Thursday, June 13, 2024
Homesliderவிதை

விதை

சுஷில்குமார்

வழக்கம்போல கோயில் தெப்பக்குளப் படிக்கட்டில் நண்பர்களுடன் அரட்டையில் இருந்தேன். அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“நடுச்சாமம் ஆனாலும் வீட்டுக்கு வர முடியல்ல, என்னா? பொழுது முச்சூடும் அங்கணயே கெட?”

“இன்னா வாரேம்மா.. தாத்தா ஒறங்கிட்டாளா?”

“தெரில.. ஆச்சி கூட ஒரே சண்ட.. சாப்பிடாம திண்ணைல போயி இருந்தா.. பொறவு ஆளக் காணோம்..”

“இந்த ஆச்சிக்கு வாய வெச்சிட்டுச் சும்மாக் கெடக்க முடியாதா? இன்னா வாரேன்..”

“ஆமா, இன்னா வாரேன்னு சொல்லிட்டு ராவு மூனு மணிக்கு வந்து கதவ தட்டுவ.. நா இன்னா கதவ அடைக்கப்போறேன்.. வரதா இருந்தா இப்ப வரணும் பாத்துக்கோ..” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

எங்கள் கிராமத்தின் நுழைவாயில் போன்ற இரயில்வே கேட்டைத் தாண்டும்போது எனது என்ஃபீல்ட் திடீரென நின்றது. ஆறு மாதத்திற்கு முன்பு என் பிறந்த நாளுக்கு தாத்தா வாங்கிக் கொடுத்தது. பலமுறை முயற்சி செய்தும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. திடீரென, என் காதருகில் யாரோ கிசுகிசுப்பதைப் போன்ற சத்தம் கேட்டு ஒரு நொடி வெலவெலத்துப் போனேன். எதோ பிரம்மையாக இருக்குமென நினைத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

சிறுவனாக இருந்தபோது இப்பாதையை ஒட்டியிருந்த வாய்க்காலில் என்னைத் தூக்கி எறிந்து விடுவார் தாத்தா. “கைய கால அடி மக்ளே.. நாலு நாள் தண்ணி குடிச்சேன்னா நீச்சல் தானா வந்துரப் போகு..” என்பார். நீண்டு செல்லும் குறுகிய பாதையின் இணையாக பத்து நிமிட நடையளவிற்கு நீண்டு சென்ற அந்த வாய்க்காலும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தியிருந்த வயல்வெளிகளுமென, எப்படியிருந்த ஊர்! இப்போது லட்சங்களிலும், கோடிகளிலும் கைமாறிக் கொண்டிருக்கிறது.

தாத்தா பற்றிய நினைவுகளாக வந்து கொண்டிருந்தன. விபத்தில் படுத்த படுக்கையாகிவிட்ட அப்பாவுடன் என் குடும்பமும் முடங்கிப் போய்க் கிடந்த காலம். வாழ்க்கை முழுதும் அப்பாவால் எழுந்து நடக்கவே முடியாத நிலை. எனக்கு அப்போது பத்து வயதிருக்கும். தங்கை கைக்குழந்தையாக இருந்தாள்.

குடும்பச் சொத்து விவகாரத்தில் தாய்மாமா குடும்பம் எங்களை ஒதுக்கி வைக்க, அப்பாவும் வீம்புடன் தனித்து மேலே வந்து விடலாமென இருந்தார். அந்த விபத்தில் எல்லா கனவுகளும் சிதைந்துபோக, மாமாவிற்குப் பயந்து உதவிக்கு எந்த நெருங்கிய சொந்தமும் வராமல் அடுத்தது என்னவென நாங்கள் திக்கற்று நின்றோம்.

அப்பா என்கிற ஓர் உயிர் எங்கள் வீட்டில் குரலற்று, அசைவற்று நாங்கள் அனுபவிக்கும் எல்லாவற்றையும் பார்த்துக் கிடந்தது. குடும்பத்தின் ஒரே வருமானமும் தடைபட்டுப் போனது. அம்மாவும் பெரிதாகப் படிக்கவில்லை, எந்த வேலைக்கும் சென்றதில்லை. பதினேழு வயதில் திருமண வாழ்க்கைக்குள் வந்துவிட்டவளுக்கு அப்பாவின் முடக்கத்தைத் தாண்டி வர கதியற்று நின்றாள். கையிருப்பெல்லாம் காலியாகிவிட்ட ஓர் இரவில், அம்மா, “எதையாம் குடிச்சி செத்துருவோமா மக்கா?” என்று என்னைக் கேட்க நானும் தலையாட்டினேன். சிறிது நேரத்தில் அம்மா ஒரு தம்ளரில் ஏதோ ஒரு கசாயத்தைக் கொண்டுவந்து எங்கள் கைகளில் தந்தாள். நான் கட்டிலில் கிடந்த அப்பாவின் முகத்தையே பார்த்து நின்றேன். ‘ஏதாவது நடந்து என் அப்பா எழுந்து வந்து எங்களைக் காப்பாற்றி விட மாட்டாரா? நான் வேகவேகமாக பெரியவனாக வளர்ந்துவிட மாட்டேனா? வீடு, கார் என அம்மாவை சந்தோசமாக வைத்திருப்பேன்.. தாத்தாவையும் என்னுடன் கூட்டிக் கொண்டு இருக்க வைப்பேன்..’

“குடிச்சிரு மக்ளே.. அம்மக்கி வேற என்ன செய்யன்னு தெரில மக்ளே..” என்று சொல்லி தன் மார்பில் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தாள். தங்கையும் நானும் ஓவென அழுது அம்மாவைக் கட்டிக் கொண்டோம். கதவு தட்டும் சத்தம் கேட்டு அம்மா எங்களை அமைதிப்படுத்த சைகை செய்துவிட்டுக் கதவருகே சென்றாள். எங்களைப் பார்க்கத்தான் யாரும் வருவதில்லையே! யாராக இருக்கும்?

சென்று கதவைத் திறந்த அம்மா, “எப்பா.. எப்பா.. வந்துட்டியாப்பா? பிள்ளய கடைசியா பாக்க வந்துட்டியாப்பா?” என்று  கதறி அழுது தரையில் விழுந்தாள்.

அதிர்ச்சியடைந்து நின்ற தாத்தா, “மக்ளே. .எம்பிள்ள என்ன காரியம் பண்ண நெனச்ச மக்ளே? நா மனசுல எதோ தோனில்லா கெளம்பி வந்தேன்.. அப்பா இருக்கம்லா மக்ளே.. கெளம்பு மொதல்ல நீ.. பிள்ளைல தூக்கு..” என்றார்.

நீண்ட நாட்களாக நெல் மூட்டைகளையும் உர மூட்டைகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் போட்டு வைத்திருத்த தாத்தாவின் கிராமத்து வீட்டில் அப்படியாக எங்களைக் குடிவைத்தார் தாத்தா. அவரும் ஆச்சியும் எங்களோடு தங்க ஆரம்பித்தார்கள்.

***

பத்து நிமிடங்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்ததிலேயே எனக்கு நன்றாக வேர்த்து விட்டது. இதயம் ஏனோ படபடவென துடித்தது. சம்பந்தமேயில்லாமல் ஒரு மருத்துவமனையில் நான் இருப்பது போல எண்ணம் வந்தது. ஊர் முகப்பில் இருந்த முத்தாரம்மன் கோயில் வாசலில் ஒரு நிமிடம் நின்று வணங்கினேன்.

நல்லா நொறுங்கத் தின்னு மக்ளே..” என்று நள்ளி எலும்புகளை என் இலையில் குவித்து வைப்பார் தாத்தா. “ஒடம்ப நல்லா பலமா வைக்கணும் மக்ளே.. தாத்தா கூட வயலுக்கு வா.. ஒன்னொன்னா சொல்லித் தாரேன் என்னா?”

தினசரி அதிகாலையில் என்னை எழுப்பி ஆற்றிற்கு குளிக்க அழைத்துச் செல்வார். முதலில் தூங்கி வழிந்து சலிப்பாகச் செல்ல ஆரம்பித்த நான் நீச்சலடிக்கக் கற்றுக் கொண்டதில் இருந்து ஆர்வமாகச் செல்ல ஆரம்பித்தேன். பின், பொடிநடையாக நடந்து ஊரெல்லையில் இருந்த பெரிய வயலுக்குப் போவோம். வரப்புகளில் தாத்தா வேகமாகச் செல்ல, நான் பார்த்துப் பார்த்து பின்தொடர்வேன்.

“தாத்தா எப்பிடிச் செய்யேன்னு நல்லா பாத்துக்கோ மக்ளே.. நாளக்கி நீதான் செய்யணும் பாத்துக்க…”

வரப்பில் நடப்பதில் ஆரம்பித்து, உழுதல், விதைப்பு, உரம் போடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல், களை பிடுங்குதல், அறுவடை, கதிரடிப்பு என எல்லா விசயங்களையும் தாத்தா செய்வதையோ இல்லை ஆட்களை வைத்து அவர் வேலை வாங்குவதையோ பார்த்துக் கொண்டே இருப்பேன். அவ்வப்போது என்னையும் சேற்றில் தள்ளிவிட்டு, “சும்மாக் கெடந்து உருளு மக்ளே.. ஒடம்புக்கு நல்லதாக்கும்..” என்பார். பத்தாவது முடிக்கும்போது விவசாயம் சார்ந்த எல்லா விசயங்களும் எனக்கு அத்துப்படி ஆகியிருந்தன.

இப்போது தாத்தாவிற்கு வலதுகை நான்தான். பெரும்பாலும் எல்லா வேலைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கிறார். அதிகாலையில் ஆட்டோ வரவைத்து மீனாட்சிபுரம் சென்று அவல் வைத்த பழம்பொரி சாப்பிட்டு விட்டு, புத்தளத்திலோ, கணேசபுரத்திலோ இருந்து நல்ல விளமீனாகப் பார்த்து வாங்கி வருவார். தினசரி மீன் இல்லாவிடில் தாத்தாவிற்குச் சாப்பாடு இறங்காது. வெள்ளியும் செவ்வாயும் பிறகுதான். சனிக்கிழமை இரவுகளில் ஆச்சிக்குத் தெரியாமல் ஒரு குவார்ட்டரும் வறுத்த கடலையும் வாங்கிக் கொடுக்கும்போது கட்டியணைத்து ஒரு முத்தம் தருவார்.

விவசாயமோ, மற்ற பிரச்சினைகளோ, தாத்தாவிடம்தான் போய் நிற்பேன். பொறுமையாகக் கேட்டு மிகச்சிக்கலான விசயங்களையும் எளிதாக எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பார்.

“மக்ளே.. அப்பாவியா இருந்தா மொளகா அரச்சுப்புடுவானுகோ கேட்டியா? கொஞ்சம் கண் மறஞ்சா தாத்தாவையே அவிச்சிருவானுகோ.. எவன்னாலும் செரிதான்.. கணக்குன்னா கணக்கா இருக்கணும்.. என்னா?”

நான் எல்லாவற்றிற்கும் தலையாட்டி நிற்பேன்.

“நீ என்னடே, சமஞ்சப் பிள்ள மாறில்லா நிக்க.. வாயத் தொறந்து பேசாண்டாமா டேய்? பொறவு என்னத்தச் சமாளிக்கப் போற? ஒம் மாமங்காரன்ட்ட எவனாம் வாயக் காட்ட முடியுமா? அவன் என்னயே என்னான்னுலா கேக்கான்? பின்ன, எல்லாருக்கும் நம்ம பைசாதான் வேணும், நாம வேண்டாம் பாத்துக்கோ… ஒம் மாமனும் செரி, ஒன் சித்திமாரும் செரி.. எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைலா? ஒங்கம்மைக்கி மாத்ரந்தான் ஆளுகோ வேணும்.. அதான் கெடந்து கஷ்டப்படுகா.. அவள விட்ரக் கூடாது மக்ளே..”

***

வண்டியை நிறுத்தி விட்டு, வீட்டுக் கதவைத் தட்டினேன்.

“கருமத்த மாடு.. வீட்டுக்கு வர நேரம்..” என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்து விட்டார் அம்மா.

“ஆங்.. அது ஒங்க அண்ணன்லா.. அண்ணன் பாசம் ஒனக்குப் போக மாட்டுக்கு என்னா?” என்று சொல்லி அவளைக் கட்டிப் பிடித்தேன்.

“தள்ளிப் போ நாய.. போய்க் கைகால கழுவிட்டு வந்து சாப்டு..”

புறவாசலுக்குச் சென்று கிணற்றில் நீர் இறைக்கப் போகும்போது கிணற்றடியில் ஆச்சி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஒரு நொடி பயந்து விட்டேன்.

“ஏய் ஆச்சி.. ஒரு செகண்டு வயித்தக் கலக்கிட்டு எனக்கு.. பேய் மாறில்லா ஒக்காந்திருக்கா..”

ஆச்சி எதுவும் பேசாமல் அசைவற்று இருந்தாள்.

கைகால் கழுவியவாறே, “ஒன்ட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன், தாத்தாட்ட சும்மா எசலிட்டு இருக்காதன்னு? வாய வெச்சிட்டு சும்மாக் கெடக்க முடியாது என்னா?” என்று கேட்டேன்.

ஆச்சி இப்போதும் பதில் சொல்லவில்லை. தாத்தா மீது கோவத்தில் இருக்கிறாள் என்று நினைத்து, “செரி செரி, போய்ப் படு ஆச்சி.. தாத்தாட்ட நாம் பேசுகேன்..” என்றேன்.

***

அடுத்தநாள் தாமதமாக எழுந்து தாத்தாவிற்குத் தெரியாமல் ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தேன். பத்தயப்பிறையிலிருந்து வெளியே வந்த தாத்தா, “மக்ளே, இங்க வா..” என்று அழைத்தார்.

“என்ன தாத்தா?” என்று அவர் அருகே சென்றேன்.

என் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்று திண்ணையில் உட்கார்ந்தார். என்னவென்று புரியாமல் நானும் அவர் முகத்தைப் பார்த்து உட்கார்ந்தேன்.

“மக்ளே.. மேக்குப் பக்க வயல்ல நெறைய கள வரும் பாத்துக்கோ. .பொறவு.. அந்த புதுத்தெங்கு நாலையும் நல்ல வளத்துரணும் என்னா?.. பின்ன, நம்ம முருகம் பயலுக்கு ஒரு பத்தோ இருவதோ அப்பப்போ கேப்பான்.. குடுக்கணும் செரியா? நம்ம கூடவே கெடக்காம்லா? நல்ல பயலாக்கும்..” என்று சொன்னவர் சிறிது நேரம் அமைதியாக நின்றார்.

“மக்ளே, போயி விளக்கு கிட்ட கொஞ்சம் பைசா வச்சிருக்கேன்..எடுத்துக்கோ, செலவுக்கு ஆகும்..” என்றார்.

“எதுக்கு தாத்தா? இப்ப என்ன செலவு?”

“மக்ளே.. தாத்தாக்குப் போறும் மக்ளே.. நீ எல்லாத்தயும் பாத்துக்கோ..” என்று சொல்லித் தழுதழுத்தார்.

“தாத்தா.. சும்மாக் கெட.. ஒனக்கு ஆச்சிட்ட நோண்டாம இருக்க முடியாது.. அவளும் பின்ன செரியான ஆளுதான? அவளுக்கும் ஒன்ட்ட எசலாமத் தூக்கம் வராத..”

நான் பேசியதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.

“மக்ளே.. வயல நல்லாப் பாக்கணும் மக்ளே.. விட்ரக்கூடாது பாத்துக்கோ.. ஒங்க ஆச்சியில்ல, எவன் வந்தாலும் விட்ரக்கூடாது.. என்னா? அது எனக்க ரத்தமாக்கும்.. நாப்பது அம்பது வேர வெச்சி வேல வாங்கதும், பருவத்துக்குப் பருவம் கோட்ட கோட்டயா நெல்லு வந்து குமியதும், தாத்தா பக்கரைல சக்கரம் சேரதும் தான் இவ்வொளுக்குத் தெரிஞ்ச வெவசாயம் பாத்துக்கோ..அது அப்பிடி லேசுப்பட்ட காரியம் இல்லல்லா டே? துண்டு நெலமா இருந்தாலும் அது நம்ம அம்மைல்லா மக்கா? நெல்லு பூக்கும்போ ஒரு வாசம் உண்டுல்லா, அது என்னன்னு நெனச்ச? பிள்ளப்பாலு நெறஞ்ச அம்மைக்க மாரு வாசமாக்கும்.. சக்கரத்துக்கா வேண்டி அத விட்டுற முடியுமா டே? தாத்தாக்கா வேண்டி இத ஒன்ன செய்யி போறும்.. நீ கெதியா இருக்க வரக்கிம் நம்ம வயல்ல  நெல்லு வெளஞ்சிட்டே இருக்கணும் என்னா?”

எனக்கு பிரச்சினை என்னவென்று புரிய சிறிது படபடப்பாக, “தாத்தா.. நீ ஒன்னும் யோசிக்காத.. இந்த ஆச்சிக்கி வேற வேலையில்ல.. மாமா எதாம் கேட்ருப்பான்.. அதாம், எல்லாருக்கும் தேவையான அளவுக்குச் செஞ்சாச்சில்லா, பொறவு என்ன?” என்றேன்.

தாத்தா கண்கள் செருக, “மக்ளே, கண்ணு இருட்டிட்டு கேட்டியா? தாத்தா மருந்தடிச்சிட்டேன் மக்ளே.. போறும்னு தோணிட்டு பாத்துக்கோ..” என்று சொல்லி சுவற்றில் சாய்ந்தார்.

திடுக்கிட்டு எழுந்து, “தாத்தா.. தாத்தா.. எந்திரி தாத்தா, ஆஸ்பத்திரிக்கிப் போவம்.. தாத்தா எந்திரி..” என்று நான் கத்த, அம்மா ஓடிவந்து என்னருகே பதறி நின்று, “என்னாச்சி மக்கா? தாத்தாக்கு என்னாச்சி?” என்றாள்.

“தாத்தா மருந்தடிச்சிட்டாம்மா.. நீ சட்டுன்னு ஒரு ஆட்டோ புடி..”

அம்மா அழுதுகொண்டே ஓட, நான் பத்தயப்பிறைக்குள் சென்று பார்த்தேன். ஒரு பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை நீரில் கலந்து குடித்திருக்கிறார் தாத்தா.

***

“கண்டிசன் ரொம்ப கிரிட்டிக்கல் தான் தம்பி.. பாய்சன நல்லா டைல்யூட் பண்ணிக் குடிச்சிருக்காரு.. இரத்தம் பூரா வெசம்.. முயற்சி பண்ணிப் பாப்போம்.. ப்ரே பண்ணிக்கோங்க..” என்றார் மருத்துவர். தாய்மாமா குடும்பம், சித்திமார் குடும்பம் என எல்லாரும் வந்து ஒப்பாரி வைத்து நிற்க, அம்மா ஒரு நாற்காலியில் மயங்கிக் கிடந்தாள்.

நேற்றிரவு தாத்தா வந்து சாப்பாடு போடச் சொன்னபோது, “ஆமா.. சோறு போட மட்டும் நா வேணும்.. போய்ப் போட்டுத் தின்னும்..” என்றிருக்கிறாள் ஆச்சி.

“பல்லடிச்சி ஒடச்சிருவம் பாத்துக்க.. மரியாத கெட்டுப் போவும் பொறவு..”

“ஆமாமா.. ஒடப்பீரு.. ஒடப்பீரு..”

“என்னட்டி.. வாயி நீளுகு? பேய் புடிச்சிட்டா இன்னைக்கும்?”

“எதாங் கேட்டுட்டுப் போயிராதீரும்.. பெத்த பிள்ளேளுக்கு ஒன்னுஞ் செய்ய வக்கில்ல, என்ட்ட மட்டும் நல்லா வாயி காட்டும்..”

“என்னது? ஒன்னுஞ் செய்யல்லியா? இந்த ஊருல எவம்ட்டி என்ன மாறி செஞ்சிருப்பான்? சொல்லட்டும் ஒம் மக்கமாரு, செய்யலியாம்லா! ஒத்தச்சீல உண்டுமாட்டி ஒனட்ட? இப்ப எத்தன பவுனு ஒளிச்சி ஒளிச்சிக் குடுக்க அவ்வொளுக்கு? ஒம்மவன் ஏதாம் பத்திப் போட்டானோ?”

“அவன் என்னத்துக்குப் பத்திப் போடுகான்? நானே கேக்கேன்.. இப்பவோ எப்பவோன்னு இருக்க ஒமக்கு எதுக்கு இத்தன வயலுன்னு கேக்கேன்? எல்லாத்தயும் வித்து அவ்வொளுக்குக் குடுக்க வேண்டியான? போகும்போ கொண்டுட்டுப் போகவாப் போறீரு..”

“ஓ..அப்பிடி வாம்மோ, வா.. எல்லாரும் ப்ளான் போட்டு இப்ப வயலுக்கு வெல பேசுகேளாக்கும்? வயலுன்னா சும்மா வானத்துலருந்து வந்துரும்னு நெனச்சியோ? ஒவ்வொரு துண்டும் நா ஒழச்சி உண்டாக்குனதாக்கும்.. நா இருக்க வர நடக்காதுமவள.. விக்கப் போறாளாம்லா விக்க.. செறுக்கிவுள்ள.. கொன்னு பொதச்சிப்போடுவம் பாத்துக்கோ.. ஒரு மாறி வேலயெல்லாம் என்ட்ட காட்டிட்டுக் கெடக்கப்படாது..”

அம்மா இடையில் புகுந்து சமாதானம் செய்ய முயல தாத்தா கொஞ்சம் அமைதியடைந்தாராம்.

“ஒனக்குத் தெரியாது மக்ளே.. இவாளுக்கு எவ்ளோ செஞ்சாலும் நெறயாது பாத்துக்கோ.. எல்லாம் பேராச புடிச்சக் கூய்வுள்ளயோ.. நைஸா ஒன்னையும் ஒதுக்கி வச்சவோதான.. இப்ப என் வயலு கண்ண உறுத்துகு.. அம்மக்காரிட்ட தூது விட்ருக்கா.. எப்படிப்பட்ட நெலம் இது.. இவாளுக்கு என்ன மக்ளே தெரியும்? நல்ல சொகுசா வளத்து விட்டுட்டேன்லா? அதான்… ஒரு நாளாவது ஒங்கண்ணன் வந்து நம்ம வயல்ல கால வச்சிருப்பானா சொல்லு.. எல்லாம் இவ கொடுத்த செல்லந்தான… பயல படிக்க வைப்போம்ன்னா… செஞ்சாச்சி…. அவன் ஊருல போறவ வாரவ கையப் புடிச்சி இழுத்தான்… பொறவு கண்ட தொட்டிப்பயக்க கூடச் சேந்து ரவுடித்தனம் காட்டுனான்… பெரிய மைனர் மயிருல்லா இவன்… இவனுக்கா வேண்டி எத்தன நாளக்கிப் போலீஸ் ஸ்டேசன் ஏறிருப்பேன் மக்ளே? எம் மூஞ்சிக்கா வேண்டி விட்டான்… பின்ன, நல்லாக் குடிச்சிட்டுத் தெருவுல வுழுந்து கெடக்கணும்… சொத்து எப்படி நிக்கும்னு கேக்கேன்? பொம்பளப் புள்ளயோ அதுக்கும் மேல.. என்னத்தச் சொல்ல?”

அம்மா தாத்தாவிற்கு சாப்பாடு எடுத்து வைத்திருக்கிறாள். ஆச்சியின் புலம்பல் அடங்கவில்லை.

“நல்லா முழுங்கும்… பிள்ளையோ சந்தோசத்த விட சாப்பாடு தான முக்கியம்… எப்டித்தான் எறங்குதோ? வயலு வயலுன்னு தலைல தூக்கி வச்சிட்டுத் சுத்தும்.. இப்பிடித்தான் அந்த கெழக்கு வயல பைபாசு ரோட்டுக்குக் கொண்டு போனான்… நாப்பது செண்டுல்லா, ஒன்னுல்லாமப் போச்ச… தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன்னா, என்ன செய்ய?”

“எட்டி, பேசாமக் கெட பாத்துக்கோ… பொறுமைக்கும் ஒரு எல்லதான்…”

“நா ஒமட்ட ஒன்னும் பேசல.. நீரு ஒம்மச் சோலியப் பாரும்… எம்பிள்ளேளுக்கு நா செய்வேன். .யார் தடுக்கான்னு பாப்போம்… ரெண்டு வயல் எம்பேர்லயாக்கும் இருக்கு… நாளைக்கே போயி எழுதி வப்பேன்… தடுத்துப் பாக்கட்டும்.. வெசத்த வச்சிக் கொன்னு போடுவேன்…”

தாத்தாவிற்கு அப்போதுதான் நினைவிற்கு வந்திருக்கிறது. சட்டென கண் கலங்கியவராக, “மக்ளே… ஏமாந்துட்டேனே மக்ளே… அப்போ இவா முன்னாடியே ப்ளான் போட்டுத்தான் அவ பேர்ல எழுதி வாங்கிருக்கா மக்ளே.. கெட்டுன பொண்டாட்டியக் கூட நம்ப முடியல்லியே மக்ளே..” என்று அம்மாவிடம் புலம்பியிருக்கிறார்.

“எப்பா. .விடுப்பா… போனா போட்டும்பா… ஒங்க ரத்தத்துல வாங்குன பூமின்னு இவாளுக்குப் புரியலல்லா? மீதி வயல்ல நம்ம வெவசாயம் பண்ணுவம்ப்பா…. போறவோ போட்டும்.. நல்லா இருக்கட்டும்…”

“வெசம் வச்சிருவாளாம்லா மக்ளே.. மனசு நல்லா நெறஞ்சு போச்சு பாத்துக்கோ…” என்று சொல்லி சாப்பிடாமல் எழுந்து திண்ணையில் சென்று படுத்திருக்கிறார்.

***

ஸ்ரீ இந்திரம் எனும் எங்கள் ஊர் நாஞ்சில் நாட்டின் நிர்வாகத் தலைமையிடமாக இருந்திருக்கிறது. மையக்கோயிலும் அதைச்சுற்றி கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் பசேலென நெற்பயிர் வயல்களும் ஊடாக நீண்டு ஓடும் பழையாறுமாக செழித்திருந்த பகுதி. இன்று வண்ண வண்ண வீடுகளும் மின்கம்பங்களும் தொலைபேசி கோபுரங்களுமாக பச்சையைப் புறந்தள்ளி விரிந்து கொண்டே இருக்கிறது. ஒரே ஆறுதலாக எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் கோயில் கோபுரம்.

பூர்வீகம் தொட்டே ஸ்ரீ இந்திரத்தின் நெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பு எங்கள் குடும்பத்தால்தான் என்று தாத்தா அடிக்கடி பெருமையாகச் சொல்வார். வகை வகையான நெல்விதைகளைப் பாரம்பரியம் விட்டுப் போகாமல் இன்றும் சேமித்து வைத்திருக்கிறார் தாத்தா. நிமிடத்திற்கு ஒருமுறை அவரது பேச்சில் மண்வாசம் வந்து போவதே ஒரு அழகுதான்.

“காலகாலமா சமஸ்தானத்துக்கு நம்ம வயல் அரிசிதான் போகும் தெரியுமா டே? ஸ்ரீ இந்திரக்கோயில் மூலவருக்கும் நம்ம நெல்லுதான் இஷ்டம்… சும்மா இல்ல கேட்டியா? இன்னிக்கும் மடப்பள்ளிக்கி ஒரு பங்கு எடுத்து வெச்சிட்டுதான் மத்த எடத்துக்கு அனுப்புகது… மார்கழி மாசத் தேரோட்டத்துல எவ்ளோ சனம் அன்னதானம் சாப்பிடுவான்னு நெனைக்க? எல்லாம் நம்ம நெல்லாக்கும்… இதொன்னும் புண்ணியத்துக்காச்சுட்டி செய்யதில்ல மக்ளே… நம்ம அம்ம கொடுக்கத எல்லாருக்கும் குடுத்துச் சாப்பிடுக சொகம்லா… அது குடுக்கும்போதான் புரியும்… எல்லாத்தயும் பொட்டிக்குள்ளப் பூட்டி வச்சி என்ன செய்யப் போறானுகளோ? ஒங்க மாமங்கிட்ட மட்டும் நம்ம வயல குடுத்தேன்னு வையி, சவத்துப்பய நெலத்தத் தேரியாக்கிருவாம் பாத்துக்கோ…”

தாத்தா அந்தக்கால ஓட்டுநர் உரிமம் எடுத்து சிலகாலம் அரசுப்பேருந்து ஓட்டுநராக இருந்திருக்கிறார். அது அவருக்கான நிறைவைக் கொடுத்து விடவில்லை. சேற்றில் கால்வைத்துக் கஞ்சி குடித்துக் குளத்தங்கரையில் கண்மூடும் சுகம் வேறெதில் கிடைத்துவிட முடியும்? ஆச்சி வந்து சேர்ந்ததும் எடுத்துச் சொல்லி முழுமையாக விவசாயத்தில் இறங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் பக்குவப்படுத்திய நிலம்.

தாத்தா ஸ்ரீ இந்திர வீதிகளில் நடந்து செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலுமிருந்து அழைத்து உட்கார வைத்துப் பேசுவார்கள். இவரும் ஒவ்வொரு குடும்பத்தின் கதைகளைக் கேட்டு ஆலோசனைகளைச் சொல்லுவார்.

“ஏந் தாத்தா.. எதுக்கு எல்லா வீட்லயும் ஒன்னக் கூப்புடுகா? எனக்கே போரடிக்கி…ம்எத்தன கடுங்காப்பி தான் குடிக்கது?”

“மக்ளே..ம்.அது எங்கப்பன் பழக்கி விட்டதாக்கும்… இன்னா நீ எங்கூட வாரேல்லா, அப்பிடித்தான் நானும் சுத்துவேன்… இந்த ஊரு முச்சூடும் நம்ம சொந்தம்லா மக்கா… எல்லாம் ஒன்னும் மண்ணா இருந்து பழகிட்டோம்… பொறவு, நம்ம வயல்ல வெளஞ்சதத்தான் நெறைய வீட்ல சாப்பிடுகா… நம்ம என்ன யாவாரமா செய்யோம்? யாவாரம்லாம் டவுன்ல தான டேய்? நாளக்கி என்ட்ட இல்லன்னா, பத்து வீட்ல ஒக்காந்து ‘சோத்தப் போடு’ன்னு சொல்லுவேன்… நீ பொறக்கதுக்கு முந்தி நம்ம பாலத்துல ஒரு பெரிய கலகம் நடந்து தெரியுமா? எல்லாம் வயல் வேல செய்ய ஆளுகோதான்… லீடர் யாரு தெரியும்லா? தாத்தாவாக்கும்… அப்போ சும்மா ஜம்முன்னு பீமன் மாதி இருப்பேன்.. போலீஸ்காரன் வந்து கொன்னு போடுவேன்னு மிரட்டுகான்… அவனால நெருங்க முடியுமா மக்ளே? இந்த மக்கதான கூட நின்னா! ஒரு சவடால் போலீஸ்காரன் தாத்தாட்ட கைய ஓங்கிட்டான்… நம்ம பயக்க அவனத் தூக்கி ஆத்துல போட்டு ஒரே பெகளம்… அதெல்லாம் ஒரு காலம்…”

எல்லாம் தாத்தாவின் பூர்விகச் சொத்தான நான்கு மரக்கா வகைப்பாடு நிலத்தில் ஆரம்பித்தது. இன்று நான்கு சித்திகளுக்கும் ஆளுக்கொரு வீடு, தோப்பு, மாமாவுக்கு ஸ்ரீ இந்திரத்து சந்நிதித் தெருவில் ஊரிலேயே பெரிய வீடு, பழையாற்றங்கரையில் இரண்டு தென்னந்தோப்புகள், இது போக தங்கம், வெள்ளி, லட்சக்கணக்கில் பணம் என இத்தனையும் செய்ய இந்த ஒரு மனிதனால் எப்படி முடிந்தது?

ஒருநாள், “மக்கா, எல்லா பேரன், பேத்தி பேர்லயும் கொஞ்சங்கொஞ்சம் பேங்க்ல போட்ருக்கேன்… அவ்வோ படிப்புச் செலவுக்குப் பொறவு எடுத்துக்கட்டும்… பின்ன, இவன் என் செல்லக்குட்டில்லா? இவனுக்கு ஒன்னு ஸ்பெசலா உண்டும்… அது.. ஒரு நாளு சொல்லுவேன் என்ன….” என்று அம்மாவிடம் சொன்னார் தாத்தா.

நான் பலமுறை என்னெவென்று கேட்டும் தாத்தா பதில் சொன்னதேயில்லை. இப்போது நான் யாரிடம் போய்க் கேட்பது?

‘எனக்குத் தர வேண்டிய பரிசத் தராம போயிரலாம்னு பாத்தியா தாத்தா? நீ சொன்னேன்னு தான வெளிநாட்டுக்குப் போகாம இங்கயே இருந்தேன்? என் ஃபிரண்ட்ஸ்லாம் எவ்ளோ ஓட்டுகானுகோ தெரியுமா? பொழைக்கத் தெரியாத பய, இவ்ளோ படிச்சிட்டு வெவசாயம் பண்ண வந்துட்டான்னு… நீ பாட்டுக்கு மருந்தடிச்சிட்ட? ஆச்சிக்கி நாளு அறைய வுட்டா சும்மாக் கெடந்துருப்பால்லா தாத்தா? நாளைக்கி பிரபு ஹோட்டல் பிரியாணி வாங்கித் தா மக்ளேன்னு கேட்டேல்லா? இப்பிடி கிறுக்குத்தனம் பண்ணிட்டியே தாத்தா…’

***

“ஒங்க தாத்தா என்ன வேல செஞ்சாரு தம்பி?” என்று கேட்டார் மருத்துவர்.

“வெவசாயந்தான் டாக்டர்… ஏன் டாக்டர்?”

“இல்லப்பா, அவரு குடிச்ச பாய்சனுக்கு ஒருநாள் கூட தாங்காது… இந்த மனுசன் பத்து நாளா போராடிட்டு இருக்காரே! தப்பான முடிவு எடுத்துட்டோம்னு அவருக்கே தோணிட்டோ என்னமோ! செரி, பாப்பம்… கடவுள் விட்ட வழி…”

***

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டுக் கட்டிலில் சற்று சாய்ந்தேன். அம்மா பரபரப்பாக என்னருகே வந்தாள்.

“மக்ளே, ஃபோன் வந்துட்டே இருந்து.. யாருன்னு பாரு…” என்று என் ஃபோனை நீட்டினாள். இந்த அழைப்பைத் தவிர்க்க எவ்வளவு வேண்டிக் கொண்டேன்.

“எத்தான்…முடிஞ்சிட்டு…” என்று சொன்னான் மாமா மகன்.

‘பாவிகளா? எந் தாத்தாவக் கொன்னுட்டேங்களே! முடிஞ்சிட்டு என்ன டே? நீங்கள்ளாம் நல்லாவே இருக்க மாட்டியோ… சாப்பாட்டுக்கு வழியில்லாமத் தெருவுல வந்து நிப்பியோ பாருங்கல… பிச்சக்காரப் பயக்களா… முடிஞ்சிட்டுன்னுல்லா சொல்லுகான்…’

அம்மா ஓவென அலறிக் கீழேவிழ தாத்தாவை அழைத்து வர ஓடினேன்.

***

அவர் செய்த ஒரு நல்ல விசயத்தைக் கூட கண்டுகொள்ளாத ஊடகங்கள் ‘முதியவர் தற்கொலை.. விவசாயத் தற்கொலையா?’ என்று செய்தி பரப்பினார்கள். பிரேதப்பரிசோதனை செய்தே தீர வேண்டும் என போலீஸ்காரர்கள் மல்லுக்கட்ட, என்னால் சகிக்க முடியாமல் மருத்துவமனையை விட்டு ஓடினேன்.

அன்று மாலை, வீட்டு முற்றத்தில் இறுதிச்சடங்கிற்காக என் தாத்தாவை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி ஒரு பொட்டலமாகக் கிடத்தியிருந்தார்கள். என்னால் அழ முடியவில்லை. கையில் கிடைப்பதை வைத்து இவர்களையெல்லாம் துண்டம் துண்டமாக வெட்டி விடலாம் எனத் தோன்றியது.

ஆச்சி வந்து தலைவிரிகோலமாய் தாத்தாவின் மீது விழுந்து அழுது புரண்டாள். என்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. ஓடிச்சென்று அவளது தலைமுடியைப் பிடித்துத் தூக்கி, “எந்தாத்தாவக் கொன்னுட்டேல்லா  நாய.. நாய… நீ சாக வேண்டிய தானட்டீ பிச்சக்காரி…” என்று கத்தி அவள் முகத்தில் மாறி மாறி அடித்தேன். மாமா வந்து இடையில் விழுந்து தடுக்க, அவனது கன்னத்தில் அறைந்து தள்ளி விட்டேன்.

“ராஸ்கல்… கொன்னுருவேன்… ஓடிரு.. எம் மூஞ்சில முழிச்சிராத… நீயெல்லாம் ஒரு மனுசனா ல? பெத்த அப்பன விட ஒனக்குப் பணந்தா முக்கியமாப் போச்சி.. என்ன ல? வயல்ல எவனாம் கைய வச்சிப் பாருங்க ல… கண்ட துண்டமா வெட்டிப் போடுவம்… எவம்னாலும் செரிதான்…. மாமன்… மண்ணாங்கட்டி… தூ…”

நண்பர்களும் அம்மாவும் வந்து என்னைப் பிடித்து விலக்கிக் கொண்டுபோக, நெருப்பில் வெந்து கரைந்தார் என் தாத்தா.

***

அடுத்த நாள் சுடுகாட்டிற்குச் சென்று தாத்தாவின் எலும்புகளைப் பாலும் தேனும் விட்டுக் கழுவி, கூடவே கொஞ்சம் சாம்பலையும் எடுத்தேன். அஸ்தியைக் கன்னியாகுமரிக் கடலில் கரைப்பது வழக்கம். என் தாத்தா அப்படிக் கரைய வேண்டியவரல்ல. ஊரெல்லைக்குச் சென்று அவரது பெயரிலிருந்த வயல் முழுதும் அவரது அஸ்தியைத் தூவி விட்டேன்.

எல்லாம் முடிந்து விட்டது. என் என்ஃபீல்ட்டில் பின்னிருக்கையில் உட்கார்ந்து ‘மெதுவாப் போ டே… பெரிய மத்தவம் மாறி போகாத…’ என்று சொல்ல இனி யார் இருக்கிறார்கள்? தாத்தாவின் போட்டோவிற்கு பூச்சரத்தைப் போட்டு வணங்கி நின்றேன்.

அம்மா வந்து கண்கலங்கி நின்றாள்.

“மக்ளே, தாத்தா என்ன செஞ்சிருக்கா பாரு..” என்று சொல்லிக் கண்கலங்கி என் கையில் அந்தக் காகிதங்களை வைத்தாள்.

அவர் பெயரிலிருந்த அத்தனை வயல்களையும் என் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்தார் தாத்தா.

***

சுஷில்குமார் நாகர்கோயிலைச்சேர்ந்தஇவர்.கிராமப்புறமாணவர்களின்மாற்றுக்கல்விசார்ந்தஆசிரியப்பயிற்சிமற்றும்பள்ளிகள்மேலாண்மைப்பணிகளைகோவையில்இருந்துசெய்துவருகிறார்.தொடர்புக்கு -sushilkumarbharathi2020@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. Kudos to your narrating style Mr.sushil kumar..(விதை )…ஆழம்..how fixating it is! ?
    Its genuine …authentic .. some stories will make us feel connected to the characters and we cannot disconnect from them sooner….this is one of that kind.Such a beautiful ,heart warming story..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular