ரமேஷ் ரக்சன்
சுதாவுக்கு கெட்டவார்த்தை போடவராது. வாக்கப்பட்டு வரும் முன்னர், தெருவில் யாராவது சண்டை போட்டாலும் அவர்கள் அவ்வளவு சத்தமாக உச்சரிப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு நிற்பாள். அவளுக்கும் அப்படி விளையாட்டுக்காவது பேசிப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசை உண்டு. கல்யாணம் ஆன முதல்மாதமே சுதாவிற்கு நாள் தள்ளிப்போயிருந்தது. அப்போதிருந்து குழந்தை பிறக்கும்வரை கெட்டவார்த்தையே நினைவில் வரக்கூடாதென போராடியிருக்கிறாள். இரண்டு வருடம் கழித்து அவள் விருப்பம் இல்லாமலே இரண்டாவது குழந்தை கருத்தரித்த நாளில் மனதிற்குள் மருவிக் கொண்டிருந்தாள். முதல் பிள்ளையே அவனோடு பெற்றிருக்கக்கூடாதென நினைக்கும் அளவிற்கு அவள் காதில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. காத்திருந்த கனவுகள் எல்லாம் உபரியாகி வற்றிப் போயிருந்தது. எந்நாளும் கெட்டவார்த்தை தான். வாய்விட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு அவளது சுதந்திரம் இருந்தது.
இருவரும் அந்நியோன்யமாகத் திளைத்த நாட்களில்கூட பால்பெருமாள் ‘செஞ்சிவிடேன்’ என்று கேட்டதற்கு ‘ஒருமாதிரி இருக்கு’ என மறுத்துவிட்டாள். ஒரு ஆண் ஒரு செயலுக்கு இரண்டாவது முறையாக பெண்ணிடம் நிற்பது இழுக்கு என்பது அவனின் கோட்பாடு. கேட்டவுடன் நிகழ வேண்டும். திரும்பக் கேட்பது கெளரவ குறைச்சல். ஆண் என்ற அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது போலாகிவிடும். திரும்பப் போய் நிற்பது கட்டுக்குள் இருக்கும் பெண்ணை அவிழ்த்து விடுவதாகும். எல்லாம் அவனே வகுத்துக்கொண்ட கேட்டறிந்திடாத கற்பிதம். அதுவே முதலும் கடைசி. அன்றோடு கேட்பதை நிறுத்திக் கொண்டவன் வெட்டுப்பட்டுப் படுத்திருக்கையில் ஈனக்குரலில் கேட்டுப் பார்த்தான். “தான்” என்று மார் தட்டிக்கொள்வதற்கான கண்ணி அவன் கழுத்தையே இறுக்கியிருக்கிறது.
காமம் கருணையின் வடிவத்திற்குள் ஒருபோதும் பொருந்திப்போவதில்லை.
கவிதா பற்றித் தெரிந்ததிலிருந்து, அவளின் இரண்டு வருட ஆற்றாமை! ஒரு நாள்கூட சுதாவின் எந்தவிதமான உணர்வுகளையும் முகத்தில் காட்ட முடிந்ததில்லை. எப்போது வீட்டிற்கு வருவான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பால்பெருமாளும் சொல்லிவிட்டு வருவதில்லை. வரும் போதெல்லாம் சிரித்த மேனிக்கு அவனுக்கு காட்சி தர வேண்டும். சுதாவும் அப்படியே தன்னை தகவமைத்து வைத்திருந்தாள். அவனுக்காகப் பயந்தே எந்நேரமும் சேலையில் இருப்பாள். நாள்பட நாள்பட அவர்களுக்குள் கசப்பு ஏறிக் கொண்டே போனாலும் நல்லநாள், துக்கவீடு எனக் காரில் வீதி உலா வருவதும், இவனுக்கு கிடைத்து வந்த மரியாதையையும் பார்த்து தனக்குள் பிறந்த வீட்டிலிருந்து ஏற்றிவிடப்பட்ட மிதப்பில் மீதமெல்லாவற்றையும் அனுசரித்துக் கடந்து வந்தாள். அனுசரித்துச் செல்வதற்கும், சகித்துக் கொள்வதற்குமான வித்தியாசம் அவளுக்கு எட்டாமல் இருந்தது. திருமணம் பற்றிப் பேச்செடுக்கப்பட்ட நாளில் இருந்தே அவள் காதில் விழுந்த வார்த்தை அனுசரனை. அதன் வீரியம் தன்னை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் கத்தி என்பது பிடிபடாமல் இருந்தது.
புருசன் வெட்டுப்பட்ட செய்தி வந்த பக்கத்தை மட்டும் வெட்டி வைத்திருந்தாள். வெட்டுப்பட்டான் என்பதைவிட, இதற்குப்பிறகு முந்தானைக்கு மேலே வலப்பக்கம் மயில் தாங்கிய இருபத்தியோரு பவுன் தாலியோடு வலம் வருவதை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு வெப்ராளமாக இருந்தது. கணவனின் அந்தஸ்தும் அதிகாரமும் பொதுவெளியில் இவளுக்கும் பங்கு வைத்துக் கொடுக்கப்பட்டதே அவளின் தற்காலிக விடுதலையாக இருந்தது. அவனுக்கான மரியாதை போனது என்பதைவிட தன் பங்கு அந்தஸ்தில் கைவைத்துவிட்டதே என்பதே பேரிடியாக அவளுக்குப் பட்டது. ஒன்றை இழந்து அதை ஈடுகட்ட இன்னொன்றைப் பிடித்து வைத்திருந்தாள். இனி பழி தீர்க்கப்படும்வரை அதற்கு வழியில்லை.
“முன் பகை காரணமாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை அருகில் வந்து நின்று ஓடச் சொல்லி விரட்டி விரட்டி வெட்டு. ஒரே ஜாதி என்பதால் கொல்லாமல் விட்டதாக சரணடைந்தவர்கள் வாக்கு மூலம்”. சுதாவுக்கு மனப்பாடமே ஆகிவிட்டது.
“அந்த வேசய பாடுபாக்கச் சொல்ல வேண்டியதுதான? மருந்து வச்சி நெதம் தொடச்சிவிட்டு நோகாம அவகிட்ட தூக்கிக் குடுக்க மட்டும் நான் வேணுமா? ஈனப்பயலுக்கு செஞ்சி விடனுமாம்”
பால்பெருமாள் 12ஆவது பாஸ் ஆகவில்லை என்பதற்காக கல்யாணப் பத்திரிக்கையில் சுதா பெயருக்குப் பின்னால் BSCபோட வேண்டாம் என்று சொன்ன அன்றே சுதாரித்திருக்க வேண்டுமென அடிக்கடி தன் அப்பாவை மனதிற்குள் கடிந்து கொள்வாள். பத்திரிக்கை அடிக்கக் கொடுப்பதற்காக உறவின்முறையோடு பெயர்களை எழுதும்போது ஒருமுறை அவனோடு கல்யாணத்தில் விருப்பம் இல்லையென முணுமுணுத்திருக்கிறாள். ஆனால் சபையில் எதுவுமே எடுபடவில்லை.
ஆஸ்பத்திரியில் இருக்கும்போது எஸ்.ஐ அவ்வளவு கேட்டும் ராஜனின் பெயரை பால்பெருமாள் சொல்ல மறுத்துவிட்டான். அவன் என்கூட நின்றான். அவனுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதில் உறுதியாக இருந்தான். முதல் வெட்டு மட்டும்தான் கொஞ்சம் ஆழமாக விழுந்ததே ஒழிய மிச்சம் மூன்று வெட்டும், கறியைக் கீறி மசாலா தடவும் அளவிற்குத்தான் இறங்கியிருந்தது. ஆனால் மல்லாந்து படுக்க முடியாது. முதுகில் அழுத்தம் கொடுக்கவேண்டாமென டாக்டர் சொல்லி அனுப்பியிருந்தார். எவ்வளவு நேரம்தான் பட்டும் படாமலும் நாற்காலியில் முதுகு இறக்கிப் படுத்திருக்க முடியும். வெட்டு வாங்கியதைவிட அவனுக்கு அவமானமாக இருந்தது என்னவோ விரட்டி விரட்டி வெட்டினார்களாம் என்று ஊர் முழுக்கப் பரவிய செய்திதான். உயிருக்குப் பயந்து ஓடினேன் என சிரித்துக் கொள்ளவா முடியும். அதனாலேயே துக்கவீட்டிற்கு துக்கம் விசாரிக்க வருபவர்கள் போல முகத்தை தொங்கப்போட்டுவிட்டு வருபவர்களை சந்திக்க விரும்பாதிருந்தான். அவன் நடமாட்டம் தெரிந்து, கவிதா டீக்கடைப் பக்கம் ஒருநாள் பார்க்க வந்திருந்தாள். அவனால் அத்தனை பேர் முன்னால் வைத்து அவளோடு உரையாட முடியவில்லை. அவளுக்கான உரிமையை வெளிப்படுத்தவிடாமல் அனுப்பி வைத்தான். அவன் வீட்டிற்கு வருவதற்குள் கவிதா வந்துபோன கதை வீட்டிற்குள் வந்திருந்தது.
பால்பெருமாளின் மனைவி எதுவுமே கேட்டுக் கொள்ளாமல் ஈரத் துணியை வைத்து முதுகு துடைத்துக் கொண்டிருந்தாள். அது தன் மீதுள்ள அன்பின் காரணமாக இல்லையென கவிதா வந்து போனதும் உரைத்தது. இந்த மனநிலையோடு இங்கிருந்து காயத்தை ஆற்றிக் கொள்ளக் கூடாது என்று வீம்பாக இருந்தான். யாரிடமோ பேசுவது போல போனை எடுத்துக்கொண்டு மாடிப்படியேறவும் கவிதா இவன் அழைப்பை எடுத்தாள். அவனின் பாசாங்கு பேச்சைப் பற்றி சமீபமாக நன்கு தெரிந்து வைத்திருந்தாள். தன் கெட்டிக்காரத்தனத்தை இப்போது காட்டாவிட்டால் இனி எப்போதும் வாய்ப்பில்லை என்பது அவளுக்கு பிடிபட்டது. கோபமாக பேசிப் பார்த்தான். பயம்காட்டிப் பார்த்தான். செல்லம் கொஞ்சிப் பார்த்தான். அவள் எதற்குமே மசியவில்லை. தன்னால் தோப்பிற்கு வந்து “பாடுபாக்க” முடியாது, வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டாள். வீட்டிற்கு வருவதின் பின்னாலிருக்கும் பாதகங்களைச் சொல்லி இவனால் மறுத்துப் பேசவும் முடியவில்லை. அவன் தயங்குவதற்கான தொனி அவளுக்குப் பிடிபட்டது. திருவிழா முடிந்து தோப்பில் அவன் கழற்றிப் போட்டிருந்த ஃபிளெக்ஸில் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பட்டம் நினைவிற்கு வந்தது.
கர்ஜிக்கும் சிங்கமும் பால்பெருமாளும் அருகருகே நடந்து வருவது போல முழு உருவப் புகைப்படம் இருந்தது. தங்கத்தின் கனம் கழுத்திலும் விரல்களிலும், மணிக்கட்டிலும் தெரிந்தது. வீறுகொண்டு நடந்து வருவது போல புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று வரிசைகளாக ஊர்ச் சிறுவர்களின் புகைப்படம் இருந்தது. தோப்பில் அவளோடு இருக்கும் பால்பெருமாளுக்கும், ஃபிளெக்ஸில் இருக்கும் பால்பெருமாளுக்கும் நூறு வித்தியாசங்கள் இருந்தன. ஒருவரின் முகத்தைப் பார்த்தால் பேச்சுகூட கொடுக்காமல் இவன் என்ன ஆள் என்று துல்லியமாக சொல்லக்கூடிய பெரியவர்களின் கண்களில் இருந்து அவனைப் பார்த்தாள். புதுப்பணக்காரனின் “பவுசு” முகத்திலிருந்து வடியாமல் இருந்தது. எக்காளமாக வாய்விட்டுச் சிரித்தாள். அவன் உடல்மொழியை தன்னுடலில் இறக்கி இடுப்பில் கைவைத்து அக்கம்பக்கம் யோசிக்காமல் சத்தமாக “நாடார்குல திலகமே” என்றாள்.
கவிதா மண்வெட்டி / களைவாரி பிடித்து தோட்ட வேலை செய்யக் கூடியவள். கையை, தட்டி உதறினால் உள்ளங்கையில் தூசி படியாது. விரல்நக இடுக்குகளில் அழுக்கு தங்காது. உள்ளங்கையில் ரேகை தாண்டி வேறு எந்தக் கீறல்களும் இருக்காது. உடலை சுத்தமாக பேணவேண்டி அவளுக்கு எந்த மெனக்கெடலும் தேவைப்படாது. இத்தனைக்கும் தினமும் வேலைக்குச் செல்லும் பழக்கம் கொண்டவள். அவள் உடம்பு வழுக்குமரம் போல வழுவிச் செல்லும். “பாவிபட்ட படிக்காம போயிட்டா. போகமாட்டேன்னு ஒத்த கால்ல நிக்றவள நம்ம என்ன சொல்ல” கவிதா அப்பாவிற்கு என்றைக்குமான கவலை.
பால்பெருமாள் அந்த இடத்தைப் பத்திரம் முடிக்கும் முன்னர் ஒரு நாள் பார்த்துச் சென்றான். பின்னர் ஒருநாள் அளவையில் இருக்கும் பிரச்சனைக்காக செல்லான் கட்டி ஆள் வைத்து அளந்தபின் வாங்குவதில் உறுதியாக இருந்தான். இரண்டு நாளுமே இருவரும் வெறுமனே பார்த்துக் கொண்டனர். சாணி மெழுகிய திண்ணையில் நைட்டியை ஏத்தி முட்டி தெரியாமல் முன்பக்கம் மடித்துவிட்டு அமர்ந்திருந்தாள். வாடாச்சி மரத்திலிருந்து காய்ந்து காற்றில் உதிர்ந்த சாட்டையை உள்ளங்கையில் கிலுகிலுப்பை போலத் தட்டிக் கொண்டிருப்பாள். அந்த ஓசை கன்றுக்குட்டிக்குப் பிடிப்பதாக நம்பினாள். மாட்டிற்கு தண்ணீர் காட்டிய பழக்கம். மாடு இல்லையென்பதில் அவள் மனம் இன்னும் சமாதானம் அடையவில்லை. கவிதாவின் கண்களையும், கால்களையும் அவன் பார்த்த விதமே அவளைப் பிசக வைத்திருந்தது.
பத்திரப் பதிவுக்கு முந்தைய இரவு பாதித் தொகையை எண்ணிக் கொடுத்துவிட்டு கிளம்புவதற்கு கருக்கல் ஆகியிருந்தது.
கொண்டி கூட வைக்காமல் முன்கதவைச் சாத்திவிட்டு இடுப்புவரை நைட்டியை ஏத்தி இறக்கிய சொச்ச நிமிடத்தில், புளித்தண்ணி வைத்து சுடுவதற்கு வேண்டி கத்தரிக்காய் பறிக்கச் சென்ற அப்பா வராததில் ஆசுவாசம் அடைந்திருந்தாள்.
பால்பெருமாள் வெளியேறும்போது பெயரைக் கேட்கவும் “அத இப்ப தெறிஞ்சி என்ன பண்ண போறீங்க” என்றுதான் கேட்க நினைத்தாள்.
தெற்குப்பார்த்த வாசல். வீட்டிற்கு மேல்பக்கம் வைக்கோல் படப்பும் மாடுகளும் அங்குதான் கட்டப்பட்டிருக்கும். அருகிலேயே தென்னந்தோப்பும் கிணற்றடியோடு பம்பு செட்டும் உண்டு. மலையடிவாரத்திலிருந்து முதல் வீடு. ஊருக்குள் இறங்கிய சிறுத்தை கவிதா வீட்டில் கிடந்த ஆறு மாடுகளையும் கழுத்தில் கடித்துக் கொன்றபிறகு, அவளின் அப்பா எறும்பிலிருந்து நத்தையாகி அலைந்தார்.
ஊருக்குள் பலமான எதிர்ப்பு வந்தும் காத்தாடி போடுவதற்கு சுப்பையா அவர் இடத்தைக் கொடுத்திருந்தார். காத்தாடி இயக்கத்திற்கு வந்த கொஞ்ச நாளிலேயே “வ்ஞ் வ்ஞ் வ்ஞ் வ்ஞ்” என்ற ஒவ்வொரு சுற்றுக்குமான இரைச்சல் பழக மிகவும் கடினமாக இருந்தது. கவிதாவின் அப்பாவிற்கு அப்படித்தான் இரண்டு காதுகளும் அடைத்துக் கொண்டது. வயது முதிர்வு இல்லையென்பதற்கு அவர் கண் பார்வையே சாட்சி. காற்றாடியின் நிழல் வீட்டிற்குள் விழுவதைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு எங்கோ வேற்று நிலத்தில் வசிப்பது போலப்பட்டது
கவிதா, பால்பெருமாள் தோப்பிற்கு வந்து செல்வது அவர் கண்ணில் பட்டும் கேட்டுவிட மனம் விரும்பவில்லை. “அவளுக்குள்ள என்ன பிடிவாதமோ?” மனதிற்குள் கேட்டுக் கொண்டார். “வளந்த புள்ள என்னத்த சொல்ல?” எப்போதாவது அவளுக்குக் கேட்கும்படி அவராகவே பேசிக் கொள்வார். அவருக்குமே அதற்குமேல் தலையிட விருப்பமில்லை. ஊருக்கே தெரிந்துவிட்டபிறகு கூப்பிட்டு வைத்துப் பேசினால் மட்டும் கடந்த காலத்தை எல்லோர் கண்ணிலிருந்தும் மறைக்கவா முடியும்? “நடக்குறது நடக்கும்” என்பது கவிதா அப்பாவின் சமாதானம்.
கவிதா முதல்நாள் தன்னைக் கொடுத்ததிலிருந்தே அந்த சம்பவத்தை நினைத்து வருத்தப்பட்டவள் இல்லை. அவளுடைய தேவையின் பொருட்டே எல்லாம் நிகழந்தது. தோப்புக்குள் இருக்கும் வீட்டிற்கு வரச் சொன்னது மட்டுமே பால்பெருமாளின் தேர்வாக இருந்ததே தவிர மீதமெல்லாம் அவளின் ராஜியம்தான். அதிகாரத்திற்கும் அந்தஸ்த்திற்கும் கெளரவத்திற்கும் பழக்கப்பட்ட ஒருவனின் உள்ளம் எங்காவது ரகசிய கேவலோடு பெண்ணிடம் சரணடையத் துடிக்கும். அது ஒருபோதும் மனைவியாக இருப்பவளுக்கு கொடுத்து வைக்காத வாழ்வு என்பதை கவிதா நன்கு அறிந்து வைத்திருந்தாள். தான் வசிக்கும் தெருவிற்குள் வர அவன் கால் கூசுவதற்கான காரணம் அவளுக்கொன்றும் கசக்கவில்லை. அவனுக்கு மன்னிப்பைப் பரிசாக வழங்கினாள். அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் வல்லமை அவளிடம் இருந்தது.
பால் பெருமாளுக்கு அதிகாரத்திலும் பணத்திலும் எட்டிப் பார்த்த கெளரவம் காணாமல் போயிருந்தது. அவனோடு சேர்த்து அவனது காருக்கும் கெளரவம் குன்றி காரின் நிறமே பொலிவிழந்திருந்தது. இருவருமே இதுநாள்வரை அவர்களுக்குள் எந்தவித வாக்கும் கொடுத்துக் கொள்ளவில்லை. பால்பெருமாள் அவளை வரவைக்கும் யுக்தியில் ஏதும் வாய்விட்டுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தான். விடியற்காலை மூன்று மணிக்கு வீட்டிற்கு வரச் சொன்னாள். அவனுக்கும் சரியாகத்தான் பட்டது. ஒரு இருமல் சத்தம்கூட வீட்டில் இன்னொரு ஆண் இருப்பதைக் காட்டிக் கொடுத்துவிடும் வெறிச்சோடிய தெரு. அதுவும், அது தான்தான் என்பது தெரிந்துவிடும். ஊருக்குள் இருக்கும் மரியாதையை நினைத்து பதில் சொல்லாமல் பேச்சை மடை மாற்றிப் பார்த்தான். மீண்டும் அங்கேயே போய் நின்றது.
ஓட ஓட வெட்டினார்கள் என்பதில் போன மரியாதையை திருப்பிச் செய்யும் நாளில் பெற்றுவிடலாம்.
“சேரில போய்க்கெடந்தானாம்”– பால்பெருமாளுக்கு இப்படிக் கேட்கும் குரல் எல்லாமே ஊரில் பெண்கள் பேசிக்கொள்வது போலவே இருந்தது.
ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும். பதினொரு மணி வாக்கில் தோப்பில் வேலை செய்பவனை கொண்டுவிடச் சொல்லிவிட்டு நான்கு மணிக்கெல்லாம் அவனோடு கிளம்பி, திரும்ப தோப்பிற்கு வந்துவிடலாம் என்கிற யோசனை பால்பெருமாளுக்கு. அவன் கவிதாவிற்கும் விசுவாசி. தன் காயம் ஆற்றுவதைவிட தன்னிடம் மோதி நிற்கும் காமத்திற்கு பதில் சொல்ல வேண்டியது அத்தியாவசியமாக இருந்தது. ஒருநாள் வந்து சென்றுவிட்டால் அதன்பிறகு காயம் ஆற்ற கவிதாவை தோப்பிற்கு வரவைத்துவிடலாம் என்பது கணக்கு.
பழி தீர்க்கப்போகும் வஞ்சத்தைப் பேசித் தீர்க்க, சுதாவின் உதாசீனத்தைவிட கவிதாவின் காமம் கலந்த கருணை அவளைத் தேட வைத்தது. டீக்கடை வாசலில் வந்து நின்ற கண்கள் தேட வைத்திருந்தது. அந்தப் பிடிவாதத்திற்குள் சுருண்டு கொள்ளுதல் அவனுக்கு செளகரியம்.
இயலாமையின்பால் விரோதத்தின் மீதெழும் காமத்திற்கு தீனி போடும் வல்லமை கவிதாவிடம் மட்டுமே இருப்பதாக நம்பினான். அதனாலயே இப்படி ஒரு திட்டம். ஆனால் கவிதாவின் பிடியிலிருந்து தப்பிக்கும் உடல் வலிமையும் மன வலிமையும் இல்லாதிருந்தான். தோப்பில் வேலை செய்யும் பையனிடம் விசயத்தை சொன்னதும், தூங்காமல் இருந்து கொண்டுவிட்டு திரும்ப கூட்டி வருவதாக சொன்னான்.
கவிதாவிற்கு அழைத்து, பதினொரு மணிக்கு வருவதாகவும், சாப்பிட்டுவிட்டு வருவேன் என்றும் தகவல் சொன்னான். “உங்க அப்பா” என்றெழுந்த கேள்வியை விழுங்கிக் கொண்டான்.
பால்பெருமாளோடு “தொடுப்பு” என்று தெரிந்து கொண்ட நாளில் இருந்தே ஏன் என்ற கேள்வி கவிதாவின் அப்பாவிற்கு அறுந்து விழுந்திருந்தது. முதல் சந்திப்பிற்குப் பிறகு இப்போது வீட்டிற்கு வருகிறான். அவனை என்னவென்று சொல்வது? ‘அவங்க’ என்று ஆரம்பிப்பது அவளுக்கே சிரிப்பாக இருந்தது. ஒத்திகைகள் தோற்றுப்போயின. அதிகாரம் இடம் மாறியிருக்கிறது. அந்தச் சூடு அவளை போலித்தன்மையிலிருந்து விலக்கி வைத்தது. அடுத்து இசைக்கப்படும்வரை அவளுடைய இருக்கை. மறுபடி வாய்த்தாலும் அந்த ஒற்றை இருக்கையை அவள் விரும்பாதிருந்தாள். இந்த விளையாட்டில் அவளின் சிரிப்பு மட்டுமே வேடம் தரிக்காதிருந்தது. மீதமெல்லாம் “செஞ்சி பார்ப்போமே” என்கிற அசட்டைத்தனம். அதில் அவளுக்கு லாபமோ ஆறுதலோ கிடையாது. ஒரு கொண்டாட்டம். அவனின் இறைஞ்சுதலை ரசித்தல் அவ்வளவே.
மொத்த வீடும் கவிதா மட்டுமே நிறைந்திருந்தாள். காய்ந்த தென்னை ஓலை கொளுத்தி வெந்நீர் போட்டு நிறைய தண்ணீரில் குளித்திருந்தாள். வாசலில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. கரிசல் மண்ணும் களிமண்ணுமாக கலந்த நிலம் அது. மிதித்தால் சகதிபோல ஒட்டிக் கொள்ளும். நடுவில் இரண்டு செங்கல் துண்டை போட்டு விட்டிருந்தாள்.
உடலில் சட்டையில்லை. மேலே ஒரு டவல் மட்டும் போட்டிருந்தான். கவிதாவிற்கு சந்தேகம் வராமல் இருக்க, கையில் இருந்த பையில் வெள்ளையில் பச்சை கட்டம் போட்ட இரண்டு சாரம் வைத்திருந்தான். பால்பெருமாளாக, சொத்து முடிப்பவனாக, கார் வைத்திருப்பவனாக, அறியப்பட்டவன் தேவை மாறியிருக்கிறது. வழியில் யாரும் இருக்கப்போவாதில்லை. ‘கவிதாவைப் பார்க்க வந்தேன்’ என அவனாகவே சொல்லிப் பார்த்தான். அவள் தேவையாகவும் தேவையற்றவளாகவும் ஒரே நேரத்தில் தெரிந்தாள். அவனால் முடிவெடுக்க முடியவில்லை.
முதன்முறை சந்தித்துக் கொண்டது போலவே பேச்சற்று இருந்தது இரவு. தோளில் கிடந்த துண்டை அவளே எடுத்துக் கொடியில் போட்டுவிட்டு நீலநிற பிளாஸ்டிக் இருக்கையில் இருக்கச் சொன்னாள். கட்டுப் பணம் வைப்பதென்றால் மட்டும் டிரவுசர் வடிவ உள்ளாடை அணியும் பழக்கம் பால்பெருமாளுக்கு உண்டு. மனைவி முன்னால் “கட் மாடல்” அணிய மனம் ஒப்பாமல் டிரவுசர் மாடல் உள்ளாடை அணிந்திருந்தான்.
உள்ளாடையோடு அமர்ந்திருந்தவன் முட்டியில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றினாள். தொட்டுப் பார்க்கையில் உணர்ந்த வெதுவெதுப்பைவிட சூடு கொஞ்சம் அதிகமாக இருந்தது. தண்ணீர் சேர்க்கச் சொன்னான். என்ன நினைத்தாளோ எழுந்து நிற்கச் சொல்லி இடுப்பில் டவலை கட்டிவிட்டு உள்ளாடையை கவிதாவே கழட்டி எடுத்தாள். உடலின் தகிப்பு வலது கை தோள்பட்டை வலியாகத் திமிறி நின்றது. வாய்விட்டுக் கேட்க ஏதோ ஒன்று தடுத்தது. சுடுதண்ணீர் முட்டி தாண்டி தொடையேறிச் சென்றது. காலில் கிடத்தி குழந்தையைக் குளிப்பாட்டுவது போல உள்ளங்கையில் ஏந்திப் பார்த்துப் பார்த்து நகம் பட்டுவிடாமல் சுத்தம் செய்தாள்.
தன்னை அப்படி உக்கார வைத்து தண்ணீர் ஊற்றுவது, அவனுக்குத் தான் ஒரு பிணம் எனவும் தனக்கு சடங்கு செய்கிறார்கள் என்றும் அவனை அறியாது காட்சியாக வந்து விழுந்தது. இருளில் எதிர்கொள்ளும் நிர்வாணம் அவனை குறுகச் செய்தது. கவிதாவின் கைப்பக்குவத்திற்கு ஒன்றமுடியாமல் திணறினான். கவிதாவே ஜெயித்தாள். பிளாஸ்டிக் கப்பில் கையைக் கழுவிவிட்டு, உடலில் சொட்டு ஈரம் விடாமல் துடைத்தெடுத்து கட்டிலில் இரண்டு போர்வையை விரித்துப் படுக்க வைத்தாள். மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நான்கு மணியை நினைத்துக் கொண்டே கண்மூடிப் படுத்திருந்தான். உடல் தணிந்து மீண்டும் சூடேறியிருந்தது. கண்ணயர்ந்து திடுக்கிட்டவன் ஃபோனில் மணி பார்த்தான். பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. கவிதா சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்தாள். அவன் விடியல் இங்குதான் என்பதை நினைத்து தூங்காமல் கண்மூடி கண்களை உருட்டிக்கொண்டு கிடந்தாள்.
கவிதாவின் வீடு, நான்கு பக்கம் செம்மண்சுவர் எழுப்பி சுண்ணாம்பை தெளித்துவிட்டு ஓடு வேயாமல் வாராண்டாவாக இருக்கும். தரைமட்டும் சிமெண்ட் பூசி கொழுப்பு மெழுகி விடப்பட்டிருக்கும். அதற்க்குப்பின் முன்னறை. நிலா வெளிச்சத்தில் கட்டில் கிடந்தது. மாடு கிடந்ததற்கு அடையாளமாக இரண்டு பக்கமும் கருங்கல் நட்டு வைத்திருந்தது அப்படியே நின்றது. மாட்டுத் தொழுவத்தின் வாசனை விலகியிருந்தது.
புரள முடியாமல் புரண்டு படுப்பதையும் எழுந்து அமர்வதையும நார்க்கட்டிலின் ஓசை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. கொடியில் கிடந்த ஈர டவல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஃபோனை கையில் எடுத்துக் கொண்டு கிழக்குப் பார்த்து தெருவில் நின்றான். மூன்றுமணி. நிலவு பின்னந்தலையில் பிரகாசமாக இருந்தது. சட்டை இல்லாத தன்னுடலைப் பார்த்துக் குறுக்கிக் கொண்டான். அவர்களோடு அவர்களாக ஆகிவிட்டது போலிருந்தது. இடம் முடிக்கும்போதும், தோப்பில் வேலை முடிந்த கையோடு சம்பளம் கொடுக்கும் போதும் அவர்கள் எப்படி நிற்பார்களோ அப்படி நிற்பதாகத் தோன்றியது. இப்படியே நடந்து போனால் தோப்பு வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் கொஞ்சம் கூடுதல் வரும். உடல் வேட்கையே வென்றது.
வீட்டிற்குள் திரும்பினான். கவிதா திண்ணையில் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மனைவியே ஞாபகத்திற்கு வந்தாள். ரொம்ப கொச்சையாகப் பேசி சல்லாபித்திருக்கிறார்கள். “செஞ்சி விடேன்” என்று அவனால் கேட்கவே முடியவில்லை. ஊர் தொந்தரவாக இருந்தது. காத்தாடியின் மண்டையில் தெரியும் விளக்கு வெளிச்சம் அவனை எக்காளம் செய்தது போலிருந்தது. கட்டில் கம்பில் அமர்ந்து காலை நீட்டி அவளுக்குக் குறிப்புணர்த்தினான். மிகவும் சிரமப்பட்டு “கீழ உக்காரு” என்றான். அந்த ஈனக்குரல் கவிதாவிற்கு எரிச்சலை வரவழைத்தது. வலதுகை தோள்பட்டை அழுந்தாமலிருக்க தலையணையை வைத்துவிட்டு அவன் இரு கால்களையும் மெதுவாகத் தூக்கி அப்படியே அவனைக் கட்டிலில் சாய்த்தாள். உள்பாவாடை கூட இல்லாத நைட்டியை தலைவழியே கழட்டி அவன் இடையமர்ந்தாள்.
கவிதா, தோப்பில் அவன்மேலே அமரும்போது அவனுக்கிருந்த கர்வம், இப்போது பயமாக மாறியிருந்தது. பிடிமானம் அவளுடையது என்றாலும், அவன் அது குறித்து ஒருபோதும் யோசித்தவன் இல்லை. அவனின் கட்டுப்பாடும் அவளை இடம் மாற்றும் சாதுர்யமும் இன்று கைகூடும் என்கிற நம்பிக்கையற்று கிடந்தான். பேச்சற்று இருந்தவனுக்கு, நிறுத்து என்றோ போதும் என்றோ சொல்ல முடியுமென தோன்றவில்லை. தான் ஆண் என்பதற்கென வகுத்து வைத்திருந்த அத்தனை அம்சங்களும் கைவிட்டுப் போவது போலிருந்தது. அவளைத் தள்ளிவிடும் வேகம் கையில் இல்லை. இறங்கச் சொல்லும் வலு மனதில் இல்லை.
கவிதா இயங்கினாள். அவள் உடல்மொழியும், திறந்திருக்கும் கண்களும் அச்சம் கொள்ளச் செய்தன. அவனுக்கு ஏதோ செய்தி சொல்வது போல அவைகள் தன்னைக் காட்டிக் கொண்டன. நிலவொளியில் இன்னும் இன்னும் பிரகாசமாக இருந்தாள். வழுவிச் செல்லும் உடலோடு கண்களும் போட்டி போட்டு மினுங்கியது. தொடையில் கையூன்றி நட்சத்திரங்களைப் பார்க்கத் தொடங்கினாள். காமம் போதையாக இல்லாமல் பண்டிகைக்கான கொண்டாட்டமாக வெளிப்பட்டது. அவளின் மூர்க்கம் அச்சம் கொள்ளச் செய்தது. அவள் இயங்குதலை ரசிக்க முடியாமல் தினறினான். கவிதா தனக்கு யார் என்பது கேள்வியாக நின்றது. ரகசியத்தின் கேவல் ஊமை நாடகம் ஆடிக் கொண்டிருந்தது.
அவனின் உச்சம் நெருங்க நெருங்க உடல் வெளிப்படுத்தும் பயத்தை உணர்ந்து நிறுத்தினாள். திரை விலகுவதற்கான அந்த நேரத்தை வெகுவாக ரசித்தாள். நிதானமானாள். இதற்குப்பிறகு இருவருக்குள் இடைவெளி பெருகினாலும், அற்றுப்போனாலும் அவளுக்கு யாதொரு நட்டமுமில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். கூந்தலை அள்ளி இறுக்கமாகக் கொண்டை போட்டுக் கொண்டு, அசையில் தூக்கிப்போட்டிருந்த அவன் வேட்டியை எடுத்து தலைப்பாகைக்கட்டி “என்ன நாடார்குலத் திலகமே! உள்ள தங்கிரும்னு” பயமா இருக்கா என்றாள்.
பால்பெருமாள் பிணத்தைக் குளிப்பாட்டிக் கிடத்தியது போலவே படுத்திருந்தான்.
***
ரமேஷ் ரக்சன் – இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் 16, ரகசியம் இருப்பதாய், பெர்ஃப்யூம் மற்றும் ஒரு நாவல் “நாக்குட்டி” வெளிவந்துள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – rameshrackson@gmail.com /
ரமேஷ் ரக்சன் இதுவரை நடக்காத பாதையாகத் தேடிப் பிடித்து காமத்தின் காட்டை கண்டடையும் முறை ரசிக்கத் தகுந்த ஒன்று.
தமிழ்நாட்டில் பாலியல் கதைகளை ஒரு தட்டிலும் ஜாதிக் கதைகளை ஒரு தட்டிலும் வைத்தால் இரண்டுக்கும் நான் நீ என்று போட்டி வந்துவிடும். போட்டியின் கடேசியில் ரெண்டும் ஒன்னை ஒன்று பின்னிக் கொண்டு சாரையும் நாகமுமாகப் புரண்டு கொண்டிருக்கும். மொத்தமுள்ள பதினெட்டு ஜாதிகளில் ஒன்றுகூட இதில் தப்பித் துலங்கினதில்லை. பேருக்கு வெளியிலே மனசு விரும்பினபடி சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். ஒருபக்கம் ஜாதிகளும் ஜாதிக்கட்டுகளும் உலைந்துகொண்டு வருவதும், அதை எப்படியாவது நட்டுக் குத்தலாக நிறுத்திவிடத் துடிப்பவர்களும் படாடோபமாக நடமாடும் காலம் இது. இந்த நேரத்தில் என்னமாவது இப்படிக் கதைகளை எழுதிப்போட்டால் பலருக்கு சுருக்கென்று வரலாம். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது ஒருபடியாகத் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொள்வார்கள்…
நாட்டுப்புறத்திலே ஒரு கதை உண்டு. ஒரு சத்திரத்தின் திண்ணையில் மூணு பேர் படுத்துக் கிடந்தார்களாம். அதில் முதலில் வந்தவர் நன்றாகத் தூங்கிவிட, பின்னால் வந்த ரெண்டுபேரும் உக்கார்ந்து ஊர் வயனங்களைப் பேசிக் கொண்டிருந்தார்களாம். இவர்களின் தொணதொணப்பு காதில் விழ தூக்கம் கலைந்தவர் எழுந்திருக்காமலே அவர் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்டாராம். ரெண்டுபேரும் ஊருக்குள் எந்தெந்த பொம்பளைகள் தன் புருசன் அல்லாத வேறு யார் யாரோடு ’தொடுப்பு’ வைத்திருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் அப்படிக் கதைகட்டிச் சொன்னதில் எந்த சாதியும் தப்பவில்லை. ஒரே ஒரு ஜாதியைத் தவிர.
“ஆனா, நம்ம ஜாதில இப்படில்லாம் கெடையாது தெரியுமா?” என்றார் ரெண்டாம் மனுசன். பதிலுக்கு, “ஆமாமா…” என்று ஒத்து ஊதினாராம் மூணாம் மனுசன். இந்த இம்சைக்கிடையில் எழுந்திரித்து ஒண்ணுக்குப் போய்விட்டு வந்த முதலாம் ஆளை அப்போது தான் நல்ல வெளிச்சத்தில் முகம் பார்க்க முடிந்ததாம். அவரிடம் பேச்சுக் கொடுப்போம் என்று, “ஆமா நீங்க என்ன ஆளுக..” என்றாராம் ரெண்டாம் ஆள்.
”நான் என்னன்னு என் சாதிய சொல்வேன். எங்க அம்ம அந்த சாதி. அப்பன் இந்த சாதி.. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றாராம். அவர் சொன்ன ரெண்டு சாதிகளிலும் ஒண்ணு முதலில் பேசிக் கொண்டிருந்த தங்களது சாதிகளில் ஒண்ணுதான் என்று தெரிந்தவர்கள் மனசுக்குள், “ச்சே கடசியில நம்ம சாதியும் கெட்டுப்போச்சா வெக்கக்கேடு” என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தார்களாம்.
சாதிகளைக் கொண்டு தூய்மைவாதம் பேசுபவர்களை கேலிபண்ணக் கிளம்புகிறது இந்த நாட்டுக்கதை.
மனுசனுக்கு தன் சாதி ஒசந்தது, பிறத்தியரது தாழ்ந்தது என்கிற எண்ணத்தை உண்டு பண்ணுகிறதில் ஒரு ’நல்ல’ பலன் கிடைக்கிறது. அந்தப் பலனை அறுவடை செய்கிறவர்களுக்கு ஒரு பலனும் இனுமே கிடைக்காது என்று ஆக்கிவிட்டால் இந்தக் கலப்புகளெல்லாம் ஒரு விசயமே இல்லை என்பதுபோல ’பழம்புதுசாக’ பல கதைகள் இப்படிக் கிளர்ந்து வரும் என்பார் கி.ரா. (கிராஜநாராயணன்).
சாதி மீறிய உறவு, திருமணமற்ற பந்தம், சந்ததி உற்பத்தி, சாக்காடுக்குப் பிறகு சொத்துரிமை இவையெல்லாம் தான் இம்மாதிரி கதைகளை இன்றும் ஊர்ப்புறங்களில் ‘ரகசியம் இருப்பதாய்’ வைத்திருக்கின்றன. அள்ள அள்ள சுரக்கும்படி இப்படி எல்லா சாதிப் பெரிய மனுசன் கதைகளும் ஏராளம் நம்மிடமுண்டு.
ரமேஷ் ரக்சனின் இந்தக் கதைக்குள் விரசம் என்பது துளியும் கிடையாது. எப்போதோ யாரோ சொன்ன ஞாபகம், தமிழில் முன்னாட்களில் ‘எழுதப்பட்ட’ கதைகளில் ஆண்களுக்கு இப்படி ஒரு ‘உறுப்பு’ இருப்பதே பல கதை எழுத்தாளர்களுக்கு நினைவு இருக்காது என்று. சரி அதை அவர்களுக்குக் ‘கையாளத்’ தெரியாதோ என்று விட்டுவிடலாம். ரமேஷ் ரக்சனுக்கு இந்த இடங்களைத் துல்லியமாக எழுத வருகிறது.
கூடுதலாக எதிர்பாலின் மனத்தையும் கிட்டே நெருங்கி தொட்டு எழுதிவிடுகிறார்.
பால்பெருமாள் ஓட ஓட வெட்ட வந்தவர்களை எல்லாம் விட்டுத் தாண்டிவிட்டான். ஆனால், வீட்டுப் பொம்பளை சீய்ய்ய் என்ற பிறகு அவனது மொத்த காமமும் இடம் மாறிப்போச்சு. வேறு வழியில்லாமலெல்லாம் இல்லை. ஆனாலும் ‘இயலாமையின் விரோதமும், காமத்திற்கு தீனி போடும் வல்லமையைக் கொண்டிருக்கிறவளின் சமிக்ஞையும் அவளைத் தேடிப்போய் சரணாகதி ஆகவிடுகிறது. எத்தனைத் தூண்டிலில் சிக்கிக் கொண்ட அனுபவம் இருந்தால்தான் என்ன மீன்கள் ஒவ்வொரு முறையும் முள்ளைக் கடிக்கத் தானே செய்கிறது. பலநேரம் தூண்டில் யார் முள் யார் என்பதைத் தெரியவிடுவதில்லைக் காமம்.
இன்னும் நின்று நிதானித்து எழுதப்பட்டிருக்க வேண்டிய கதை. கவிதாவின் பாத்திரம்
கூட, கூட ரெண்டு நாரும் கொழுந்தும் சேர்த்துக் கட்டியிருக்க வேண்டிய பூமாலை. அவளைக் கதம்பம் அளவுக்குத் தான் எழுதியிருக்கிறார். சுதாவில் இருந்து தொடங்கிய பிறகு அவளை அந்தரத்தில் விடுவதும் நியாயமில்லை. இதுதான் கதை எட்டப் போகும் தூரம் என்று வந்தபிறகு கிள்ளி எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கக் கூடாது.
மித்தபடி ரமேஷ் ரக்சன் கதைகளில் மண்ணோடு சேர்ந்த மக்கள் வந்துபோவது மனசுக்குச் சின்னதாய் ஓர் இளைப்பாறல். வாடாய்ச்சி மரத்தில் இருந்து காய்ந்து விழுந்த சாட்டை என்றெல்லாம் எழுதுகிறார். நான் என்னையே இப்போது கிள்ளிக் கொள்கிறேன். பணகுடி நிலத்தில் வஞ் வஞ்சென இரையும் காத்தாடியும், செங்கலும், சிறுத்தையும், மாடுகளும் ஒரு தெறிப்புப் போல அங்கங்கு விழும்போது, வாய்யா ராசா வா வா.. என்று குதிக்கிறேன்.
சிறப்பான கதை