Tuesday, July 16, 2024
Homesliderவனஸ்பதி

வனஸ்பதி

சந்திரா இரவீந்திரன்

அந்தமற்ற பெருவானம்
அள்ளுண்டு நகரும் முகில்கள்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
கதை சொல்லும் பால்நிலவு
கரை புரண்டு தழுவும் கடலலைகள்
நேசமுடன் மேனி தொடும் ஆசைமழை
ஊர் வாசம் வீசும் காற்று!

மனம் கொள்ளாக் கனவுகள்
மாளா நினைவுகள்…
இன்பமும் துன்பமும் கலந்துருகும்
நெஞ்சிற்குள் மாயவலி..!

காலச்சூரியனைத் தேடி
நீளமாய் நடக்கின்றேன்….

எழுதுவதற்கான சொற்கள் அதற்குமப்பால் எங்கோ தொலைந்து போயின போலிருந்தது.  மனசு மட்டும் அலைந்தபடியே கிடக்கிறது. கட்டற்றுப் பாயும் காலத்தை உதைத்து விட்டு, காந்தக்கல் இழுப்பது போல் பின்வளமாய் இழுபட்டுச் செல்கிறது அது. கனவுகள் மிதந்து திரியுமொரு வெளியில் ஏதோவொரு புள்ளியில் அது சிலிர்ப்போடும் தயக்கத்தோடும் நின்று கொள்கிறது!

   ஒரு வெயிற்காலம். பின்னரொரு பனிக்காலம். சுழன்றடித்துப் புழுதி கிளப்பும் சோழகக்காற்றுக் காலம். எல்லாவற்றையும் கழுவி அடித்துச் செல்ல ஒரு மழைக்காலமென எத்தனையோ காலங்கள் அங்கு வந்து போயின. அளக்கக்கூடிய சந்தோசங்களும் அளவிட முடியாத் துயரங்களும் அவற்றோடு சேர்ந்தே வந்து போயிற்று!

   கண்களை ஒரு கணம் மூடுகிறாள். நெஞ்சு முட்டி, நிலம் முட்டி, வானம் முட்டுமளவிற்கு பேசியவையும் பேச மறந்தவையும் மலைகளெனக் குவிந்து கிடக்கிறது!  அந்தக் காலத்தின் இடுக்குகளை ஒவ்வொன்றாக மெல்ல மெல்லத் தொட்டுப் பார்க்கிறாள். காற்றில் மிதந்து திரியும் அந்தக் கனவுகளின் வெப்பத்தை இப்பொழுதும் அவளால் உயிர்ப்போடு உணர முடிகிறது! திகைப்போடும் பரவசத்தோடும் அசையாது நிற்கிறாள்!

    மெல்லிய காற்று மேனி தொட்டுத் தழுவிச் செல்கிறது. சொல்லாமல் பெய்த மழை பின் சிறு தூறலாகி விடைபெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழைச்சாரல் ஓய்ந்த பின் இலேசான மஞ்சள் வெயிலுடன் கலந்து மினுமினுக்கும் அந்திமாலை, முன்னெப்போதும் இல்லாத அபூர்வ அழகில் குழைந்து கிடந்தது!

   தென்னை மரங்களிலிருந்து கீழே விழுந்து சிதறிக் கிடக்கும் தென்னம்பூக்களும், நெல்லி மரத்திலிருந்து கொத்துக் கொத்தாய் கொட்டுண்டு கிடக்கும் நெல்லிப் பிஞ்சுகளும்; வெண்பட்டு விரித்தது போல் பரவிக்கிடக்கும் பிச்சிப்பூக்களுமாய் மயக்கும் வாசனையை வளவெங்கும் கிளறி விட்டிருந்தன!

  அந்நேரம் கிணற்றில் அள்ளிக் குளிக்கப் பிரியமாக இருக்கும். கையும் உடலும் துறுதுறுக்கும். கிணற்றினுள் மழைநீரும் தென்னம்பூக்களும் கலந்து, குளிர்மை பொங்கிக் கிடக்கும். கிணற்றடியும் தொட்டியும் மழைநீரில் கழுவுண்டு அவற்றின் சலவைக்கற்கள் பளபளக்கும். சுற்றிவர இருக்கும் வேலியும் மரங்களும் புத்தம் புதிதாய் பொலிவு காட்டும்.

  அம்மாவின் பாவாடை ஒன்றைத் தூக்கி, அவள் தன் சிறுமார்புகளை மறைத்து வழுக வழுக முடிந்தபடி, ஓடிச்சென்று கிணற்று நீரை அள்ளியள்ளிக் குளிக்கிறாள்.

   குளிக்கும் போது அங்குமிங்குமவள் கருவண்டுக் கண்கள் சுழலும். திடீரென்று கிணற்றடி வேலிக்கப்பால் நகரும் ஒழுங்கையில் ஒரு தலை மெதுவாக ஊர்ந்து செல்லும். அது விஜயனின் தலையாகத்தான் இருக்கும். வேலைக்கு மனுப்போட்டு விட்டு செய்வதற்கு ஏதுமற்றவன் போல், தன் நீண்ட கழுத்தோடு அந்த ஒழுங்கையால் நடந்து திரிகிறவன் அவன் தான்.

    கிணற்றடிக்கு வடக்குப்புறமுள்ள பெத்தம்மாவின் வீட்டிற்கும் அப்பால் சில பனங்காணிகள். அங்கு தலையைச் சிலுப்பியபடி நெடுநெடுவென வளர்ந்து நிற்கும். ஏராளப் பனைகளில் ஏதோவொரு பனையில், கன்னங்கரேலென்ற வடிவேலுவும், வெள்ளைவெளேரென்ற பாஸ்கரனும் நிச்சயமாய் ஏறியிருப்பார்கள். பனைகளில் தினமும் ஏறியேறியே கவர்ச்சியான உடல்வாளிப்பைப் பெற்றிருக்கும் இவர்கள், மடித்துக் கட்டிய சாரமும், இடுப்பில் வரித்த தோற்பட்டியும், அதில் பொருத்திய மரக்குடுவைக்குள் பாளைக்கத்திகள், தோற்கட்டிகள், பாளைத்தட்டிகள், தொங்கும் முட்டிகள் சகிதம் ஊருக்குள் குறுக்கும் மறுக்குமாய் திரிந்து கொண்டிருப்பவர்கள். வீதியில் எதிர்பாராமல் இருவரையும் காணும் தோறும் கூச்சம் அவளைப் பிடுங்கித் தின்னும். அவள் குளிக்கும் போது கண்டும் காணாதவர்கள் போலிருக்கும் அசகாய சூரர்கள் என்று கள்ளமாய் மனம் எண்ணும்.

   கிணற்றில் அள்ளிய நீரை தலையில் ஊற்றும் முன்னர் அவர்கள் பனைகளில் இருக்கிறார்களா என அவளது கருவண்டுக் கண்கள் சுழன்று சுழன்று பனைகளின் நுனிகளை மேயும். அவர்கள் பனைவட்டுகளிற்குள் அமர்ந்திருந்து பாளை சீவிக்கொண்டிருப்பார்களேயானால், தண்ணீரை அள்ளி சும்மா சும்மா தன் தலையில் ஊற்றியபடியே நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பாள். அவர்கள் பனைகளை விட்டு அகன்ற பின்னரே மிகுதி பல்லவியும் சரணமும்!

   அந்நேரம் பார்த்து கிணற்றடிக்குப் பின்னாலிருக்கும் மதிற்சுவரோடு கூடலாக வளர்ந்து நிற்கும் பப்பாசி மரங்களில் செண்பகங்களும் மைனாக்களும்; வந்து குந்தியிருந்து குறுகுறுவென்று கண்களை வெட்டி வேடிக்கை பார்த்தபடியிருக்கும்.

   கிணற்றிற்குள் துலாவை இறக்கும் போது ஒரு துள்ளல். இலங்கை வானொலியில் மாலை ஒலிபரப்புத் தொடங்க, அப்துல் ஹமீதும், மயில்வாகனம் சர்வானந்தாவும் வந்திருந்து அந்திப்பொழுதை மேலும் கிறங்கடிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள். துலாவை இழுக்கும் ஒவ்வொரு துள்ளலோடும் சேர்ந்து அவள் மனங்கொள்ளாத ஆசைகளும் கற்பனைகளும் காற்றில் பறக்கத் தொடங்கிவிடும்! மனசிற்குள் ஒரு பொன்னூஞ்சல் ஆடத்தொடங்கிவிடும்!

   திடீரென்று கிணற்றுக்குள் தொபீரென்று ஓசை கேட்க, திடுக்குற்று வானத்திலிருந்து பூமியில் விழுந்தது போல் அலமலர்ந்து போய் நிற்பாள்! நெஞ்சிற்குள் படீர் படீரென்று இதயம் எழும்பும் ஒலி பேரிடி போலக் கேட்டுக் கொண்டிருக்கும். நெல்லி மரத்தின் பின்னாலிருந்து தலையை நீட்டி எட்டிப்பார்த்து கேலி செய்யும் சின்னண்ணாவின் முகம் ஒரு பேய் போலத் தோற்றம் காட்டும்;. கோபமும் பயமும் கலந்த வெப்பியாரத்தில் “அம்மா…” என்று அலறுவாள். வீடு வெலவெலத்துப் போகும்!

   ஆசுவாசப்பட்டு சுயத்திற்கு வரும்போது சூரியன் மறைந்து வெகு நேரமாகியிருக்கும். அப்பாச்சி குரல் கொடுப்பா.

   “மோனை… இருண்ட பிறகு பச்சைத் தண்ணியில ஊறாதை. பிறகு வாதம் வந்து விடும்….”

       இவளுக்குச் சிரிப்பு வரும்.

   “இளவரசிகளுக்கு எந்த வருத்தங்களும் வருவதில்லையே…”

      துவாலையால் உடலைத் துவட்டும் போது திரும்ப அவன் வருவான். தன் பேய் முகத்தை நீட்டி, விழிகளை உருட்டி, உதடுகளைப் பிதுக்கி… நையாண்டி பண்ணுகையில் மீண்டும் “அம்மா….” என்று அவள் அலறுவாள்.

   “சனியனே… இங்காலை வாடா. இனி சீமாட்டி… நீ நீராடினது காணும். கெதியா வா…” அதே ஸ்தாயியில் அம்மா கடுப்போடு குரல் கொடுப்பாள்.

   அங்கிருந்து வெளியேறுமுன்  சலவைக்கல் பதித்த கிணற்றடி காய்ந்து விடும். தென்னம்பாத்திகள் நீரால் நிரம்பி வழியும். முற்றத்தில் சிலுசிலுவென்ற குளிர் காற்று வீசத்தொடங்கி விடும். செண்பகங்களும் மைனாக்களும் தொலைதூரம் பறந்து போயிருக்கும். தென்னை மரங்களில் வெளவால்கள் விழுந்தெழும்பிப் போகும். வடிவேலுவும் பாஸ்கரனும் பனைகளை விட்டுப் போய் வெகு நேரமாகியிருக்கும்.

   வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டத் தொடங்க, பெத்தம்மா வீட்டில் தேவார ஒசை கேட்கத் தொடங்கியிருக்கும். ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலில் மாலைப்பூசை மணி ஒலிக்கத் தொடங்கிவிடும்.

வானம் அமைதியாய் கிடக்க, நிலவு தென்னை மரங்களிற்கிடையாய் புதுமொழிகள் பேசத்தொடங்கும்!

  நீராடல் முடிய, மாலைப்படிப்பு தொடங்க முதலில் வேறு கனவு வரும். படிக்கும் போது இன்னுமொரு கனவு வரும்..!

                     -2-

    பின்னர் ஒரு காலம் அது!

   எங்கிருந்தோ வந்து புற்றீசல் போல் அவர்கள் குவிந்திருந்தார்கள். வீதிகள், ஒழுங்கைகள், காணிகள், கட்டாந்தரைகள் என்று எதுவும் மிச்சமில்லை. இண்டு இடுக்கெல்லாம் ஈயாக மொய்த்துக் கிடந்தார்கள்!

   அமைதி தொலைந்திருந்த ஒரு மாலை நேரம் அந்த வீட்டின் பின் வளவுக்குள் கேள்விகளேதுமற்று நுழைந்திருந்தார்கள். அங்கு வரும்போதெல்லாம் ஓசைகளை ஒளித்து வைத்துவிட்டு கள்ளத்தனமாகவே வருகிறார்கள். அலுக்காமல் சலிக்காமல் மீளவும் மீளவும் வருகிறார்கள்!

   சில மாதங்களிற்கு முன்னர் தான் அந்த அதிசயங்கள் நடந்தன. சல்லி பறித்தது போன்ற பேரோசையுடன் தலைக்கு மேலாய்; ஒன்றன்பின் ஒன்றாய் பறந்து சென்ற போர் விமானங்கள் உணவுப் பொட்டலங்களை வீசிய போது, அண்ணாந்து பார்த்தவர்களின் கண்களில் தெரிந்த நம்பிக்கை ஒளிக்கீற்று எப்படிக் காணாமல் போனதென்று தெரியாமலே போய்விட்டிருந்தது. துள்ளிக் குதித்த மனங்கள் இப்போ மொத்தமாய் சுருங்கி நசுங்கிப் போய்விட்ட பின்னரும், அவர்களுக்கான எல்லாவற்றையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்கள் போல் யாராலும் விரும்பப்படாதவர்கள் நினைத்த நேரம் வருகிறார்கள்- போகிறார்கள்.

   மல்லிகை மணம் கமழும் வீடெங்கும் இப்போ வனஸ்பதி நெய்யின் அடர்நெடி. வீட்டு வராந்தாக்களெங்கும் சாவுகளைச் சுவைக்கும் வெறியோடு அலையும் தடித்த பூட்ஸ்களின் ஓசை.

   இடிப்பது போல் ஒலிக்கும் இதயத்துடிப்பைத் தவிர வேறெதுவும் அவள் காதுகளுக்குக் கேட்பதில்லை. எந்தக் காரியத்தைச் செய்யும் போதும் யாருடைய கண்களோ அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதான பதற்றம். எங்கிருந்தோ நீளும் துப்பாக்கி முனைகள் எந்நேரமும் அவ்வீட்டைக் குறி பார்த்தபடியே இருப்பது போன்ற அச்சம்!

   அதே கிணறு, அதே கிணற்றடி, அதே வேலி, அதே மரங்கள்… ஆயினும் இப்போ கிணறும், குளியலும் தரும் அச்சம் வார்த்தைகளில் அடங்க முடியாததாகியிருந்தது! கண்கள் அங்குமிங்கும் அலைபாய, மளமளவென்று துலாவை இழுத்து தண்ணீரை அள்ளி உடலில் ஊற்றுகிறாள். சவர்க்காரத்தை நுரைபொங்க உடலெங்கும் தேய்த்து விட்டு நிமிரும் போது வனஸ்பதி நெய்யின் கமறல் காற்றோடு கலந்து வந்து நாசியைத் தீண்டுகிறது. அவள் வெலவெலத்துப் போய் அப்படியே நிற்கிறாள்! குபீரென்று மண்டைக்குள் பாயும் குருதியோட்டத்தின் வேகம் தலையை கிறுகிறுக்க வைக்கிறது!.

   கிணற்றடியைச் சுற்றி நின்றிருந்த அவர்களது முகங்களின் தடித்த மீசைகள் திகிலூட்டின. துப்பாக்கிகளும் இரும்புக் காலணிகளும், வனஸ்பதி நெய்யின் மணமும் வீட்டு வளவை நிறைத்திருந்தது. அவர்களின் வெறித்த பார்வைகள் அவளுடலைத் துளைத்து சல்லடையாக்கிக் கொண்டிருந்தன. மார்பு வரை சுற்றிக்கிடக்கும் ஈரப்பாவாடையும், சவர்க்கார நுரையும் உடலோடு ஒட்டிக் காய்ந்து உறையத் தொடங்கியது.

   அவளால் ஒரு அடிகூட எடுத்து வைத்து நகர முடியவில்லை. செய்வதறியாது சிலைபோல் நிற்கிறாள். பாவாடைக்குள் கால் தொடைகள் வெடவெடென நடுங்கிக் கொண்டிருக்கின்றன.

    “ஜல்தி…ஜல்தி…” ஒரு படைவீரன் அதட்டுகிறான்.

    “நான் எங்கே போவது? இதுதான் என் வீடு” வார்த்தைகளை ஓசையின்றி மனசு இடித்துச் சொல்வது அவளுக்கு மட்டுமே கேட்கிறது.

    ஒருவன் தன் பூட்ஸ் காலைத் தூக்கி கிணற்றடித்தரை மீது வைக்கிறான். தனது ஒரு கையை நீட்டி, சிறு பூச்சியைத் தட்டிவிடுவது போல் அவளை தட்டிவிட்டான். அவள் கிணற்றண்டை இருக்கும் சுவரோடு மோதி மறுபக்கமாய் போய் சரிகிறாள். அவர்கள் மிருக வேட்டைக்காரரைப் போல் சட்டென்று அருகில் பாய்ந்து வந்து நிற்கிறார்கள்.

    “அம்மா…” என்று அலறியவாறே வேகமாக எழுந்து வீட்டிற்குள் ஓடுகிறாள் அவள். உள்ளே நின்றிருந்த அத்தனை பிசாசுகளும் திரும்பிப் பார்க்கின்றன. உள்ளேயும் வெளியேயும் ஆயிரம் பிசாசுகள் ஏற்கனவே நிலைகொண்டிருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிகிறது.

   அவர்களுள் உயரமாக இருந்த ஒருவனின் முரட்டுக் கைகள் அவளின் குட்டித்தங்கையை தகாத முறையில் பற்றிப்பிடித்து வைத்திருந்தது. அவள் புலன்களற்றவள் போல் சுருண்டு நின்றிருந்தாள்.

   நாய்க்குட்டி லலித் வெருண்டு பதறிப்போய் நின்றிருந்தது. அதனால் குரைக்கக் கூட முடியவில்லை. அப்போதைய பாதுகாப்பு அமைச்சரின் பெயரை தன் நாய்க்கு வைத்ததில் உள்ளுர ஒளிந்திருக்கும் குரூர மகிழ்ச்சி அப்போதும் எள்ளளவும் குறையாமல் இருப்பது அவளுக்கே வேடிக்கையாக இருக்கிறது.

   வெளியில் மேலும் இரு கனரக வாகனங்கள் வந்து நிற்க, நேசக்கரம் நீட்ட வந்ததாகக் கூறுபவர்கள் திபுதிபுவென்று கீழே குதிக்கிறார்கள். கைகளில் கத்திகளும் துப்பாக்கிகளும். வீட்டு வராந்தாவெங்கும் புழுதி படிந்த பூட்ஸ்களின் அடையாளங்கள் நிறைகின்றன. கதவுகளை உதைகிறார்கள். துப்பாக்கிகளின் அடிப்பாகம் கூரையில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்குமிழ்களை அடித்துச் சிதற வைக்கிறது. பூமரங்கள் சிதைக்கப்படுகின்றன. அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் முற்றத்தை நோக்கி வீசப்படுகின்றன. விழுந்து கிடக்கும் தென்னம் மட்டைகளை எடுத்து கைகள் போன போக்கில் வீசுகிறார்கள். ஹிந்தி மொழியின் அதட்டல்களால் வீடு நிறைகிறது. வீடெங்கும் அரியண்டம் தரும் பூச்சிகள் ஊர்ந்தபடியிருக்கின்றன!

   குடும்பப் புகைப்பட ஆல்பங்களில் அவர்கள் தேடும் நபர் இல்லையென்றதும் ஆக்ரோஷமாய் கத்திக் கூச்சலிட்டு, அவற்றைக் கிழித்து வீசுகிறார்கள். புகைப்படத் துண்டுகள் பூட்ஸ் கால்களுக்குள் தாறுமாறாய் மிதிபட்டு மேலும் சிதைகிறது.

   வீட்டு வாயிலில் பூத்துக் குலுங்கும் மல்லிகைப் பந்தலை ஒரு கொட்டனால் அடித்து உலுப்புகிறான் ஒருவன். அவர்கள் தேடும் நபர் அந்தப் பூக்களுக்குள் ஒளிந்திருப்பான் போலும்!

  திடீரென்று சிறிய கத்திகளால் வேலிகளைப் பிய்த்துக் கொண்டு அடுத்த வீட்டிற்குள் வெறியோடு நுழைகிறார்கள்.

   அடுத்த வீட்டில் கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருந்த மைத்துனரை துப்பாக்கியின் அடிமுனையால் முரட்டுத்தனமாய் தாக்குகிறான் ஒருவன். அவரது மூக்கிலிருந்து பீறிட்டுப் பாய்கிறது இரத்தம்!  இன்னுமொருவன் அடித்தவனை திரும்பி வரும்படி கத்தி அழைக்கிறான்.

   வராந்தாக்களிலிருந்து பூட்ஸ் காலடிகள் அவசரமாய் நடந்து தேயும் ஓசை அந்த ஊர் முழுவதும் கேட்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு வாகனங்களாக புறப்பட்டுப் போகிறது. புழுதி வாசனை வீட்டு வாயிலில் வந்து படிகிறது. வாகனங்கள், அவர்கள் தேடும் நபரைத் தேடி வேறெங்கோ போகின்றன. புயல் ஒன்று ஓய, வீடு பேரமைதியில் மூழ்கிப் போகிறது!

   இனியென்ன வாளி வாளியாகத் தண்ணீர் அள்ளி வந்து, அடித்து ஊற்றி வராந்தாக்களைத் தேய்த்துக் கழுவ வேண்டியது தான். சிராய்ப்புக் காயங்களும் வீக்கங்களும் ஒருபுறம் இருக்கட்டும். அவை தன்பாட்டில் வலிக்கட்டும். அவையெல்லாம் ஒரு வலியல்லவே! மனசு ஏதேதோ சொல்கிறது.

   வராந்தாவின் ஓரம் தூணுக்கருகில் இப்பவும் அப்படியே இருக்கிறது அந்தத் தேநீர்க்குவளை! எல்லா வலிகளும் துயரங்களும் விலகியோடும் அதிசயத்தோடு அதனை அவள் குனிந்து எடுக்கிறாள். இன்னமும் சூடு ஆறாத சிலசொட்டுத் தேநீருடன் சிரிக்கிறது குவளை! அவள் உதடுகள் புன்னகைக்கின்றன! அம்மாவும் தங்கையும் அவளைப் பார்க்கிறார்கள். எல்லோர் உதடுகளிலும் புன்னகை. அவை உடலெல்லாம் பரவுகின்றன.

   மைத்துனர் வடியும் குருதியை ஒரு துவாலையால் துடைத்தவாறே வேலியருகில் வந்து நின்று பார்க்கிறார். அவளது கையிலிருந்த தேநீர் குவளையில் அவர் பார்வை தரிக்கிறது. அடுத்த கணமே விழுந்து விழுந்து அவர் சிரிக்கத் தொடங்குகிறார்!

வீடு மெல்ல மெல்ல சிரிப்பால் நிறையத் தொடங்குகிறது!

***

–               

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular