகனின் கையில் கொடுத்தாள்.

“சார் பையன் முகம் உங்கள மாதிரி, ஆனா கலரு நல்லவேளையா அண்ணி மாதிரி” என்றாள் விமலா. அவள் இதைச் சொன்னதும் என் மனைவி, மாமியார் முகங்களில் ஒரு தெளிவு ஏற்பட்டது. என் மாமியார் இருவரையும் ”வீட்டுக்குள்ள வாங்க, ஒரு வாய் காப்பி சாப்பிடுங்க” என்று அழைத்தார். விமலா என் மகனை “அத்தடா, அத்தடா நானு, அத்த சொல்லு, அத்த சொல்லு” என்று கொஞ்சிக்கொண்டிருந்தாள். வீட்டிலிருந்த நேரம் வரை தன் கைகளிலிருந்து அவள் என் மகனை இறக்கி வைக்கவே இல்லை. வழக்கமாக புது ஆள் கைக்கு மாறினால் விசும்பும் என் மகனும் அன்று என்னவோ அதிசயமாக அமைதியாக அவள் முகம் பார்த்தபடி, அவளது முகத்தை கைகளால் பற்றி இழுத்தபடி இருந்தான்.

என் வீட்டிலிருந்து அவர்கள் கிளம்பியதும் கந்தவேல் வேகவேகமாக மேடையை நோக்கி நடந்தார். நான் விமலாவோடு மெல்ல நடந்தேன். நாங்கள் இருந்த இடம் அமைதியாக இருக்க, ஊரின் மறுமுனையில் முளைப்பாரி கொண்டு போகும் மேளச்சத்தம் கேட்டது. எங்கள் இருவருடன் கூடவே வந்துகொண்டிருந்த மௌனத்தை நானே முதலில் உடைத்தேன்.
“உங்கிட்ட ரெண்டு கேள்வி கேட்கணும்” என்றேன்.

“எப்பிடியும் நீங்க கேப்பீங்கன்னு தெரியும் சார்” என்றாள் உடனடியாக, பின்பு சிரித்துக்கொண்டே சரி கேளுங்க என்றாள்.
“அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா, இல்லையா?”

“இல்லை சார்”

”ஏன்?”

”அது ஒத்து வரல சார், அவனுக்கு அப்பா இல்ல, அவனோட அம்மாவுக்கு அவ்ளோ விவரம் பத்தாது சார், இவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கும், ஆனா நிறைய சொந்தக்காரய்ங்க அவனுக்கு உண்டு சார், நான் டான்ஸர்ங்கறத அவய்ங்களால ஏத்துக்க முடியல போல, அவனோட அம்மாட்ட போய் டான்ஸர்னா கேரக்டர் மோசமாத்தான் இருக்கும்னு சொல்லி அந்தம்மா ரொம்ப குழம்பிப் போச்சு போல சார். இவனும் ஒரு நிலைல இல்ல, ஒருநாள் என் சொந்தக்காரனெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லைம்பான், இன்னொரு நாள் கல்யாணத்துக்கு அப்புறம் நீ டான்ஸ் ஆடப் போக மாட்டேன்னு என்ன நிச்சயம்னு கேட்பான். ஒரு தடவை உங்கக்காவுக்கு இனிமே நீ பணம் கொடுக்கக்கூடாதுன்னு சொன்னான், இப்பிடியே ரொம்ப குழப்பத்துல இருந்தான் சார்.”

”சரி அப்புறம்”

”ஒருநாள் கந்தவேல் அண்ணன் வீட்டுக்குப் போய் இனிமே விமலாவ எந்தப் ப்ரொக்ராமுக்கும் கூப்பிடக்கூடாதுன்னு சத்தம் போட்ருக்கான். அன்னைக்குன்னு பார்த்து எங்க ஆளுங்கெல்லாம் அவர் வீட்ல இருந்திருக்காங்க, அவுங்க ஏன்னு கேட்டதுக்கு இனிமே அவ இந்த மாதிரி கேவலமா டான்ஸ் ஆடமாட்டான்னு இவன் கத்த, டான்ஸ் ஆடுனா கேவலமாடான்னு அங்க ரெண்டு பேர் கத்தி பஞ்சாயத்து ஆக்கி விட்டுட்டான் சார்.

’எல்லாத்தையும் விட்டுட்டு நாமளும் கல்யாணம் பண்ணி ஒரு சாதாரணப் பொண்ணு மாதிரி புள்ளகுட்டி பெத்துக்கணும்னு ஆசைப்பட்டுதான அவன லவ் பண்ணினோம், அவனுக்கு பிடிக்கலைன்னா விட்றத்தான போறோம்’னு நினைச்சு ’சரிப்பா நான் இனிமே ஆடப் போக மாட்டேன்’னு சொன்னா நம்பித் தொலைக்க மாட்டேன்டான் சார். ராஜேந்திரன் சார் கூடச் சொன்னாரு ’அவன்கிட்ட, அவன் குடும்பத்துக்கிட்ட உன்னைப்பத்தி முழுசா சொல்லி, அவுங்க சம்மதிச்சா மட்டும் நீ கல்யாணம் பண்ற ஐடியாவுக்குப் போ’ அப்படீன்னு. அப்ப இருந்த மயக்கத்துல அவர் சொன்னது என் காதுலையே ஏறல. உங்களுக்குத் தெரியாம, ராஜேந்திரன் சாருக்குத் தெரியாம அவனுக்கு நிறையப் பணம் கொடுத்திருக்கேன் சார். நாம லவ் பண்றவன் என்ன கேட்டாலும் கொடுத்தரணும், அவனுக்கு இல்லாததான்னு நினைச்சு நிறைய செஞ்சிருக்கேன் சார். நான் இங்க எவ்வளவு செக்ஸியா ட்ரெஸ் போட்டுட்டு ஆடுனாலும், என்கூட இருக்கவங்க எங்கிட்ட இதுவரைக்கும் தப்பா நடந்துகிட்டதோ, பேசுனதோ இல்லை சார். ஆனா அந்த நாயி என்னை அசிங்கப்படுத்தீட்டான் சார். அவன் பேசுன பேச்சுக்கு ஆயிரம் பேருக்கு முன்னாடி அரைகுறையா ஆடுனா கூடத் தப்பில்லைன்னு தோணீருச்சு சார்”

”ஏன் என்ன சொன்னான்”

“திருப்பூருக்கு ரெடிமேட் ட்ரெஸ் பாக்கறதுக்காகப் போனோம்ல சார்”

“ஆமா”

“ராஜேந்திரன் சார் கூட “நீ போக வேண்டாம், அந்தப் பையன மட்டும் அனுப்புன்னு தலைதலையா அடிச்சுக்கிட்டாரு சார். என் மண்டைலதான் அது ஏறவே இல்ல. வாழ்க்கைல மொத தடவையா லவ்வரோட வெளியூர் போற சந்தோஷத்துல எனக்குத்தான் தலைகால் புரியல சார். திருப்பூர் போய் மொதல் நாளு மட்டும் ரெண்டு மூணு ரெடிமேட் ட்ரஸ் தயாரிக்கறவங்களைப் பார்த்தோம் சார். அன்னைக்கு சாயந்திரம் ரூமுக்கு வந்தவுடனேயே குடிக்கறதுக்கு பீர் வாங்கிட்டு வந்துட்டான் சார். குடிச்சுட்டு சும்மா என்னை நோண்டிக்கிட்டே இருந்தான் சார். எனக்கும் அப்ப அவன் பண்ணுனதெல்லாம் பிடிச்சுதான் இருந்தது. ரெண்டாவது நாளே எல்லாம் முடிஞ்சு போச்சு, எனக்கு அதெல்லாம் பிரச்சனையும் இல்ல வருத்தமும் இல்ல சார், அவனப் புடிச்சுப்போய்தான அவன் கூட இருந்தேன். இப்ப கூட அதப்பத்தி நான் தப்பா நினைக்கல சார்”

நான் மெல்லச் சிரித்தபடியே “எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன்ன கட் பண்ணி விடப் பார்த்தானா?” என்று கேட்டேன்.

“அவனுக்கு அந்த அளவுக்கெல்லாம் கூறு இல்ல சார், அப்ப அவனும் என் மேல மயக்கத்துலதான் இருந்தான்”

“பெறகு”

”சார், திருப்பூர்ல ஒரு ரெடிமேட் ட்ரெஸ் தயாரிக்கற ஆளைப் பார்த்தோம் சார். இவனுக்கு ஏற்கனவே தெரிஞ்ச ஆள்தான் சார் அவன். நல்ல பெரிய பணக்காரன் போல. அஞ்சு லட்ச ரூபா வரைக்குமான ட்ரெஸ் மெட்டீரியல் எடுத்துக்கோங்க, மெல்லமெல்லமா பணம் கொடுத்தா போதும்னு சொன்னான் சார். அது பத்தாதுன்னு இவன் அந்த ஆள்கிட்ட இன்ஷ்யூரன்ஸ் வேற கேட்ருக்கான் சார். அவனும் ஒரு லட்ச ரூபா பாலிஸி போடறேன். ட்ரெஸ் மெட்டீரியலுக்கு க்ரெடிட் தர்றேன், ஆனா நான் உன் ஆளு கூட படுக்கணும்னு கேட்ருக்கான சார்”

”இவன் அங்கயே அவன செருப்பக் கழட்டி அடிச்சிருக்க வேண்டாமா சார், அத செய்யாம அன்னைக்கு நைட்டு எங்கூட படுத்து எல்லாத்தையும் முடிச்சுட்டு, இந்த விஷயத்த எங்கிட்ட சொல்லி, நீ இனிமேலும் டான்ஸ் ஆடப் போனீன்னா இப்பிடித்தான் படுக்க வர்றியான்னு எவனாவது கேட்டுக்கிட்டே இருப்பான்னு ஆரம்பிச்சுட்டான் சார். அது பரவால்ல, இத்தனை நாள் மதுரைல அத்தன பாலிஸி இருபதாயிரம், ஐம்பதாயிரம்னு எடுத்தப்பகூட நம்ம ஆஃபீஸ்ல ஆம்பள, பொம்பளைன்ன அத்தனை பேரும் உன்னைப்பத்தி அப்படித்தான் பேசறாங்கன்னு சொன்னான் சார், அது உண்மையோ, பொய்யோ… எனக்கு மனசே விட்டுப்போச்சு சார், இத்தனைக்கும் அதுக்கு முன்னாடியெல்லாம் நான் டான்ஸ் ஆடறதப் பத்தி சொல்லும்போதெல்லாம் அதுவும் ஒரு தொழில்தானன்னு பொறுப்பா பேசுவான், அவனுக்குப் பைத்தியம் பிடிச்சுருச்சு சார், அப்பிடி சந்தேகப் புத்தி ஒருதடவை மண்டைக்குள்ள ஏறிடுச்சுன்னா அதுக்கப்புறம் இந்த ஆம்பளைகளைத் திருத்தவே முடியாது சார். எங்க டான்ஸ் ஃபீல்டுல ஏன் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு சீசன்ல ஒவ்வொருத்தன் கூட திரியறாளுக தெரியுமா சார்? இவளுக நல்லாத்தான் இருப்பாளுக, அவனுகளுக்குத்தான் இவளுக சிரிச்சா எவனப் பாக்கறா, நடந்தா எவனப் பாக்கறான்னு மண்டைக்குள்ள கொடச்சலெடுக்க ஆரம்பிச்சிரும். அப்படிக் கொடைய ஆரம்பிச்சுட்டா அதுக்கப்புறம் நிம்மதியா இருக்க முடியாது, கடைசில அடி, உதை வரைக்கும் போயிரும், தப்பிச்சு ஓடி வந்திருவாளுக. நம்மாளு கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பிடி ஆகிட்டான், அவனை கல்யாணம் பண்ணி நான் நிம்மதியா வாழவா சார்” என்றாள். நமக்கு நம்மளப் பத்தித் தெரிஞ்ச, டான்ஸ் ஃபீல்டுல உள்ள ஆள்தான் சார் செட்டாகும் அல்லது நான் டான்ஸ் ஆடறத மொத்தமா நிறுத்தின பிறகு யாரையாவது லவ் பண்ணாத்தான் உண்டு” என்றாள்.

“சரி இன்ஷூரன்ஸ் பண்றத ஏன் நிறுத்துன?”

“நீங்க ரிஸைன் பண்ணிட்டீங்கள்ள சார், அதுக்கப்புறம் அங்க போக மனசில்ல”

“ஹா ஹா, இத நான் நம்பல, உண்மையைச் சொல்லு”

“இல்ல சார், அவன் நம்ம ஆஃபிஸ்ல எல்லாரும் நான் படுத்துதான் பாலிஸி எடுக்கறேன்னு பேசிக்கறாங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் எனக்கு நம்ம ஆஃபிஸ் பக்கம் வரவே பிடிக்கல சார். ச்சே என்ன மனுசங்கன்னு ஆகிப்போச்சு, இத்தனைக்கும் அங்க நான் நல்லா பிஸினஸ் பண்ணும்போதெல்லாம் ’உன்னை மாதிரி பிஸினஸ் பண்ண எங்களால முடியுமா?’ அப்படீன்னு அவுங்க என்னையப் பெருமையாத்தான் பேசறாங்கன்னு நினைச்சேன், ‘நீ கஸ்டமர்கிட்ட அட்ஜஸ்ட் பண்ற, நாங்கெல்லாம் நல்ல குடும்பத்துப் பொம்பளைங்க, நாங்க அப்படியெல்லாம் பிஸினஸ் பண்ண முடியாதுன்னு’ எங்கிட்ட மறைமுகமா சொல்லியிருக்காளுகன்னு எனக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது சார். நம்ம பிராஞ்ச் மேனேஜர் கூட எங்கிட்ட ஒருதடவை ‘நமக்கு மார்க்கெட் இருக்கும்போதே எல்லோரையும் கவர் பண்ணிக்கணும் விமலா, அதுதான் புத்திசாலித்தனம்’ அப்படீன்னு ஒரு தடவை சொன்னாப்ல சார், ச்சீய்னு ஆயிருச்சு சார்.

என்னைச் சுற்றி இவ்வளவு நடந்திருப்பதே எனக்குத் தெரியாமலிருந்திருக்கிறது என்பதை யோசித்தபோது எனக்கு நெஞ்சடைப்பது போல ஆகிவிட்டது. ஏம்மா யாரோ ஒண்ணு ரெண்டு பேரு தப்பா பேசுனான்னா உனக்கென்னமா? அதுக்காக உனக்குப் பிடிக்காத ஸ்டேஜ் டான்ஸுக்கு நீ திரும்பிப் போகணுமா, அப்பவே எங்கிட்ட சொல்லியிருக்க வேண்டாமா?, டான்ஸ் ஆடக்கூடாதுன்னு தான வேற வேலை பார்க்க வந்த, நல்லாதான சம்பாதிச்ச, அப்புறம் ஏன் எல்லாத்தையும் விட்டுட்டு திரும்பவும் இதுக்கே வந்த?”

அதுக்கு அப்புறம் ஆஃபிஸ்ல யார் என்னையப் பார்த்தாலும் எனக்கு உடம்பெல்லாம் கூசற மாதிரி ஆயிருச்சு சார். என் முதுகுக்குப் பின்னாடி யாராவது சும்மா சிரிச்சாக்கூட எனக்கு என்னையப் பத்தி பேசித்தான் சிரிக்கறாங்கன்னு தோண ஆரம்பிச்சிருச்சு சார். அந்த மாதிரி தோண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஒருநாள் கூட என்னால அங்க இருக்க முடியல சார். இத உங்ககிட்ட எப்பிடி சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். நல்லவேளை நீங்களும் அந்த நேரம் பார்த்து வேலையை விட்டுட்டு வேற வேலைக்குப் போறேன்னு சொன்னீங்களா, ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டேன்.

அங்க இந்த மாதிரி செய்யாத தப்புக்கு கூனிக்குறுகி நிக்கறதுக்கு இங்க ஆயிரம் பேர் முன்னாடி செக்ஸியா டான்ஸ் ஆடறது ஒண்ணும் தப்பில்லைன்னுதான் திரும்பவும் இங்கேயே வந்து சேர்ந்துட்டேன், அங்க மாதிரி, நாம எவ்ளோதான் டீசண்டா ட்ரஸ் பண்ணிட்டு வந்தாலும் நம்மள ஓரக்கண்ல ரசிச்சுட்டு நம்மகிட்ட உத்தமன் வேஷம் போட மாட்டாய்ங்க சார், எவ்ளோ செக்ஸியா ஆடுறமோ அந்த அளவுக்கு நல்லா கை தட்டி ரசிச்சிப்பாய்ங்க சார், போன பாட்டுக்கு மட்டும் எனக்கு ஒரு ஆள் ரெண்டு ஐநூறு ரூபா கொடுத்திருக்கான்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

என் கைகளை இறுக்கக் கட்டியபடி நின்று “இது தான் உண்மையான காரணமா?” என்று கேட்டேன்.

“அதெல்லாம் காரணம்தான், ஆனா நான் வந்தபிறகு கந்தவேல் அண்ணன் கொஞ்சம் நொடிச்சுப் போயிட்டாருன்னு பிள்ளைக சொன்னாளுக சார். ஆனா அவர் திரும்பி வந்து நீ ஆடணும்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கல, அன்னைக்கு நான் அனாதை ஆசிரமத்துல இருந்து ஒரு வெறிபுடிச்ச நாய்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தப்ப அவரு மட்டும் என்னையக் காப்பாத்தலைன்னு வைங்க, இன்னைக்கு நான் உயிரோடயே இருந்திருக்க மாட்டேன். இல்லைன்னா என்னை எங்கையாவது ப்ராத்தல்ல வித்திருப்பானுக. என்னைக் காப்பாத்தி விட்டவரு அவரு, அவருக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன்னு ஒண்ணு இருக்கில்ல சார். இன்னொன்னு சார்… இதுக்கு முன்னால எனக்கு இது பிடிக்கலைதான். ஆனா இப்ப உண்மையிலேயே பிடிச்சுதான் செய்யறேன், இந்த வெளிச்சம், கைதட்டல் எல்லாம் ரொம்ப நாளைக்குக் கிடைக்காது சார், அதனால நீங்க இதுக்காக சங்கடப்படாதீங்க” என்றாள்.

ஊரின் மறுகோடியில் முளைப்பாரிகளை கோயிலில் இறக்கி வைத்ததற்கான அடையாளமாகப் பெண்கள் குலவையிடும் ஓசை சன்னமாகக் கேட்டது. ”ச்செக்க்..ச்செக்க்… இன்னும் சிறிது நேரத்தில் நடன நாட்டிய நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறது. ரசிகப் பெருமக்கள் அனைவரும் மேடைக்கு முன்னே வரும்படி அன்புடன் அழைக்கிறோம்” என்ற கந்தவேலின் அறிவிப்பு ஒலிபெருக்கியின் வழியாக ஊரெங்கும் எதிரொலித்தது.

“சரிங்க சார் நான் கிளம்பறேன்” என்றபடி சட்டென்று பேச்சை முடித்தாள் விமலா. நான் கந்தவேலிடம் விடைபெற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

“யாருங்க அந்தப் பொண்ணு?” என்று கேட்ட என் மனைவியிடம் “என்னோட பழைய கம்பெனில எங்கிட்ட ஏஜெண்டா வேலை பார்த்த பொண்ணு” என்று சொல்லிவிட்டு, பின்பு ஒரு நொடி கழித்து “என் தங்கை மாதிரி” என்றேன்.

”அடுத்த பாடலுக்கு ஆடுபவர் உங்கள் விம்லா” என்ற அறிவிப்பு காதுகளில் விழுந்தது. வீட்டின் மாடி பால்கனியிலிருந்து நின்று பார்த்தேன். “நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு” என்ற ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டது, நீல நிற ஜீன்ஸுக்கு மேல் மஞ்சள் நிறப் புடவையைக் கட்டிக்கொண்டு, இடுப்பை வெட்டியபடி விமலாதான் ஆடிக்கொண்டிருந்தாள். இத்தனை வருடங்களில் அவள் ஆடுவதை முதன்முறையாக முழுவதுமாக நின்று பார்த்தேன். முழுக்க விம்லாவாக மாறிப்போயிருந்தாள் அவள்.

பின் மதியம் சாப்பிட்ட கறிச்சோறு நெஞ்சுவரை நிறைந்திருந்தது. ”நைட் சாப்பாடு வேண்டாம், பசிக்கல” என்று என் மனைவியிடம் சொல்லிவிட்டு, படுக்கையறைக் கதவை பாட்டுச்சத்தம் கேட்காமலிருக்க இறுகச் சாத்திவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

***

இளங்கோவன் முத்தையா

RELATED ARTICLES

15 COMMENTS

  1. நண்பா விடாமல் படித்து முடித்தேன் சிறப்பு நமது marketing துறையில் இப்படி நிறைய கதைகள் உண்டு .ஆனால் இது ஒரு சிறந்த கதை . நன்றி வாழ்த்துக்கள் நண்பரே

  2. “விமலா “நேர்த்தியான கதை….வாழ்த்துக்கள் இளங்கோ முத்தையா….இது முதல் கதையெனில் இத்தனைநாள் எழுதாதிருந்தது அனைவருக்கும் இழப்பு…குறிப்பாக சிறுகதை உலகிற்கு….நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டீர்கள்….,

  3. வாசகர்களின் கற்பனைக்கு தீனி போடும் போது நெடுங்கதைகளின் நீளம் என்பது குறையல்ல. இது குறும்படத்தை காட்சிப்படுத்தலுக்கான ஒரு தெளிவான திரைக்கதையாகவே உள்ளது. மனிதர்களையும், அவர்களின் உடல் மொழிகளையும், நிகழ்வுகளையும் காட்சிகளாக ஓட்டிப் பார்க்கையில் கதை நறுக்கென இருக்கிறது. அதற்கு உங்கள் வருணனை சிறப்பாக உதவுகிறது. நல்ல புனைவு. சிறிய பொறிகள் பெரிய கனல்களுக்கு வித்திடுவது போல விளிம்பு நிலை மனிதர்களின் ஒரு துளியை கண்களுக்கு அருகில் கொண்டு வந்து முழுப் பரிமாணத்தையும் காட்டுவதிலும், எதிர் பாலினத்தைப் புரிந்து கொள்ள வைப்பதிலும் பெரும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பெருநிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை குறித்தும் கதையின் ஓட்டத்தில் தொட்டுச் செல்வதில் உங்களின் களப்பணி வெளிப்படுகிறது. விமலா என்றால் அப்பழுக்கற்ற, தூய்மையான என்பது பொருள். எவ்வளவு பொருத்தம்? வாழ்த்தும், அன்பும் இளங்கோ!🤗💐

  4. குறும்படம் அல்ல இதை மையமாக வைத்து படமே எடுக்கலாம்! திரைக்கதை மற்றும் வசனத்தை உள்ளடக்கிய சற்று நீண்ட கதை இது! உயிரோட்டமான உரையாடல்கள் கதைக்கு வலு சேர்க்கிறது! வாழ்த்துகள் இளங்கோவன் முத்தையா!

  5. முதல் கதையா!
    மனசு கனத்துப் போச்சு சார்.

    சரளமான நடை.
    அருமை சார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular