Thursday, March 28, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்வாழ்வினிலே இரண்டு நாள்

வாழ்வினிலே இரண்டு நாள்

குமாரநந்தன்

ன் வாழ்க்கையில் இருந்து கழிந்துபோன நாட்களில் ஏதாவது ஒரு நாளை மட்டும் மீண்டும் அதேபோல நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என சத்தியமூர்த்தி பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நாள் எது என்பதையும் அவர் சமீபத்தில் தீர்மானித்து விட்டார். அது சுகன்யாவை முதன்முதலில் சந்தித்த அந்த நாள்தான்.

சத்தியமூர்த்திக்கு இப்போது அறுபது வயதாகிறது. ஆனால் நம்ப முடியாது. ஐம்பது வயதுதான் மதிக்க முடியும். உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். நரைத்த தலைக்கு கொஞ்ச காலம் சாயமடித்துக் கொண்டிருந்தார். அப்புறம் அது அவருக்கே வெட்கமாய் இருப்பதாக விட்டுவிட்டார். 

அவர்களின் ஒரே மகன் ரகு ஆட்டோ மொபைல் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்கிறான். படிப்பு முடிந்த கையோடு அங்கே போய்விட்டான். அங்கேயே ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான். வீட்டுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என இரண்டு ஆண்டுகளாய் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்னும் வரவில்லை. வாரம் ஒருமுறை வீடியோ காலில் பேசுவான்.

இப்போது பார்க்கும் போது அவனை தங்கள் மகன் தான் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. உடல் நிறம் நல்ல வெளுப்பாகிவிட்டது. நடை உடை பாவனைகள் பேச்சு சிரிப்பு எல்லாமே முற்றிலும் மாறிவிட்டது.  ஜெர்மனிலேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி பேசுகிறான். அவன் இனி இங்கே வரமாட்டான். ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் இவர்களை அங்கே வந்துவிடும்படி ஒருமுறை சொல்லிவிட்டு போனை வைப்பதை கடமையாகக் கொண்டிருக்கிறான்.

இவர்களுக்கும் மகனுடனேயே போய் இருக்க ஆசைதான். ஆனால் ஏதோ ஒன்று அவர்களைத் தடுத்தது. அது பிறந்த மண் மேல் இருக்கும் பிடிப்பா முற்றிலும் புதிய இடம் புதிய நாடு என்ற தயக்கமா அல்லது விமானத்தில் செல்ல பயமா எதுவென்று தெரியவில்லை.

சுகன்யாவுக்கும் அவருடைய வயதே தான். இருவரும் சென்னை கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். படிக்கும்போதே காதல், பின் திருமணம்.

அப்போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இன்னும் இருக்கின்றன. சுகன்யாவும் அவரும் மட்டுமல்ல அவர் அப்பா, அம்மா, சுகன்யாவின் அப்பா, அம்மா எல்லோரும் அவ்வளவு அழகாய் இருந்தார்கள். திருமணத்தின் போது சுகன்யாவின் அம்மா அழகியாகவெல்லாம் தெரியவில்லை. இப்போது போட்டோவில் பார்க்கும் போது அவர் அழகாகத் தெரிகிறார். அவர் மட்டுமல்ல அந்த போட்டோக்களில் உள்ள எல்லாமே அழகாக இருக்கின்றன.

கடந்து போன அந்த நாட்கள் தான் எவ்வளவு அழகானவை என்ற நினைவே அவரை பித்தம் கொள்ளச் செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு முறை அந்த நாட்களைத் திரும்பக் காண வேண்டும் என்ற ஆசை அவரை நோய் போல பீடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

ஒருவேளை உருப்படியான வேலை என்று ஏதாவது இருந்திருந்தால் அவர் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்திருக்க மாட்டாரோ என்னவோ? அரசு அதிகாரியாக இல்லாமல் இருந்திருந்தால் இன்று அவர் ஓடி ஆடி ஏதாவது வேலை செய்துகொண்டு இருந்திருப்பார். அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடனே, என்னவோ உலகின் எல்லா விஷயங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதைப் போல, மரணத்தை நோக்கிக் காத்திருப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என்ற எண்ணம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. அது தவறு என்று தெரிந்தாலும் அதைத் தவிர வேறு ஒன்றும் மனதுக்குள் இருப்பதில்லை.

காலையில் எழுந்ததும் ஒரு வாக்கிங். வந்து கொஞ்சம் யோகா. பிறகு பேப்பர் பார்ப்பது. காலை டிபன் அப்புறம் கொஞ்ச நேரம் டிவியில் செய்தி கேட்பது, படம் பார்ப்பது. அப்படியே சின்ன தூக்கம். மதியச் சாப்பாடு தூக்கம் இரவு சாப்பாடு தூக்கம் என்று ஒரு மனிதன் ஒரு வாரம் இருந்தாலே பைத்தியம் பிடித்துவிடுமே? வாழ்க்கை பூராவும் இருக்க வேண்டும் என்றால்? சத்திய மூர்த்திக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அவர் மனம் முழுவதும் இளமைக்காலம்தான் நிறைந்திருந்தது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. பையனுக்கு பத்து வயதானபோது என்ன நடந்தது? தெரியாது. ஒருமுறை அவனுக்கு கடுமையான விஷ ஜுரம் வந்து மருத்துவமனையில் ஒருவாரம் இருந்து பிழைத்து வந்தானே தெரியுமா? என்ன பையனுக்கு பத்து வயதில் அப்படி ஒரு ஜுரம் வந்ததா? எனக்கு அப்படி எதுவும் ஞாபகத்தில் இல்லையே? என்பதுதான் அவர் பதில்.

அதே நேரம் காலேஜ்ல இங்கிலீஷ் கிளாஸ் எடுத்தாங்களே அவங்கள ஞாபகம் இருக்கா என்று கேட்டால், ரேணுகா மிஸ் நல்லா ஞாபகம் இருக்கே. அவங்க குரல் இன்னும் காதுக்குள்ள கேக்குது. இதோ இப்ப அவர் பாடம் எடுக்கற மாதிரி மனசுல அப்படியே ஓடுது. ஒரு தடவை பொங்கல் பண்டிகைக்கு முன்னால கிளாஸ்ல நம்ம கூட எல்லாம் ஜாலியா பேசிகிட்டிருந்தாங்க தெரியுமா? அன்னைக்கி அவங்க பாசி கலர் மாதிரி ஒரு பச்சையில சேல கட்டியிருந்தாங்க. ஜிமிக்கி கூட அன்னைக்கி புதுசா போட்டிருந்தாங்க என ஆரம்பித்துவிடுவார்.

இருவருக்கும் எந்த வேலையும் இல்லை. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாம் மெஷின். சமையல் ஒன்றும் பிரமாதமாக இருக்காது. சுகன்யா அதை அரைமணி நேரத்தில் முடித்துவிடுவார். பின் நாளெல்லாம் உட்கார்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது. நாட்கள் இப்படியே தொடர்ந்தால், கடைசியில் சுகன்யாவின் முகத்தைப் பார்க்கவே வெறுப்பு வந்துவிடுமோ என அவருக்கு பயமாய் இருந்தது.

காலையில் எழும்போதே ஒரு சோம்பல், பின் ஒரு வெறுமை, பின் ஒரு சலிப்பு. இதிலிருந்து எப்படி மீள்வது என யோசித்தபோதுதான் அவருக்கு பழைய நாளை நிகழ்த்திப் பார்க்கும் யோசனை தோன்றியது.

கல்லூரி நாள் ஒன்றை மீண்டும் நிகழ்த்துவது என்பது முடியாத காரியம். கல்லூரி நாள் என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே வேண்டுமானால் இருக்கலாம். கல்லூரிக்குப் போக முடியாது. சுகன்யாவிடம் காதலைத் தெரிவித்தபின், பீச்சுக்குப் போன எண்ணற்ற நாட்களில் ஒன்றை திரும்ப நிகழ்த்தினால் அதில் பழையபடி மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. மேலும் கடல் காற்று இப்போதெல்லாம் அவருக்கு ஒத்துக் கொள்வதில்லை. மூக்கை அடைத்துக் கொள்கிறது.

தியேட்டருக்குப் போகலாம் என்றால் இன்றுள்ள தியேட்டர்கள் அன்றைய தியேட்டர்களைப் போல இல்லை. மேலும் இப்போது வரும் படங்களைப் போய்ப் பார்த்தால் அது பழைய நாளை நிகழ்த்திப் பார்ப்பதைப் போலவே இருக்காது என பல நாட்களாக எதை எதையோ யோசிப்பதும் நிராகரிப்பதுமாய் இருந்தார்.

இறுதியில் வெறுமனே உட்லண்ட்ஸ் ஓட்டலுக்காவது போகலாம் என யோசித்தார். அப்போதுதான் அவருக்கு நினைவுக்கு வந்தது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒருநாள் யாருக்கோ பிறந்ததாள் அதற்காக அந்த நண்பன் ஓட்டலில் கொடுத்த சின்ன விருந்தொன்றில் கலந்து கொள்ளும்போதுதான், முதன் முதலில் சுகன்யாவிடம் தன் காதலை தெரிவித்திருந்தார்.  

அந்த நாளை நினைக்க நினைக்க அவருக்குள் உற்சாகம் கொப்பளித்தது. அந்த நாளைத்தான் திரும்ப நிகழ்த்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டார்.

அதை சுகன்யாவிடம் சொன்னபோது, ‘சும்மா இருக்க முடியாததுக்கு என்னவோ சொல்றீங்க பாவம்’ என்பதைப் போல பார்த்துவிட்டு, சமைக்கும் வேலையில் மூழ்கிவிட்டார்.

சுந்தரமூர்த்தி அதன்பின், ஒரு புதிய மனிதரைப் போல ஆகிவிட்டார்.  தினமும் உற்சாகமாக எழுகிறார். நண்பர்களுடன் பேசுகிறார். வெளியே போகிறார் வருகிறார். பரபரப்பாக இருக்கிறார். அவருடன் படித்தவர்களில் ரங்கராஜ் புரசைவாக்கத்திலும் மோகன் திருவான்மியூரிலும் இருக்கிறார்கள். அவர்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் யார் யார் அவர்கள் எங்கே எங்கே இருக்கிறார்கள் என ஒருவரிடமிருந்து ஒருவர் மூலமாக தகவல் வாங்கியாகிவிட்டது. இதில் தனபால், மந்திர மூர்த்தி இரண்டு பேரும் எங்கே இருக்கிறார்கள்? இருக்கிறார்களா? இல்லையா? என கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. மற்றவர்கள் எல்லாம் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள். டெல்லியில் இருக்கும் பிரபாகரனும் அந்த நிகழ்வின் போது உடன் இருந்தவன். அவனை இதற்காக வரச் சொன்னால் வருவானா என்று மலைப்பாய் இருந்தது. அவன் வருவது இருக்கட்டும், இங்கே திருநெல்வேலியில் இருக்கும் குணசீலனிடம் என்ன சொல்லி வரச்சொல்வது என்றும் தெரியவில்லை. பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த சுந்தரம் வேறு இறந்துவிட்டான்.

மோகன், தங்களோடு படித்த சந்திர பிரகாஷ், ஆனந்தன் இருவரையும் கூட அழைக்கலாம் என்றான். அப்படி இருவர் தன்னோடு படித்ததாய் சத்தியமூர்த்திக்கு நினைவே இல்லை.

சரி போகட்டும் அவர்கள் இரண்டு பேரும் குறிப்பிட்ட அந்த நாளில் நடந்த பார்ட்டிக்கு வந்தார்களா என சந்தேகமாய் கேட்டபோது, அப்படி ஒரு விருந்து நடந்ததே தனக்கு நினைவில் இல்லை என மோகன் சொல்லிவிட்டார்.

சத்தியமூர்த்தி யோசித்துப் பார்த்தார். பத்துபேர் போனது மட்டும் நினைவில் இருக்கிறது. அவர்கள் யார் யார் என்று யோசித்தபோது, இந்த மோகன், ரங்கராஜ், பிரபாகரன், மந்திரமூர்த்தி, தனபால், ஹேமாவதியைத் தவிர மற்ற இருவரையும் கடைசி வரை நினைவுக்கு வரவே இல்லை. சரி இருக்கட்டும் அந்த சந்திர பிரகாஷ், ஆனந்தன் இருவரையும் கூட அன்றைய பார்ட்டிக்கு வந்தவர்களாகவே வைத்துக் கொள்வோம், அவர்களையும் அழைத்துக் கொள்வோம் என முடிவுக்கு வந்தார் சத்தியமூர்த்தி.

சுந்தரம் இறந்துவிட்டதால் அந்த சந்திப்பை பிறந்தநாள் பார்ட்டி என்று சொல்ல முடியாது. நீண்ட காலத்துக்குப் பின் பள்ளித் தோழர்கள் சந்திக்கும் நிகழ்வு என்பதாக அது அமைந்துவிடக் கூடாது என்பதில் சத்தியமூர்த்தி உறுதியுடன் இருந்தார்.  சந்திப்புக்கு எந்தப் பெயரும் அடையாளமும் இல்லாவிட்டால் என்ன? அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டார்.

பார்ட்டியில் கலந்து கொண்ட இன்னொரு பெண் ஹேமாவதி சேலத்தில் இருந்தாள். அவளும் இதற்கென மெனக்கெட்டு பஸ் பிடித்து வருவாளா? மாட்டாளா? தெரியவில்லை.  இதையெல்லாம் யோசிக்கும் போது, பேசாமல் இந்த திட்டத்தைக் கைவிட்டுவிடலாம் போல இருந்தது சத்திய மூர்த்திக்கு. ஆனால் அந்த நிகழ்வை மட்டும் எவ்வளவு அறைகுறையாகவேனும் நிகழ்த்தி முடித்துவிட்டால், காலத்தை கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிட்டதாக தனக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அதற்கு இணையாக எதுவும் இருக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

சுகன்யா இதை சாக்காக வைத்து தன்னோடு படித்த பரிமளம், மேனகா இருவரையும் கூட கூப்பிடுவோம் அவர்கள் இங்கே சென்னையில் தான் இருக்கிறார்கள் என்றார்.

குழுவில் இரண்டு பெண்கள் அதிகமாகிவிட்டால், அது அன்று நடந்த பார்ட்டியை நினைவு படுத்துவது மாதிரி இருக்காதே வேறு ஏதோ பார்ட்டி மாதிரிதானே இருக்கும் என்றார் சத்தியமூர்த்தி

“இப்ப மட்டும் என்ன அன்னைக்கி நடந்த மாதிரியேவா நடக்கப் போவுது எப்படி இருந்தாலும் இது வேற அது வேற தான். நீங்களும் நானுமே கூட அவங்க இல்ல வேற தான் என்றவர், அன்னைக்கி யார் யார் கலந்துகிட்டாங்கன்றதே உங்களுக்கு ஞாபகம் இல்ல அப்படீங்கும் போது, இந்த ரெண்டு பேரும் அதுல கலந்துகிட்டவங்கதான்னு நினைச்சிக்கோங்களேன்” என்றொரு யோசனையையும் முன்வைத்தார்.

அதற்கு மேல் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை “சரி நடக்கட்டும், அவங்ககிட்டயும் சொல்லிடு” என்றுவிட்டார்.

வீட்டில் ஒரு கல்யாணக்களை வந்துவிட்ட மாதிரி இருந்தது. நாட்கள் பிரகாசமாயும் உற்சாகமளிப்பதாயும் இருந்தன. ஏதோ ஒரு அர்த்தமுள்ள காரியத்தைச் செய்ய இருப்பதாக மனதுக்குள் எப்போதும் சந்தோஷமும் புதுமையும் குமிழிட்டுக் கொண்டிருந்தன.

சுகன்யா முதலில் இதில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போகப்போக அவருக்கும் ஆர்வம் வளர ஆரம்பித்துவிட்டது. சத்தியமூர்த்தி கிட்டத்தட்ட தனக்கு இன்னும் கல்யாணம் ஆகாத மாதிரியும் வரும் நாளில் தான் சுகன்யாவிடம் தன் காதலை தெரிவிக்க இருப்பதும் மாதிரியான மனநிலைக்கு சென்றுவிட்டார். மனைவியைப் அவர் பார்த்த பார்வையில் பழைய காதல் வழிந்தது. அவராலும் கணவனை மிகுந்த வெட்கம் இல்லாமல் பார்க்க முடியவில்லை.

வெள்ளியன்று இரவு வழக்கம் போல போன் செய்த ரகு, இருவரிடமும் தெரிந்த குதூகலத்தைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டான்.

“அம்மா என்னம்மா இப்படி வெக்கப்படறீங்க. அப்பா நீங்க இவ்ளோ ஜாலியா இருக்கீங்க… எனக்கு ஒன்னுமே புரியலையே” என்றான். அவர்களின் உற்சாகம் அவனிடமும் தொற்றிக் கொண்டது.

“ரகு நான் உங்க அம்மாவ லவ் பண்ற விஷயத்தை சொல்லி பிரப்போஸ் பண்ணப்போறேன்” என்று புதிர் போட்டார் அப்பா.

அவன் உண்மையிலேயே ஒன்றும் புரியாமல் விழித்தான். சத்தியமூர்த்தி தயங்கித் தயங்கி தன்னுடைய திட்டத்தைச் சொல்லவும் அவனுக்கு ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தன. “அப்பா எப்படிப்பா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது. நீங்க உண்மையிலேயே கிரேட் பா” என்றான்.

“அந்த பார்ட்டில கலந்துக்க நானும் வரட்டா எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்குப்பா” என்றான்.

“டேய் என்னவோ நிஜமா வரப்போறவனாட்டம் நீ ரொம்ப பண்ணாத.” என்றார் கிண்டலாக.

“இல்லப்பா நீங்க அம்மா கிட்ட எப்படி பிரப்போஸ் பண்ணீங்கன்னு பாக்க ஆசையா இருக்கு.”

“அடிச்சிருவேன் நீ வந்து உக்காந்துகிட்டிருந்தா உங்க அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவா? அப்புறம் இந்த டிராமாவும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம்னு வீட்லயே உக்காந்துக்குவா” என்று சிரித்தார்.

ரகு மனம் விட்டுச் சிரித்தான். “சரிப்பா பெஸ்ட் ஆப் லக் நல்லா பண்ணுங்க” என்றுவிட்டு, அம்மாவிடம், “அம்மா அப்பா பிரப்போஸ் பண்ணும் போது, நீங்க அதெல்லாம் கிடையாதுன்னு கலாட்டா பண்ணிடுங்க இன்னும் வேடிக்கையா இருக்கும்” என்றுவிட்டு சிரித்தான். அம்மா வெட்கம் தாங்காமல் உள்ளே ஓடிவிட்டார்.

டெல்லியில் இருக்கும் பிரபாகரன் தான் இப்போது வரமுடியாது என்று சொல்லிவிட்டான். எஞ்சுவது நான், சுகன்யா, மோகன், ஆனந்தன், ரங்கராஜ், சந்திர பிரகாஷ், ஹேமாவதி அப்புறம் சுகன்யாவின் தோழிகள் இரண்டு பேர், ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் இருக்கப் போகிறோம். இந்த நான்கு பெண்கள் என்பதுதான் சத்திய மூர்த்திக்கு நெருடலாக இருந்தது.

அன்று நடந்தது ஒரு ஆண்களின் பார்ட்டி. அதில் துணிவும் சாகசமும் போன்றதொரு மனநிலை இருந்தது. ஒருவேளை அன்றே பெண்கள் அதிகம் இருந்திருந்தால் அந்த மனநிலை இருந்திருக்குமா தெரியவில்லை. சத்தம் போட்டுச் சிரித்திருக்க மாட்டோம். உற்சாகமாகக் கத்தி இருக்க மாட்டோம். எல்லாவற்றிலும் ஒரு தயக்கமும், நாசுக்கும் சேர்ந்து ஒரு சுவையில்லாத அல்லது வேறொரு சுவையுள்ள விருந்தாய் இருந்திருக்கும்.

இப்போது வயதாகிவிட்டதால் அன்று போல யாரும் சத்தமாய் பேசப் போவதில்லை. யாருக்காவது காது கேட்காமல் இருந்தால் வேண்டுமானால் சத்தமாக பேசலாம். ஆனால் அது அன்றைய சத்தமான பேச்சைப் போல இல்லாமல் வேறுமாதிரி இருக்கும்.

சுகன்யா திடீரென்று “ஏங்க இதெல்லாம் பண்ணணுமா வெளிய போகணும்னு தோனினா பேசாம நாம மட்டும் போயிட்டு வரலாமே” என்றார்.

சத்தியமூர்த்தியும் யோசித்தார்.  இந்த திட்டத்தை கைவிட்டுவிடலாம் என்று நினைக்கும் போதே ஒரு சோர்வு வந்து சூழ்வதைக் கவனித்தார். அது முன்பு வழக்கமாய் இருந்த சோர்வை விட வலிமையாய் இருந்தது.

“இதுல இவ்வளவு சங்கடப்பட என்ன இருக்கு. ஒருநாள் நாம நம்மோட பழைய நண்பர்களோட வெளிய போய் சாப்பிடப் போறோம் அவ்வளவுதானே?”

“நீங்க என்னமோ பிரப்போஸ் அது இதுன்னுகிட்டிருக்கீங்களே?”

“அது சும்மா வேடிக்கை தானே? இனிமேதானா நான் உங்கிட்ட பிரப்போஸ் பண்ணப் போறேன்?” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

“என்னமோ போங்க” என்றுவிட்டு சுகன்யா அப்பால் போய்விட்டார்.

இப்போது தேதி குறிக்க வேண்டும். அதற்கு எல்லோரையும் கலந்தாலோசிக்க வேண்டும். பிறகு ஓட்டலில் டைம் புக் செய்ய வேண்டும். ஓட்டல் பற்றி நினைக்கும் போதுதான் அவருக்கு இன்னொரு குழப்பம் வந்தது. அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது, அடிக்கடி நிறைய ஓட்டல்களுக்குப் போயிருக்கிறார்கள். அதில் குறிப்பிட்ட இந்த நிகழ்வு நடந்தது ராயப்பேட்டை உட்லேண்ட்ஸ் ஓட்டல் என்பது அவர் நினைவு. ஆனால் மயிலாப்பூர் கற்பகம் மெஸ்சுக்கும் அடிக்கடி போயிருப்பதால், இது கற்பகம் மெஸ்சில் நடந்ததா, உட்லேண்ஸ்சில் நடந்ததா என குழம்பிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு இருவருமே அங்கு போயிருக்கிறார்கள்தான் அன்று நடந்ததை திரும்பவும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்தான் ஆனால் இப்போது நினைக்கும்போது என்னவோ குழப்பம் வருகிறது.

அவர் நிதானமாக உட்கார்ந்து இரண்டு ஓட்டல்களின் அமைப்பையும் உணவுக்கூடத்தின் அமைப்பையும் மனதுக்குள் கொண்டு வந்து, நடந்த சம்பவத்தை ஓட்டிப் பார்த்தார். இரண்டு இடத்திலுமே அந்த சம்பவம் நடந்ததைப் போலவே மனக் காட்சிகள் தெளிவாக வந்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை எல்லாவற்றையும் சமரசம் செய்து கொண்டதைப் போல அவர் இதையும் சமரசம் செய்து கொள்ளலாமா என யோசித்தார்.

நண்பர்களிடம் கேட்கலாம் என்று ரங்கராஜைக் கேட்டால், அவர் இத்தோடு ரெஸிடென்சி ஹோட்டல் மற்றும் அம்பாள் மெஸ் ஆகியவற்றையும் சேர்த்து சொல்லி ஒரேயடியாய் குழப்பினார். ‘இவங்கிட்ட கேட்டதுக்கு சும்மா இருந்திருக்கலாம்’ என சத்தியமூர்த்தி நொந்து போனார்.

எதற்கும் நேரிலேயே போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முதலில் உட்லேண்ட்ஸ்க்குப் போனார். நல்லவேளையாக அங்கே போனபின் அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லாமல் எல்லாம் துலக்கமாகிவிட்டது. தான் காதலைச் சொன்னது உட்லேண்ட்ஸ்சில்தான் என்பது உறுதியாகிவிட்டது.

ஓட்டல் நிர்வாகியைப் பார்த்து, விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார். (பிரப்போஸ் பற்றி சொல்லவில்லை) நாங்கள் பழைய நண்பர்கள் கல்லூரியில் படிக்கும் போது இங்குதான் சந்திப்போம். இப்போது அந்த நாட்களை நினைவு கூறும் வகையில் இங்கே மீண்டும் ஒரு சந்திப்பை நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

அவர் முகம் உடனே மலர்ந்துவிட்டது. “ரொம்ப சந்தோஷம் சார். டேட் சொல்லுங்க தனி ஹால் எதுவும் ஏற்பாடு பண்ணணுமா? விருந்துக்கு என்ன டிஷ் செய்யலாம். எவ்வளவு பேர் வருவீங்க?” என கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார்.

“அதெல்லாம் வேண்டாம். குறிப்பிட்ட இரண்டு டேபிளை மட்டும் ஒதுக்கி வைத்திருந்தால் போதும், நண்பர்களோடு கலந்து பேசிவிட்டு, தேதியை போன் செய்து சொல்லிவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு உணவுக் கூடத்தைப் பார்க்க விரும்பினார்.

அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. அந்த உணவுக் கூடம் அப்படியே இருந்தது. எந்த மாற்றமும் இல்லை. அந்த மேஜைகள், நாற்காலிகள் அந்த சிவப்பு தரைவிரிப்பு. அந்த பெரணிச் செடி இருக்கும் அழகுத் தொட்டிகள் எல்லாம் அப்படியப்படியே இருந்தன. பரிமாறுபவர்கள் கூட அன்றைய நாளில் இருந்தவர்களை நினைவூட்டுபவர்களைப் போலவே இருந்தனர்.  அவருக்கு அப்போதே அந்த நாளுக்குப் போய்விட்டதைப் போல இருந்தது.

திரும்பி வந்தவுடனே, எல்லோரிடமும் பேசி வரும் ஞாயிறு இல்லாமல் அடுத்த ஞாயிறு என, நாள் முடிவு செய்யப்பட்டது.  

இன்னும் ஒருவாரம் தான் நினைக்க நினைக்க ஒரே படபடப்பாய் இருந்தது. அன்று சுகன்யாவிடம் தன் காதலைச் சொன்னபோது கூட இவ்வளவு நாள் யோசித்திருப்போமா? இப்படியெல்லாம் திட்டமிட்டிருப்போமா? என்று யோசித்துப் பார்த்தார். நிச்சயம் அன்று இப்படியெல்லாம் இருந்திருக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டார்.

ஹோட்டலுக்கு போன் செய்து, ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு என இரண்டு டேபிள்களை புக் செய்துவிட்டார்.  வேறு டேபிள்களை ஒதுக்கிவிடக் கூடாது என்றும், இடதுபுறம் நடுவில் அடுத்தடுத்து இருக்கும் இரண்டு டேபிள்கள் தான் தனக்கு வேண்டும் என உறுதியாக சொல்லிவிட்டார்.

நாட்கள் கிடுகிடுவென ஓடிவிட்டன. சனிக்கிழமையன்று காலை மோகனுக்கும், ரங்கராஜுகும் நினைவூட்டினார். பிறகுதான் காதலைச் சொல்லப் போகிறவளுடன் சேர்ந்தே ஓட்டலுக்குப் போவதாவது என நினைத்தார்.

அன்று அப்படித்தான் நடந்தது என்றாலும், சுகன்யா என்ன அப்போது ஒரே வீட்டில் என்னுடனா இருந்தாள். இல்லையே? இன்று இருவரும் வழக்கம்போல எதையாவது பேசிக்கொண்டே ஒரு வாடகைக் காரில் போய், ஓட்டலுக்குள் உட்கார்ந்து நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றால் எவ்வளவு அபத்தமாய் இருக்கும்?

சுகன்யாவிடம் இதைப் பற்றிச் சொல்லி, “இன்னைக்கி ஒருநாள் வேற எங்கியாவது தங்கிகிட்டு அங்கிருந்து நேரா ஓட்டலுக்கு வந்துடேன்” என்றார்.  “நான் ஏன் எங்கியோ போய் ராத்தங்கிட்டு வரணும். நீங்க வேணா எங்கியாவது போயிட்டு வாங்க” என்றார்.

அவர் திரும்ப மோகனுக்கு போன் செய்து, “இன்னைக்கே உன் வீட்டுக்கு வர்றேன். அங்கிருந்து காலையில ஓட்டலுக்குப் போயிடலாம்” என்றார்.

“சரி நீ நாளைக்கு மதியத்துக்கு மேல கிளம்பி, டாக்ஸி பிடிச்சி நேரா ஓட்டலுக்கு வந்துடு” என்றுவிட்டு, பேக்கில் ஒரு செட் உடையை எடுத்துக் கொண்டு அப்போதே மோகன் வீட்டுக்கு கிளம்பினார்.

“ஆமாம் பிள்ளையில்லாத வீட்ல….” சுகன்யா என்னவோ சொல்ல ஆரம்பித்தார்.

சத்தியமூர்த்தி காதில் விழாதவராய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

மோகன் வீட்டில் யாரும் இல்லை. “என்னடா எல்லாம் எங்க போயிட்டாங்க?” என்றார் ஆச்சரியமாய். “நீ இங்க வர்றப்ப அவங்களும் இருந்தா நல்லா இருக்குமா? அதான் என் ஒய்பையும் பையனையும் பக்கத்தில் இருக்கிற அவங்க அம்மா வீட்டுக்கு போகச் சொல்லி அனுப்பிட்டேன்” என சிரித்தார் மோகன்.

“இன்னும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றார் தொடர்ந்து.

“என்ன அது?”

ஆனந்தன், ரங்கராஜ், சந்திர பிரகாஷையும் கிளம்பிவரச் சொல்லிட்டேன்.”

“அவங்க எதுக்கு?”

“அவங்களும் இருந்தாத்தானே நல்லா இருக்கும்” என்று விஷமமாய் சிரித்தார்.

அதன் அர்த்தம் பிறகு அவர்கள் வரும்போதுதான் விளங்கியது. ஆனந்தன் ஒரு புல் பாட்டிலோடு உள்ளே வந்தார்.

“டேய் இதென்னடா கத எங்கெங்கயோ போகுது” என்றார் சத்தியமூர்த்தி.

“பிரண்ட்ஸ் மீட்டிங்னா இதெல்லாம் இல்லாம?” என ஆச்சரியமாய் பார்த்தார் ஆனந்தன்.

இரவு இரண்டாவது ரவுண்டுக்கெல்லாம் சத்தியமூர்த்தி எல்லாத் தயக்கங்களையும் உடைத்து எறிந்துவிட்டார்.

அவர் நடவடிக்கைகள் எல்லாம் கல்லூரி மாணவனுடையதைப் போலவே இருந்தன. “நான் சுகன்யாவுக்கு போன் பண்ணப் போறேன்” என்றார்.  

“இப்ப அவங்களுக்கு எதுக்கு? இதெல்லாம் தெரிஞ்சா அவங்க டென்சன் ஆயிடுவாங்க” என மற்றவர்கள் பதறினார்கள்.

“ஒன்னும் ஆக மாட்டா” என போனை எடுத்து சுகன்யாவுக்கு டயல் செய்தார். சுகன்யா தூக்கக் கலக்கத்தில் எழுந்து “என்ன ஆச்சி இந்நேரத்துக்கு போன் பன்றீங்க மாத்திரை எடுத்துப் போக மறந்துட்டீங்களா? நெஞ்சி வலிக்கிதா?” என்றார்.

“என்னடி வாயி ஒனக்கு” என்று சத்தம் போட்டார். போதையெல்லாம் சட்டென தெளிந்தது போல இருந்தது. எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு கணம் மறந்தவராய் “ஐ லவ் யூ” என்றார்.

“நாளைக்கி சாயந்திரம் தானே இப்ப என்ன?” என்றுவிட்டு எரிச்சலோடு போனை வைத்துவிட்டார் சுகன்யா.

மறுநாள் காலை ஹேமா போன் செய்து, “சென்ட்ரல் வந்துட்டேன். பக்கத்தில எங்க சொந்தக்காரங்க வீடு இருக்கு அங்க போய் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு சரியா நாலு மணிக்கு உட்லேண்ட்ஸ் வந்தர்றேன்” என்றார்.

“சும்மா உன்ன அங்கிருந்து வரும்படி பண்ணிட்டேன் சாரி” என்றார் சத்தியமூர்த்தி குற்ற உணர்வுடன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இங்க எங்க சித்தி வீட்டுக்கு வர்றதா ரொம்ப நாளா ஒரு பிளான் இருந்தது. அதோட இதையும் சேத்துகிட்டேன் அவ்வளவு தான்” என்று பதில் வந்தது. இவள் குரல் மட்டும் எப்படி இன்னும் இவ்வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது என அவருக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது.

மோகன் வீட்டில் இருந்து எல்லோரும் கிளம்பும்போது, சத்தியமூர்த்தி தன் கல்லூரி நாட்களுக்கே போய்விட்டார். இருபது வயது இளைஞனாகத் தன்னை உணர்வதில் அவருக்கு எந்தத் தடையும் இல்லை. வாழ்க்கையை அர்த்தமற்ற ஒன்றாக இப்போது அவரால் நினைக்க முடியவில்லை.

டிராபிக் ஏதும் இல்லாததால், திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே அவர்கள் ஓட்டலுக்குப் போய்விட்டனர். வழியில் சுகன்யாவுக்கு போன் செய்தார்.

மூன்றரை மணிக்கு அவர்கள் ஓட்டல் வளாகத்திற்குள் நுழைந்திருந்தனர். சந்திப்புக்கு இன்னும் அரைமணி நேரம் இருந்ததால், அங்கே இருக்கும் புல்வெளியில் மரநிழலில் உட்கார்ந்திருக்க முடிவு செய்தனர்.

அங்கே போனபோது, ஏற்கனவே உட்கார்ந்திருந்த பெண்கள் மூவரும் இவர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றனர். சுகன்யா சேலை கட்டியிருந்தார் என்றாலும் என்றும் இல்லாத வனப்புடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின், கல்லூரியில் பார்த்ததைப் போல காதோரத்தில் ரோஜா சூடியிருந்தார். ஆனால், அன்று போல் ஜடை இல்லாமல், கொண்டை போட்டிருந்தார்.

மற்ற இரண்டு பெண்களும் கூட நேர்த்தியாய் உடை அணிந்திருந்தனர். மேனகா நோயினாலும் வயோதிகத்தினாலும் பீடிக்கப்பட்டதைப் போல இருந்தார். பரிமளம் கல்லூரிப் பெண்ணைப் போல சுடிதாரில் வந்திருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் அனைவரும் உணவறைக்குள் நுழைந்தனர். அந்தக் கதவுக்கு வெளியே இருக்கும் நிகழ்காலத்தில் இருந்து, கடந்தகாலத்துக்குள் நுழைந்துவிட்டதைப் போல உணர்ந்தார் சத்தியமூர்த்தி. மெய் சிலிர்த்து, கண்ணீர் மல்குவதைப் போல இருந்தது.

மேலாளர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரோஜா மலர் ஒன்றைக் கொடுத்து வரவேற்றார்.

அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த டேபிளில் உட்கார்ந்தனர்.  சத்திய மூர்த்தி அன்று எந்த இடத்தில் உட்கார்ந்தாரோ அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டார். சுகன்யாவும் பழைய நாள் ஞாபகத்திற்கு முற்றிலும் திரும்பிய நிலையில், அன்று அமர்ந்த இருக்கையிலேயே சரியாக உட்கார்ந்து கொண்டார். அன்று அவருக்கு சத்தியமூர்த்தி தன் காதலை சொல்லப் போகிறார் என்று தெரியாது. ஆனால் இன்று தெரியும் என்பதால் நெஞ்சு படபடப்பாக உணர்ந்தார்.

ஹேமா இன்னும் வரவில்லையே என சத்திய மூர்த்தி நினைப்பதற்கும், ஹேமா வேகமாய் உள்ளே நுழைவதற்கும் சரியாய் இருந்தது.

எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய்விட்டனர். கல்லூரி மாணவியாக இருபது வயது இளம் பெண்ணாக அப்படியே வந்திருந்தாள் ஹேமா.

அதிசயத்தில் வாயடைத்துப் போனவர்கள் அதிலிருந்து மீளாமல் அப்படியே உட்கார்ந்திருக்க, அவள் அவர்களின் டேபிளுக்கு வந்து, எல்லோரையும் பார்த்து புன்னகைத்து “ஸாரி… வழியில கொஞ்சம் டிராபிக்” என்றுவிட்டு காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.

எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. நிகழ்ச்சி ஹேமாவினுடையதாகிவிட்டது. உண்மையாகவே அவர்கள் எல்லோரும் சரியாக முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் தங்களுடைய கல்லூரி நாள் ஒன்றுக்குப் போய்விட்டனர்.

சத்தியமூர்த்தி ஒரு துடிப்புள்ள இளைஞராகவே மாறிவிட்டிருந்தார். அவர் கவனம் முழுவதும் இப்போது ஹேமாவின் மீது இருந்தது. அன்று நடந்த நிகழ்வில் அவர் ஹேமாவை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இப்போது அவருக்கு எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹேமா, சுகன்யா இருவரும் நெருங்கிய தோழிகள். எங்கே போனாலும் ஒன்றாகவே போவார்கள். இருவருக்குமே சத்தியமூர்த்தியின் மேல் காதல் இருந்தது. அவரும் அதை உணர்ந்தே இருந்தார். ஏனோ அவருக்கு ஹேமாவின் மீது ஈடுபாடு உண்டாகவில்லை.

பழைய சூழல் வந்ததும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு நிகழ்வுகள் வெளியேறி வந்தன. அதை மறந்திருந்த மற்றவர்களுக்கும் அந்த நினைவுகள் மேலெழுந்தன. யாரும் எதுவும் சொல்லாமலேயே பல நினைவுகள் அடுத்தடுத்து மனதுக்குள் பளிச்சிடத் துவங்கின.

ஹேமா அவர்கள் சொல்வதற்கெல்லாம் சிரித்துக் கொண்டு மட்டுமே இருந்தாள். கொஞ்சநேரம் கழித்து “இதுல கலந்துக்க வேண்டியவங்க எங்க அம்மாதான். வரணுன்னுதான் ரொம்ப ஆசையா இருந்தாங்க. ஆனா மூட்டு வலியால வரமுடியல. இருந்தாலும் அவர் இதுல கண்டிப்பா கலந்துக்கணும்னு நினைச்சார். எங்கிட்ட சொல்லி நீ போய்ட்டுவான்னார்.”

“உன்னோட பிரண்ட்ஸ்ங்க சந்திப்புங்ககிற நிகழ்ச்சியில நான் எப்படிம்மா?”ன்னு யோசிச்சேன். அம்மாதான் “அதெல்லாம் ஒன்னுமில்ல நீ என்ன மாதிரியேதானே இருக்கே. நீ அங்க இருக்கறதும் சரியாத்தான் இருக்கும்”னார். முதல்ல எனக்கு தயக்கமா இருந்துச்சு. அப்புறம் அம்மாவோட ஆசைக்காக “சரி நான் போறேன் அவங்ககிட்ட சொல்லிடுங்கன்னேன்.” அம்மா “இப்ப ஒன்னும் சொல்ல வேண்டாம். பார்ட்டியப்போ நீ போய் நின்னா இன்னும் த்ரில்லிங்கா இருக்கும்” னாங்க எனக்கும் உங்க முன்னாடி ஹேமாவா வந்தா எப்படி இருக்கும்னு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகிடுச்சு” தயங்கித் தயங்கி எல்லாவற்றையும் சொன்னாள் அவள்.

“அம்மாவுக்கு ரொம்ப லேட்டாதான் மேரேஜ் ஆச்சி இல்லையா?” என்றார் மோகன்.

அவள் “ஆமாம் அம்மாவுக்கு கல்யாணம் ஆகும்போது முப்பத்தஞ்சி வயசு. அதுக்கப்புறம் நாலு வருஷம் கழிச்சிதான் நான் பொறந்தேன்.”

சத்தியமூர்த்தி உற்சாகமாக பழைய நினைவுகளை பேசிக் கொண்டே சாப்பிட்டார். சுகன்யாவும் தங்கள் காதல் நாள் நினைவுகளை வெட்கத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

சத்தியமூர்த்தி தன்னை ஒரு இருபது வயது கல்லூரி படிக்கும் இளைஞனாக உணர்ந்தாலும், சுகன்யாவை அப்படி நினைக்க முடியவில்லை. அவருடைய இன்றைய தோற்றம் தான் மனதுக்குள் வருகிறதே தவிர, பழைய இளம் சுகன்யாவை மனதுக்குள் கொண்டுவர படாதபாடு படவேண்டியிருந்தது. இதனால் அவர் சற்று நேரமாக அவர் பக்கம் திரும்பிப் பார்ப்பதை நிறுத்தியிருந்தார்.

ஹேமா முதலில் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டாள். ஒவ்வொருவராய் சாப்பிட்டு முடித்தனர். சத்தியமூர்த்தியும் போய் கைகழுவிக் கொண்டு வந்தார்.

டேபிளில் வைத்திருந்த ரோஜாவை எடுத்தார்.

“ஐ லவ் யூ” எனச் சொல்லி, ஹேமாவிடம் அதை நீட்டினார். 

சுகன்யாவைத் தவிர எல்லோரும் வாய்விட்டு சத்தமாக சிரித்தனர்.

***

குமாரநந்தன் இவரது சொந்த ஊர் சேலம். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் – நகரப் பாடகன், பூமியெங்கும் பூரணியின் நிழல் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular