Monday, December 9, 2024
Homesliderவல்லூறின் நிழல்

வல்லூறின் நிழல்

குமார நந்தன்

நீர் நிறைந்த அல்லது காலி பிளாஸ்டிக் குடங்களோடு பிரதான சாலையில் மேகலா நடந்து கொண்டிருப்பதை, இந்த சிறிய நகரத்துக்கு மாலை நேரத்தில்  நீங்கள் வர நேர்ந்தால் பார்க்கலாம். பல ஆண்டுகளாக இங்குள்ள உணவகங்கள், தேநீர் விடுதிகளுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றும் வேலையை அவள் செய்து வருகிறாள். அவள் நடையில் ஒரு இயந்திரத்தனமான வேகம் இருந்தாலும் ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டிருப்பதைப் போல இடதுகையில் சிவப்பு பச்சை நீலம் என அடர்ந்த நிறமுடைய குடத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் வலது கையை ஒயிலாக அசைத்தபடி செல்வதை புன்னகையின்றி பார்ப்பது கடினம்.

அந்தக் கடைவீதி மற்றும் ஊரின் விளிம்பு பகுதியில் என, ஊரில் அந்த வாரத்தில் மூன்று திருட்டுகள் நடந்திருந்தன. முதலாவதாக ஊரில் உள்ள ஒரே ஒரு சூப்பர் மார்க்கெட்டான கிருஷ்ணா சூப்பர் மார்க்கெட்டில், பின்புறம் உள்ள தென்னந்தோப்பை ஒட்டியுள்ள சுவரில் வைக்கப்பட்டிருந்த வெப்பம் வெளியேற்றும் மின்விசிறியை அகற்றி திருடன் உள்ளே நுழைந்திருந்தான். (ஒருவரா, பலரா (எனத் தெரியவில்லை) கடையில் பணம் எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைக்காரரிடம் இருந்து ஐயாயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கி கல்லாப்பெட்டிக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. அந்த சில்லறை மூட்டையைக் காணவில்லை. முந்திரிப்பருப்பு பாக்கெட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இன்னும் வேறு என்னென்ன திருடு போயிருக்கிறது என கணக்கெடுத்தார்கள். கடைசியில் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மளிகைப் பொருட்கள் திருடு போயிருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கடையில் வந்து குவிந்து கொண்டே இருந்ததால் அங்கு பல கதைகள் திடீர் திடீர் என உயிர்பெற்று உலவ ஆரம்பித்தன. கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டிருப்பதாகவும் வசூல் பணம் லட்சக்கணக்கில் அதில் இருந்ததாகவும் உண்மையான தொகையைச் சொன்னால் கணக்குக் காட்ட வேண்டி வரும் என்பதால் பணம் எதுவும் திருட்டுப் போகவில்லை என கடைக்காரர் சொல்வதாக பேசிக் கொண்டார்கள்.

சிலர் சில்லறை மூட்டை வைத்திருப்பதாக சொல்வது பொய் என்றார்கள். கடையில் சிசிடிவி கேமரா வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடையை மூடிவிட்டு போகும்போது கேமராவை அணைத்து வைத்துவிட்டுப் போவதுதான் வழக்கம் என கடைக்காரர் சொன்னபோது போலீசார் நொந்து போனார்கள்.

இது முடிந்த இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. கூடையில் பழம் விற்கும் கனகா வெயிலில் வீதியெல்லாம் அலைந்து திரிந்து ஆப்பீ..ள் பழ…ம் திரா…ட்சைப் பழ…ம் என கூவிக்கூவிக் களைத்தவளாய் முதலியார் கடையில் டீ குடிக்க சென்று கொண்டிருந்தாள். ஞாயிற்றுக்கிழமையின் வழக்கப்படி அன்று வியாபாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஏறு வெயில் காந்தலடித்தது. பசி மயக்கத்தில் தலை சுற்றியது. (அதிகாலையிலேயே மார்க்கெட்டுக்குப் போய்விட்டு வந்து, ஒரு சுற்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு, மதியம் சாப்பிடுவதுதான் எப்போதுமே அவள் வழக்கம்) கைவிரல்களை விரித்து விரித்து விட்டாலும் கொறக்களி பிடித்துக் கொண்டு மடங்கிக் கொண்டு போனது. தாங்க முடியாத வலியோடு ஒரு கை விரல்களை இன்னொரு கையால் விரித்து விட்டுக் கொண்டு போனவளை பைக்கில் வந்த இளைஞன் ஒருவன் நிறுத்தினான்.

அக்கா என்னா பழம் வச்சிருக்க?

ஆப்பிள், திராட்சை, மாதளம்பழம் இருக்குது. அவள் கண்களில் ஒரு நப்பாசை.

மாதுளம்பழம் ஒரு கிலோ வேணும். ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குதா என்றான். அவன் பின்னால் ஒருவன் உட்கார்ந்திருந்தான். இருவரும் நல்ல உடை தரித்திருந்தார்கள். நம்பிக்கையாகவும் நெருக்கமாகவும் உணரும்படி சிரித்துக் கொண்டிருந்தார்கள். கனகா சிரித்துக் கொண்டே சுருக்குப் பையை எடுத்து பணம் எவ்வளவு இருக்கிறது என நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தாள். முன்னால் இருந்தவன் சட்டென அவளிடமிருந்த பணத்தைப் பறித்தான். பைக் சீறிப்பாய்ந்து கொண்டு சென்றது. கனகா வெறிபிடித்தவள் மாதிரி தன்னை மறந்து அலறினாள். என்ன நடந்தது என அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் தலையிலிருந்த கூடை சரிந்து விழுந்து பழங்கள் சாலையில் உருண்டன.  அலறலைக் கேட்டவர்கள் யாரோ அவளை கத்தியால் குத்திவிட்டு போகிறார்கள் என்றுதான் நினைத்தார்கள். திருடர்களை விரட்டிப் பிடிக்க சிலர் முயன்றார்கள். ஆனால் அவர்கள் தப்பிவிட்டார்கள். கனகா  அடிபட்ட விலங்கைப் போல சாலையில் இங்கும் அங்குமாய் நடந்தபடி வெகுநேரம் கதறிக் கொண்டிருந்தாள்.

லட்சுமியின் வீடு மாரியம்மன் கோவில் தெரு, கெனால் தெருவைத் தாண்டி தனியாக இருந்தது. அது அவள் கணவன் ரங்கமுத்துவின் பூர்வீக நிலம். அவன் ஒரு லாரி டிரைவர். பஞ்சாப், அசாம் என சரக்குகளை வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்பவன். ஒருமுறை வண்டி ஏறினால் இறங்க ஒரு மாதம் ஒன்றரை மாதம் கூட ஆகும். லட்சுமி ஒரு வாயில்லாப் பூச்சி. கணவனின் உயிரைப் பற்றியே எப்போதும் அவளுக்கு கவலையாக இருக்கும். எங்காவது விபத்து நடந்துவிட்டால்? அவனுக்கு நல்ல சம்பளம் தான். ஆனால் எல்லாவற்றையும் குடித்தே தீர்த்துவிடுவான். குடியினால் அவன் உருக்குலைந்து கொண்டு வருகிறான். கொஞ்சம் குடித்துவிட்டுதான் லாரி ஓட்டுகிறான். எப்போது வேண்டுமானாலும் அவன் வேலை பறிக்கப்படலாம் என்ற நிலையில் லட்சுமி கடைகளில் பாத்திரம் தேய்க்கப் போகிறாள்.

அவள் சின்னதாக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கியிருந்தாள்.அடுத்த வருடம் மாசி மாத பண்டிகையில் கெடா வெட்டி பொங்கல் வைப்பதாக காளி கோவிலில் வேண்டிக் கொண்டு நேர்ந்துவிட்டிருந்தாள்.

கடை பாத்திரம் தேய்க்க சாயந்திரம் போவாள். அதுவரை ரயில்ரோட்டைத் தாண்டி உள்ள கொரங்காட்டில் ஆட்டுக்குட்டியை மேய்ச்சலுக்கு விடுவாள்.கடைகளில் இருந்து கொண்டு வரும் மாவுத்தண்ணியை ஊற்றி வளர்ப்பதால் ஆடு கிடுகிடுவென வளர்ந்து வந்தது.

திமிரும், மதர்ப்பும் கொண்ட அந்த ஆட்டிடம் கெனால் தெருக்காரர்கள் வாக்கு கேட்டார்கள். வீட்டுல ஒரே கஷ்டம் சாமி. இங்கியே இருக்கலாமா? வெளியூருக்கு போகலாமா? இல்ல வேற ஊடு மாத்தலாமா? வாக்கு சொல்லு சாமி என்பது போன்ற முடிவுகளுக்கு கடவுளின் மனதை அறிய வேண்டி, ஆட்டின் காலைக் கழுவி பூ வைத்து சூடம் ஏற்றி நின்றார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு அந்த ஆடு காணாமல் போய்விட்டது. ஆட்டை வீட்டு வாசலில் இருக்கும் புங்க மரத்தில்தான் கட்டி வைத்திருப்பாள். மழை வந்தால் அவிழ்த்து வீட்டுக்குள் விட்டுக் கொள்வாள். (அதற்குள் அது இரண்டு சட்டியையாவது உடைத்துவிடும்)

ஊரில் ஆடு காணாமல் போவது அடிக்கடி நடந்தாலும் ஊருக்கே தெரிந்த சாமி ஆட்டை யார் திருடிக்கொண்டு போகப் போகிறார்கள் என அவள் அசட்டையாய் இருந்தாள். அன்று காலை ஆடு இருந்த இடம் சூனியமாய் இருந்ததைப் பார்த்ததும் லட்சுமிக்கு திக்கென்றது. சாமியாட்ட யாரு திருடிகிட்டுப் போயிருப்பாங்க? இனி வேண்டுதலை எப்படி முடிப்பேன். காளியின் சிவந்து தொங்கும் நாக்கு மனதுக்குள் அசைந்தது. அவள் தலையில் இரண்டு கையையும் வைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள்.

விஷயம் கேள்விப்பட்டவர்கள் காளியாயிக்கி நேந்துவிட்ட ஆட்டையே திருடிகிட்டு போயிட்டானுங்களா? என்ன அக்குருமம்., அவனுங்க வௌங்க மாட்டானுங்க.. ரத்த ரத்தமா கக்கி சாவானுங்க.. பேதியில போயிடுவானுங்க.. அவன் குடும்பம் அழிஞ்சி கட்ட மண்ணா போயிரும்.. லட்சுமி நீ வேண்ணா பாரு இன்னும் நாளு நாளையில அவனுங்க அழிஞ்சி போயிட்டானுங்கன்னு உனக்கு சேதி வரும்.. கண்டிப்பா நடக்கும் பாரேன்.. நம்ம ஊரு காளியாயிக்கி அவ்வளவு சத்தி தெரியுமா? சும்மா அழுதுகிட்டே ஒக்காந்திருக்காம போயி போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடு என துரத்திவிட்டார்கள்.

லட்சுமி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போனதே இல்லை என்றாலும் ஒருவேளை ஆடு திருடனவன எங்கியாவது பாத்து கண்டுபிடிச்சி வச்சிருந்தாலும் வச்சிருப்பாங்க என்ற நினைப்பில் போனாள்.

ஸ்டேஷன் சுற்றுச்சுவர் அருகே இருந்த சீமை வாதனா மரத்தடியில் பேந்த பேந்த விழித்தபடி நின்றுகொண்டிருந்தாள். மரத்தில் க்விக் க்விக் என ஏதோ ஒரு குருவி கத்திக் கொண்டிருந்தது.

நல்ல குண்டாக இருந்த போலீஸ்காரர் ஒருவர் இந்தாம்மா உனக்கு என்ன வேணும் என ஸ்டேஷன் நுழைவாயில் அருகே நின்று கொண்டு சத்தம் போட்டார். லட்சுமி உள்ளே போய் விசயத்தை சொன்னாள்.

எத்தனை ஆடு?

ஒரு ஆடுதாங்க, சாமிக்கு வேண்டி விட்டது.

ஆட்ட எங்க கட்டியிருந்த?

வீட்டுக்கு வெளியில தாங்க

தெருவுல

….

ஏம்மா நீயெல்லாம் ஆடு வளக்கலயின்னு யாரு அழுதா? தெருவுல கட்டி வெச்சிகிட்டு ஆடு வளக்கறது மாடு வளக்கறது அப்புறம் காணாம போயிடுச்சின்னு வந்து நிக்கறது. ஏம்மா இதாம்மா எங்க வேல? அந்த ஆடு இன்னமா இருக்கும் அது இந்நேரம் எத்தன வூட்டு மசாலாவுல கொதிக்கிதோ போம்மா போயி உருப்பிடியா எதாவது வேலை இருந்தா பாரு என்றார்.

லட்சுமிக்கு அழுகையாய் வந்தது.

அப்போது இன்னொரு போலீஸ்காரர் வந்து சார் திருட்டு போன மளிகை கடையில பத்து நாளா சந்தேகப்படறாப்ல நடமாடிகிட்டிருந்தவங்களோட வீடியோவ சிசிடிவியில இருந்து எடுத்து வச்சிருக்காங்கலாம் என்றார்.

சரி நான் போய் பாத்துட்டு வர்றேன் என கிளம்பியவர் லட்சுமியை மீண்டும் திரும்பிப் பார்த்து போம்மா போம்மா என சொல்லியபடியே வெளியேறிச் சென்றார்.

பகலில் வெயில் அதிகமாக இருந்ததால் மேகலா சாயந்திரத்திற்கு மேல்தான் எல்லா கடைகளுக்கும் தண்ணீர் எடுத்தாள். இந்த திருட்டுகளுக்குப் பின்னால் போலீசார் ரோந்து அதிகமாய் இருந்தது. கடைகளை நேரமாக மூடச்சொல்லி சத்தம் போட்டார்கள்.

தண்ணீர் எடுக்கும் மேகலாவை பிரம்பைக் காட்டி மிரட்டினார் பைக்கில் வந்த போலீஸ்காரர்.

இரண்டு நாட்கள் கழித்து அவர் ஏம்மா சொன்னா கேக்க மாட்டியா? காலையில தண்ணி எடுக்கலாமில்ல என பரிவோடு கேட்டார். காலையில பிள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பனுங்க. அப்புறம் வெயிலு வந்துருது அதனாலதாங்க.

உங்க ஊடு எங்க இருக்குது,

எதுக்குங்க

சும்மாதான் கேட்டேன் பத்திரமா போ என்றுவிட்டுப் போனார்.

மேகலாவுக்கு யோசனையாக இருந்தது. இந்த போலீஸ்காரன் எதுக்கு இப்பிடி மோப்பம் பிடிச்சிகிட்டு அலையறான். அவருக்கு தெரிஞ்சா என்னையில்ல போட்டு மிதிப்பாரு என யோசித்தாள். அவள் வீட்டுக்காரன் ராசு சின்ன சரக்கு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அதில் ஒருமுறை பன்றிகளை ஏற்றிக் கொண்டு போக மற்ற வாடகைகள் நின்று போய்விட்டன. சந்தையில் பன்றிக்கறி போடுபவர்கள் ரெகுலராக அவன் வண்டியை வாடகைக்குப் பேசுவதால் அவனும் சரி என்று விட்டுவிட்டான். இதனால் அவன் பெயர் பன்னி வண்டி ராசு என்றாகி கடைசியில் பன்னி வண்டி என்று நிற்கிறது (அக்கம்பக்கத்தில் அவனை பன்னி ராசு அல்லது பன்னி என்றுதான் அழைக்கிறார்கள்)

பன்னி ராசுவும் குடிகாரன்தான். குடித்துவிட்டு வந்து குத்தி கொன்னுடுவேன் கொடலை உருவிப்புடுவேன் என பயங்கரமாய் கத்துவான். உண்மையில் மிகுந்த பயந்த சுபாவம் உடைய அவன் இதுவரை யாரையும் ஒரு அறை கூட விட்டதில்லை. அவன் அடிக்கும் ஒரே ஒரு ஜீவன் மேகலா. அவனுக்கு விசயம் தெரிந்தால் தண்ணி எடுக்க வேண்டாம் என சொல்ல மாட்டான். ஆனால் இன்னும் நாலு மிதிகள் சேர்த்து விழுவது உறுதி.

என்ன செய்யலாம் என யோசித்தபடி டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் இரவு பதினொரு மணி. தூக்கம் வரவில்லை. யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என யோசித்த மேகலாவுக்கு போலீஸ்காரரின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. கதவைத் திறக்கப் போகும் முன் ராசுவைப் பார்த்தாள். அவனும் அவன் பக்கத்தில் மகள் பவானியும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

கதவைத் திறந்ததும் ஒரு பையனும் பெண்ணும் நின்றார்கள். அவன் அவள் அண்ணன் மகன் வேலு. என்னடா இது இந்த நேரத்தில உள்ள வா என இருவரையும் உள்ளே அழைத்தாள். அத்தை இந்தப் பொண்ணு பேரு கரிஷ்மா நாங்க ரொம்ப நாளா காதலிக்கிறோம். உங்க அண்ணனப் பத்திதான்  உனக்குத் தெரியுமே. அவரு எங்கே எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கப் போறாரு. அதான் கூட்டிகிட்டு வந்துட்டேன் என்றான். அவன் கையில் சிறிய மஞ்சள் பை ஒன்று மட்டும் இருந்தது.

மேகலாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அது சரிடா கண்ணு அதுக்குன்னு இந்த நேரத்தில இங்க வந்தா நான் என்ன பண்ணுவேன் என்றாள்.

இன்னைக்கி ராத்திரி மட்டும் இருந்துட்டு காலையில போறோம் என்றான் வேலு. மேகலா அவர்களுக்கு படுக்கையை தயார் செய்தாள். சின்ன வீடு. ஒரே அறை. மேகலா சங்கடமாய் அவனை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அவர்கள் இருவரும் அமைதியாய் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் இருள் பிரியும் முன்பே இருவரும் எழுந்து அவளை எழுப்பி சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டதால் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

மேகலா சமையல் வேலையை ஆரம்பித்துவிட்டு பவானியை எழுப்பி குளிக்க வைத்து பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். நேற்றிரவு அவளிடம் பேசிக் கொண்டிருந்த போலீஸ்காரர் தெருவில் வழி விசாரித்துக் கொண்டே வீட்டைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார்.

வந்தவர் மேகலாவிடம் நேத்து ராத்திரி உங்க வீட்டுக்கு யாரு வந்தாங்க என்றார்.

ராசு பதறி அடித்துக் கொண்டு வந்து இங்க யாரும் வரலையே ஏங்க சார் ஏங்க சார் என்றான்.

யாரும் வரலையா என போலீஸ்காரர் அவனை கூர்ந்து பார்த்தார். இல்லீங்க எங்க அண்ணம் பையன் வந்தான் என்றாள் மேகலா திக்கித் திணறிக் கொண்டு.

கூட யாரு வந்தாங்க?

கூட ஒரு பொண்ணு

அவங்க நகை எதுவும் வச்சிருந்தாங்களா?

தெரியலைங்க?

உன் அண்ணன் பையன் பத்து பவுன் நகையோட ஒரு பொண்ண கூட்டிகிட்டு இங்கதான் வந்திருக்கான். வா ஸ்டேஷனுக்கு என ராசுவைப் பார்த்து அதட்டினார்.

சார் சார் அவங்க காலையில எழுந்து போயிட்டாங்க சார். அவங்க வந்ததே இவுருக்கு தெரியாது. எங்கள விட்ருங்க சார் என்று மேகலா அழுதாள்.

ஓ ராத்திரியில யாரும் வந்தா கூட உன் வீட்டுக்காரனுக்கு தெரியாதா என ஒரு மாதிரியாக அவர் அவளைப் பார்த்துவிட்டு ராசுவை கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

அண்ணன் வீடு டவுனில் இருக்கிறது. அரிசி வியாபாரம் செய்கிறார். நல்ல வசதி. அண்ணி ராங்கிக்காரி. மேகலா குடும்பத்தை வீட்டுப் பக்கமே அண்டவிடமாட்டாள். அவள்தான் இவர்கள் மீது கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தாள்.

மறுநாள் இரவு தண்ணீர் எடுத்துவிட்டு வந்தவளை போலீஸ்காரர் மறித்து, பயப்படாத உன் வீட்டுக்காரனுக்கு அடி கிடி ஒண்ணும் இல்ல. பையன் கிடச்சதும் வெளிய வந்துருவான். நீதான் ஒன்னும் கண்டுக்க மாட்டீங்கற என்றுவிட்டுப் போனார்.

அன்று வெள்ளிக்கிழமை மதியத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது என்றாலும் மாலையில் திடீரென மழைக்காற்று வீசியது. அன்று அமாவாசையும் கூட என்பதால் சாலையிலும், பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது- டீக்கடைகளில் சாயந்திர நேர பலகாரங்களை தயாரிப்பதற்கான வேலைகள் துவங்கின. சாப்பாடு முடிந்து இரவு வியாபாரத்திற்கு பரோட்டா தயார் செய்வதற்காக ஓட்டல்களில் மாஸ்டர்கள் மாவு பிசைந்து கொண்டிருந்தனர்.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்வாங்கியிருந்த காளி கோவிலில் அமாவாசை மெரமனைக்காக??? சப்பரத்தில் பூ அலங்காரம் நடந்து கொண்டிருந்தது-

பூசாரி பச்சரிசி நிவேதனத்தை தயார் செய்துவிட்டு சுவாமிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். தூரத்தில் எங்கோ மழை பெய்து காற்றில் மண் வாசம் வீசியது.

பெண்கள் பூக்கூடைகளுடன் கோவிலுக்கு வரத் துவங்கினர். மழை வரும்போல இருக்குது. ஆத்தா காளியம்மா மழைய குடு தாயி என, வயதான பெண்கள், காளியைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

இயந்திர கதியில் வேலைகள் நடக்க அரை மணிநேரத்தில் பூஜை முடிந்தது. பூசாரி அனைவருக்கும் தீர்த்தம் தெளித்து திருநீறு கொடுத்தார்.

கவரிங் நகைகளை வாடகைக்கு விடும் சாந்தியம்மா மீது அருள் வந்து இறங்கியது. உடலையும் கைகளையும் விநோதமாக முறுக்கிக் கொண்டார்.

அடேய் இந்த ஊரில என்னோட ஆட்டை ஒருத்தன் திருடிகிட்டுப் போய் வெட்டி வித்துட்டான்டா அடேய் என அலறிக் கொண்டு பற்களை நெரித்தார்.

ஆத்தா அவங்கள நீதான் தண்டிக்கணும் என்றாள் லட்சுமி

அவன நான் பாத்துக்கறேன் இன்னும் எண்ணி பத்தே நாள்ல இந்த ஊர்  ஏரியில அவன் புழு புழுத்துக் கிடப்பான். நீ கவலைப்படாத உன்னை நான் காபந்து பண்றேன். கனி கொண்டு வந்திருக்கியா என்றார்.

லட்சுமி பவ்யமாய் இந்தாங்க சாமி என்று எலுமிச்சம் பழத்தை அவர் கையில் கொடுத்தாள். சாந்தி அதை நெற்றி அருகே ஒரு நிமிடம் வைத்து ஆடிவிட்டு இந்தா வீட்ல கொண்டு போயி வெய்யி என்றார்.

கனகா, சாமீ திருட்டுத் தெள்ளவாரிப் பசங்க… சொல்லும்போதே அவள் நாக்கு குழறியது என் பணத்தையெல்லாம் புடுங்கிகிட்டு போயிட்டாங்க ஆத்தா நான் அதை நம்பித்தானே இருக்கேன். இப்ப வேவாரத்துக்கு காசில்லாம பிச்ச எடுக்கறனே உனக்கு தெரியலையா என் வயத்துல நீ அடிக்கலாமா?

அடியேய் உன்ன எங்கோவில்ல வந்து வௌக்கு போடச் சொன்னனே போட்டியா?

கனகா கண்ணீர் விட்டுக் கொண்டு கை கூப்பி நின்றாள். கவலப்படாத இன்னும் பத்து நாளையில அவனுங்க இங்க வருவானுங்க உன் கண்ணுலயே தெம்படுவாங்க. அவனுங்க கிட்ட இருந்து நீ பணத்த வாங்கிக்க.

அம்மா தாயே போலீஸ்காரங்க எம்புருசன புடுச்சிகிட்டுப் போயிட்டாங்கம்மா. எங்களுக்கு உன்னவிட்டா யாரு கதி அவரைக் காப்பாத்திக் குடும்மா என மேகலா வணங்கி நின்றாள்

இந்தாடீ.. நீ இங்க நிக்காத.. உன் மேல வல்லூறோட நிழல் விழுது. அதில இருந்து நீ தப்ப முடியாது என்றபடியே சாந்தி மூர்ச்சித்து விழுந்தாள்.

அடுத்து வாக்கு கேட்க காத்திருந்த பெண்கள் கனமாய் இடி இடிக்கும் சத்தம் கேட்டு மழை வருவதற்குள் வீட்டுக்குப் போகலாம் என வேக வேகமாய் கோவிலை விட்டு வெளியேறினார்கள்.

  • குமாரநந்தன் – இவரது சொந்த ஊர் சேலம். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் – நகரப் பாடகன், பூமியெங்கும் பூரணியின் நிழல் ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – kumaarananthan@gmail.com
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular