Monday, September 9, 2024

ராஜமுனி

ரம்யா

 

1

எழ வேண்டுமென்ற உந்துதல் உள்ளத்தின் எங்கோ ஓர் ஆழத்தில் அவனுக்கு ஒலித்தது. கண்களைச் சுருக்கி விழித்தபோது கண்ட இருளைக் கண்டு முதலில் திகைத்தான். பயத்தினால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தன்னை திரட்டிக்கொள்ள முற்பட்டான். முதலில் எங்கிருக்கிறோம் என்பது மண்டையை எட்டியபோது மனம் அவனுக்கு கனமாகியது. சூடான கண்ணீர் கண்களின் பக்கவாட்டில் வழிந்தது. காதுக்குள் அது நுழைந்துவிடும் அசெளகரியத்தைத் தடுக்க எண்ணி ஒருக்களித்துப் படுத்தான். எங்கிருந்தோ ஒருதுளி குளிர் திரவம் அவன் சென்னியில் தெறித்துச் சிதறியது. மிரண்டு பதறி முழு உடலையும் உந்தி எழுந்து கொண்டான். பசி மயக்கத்தில் எத்தனை நாள் படுத்திருந்தோம் என்பதறியாதவனாய் இருளை வெறித்திருந்தான். தன் காலருகில் ஈரப்பதத்தை உணர்ந்தபோது நாய்போல் அதன்மேல் குப்புற விழுந்து நாவால் நக்கி அதைக் குடித்தான். எழ முடிந்த அளவு ஆற்றல் கொண்டதை உணர்ந்தவனாய் மெதுவாக எழுந்து உடலை உந்தித் தள்ளினான். தான் என்ற உணர்வும் உடலும் வேறு என்ற எண்ணத்திலேயே அந்தக் குகை இருளில் நடந்தான். குகை முனையின் வெளிச்சத்தை விரைந்து சென்று தழுவி உடலை உற்று நோக்கினான். அது தன்னுடன்தான் இருக்கிறது என்பது கண்டு ஒருவாறாக மன நிம்மதி வந்து சேர்ந்தது அவனுக்கு.

குகையின் விளிம்பை அடைந்து கீழ்நோக்கிப் பார்த்தபோது பத்தடி ஆழத்தில் குளம் போன்ற அமைப்பு இருந்தது. அந்தப் பாறையிலிருந்து கசிந்த நீரை கச்சிதமாக சேர்த்து வைத்திருந்த குளமது. அதில் தன் உருவத்தை பசும்நீலத்தில் அவன் பார்த்தான். எலும்பும் தோலுமாக நீண்ட தாடியும் முடியுமாக தன்னைப் பார்க்கும் போது அது தானல்ல என்று அவனுக்குத் தோன்றியது.

குதித்தால் குளத்தில் விழுந்து உடலையும் வயிறையும் குளிர்விக்கலாம் தான். ஆனால் அங்கே கால்களை மடித்து, நீருக்குள் மல்லாந்துப் படுத்து கண்களை மூடி தக்கையைப்போல மிதந்து கொண்டிருந்த ஆசாமியைக் கண்டு பின்வாங்கினான். அவர் தன்னைப் போலவே மெலிந்தும் நீண்ட தாடியும் சிகையும் வைத்திருந்ததைப் பார்த்தான். எலும்புக்கூடுகள் ஒரே மாதிரி இருப்பது போல மிக மெலிந்த மனிதர்கள் ஒரே தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். அவர் விழிக்கும் வரை காத்திருக்கலாம் என்றெண்ணினான். 

திடீரென மழை பெய்தது. அவன் இருந்த இடத்தில் அவனுக்காக மட்டுமே பெய்தது போல அது கொட்டியது.  வாயைத் திறந்து நாக்கை வெளித்தள்ளிக் கொண்டு மழையை வாங்கிக் கொண்டிருந்தான். ஏனென்று தெரியாத ஏக்கம் அவனை முட்ட அந்த மழையின் சத்தத்தின் ஒத்திசைவோடு கதறி அழுதான். அழுது அழுது அது பொருளற்றதாகத் தோன்றவே மீண்டும் குன்றிலிருந்து எட்டி அந்த மனிதனைப் பார்த்தான். எந்த மாற்றமும் தென்படவில்லை. அவன் முகம் கனவினுள்ளிருந்து புன்னகைப்பதைப் போல இருந்தது. காலம் மெதுவாக ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது. தாணிப்பாறையிலிருந்து கால்போன போக்கில் அழுதுகொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் நடந்து வந்தது நினைவிற்கு வந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் இருள் கவ்வி வானத்தின் முழுமதியனால் காடு ஒளி கொள்வது போல இருந்தது. காலம் நொடி நொடியாகக் கடப்பதாக அவனை அழுத்தி வந்தது. நான்கு திசைகளுக்கும் நான்கு மலைகள் வீதம் நிறைத்திருந்த சதிரகிரி மலையின் மடிக்குள் சிறு மகவாக ஒடுங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது அவனுக்கு. தன் அம்மாவின் ஒடுங்கிய முகமும் அதில் அவனுக்காக எப்போதும் மிச்சமிருக்கும் புன்னகையும் அப்போது ஏனோ அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“அம்மா….ங் ங் ங் ங்…ம் ம்ம்…” என்று முனகிக்கொண்டே அழ ஆரம்பித்தான்.

“ஒன்ன எப்டியாச்சும் அந்த பாழாப்போன எடத்துல இருந்து மீட்டுடலாம்னு நினச்சேனேம் மா… எனக்கு படிப்ப விட்டா வேற எதுவும் தெரியாதே… இப்டி உன்ன விட்டுட்டு வந்துட்டேனேம்மா… ஒனக்கு வேற யாராச்சும் நல்ல பிள்ள பெறந்திருக்கலாம்மா… சூடு சொரண இல்லாத பிள்ளயோ… பொழக்கத் தெரிஞ்ச பிள்ளையோ பொறந்திருக்கலாம்மா… இல்ல இல்ல… நாம வேற சாதில பொறந்திருக்கலாம்மா… இல்ல.. இந்த ஒலகம் வேற மாதிரி இருந்திருக்கலாம்மா… அம்மா… என்ன நீ வெறுத்துடாத… அம்மா ம்…. அம்மா ம்ம்ம்…” என்று முனகிக்கொண்டே உடலைக் குறுக்கிக்கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

சலனமற்ற குளத்தில் யாரோ கல்லை எடுத்து அடித்தது போல அவன் உடல் அதிர்வு கொண்டது. யாரோ தன்னை பிருஷ்டத்தில் ஓங்கி மிதித்தது போலிருந்தது. எழுந்து, அமர்ந்து திகைத்து முடிக்கும் முன் அவர் ஓங்கி இவனை அறைந்தார்.  கைகளைக் கொண்டு கன்னத்தைப் பொத்தி வைத்தவாறு ஏன் என்ற கேள்வியுடன் வெறித்து அவரைப் பார்த்தான். 

“எதுக்குடா நாயே இப்டி அழற?” என்று கேட்டார்.

“நான் ஆய்வு.. தாவரம்…” உலறினான்.

“உச்” என்றார்.

“எனக்கு பி.எச்.டி பட்டம் குடுக்கமாட்டேனுட்டாங்க”

”ஏன்”

“….சாதி” என்று இழுத்து சொல்லி முடித்தபோதே அந்த வார்த்தைக்கும் அந்த இடத்திற்கும், அந்த ஆளுக்கும் அது பொருளற்றதெனத் தோன்றியது. ஒரு பொண்ணு என்னை காதலிக்கறதா சொல்லி… என் பிரஃபசர் கூட அந்தப் பொண்ணு…” திரண்டு வராத வார்த்தைகளை முனகியும் முக்கியும் என மென்று முழுங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் முனகியவாறு “எனக்கு இதத்தவர வேற ஒன்னுந் தெரியாது..” என்று சொல்லி ஏக்கத்தோடு அவரின் கண்களைப் பார்த்தான்.

“ம்.. சரி என்னத்துக்கு இது..”

“என்னத்துக்குன்னா… இதான் என் கெரியர்..” கெரியர் என்ற வார்த்தை அந்த ஆசாமிக்கு புரிய வாய்ப்பில்லை என்று அவனே முடிவு செய்துகொண்டு “என் வாழ்க்கைல முக்கியமான விஷயம் இதான்..” என்றான்.

“டேய் உன் மண்டையப் பொளந்துடறேன்டா இன்னைக்கு. எதுக்குடான்னு கேட்டா..”

“எதுக்குனு கேட்டா.. தாவரத்த ஆராய்ச்சி பண்றது எனக்கு பிடிக்கும். நிறைய கண்டுபிடிப்புகள ஒலகத்துக்கு குடுக்கலாம். என் வேல வருமானத்த வச்சி என் குடும்பத்த கொஞ்சம் நல்ல நெலமைக்கு கொண்டு வந்திருப்பேன்.” குரல் தழுதழுத்து மீண்டும் கம்மிய குரலில் அழுதான்.

செருமி காறித் துப்பிக்கொண்டே “யாரும் யாரையும் இங்க நல்ல நிலமைக்கு கொண்டு வந்திட முடியாதுடா பைத்தியக்கார நாயே! மொதல்ல இப்ப அவங்க நல்லா இல்லன்னு யாரு சொன்னது. ஒனக்கு என்ன இதுல கெடக்குது அதச் சொல்லு”

திகைத்தவனாய் “ம்… எனக்கு.. எனக்கு.. தாவரத்த ஆராயரதுல தான்.. ஒரு இது…. ஒரு சந்தோஷங் கெடக்குது” என்றான்.

”ம்.. இப்ப நீ ஒக்காந்திருக்க மலை பேரு என்ன தெரியுமா”

“தெரில”

“சஞ்சீவி மல”

“ம்…”

”என்னடா ’ம்…’ சுன்னி நாயே.. இதோட இன்னொரு பேரு மருந்து மல. இங்க பண்ணாத ஆராய்ச்சி புண்டையவா அங்க நாலு செவத்துக்குள்ள பண்ணப் போற. நியாயமா இங்க வந்ததுக்காக நீ சந்தோசமா தான இருக்கணும்..” என்று கூறியவாறு தன் முகத்தைக் கோணலாக்கி மீண்டும் காறி உமிழ்ந்தார்.

அவன் ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். அவன் தலைமுடியை தன் இடக்கையால் பற்றி முகத்தைப் பார்த்து தன் இடுப்பு முடியில் வைத்திருந்த இலைகளை எடுத்து அவனிடம் நீட்டி “இது என்னான்னு தெரியுமாடா..”

“ம்ஹூம்.. இல்ல.. தெர்ல”

”இத சாப்பிடு”

எந்த மறுப்பும் உடலிலோ மனதிலோ சிறிதளவும் எழாதவன் போல அந்தக் பச்சைக் கொழுந்து இலைகளை வாங்கி மென்றான். வயிற்றின் தீ அடங்குவதாக எண்ணம் எழுந்தது அவனுக்கு. இனிமையான எண்ணங்கள் அவனுள் நிறைய ஆரம்பிப்பதை உணர்ந்தான்.

”இது பசிய அடக்கறது. பசிக்கு உணவாகறது. ஒன் மொகரக் கட்டையப் பாத்தா நாலு நாள் சாப்புடாதவன் மாதிரி இருக்கே” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் வலது கையை தலையில் ஊன்றி ஒருக்களித்துப் படுத்தார்.

அவன் வாயைப் பிளந்தவாறு “இந்த சிறு புல்லா… ஆனா இப்படி ஒன்னு இருக்கத நான் கேள்விபட்ருக்கேன்.” என்றவாறு சிறு மெளனத்திற்குப் பிறகு

”நீங்க சொல்றதுல்லாம் நியாயந்தான்.  ஆனா நான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தது நெல் பயிரப் பத்தி. அத காட்டுல எப்படி பண்றது?” என்று சமாதனம் செய்யும் பாவனையில் கேட்டான்.

“ஏன்?”

அதை எதிர்பாராதவன் போல “அதுதானே மக்களுக்கு அதிகமாகப் பயன்படற தாவரம்.. அதான்” என்றான்.

“எவ்ளோ நாளா”

”நாளா… ஏழு வருசமா”

“ஒரே தாவரத்தையா?

“ஆமா? அதோட மரபணுவ படிக்கறது. அதுல மாற்றத்த கொண்டு வாரது… இப்படி நெறய…”

“இங்க இந்தக் காட்டுல கோடி தாவரம் மொளைச்சிக் கிடக்கு. மனுஷங்களுக்கு இது எதுவுமே வேண்டாம்னு நினைக்கிதியோ?”

அவன் ஏதும் பேசவில்லை.

“அது சரி. எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுக்குத அளவு இயற்கை கனிஞ்சும் இல்ல. சில காடுங்க மூடித்தேன் கெடக்கும். தனக்கானவங்கள தேர்ந்தெடுத்து எப்பவாது மடில கெடத்திக்கும்” என்று சொல்லிவிட்டு அவனைப் உற்றுப் பார்த்தார்.

“ஒங்களுக்கு என்னய சொல்லி புரிய வைக்க முடில. நீங்க இங்க இருக்க எண்ணிக்கைய பத்தி பேசிக்கிட்டு இருக்கீக. நான் ஒரு தாவரத்துக்குள்ள போய் அணுவணுவா தெரிஞ்சிக்கறத பத்தி பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு தாவரத்தோட அத்தனை இயல்புகளையும் தெரிஞ்சு நமக்குத் தேவையான இயல்ப அதிகப்படுத்திக்கறத பத்தி…”

“இயல்ப ஏன் மாத்தணும். அந்த இயல்பு அதிகமா இருக்க இன்னொரு தாவரத்த கண்டறிய சோம்பல்பட்டு..” என்று அலுத்துக் கொண்டார்.

“இல்ல.. வந்து…”

“அத விடு.. இனி இங்கையும் ஆராச்சி பண்ண முடியாது உன்னால” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தார்.

நிமிர்ந்து ஏதும் புரியாதவனாய் “ஏன்” என்றான்

“ஏன்னா… நீ தான் நேத்தே செத்துட்டியே”

அவன் திடுக்கிட்டு “இல்ல இல்ல… நான் நான்.. உயிரோட..”

‘ஆமா.. நேத்து அந்த குகைல செத்து கிடந்த..” என்றார்

“இல்ல.. நம்பமாட்டேன்.”

அந்த மனிதர் எக்காளமிட்டுச் சிரித்தார். 

“நான் இப்ப இங்க இருக்கேனே..”

”உன்னோட ஒரு நிகழ்த்தகவு தான் இங்க இருக்கு”

குழம்பிப்போய் “புரியல” என்றான்.

”இப்ப நிகழ்ந்துகிட்டிருக்க பிரபஞ்சத்துல நீ இருக்க. வேறொரு பிரபஞ்சத்துல அந்த குகைல நீ செத்துக் கிடந்த.  இன்னொரு பிரபஞ்சத்துல நீ நினைக்கிற தாவரவியல் ஆய்வாளனா வெற்றிகரமா இருந்திட்டிருக்கலாம்.” 

“இன்னொரு பிரபஞ்சமா.?”

இணைப் பிரபஞ்சங்கள் கேள்விப்பட்டதில்லையா நீ…

”கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு தியரி தான்.. நிரூபிக்கப்படல”

“அப்படிப் பாத்தா இந்த பிரபஞ்சமே ஒரு தியரி தானே”

அவர் பேசுவதை ஆர்வமாக கேட்பவனாய் “ஆங்… இல்ல.. இருக்கலாம்” என்று தீவிரமாக யோசிக்கும் பாவனையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எல்லாமே இங்க இருக்கலாம் தான்”

“உண்மையாவே இந்த இணைப் பிரபஞ்சங்கள் இருக்கா?” என்று பதட்டமாகக் கேட்டான்.

”ஆமா. என் வரைல இருக்கு. இது என் தியரி” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தார்.

”கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க”

”இந்த வாழ்க்கைல முக்கியமானதும் முக்கியமில்லாததுமான பல முடிவுகள எடுக்கச் சொல்லி இந்தப் பிரபஞ்சம் அப்பப்ப வந்து நம்ம முன்ன நிக்குது. நீ கவனிச்சிருக்கியா? ஒரு முக்கியமான முடிவ எடுத்துட்டதால நம்ம வாழ்க்கையோட போக்கே மாறிப்போயிருக்கும்”

“ஆமா.. ஆமா” என்றான் பலமாக.

“அந்த முடிவ நீ எடுத்துட்டதால அதுக்கு மாத்தா இருக்க இன்னொரு முடிவு அழிஞ்சு போகாது. அது நீ தேர்ந்தெடுத்த முடிவுக்கு இணையாவே இன்னொரு பிரபஞ்சத்த உருவாக்கி வளந்துட்டு இருக்கும். நீ தேர்ந்தெடுத்து வாழற இந்தப் பிரபஞ்சம் மட்டுமில்ல நீ வாழ ஆசப்படற பிரபஞ்சத்திலயும் நீ தான் இருப்ப. அத நீ உணரல. உணர முடியாது. ஆனா என்னால உணர வைக்க முடியும்” என்றார்.

”ஆமா… நீங்க யாரு…”

”நான்…. இடக்காடார் சித்தனா இருந்தேன். பின்ன போகர என் சித்தி வழியா உணர்ந்து அவரோட இருந்தேன். ஒரு கட்டத்துல அவரும் நான் தான்னு தோனுச்சு. நான் அவராவும் கொஞ்ச நாள் இருந்தேன். இப்ப நீ என்ன போகன்னே கூப்பிடலாம். அந்தப் பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

 ”உங்களுக்கு சாவு இல்லயா?” 

”சாவு வரும்போது தெறக்கற இரண்டு முடிவுல சாவின்மைய தேர்ந்தெடுத்து அந்த பிரபஞ்சத்துல நுழைஞ்சிடுவேன். இப்ப இங்க இருக்கேன். அப்படி நுழையற மிகச் சிலரயும் நுழையற கணத்துல பாத்திருக்கேன். உன்னையும் அங்கதான் பாத்தேன். என்னைக்காவது சாவணும்னு தோனுச்சுனா சாவேன்” என்றார்.

அவன் தன்னையோ தன்னைச் சுற்றி நிகழ்வதையோ நம்ப முடியாதவனாய் தலையின் பாரத்தை இரு கைகளாலும் தாங்குபவன் போல உட்கார்ந்திருந்தான்.

“என்கூட வா..” என்று அவன் கைகளைப் பற்றி அந்த முழு நிலவின் ஒளியில் இழுத்துச் சென்றார். அவனுக்கு ஒரே சமயம் மிதப்பது போலவும் விரைந்து ஓடுவது போலவும் இருந்தது. அதன்பின் அவன் ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருந்தான். மலையிலிருக்கும் அத்தனை தாவரங்களையும் கற்றான். பசி வராமலிருக்க, பசித்தீயை அணைக்க, உடல் உறுதியடைய, இளமையாகவே இருக்க, காமத்தைக் கடக்க, இனிய கனவுகள் வர, மகிழ்ந்து களிக்க, கரைந்து அழ என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செடியென போகரின் வழி கண்டடைந்தான். மேலும் மேலும் அவர் சொல்லாதவற்றையும் கூட கண்டுகொண்டு, கண்டுகொண்டு வியந்தான். தாதும், பூவும், இலையும், காயும், கனியும், செடியும், மரமும் வேரும் என தாவித்தாவி அதன் இயல்புகளை அறியுந்தோறும் எழுச்சியடைந்தான். காடு திறந்து கொடுக்கும் தொலைவுக்குச் சென்று அதன் ஆழத்தைக் கண்டடைந்து திழைத்தான். பிறிதொரு நாள் காலையில் அவன் எழுந்தபோது போகர் அங்கு இல்லை என்பதை உணர்ந்தான். அவர் இதுவரை அங்கிருக்கவில்லை என்பது போல அதன்பின் சஞ்சீவி மலையில் திகழ ஆரம்பித்தான்.

2

எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற மயக்கைத் தரும் தன் பொக்கை வாயை மிகவும் கடினப்பட்டு அசைத்து “ஏத்தா யாரு புள்ள நீயி” என்று முகமெல்லாம் குறுமடிப்புகள் விழுந்த கிழவி துள்ளிக் கொண்டிருந்த மைனாவை முக்கிக்கொண்டே தன் பக்கமாக இழுத்தாள். உச்சமாக இழுபட்ட உண்டிவில்லைப் போன்ற அவளின் காதுகளில் குலுங்கிய தண்டட்டியை இழுத்துக் கொண்டே…

“நானு… நானு… மீனாட்சி பேத்தியா” என்றாள் மைனா.

“சரித்தேன். நல்லா வாயாடியா இருக்கியே…”

“வாயிருந்தாத்தேன் பொழைக்க முடியும்னு எங்க பாட்டி சொல்லிருக்காளே” என்று கறாரான மழலைக் குரலில் மைனா கூறினாள். 

கிழவி அவளின் கன்னத்தை பிடித்து அள்ளி முத்தமிட்டு, “என் மவராசி. நீ பேசுத்தா…” என்று கொஞ்சினாள். அங்கு வந்த மோகனைப் பார்த்ததும் கண்சிமிட்டி தலையை ஆட்டி அழைத்தவாறே கிழவி “ஏலே மோகா என்னடா எப்பவும் இல்லாம இவ்ளோ தொலவெட்டு நேர்ச்சலாம்..” என்று கேட்டாள். 

“வெள்ளாம சரியில்ல ஆத்தா. வீட்ல் ஒன்னுலாட்டி ஒன்னு நடந்துக்கிட்டே கெடக்கு. அதேன்” என்று சொல்லிக் கொண்டே மைனாவை தூக்கிக் கொண்டான்.

“வீட்ட விட்டு ஓடிப்போன மூத்தவன் என்ன ஆனாம்னே தெரியலய்யேய்யா..” என்று சொல்லிக் கொண்டே முந்தானையை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

”இங்க இந்த சனங்க மத்தில கெடந்து சீரழிய்ததுக்கு அவன் எங்கயாச்சும் நல்லாத்தேன் இருப்பான் ஆத்தா” என்று மோகனும் கலங்கினான்.

“படிப்ப முடிச்சிடுவேன்னு வந்து கருப்பட்டி முட்டாயி கொணந்து குடுத்துட்டு போனவன் அடுத்த மாசம் வந்தப்ப மூதேவி ஏறில்ல வந்து நின்னான். கண்ணுக்குள்ளயே நிக்கான் மோகா..” என்று கிழவி ஏங்கியவாறு கூறினாள்.

“என்ன செய்யச் சொல்லுதீய ஆத்தா. அவன் படிச்ச படிப்பென்னனு கேட்டாக்கூட இங்க உள்ள சனங்களுக்கு சொல்லத் தெரியாது. இவன் பிரச்சனையா புரியப் போவுது”

“நம்மலால ஒன்னுமே பண்ண முடியாம போயிடுச்சேடா மோகா. நம்ம புள்ளைக படிக்கலைனாலும் உசிரு பொழச்சி கண்ணுக்கு முன்னாடி கெடந்தா போதும்னு தோணுது. இந்த எழவெடுத்த படிப்பு படிக்காம இருந்திருந்தா அவன் இங்கின நம்ம கூட கெடந்திருப்பான்ல”

“அப்டி சொல்லாத ஆத்தா. நம்ம புள்ளைகளும் நம்மள மாதியே இன்னும் காட்டுலையும் மேட்டுலையும் கஸ்டப்படனுமாக்கும். படிக்கட்டும். நாலு துட்டு சம்பாரிக்கட்டும். அவன் கெரகம்.. என்னத்த சொல்ல உசிரு பொழச்சு அவன் எங்கின இருந்தாலும் நல்லாத்தேன் இருப்பான்த்தா அவன் மனசுக்கு.”

”காட்டுலையும் மேட்டுலையும் நாம எவன்கிட்டயும் கைகட்டியாடா மோகா சம்பாரிக்குதோம். இங்கினயே ராசா மாறி வாழலாம்ல” என்றாள் கிழவி தெம்பாக.

“ஒலகம் எங்கினயோ போய்க்கிட்டு கெடக்கு ஆத்தா. காட்டுலயும் மேட்டுலயும் ராசா மாதிரி நிக்கலாந்தேன். துட்டு வருமா? துட்டு” என்று கொஞ்சம் ஆவேசமாகக் கேட்டுப்பின் கையறு நிலையென உணர்ந்து அமைதியானான்.

இரு கைகளையும் கண்களை அழுத்தித் துடைத்தவாறு, அப்படியே பேச்சை மாற்ற விரும்பியவளாய் “பாப்பா நல்லா கெட்டிக்காரியா இருக்காளே. என்ன பேரு” என்று மலர்வாகக் கேட்டாள். 

“ரமா…. ஆனா மைனானுதேன் கூப்புடறது” என்று சொல்லிக் கொண்டே மைனாவின் கன்னத்தில் முத்தமிட்டான். ”செரி ஆத்தா, வேல கெடக்கு.. ஆடு வெட்டுத நேரமாச்சு. நீ அங்க சாப்புட வந்திடு என்ன.” என்றான்.

“சரிலே நீ போ. ஆத்தா வாரேன்..” என்று கைகளை காண்பித்தவாறு அமைதியானாள்.

மோகனின் தோளில் உட்கார்ந்திருந்த மைனா அவன் இரு காதுகளையும் பிடித்து இழுத்தவாறு “ஏப்பாய் நம்ம ஆடு எங்க” என்று கேட்டாள்.

“சங்கிலி தாத்தா வச்சிருக்காருய்யா”

“அவரே வச்சிக்குவாராப்பா”

“ஆமா. சாமிக்கு குடுக்கணும்ல ஆத்தா… அத தாத்தாதேன் குடுத்துட்டு வருவாரு” என்று சொல்லிக் கொண்டே தன் குடும்பமும் சுற்றமும் குழுமியிருந்த மாமரத்தை அடைந்தான். தாணிப்பாறையிலுள்ள ஒவ்வொரு மாமரத்தின் அடியிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் குழுமியிருந்தனர். ஆடி அமாவாசையான முந்தைய நாள் இரவில் சதுரகிரியின் மலைப்பகுதியிலிருக்கும் மகாலிங்கம் கோவிலுக்குச் சென்று வழிபட்ட கையோடு நேர்த்திக்கடனைச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

கொட்டுச் சத்தம் ஒலிக்க முதுகுடும்பன் சங்கிலி பதறாமல் ஆட்டோடு மோகனின் மாமரத்தில் வந்து நின்றார். ஆடு சலனமற்று இருந்தது. தண்ணீரை அதன்மீது தெளித்த போது ஆடு கழுத்தைக் குனிந்து நீட்டியது. அதைக் கண்ட கிழவிகள் கண்கலங்கி ஓங்கிய குலவைகள் இட்டனர். அது மனிதர்கள் கடவுளுடன் உரையாடும் ஒலியா, விலங்குகளுடன் உரையாடும் ஒலியா, காட்டின் ஒலியே தானா என்று பிரித்தறியவியலாத வண்ணம் குலவைச் சத்தம் காட்டைப் பிளந்துகொண்டு ஒலித்துச் சிதறியது. குலவைச் சத்தமே அப்பாலிருந்த கடவுளை அழைத்து வந்தது போல முதுகுடும்பன் அருள் வந்து ஆடினார். ஓங்கி ஒரே வீச்சில் ஆட்டை வெட்ட அதன் தலை கீழே விழுந்தது. ஆட்டின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்து தரையை ரத்தத்தால் நிறைத்தது. தனக்கு சேர வேண்டியதைத்தானே கொடுக்கிறார்கள் என்பது போல காடு அதை அசிரத்தையாக வாங்கிக் கொண்டிருந்தது. 

ஒவ்வொரு மாமரத்தையும் ஒவ்வொரு குடும்பமாக இருபது குடும்பங்கள் ஆக்கிரமித்திருந்தனர். நேர்த்திக்கடனுக்கு வேண்டிக்கொண்ட இந்த இருபது குடும்பங்களைத் தவிர புதூர் கிராமத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் அங்கிருந்த ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைந்திருந்தனர். ஒவ்வொரு மாமரத்தின் அடியிலும் நேர்ந்துவிட்ட ஆட்டின் ரத்தம் காய்ந்து கிடந்தது. கறிக்குழம்பும் சோறும் ஒவ்வொரு மாமரத்தின் கீழும் தயாராகிக் கொண்டிருந்தது. எங்கெல்லாம் கறியும் சோறும் தயாரானதோ அங்கெல்லாம் குலவைச் சத்தத்தின் ஒலியும் படையலின் மணமும் எழுந்தது. ஒவ்வொரு குடும்பமும் முதல் படையலை மலையிலிருந்து இறங்கி வரும் சித்தர்கள் சாப்பிடுவதற்காக வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே இந்தச் சித்தர்கள் மலைகளிலிருந்து கீழே இறங்கிவந்து சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும்தான் பந்தி ஆரம்பமாகும். அந்தந்த குடும்பத்தினர் தனக்கு வரப்போகும் சித்தர்களுக்காக காத்துக் கிடந்தனர். 

சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி வருவதைப் பார்ப்பது மலைப்பானது. திடீரென எங்கிருந்து வருகிறார்கள் என்று புரியாமல் இருப்பதனாலோ என்னவோ மக்கள் அந்தச் செயலில் தெய்வீகத்தன்மை இருப்பதாய் நம்பினர். ஒவ்வொரு சித்தரும் சாப்பிட்டு முடித்தபின் உரியவருக்கு ஆசி வழங்குவார்கள். அதன் பின் குலவைச் சத்தம். சலசலப்புகள். அவர்களின் எச்சில் இலையில் நேர்ச்சை செய்து கொண்டவர்கள் சாப்பிட்டபின் இறுதியாக மற்றவர்கள் பந்தியில் சாப்பிடுவார்கள்.  ஒவ்வொரு மாமரமாக குலவைச் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது.

“பாட்டி காலு ரொம்ப வலிக்கிது பாட்டி” என்றாள் மைனா.

“சும்மா கெடத்தா…” என்று மீனாட்சி அதட்டினாள். 

நேரம் சென்றுகொண்டே இருந்தது. மற்ற மரத்தினர் பந்தி முடிந்து பெரும்பாலும் மோகனின் மரத்தைச் சுற்றி சித்தரின் வருகைக்காகக் காத்து நிற்க ஆரம்பித்தனர்.  எதிர்பாராத விதமாக ஒரு சித்தர் மலையிலிருந்து இறங்கி வந்தார். வந்தவர் யாரையும் பார்க்காமல் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். மீனாட்சி கூப்பிய கைகளோடு குலவையிட ஆரம்பித்தாள். அவள் குலவையிட பிற கிழவிகளும் இணைந்து கொண்டனர். சலசலப்புடன் பந்தி ஆரம்பித்தது.

மோகன் படபடப்போடு சித்தரின் பின்னே ஓடிப்போய் தயங்கித் தயங்கி “எய்யா ராசமுனி…” என்றார். அவன் திரும்பி புன்னகைத்தான். அவன் கையில் பிடித்திருந்த ரமாவை நோக்கி “படிக்கணும்…” என்று சொல்லி தலையைத் தடவினான்.  பயமும் வெட்கமும் கலந்து ரமா மோகன் பின்னே ஒளிந்து கொண்டாள்.

“படிக்கவையி… இந்த ஒலகத்துக்கு அதான்” என்று மோகனைப் பார்த்துக் கூறினான். தன் இடுப்பிலிருந்து விதைகள் நிறைந்த சுருக்குப் பையை மோகனிடம் நீட்டி “இது காடு கனிஞ்சு நிலத்துக்கு குடுத்தது. இனி இதையும்…” என்று சொல்லி முடிக்கும் முன்னரே, மோகன் கைகூப்பியபடி அதை வாங்கிக் கொண்டு “சரிய்யா.. சரிய்யா..” என்று அழுது கொண்டிருந்தான்.

செங்குத்தான சதுரகிரி மலைக்கு ஏறும் அந்தப் பாதையின் முனையில் இருந்த சிறு பாறையில் சங்கிலிக் குடும்பன் அமர்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடக்கும் போது ஒரு நொடி ராசமுனி நின்றான். அவரைப் பார்த்துச் சிரித்தான். அவரும் சிரித்தார்.

***

-இரம்யா

***

ரம்யா – விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். இலக்கிய வாசகர். இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தொடர்புக்கு ramya20080625@gmail.com

RELATED ARTICLES

2 COMMENTS

  1. கதை நன்றாக வந்துள்ளது. ‘எலும்புக்கூடுகள் ஒரே மாதிரி இருப்பது போல மிக மெலிந்த மனிதர்கள் ஒரே தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்’ போன்ற தெறிப்புகள் தேர்ந்த எழுத்தாளனின் வரிகள் என்று தோன்ற செய்வன….

  2. Story narrates the struggles of the unfortunate population as a result of continous persecution continuing to this day. The writer stresses that neverthless of their situation education is the key to their liberation. Of course the upliftment of a clan depends on the sacrifices of their ancestors, the writer have expressed it superbly. Enjoyed reading the story. Thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular