சரவணன் சுப்பிரமணி
பள்ளிக்குள் நுழையும்போது மழை விட்டிருந்தது. குளிர் அடித்தது. பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் வசனங்கள் தெளிவாக கேட்டது விதுரனுக்கு. ஆனாலும் வரும் வழியில் பார்த்த காட்சி விதுரனின் மண்டையைத் திருகிக்கொண்டே இருந்தது.
ஒரு கையை நீட்டியபடி மற்றொரு கையில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி இருந்த அம்பேத்கர் சிலையின் வலது கை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கையின் ஒரு பகுதி சிலையின் காலடியில் கிடந்தது. அந்த சிலையை முழுவதும் சுற்றி இருந்த வெள்ளைத்துணி மழையில் நனைந்து இருந்ததால் சிலையோடு ஒட்டியிருந்தது. சிலையின் நீலநிறம் தெரிந்தது. சிலையை சுற்றிலும் செருப்பும் செங்கலும் கிடந்தன. அந்த இடம் சண்டை நடந்ததற்கான சாட்சியமாக இருந்தது.
தேர்தல் நேரங்களில் தலைவர்களின் சிலைகள் துணிகொண்டு மறைக்கப்படுவது வழக்கம். மறைத்தாலும் உள்ளே இருப்பது யார் என்று அனைவருக்கும் தெரியும். குளவி கொட்டிய இடம் போல அந்த காட்சி மனதுக்குள் இருந்தது. வண்டியைப் பள்ளியின் காரிடாரில் ஏற்றி நிறுத்தினார். செய்திகளில் பார்த்திருக்கிறார். நேரில் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே திறந்திருந்த வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். வந்த களைப்பு. சோர்வு. படுத்தால் தேவலாம் போல இருந்தது. போர்த்திப் படுத்தார். மலை உச்சியில் இருந்து உருட்டி விட்ட கல் போல அந்தக் காட்சி மனதுக்குள் உருண்டு கொண்டே இருந்தது. எப்போது தூங்கினார் என்று தெரியவில்லை.
சாயங்காலம். பள்ளியின் வடக்கு புறம் இருந்த பெரிய வேப்ப மரத்தடியில் விதுரன் கைகளை வீசி நடந்து கொண்டிருந்தார். பள்ளியை ஒட்டி இருந்த வீட்டுத் தொலைக்காட்சியில் இருந்து இளையராஜா பாடல்கள் கேட்டது. அதனால் புது இடத்தில் நடப்பது சலிப்பை ஏற்படுத்தவில்லை. சர்க்கரை வந்ததிலிருந்து காலையும் மாலையும் தவறாமல் ஒருமணி நேரம் நடந்து விடுவார். காலையில் சாப்பிடுவதற்கு முன்பு மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு ஒரு மாத்திரை போட்டுக் கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டில் யாரும் அவரை அசைத்துவிட முடியாது. திருக்கோவிலூர் பக்கத்தில் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். சொந்த ஊர் சேலம் பக்கம். பிரஸிடிங் ஆபீஸராக முதல் தேர்தல். அதனால் கவனமாக இருந்தார். போக்கஸ் லைட் கட்டியதில் பள்ளி வெளிச்சமாக இருந்தது.
கட்சிக்காரர்கள் வர தொடங்கியிருந்தனர். வகுப்பறை கொஞ்சம், கொஞ்சமாக வாக்குச்சாவடியாக மாறிக்கொண்டிருந்தது. கட்சிக்காரர்கள் மாறிமாறி வருவதும் விதுரன் உட்பட வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வணக்கம் வைப்பதும் “உங்கள மாதிரி யார் வந்தாலும் எங்க வீட்ல தான் சாப்பாடு, இங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சொல்வதும் போவதுமாக இருந்தனர்.
துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் பள்ளியினுள் லாரி வந்தது. வாக்குப்பதிவு இயந்திரம், கலர் கலராக நிறையக் கவர்கள், போஸ்டர், கட்சி சின்னங்கள், அரக்கு, மெழுகுவர்த்தி, குண்டூசி என தேர்தல் நடத்துவதற்கு தேவையான பொருட்கள் கொண்ட பெரிய கோணி சாக்கை ஒப்படைத்துவிட்டு அனைத்தும் சரியாக ஒப்படைக்கப்பட்டது என்பதற்கு சாட்சியாக கையெழுத்து பெற்றுக்கொண்டார் சோனல் ஆபீசர்.
“நீங்கதானே பிரஸிடிங் ஆபீசர்? எல்லாரும் வந்துட்டாங்களா?” சோனல் ஆபீசர் விதுரனை பார்த்து கேட்டார்.
“ம்” தலையாட்டினார். பி-1, பி-2, பி-3 என அனைவரும் உடனிருந்தனர்.
“சென்சிட்டிவ் பூத்து சார். கேமரா வைக்கிறதுக்கு ஆளுங்க வருவாங்க. ப்ராப்ளம் வராது. இருந்தாலும் நீங்க கவனமா இருங்க. பூத்தில எது நடந்தாலும் நாம தான் பதில் சொல்லணும்” அவரது முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.
“ம்.”
“நைட் மிஷின நல்லா செக் பண்ணிக்குங்க சார். ஏதாவது பிராப்ளம்னா எனக்கு போன் பண்ணுங்க. ரீப்ளேஸ் கூட பண்ணிக்கலாம். மாக் போல் முடிச்சதும் மிஷின கிளியர் பண்ணிடுங்க. சில இடத்துல கிளியர் பண்ணாமலே எலக்சன ஸ்டார்ட் பண்ணி அதனால நிறைய பிரச்சன. மார்னிங் டைமுக்கு ஸ்டார்ட் பண்ணிடுங்க. ஒன் அவருக்கு ஒன்ஸ் ரிப்போர்ட் கொடுத்துருங்க.”
“ம்.”
“பை த வே உங்க நேம் சார்?”
“விதுரன்.” பேரைக் கேட்டதும் சோனல் ஆபீஸர் முகத்தில் சிரிப்பு தென்பட்டது. பூத்துக்கு வந்ததிலிருந்து முதன்முறையாக அப்போதுதான் சிரித்தார்.
“ஐ அம் நந்தன். நம்பர சேவ் பண்ணிக்குங்க” என்று தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்தார்.
“நம்ப ரெண்டு பேரும் சொந்தக்காரங்க”
“எப்படி” ஆச்சரியத்தின் குறி விதுரன் முகத்தில் தென்பட்டது.
“தூரத்து சொந்தம்தான்.புராண காலத்து தூரம்”
“புருவத்தை சுருக்கி நந்தனை பார்த்தார்.”
“நீங்க எனக்கு சித்தப்பா முற”
“அப்படியா!”
“கௌரவர்கள் தொண்ணூத்தி ஒன்பது பேர்ல நானும் ஒருத்தன். அப்ப நீங்க எனக்கு சித்தப்பா முற தான?”
“ஆமாம்” என்று தலையாட்டி விதுரன் சிரித்தார்.
“நீங்க யாருடைய அவதாரம் தெரியுமா?”
“…………”
“எமதர்மன்” என்று சொன்னவர் கிளம்பிப் போனார்.
*
காலை 7.30 மணிக்கு 11 வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்த வருடம் EVM மிஷினை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது. தான் விரும்பும் நபருக்கு தன்னுடைய ஓட் போகிறது என்பதை வாக்காளர்களுக்கு உறுதிப்படுத்தவும் ஓட்டிங் மிஷின் மீது மக்களுக்கு குறைந்து கொண்டே வந்த நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் செய்திருந்த ஏற்பாடு அது. ஓட்டு போட்ட பிறகு தான் சார்ந்த கட்சிக்கு தான் தன்னுடைய ஓட்டு போனது என்பதை அறிந்துகொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் கூடுதலாக நேரம் பிடித்தது. அதனால் வாக்காளர்கள் கூடுதல் நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. ஜன்னல் வழியாகப் வெளியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தார். பெரும்பாலும் கட்சிக்காரர்களே நின்றிருந்தனர். வாசலில் துணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. வேப்ப மரத்தடியில் இலவம் பஞ்சு போல ஈசல் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. ஈசல் கூட்டத்தைச் சாப்பிட பறவைகளும் இருந்தது. வெளியில் காவலுக்கு இருந்த போலீஸ் ஒவ்வொருவராக உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்.
“தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது” என்று செய்தி செயலியின் நோட்டிபிகேஷன் காட்டியது. 8:00 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை பதிவுசெய்தார் விதுரன். காலை ஆறு மணியிலிருந்து இப்பொழுதுதான் அக்கடா என்று உட்காருவதற்கு நேரம் கிடைத்தது. அப்பொழுதுதான் எழுதத் தொடங்கினார்.
“பக்கத்தில இருந்த நாலு பூத்லீயும் பாத்துட்டேன். நீங்கதான் ஐடி கார்டு கேக்குறீங்க”? பூத் ஸ்லிப் மட்டும் வைத்திருந்த ஒருவர் பி-1 ஆபீஸரிடம் கோபமாக பேசிக்கொண்டிருப்பதை விதுரன் பார்த்தார்.
“நான் ஏன் கேட்க போறேன்? எலக்சன் கமிஷன் சொல்றதை நான் செய்யறேன் “. பி-1 பதில் சொன்னார்.
“பூத் ஸ்லிப் எலக்சன் கமிஷன் தானே கொடுத்துச்சு. நா வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வரனா?.”
“அதே எலக்சன் கமிஷன் ஐடி கார்டையும் பாருன்னு சொல்லுது.”
“அப்ப, இது ஆதாரம் இல்லையா?” வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள், ஏஜெண்டுகள் என்று அனைவரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். வெளியிலிருந்து ஒருவர் ச்ச் கொட்டுவது தெளிவாகக் கேட்டது.
சார்.. ப்ளீஸ்.. விதுரன் குறுக்கிட்டார். “நீங்க இந்த பக்கம் வாங்க. உங்களால எல்லாரும் நிக்கிறாங்க”. அவர் விதுரன் பக்கமாக வந்ததும் கையில் மருதாணி வைத்திருந்த பெண் தன்னுடைய ஐடி கார்டையும் பூத் ஸ்லிப்பையும் பி-1 னிடம் காண்பித்தார். அவர் பெயரையும் அவரது தந்தை பெயரையும் சத்தமாக வாசித்தார். அவர்தான் என்பதற்கு ஆதாரமாக ஏஜெண்ட் ஒருவர் தலையை ஆட்டினார். “அவர்தான்” என்று ஒருவர் சொன்னார். ஏஜெண்ட்கள் வைத்திருந்த ஓட்டர்ஸ் லிஸ்டில் குறித்துக் கொண்டனர். பூத் ஸ்லீப்பை விதுரன் படித்துக் கொண்டிருக்கும்போது, “அவருதான் சார். அவர விடுங்க.” ஏஜெண்ட் ஒருவர் எழுந்து சொன்னார்.
“இவர ஐடி கார்டு இல்லாம ஓட்டுப்போட விட்டா பின்னாடி வரவங்க யாரும் எந்த ஐடியும் எடுத்துக்கிட்டு வரமாட்டாங்க. அந்த கட்சிக்காரருக்கு மட்டும் விட்டீங்க? எங்க கட்சிக்காரருக்கு விடுங்கன்னு, நீங்க கேப்பீங்க. நாங்க என்ன ஐடி கார்டு எடுத்துட்டு வந்தாங்கன்னு ரெக்கார்ட் பண்ணனும்”. “சார், தயவு செய்து கோவிச்சுக்காம வீட்டுக்கு போய் ஐடி கார்டு எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “விடுங்க சார் போட்டுட்டு போகட்டும்” என்று ஏஜெண்ட் ஒருவர் சொல்லி முடிப்பதற்குள்,
“இப்பவே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. இன்னும் நான் வீட்டுக்கு போயி, ஐடி கார்டு எடுத்துட்டு வந்து, இந்த லைன்ல நின்னு, ஓட்டு போறதுக்குள்ள, பொழுதே போயிடும்” கோபமாகச் சலித்துக் கொண்டார்.
“அதெல்லாம் போகாது. நான் பாத்துக்குறேன். நீங்க ஐடி கார்டு எடுத்துட்டு வாங்க. லைன்ல நிக்க வேணாம். நேர உள்ள வாங்க, போடலாம்”. சமாதானம் ஆனது மாதிரி தெரியவில்லை. வாய்க்குள் முனகிக்கொண்டே விர்ரென்று போனார்.
“ஐடி கார்ட் இல்லாமல் யாரையும் உள்ளே விடாதீங்க” போலீஸ்காரரிடம் சொல்லிவிட்டு தன்னுடைய இடத்தில் வந்தமர்ந்தார் விதுரன். ஜன்னல் வழியாக முகவர்களின் ஒருவர் கைசாடை காட்ட, கட்சிக்காரர் ஒருவர் போனவர் பின்னால் ஓடினார். வேப்பமரத்தடியில் நின்று இருந்தவரை மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போவதை விதுரன் பார்த்தார். வேப்ப மரத்தடியில் ஈசல் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.
“ஓட்டு போட வர்றவங்கள தவிர மீதி எல்லாரும் 100 மீட்டர் தாண்டி போங்க” என்று காவலர்கள் மைக்கில் சொல்லிக் கொண்டிருப்பது விதுரனுக்குக் கேட்டது.கேட்டைத் தாண்டி கூட்டம் நின்றது. 10:00 நிலவரத்தை பதிவு செய்தார். வாக்குப்பதிவு நிறுத்தம் என்று செய்தி செயலியில் நோட்டிபிகேஷன் காட்டியது. உள்ளே திறந்து படித்தார். மாதிரி வாக்கெடுப்பை அளிக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியதால் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம். மக்கள் சாலை மறியல். இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இரண்டு இடங்களில் தாமதம் என்று செய்தி காட்டியது. நிமிர்ந்து பார்த்தார்.
மூத்திரப்பையுடன் வீல்சேரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அவரது மனைவி பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு வந்தார். எந்த உணர்ச்சிக்கான குறிப்பும் அந்தப் பெண்ணின் முகத்தில் தென்படவில்லை. கண்கள் வறண்டு இருந்தது. “ஆக்சிடென்ட் சார். தண்டுவடத்தில அடிபட்டுருச்சி. நிக்க முடியாது. எல்லாம் கிடதான்” இரண்டு நிமிடம் கொடுத்தால் அடிபட்டது முதல் இங்கு வந்தது வரையான கதையைச் சொல்லி முடித்து விடுபவள் போல் சொல்லிக் கொண்டிருந்தாள். இருவர் விரல்களிலும் விதுரன் மை வைத்தார் இருவருக்கும் ஓட்டுப்போட. அவரது மனைவி நகர்ந்ததும், “போன எலக்சன்ல நான்தான் பூத் ஏஜெண்ட். எங்க கட்சிக்கு எல்லா வேலையும் நான் தான் பார்த்தேன். ஆனா இப்ப எந்திரிக்க கூட முடியல.” என்று வீல்சேரில் அமர்ந்து இருந்தவர் விதுரனைப் பார்த்துச் சொன்னார். தலையாட்டினார் விதுரன். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். நடப்பதையெல்லாம் அந்த அறையின் ஏதாவது மூலையில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் தெரிந்தது.
பெரியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது ஐடி கார்டையும் பூத் ஸ்லிப் ஐயும் எடுத்துக்கொண்டு கட்சிக்காரர்கள் வரத்தொடங்கியிருந்தனர். அதனால் அனைவரும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒடிசலாக இருந்த இளைஞர் தான் ஓட்டு போடுவதை செல்பி எடுக்க வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன் ஆள்காட்டி விரலை முன்னால் நீட்டியபடி நின்று கொண்டிருப்பதை விதுரன் பார்த்தார்.
“செல்பி எடுக்க கூடாது தம்பி. போன் உள்ள அலோட் கிடையாது” விதுரன் கோபமாகச் சொன்னவர் அவன் பக்கத்தில் வந்தார்.
“ஓட்டு போடறத போட்டோ எடுக்க கூடாதா?”
“எடுக்க கூடாது. தேவனா வெளியில போய் எடுத்துக்கோ”
“காலையிலிருந்து டிவி பாத்துட்டு இருக்கேன். அரசியல்வாதிங்க, விஜய், ரஜினி ஓட்டு போடறத போட்டோ எடுக்குறாங்க. அவங்க யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு வீடியோ எடுக்குறாங்க. நான் போட்டோ எடுக்க கூடாதா?” சத்தம் கேட்டு போலீஸ்காரர் உள்ளே வந்தார்.
“விவாதம் பண்ணாதீங்க. எங்களுக்கு எலக்ஷன் கமிஷன் என்ன சொல்லுதோ அதான் செய்கிறோம். பூத்துள்ள போட்டோ எடுக்கக்கூடாது.”
“அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா?”
“தம்பி மிஷின விட்டு தள்ளி நில்லுபா” போலீஸ் சொன்னார். கோபத்தில் மிசினை உடைத்து விடுவானோ? என்ற பயம் விதுரனை தொற்றிக் கொண்டது.
“அவன முதலில் வெளியே அனுப்புங்க” ஏஜெண்ட் ஒருவர் சொன்னார்.
“போன உள்ள வெச்சுட்டு ஓட்ட போட்டுட்டு வாடா” – அவனுக்கு தெரிந்தவர் போல் இருந்த ஏஜெண்ட் ஒருவர் அதட்டலாகச் சொன்னார்.
“இவனையெல்லாம் ஓட்டு போடவே விடக்கூடாது. தூக்கி உள்ள வைங்க சார்” என்று போலீசை பார்த்து ஏஜெண்ட் ஒருவர் சொன்னார்.
“உங்க கட்சி ஆளுங்கள விடலாமா.? நீங்க என்ன பண்ணீங்க. எவ்வளவு பணம் கொடுத்தீங்க, சொல்லட்டுமா? நீங்க போட்ட ஆட்டத்தனால வேலூர்ல எலக்சன நிப்பாட்டி வச்சிருக்காங்க. உங்களையெல்லாம் தூக்கி உள்ள வைக்கலாமா?” இப்பொழுது ஏஜெண்டுகள் சண்டை மூண்டது. கட்சி சண்டையாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.
ஓட்டுக்கு கொடுத்த பணம் பொருட்களை எல்லாம் பட்டியலிட்டனர். சத்தம் அதிகமானது. அனைவரையும் சமாதனம் செய்ய முயன்று கொண்டிருந்தார் விதுரன். போலீஸ்காரர் அந்தப் பையன் உட்பட பூத் ஏஜெண்டுகள் இருவரை வெளியே அழைத்து போனார். விடுங்க சார் இனிமே நான் எதுவுமே பேச மாட்டேன் என்று சொன்னவர் உள்ளே வந்து அமர்ந்தார்.
“நான் இன்னும் ஓட்டு போடவே இல்ல. நீங்க என் உரிமையை தடுக்கிறீர்கள்.” அந்தப் பையன் வேகமாக பேசினான். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை உன் பாட்டுக்கு போயி ஓட்டு போட்டு வர தெரியாது என்று வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்கள் திட்டினர்.
“உரிமையை கேட்க தெரியுது இல்ல. படிச்சிருக்க. எலக்சன் கமிஷன் சொன்னது உனக்கு புரியல. பூத்ல கலவரம் பண்ணேன்னு தூக்கி உள்ள வச்சுருவேன். அமைதியா போட்டுட்டு வெளியில் வந்துடணும்.” போலீஸ் கடுமையாகச் சொன்னார். சரி என்பது போல் தலையாட்டி உள்ளே சென்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தான். நன்றாக ஓடிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று மீண்டும் ஸ்டார்ட் ஆனது மாதிரி இருந்தது வாக்குச்சாவடி.
12 மணி நிலவரத்தை பதிவு செய்து மீதமிருந்த எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார் விதுரன். நீண்ட நேரமாக யாரும் ஓட்டு போடவில்லை என்பதை உணர்ந்தார். ஓட்டுப்பதிவு ஆனதற்கு அடையாளமாக வரும் கி…..கி என்ற சத்தம் வரவே இல்லை. நிமிர்ந்து பார்த்தார். பி-1 ஒரு வாக்காளரின் பெயரை ஓட்டர்ஸ் லிஸ்டிலும் தேடிக் கொண்டிருந்தார்.
“சீக்கிரம் அனுப்புங்க. வயசானவங்க வெளியில நிக்கிறாங்க.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் அந்தப் பையனின் பூத் சிலிப் வாங்கிக்கொண்டு அந்தப் பையனுக்கு பின்னால் இருந்த பெண்ணை “நீங்க போங்க” என்று சொல்லி நகர்ந்து நின்றார். பூத் ஸ்லீப்பை படித்தார்.
“இது, இந்த பூத் ஸ்லீப் இல்ல. பக்கத்து பூத். அங்க போயி ஓட்டு போடுங்க” என்று சொன்னவர் பூத் ஸ்லிப்பை வந்தவரின் கையில் கொடுத்து நகர்ந்தார்.
“சார் தம்பி நம்ம ஊரு தான்” ஏஜெண்ட் எழுந்து சொன்னார். அப்பொழுதுதான் விதுரன் வந்தவரை முழுமையாகப் பார்த்தார். இருபத்தி ஆறு வயது இருக்கும். மாநிறம். நல்ல உயரம். நேர்த்தியாகச் தலைசீவி இருந்தான்.
“உங்க ஊரு தான். இவர் ஓட்டு இந்த பூத்ல இல்ல” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் போலீஸ் ஒருவர் உள்ளே வந்தார். கூடவே ஒரு பெண்ணும். விதுரன் பக்கமாக வந்தவர் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணைக் காட்டி “இவங்கள ஓட்டு போட வச்சு அனுப்புங்க. அர்ஜெண்ட். நான் கூட்டிட்டு போகணும்” என்று சொன்னார். எல்லோரது கண்களும் அந்தப் பெண்ணை நோக்கியே இருந்தது. விதுரன் “சரி” என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினர். பக்கத்திலிருந்த இளைஞன் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த பெண் தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்தார். 620. தீபா. அப்பா பெயர் ராஜி என்று பி-1 சத்தமாக வாசித்தார். பார்ப்பதற்கு நல்ல உயரமாக இருந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். இடது கன்னத்தில் தழும்பு இருந்தது. ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் தங்க வளையலும், மணிபர்சும் இருந்தது. ஏஜெண்டுகள் பக்கமிருந்து சரிதான் என்பதற்கு அடையாளமாய் எந்தவித சமிக்ஞையும் வரவில்லை. “சரியா” என்று பி-1 மீண்டும் ஒருமுறை கேட்டார். ஏஜெண்ட் ஒருவர் “ஆமாம்” என்பதற்கு அடையாளமாக கை சாடை செய்தார். அது “அவள இங்கிருந்து அனுப்பு” என்பது போல இருந்தது. அந்தப் பெண் தன்னுடைய வாக்கை பதிவு செய்து பெண் போலீஸ் முன்னால் போக, அந்தப் பெண் பின்னால் கிளம்பி போனதும், ஓட்டிங் மெஷினில் பதிவான வாக்குகள். 17C-ல் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து, 1 மணி நிலவரத்தை பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது தான் நினைவுக்கு வந்தது காலையிலிருந்து சர்க்கரை மாத்திரை சாப்பிடாதது. மாத்திரை எடுக்க பையினுள் கைவிடும் போது,
“நீங்க நினைச்சா ஓட்டுப்போட விடலாம்” ஏஜண்ட் அருகில் வந்து கேட்டார். அந்தப் பையனும் உடன் இருந்தான். விதுரன் திரும்பி அந்தப் பையனைப் பார்த்தார். என் ஓட்டை இந்த பூத்தில் போடாமல் விட மாட்டேன் என்ற பாணியில் நின்று கொண்டிருந்தான்.
“புரியாம பேசாதீங்க. அவரோட ஓட் இங்க இல்ல”
“தெரியும் சார்”
“எங்க இருக்கோ அங்க போய் போட சொல்லுங்க”
“இந்த தம்பிக்கு அங்க போய் போட விருப்பம் இல்ல சார்”
“ஏன்?”
“அந்த பூத் காலனியில இருக்கு.”ஷாக் அடித்தது போலிருந்தது. சமாளித்துக்கொண்டு, “எங்க இருந்தா என்ன? போய் போட சொல்லுங்க”
“…………………”
வெளியே போலீசிடம் ஒருவர் சத்தமாக கத்திக் கொண்டிருப்பது கேட்டது. வந்தவர் பூத்துக்குள் சென்றுவிடாமல் இருக்க கதவருகில் கையை மறித்து நின்று கொண்டிருந்தார் போலீஸ். விதுரன் வெளியே சென்று பார்த்தார். “நான் பெங்களூரில இருந்து ஓட்டு போறதுக்கு வந்திருக்கேன். என் ஓட்ட யாராவது போட்டாங்கன்னு தெரிஞ்சுச்சு.. இங்க இருக்கிறவங்க எல்லாரும் அவ்வளவுதான்” என்று செல்போனை எடுத்து வீடியோ பிடிப்பது போல் காண்பித்தார். “சார் உங்க ஓட்டு யாரும் போடல.. அமைதியா இருங்க” என்று விதுரன் சொல்லி முடிப்பதற்குள் “உன் ஓட்ட யாரும் போடல. உன் பேர்ல ஊருக்குள்ள 3 பேர் இருக்காங்க. அவங்க பேர படிச்சத உங்கிட்ட மாத்தி சொல்லி இருப்பாங்க. நான் இருக்கிறபப்படி விடுவனா?” ஏஜெண்ட் எப்படியாவது இந்த ஒரு ஓட்டை தன்னுடைய கட்சிக்கு வாங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு பேசினார்.
“இந்த ஒரு ஓட்டு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க” சொந்த ஊரில், சொந்த ஊரின் பள்ளிக்கூடத்தில் யாரோ ஒருவரின் முன்னால் கெஞ்சுவது அசிங்கமாக இருந்தது அவருக்கு. அந்த இளைஞன் மற்ற பூத் ஏஜெண்டுகளிடம் கைகளை நீட்டி கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.
“இல்லாத ஓட் எப்படி போட வைக்கிறது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பையன் வந்தான். அவன் பூத் ஸ்லிப்ல அவன் போட்டோக்கு பதிலா வேற ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சு. ஐ டி செக் பண்ணிட்டு ஓட் போட விட்டேன். இது முடியாது. தப்பு” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுப் போடுவதற்கு வைத்த மையை ஒருவர் தலைமுடியில் தேய்த்து அழிப்பதைப் பார்த்தார். “எதுக்கு இப்ப மைய அழிசிங்க”? அவரிடம் எந்த பதிலும் இல்லை. “மேடம் இன்னொரு முற மை வைங்க. அழிக்கக்கூடாது.போய் ஓட் போடுங்க” என்று கோபமாகச் சொன்னார். உண்மையில் அந்தப் பையன் மேல் இருந்த கோபத்தை, வந்தவர் மீது காட்டினார். ஏஜெண்டும் சப்போர்ட் செய்யும் நோக்கில் வந்தவரைத் திட்டினார். அந்த இளைஞர் வெளியில் சென்று சத்தமாக யாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. ஏஜெண்ட் நகர்வதாக இல்லை. விடாப்பிடியாக “உங்கள்ட்ட சொல்றதுக்கு என்ன? பார்த்தா நம்ப ஆ…..” அவர் சொல்லி முடிப்பதற்குள் சோனல் ஆபீசர் உள்ளே வந்தார். 2 மணி நிலவரம், ஆண், பெண் ஓட்டுப் போட்டவர்கள் எண்ணிக்கை அனைத்தையும் குறித்துக்கொண்டு, “எப்படி போகுது விதுரன்?” என்று கேட்டார். “ம்.. நல்லா போகுது சார்”. “ம், பார்த்துக்கோங்க” என்று சொன்னவர் கிளம்பிப் போனார். அந்த நொடிக்காகக் காத்திருந்தது போல இருந்த ஏஜெண்ட்,
“பார்த்தா நம்ம ஆளுங்க மாதிரி இருக்கீங்க “பெருமை பொங்கச் சொன்னார்.
“………….”
“நாலு நாளைக்கு முன்னாடி பெரிய சண்டை ஆயிடுச்சு. ரெண்டு நாளு விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷன்ல, இனிமே இந்த பிரச்சனை வராதுனு எழுதி கொடுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இளைஞர் வந்து சேர்ந்து கொண்டார்.
“………..”
“எவ்வளவு தைரியம் இருந்தா பானைய தூக்கிகிட்ட, கொடிய புடிச்சிகிட்டு, ஊருக்குள்ள ஓட்டு கேட்டு வருவானுங்க? அவனுங்கள சொல்லி தப்பில்லை, கட்சி சொன்னுச்சி, மயிரு சொன்னுச்சின்னு சாதி மாறி அவங்க கூட சுத்திக்கிட்டு இருக்கிற தலமாட்டுகொல்லி ஊரில இருக்கத்தான் செய்யுது.”
“………….” எப்படி இவர்களைத் தவிர்ப்பது என்று தெரியாமல் மனதுக்குள்ளே நெளிந்து கொண்டிருந்தார். இவரும் விடுவதாக இல்லை.
“உள்ள வராதீங்கன்னு சொன்னோம். சின்ன பசங்க கல்லெடுத்து சிலைய அடிக்க, பிரச்சன பெருசாயிடுச்சு. இரண்டு பக்கமும் மண்ட ஒடஞ்சி, இப்ப கேஸ் இருக்கு. அத கட்சி பாத்துக்கும்.” என்று சொன்னதும் அந்த இளைஞனின் முகத்தில் தோன்றி மறைந்த சிரிப்பை விதுரன் கவனித்தார்.
“…………”
“இந்த ஒரு ஓட்டு மட்டும் போட வைங்க” என்று அந்தப் பையனைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.
“எப்படி போட வைக்கிறது? நீங்களே சொல்லுங்க.. பெரிய ரோதனையா இருக்கு” என்று நெற்றியைத் தடவிக் கொண்டார்.
ஊருக்குள்ள மொத்தம் 1269 ஓட். 970 போலிங் ஆனாலே பெரிய விஷயம். மீதிப்பேர் கேரளா பெங்களூர்ன்னு வெளியில இருக்காங்க. கண்டிப்பா வரமாட்டாங்க. அதுல ஏதாவது ஒன்ன போட விடுங்க.
“இது ரொம்ப பெரிய தப்பு. இப்பதான ஒருத்தர் வந்து கத்திட்டு போனாரு. நீங்களும் பாத்துட்டு தானே இருந்தீங்க. இதனால இங்க வேலை செய்ற எல்லாருக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும்”.
“எதுவும் ஆகாது சார். நாங்க பார்த்துக்கிறோம்.”
“நல்லா பாப்பிங்கலே, காலைல உங்க முன்னாடி தான போஸ்டர்ல கட்சி சின்னம் ஒட்டாம எதுக்கு இருக்கீங்கன்னு சண்டைக்கு வந்தாங்க. ஸ்டிக்கர் கொடுக்கல, சொல்லியிருக்கு எடுத்துட்டு வருவாங்கன்னு சொன்னோம். எலக்சன் ஸ்டார்ட் ஆக போகுது எப்ப எடுத்துட்டு வருவாங்கன்னு கேட்டாங்க?. சரின்னு கையால வரஞ்சா இது எங்க சின்னம் மாதிரியே இல்லன்னு சண்டைக்கு வந்தாங்க. எல்லாரும் செல்போனை தான் சார் தூக்குறாங்க. நீங்க சொல்ற மாதிரி பண்ணா பெரிய பிரச்சனை ஆயிடும். தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் கள்ள ஓட்டுன்னு பிரேக்கிங் நியூஸ் போடுவாங்க. தயவு செய்து வேலையை செய்ய விடுங்க. அந்தப் பையன ஓட் இருக்கிற பூத்ல போய் போட சொல்லுங்க” சொன்னவர் நகரத் தொடங்கியதும்,
“எல்லார்கிட்டயும் பேசி நா ஒத்துக்க வைக்கிறேன்” என்று சொன்னவர் ஏஜெண்ட் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்று தன்னுடைய இடத்தில் அமர்ந்து, மற்றவருடன் பேச ஆரம்பித்தார். அவர் பக்கத்திலேயே நில்லு என்று அந்த இளைஞனைப் பார்த்து சைகை செய்தார். எழுந்து வந்தவர்,
“எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க சார். எந்த கட்சிக்கு வேணாலும் போடட்டும் நாங்க எதும் சொல்ல மாட்டேன்னு சொல்றாங்க.”
“எல்லாரும் ஒத்துகிறதனாலேயே தப்பு சரி ஆயிடுமா?”
“……….”
“ஒரு ஓட்டு தான 200 பேருக்கு மேல வரலன்னு சொல்றீங்க. அதுல ஒன்னா இதுவும் இருந்துட்டு போகட்டும். விடுங்க சார்”.
கோபமாகப் புறப்பட்டான் அந்த இளைஞன். ஏஜெண்ட் அவனை நிறுத்தினார்.
“அது எப்படி சார் விடுறது? நேர்ல இருக்கான்ல. ஒரு ஓட்டு கூட கலையாம வாங்கித் தரதா வாக்குக் கொடுத்திருக்கோம் கட்சிக்கு.”
“இந்த மாவட்டத்தில எங்க ஓட் போட்டாலும் உங்க கட்சிக்குத்தான் போகும். அங்க போய் போட சொல்லுங்க. உங்க கட்சிக்கு ஒரு ஓட் அதிகமா கிடைக்கும்.” தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற தொனியில் சொன்னார்.
“………….” இருவரும் எதுவும் பேசவில்லை. ஏஜெண்ட் மீண்டும் ஆரம்பித்தார்.
“போலீஸ் கூட ஒருத்தி வந்து ஓட்டு போட்டு போனாளே. அவளோட அப்பா, அம்மா ஓட்டு இங்கதான் இருக்கு. அவங்க வரமாட்டாங்க. இவ பண்ண காரியத்துக்கு எப்படி எல்லா மூஞ்சியையும் பாப்பாங்க. அவளோட அப்பா ஓட்ட போட விடுங்க” என்று கேட்டவர், “வேலைக்கு வெளியூருக்கு அனுப்புனா பையன புடிச்சிட்டு வருதுங்க. சொந்த சாதியில இல்லாதது. வெளியில என்ன இருக்குன்னு தெரியல? வெட்டி வீசாம விட்டதுதான் தப்பு” என்று பேசிக்கொண்டிருந்தார்.
மதியத்தில் இருந்து இந்த ஒரு ஓட்டு பெரிய தலைவலியாக இருப்பதாக விதுரன் மனசுக்குள் மருவிக்கொண்டார். வேக்காலமாக இருந்தது. திருப்ம்பி அந்தப் பையனைப் பார்த்தார். ஏஜெண்ட் ஒருவர் அந்தப் பையனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவர்களுடன் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். விதுரன் அந்தப் பையனை வரும்படி சைகை செய்தார்.
“படிக்கிறீங்களா?”
“வேலைக்கு போறேன்” என்று அசட்டையாக பதில் சொல்லும்போது ஏஜெண்ட் இருவர் அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர்.
“என்ன படிச்சு இருக்கீங்க?”
“பி. ஈ”
“தம்பி உங்களுக்கு இந்த பூத்ல ஓட் இல்ல. அவங்களுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது. ஏதேதோ பேசிட்டு இருக்காங்க. நீ படிச்சவன் புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்.”
“………….”
“முன்னாடி நடந்த சண்டையினால அங்க போக பயமா இருக்கா?”
“இல்ல”
“அப்படி இருந்தா சொல்லுங்க. வெளியில போலீஸ் இருக்காங்க. பூத் வரைக்கும் கூட வருவாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “நான் எதுக்கு காலனில போய் ஓட்டு போடணும்? என் ஊர்ல தான் போடுவேன்”
“இங்கதான் உனக்கு ஓட்டு இல்லையே”?
“ஓட்டு போடுறதுக்காக அவனுங்க இடத்துல போய் நிக்கணும்னு அவசியமில்ல”
“நல்லா படிச்சு இருக்கீங்க. வேலையில இருக்கீங்க. நீங்க இப்படி பேசலாமா? நீங்கதான் தம்பி இதெல்லாம் மாத்தணும்.” கோபம்தான் ஆனாலும் அமைதியாகச் சொன்னார்.
ஏஜெண்ட்கள் அவனுக்காகப் பேசியது, நீண்ட நேரமாக நின்றது, கெஞ்சியது எல்லாம் சேர்த்து பொறுமை இழந்தவனாக, “அங்க போயிதான் ஓட் போடணுமா” என்று கேட்டான்.
“ம்”
“எனக்கு ஓட்டே வேணாம்” என்று சொன்னவன் கோபமாக கிளம்பிப் போனான். என் ஓட்ட எப்படி போடறதுன்னு எனக்கு தெரியும் என்று கதவருகில் நின்று சொன்னான். செல்போனில் யாருடனோ சத்தமாகப் பேசிக்கொண்டே நடந்தான். போனவன் பின்னால் இரண்டு பேர் ஓடிக் கொண்டிருந்தனர். வெளியே போனவன் வேப்ப மரத்தடியில் பூத் ஸ்லீப்பை கிழித்து வீசிவிட்டு கேட்டை நோக்கி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, “எதுக்கு சார் வம்பு. ஒரு ஓட்டு தானே போட்டுவிட்டு போகட்டும் விடுங்க. இதனால என்ன பெருசா மாறப்போகுது?” பி-1 விதுரன் அருகில் வந்து சொன்னார்.
“ஓட்டு போட கூட காலனி பக்கம் போக மாட்டேன்னு நிக்கிறான். எப்படி சார் விடுறது?”
“புரட்சி எல்லாம் இங்க பண்ண முடியாது.”
“ம்.”
“நேரம் ஆக ஆக ரண்டு ஆளா வந்து நிப்பாங்க. உளுந்தூர்பேட்ட பக்கத்துல இதே பிரச்சனைதான் பயங்கர சண்டை ஆயிடுச்சாமமாம். பூத்த உள்ள பூட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கலாம். பிரண்ட் போன் பண்ணாரு. நம்ப வந்தமாதிரி வீட்டுக்கு போகணும் சார்.” உள்ளபடியே இந்த பயம் விதுரனுக்கும் இருந்தது. பி-1 தொடர்ந்து பேசினார்.
“எக்கேடும் கெட்டுப் போகட்டும் விடுங்க சார். அந்தப் பையன் சொல்றதுல பெருசா தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல. இங்க பிரச்சனை வந்தா மீண்டும் எலெக்ஷன் அணௌன்ஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. நமக்கு ஒன்னுன்னா கண்டுக்கவே மாட்டானுக. இவ்வளவு நியாயமா எலக்சன் நடத்திக் கொடுத்த மட்டும் நமக்கு தூக்கி கொடுப்பாங்கன்னு நினைக்கிறீர்களா? எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் பொட்டி எடுத்துட்டா நம்மள கண்டு கூட ஆள் இருக்காது. ஆனா நாம்ப இந்த ஊரை தாண்டிதான் போகணும்.”
“ம்”
“நான் முன்னாடியே சொன்னேன் இதெல்லாம் நடக்காது. இவன் வயசுல இருக்கிற ஒரு பையனோட பூத் ஸ்லீப்பும் ஐடி கார்டையும் கொடுத்து பேசாம ஓட்டு போட வைக்கலாம்னு. நீதான் எதிர் கட்சிக்காரன், அது இதுன்னு சொன்ன. இப்ப பாரு அவன் ஊருக்குள்ள போய் என்ன சொல்ல போறான்னு தெரியல? ஒரு ஓட்டு கூட வாங்கிக் கொடுக்க முடியல. நீ எல்லாம் நம்ப சாதிக்கு என்னடா செய்யப் போறேன்னு யாராவது கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று அவனுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்த இரண்டு ஏஜெண்ட்கள் பேசிக்கொள்வது விதுரன் காதில் விழுந்தது. அப்போது அந்த இளைஞனின் பின்னால் ஓடிய இருவரும் அவனை சமாதானப்படுத்தி, ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே போகும் வாசல் வழியாக அவனை அழைத்து வந்தனர். ஏஜெண்டுகள் இருவரும் பி-1யிடம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இளைஞன் விதுரனைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
“அவரு ஓகே சொன்னா எனக்கு ஓகே” என்று பி-1 சொன்னது விதுரன் காதில் விழுந்தது. கடைசியாக ஒரு முற முயற்சித்து பார்க்கலாம் என்ற நோக்கில் அந்த இளைஞன், ஏஜெண்டுகள் அனைவரும் விதுரனை நெருங்கி வந்தனர். அந்த இளைஞன் விதுரனைப் பார்க்கவே இல்லை. பார்ப்பதைத் தவிர்த்தான்.
“சார்” என்று ஏஜெண்ட் ஒருவர் ஆரம்பித்ததும், அந்த இளைஞன் முந்திக்கொண்டு,
“என்வீட்டு வாசல்ல கைகட்டி வேலை கொடுன்னு லைனில் நின்னான்னுங்க, அவங்க கூட போய் என்ன நிக்க சொல்றீங்க. இதுக்கு நீ ஓட்டு போடாமலே இருந்திருக்கலாம் அப்படின்னு நாலு பேரு பேச மாட்டாங்க? சலுகைல படிச்சி, சலுகையில வேலைக்கு போறானுங்க. எங்க பொண்ணுங்களையும் கூட்டிட்டு போறானுங்க. அவனுங்க கூட போய் மச்சான் முறை கொண்டாடி லைன்ல நின்னு ஓட்டுப்போட சொல்றீங்களா?”
இருமல் வந்தது. செருமிக் கொண்டான்.
“நான் எதுக்கு போலீஸ் பாதுகாப்புல போய் ஓட்டு போடணும்? என் கழனி சைஸ் தான் அவனுங்க ஊரு. பிரஸ் புடிச்சு ஊருக்குள்ள வந்து சின்னம் வரையற அளவுக்கு தைரியம். சிலை கைய ஒடச்ச அன்னைக்கே நாலு பேர் கையும் ஒட்டச்சி இருக்கணும். அப்ப எங்க பொண்ணுங்கள பார்க்க தைரியம் வருமா?” கண்கள் தடுமாற ஆரம்பித்தது. ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு போனான். சாராய வீச்சம் அடித்தது. சத்தம் கேட்டு போலீஸ் உள்ளே வந்தார். “வெளில போ” என்பது போல் சைகை காட்டினார். ஏஜெண்ட்கள் அவனருகில் இருந்தவர்களும் அவனை “அமைதியா இருடா” என்று சொன்னார்கள். அவனது கையைப் பிடித்தார்கள். அவர்களது கைகளை உதறிவிட்டு பேசத் தொடங்கினான். இருமல் வந்தது. மீண்டும் செருமிக் கொண்டான்.
ஆசிரியராக முழுவதும் நொறுங்கிப் போய்விட்டார் விதுரன். ஒட்டுமொத்த படிப்பே கேள்விக்குறியாக அவர்முன் நின்றது.
“கடைசியா கேட்கிறேன். நான் இங்க ஓட்டுப் போடலாமா, கூடாதா”? மிரட்டும் தொனியில் கேட்டான்.
“உங்களுக்கு எங்க ஓட்டு இருக்கோ. அங்க போய் போடுங்க” என்று சொன்னவர் கோபமாக நகர்ந்து போனார்.
“அங்கதான் போகணுமா?” சத்தமாகக் கேட்டான்.
“ம்.”
“………””………”.”……..” திட்டிக்கொண்டே வெளியே போனான்.
நிறைவு: தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது முடிந்தது என்று செய்தி செயலி காட்டியது. வேப்ப மரத்தடியில் காலையில் பார்த்த ஈசல்களின் இறக்கை காற்றிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. கூடவே பூத் ஸ்லீப்பும். வேப்ப மரம் மட்டும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
***
சரவணன் சுப்பிரமணி – amudhini2017@gmail.com