- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
மனிதன் என்கிற சமூக உயிரிக்கு இருவித இருப்பு நிலைகள் உண்டு. ஒன்று, வரலாற்றுக்கு முந்தைய கால இருப்பு, இரண்டு வரலாற்றுக்கால இருப்பு. முந்தையது அறிவியலுக்கு பாத்தியதைப்பட்டது. அங்கே நமக்கு வேலை இல்லை.
ஒரு வசதிக்காக வரலாற்றுக்கு முந்தைய மனிதனை X மனிதன் என்றும் பிந்தைய மனிதனை Y மனிதன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
வரலாற்றுக்கால இருப்பிற்குப் பின்பு மனிதகுலம் அதனை உரசிப்பார்த்துக் கொள்ள ஒரு உரைகல்லாகவும், மாற்றங்களை, உள்ளோடும் முரண்களை சேமித்து வைக்கும் காப்பகமாகவும், அதிகாரம் உபயோகப் படுத்திய பழம்பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கும் அருங்காட்சியகமாகவும் வரலாறு விளங்குகிறது. மனிதகுலத்தின் அனைத்து வளர்ச்சிகளையும் வரலாறாக மாற்றுவது, வரலாற்றோடு ஒப்பிடுவது அதில் இடம்பிடிக்க அதிகாரத்தைப் பயன்படுத்துவது, வரலாற்றை திருத்துவது, அதை மறைப்பது அல்லது அழிப்பது இவையும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. மனிதனுக்கு அவன் இருப்பு எவ்வளவு சிக்கலுக்கு உரியதோ அவ்வளவு சிக்கலுக்கு உரியதாக வரலாறும் உள்ளது. ஆக மனித உயிரிக்கு இரு வித சிக்கல்கள், ஒன்று இருத்தலியல் சிக்கல் இன்னொன்று வரலாற்றியல் சிக்கல். ஒருவேளை சமூகங்களின் இருத்தலியல் சிக்கல்களின் பூதவடிவத் தோற்றம்தான் வரலாறாக இருக்கக் கூடும்.
வரலாறு என்கிற கருவி உருவாக்கப்பட்ட பின்பு அனைத்தும் வரலாற்றுக்கு உட்பட்டதாக மாறிவிடுகிறது. அறிவியலின் வரலாறு, மதங்களின் வரலாறு, கணிதத்தின் வரலாறு, கடவுள்களின் வரலாறு உட்பட ஏறக்குறைய அனைத்து அறிவுசார் துறைகளின் பிறப்பு-வளர்ப்பு-இறப்பை பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் அலுவலகமாக வரலாறு நிறுவப்பட்டுள்ளது.
வரலாறு ஒரு தத்துவப் பிரச்சனையும் கூட. காந்தி, வரலாறு இல்லாத தேசம்தான் மகிழ்ச்சியாக இருக்கும் என சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு ஆத்மீக தேசம் ஏதேன் தோட்டத்தில் அமைந்தால்தான் உண்டு. வரலாறு செத்துவிட்டது என ஃபிரான்ஸிஸ் ஃபுகோயாமா அறிவிக்கிறார். (ஐரோப்பியர்கள் சேகண்டி அடிப்பதில் எல்லோரையும் முந்திக்கொள்வார்கள் – நீட்ஷே, கடவுள் செத்துவிட்டார் எனவும், ரொலாண்ட் பார்த் ஆசிரியர் செத்துவிட்டார் எனவும் கடவுளும், ஆசிரியரும் இறந்து போனதை ”அறிந்து” தெரிவித்தவர்கள்.
இதற்கெல்லாம் மேலாக வரலாறு அதிகாரத்தின் கருவி. அதற்குத் தேவையான சகல கட்டுமானப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் வரலாறே வழங்குகிறது.
அதிகாரப்பூர்வ வரலாறு எழதுதல் தொடர்புடையது. அதன் துவக்கமே எழுத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இந்த எழுதுதல் என்பதை வெறுமனே பதித்தல் (registering) என அர்த்தப்படுத்த முடியாது. நிகழ்வொன்றை பதிவு செய்யப் போகும் வரலாற்றாளர் தேர்ந்தெடுப்புடன் அதனை செய்வதற்கான சாத்தியமும் உண்டு. நம்பிக்கையான வரலாறு, நம்பகமற்ற வரலாறு என இரு பரிமாணங்களும் வரலாற்றுக்கு உண்டு. இங்கே அறிவியல் பூர்வமான அல்லது தர்க்க பூர்வமான கருவிகள் மூலம் நம்பகத்தன்மைய சோதிப்பதும் நடக்கிறது. அதிகாரத்தோடு அதிகம் தொடர்புடையது என்பதாலும் அதன் முதன்மையான கருவிகளுல் ஒன்று என்பதாலும் கண்ணாடிப் பொருளின் கவனத்துடன் கையாளப்பட வேண்டியிருக்கிறது. இது y வரலாற்றின் குணாதியதிசயங்கள்.
எழுதப்பட்டவை தாண்டியும் ஒரு வரலாறு உண்டு. அது சொல் மற்றும் நிகழ்த்து (oral and performing). மொழிப் பயன்பாடு, பண்பாட்டுச் செயல்பாடுகள், கதைகள், புராண இதிகாசங்களில் மறைந்தும் தெளிந்தும் வரலாறு கிடைக்கிறது. சாதாரண சொல்வழக்குப் பிரயோகமான “அவன் பெரிய எம்டன்” என்பதில் ஒரு வரலாற்றுச் சம்பவம் மொழியில் பதிகிறது. வரலாற்றை எழுதப்படுவது மற்றும் நிகழ்த்தப்படுவது என பிரித்துக் கொள்ளலாம். இதன் துவக்கம் x காலகட்டத்திலிருந்து துவங்குகிறது.
எழுதப்படும் வரலாற்றுக்கு மூன்று நிபந்தனைகளை நாம் விதிக்கலாம்.
- அதிகாரப்பூர்வம் என்று அது அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்
- கற்பிக்கப்படுகிற ஒன்றாக இருக்க வேண்டும்
- கல்விநிலைய மயப்பட்டதாகவும் (academic) இருப்பது.
சுருங்கச் சொன்னால் நிறுவன மயப்பட்ட வரலாறு எனச் சொல்லலாம்.
நிகழ்த்தப்படும் வரலாற்றுக்கும் மூன்று நிபந்தனைகளை விதிக்கலாம்
- அதிகாரத்தினால் இடம் மறுக்கப்படுதல்
- கற்பிக்கப்படுவதாக இல்லாமல் நிகழ்த்தப்படுதல் மூலம் கடத்துதல்
- தெருக்கள் போன்ற பொது வெளியில் இயங்குதல்
நிகழ்த்து வரலாறும் நிறுவன மயப்பட்டதாக இருக்கிறது.
நிகழ்த்து வரலாறு எழுத்து வரலாற்றிற்கு மூத்தது. X காலகட்ட மனித இருப்பின் சில பதிவுகள் அதில் எஞ்சியிருப்பதை காணக் கூடும். இதை வேறுவிதமாகச் சொன்னால் பின் அரங்க வரலாறு எனலாம்.
சடங்கியல் இந்த பின் அரங்க வரலாற்றின் – அதிகாரப்பூர்வ என்கிற அந்தஸ்து பெறாதவற்றின் அல்லது வரலாறு என்னும் தகுதியைப் பெற முடியால் போனவற்றின் மறுநிகழ்த்துதல் அல்லது நினைவுபடுத்துதல்.
சடங்கியல் தொன்மத்தோடு உறவாடுவது. தொன்மத்தில் வரலாறு ஒளிந்து கிடக்கிறது. தொன்மங்கள் கதைகளாகவும், சடங்குகளாகவும் படியெடுக்கப்படுகின்றன. சடங்குகள் மூலம் அதன் குறியீடுகள் மூலம் சொல்லப்படும் வரலாறு பெரும்பாலும் உள்ளூர்த்தன்மை வாய்ந்தது. அது ஒரு சமூகக் குழுவிற்கோ, குறிப்பிட்ட பிராந்தியப் பரப்பிற்கோ அதன் வரலாற்று நிகழ்வொன்றை மறுகூறல் அல்லது நினைவுபடுத்துதல் செய்வதற்காக நிகழ்த்தப்படுபவை. சன்னதம், பேய்க்கதைகள் போன்றவற்றின் மூலம் உள்ளூர் வரலாறு கடத்தப்படுகிறது. இது பெரும்பாலும் தனிநபர் வாழ்வில் சிறப்பித்து பதிக்க வேண்டிய நிகழ்வை சொல்வதற்காக அல்லது பிராந்திய வரலாற்று அசைவை பதிவு செய்வதற்காகவும் இருக்கலாம்.
கற்பிக்கப் படுவதும், நிகழ்த்தப்படுவதும் மறதிக்கு எதிரான ஞாபகப்படுத்துதல். கேள்விக் குறியின் தூண்டில் கொக்கி எப்படி அதிகாரபூர்வ வரலாறு எனச் சொல்லப்படுபவற்றின் மீது தொங்கிக்கொண்டிருக்கிறதோ அப்படித்தான் நிகழ்த்தப்படும் வரலாற்றின் மீதும். (ஆனால் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நாம் எளிய மக்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என நம்புபவர்கள்). அது ஒரு அளவிற்கு உண்மையும் கூட.
சன்னத நிலை, ஆவியுருத் தோற்றம், சடங்கியல் தருணங்களில் உடல்களின் கூட்டிசைவு போன்றவை கட்டுப்பாடற்ற மனநிலையின் கட்டுப்பாட்டில் நேர்கிறது. சோடியம் பெண்டதால் உபயோகிப்பதின் மூலம் கட்டுப்பாடின்றி பேசுவதின் மூலம் உண்மை, பொய் வேறுபாடின்றி ஒப்புதல் வெளிப்படுவதைப் போலத்தான் இந்த நிகழ்த்து வரலாற்றின் போதிருக்கும் மனநிலை. அது உண்மை, பொய் வேறுபாடின்றியான ஒரு ஒப்பித்தல். இதனால் நிகழ்த்து வரலாற்றின் மீதும் நம்பகத்தன்மையின் தீர்த்தத்தை தெளித்து அதைப் புனிதப்படுத்துவோம்.
பண்பாடு, அரசியல் தளங்களில் இந்த நினைவுகூறல் அவசியமானதாகவும், கற்பிக்கப்படும் வரலாற்றின் நேர்மையை கேள்வி கேட்கவும், ஒளிந்து வெளிப்படும் வரலாற்றை தலைமுறைகளுக்குக் கடத்தவும் பயன்படுகிறது இந்த நிகழ்த்து வரலாறு.
மார்க்ஸ் சொன்னதைப் போல மனித சமூகம் இன்றளவும் இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒடுக்கப்படுவோர், ஒடுக்குவோர். ஒடுக் கப்படுவோரை மீண்டும் X என்றும் ஒடுக்குவோரை Y என்றும் வைத்துக் கொள்வோம். Y Xன் மீது கத்திரிக்கோல்களோடும், துப்பாக்கிகளோடும் வினைபுரியும் போது X அதற்குப் பதிலடியாக சொற்களோடும், கற்களோடும் எதிர்வினை புரிகிறது.
மிலன் குந்த்ரா சொன்னது, அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு எதிரான ஞாபகத்தின் போராட்டம்.
வரலாறும் ஞாபகத்தோடு தொடர்புடையது. ஞாபகத்தினால் கட்டுப்படுத்தப் படுவது. கோணங்கி ஒருமுறை சொன்னார், “நனைவிலி மனத்தில் ஒளிந்திருக்கும் வரலாற்றை மொழி அடுக்குகள் வழி கண்டடைவது” என்று. இங்கே ஞாபகம் என்பது சமூகத்தின் கூட்டு ஞாபகம். கோணங்கி சொன்னது கூட்டு நனைவிலி. மொழி இந்த கூட்டு நனைவிலியை நினைவுபடுத்துகிற கருவியாகவும் உள்ளது. பெயர்சொற்களும் வினைச் சொற்களும் மொழியை நனைவிலி மனத்திலிருந்து பிரித்துவிடுகின்றன.
மனித இரத்தத்தின் சுவையை வரலாற்றின் நாவைத் தவிர அதிகம் அறிந்தவர்கள் யாரும் இல்லை. வரலாற்றைப் பயில்பவர்களுக்கு இயல்பாகவே இரு வாய்ப்புகள் கிடைத்துவிடுகிறது. அதன் மாணவர்களுக்கு இடையேயும் இரு பிரிவுகள் உருவாக்கிவிடுகிற தன்மை வரலாற்றுக்கு உள்ளது.
இந்த இரு பிரிவினரின் செயல்களால் வரலாற்றுக்கு மேலும் இரு குணங்கள் தோன்றுகின்றன. ஒன்று இயங்குநிலை வரலாறு மற்றொன்று தகவல்நிலை வய வரலாறு. உதா. தென் அமெரிக்கா ஸ்பானியர்களின் காலனியாக இருந்தது எனச் சொல்வது தகவல்மய வரலாறு. ஸ்பானியர்கள் இன்கா, மாயன், அஸ்டெக் இனத்தவரை கொன்றழித்தனர் என்பது இயங்குநிலை வரலாறு. அதிகாரம் தகவல்மய வரலாற்றை எழுதுவதிலும், கற்பிப்பதிலும் ஆர்வமாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுபவர்கள் இயங்குநிலை வரலாற்றை வளர்த்து எடுக்கப்படுவார்கள். இந்த இயங்குநிலை வரலாற்றின் உள்ளூர் வடிவம்தான் சடங்கியல், தொன்மம் மற்றும் கதைகள். ஒரு வகையில் ஞாபகப்படுத்துதல்.
அதிகாரத்தின் கருவியோடு இலக்கியத்தோடு என்ன தொடர்பு? வரலாற்றைப் போலவே இலக்கியமும் அனைத்து அறிவுசார் துறைகளையும் தன்னகத்தே உள்வாங்கி அவற்றை விவாதிக்கிறது, refine செய்கிறது, சாத்தியக் கூறுகளை அதிகரிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன? என்பதற்கு நிறைய விளக்கங்கள், ஒவ்வொன்றும் பொருத்தமானதாகவே கூட வழங்கப்படுகின்றன.
இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அடிப்படையானது தரவுகளும் தகவல்களும். இரண்டும் தரவுகளையும் தகவல்களையும் Manipulate செய்வதின் மூலம் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் தேவையைப் பொறுத்து வெளிப்படுத்துகின்றன.
எட்கர் ஆலன் போவின் “Golden Bug” என்கிற கதையின் ஆதார பலமே ஒரே ஒரு தகவல்தான். ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து ‘e’. இதைச் சுற்றி ஒரு தீவு, மூன்று பாத்திரங்கள், கடற்கொள்ளையர்களின். சங்கேத மொழி போன்றவை அமைக்கப்படுகின்றன. இது தரவொன்று இலக்கியமாவதற்கு உதாரணம். நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் மதக் கலவரங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. அதைச் சொல்வதற்கு ஒரு புளிய மரத்தின் கதை தேவைப்படுகிறது.
வரலாறு தரவுகளையும், தகவல்களையும் திருத்தம் செய்கிறதென்றால் இலக்கியம் இவற்றின் துணையோடு வரலாற்றை விசாரணை செய்கிறது.இதுவரையிலும் இலக்கியம் அதிகாரத்திற்கு எதிரானதென்று நம்பப்படுகிறது. இதை உண்மை என நம்பித்தான் வரலாற்றை விசாரணை செய்வதற்கு இலக்கியவாதி முனைகிறான். அப்படி வரலாற்றை இலக்கியமாவதற்கு அவசியப்படுகிற ஒரு வாதத்தையும் பார்க்கலாம்.
இடலோ கால்வினோ தன்னுடைய இலக்கியமும் தத்துவமும் என்கிற கட்டுரையில் தத்துவம் சார்ந்த எழுத்துக்களை எழுதுபவர்கள் இலக்கியப் பிரதியில் அதனை கேள்விக்குட்படுத்தவும் அதன்மூலம் அதனை வளர்த்தெடுக்கவும் முனைய வேண்டும். அப்படிச் செய்கிற போதும் இலக்கியம்தான் பிரதியில் முன்நிற்க வேண்டுமேயன்றி தத்துவம் அல்ல. இக்கருத்தை அவர் சார்த்தரின் ஒவ்வாமை நாவலுக்கான விமர்சனமாகவும் சொல்கிறார். இந்த இடத்தில் தத்துவம் என்பதை வரலாறாக பதிலீடு செய்து பார்த்தால், வரலாற்றை எழுதும் இலக்கியவாதிக்கும் பொருந்துவதாக இருக்கும்.
இதுவரையிலும் சொன்னவற்றின் துணையோடு தாண்டவராயன் கதையை அணுகலாம். HG Wells இன் கால இயந்திரத்தில் ஏறி சமகாலத்திற்கு முன்வழியில் சென்றால் அது அறிவியல் புனைவு, பின்வழியில் சென்றால் அது வரலாறு. தாண்டவராயன் கதை நம்மை ஏற்றிச் செல்வது 18ம் நூற்றாண்டின் கடைசிப் பெட்டிகளுக்கு.
நாம் இருநூற்றாண்டுகளைத் தாண்டிவிட்டோம். அக்காலகட்டத்தை ஏடுகளிலும், இணையத்திலும் ஏற்றியிருக்கிறோம், கற்பிக்கிறோம், கற்கிறோம், பதிகிறோம், உசாவுகிறோம்.
இந்நாவலில் புலப்படும் காலத்திற்கும் நமக்கும் இடையில் சிந்தனைத் துறையில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இலட்சியவாதம், நவீனத்துவம் இப்போது பின் நவீனத்துவமும் கூட தன் மூப்பை எய்திக்கொண்டிருக்கிறது. இந்திய ஆசிய நிலப்பரப்பில் காலனியாதிக்க விரிவாக்க காலத்தில் வைத்து சமகால அரசியல் கருத்தியல்களை தாண்டவராயன் கதை பேசுகிறது.
காலனியாதிக்கத்தை அதன் தத்துவ, இலக்கிய பொருளியல் கூறுகளை விசாரணை செய்வது பின்காலனிய சிந்தனை. இந்நாவல் தமிழின் முதல் பின் காலனிய நாவல். எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியில் காலனிய ஆட்சியாளர்கள் வந்து போவார்களே ஒழிய காலனியம் விசாரிக்கப்படாது.
ஹைதர், திப்புவின் வீழ்ச்சி, கிழக்கிந்திய கம்பெனி தென்னகத்தில் வலுவாக காலுன்றுவதற்கு அடிகோலிய முக்கிய நிகழ்வு. இது பின்புலம், தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக எல்லைக்குட்பட்ட பகுதி நாவலின் பிராந்தியம். இந்த நிலம் கிழக்கிந்தியக் கம்பெனி என்கிற அந்நிய மற்றும் உலகு தழுவிய சக்தியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தின் காலனிய வரலாற்றின் தோற்றுவாயைச் சொல்வதற்கு இங்கே இரு வாய்ப்புகள் பா.வெங்கடேசனுக்கு உண்டு. ஒன்று, இந்த நிலத்தின், மாந்தர்களின் பிராந்திய வாழ்க்கையில் வேற்று நிலத்தவர்களின், இனத்தவர்களின் அசைவு அப்படியே சொல்வது.
மரங்களுக்கிடையில் அமர்ந்து கொண்டு வனத்தில் படரும் பனிப்படலத்தை ஊடுருவி அப்பால் பார்க்க முயலுவதைப் போன்றது இது. இரண்டாவது பனிப்படலத்திற்கு உள்ளே இருந்து கொண்டு மரங்களைப் பார்க்க முயல்வது. அதாவது அந்நிய, வேற்று நிலத்தவர்களின் பார்வையில் இந்தப் பிராந்தியத்தைப் பார்ப்பது. இதில் பா.வெங்கடேசன் தேர்ந்தெடுத்தது சிக்கலானதும், சவாலானதுமான இரண்டாம் வகை. தமிழ்நாவல் வரலாற்றை மனத்தில் கொண்டு பார்த்தால் இந்நாவல் பழக்கமற்ற மலைகளில் மலைஏற்றத்திற்கு முயற்சிப்பது போன்ற சாகச முயற்சி. ஆனால் திட்டமிடப்பட்ட சாகச முயற்சி. தொலைந்து போவதின் மூலம் கண்டடைவதற்கும், திட்டமிடப்பட்ட சாகச முயற்சியில் கண்டடைவதற்குமான வேறுபாடுகளை தெரிந்தேதான் இந்த முயற்சியில் அவர் இறங்கியிருக்க வேண்டும்.
இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் பா.வெவுக்கு ஒரு வசதி கிடைக்கிறது. வேறு வேறு நிலங்களை புவியியல் பிரதேசங்களைப் பேச ஒரு வாய்ப்பு. பனிமூட்டத்திற்கு அப்பால் இருந்து கொண்டு வனத்தைப் பார்ப்பதும், வனத்திற்குள்ளிருந்து பனிப்படலத்தைப் பார்ப்பதும் குழப்பமானது. இந்த பனிமூட்டத்தைப் பற்றிப் பேசுகிற நாவல்தான் தாண்டவராயன் கதை. பார்வைக் குழப்பத்திற்குக் காரணமான காரணிகளைப் பற்றிப் பேசுகிறது.
பா.வெங்கடேசன் பயணம் போக இரு நிலங்கள் இருக்கின்றன. நிலன் என்பது புவியியல் அர்த்தத்தில் அல்ல. நாவலின் நிலம் என்பது நிலம் பற்றிய கருத்து. நிலம் என வழங்கப்படுகிற ஒரு கருத்தைக் குறித்து இந்நாவல் பேசுகிறது. நிலம் என்கிற கருத்து எவ்வாறு உருவாகிறது? அதற்கு பங்களிக்கிற காரணிகள் எவை? இந்த நிலமென்கிற கருத்தினை உருவாக்கி அளிக்கிற அரசியல், தத்துவ கலாச்சாரத் தோரணத்தில் எந்தெந்த மரத்தின் இலைகள் தொங்குகின்றன எனக் காட்டுவதே இந்நாவல்.
ட்ரிஸ்ட்ராம் மூன்று நிலங்களில் அசைகிற வாய்ப்பைப் பெற்றவன். முதல் நிலம் இங்கிலாந்து, இரண்டாவது பாரிஸ் மூன்றாவது தென்னகம். 1790களின் இங்கிலாந்து மற்றைய ஐரோப்பிய நாடுகளை விடவும் அரசியல், பொருளியல் தளங்களில் முன்னேறிய நாடு. பாரிஸ் ஐரோப்பாவின் பல புரட்சிகளுக்கு மையம். இங்கிலாந்து ஐரோப்பாவில் இருந்தாலும் கூட அது வேறு நிலமாகத்தான் இருந்தது.
நாவலில் இங்கிலாந்தின் பிரதமர் தோன்றுகிறார். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. ஒப்பீட்டளவில் அமைதியான (ஆனால் உள்புகைகிற) நிலத்திலிருந்து கொந்தளிப்பான நிலத்தின் அசைவுகளை காட்சியுற்று, அந்நியமான நிலத்திற்கு வருகிறான் ட்ரிஸ்ட்ராம்.
இங்கிலாந்தின் பிரதமர் ஜனநாயக அமைப்பின் பிரதிநிதி. பாரிஸ் புரட்சியாளர்கள் ஏனைய ஐரோப்பாவின் அராஜகவாத புரட்சிகர பிரதிநிதிகள். வனங்களில் சிறை பிடிக்கப்பட்ட மக்களும், கிழக்கிந்தியப் படையினரால் தோற்கடிக்கப்பட்ட ஹைதர் மற்றும் திப்பு காலனிய நிலங்களின் பிரதிநிதிகள். வரலாற்றை முன்பே சொன்னது போல பிரதிகளின் வழியே அறிய முடியும். அதற்கு மிகுந்த உழைப்பு தேவை. அதைவிடவும் முக்கியமாக வரலாற்றுத் தகவல்களை எப்படி நாவலின் உரையாடலுக்குள் பொருத்துவது என்பது. தாண்டவராயன் கதையில் இலக்கிய மாணவர்களுக்கான முன்மாதிரி கிடைக்கிறது.
திப்பு கம்பெனிக்கு எதிராகப் போரிட ஃப்ரெஞ்சுக் காரர்களிடம் உதவி கேட்டது வரலாறு. அவர் பிரதிநிதகளும் ஃபிரான்ஸ் போனதாகக் கூட தகவல் உண்டு. இந்த வரலாற்றை பா.வெ நாவலை ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்திற்கு நகர்த்திச் செல்ல பயன்படுத்திக் கொள்கிறார்.
இந்த நிலம் என்கிற கருத்து உடல் என்கிற கருத்தின் பேருரு. நிலத்தில் நேர்கிற அசைவுகள் உடல் புலத்திலும் நேர்கின்றன. எப்படி நிலம் ஒரு வெளியே அப்படித்தான் உடலும் ஒரு வெளி. நெடுங்காலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் பெண் உடல். ட்ரிஸ்ட்ராம் எலனாரின் உடலை சாபவனத்தில் வைத்து ஆக்ரமிக்கிறான். புணர்ச்சி என்பதே இரண்டு உடல்களின் ஆக்கிரமிப்பு போட்டிதான் மேலும் அந்தப் போட்டியில் ஆண் ஒரு காலனியாதிக்கக்காரனைப் போலத்தான் செயலாற்றுகிறான். பெண் அவள் உடலை அந்த மண்ணின் குணங்களோடும் தேவைகளோடும் பேணுகிறாள். அதனோடு இயங்குகிறாள், தொடர் உறவைப் பேணுகிறாள். ஆண் அவற்றை தனது ஆக்ரமிப்பின் மூலம் சிதைக்கிறான். ஆண் பெண் உடலை புணர்ச்சியினாலும் ஆண் உடலை போரினாலும் ஆக்ரமிப்பு செய்கிறான்.
எலனாரின் உடல் புறக்கணிக்கப்பட்ட இங்கிலாந்தின் கிராமங்கள் என்றால் கெங்கம்மாவின் உடல் காலனியச் சக்திகளால் ஆக்ரமிக்கப்பட்ட உடல்.
One is serving a national cause and the other is serving the colonial cause.
தாண்டவராயன் கதை இந்த ஆக்ரமிப்பின் உள்ளோட்டங்களை கண் முன் விரிக்கிறது. ஆண்மைமய மேற்கின் அரசியல் பொருளியல் சக்திகள் பெண்மைமய கிழக்கை ஆக்ரமிப்பது, ஆண்மைமய எழுதப்பட்ட, கற்பிக்கப்படுகிற, தகவல்மய வரலாற்றை பிரதி செய்தால், பெண்மைமய வரலாறு சொல்கதை, சடங்கியல், தொன்மங்கள் வழி நிகழ்த்து வரலாற்றை மறுகூறுதல் செய்கிறது. தாண்டவராயன் கதை உடல் போன்ற நுண்ம வெளிகளில் தொழிற்படுகிற அரசியலை நிலம் போன்ற பெரு வெளிகளோடு பொருத்தி அதிலும் மேற்கு கிழக்கு பிளவுகளோடு இரு கண்டங்களின் சுமையை அட்லஸைப் போல தூக்கிச் சுமந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. படைப்பு என்பது ஒரு வலி. பெரும்படைப்பு என்பது கிட்டத்தட்ட அறுவைசிகிச்சை வலியை தரக்கூடியது. உடலைப் பிளந்து, உறுப்புகளை கடந்து நரம்புப் பின்னல்களை தோற்றப்படுத்துகிற தாண்டவராயன் கதை தமிழில் ஒரு இலக்கியப் பிரதிக்கு செய்யப்பட்ட உழைப்பின் புதிய காற்றாலையாகவும், இனிமேல் எழுதவரும் டான் குவிக்ஸாட்டுகள் மோதிப் பார்க்க முனைய வைப்பதாகவும் இருக்கும்.
எலனார் சாபக் காட்டில் புணர்வதால் அந்தகமும், பாரிஸ் புறநகர் பிணவறையில் புணர்வதால் போலிக் கர்ப்பமும் அடைகிறாள். இதில் அந்தகம் இங்கிலாந்தின் புறக்கணிப்பு அரசியலையும், பாரிஸ்புரட்சி கொல்லப்பட்ட பிணங்களின் மீது தனது வெற்றியைக் கொண்டாடுவதை அதன் முடிவுகளற்ற (result less) அராஜகவாதத்தின் சிக்கல்கள் வெளிப்படாமல் பெருத்துக்கொண்டே போகும் போலிக் கர்ப்பமாக காட்சிப்படுகிறது. இந்த இரண்டு நோய்மைகளுக்கும் அதாவது புறக்கணிப்பு அரசியலுக்கும், வன்முறைப் புரட்சியின் அவசரக் கோலத்தின் குறைபாடுகளுக்கும் மாற்றாக அதாவது எலனாரின் நோய்மைகளுக்கு தீர்வு கிழக்கே இன்னொரு நிலத்தின் அரசியலும் கருத்தியலும்.
ஆனால் இந்த நிலம் எப்படி இருக்கிறது? சாதிகளால் பிளவுண்டும், ஏழ்மை (வறுமை அல்ல இதன் பிரச்சனை என்கிறது நாவல்), விளிம்புநிலை மக்கள் அரசாலும் அதன் அசைவுகளாலும் ஒடுக்கப்படுதல், உழைப்புச் சுரண்டலோடு இருக்கிறது. இந்த நிலத்தை பலரும் ஆக்ரமித்துப் புணர்வது கெங்கம்மாவின் உடலாக மாறுகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு மேற்கின் தீர்வுகளால் தீர்வு கிடைக்குமா? மேலும் அப்படி முனைந்தால் அதன் பொருத்தப்பாடு? இவற்றை விரிவாக விவாதிக்கிறது தாண்டவராயன் கதை.
இந்த நிலத்தின் ஒடுக்கப்படுவோர் தொன்மங்களில் ஒளிந்திருந்து தங்கள் வரலாற்றைக் கடத்துகின்றனர். உலகத்தின் எப்பகுதி இலக்கியவாதிகளுக்கும் கையாள்வதற்கு ஒரே மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும், இந்தியாவின் இலக்கியவாதிகள் பிரதிசெய்ய கூடுதலாகவும் தொடர்ந்து மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகவும் இருக்கும் சிக்கல் சாதி. ட்ரிஸ்ட்ராம் பல சாதியனரோடு பழகினாலும் அவன் நெருக்கமாக உணர்வது கெங்கம்மாவோடு. ஆனால் என்னால் இதனை ஒரு குறியீடாகப் பார்க்க முடியவில்லை.
அவன் தாண்டவராயன் மற்றும் கோணய்யனின் கதையைத் தெரிந்து கொள்கிறான். இதுதான் இந்நிலத்தின் ஒடுக்கப்பட்டோர் வரலாறு எழுதும் முறை. அதனை திருவிழாவாக, சன்னத மனநிலையில், உடல்களின் கூட்டிசைவோடு நிகழ்த்திக் காட்டுதல் மூலம் ஒடுக்கப்பட்டோர் வரலாறு தலைமுறைகளுக்கு நினைவூட்டப்படுகிறது.
போர்களையும், புரட்சிகளையும் உடல்களின் எழுச்சி என்கிறான் ட்ரிஸ்ட்ராம். சடங்கியல் நிகழ்த்துகளும், திருவிழாக்கால உடல்களின் கூட்டிசைவும் கூட உடல்களின் எழுச்சிதான்.
ஐரோப்பவிற்கு வர்க்க அரசியல் சுலபமாகப் பொருந்துகிற அளவிற்கு இந்த நிலத்திற்குப் பொருந்த முடியாமல் நிற்க பெருங்காரணங்களில் ஒன்று சாதியம். நிலத்தின் உள்முரண்களோடுதான் ஒரு கருத்தியலும் கட்டமைக்கப்பட வேண்டும். வேறொரு நிலத்தின் அரசியல் கருத்தியலை அப்படியே இங்கே பொருத்த முனைந்தால் அதன் சிக்கல்கள் என்னவாக இருக்கும் என இந்நாவல் கோடிட்டுக் காண்பிக்கிறது.
இந்த விவாதமும் முழு முடிவாக முன்வைக்கப்படாமல் இந்த இடத்தோடு நின்றுவிடுகிறது. இலக்கியப் பிரதியிலிருந்து ஒரு போதும் தீர்வுகள் கிடைக்காது என்பதற்கு இந்த நாவலும் உதாரணம். மாறாக ஒரு இலக்கியப் பிரதி பல தீர்வுகளைச் சுட்டுவதாகவும், அல்லது அப்படி பல தீர்வுகளுக்கான சாத்தியங்கள் இருப்பதனை அவதானிப்பதாகவும், மேலும் தீர்வுகளை, சந்தேகக் கண்ணின் விஷேசப் பார்வையால் பார்ப்பதாகவும் இருக்கிறதுமஇலக்கியப் பிரதி ஒருபோதும் கருத்தியல்களின் manifesto வாக இருக்க முடியாது.
மிலன் குந்த்ரா “ஒரு இலக்கியப் பிரதி எந்த அரசியலைச் சார்ந்துள்ளது அல்லது யார் பக்கம் சார்ந்துள்ளது எனக் கேட்பது தவறு என்கிறார். மாறாக அந்தப் பிரதியின் வழி எந்த அரசியல் பேசப்படுகிறது என்று கண்டடைய வேண்டும்” என்கிறார்.தாண்டவராயன் கதையின் அரசியல் மூடுண்ட நிலையில் கிடைக்கிறது. அதை வாசிப்பவர்கள்தான் தோண்டிப்பார்க்க வேண்டும். ஆனால் முன்பே சொன்னது போல பிரதியைல் இலக்கியம்தான் முன்னிற்க வேண்டும். தாண்டவராயன் கதையின் மையத்தை மூடியிருக்கும் இலக்கிய அலங்காரங்கள் நீண்டது.
- நாகாயக் களிம்பு
- கூடுவிட்டு கூடு பாய்தல்
- கண்ணீ
- போலிக்கர்ப்பம் மற்றும் அந்தகம்
- இருட்டுச் சத்திரம்
- காற்றுப்புலி
- நூலகம்
- நீல்வேணியின் பாதை
- துயிலார் வரலாறு இப்படி..
நானும் எனது நண்பர் தூரன் குணாவும் சில மணிநேரங்கள் செலவழித்து இந்த நாவலின் திறவுகோல் நீலவேணியின் பாதைதான் என்பதைக் கண்டு பிடித்தோம்.
தாண்டவராயன் கதை தரவுகளையும், தகவல்களையும் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்.இங்கிலாந்து பிரதமருக்கு வலிப்பு நோய் இருந்தது தகவல். எலனார் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது அவருக்கு வலிப்பு நோய்வர தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். இது தகவலை எப்படி இலக்கியப் பிரதிக்குள் இழைப்பது என்பதற்கு உதாரணம். மேலும் திப்பு சுல்தான் சுய மைதூனம் செய்ய கோழிகளைப் பயன்படுத்துவது வரை விவரிக்கலாம். நாவலில் அங்கங்கே முடிச்சுகள் இடவேண்டியிருக்கிறது. அந்த முடிச்சுகளை அவிழ்க்கத்தான் நாவலில் பயணம் நேர்கிறது. முடிச்சுகளாக தகவல்களை சம்பவங்களில் பயன்படுத்துவது இருக்கிறது.
உலகின் விஷேச பிராந்தியத்தின் கதை என்பதால சாதியம் அதன் அடுக்ககளோடு இடம்பெற வேண்டியிருக்கிறது. அதன் படிநிலைகள் சரியாக ஆவணப்படுத்த வேண்டியிருக்கிறது. தாண்டவராயன் கதையில் நாடோடிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் தொடர்ந்து ஒடுக்கப்படுபவர்களாகவும், சாதி இந்துக்கள் அரசோடும், அதிகாரத்தோடும், ஒடுக்குபபவர்களாகவும், பிராமணர்கள் இவற்றைப் பிரதி செய்பவர்களாகவும் நாவலில் தென்படுகின்றனர். ஆனால் இதே ஒரே பிரச்சனை சாதிகளுக்கான அடிப்படைகளை அமைத்துக் கொடுக்கும் கருத்தியல் பின்னணியை யார் வழங்குவது என்பதை இந்த நாவல் விவாதிக்காமல் விட்டுவிடுகிறது.
மீண்டும் நாம், வரலாற்றை வாசிப்பின் வழி மட்டுமே அறியமுடியும் என்பதை நினைவூட்டிக் கொண்டால் வரலாற்றைப் பிரதி செய்யும் நாவலும் அதன் நிறைகுறைகளோடுதான் இருக்கும். கால எந்திரத்தைக் கூட பிரதியிலிருந்துதான் உற்பத்தி செய்ய முடியும்.
இங்கே அனைத்து சாதிகளின் தோற்றுவாய்க்கும் சொல்வதற்கு தொன்மங்கள் உண்டு. ஒடுக்கப்பட்டோர் சாதிகளுக்கு சொல்ல வன்முறை கலந்த கதைகள் உண்டு. அங்கே தத்துவ விவாதங்கள் இருக்காது. சாதிய முரண்பாடுகளை வெளிக்காட்டுவதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு காத்தவராயன் சிவன் தம்பதிகளின் பிள்ளையாக இருப்பது. இந்த தொன்மக் கதைகளுக்கு சில இலக்கணங்கள் உண்டு.
- சாதிக் குழுக்களின் மூலத்தந்தை ஏதாவதொடு கடவுளாக இருக்க வேண்டும்
- ஒரு காலத்தில் அவர்கள் இந்த நிலத்தை ஆள்பவர்களாகவும் அல்லது அவர்களோடு தொடர்பிலும் இருந்திருக்க வேண்டும்
- ஒடுக்கப்பட்ட சாதிகளின் கடவுள் மேல்சாதிக்கார்களோடு ஏதாவது ஒருவகையில் உடல் தொடர்பு (Physical Contact) அது காதலாகவும் இருக்கலாம் அல்லது சண்டையாகவும் இருக்கலாம், வைத்திருக்க வேண்டும்
- அதனால அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்
- துர்மரணம், வன்கொலையால் நேரும் தியாகத்தால் அவர்கள் வழிபடக்கூடிய இடத்தை அடைந்திருக்க வேண்டும்
நாவலில் சொல்லப்படும் தாண்டவராயனின் கதை இந்த இலக்கணங்களை ஒழுகியே பின்னப்பட்டுள்ளது.
கருத்தியல், அரசியல் சொல்லாடல்கள் அதிகாரத்தின் தொன்மக் கதைகள் என்றால் ஒடுக்கப்பட்டோரின் கதைகள், கருத்தியல், அரசியல் அதிகாரத்திற்கு எதிரான அல்லது மாற்றான அல்லது இணையான சொல்லாடல். நாவலில் சொல்லப்படும் தாண்டவராயனின் கதை இதைச் சரியாகவே செய்கிறது.
பல மரங்களின் இலைகளை பார்வைக்கு இலட்சணமாய் தோரணம் கட்டுகிற வாய்ப்பை இந்த நாவலின் வடிவம் அளிக்கிறது. நாவலின் பயணத்தை கருத்தில் கொண்டு தாண்டவராயன் கதை தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு Global நாவல் எனலாம்.
வரலாற்றை அதன் இயக்கு காரணிகளை விசாரணை செய்வதில் இலக்கியப் பிரதிகளின் வளர்ச்சியில் பல்வேறு சாத்தியக் கூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
- உம்பர்த்தோ ஈகோவின் The Name of the Rose, Baudalino (பாதலினோ), Mysterious flame of Queen Loana மேலும் அவரது சமீபத்திய நாவலான Prague Cemetry வரையிலும் வரலாற்றை வெவ்வேறு வடிவங்களில் விசாரணை செய்வது. இதில் அவரது முதல் நாவலான The Name of the Rose துப்பறியும் கதைப் பாணியில் எழுதப்பட்டது.
- ஓரான் பாமுக்கின் My Name is Redம் அப்படி எழுதப்பட்டது என்றாலும் அது ஓவியக் கலை பற்றின நாவல்.
துப்பறியும் கதைகள் குறித்து உரையாற்றும் போர்ஹேஸ் இந்த வகைமைக்கு அதன் ஒழுங்கிற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார். எட்கர் ஆலன் போதான் துப்பறியும் கதைகள் வகைமைக்கு மூலத்தந்தை. அவர்தான் இந்த உலகிற்கு ஒரு புதிய வாசகனையும் அறிமுகப்படுத்தினார்.
தாண்டவராயனின் கதையில் துப்பறிதல் வந்தாலும், ட்ரிஸ்ட்ராம் அதற்காகப் பணிக்கப்பட்டவன் அல்ல. அவன் சந்தர்ப்பங்களால் துப்பறிய நேர்கிறான். எனவே இந்நாவல் அப்படியொரு வடிவ சாத்தியத்தையும் முயன்று பார்த்திருக்கிறது. கெங்கம்மாவின் வயிற்றில் டிராகன் பச்சை குத்தியிருப்பதை வாசிக்கும் போது நாவல் அதன் மர்மத்திற்கான முதல் துப்பை கூர்ந்து படிக்கும் வாசகனுக்கு அளிக்கிறது.
இவ்வகை நாவல்களை எழுதுவதில் இரு வகை உண்டு. ஒன்று, வரலாற்றுக்கான ஆசிரிய ஸ்தானம் கெடாமல் அதனை மொழிவது. இன்னொன்று வரலாற்றை அதன் இடத்திலிருந்து இறக்கி அதனோடு விளையாடுவது. தாண்டவராயன் கதை இரண்டாவது வகை. முதல் வகைக்கு சமீபத்திய உதாரணம் அஞ்ஞாடி.
எனக்குத் தெரிந்த வரையில் உம்பர்த்தோ ஈகோவை இந்த வடிவத்தின் மூலத்தந்தை எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை ஆனால் இந்த வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர் எனலாம். அவருடைய சமீபத்திய நாவல் கூட 18 மற்றும் 19 நூற்றாண்டு ஐரோப்பிய அரசியல்,கருத்தியல் மோதல்களை விளையாட்டு மனப்பான்மையோடு, ஒரு why not கேள்வியால் அணுகுவது.
தமிழில் இந்த வடிவத்தை முதன் முறையாகப் பயன்படுத்திய நாவல் தாண்டவராயனின் கதை.
இன்னும் தாண்டவராயனின் கதையின் உள்ளறைகளின் பட்டியல், கதைகளைக் குறித்த உரையாடல்கள், நூலகத்தின் ஆவியுருத் தோற்றம், வரிகளுக்கிடையில் அர்த்ததைத் தேடுவது, தரவுகளையும், தகவல்களையும் அரசு எப்படிப் பயன்படுத்தும், ஆண்பெண் உறவுச் சிக்கல்கள் என இன்னும் விடுபட்டுப் போய்விடக்கூடிய சாத்தியங்களுடன் நீள்கிறது.
இதுவரையிலும் வரலாற்றை பிரதான அம்சமாகக் கொண்டு வெளிவந்துள்ள நாவல்களான
- நெடுங்குருதி
- ஆழி சூழ் உலகு
- அஞ்ஞாடி
- புயலிலே ஒரு தோணி
- காவற் கோட்டம்
போன்ற அளவாலும் உள்ளடக்கத்தினாலும் பிரமாண்டங்களாக வாசகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நாவல்களின் பட்டியலில் தாண்டவராயன் கதை இருந்தாலும் இதன் பரப்பாலும், வடிவத்தாலும் மற்ற நாவல்களைவிட விஞ்சியுள்ளதாகச் சொல்ல முடியாவிட்டாலும் தனித்து நிற்கிறது என்பதை சொல்ல வேண்டியுள்ளது.
பட்டியலிடப்பட்ட நாவல்களின் வடிவங்களில் மேலும் மேலும் நாவல்களை எழுத முடியும். ஏனெனில் அவைகளின் வடிவம் வழமையானது. ஆனால் தாண்டவராயனின் கதை இனி எழுதப் புகுபவர்களுக்கும், பா.வெங்கடேசனுக்குமே அளித்திருக்கும் சவால் என்னவென்றால், இந்த வடிவத்தை மறுமுறை பயன்படுத்தினால் அது போலச் செய்தலாக தோற்றம் பெறும்.
தாண்டவராயன் கதை நாவலோடு சில தனிச்சிறப்பான உறவுகள் எனக்குண்டு. ஒன்று இந்த நாவலை ஏழு நாட்களில் படித்து முடித்தது. எனது இரண்டு நாட்கள் சம்பளத்தை பா.வெங்கடேசன் எனக்குத் தரவேண்டியிருக்கும். ஏழு நாட்களில் இரண்டு நாட்கள் நான் அலுவலகத்திற்கு விடுப்பு வேறு.
இந்த நாவலுக்கு ஏற்கனவே ஒரு மதிப்புரையை எழுதியுள்ளது இரண்டாவது.
இந்த ஏற்பாட்டை ஒட்டி மீண்டும் ஒரு மதிப்புரையை லட்சுமி சரவணக்குமார் வழங்கச் சொன்னபோது நான் நாவலின் பிரதி கைவசம் இல்லை. எனது பிரதி மதுரையில் இருக்கிறது. மதிப்புரையை ஞாபகத்திலிருந்து எழுத முனைந்த போது நாவல் எவ்வளவு நெருக்கமாக என்னோடு உறவாடியுள்ளது என்பதை உணர முடிகிறது.
ஒரு பிரதி ஒன்று இன்னொரு பிரதியை உருவாக்குவதற்கான தூண்டுகோலாக இருக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையை வளர்த்தெடுக்க உதவ வேண்டும். தாண்டவராயனின் கதை இந்த இரண்டையும் செய்கிறது. வரலாற்றையும் இலக்கியத்தையும் இணைத்து சிந்திக்க உதவி செய்கிறார் பா.வெ. போர்ஹேஸ் ஒரு புதிய வகைமையை உருவாக்கியதற்காக எட்கர் ஆலன் போவிற்கு நன்றி சொன்னதைப் போல, புதிய வடிவத்தை, புத்திசாலித்தானத்தின் வெள்ளி மின்னல்கள் மின்ன தமிழ் வாசகர்களுக்கு அளித்ததற்காக பா.வெங்கடேசனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
- பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – ஓசுரில் பணியாற்றி வரும் இவர். இதுவரை இரு சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். தொடர்புக்கு – tweet2bala@gmail.com
(தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை)