1. ஊழி
சாலையோரத்து வீட்டில் வசிக்குமெனக்கு
என் மூச்சுக்காற்றே
இப்படி சத்தமாய் கேட்டதில்லை
இரவுகளில்
உக்கிரமோ
குண்டு மழையோ
துவக்குகளின் சப்தமோ
குருதி அப்பிய செய்திகளோ
எதிரிகளோ
யாருமில்லா போர்ச் சூழல்
காற்றிலும் படியவிட்டிருக்கிறது
அமைதியை
நிர்கதியையே நிரந்தர நியதியாக்கிய
அதிகாரங்களும் அரசியல் வியாதிகளும்
உள்ளீடற்ற கவசம் போல்
ஆடிக்கொண்டிருக்கின்றன காற்றில்
இடைவெளிகள் புதிதில்லையெனினும்
இது வேறொன்று
நாளும் கிழமைகளும் மறந்து
நித்யகாரியங்களுக்கும் செலவுகளுக்கும்
ஊறு நேர்ந்த பின்
பிறழ்வுகளின் விளிம்பில் நின்று
சபிக்கத் தோன்றினாலும் யாரை
யாருமற்ற தெருவில்
உணவுக்காய்ச் சுற்றியலையும் நாயாய்த்
துயருறுகிறது வாழ்வு
ரசாயனச் சேர்மானங்களிலிருந்து விடுதலையாகிறதாம்
காலும் புனலும்
அமிழ்த்தும் நினைவுகளுக்கு
மத்தியில்
சூன்ய நடமிடும்
அம்பலத்தரசன் ஆட்டத்துக்குக்
மட்டும் குறைச்சலில்லை.
***
2. ஒரே அழுத்தலில்
கடல் கடந்த தொலைவின் வாதையைச் சற்றே தணிக்கும்
காணொளி அழைப்பில் பிரசன்னம்
முகலோபனத்தில் வழியும் அமுதை
மறுபடி வரும் வரைக்குமாய்
பரபரப்பாய் சேமிக்கிறேன்
லாகிரியில் கண்கள் நிறைந்து தளும்பி
உடலெங்கும் சட்டென
நீயே பாவி பரவியிருப்பது தெரியாமல்
திரையில் தெரியும் பிம்பத்தோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
இங்கேயும் அப்படித்தானென்கிறாய்
நீயும் நானும்
இப்போதிருப்பது
எவ்வெளியில் கண்ணே.
***
ரவிசுப்பிரமணியன், கவிஞர், எழுத்தாளர், ஆவணப்படஇயக்குனர், இசைக்கலைஞர் என பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.
தொடர்புக்கு : +91 994 004 555 7
ravisubramaniyan@gmail.com