அவரின் மரணம்
செய்திச் சேனலில் உங்களின்
மரணத்தைப் பற்றி தகவல் சொன்னார்கள்!
திடுக்கிட்டு அம்மாவை அழைத்து
அவர் போய்ச் சேர்ந்து விட்டாரம்மா! என்றேன்.
அவர் யாரென அம்மாவுக்கு தெரியவில்லை.
எனக்கும் தெரியவில்லை!
திடுக்கிடலில் நான் எல்லாவற்றையும்
மறந்திருந்தேன்!
சரி நீங்கள் யாரோவாகவேனும் இருங்கள்!
மருத்துவமனையில் நீங்கள்
மிகவும் துன்பப்பட்டிருக்கலாம்.
மூச்சு வாங்க சிரமப்பட்டிருக்கலாம்.
மருத்துவர் உங்களுக்கு சுவாசக்கருவி
பொருத்தியிருந்திருக்கலாம்!
அவ்வப்போது கபசுர குடிநீர் அருந்தி
இரண்டு முட்டைகளும், கீரை சூப்பும்
குடித்திருக்கலாம்! சிலசமயம் இருமியிருக்கலாம்.
வயிற்றுப்போக்கும் இருந்திருக்கலாம்.
நீங்கள் மிகவும் பயந்து கடவுளரைப்
பார்ப்பது போன்று மருத்துவரை நோக்கி
மனதில் இறைஞ்சியிருக்கலாம்.
இந்தமுறை எப்படியேனும் பிழைத்து
வீடு சென்று விட்டால் உங்களது தீய
பழக்கவழக்கங்களை விட்டு விட்டு
புதுமனிதனாக வாழவேண்டுமென
சபதம் கூட எடுத்திருக்கலாம்.
படுக்கையில் மரண பயத்துடன்
படுத்திருக்கையில் தான் வாழ வேண்டுமென
ஆசையும் வருவதாய் எண்ணி அழுதிருக்கலாம்!
உங்களையறியாமல் நீங்கள் இறந்திருக்கிறீர்கள்.
அவ்வளவு தான்!
000
அதிசய விலங்கு
நெட் ஃப்ளிக்ஸில் புதிய திரைப்படங்கள்
வெளியாகத் துவங்கி விட்டன!
பேருந்துகளில் ஜன்னலோர சிறுமிகள்
கையசைத்துப் போகிறார்கள்!
கோவில்களிலிருந்து பக்தர்கள்
திருநீரு பூசிய நெற்றியுடன்
புன்னகைத்தபடி வெளிவருகிறார்கள்!
பெளர்ணமி பூஜையில் எல்லா
ராசிக்காரர்களுக்காகவும் யாகம்
நடத்துகிறார் பூசாரி!
கபசுரகுடிநீரென்று குடிவிரும்பிகள்
பாரில் அமர்ந்து குடித்து மகிழ்கிறார்கள்.
நான் மட்டும் புதிதாய் இப்போது தான்
வாங்கிய மாஸ்க், கையுறை, கண்ணாடி அணிந்து
ஸ்கூட்டரில் கிளம்பிச் சென்றேன்.
அதிசய விலங்கு செல்வதாய் ஆச்சரியமாய்
எல்லோரும் பார்த்து கையசைக்கிறார்கள்!
கோமாளியை பார்த்தது போன்று
சில பெண்கள் சிரித்தும் சென்றார்கள்!
000
பாதாள உலகம்
பாதாள உலகத்தை பேருந்து ஓட்டம்
துவங்கியதால் ஒருமுறை
பார்த்து வர பிரயாணித்தேன்.
எல்லையிலேயே பேருந்தை நிறுத்தி
’இறங்கிக் கொள்ளுங்கள்! உள்ளே
பேருந்து போகாது!’ என்றார் நடத்துனர்.
என்னோடு சேர்த்து பதினாறு பேரும்
இறங்கிக் கொண்டோம்!
பாதாளலோகம்
இருள் நிரம்பியது என்றென்றைக்குமே!
சுங்கச்சாவடி சோதனைக்குப் பிறகு
பாதாள லோகத்தினுள் சென்றோம் நாங்கள்.
முகப்பிலேயே நிலத்தினை குடைந்து
குழிகளாக்கி வைத்திருந்தார்கள்.
பாதாள உலகத்தினர்
சங்க காலத்தில் பாத்ரூம்
வசதியுடன் வாழ்ந்தார்கள் என்பதை
நிருபணம் செய்யும் ஆதாரங்களாம் குழிகள்!
பதினைந்து நபர்களும் பத்திரமாய்
பார்த்துக் கால்வைத்து இறங்க ஒருவன்
மட்டும் பழங்கால எலும்புக்கூடொன்றின்
மீது தவறி விழுந்தான்!
அவன் பிறகு எழவேயில்லை.
நான் என் தந்தையாரைத் தேடிப் பயணித்தேன்.
தந்தையாரை வீடியோ காலில் அழைத்தேன்.
அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
சற்று தூரத்தே ஒரு எலும்பு மனிதன் தன்
கைப்பேசி வெளிச்சத்தில் தன் முகத்திற்கு
அவசரமாய் மாஸ்க் அணிந்து கொண்டு
எங்களை எதிர்கொள்ள தயாரானான்.
000
கடவுள்
என் கடவுளைப் பார்த்து வர
சூடம் ஊதுபத்தி தீப்பெட்டியோடு
சென்றிருந்தேன்!
யாரோ என் கடவுளுக்கு
முகக்கவசத்தை அணிவித்து
போயிருக்கிறார்கள்!
மூச்சு வாங்க சிரம்மாய் இருப்பதாய்
என் கடவுள் குரல் கேட்டது சுவரெங்கிலும்!
’இதோ’ வென முயற்சித்தேன்.
உருவாஞ் சுருக்கிட்டிருந்தால் எளிதாக
பணியை முடித்திருப்பேன்.
ஏகப்பட்ட முடிச்சுகளோடு இருந்ததால்
முடிச்சவிழ்க்க முடியாமல் திணறினேன்.
‘என் கையில் வீணே இருக்கும் கத்தியை
எடுத்தேனும் முயற்சியேன்’ அசரீரி தான்.
கடவுளின் கையிலிருந்த கத்தியை உருவி
மாஸ்க் முடிச்சை அவிழ்த்தேன்!
புஸ்ஸென்று புகை மண்டலமாயிற்று
அந்த இடம்!
எல்லாம் சரியாகி கண்திறந்த போது
கையில் கத்தி பிடித்தபடி நான்
அவர் மேடையில் அமர்ந்திருந்தேன்.
கடவுள் இடத்தை காலி செய்திருந்தார்.
000
வியாபாரி
நீ ஏன் நாட்டு நாய்க்குட்டிகளை
ராஜபாளையம் சென்று வாங்கி வந்து
வீணாய்க்கிடக்கும் உன்
கோழிப்பண்ணைக்குள் விட்டு
வளர்க்கக் கூடாது? மக்கள்
பண்ணைக்கு தேடி வந்து
வாங்கிச் செல்வார்கள்! நாய் ஒன்றுக்கு
நூறிலிருந்து இருநூறுவரை லாபம்
வைத்து விற்றால் உனக்கு சந்தோசம்
தானே! என்றான் நண்பன்.
அல்லது தஞ்சாவூர் சென்று
ஒரு லோடு பொம்மைகளை
ஏற்றி வந்து உன் கோழிப்பண்ணைக்குள்
இருப்பு வைத்து ஊர் ஊராய்
ஆட்டோவில் போட்டுச் சென்று
பதிவு செய்யப்பட்ட சின்னக் கொடை
ரேடியோவில் விளம்பரம் செய்து
வியாபாரியாக ஏன் மாறக்கூடாது?
‘அண்ணே வாங்க! அக்கா வாங்க!
உங்க கொழந்தைகள் இந்த கொரனா
காலத்தில் மகிழ்ச்சியாக வீட்டில்
விளையாட தஞ்சை பொம்மைகள்!
கொறஞ்ச வெலையில விற்பனை செய்யுறோம்!
வாங்க! வாங்கக்கா!’ நாலு பொம்மைகள்
வெறும் நூறே ரூவா தான்!’
‘ஈபாஸ் எடுத்தாவது
பெங்களூர் கூட்டிச் சென்று
உன் ஒரு விரையை விற்று
காசாக்கி வந்து தொழிலை துவங்கி
விடுகிறேன்’ என்றேன்.
கொரனா காலமோ
வேறு என்ன காலமாகவோ
இருந்தாலும் அறிவுரைகளுக்கு
பஞ்சமே இருக்காது தான் போல!
000
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
அந்தப் பெண்ணை சாலையில்
நான் பார்த்த போது மனதினுள்
எதுவோ அப்போது பூத்துவிட்டது!
இத்தனைக்கும் அந்தப்பெண்ணை
பின்புறமாகத்தான் நான் பார்த்தேன்.
உலகத்தின் அழகெல்லாம் ஒருசேர
அமையப்பெற்றவளாக இருக்கலாம்!
இருப்பது ஒரு வாழ்க்கை!
அதை இப்போது மகிழ்ச்சிப்படுத்த
அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்தேன்.
நீலவர்ண சுடிதார் அவள் உடலுக்கு
ஏற்றதாக அமையப்பெற்றிருந்தது.
மிக உயர்ரக மிதியடி அணிந்திருந்தாள்.
அவளின் நடை ஒரு நாட்டியத்திற்கு
ஒப்பானதாக இருந்தது!
சாலையில் செல்வோர் அவரவர்
பாடுகளோடு சென்றார்கள்!
அவளின் எதிர்க்கே கோமாதா ஒன்று
சாலையில் வந்து கொண்டிருந்தது!
எனக்கோ சாலையில் வரும் அது
உலகத்தின் அழகையெல்லாம் ஒருசேர
பெற்றிருக்கும் அவளை முட்டி விட்டால்?
குடல் சரிந்து சாலை ஏக களேபாரமாகிடும்!
நான் நடையை விரைவு படுத்தினேன்.
நான் நல்ல மாடுபிடிக்காரனுமல்ல தான்.
கோமாதா அசைபோட்டபடி திடீரென நின்று
வாலை உயர்த்தி சிறுநீரை வெளியேற்றிற்று!
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்
வேகமாய் மாட்டைக் கடந்து
மாஸ்க்கை இறக்கிவிட்டு தன் உள்ளங் கைகளால்
சிறுநீரைப் பிடித்துக் குடித்தாள்! தலைக்கும் தீர்த்தம்
போல போட்டுக் கொண்டாள்!
பிறகு எனக்கு யாரோ தண்ணீரை முகத்திலடித்து
எழுப்பினார்கள்! யாரெனப் பார்த்தேன்!
உலகத்தின் அழகெல்லாம் ஒருங்கே பெற்றவள்!
000
–
வா.மு கோமு – இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.சிறுகதைகள், கவிதைகள், நாவல், கட்டுரைகள் என 25க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.நடுகல் இதழ் ஆசிரியர் – vaamukomu@gmail.com