கார்குழலி
ஒவ்வொருவராக ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வீட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கிய காலம் மாறி இன்று எங்கெங்கும் எத்துறையிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகிறார்கள் பெண்கள். தங்களின் வாழ்வில் திண்ணமாகக் காலூன்றும் விழைவையும் தங்களின் உணர்வுகளைக் கலைகளின் வழியே வெளிப்படுத்திக்கொள்ளப் பொங்கிவரும் ஆசையையும் அணைபோட்டுத் தடுக்காமல் பொங்கிப் பாயும் ஆற்றினைப் போலப் பயணப்படத் தொடங்கிவிட்டார்கள். தங்களுக்கென வரையறுக்கப்பட்ட சதுரப்பெட்டிக்குள் முடங்கிவிடாமல் சமூகத்தின் இலட்சுமண ரேகைகளைத் தாண்டி நடைபயிலும் இவர்களைப் பார்க்கும்போது பல ஆயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் ஆண்மையச் சமூகத்துக்கு ஓர் இயல்பான குழப்பம் ஏற்படுகிறது. கூடவே இனம்புரியாத பயமும் தயக்கமும் தலையெடுக்கிறது. காலங்காலமாக தனக்கென வகுத்துக்கொண்ட படிநிலையும் முக்கியத்துவமும் கைவிட்டுப் போய்விடுமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. தன்னால் வரையறுக்கப்பட்ட இடத்திலேயே பெண்ணை இருக்கச் செய்யவேண்டும் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளப் பயன்படுத்தும் ஆயுதம்தான் பாலியல் வன்முறை. அதிகாரத்தையும் வலிமையையும் செலுத்தும் செயல்பாடு என்பதால் இது பெரும்பாலும் ஆண்களால் பெண்களின்மீது நிகழ்த்தப்படுகிறது.
ஆண்மையச் சமூகம் விதித்த கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டும் பெண் குடும்பத்திலும் பொதுவெளியிலும் எத்தகைய குரூரங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைப் பலசமயம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடிவதில்லை. அப்படிப்பட்ட உண்மைக் கதைகள் பற்றித் தெரியவரும் போது ஏற்படும் மனவலியைத் தாங்கமுடியாததால் அதற்கான தீர்வைத் தரமுடியாது என்பதால் பெரும்பாலானோர் அவற்றைப் பாராதது போலவும் கேளாதது போலவும் கடந்துசென்று விடுகிறோம் என்பது தான் உண்மை.
அந்த வகையில் ‘நீ பெண் என்பதால் இங்கே உனக்கு அனுமதியில்லை’ என்று வன்முறை மொழியில் ஆண்கள் சொல்லும் நிதர்சனத்தை முகத்தில் அறைந்து சொல்லும் படம் ‘நார்த் கண்ட்ரி’ (North Country). கல்லூரியிலும் பணியிடத்திலும் பொது இடத்திலும் காலடி எடுத்துவைக்க பெண்கள் எத்தனையோ ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இன்று வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் தங்களின் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள இடைவிடாமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படிப் பணியிடத்தில் உடல், உள்ளம், உணர்வு எனப் பல நிலைகளில் தினந்தோறும் போராட்டம் நடத்திக்கொண்டே இருக்கும் பெண்களைப் பற்றிய உண்மைக்கதைதான் ‘நார்த் கண்ட்ரி’. 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் நிக்கி காரோ, நாயகி சார்லைஸ் தெரான்.
ஐக்கிய அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான ஒரு வழக்கைப் பற்றிய கிளாரா பிங்காமின் புத்தகத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘நார்த் கண்ட்ரி’. இந்த வழக்கு 1988-இல் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்தான் நடைபெற்றது என்றாலும் படத்தில் வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது மனிதர்கள் நாகரிக வளர்ச்சி பெறுவதற்கு முன்னரான கற்காலத்தில் நடந்த கதையோ என்ற சந்தேகம் ஏற்படும்.
படத்தின் நாயகி ஜோஸி அய்ம்ஸ் குடும்ப வன்முறை காரணமாகக் கணவனை விட்டு விலகி குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டில் தஞ்சமடைகிறாள். கணவனால் அவள் படும் துன்பங்களைப் புரிந்துகொண்டு மகளுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் அம்மா. ஜோஸியின் மூத்த மகனுடைய தந்தை யார் என்பது இன்றுவரையிலும் தெரியாத காரணத்தால் அவளுடைய நடத்தை மேல் அப்பாவுக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. ஜோஸி தனக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறாள் என்றும் அவள் கணவனுடைய கோபத்துக்குக் காரணம் அவளுடைய ஒழுக்கங்கெட்டதனம்தான் என்றும் திடமாக நம்புகிறார். அதனால் நிர்கதியாய் வந்து நிற்கும்போதும் அவள்மீது வெறுப்பை உமிழ்கிறார்.
இனி கணவனின் வீட்டுக்குத் திரும்புவதில்லை என்று முடிவுசெய்து வேலை தேடுகிறாள் ஜோஸி. அந்த ஊரில் இருக்கும் இரும்புச் சுரங்கத்தில் வேலைதேடிக் கொள்ளலாம் என்று பள்ளித்தோழி மூலம் தெரிந்து கொள்கிறாள். ஜோஸியின் அப்பாவும் அங்கேதான் வேலை செய்கிறார் என்றாலும் சுரங்கத்தில் பெண்கள் வேலை செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை. பெண்கள் வீட்டில் இருக்க வேண்டியவர்கள், வேலைக்குச் செல்வது மூலம் ஆண்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற எண்ணம் தந்தைக்கு மட்டுமல்ல, அந்த ஊரில் இருக்கும் மற்ற ஆண்களுக்கும் இருக்கிறது என்பதைப் போகப்போகத் தெரிந்து கொள்கிறாள் ஜோஸி.
பணியிடத்தில் பெண்கள் எல்லோரும் ஒருவருடன் ஒருவர் நட்புடன் பழகுகிறார்கள். ஆனால் அங்கு பணிசெய்யும் ஆண்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வேலைவாய்ப்பை ஒரு பெண் பறித்துக்கொள்கிறாள் என்றும் பெண்ணின் இடம் எது என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். சுரங்கத்தில் உடன் பணிசெய்யும் பெண்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள், பாலியல் கொடுமைகளைச் செய்கிறார்கள், நாகரிகமடைந்த மனிதர்கள் செய்யத்துணியாத பல இழிசெயல்களைச் செய்கிறார்கள்.


குறிப்பாக, ஜோஸியின் பள்ளித் தோழனான பாபி, கடந்தகாலத்தை நினைவில் வைத்துக்கொண்டு அவளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துகிறான். பிறகு பழியை அவள்மீதே தூக்கிப்போட்டு ஊரே தூற்றும்படி செய்கிறான். பணியிடத்தில் தோழன் செய்யும் துன்புறுத்தல் குறித்து ஜோஸி முதலில் தன்னுடைய மேலாளரிடம் புகார் செய்கிறாள். அடுத்த கட்டமாக, சுரங்க நிறுவனத்தின் முதலாளியிடம் பணியிடத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி எடுத்துச் சொல்கிறாள். முதலில் ஜோஸிக்கு ஆதரவாகப் பேசும் முதலாளி பின் அவளை நம்ப மறுக்கிறார். இப்படியொரு இக்கட்டான நிலையில் திணறிப் போகிறாள் ஜோஸி.
பள்ளித் தோழன் பணியிடத்தில் தொடர்ந்து பாலியல் வன்முறையைச் செய்வதால் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடிவு செய்கிறாள் ஜோஸி. பெண் பணியாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வழக்குத் தொடுத்தால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று ஆலோசனை சொல்கிறார் ஜோஸியின் வழக்கறிஞர். வேலை போய்விடும் அல்லது இன்னும் அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் என்ற பயத்தில் இந்த வழக்கில் இணையத் தயங்குகிறார்கள் மற்ற பெண்கள். இந்த நிலையில் நிறுவனத்தின் மீது தான் தொடுத்திருக்கும் வழக்கு குறித்து விளக்குவதற்காக தொழிற்சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜோஸி பேசமுனையும் போது இழிவுபடுத்தப்படுகிறாள். கூட்டத்தில் இருக்கும் ஜோஸியின் அப்பா திடீரென யாரும் எதிர்பாராத செயலொன்றைச் செய்கிறார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. நிறுவனத்தின் சார்பில் வழக்காடும் பெண் வழக்கறிஞர் ஜோஸியின் நடத்தை குறித்து கேள்வி எழுப்புகிறார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணியிடத்திலும் தன்னை நோக்கிப் பாயும் சவால்களை ஜோஸி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.
ஒரு காட்சியில் பெண்கள் உடைமாற்றும் அறையும் கழிவறையும் இருக்கும் பகுதியில் சுவர் முழுவதும் அசிங்கமான சொற்களை எழுதி, கூடவே மலத்தையும் பூசி வைத்திருக்கிறார்கள். அங்கே வரும் மேலாளர் பெண்களைக் கடிந்துகொள்வதோடு அதை அவர்களே சுத்தம் செய்யவும் பணிக்கிறார். என்ன மறுமொழி சொல்வதென்று அறியாமல் திணறும் பெண்கள் பிறகு மௌனமாகச் சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள்.
உணவு இடைவேளையின் போது பாத்திரத்தைத் திறக்கிறார் ஒரு பெண். உள்ளே ஆண் உறுப்பைப் போன்ற வடிவம்கொண்ட பாலியல் சாதனமொன்று வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்துக் கைகொட்டிக் கேலிசெய்து சிரிக்கிறார்கள் அங்கிருக்கும் ஆண்கள். இதுபோதாதென்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பெண்களின் உடலைத் தகாதமுறையில் தொட்டும் உரசியும் தொல்லை தருகிறார்கள். ஏதும் பேசாமல் நகர்ந்து செல்கிறார்கள் பெண்கள்.
மனதைப் பிசைந்த மற்றொரு காட்சி. சுரங்கத்தில் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் வெட்டவெளியில் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. தேவையான இடத்துக்கு நகர்த்திச் செல்லக்கூடிய கழிவறைகளைத் தங்களுக்காக நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடம் வைக்கிறார்கள். ஒருநாள் பெண்களில் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்த உள்ளே நுழைந்ததும் மூன்று ஆண் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து அந்தப் பெண் பயத்தில் அலற அலறக் கழிவறையைத் தலைகீழாகத் தள்ளுகிறார்கள். கழிவறைக் குழிக்குள் இருக்கும் மலமும் சிறுநீரும் கலந்த கழிவுநீர் அந்தப் பெண்ணின்மீது கவிழ்கிறது. சுற்றிநின்று கைகொட்டிச் சிரிக்கிறார்கள் அந்தக் காரியத்தைச் செய்த ஆண்கள். இத்தனைக்கும் அந்தச் சுரங்கத்தைச் சுற்றி நிறுவப்பட்ட நகரியம் அது. மிகச்சிறிய சமூகம். ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமான மனிதர்கள். அப்படி இருந்தும் அருவருப்பூட்டும் செயல்களைச் செய்ய தயங்காத ஆண்கள். என்ன செய்தாலும் யாரும் தண்டிப்பதில்லை. அதற்கும் சேர்த்துப் பெண்கள் தான் துன்பப்பட வேண்டியிருக்கிறது.
ஜோஸி தன் வாழ்க்கையை போராட்டக்காரியாகத் துவங்கவில்லை. கணவனின் அடி உதையைத் தாங்கமுடியாமல் அவனைவிட்டு விலகிப் பெற்றோரின் வீட்டில் அடைக்கலம் தேடுகிறாள். இரும்புச் சுரங்கத்தில் மண்ணிலும் அழுக்கிலும் இயந்திரங்களின் எண்ணெய்ப் பிசுக்கிலும் போராடித்தான் சம்பாதிக்கிறாள். வேறு எந்தப் பணியைக் காட்டிலும் சுரங்கப் பணியில் நல்ல வருவாய். தவணை முறையில் சொந்தமாக வீடுவாங்க முடிகிறது. நல்ல வாழ்க்கை வாழ உதவும் வேலையை வேண்டாமென்று விட்டுவிடவோ பிறந்துவளர்ந்த ஊரைவிட்டுப் புதிய ஊருக்குச் செல்லவோ மனமில்லை. எனவே அங்கேயே இருந்து தன் உரிமைக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். தப்ப வழியில்லாமல் அகப்பட்டுக்கொள்ளும் விலங்கு எதிரே நிற்கும் வேட்டைக்காரனின் மீது பாய்வதைப்போன்ற தற்காப்புச் செயல் அது. ஆனால் இந்தப் போராட்டத்தினால் கிடைக்கும் தீர்வு ஜோஸிக்கு மட்டும் உண்டானதல்ல. அவருடன் பணிபுரியும் அத்தனைப் பெண்களுக்கும் அவர்களின் வருங்கால சந்ததியினருக்கும் சேர்த்துத்தான் கிடைக்கிறது.
பெண்களைச் சக பணியாளர்களாகப் பார்க்காமல் பாலினத்தை முதன்மைப்படுத்துவதால் நிகழ்த்தப்படும் துன்புறுத்தலையும் வன்முறையையும் மௌனமாகக் கடக்காமல் அதை எதிர்த்துச் சட்டரீதியாகப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறைக்கு முன்னேற்றப் பாதையைக் கட்டமைக்கும் பணியையும் செய்கிறார்கள். இந்தியாவின் அரசியல் சாசனம் எல்லாக் குடிமக்களுக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமை இருக்கிறது என்று பறைசாற்றுகிறது. என்றாலும் பாலியில் துன்புறுத்தலுக்கான தெளிவான சட்டம் இல்லை. 1997-இல் நடைபெற்ற விசாகா வழக்கின்போதுதான் பாலியல் துன்புறுத்தல் என்ற குற்றம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது. குழந்தைத் திருமணத்துக்கு எதிராகச் செயலாற்றிய பன்வாரி தேவி என்ற சமூக சேவகி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அந்த வழக்கின் விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தலுக்கான தனிச்சட்டங்கள் தேவை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. பாலியல் துன்புறுத்தல், பாலினம் காரணமாக பாகுபாடு காட்டுவது ஆகியவற்றில் இருந்து பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுவதற்காக தெளிவான விரிவான வழிமுறைகளை உருவாக்கியது.
இத்தகைய உண்மை நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே பதிவுசெய்யும் தமிழ்த் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாலியல் வன்முறை குறித்துப் பல படங்கள் வந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இழிவுகள், துன்புறுத்தல்கள் இவை குறித்து ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட தமிழ்ப் படங்களே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். 2000-ங்களின் தொடக்கத்தில் வந்த ‘மகளிர் மட்டும்’ அலுவலக மேலாளரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் பெண்களைப் பற்றியது. குறிப்பிட்ட பணியில் அல்லது துறையில் பெண் என்ற ஒரு காரணத்தினால் மட்டுமே அவள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும் அந்தப் பெண் எதிர்கொள்ளும் தனிப்பட்ட பிரச்சனைகளைப் பற்றியும் பேசிய தமிழ்ப் படம் எதுவும் என் கவனத்துக்கு இன்னும் வரவில்லை.
‘வடதிசை நாட்டின்’ பெண் சுரங்கத் தொழிலாளர்களைப் போலவே நம் நாட்டிலும் பெண்கள் புதிதாக அடியெடுத்துவைக்கும் துறைகளில் போராட்டங்களும் சட்டத் தீர்வுகளும் அதையடுத்த மாற்றங்களும். இவற்றைச் சட்டப் புத்தகங்களில் ஆவணப்படுத்துவதோடு பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் அவர்களின் நினைவில் நிறுத்தவும் கவிதை, நாடகம், திரைப்படம் போன்ற வெகுஜன ஊடகங்களைப் பயன்படுத்துவது அவசியம். ஆவணப் படங்களைவிடவும் புனைவுசார்ந்த திரைப்படங்களும் நாடகங்களும் அதிகமான பேரைச் சென்றடையும். திரைப்படத்துறை பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் இலாப நோக்கோடு செயல்படும் துறை என்றாலும் இதுபோன்ற ஊக்கமும் உந்துதலும் தரும் கதைகளைப் பதிவு செய்வதை ஒரு சமூகக் கடமையாகக் கலைஞர்கள் பார்க்க வேண்டும்.
***
கார்குழலி – சென்னையில் வசித்து வருகிறார். இணையவழிக் கற்றல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள் எழுதுவதுடன் தொடர்ந்து குழந்தைகளுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு என இயங்கி வருகிறார். அத்துடன் தமது துறை சார்ந்த கட்டுரைகளோடு வெவ்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழில் எழுதி வருகிறார்.