Monday, October 14, 2024
Homesliderரத்தத் துளிகள்

ரத்தத் துளிகள்

குமார நந்தன்

பிரியா முதன் முதலில் நேரு நகருக்கு வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள், சினிமாவில் தேவதையின் வருகைக்கு காட்டப்படும் வெளிப்பாடுகளுடன் அவளை எதிர்கொண்டார்கள். அவள் அவ்வளவு பேரழகி என்பதை விட அவள் எப்படி குணாவுக்கு மனைவியானாள் என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அவர்களைக் கடந்து சென்ற அல்லது அவர்கள் கடந்து சென்ற ஒவ்வொருவரின் கண்களிலும் அந்த செய்தியைப் படிக்க முடிந்தது. பிரியாவிடம் இருந்து ஒரு துயரம் பரவிக் கொண்டு சென்றது. அது எதிர்ப்பட்டவர்களின் மீதெல்லாம் படிந்து அவர்களின் மனத் துயரத்தை விழிக்கச் செய்தது.

குணா இந்த தெருவுக்கு வலது பக்கத்தில் இருக்கும் திலகர் நகரில் கடை வைத்திருக்கிறான். அது மளிகைக் கடை என்றும் சொல்ல முடியாமல் பெட்டிக் கடை என்றும் சொல்ல முடியாமல் இரண்டுங்கெட்டானாய் இருந்தது. அவன் கடைக்கு அருகில் இருக்கும் செட்டியார் மெஸ்சில் பரோட்டாவும் சால்னாவும் பிரமாதமாய் இருக்கும்.

குணா கணக்கு வழக்குகளால் நிரம்பியவன். முட்டாள்தனமான பார்வையும் வணிகத்தனமான சிரிப்பையும் உடையவன். அப்பாவி என்று சொல்லலாம். ஆனால் அப்பாவி என்றால்  நல்லவர்களாக இருப்பார்கள் என்ற பொதுவான பிம்பம் இவனுக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பிரியாவை மனைவியாக அவன் தெருவுக்குள் கூட்டி வந்தபோது ராஜாவுக்கு அருகில் இருக்கும் மொட்டை மாடியில் ஏறி மலர்களை அள்ளி அவள் மேல் வீச வேண்டும் என்று தோன்றியது. அபத்தம்தான் என்றாலும் அப்படி செய்திருந்தால்தான் சரியாக இருந்திருக்கும் என எப்போதும் நினைத்துக் கொள்வான்.

குணா வீட்டுக்கு அடுத்த வீடுதான் ராஜாவினுடையது. அவனோடு அவன் அம்மா மட்டும் இருக்கிறார். அப்பா விபரம் தெரியாத வயதிலேயே காலமாகிவிட்டார். அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கல்யாணம் ஆகாதது ஒரு பெரும் குறையாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. இப்போது அதற்காக அவன் மகிழ்ச்சியடைந்தான்.

உடனே ராஜாவை வக்கிரம் பிடித்தவனாகப் பார்க்க வேண்டாம். அவனிடம் மேல் அதிக திட்டம் எதுவும் இல்லை. பிரியா பேரழகியாய் இருந்தாலும் அவளை அவன் மனதுக்குள் ஆபாசமாய் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும்போதும் ஸ்தம்பித்து நிற்பதும் மனதுக்குள் ஒருமுறை பேரழகி என்று சொல்லிக் கொள்வதும் அவனுக்கு ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது.

பிரியா வந்த ஒரு சில நாட்கள் அந்த தெருவே ஒரு அசாதாரண அல்லது ஒரு அற்புதம் நடந்துவிட்ட இடம் போல இருந்தது. இதோ அந்த வீட்லதான்… புதுசா கல்யாணமான பொண்ணு. அவ எப்படி இருக்கா பாத்தியா. அவ புருசன பாத்தியா? போன்ற பேச்சுகள் தெருவில் சதா கேட்டுக் கொண்டே இருந்தன.  ஆனால் ஓரிரு வாரத்திலேயே எல்லாம் சாதாரணமாகிவிட்டது. அங்கே ஒரு பேரழகி இருப்பதை தெருவாசிகள் மிக சகஜமான ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டனர்.

*  *  *

திருமணம் முடிந்து வந்தவுடன் ஒருவாரம் கடையை மூடிவிட்டு அவளை எங்கெங்கோ வெளியில் அழைத்துக் கொண்டு போனான் குணா. ஒவ்வொரு நாளும் திரும்பி வரும்போது அவன் மிகச் சோர்வாகவும் வெறுப்படைந்தவனாகவும் இருப்பதை ராஜா கவனித்தான். அது வெறும் ஊர் சுற்றியதால் ஏற்பட்ட களைப்பு மட்டும் அல்ல என அவன் யூகித்தான். அது ஏனோ அவனுக்கு அவ்வளவு பிடித்ததாய் இருந்தது. அதே சமயம் பிரியாவின் அந்த மென்மையான முகம் எந்த செய்தியும் இன்றி வெறிச்சென்றிருப்பதைப் பார்த்து அவனுக்கு வியப்பாக இருந்தது. அதில் எப்படியும் ஒரு சின்ன தடயத்தையாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என எவ்வளவு முயற்சித்தும் ஒன்றும் நடக்கவில்லை.

அவன் மட்டுமல்ல அந்த தெருவாசிகள் எல்லோருமே அந்த ஜோடியின் பொருத்தமற்ற தன்மையைக் கண்டு ஒரு பதட்டத்துக்கு உள்ளாகினர். தங்கள் கண் முன்னாலேயே ஒரு அநீதி நடக்கும் போதும் தங்களால் அதற்கெதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதைப் போல ஜோடியாக வெளியே சென்று வரும் அவர்களைப் பார்த்தனர்.

ராஜா ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் பிடித்து தரும் ஏஜெண்டாக வேலை செய்கிறான். அவனுக்கு பகலில் பெரும்பாலும் வேலை இருக்காது. மந்தமான மதிய நேரங்களில் தூங்குவான். மாலையில் எழுந்ததும் வெளியே கிளம்பிப் போவான். தெருமுனையில் இருக்கும் பிரதான சாலையில் கொஞ்சம் கொஞ்ச தூரத்தில் நான்கு டீக்கடைகள் இருக்கின்றன.  அந்த எல்லாக் கடைகளுக்குமே அவன் வாடிக்கையாளன். அப்போதைக்கு எங்கே போகவேண்டும் என நினைக்கிறானோ அந்தக் கடைக்குப் போய் கொஞ்சநேரம் உட்கார்ந்திருப்பான். அதே சமயத்தில் அங்கே வாடிக்கையாக வருபவர்களில் சிலருடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவர்களுடன்  கொஞ்சநேரம் எதையாவது பேசிக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் மாலையாகியிருக்கும். உடை மாற்றிக் கொண்டு வேலைக்கு கிளம்பிவிடுவான்.

 முன்பெல்லாம் இந்த இடம் குடிசைவாசிகளுடையதாய் இருந்தது. பிறகு இப்போதுள்ள முதலாளிக்கு இடம் கைமாறிய பின் அவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.

இப்போது இந்த தெரு ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நீண்ட அடர்த்தியான தெருவாக மாறிவிட்டது. தெருவோரத்தில் விதவிதமான மரங்கள். வீடுகளின் அருகே சிறு சிறு அழகுச் செடிகள். கார் வைத்திருப்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். எல்லா வீடுகளிலும் பைக் இருக்கும். இப்போது அது ஸ்கூட்டியாய் மாறிக் கொண்டிருக்கிறது.

பஸ் ஸ்டாண்டில் தினமும் ஆயிரக்கணக்கான பயண முகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவனுக்கு யார் யார் எங்கே போகக் கூடும் என தெரியும். சென்னை செல்பவர்கள் தான் அவன் இலக்கு. உள்ளுணர்வை அவன் நீண்ட நாட்களாக பழக்கி வைத்திருந்தான். சென்னை போகிறவர்கள் யார்? அவனிடம் டிக்கெட் வாங்கக் கூடியவர்கள் யார் என்பதெல்லாம் அவனுக்கு ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும். அவன் குறிப்பிட்ட அந்த பயணியை அணுகி மிகவும் நம்பிக்கைக்குரிய விதத்தில் சார் சென்னைக்கு போறீங்களா? இன்னும் கொஞ்ச நேரத்தில பஸ் கிளம்புது என்பான். பெரும்பாலும் அவனுடைய கணக்கு சரியாய் இருக்கும்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுவிட்டன. சீக்கிரமாய் வீட்டுக்கு வந்துவிட்டான்.

வண்டியில் வந்து வீட்டுமுன் நின்றபோது, அம்மா பக்கத்து வீட்டில் இருந்தார். இவனைப் பார்த்ததும் இதோ வந்துட்டேன் என பிரியாவிடம் சொல்லிவிட்டு வந்தார்.

ராஜா உடை மாற்றிக் கொண்டே அந்த ஆள் எங்க போயிட்டான் அந்தப் பொண்ணு என்ன சொல்லுது என சம்பிரதாயமாகக் கேட்பது போல் அம்மாவிடம் கேட்டான்.

அவன் யாரையோ பாக்கணும்னு சாயந்திரமே போனான் இன்னும் காணோம். அந்த பொண்ணு என்ன சொல்லுது பாவம். அவங்க அம்மா சின்ன வயசுலயே இறந்துட்டாங்களாம். அப்பாவுக்கு கூலி வேலை. இந்த குணா டவுன்ல பெரிய மளிகைக் கடை வச்சிருக்கேன்னு சொல்லி வேற எந்தக் கடையவோ காட்டியிருக்கான். அவருக்கும் சந்தேகம் எல்லாம் வரல. வேலைக்கு ஆளுங்கள வெச்சிருக்கார்னு நினைச்சிகிட்டார். அவ்வளவு பெரிய கடையில போய் விசாரிச்சிப் பாக்கணும்னெல்லாம் அவருக்கோ அவங்க சித்திக்கோ தோணல.

ராஜாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இப்படியெல்லாம் கூட துணிந்து ஏமாற்றுவார்களா? குணாவின் மேல் இருந்த வெறுப்பு மேலும் கூடி பிரியாவின் மேல் இருந்த அனுதாபம் அல்லது ஏதோ ஒன்று இன்னும் கூடியது.

மறுநாள் இரவு அவன் வரும்போது பிரியா வீட்டில் ஏதோ சச்சரவாய் இருந்தது. குணாவின் குரல் ஓங்கி ஒலித்தது. அவள் அழுதபடியே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ராஜா வெறுப்பாய் வீட்டுக்குள் போனான்.

கல்யாணம் ஆகி வந்த புதிதில் பிரியாவையும் கடைக்கு வரச் சொல்லியிருக்கிறான். இவளும் காலையில் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கடைக்குப் போயிருக்கிறாள். அந்த வழக்கம் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

செட்டியார் மெஸ்சுக்கு பரோட்டா சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் இவன் கடைக்கு வர மாட்டார்கள். அங்கே வருபவர்கள் எல்லாம் பட்டறைக்காரர்கள், தறிக்காரர்கள் என ஒரே ரகமாய் இருந்தனர். பிரியா கடைக்கு வந்ததும், அவன் கடைக்கு கூட்டம் அதிகமானது. அந்த மிதமிஞ்சிய வாடிக்கையாளர் வருகையைக் கண்டு பயந்து போய் அவளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டான்.

வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை. வேலைக்குப் போகிறேன் என குணாவிடம் கேட்டிருப்பதாக பிரியா ராஜா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

குணா அப்படியெல்லாம் பிரியாவை வேலைக்கு விட மாட்டான் என்றுதான் ராஜா நம்பிக் கொண்டிருந்தான். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் பிரியா வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள்.

பஸ் ஸ்டாண்டில் உள்ள பிரபலமான நகைக்கடையில் வேலை. ராஜா தினமும் வேலைக்குப் போகும்போது அந்த நகைக்கடை வழியாகத்தான் போவான். இப்போது அப்படி போகும்போது கடைக்குள் பிரியா தென்படுகிறாளா என திரும்பிப் பார்த்துக் கொண்டே போகிறான். சாலையில் இருந்து உள்ளே யாரையும் பார்க்க முடியாது என்றாலும் அவனால் அந்தப் பழக்கத்தை விட முடியவில்லை. பின் தங்க நகைக் குவியலுக்கு இடையே பிரியா நிற்கும் தோற்றம் அவன் கண்ணுக்குள் தென்படும். சந்தேகம் இல்லாமல் அந்த இடத்தில் நகைகளை விட அவள் அழகுதான் ஜொலிக்கும் என அவனுக்குத் தெரியும் அல்லது அப்படி கற்பனை செய்து கொள்வது அவனுக்கு எளிதாகவும் விருப்பமாகவும் இருந்தது.

பிரியா ஒரு ஏழைப் பெண், அவளுக்கு அம்மா இல்லை, குணா அவளை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டு வந்துவிட்டான் என்ற செய்தி அந்தத் தெருவெல்லாம் பரவிவிட்டதால், குணா மீதான கசப்பு வெளிப்படையாகப் பல மடங்காக தெருவாசிகளிடம் கூடியிருந்தது.

அன்று பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால் இருக்கும் சிக்னலில் ராஜா நின்று கொண்டிருந்தான். மாசடைந்த காற்று அவன் முகத்தில் படியவைத்திருந்த கார்பன் துகள்களைக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அவர்களைப் பார்த்தான். பிரியாவுடன் இன்னொருவனும் என்னவோ பேசியபடி அந்த சாலையோரம் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

அவன் மீண்டும் மீண்டும் பார்த்தான் எப்படிப் பார்த்தாலும் அவள் பிரியாவாகவே இருந்தாள். அவர்கள் நடந்து சென்ற விதம் அவர்கள் வெறும் நண்பர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று சொன்னது.

ராஜாவை முதலில் ஒரு துயரம் கவ்வ முயன்றாலும் பின் எழுந்த ஒரு மகிழ்ச்சியின் அலையில் அவன் உள்ளுக்குள்ளாக துள்ளிக் குதித்தான். ஏனென்றால் பிரியாவுடன் இருந்தவன் அவளுக்கு ஏற்ற அழகனாய் இருந்தான். ஏதோ ஒரு பிடிபடாத குற்ற உணர்வு அவனை விட்டு விலகியதைப் போல இருந்தது. சிக்னல் விளக்கு ஆரஞ்சு நிறத்துக்கு மாறியது. வாகனங்களின் உறுமல் ஓசை சீராக உயர்ந்து, பச்சை ஒளிர்வைக் கண்டதும் சாலையில் வாகனங்களின் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது.

அவன் அதை யாரிடமும் சொல்லவில்லை. பிரியாவைப் பார்க்கும்போது இன்னும் சிநேகமாக புன்னகைக்க வேண்டும்போல இருந்தது. அடுத்த சில நாட்களிலேயே அந்த இளைஞனோடு வண்டியில் வந்து வீட்டுக்கு முன் இறங்கினாள் பிரியா.

அப்போது அவர்களைப் பார்த்த அந்த தெருவாசிகள் எல்லோருமே அவனைப் போலவே தான் நினைத்தனர். இதுதான் சரியான ஜோடி. ராஜாவின் அம்மா கூட என்னடா இந்தப் பொண்ணு இப்பிடிப் பண்ணிட்டா என்றாலும், பின், ஆனா இவங்களப் பாத்தாதாண்டா கண் நிறைஞ்ச ஜோடியா தெரியுது. இந்தப் பொண்ணுக்கும் அவனுக்கும் இது இப்ப வந்த பழக்கமா இருந்திருக்காது. அவங்க ஏற்கனவே காதலிச்சிருக்கனும் என்றார்.

அதன்பின் அவர்கள் தெருவில் அடிக்கடி தென்பட்டார்கள். யாரும் அவர்களை கண்ணியக்குறைவாகவோ, இகழ்ச்சியாகவோ பார்க்கவில்லை. சாஸ்திர, சம்பிரதாயங்களின் குரல்கள் அவர்களின் மனதில் அலறினாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்கவே விரும்பினார்கள். இந்த விசயத்தை யாரும் குணாவின் காதுகளுக்கே கொண்டு போகவில்லை. அவன் இன்னும் சரியாக ஏமாற்றப்பட வேண்டும் என தெருவாசிகள் எதிர்பார்ப்பதைப் போல இருந்தது.

ஒரு மாதத்திற்கும் மேலாக இது தொடர்ந்தது. இரவில் வீடு திரும்பும் குணா அவனுடைய இயற்கையான சந்தேகப்புத்தியால் பிரியாவை அடிப்பதும் துன்புறுத்துவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பிரயாவின் அழகிய பிசிறில்லாத குரலிலிருந்து எழும் அலறல் இரவில் தெருவெல்லாம் எதிரொலித்தது.

ராஜாவின் அம்மா மட்டுமல்ல இன்னும் அக்கம்பக்கத்தில் இருக்கும் பல பெண்களும் பிரியாவிடம் சொல்லிவிட்டார்கள். இன்னும் இவங்கூட ஏம்மா சின்னப்பட்டுகிட்டு இருக்கற. அந்தத் தம்பி கூட எங்கியாவது தூரமா போயிடு. சீக்கிரம் ரெண்டு பேரும் இங்கிருந்து போயிடுங்க. இவன் உன்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுருவான்.

பிரியா தலையை குனிந்து கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பாள். அவள் மனதில் என்ன திட்டம் இருந்ததோ கடவுளோ அல்லது சாத்தானுக்கோதான் தெரியும்.

ஆனால் அது தானாகவே நடந்தது. அன்றைய நாள் எந்த வித்தியாசமும் இல்லாமல் வழக்கம்போலவே இருந்தது. காலையில் குணா கடைக்குப் போனான். பின் பிரியா நகைக் கடைக்குப் போனாள்.

மாலையில் ராஜா பஸ் ஸ்டாண்ட் போனான். இரவு வீடு திரும்பிய குணா வழக்கம்போலவே பிரியாவை அடித்து நொறுக்கினான். இரவு அமைதி கடந்து செல்ல, விடியற்காலை நேரத்தில் குணா செத்துப் போயிருந்தான்.

சூரிய உதயத்திற்கு முன்பே பிரியாவின் அலறல் தெருவை உலுக்கி எழுப்பியது. காலையில் அவனிடம் இருந்து விநோதமான சத்தம் வந்ததாகவும், பிரியா பயந்துபோனவளாய் எழுந்துபோய் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதை குடிக்கும் முன்பே அவன் தலை சாய்ந்துவிட்டதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இளம் வயதுதான் என்ன செய்வது சிலருக்கு இப்படி மாரடைப்பு வந்துவிடுகிறது என பிரியாவின் வீட்டில் குவிந்த ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். தங்களுக்குத் தெரிந்த இளம் வயதில் மாரடைப்பால் இறந்தவர்களின் பட்டியல் ஒன்று அங்கே தயாராகிக் கொண்டிருந்தது. எல்லோர் மனதில் ஒரு சந்தேகமும் அதன் பின்னாலேயே அப்படியெல்லாம் இருக்காது என்ற சமாதானமும் எழுந்தது.

அந்த தெருவில் யாரோ ஒருவருக்கு அந்த சந்தேகம் வலுவாய் ஆட்டிப் படைத்திருக்கிறது. அவர் குணாவின் வீட்டுக்கு வரவில்லை. வந்து பிரியாவின் முகத்தைப் பார்த்திருந்தால் ஒருவேளை அந்த சந்தேகம் அத்தனை வலிமையாய் இருந்திருக்காது. அவரின் அநாமதேய போன் கால் மூலம் போலீசார் குணாவின் வீட்டுக்கு வந்தனர்.

மக்களின் கடுமையான எதிர்ப்பு, பிரியாவின் குற்றம் சொல்ல முடியாத தோற்றம், சந்தேகம் என ஒருவரும் புகார் அளிக்காதது போன்றவற்றால், பிரேதத்தை எரிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடு போலீசார் திரும்பிச் சென்றுவிட்டனர்.  

அதன்பின் பிரியா அங்கேயேதான் இருந்தாள். மீண்டும் நகைக் கடைக்கு வேலைக்குப் போனாள். அவள் காதலன் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டுக் கண்ணியமாக் திரும்பிச் சென்றுகொண்டிருந்தான்.

தெருவாசிகள் அவன் யார் என்று விசாரித்தார்கள். அவன்  பெயர் விநோத். அப்பா அம்மா இல்லை. பணிவும் அமைதியும் நிரம்பியவன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான்.

ஆறு மாதங்கள் கழித்து பிரியாவை அவன் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ராஜாவிடம் சொன்னான். ராஜா அதை அம்மாவிடம் சொல்ல அவர்களின் திருமணத் தேதி முடிவு செய்யப்பட்டது.

முன்பாக, குணாவின் பெட்டிக் கடையில் இருந்த பொருட்களையெல்லாம் ஏதோ ஒரு விலைபேசி பக்கத்தில் இருந்த பெரிய மளிகைக் கடை ஒன்றுக்கு தந்துவிட்டு கடையை காலி செய்தார்கள்.

 ரிஜிஸ்டர் அலுவலகத்தில் எளிமையாக நடந்த அந்த திருமணத்திற்கு ராஜா, அவன் அம்மா பிரியா குடியிருக்கும் வீட்டுக்கு சொந்தக்காரர் மற்றும் விநோத்தின் நண்பர்கள் இருவர் மட்டும் வந்திருந்தனர்.

அன்று மதியம் பிரியாவின் வீட்டிலேயே எளிமையான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்பதி சார்பாக ராஜாவே தெருவாசிகள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தான்.

பிரபலமான கடையில் இருந்து தருவிக்கப்பட்ட சாப்பாடு சரியான நேரத்திற்கு வந்திறங்கியது. முதலில் யாரும் வராததைப் போல தெரிந்தாலும் பின் ஒவ்வொருவராக தெருவில் இருந்த எல்லோருமே வந்துவிட்டனர். ஒவ்வொருவரும் வீட்டுக்குத் தேவையான எளிய பரிசுப் பொருட்களோடு வந்து இருவரையும் வாழ்த்தினர். மாலையிலேயே அவர்கள் மணமகன் வீட்டுக்கு போக இருப்பதால் அவர்களை வழியனுப்ப எல்லோரும் அங்கேயே கதை பேசிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாடகை கார் மாலையில் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது. இருவரும் ஒவ்வொருவரிடமும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நெகிழ்ந்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

கார் தெருவை விட்டு பிரதான சாலைக்கு சென்று மறைந்த கொஞ்ச நேரத்தில் சூறைக்காற்று வீச ஆரம்பித்தது.  எல்லோரும் அவசர அவசரமாக வீடு திரும்பினர் பெண்கள் துவைத்து காயப்போட்ட துணிகளை வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர்.

இயந்திரம் ஒன்றை முடுக்கியது போல சட்டென மழைத் தூறல் விழ ஆரம்பித்தது. ஒரு சில நிமிடங்களில் எழப்போகும் மண்வாசனையை நுகருவதற்காக எல்லோரும் காத்திருந்தனர். ஆனால் மண்ணில் இருந்து ரத்தவாடை வீசியது. அது வேறெங்காவது வீசுகிறதா என சுற்றிச் சுற்றிப் பார்த்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் மழைநீருடன் செந்நிறக் கோடுகள் கலந்து விழுவதைக் கண்டனர். கைகளில் ஏந்திப் பார்த்தபோது அது ரத்தமாய் இருந்தது.

பனிக்கட்டி மழை தெரியும். மீன் மழையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது என்ன ரத்த மழை என புரியாமல் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டனர். உயரமான மரங்களின் இலைகளில் இருந்தும், வீட்டுக்கு முன் இருந்த செடிகளில் பூத்திருந்த மலர்களில் இருந்தும் ரத்தம் வழிந்தோடியது. ராஜா அதை போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டான். இன்னும் நிறைய பேரும் ரத்த மழையை வீடியோ எடுத்தனர்.

ராஜா தெருவில் ரத்தம் கலந்து ஓடிய மழைத் தண்ணீரை ஒரு பாட்டிலில் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டான். எப்படி ஆரம்பித்ததோ அப்படியே பத்து நிமிடத்தில் மழை சுவிட்ச் போட்டதைப் போல நின்றுவிட்டது. அப்போது அந்தத் தெருவைத் தவிர வேறு எங்கும் மழை பெய்திருக்கவில்லை.  

குமாரநந்தன் – சேலத்தில் வசிக்கின்ற இவருக்கு இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ‘நகரப் பாடகன், பூமியெங்கும் பூரணியின் நிழல்’ ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தொடர்புக்கு – kumaarananthan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular