யாஹையூம் – யாகையூம்

0

பாலைவன லாந்தர்

யாஆஆஆஆஆஆஆ
யாஹக் யாஹக் யாஹக்
யாஹக் யாஹக் யாஹக்
யாஹக் யாஹக் யாஹக்
யாஹக்கூ யாஹக்கூ யாஹக்கூஊஊஊ
யாஹய்யூம் யாகைய்யூம்
யாஹையூம் யாகையூம் யாஹையூம் யாகையூம்”

இரண்டு கைகளால் தனது இரண்டு மார்பிலும் மாற்றி மாற்றி அறைந்து அறைந்து ஒருத்தி கூக்குரலிட்டு வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி இறக்குகிறாள். எனக்கு எதிர்புறமாக அமைந்திருந்த வராண்டாவின் வலது மூலையிலிருந்து இரண்டாவதாகப் படுத்திருந்த பெண் தற்போது குத்திட்டமர்ந்து அலறத் தொடங்கியிருக்கிறாள். அவளுடைய குரல் மற்ற யாரையும் தொந்தரவு செய்யவில்லை, ஏனெனில்… இந்த இடம் அப்படியானது. யாருமே அவளது குரலைக் கேட்கவில்லை. சிலர் மருந்துகளின் உதவியுடனும் சிலர் மாயைகளின் உதவியுடனும் தங்களை மறந்துக் கிடக்கின்றனர். இவளைப் போல இன்னும் சிலரும் ஆங்காங்கே பிதற்றிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். எனினும், இவள் கட்டுக்கடங்காத ஆக்ரோஷத்தில் இருக்கிறாள். என் வாழ்வில் நேரிடையாக நான் கண்ட உச்சபட்ச வலியிது.

கண்கள் மட்டும் தெரியும் பர்தாவினால் மறைக்கப்பட்ட உருவமது. எந்தச் சலனமுமில்லாத விழிகளின் வழி ஒரு பெண்ணை எப்படிப் புரிந்துகொள்வது. சில சமயங்களில் என்னை மட்டுமே வெறித்துப் பார்ப்பதாகத் தோன்றும். அவளுடைய நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அவளின் மீதான ஈடுபாட்டை வளர்த்தெடுக்கிறது. முழுதாக ஏழு இரவுகள் கடந்துவிட்டன, ஒவ்வோர் இரவும் இதே வசனங்களுடன் இதே உச்சஸ்தாயிலில் தொடங்குகிறாள். அவளுடைய நடு இரவுகளை மூன்றாகப் பிரித்து வைத்திருக்கிறாள். முதலில் கோபத்தை இறக்கி வைக்கும் காளியின் தோரணையில் ஆணிலிருந்து மருகும் பெண்ணின் குரலில் ஓங்கிக் கூப்பாடிட்டுப் பேசுகின்றாள், பிறகு மலைக்காட்டுக் குரங்குகள் தனது மரித்தக் குட்டியை இறக்கிவிடாமல் பிதற்றுமே அந்த ஈனக்குரலில்,

“ஐயோ எந்தன் கைசேதமே

ஐயோ எந்தன் கைசேதமே

ஏ மக்கச் சீமானுவளா எம்புள்ளய கொண்டாந்து தாங்களே பாலு கொடுக்கணும்லோ… பசிச்சுக் கத்துறது ஒம்ம செவுட்டுக் காதுகளுக்கு கேக்கலியோ… பச்சமண்ணு எம்புள்ள அழுவியழுவி இன்னுஞ் செவந்துப் போவுதுவே தொண்டக்குழிக் காஞ்சு மசங்கிப் போயிடும்மோய்… ஈவு இரக்கமில்லையா… அல்லாவோட தண்டனைக்கு ஆளாவாதீயோ எம்புள்ளக் கதறுதே…. யாராச்சும் தூக்கித் தாங்களேன்ன் எண்ட ரஹ்மானே ஈரக்குலக் கருகுதே… கீவயிறு கனத்துக்கெடக்கு. மேலுக்கு நோவுப்புடிக்க பாலுக்கட்டிப் போச்சே… நா என்னத்துக்கு இன்னும் ஹயாத்தோடக் கெடக்கேன். மௌத்துல மலக்க இறக்கித் தாவேன் நாயனே”

முதன்முதலாக இந்தக் குரலைக் கேட்கும் போது மின்சாரத்தைத் தொட்டது போல உடல் வெட்டிக்கொண்டேன். பதின்ம வயதையொட்டிய தோற்றத்தில் இருந்தவளின் எதிர்மறைச் செயல்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மரப்பாச்சிக்கு போர்வைப் போர்த்தியதுபோல் ஒடிந்துவிழும் வளைவுகள். அவளுடைய குரலுக்கும் உருவத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இது இராமேஸ்வரத்திலிருந்து முப்பது கிலோமீட்டருக்குள் இருக்கும் ஒரு கடற்கரையோர தர்கா (இஸ்லாமிய மக்களில் நல்லடியாருக்கான அடக்க ஸ்தலம்) இங்கே சில அற்புதங்கள் நிகழ்கின்றதெனவும் பில்லி சூனியம் ஏவல் போன்ற சித்துவேலைகளைத் தீர்த்துவைக்கும் வைத்தியம் நடப்பதாகவும் நம்பிக்கைக் கொண்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து இங்கேயே நாட்கணக்கில் தங்கியிருந்து ஓரளவு தெளிவானதாக நம்பியவுடன் திரும்பிச் செல்கின்றனர். ஏர்வாடி, நாகூர், கோவளம் போன்று இங்கேயும் எல்லாவிதமான மதத்தினரும் வருவதனால் கிட்டத்தட்ட இந்த இடமே கொஞ்சம் பரபரப்பாகத்தானிருக்கும். ஆண்களுக்கு ஒருபுறமும் எதிர்த்தாற்போல் பெண்களுக்கும் மண்டபம் போன்ற நீண்ட தரைத்தளம் இருக்கும் நான்கடி உயரத்தில் அமைந்த வராண்டாவில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி மேற்கூரையை உயர்த்தி இருப்பார்கள். ஒவ்வொரு தூணின் அருகிலும் மனநிலைப் பிறழ்ந்தவர்களை சங்கிலியால் பிணைத்திருப்பதைக் காணலாம். சிலர் சாதாரணமாகவே இருப்பார்கள். இங்கே யார் பிறழ்ந்தவர், யார் தெளிவானவரென்பது சமயங்களில் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

எனக்கென உறவுகள் யாரும் இல்லை. எங்கே, எப்போது, எப்படிப் பிறந்தேனென்று தெரியாமல் வளர்ந்துவிட்டதால் எல்லோரிடத்திலும் யாரையாவது தேடுவது ஓர் அலாதியானப் பழக்கமாகிவிட்டது. என் வயது எத்தனையென எனக்குத் தெரியாது. நானாக ஓர் இலக்கத்தை உடலின் மீது போர்த்திக் கொண்டேன். இடது காலில் ஆறுவிரல்களோடு பிறந்ததால் மட்டுமே என்னைப் பெற்றவள் விட்டுச்சென்றதாகப் பொய்யாக நம்பிக்கொண்டேன். வருடத்தின் ஆறு மாதங்கள் பணம் சேர்க்க ஓடிக்கொண்டிருப்பேன். ஓரளவு போதுமான தொகை சேர்ந்தவுடன் வடக்கிலிருந்து தொடங்கி பயணப்பட்ட பகுதியில் இப்போது தென்னாட்டில் இருக்கிறேன். ஒவ்வொரு தளத்திற்கேற்றாற் போல் பெயர்களைப் புனைந்து கொள்வேன். இப்போது எனது பெயர் அஹமது. அசோக்கிற்கும் அஹமதிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. ‘பசியும் பிணியும் சூழாத வாழ்வைக் கேள் மனிதா…’ என் கோட்பாடிதுவே.

இந்த தர்காவின் நுழைவாயில் அருகே தேநீர்க்கடை வைத்திருக்கும் முத்துவாப்பாவுடன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பேன். முத்துவாப்பா பழுத்தக் கதைசொல்லி. ஐம்பது சதவீத சொந்தக் கற்பனைகளை நிஜங்களுடன் பிசைந்து கதை சொல்லுவார். மலபார்கட்டு புகைந்து மணக்கும் உதட்டின் ஓரமாக பீடியைப் பற்றவைத்து அது பாதி எரியும்வரை தாடியைச் சொறிந்துக் கொண்டே புருவம் சுருக்கி தனக்குள் ஒத்திகை செய்துகொள்வார்.

அதில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சேர்க்க வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என எல்லாமே அடங்கிவிடும். செருமலோடு “தம்பி அஹமது நீ நம்பமாட்டே” என்றே தொடங்குவார். நான் நம்பியாக வேண்டிய கட்டாயத்தை உணர்த்தும் ஒப்பந்தம் அது. அடிக்கடி கைலியை உதறி மீண்டும் மடித்து அடிவயிறு வரைச் சுருட்டி கட்டிக்கொள்வார்.

முத்துவாப்பாவிடம், அந்தப் பெண் மீது எனக்கான ஈடுபாட்டைக் கூறியபோது சிலநொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு “சீக்கிரமே இந்த இடத்தை விட்டு சென்றுவிடு தம்பி” என்று சொன்னார்.

வாரணாசி, காசி, அஜ்மீர், ஹாஜி அலி அப்பா தர்கா போன்ற வடமாநிலங்களைச் சுற்றித் திரிந்திருக்கும் போதே தென்மாவட்டங்கள் என்பது தோண்டத் தோண்ட அதிசயங்களைத் தரும் அற்புத ஊற்றென வழித்தோழர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது எனக்குத் தோன்றிய ஆர்வம் இன்றளவும் நீடிக்கிறது.

இப்பெண் இன்னுமோர் அதிசயம். அவளது விசும்பல் இப்போது தனது வீரியத்தைக் குறைத்துக் கொண்டது. சற்று நேரத்தில் விடிந்துவிடும். இதுதான் அவளின் முக்கியத் தருணம். தனது இரண்டு கைகளையும் சோம்பல் முறிப்பது போல மேலே இழுத்துச் செல்கிறாள் இரண்டு கைகளையும் உள்ளங்கையோடுப் பிணைத்து பின்மண்டை வழியாக முதுகுவரை இறக்கி சர்ப்ப நடனமாடும் பெண் போல வளைந்து நெளிந்து முழங்கால்களைக் குத்திட்டு அழத் தொடங்குகின்றாள். சட்டெனச் சாலையோர சர்க்கஸ் சிறுமியைப் போன்று அந்தக் கை வளையத்திற்குள் தனது முழுவுடலை நுழைத்து மறுவழியாக வெளியேறி விடுவாள்.

இவளுடைய இரவுகளின் இந்த மூன்று வாக்குமூலங்களையும் அதன் தீர்ப்புகளையும் யாரிடம் முறையிட்டுப் பெற்றுத் தருவது, இவளுக்கு எப்படியாவது உதவி செய்தாக வேண்டுமென எனக்கேன் தோன்றுகிறது.

முதலில் ஒருமுறையேனும் அந்த முகத்தைப் பார்த்தாக வேண்டும். எப்படி இருப்பாள்.? உடைந்த பீங்கான் குடுவையை தார்ச்சாலையில் உராய்க்கும் போது ஒரு சப்தம் வருமே அதைப்போன்றக் குரலுக்குரிய முகம் எப்படி இருக்கும்.?

“ஹாராம் ஹராம் ஹராம்

ஹராமிகளா

நரகத்துக்குப் போவியோ நாசமாப் போறவுகளா

அன்னிக்கு மழவுட்டப்பாடில்ல கேட்டியளா

பொட்டலாப்போன இடியும் மின்னலும் வயித்துக்குள்ளாவ எங்கதிய வெட்டிப்போட்டிச்சு

கொடலோடக் கொடலா எம்புள்ள என்னியப் பாத்துச்சு

சீனியப்பா

சீனியப்பா

செய்யும் பூரானும் புடுங்கித் திங்க

மண்ணோடு மண்ணாக பொதச்சுப் போட்டாக

பொட்டலாப் போவானுக

பொட்டலாப் போவானுக”

அடுத்த இரவு வரை அசந்து தூங்கிவிடுவாள். அவளுக்கு எதுவும் தெரியாது, மூத்திர வாடையோடு கந்தத்துணிபோலவே கிடப்பாள். அவளின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அவளைவிட முதிர்ந்தக் கிழவியொருத்தி எப்போதாவது தடிக்கம்பை ஊன்றியபடி வந்துச் செல்வாள்.

நாட்கள் நகர்ந்ததேயன்றி அவளுடைய இரவுகள் அமைதியடைந்ததாகத் தோன்றவில்லை.

தர்காவிலிருந்து சில அடிகள் நடந்தால் போதும் தெளிந்த நீரோடை போன்ற கடற்கரையில் கால் நனைக்கலாம். அலைகள் இல்லாத கடலோரத்தில் கடலுக்குள் மிதக்கும் பாசிகளை, மீன்களை, சிப்பிகளைத் தெளிவாகப் பார்ப்பது மனதிற்கு இனம்புரியாத அமைதியைத் தரும். தமிழகத்தின் மிக முக்கியக் கடற்கரை இது. உலகிலிருந்து பிடுங்கி வேறொரு தீவினுள் கிடப்பது போல கடல் பார்த்துக் கிடப்பேன்.

அன்று கடலோரத்தில் கிடக்கும் தடித்த மரத்தின் வேர் எனது பாதங்களை உரசியது. அதை உற்றுப்பார்க்கும் போது ஆறு விரல்களாகத் தெரிந்தன. மண்டைக்குள் ஏதேதோ சிந்தனைகள் ஓடின. சில நொடிகள் உறைந்து பின் உடைந்து, அந்தக் கிழவியிடம் ஓடி வந்தேன். அவளைப் பிடித்து உலுக்கி அப்பெண் குறித்த தகவல்களைச் சொல் என வற்புறுத்தினேன்.

“அத்தா… அந்தப்புள்ள மலேயா சீமபுள்ள… எங்கூட்டுக்காரரரு பாக்கக்கூடாத எடத்துல பாத்துப்போட்டு கம்மாயப்பட்டு இதக்காப்பாத்துணும்மொன்னு கூட்டாளியக்கூட போயி தப்பிக்க வச்சுட்டாவோ… அங்கனவுள்ள ஆரோ சேதி சொல்லி சுத்திப்போட்டு கையத்துண்டாக்கி முச்சந்தில வீசிட்டாவோ… அப்பயும் இதக் காட்டிக் கொடுக்காம கப்பக்காடி ஏறியெறங்கி ரெண்டு பொறைக்கு முந்தித்தான் உசுர கையில புடிச்சுக்கிட்டு வந்து சேர்ந்தாவோ”

“ரெண்டு பொறைன்னா ரெண்டு மாசமா பாட்டி?”

“ஆமாத்தா… ரெண்டு மாசந்தேன் ஆவுது, போன தேப்பொறையில் அவுக மௌத்தாகிட்டாவோ (விசும்புகிறாள்) இது யத்தீமாகிடுச்சு. கல்பு கெட்டு ஒய்யாம கத்திக்கிட்டே கெடந்திச்சு. ஹசரத்த வச்சு ஓதிப்பாத்தோம். யாருக்கும் ஒன்னும் வெளங்கல. எம்புள்ளைகளால இத ஏத்துக்க ஏலல.  ஊட்டவுட்டு தொறத்தி போச்சுவோ எனக்கு மனசு தாங்கலத்தா… ஹ்ம்ம்… நாம பேசுறது இவளுக்கு வெளங்காது… இவ பாஷயும் யாருக்குந் தெரியாது. எங்கன பொறந்து எப்படி வளந்திச்சோ… இங்கன வந்து நாய் படாத பாடுபடுது. நாந்தேன் ஆயிசான்னு பேரு வச்சி கூட்டியாந்து சேத்தேன். சீனிய பாத்தேன். சரிச்செய்யணும். அல்லாவோட கிருபைய அளவூடு செய்ய முடியுமா… அதுக்கு ஆயிசான்னா என்னா அனிதான்னா என்னா?”

“பாட்டி என்ன சொல்றீங்க இவளுக்கு… இவங்களுக்கு தமிழ் தெரியாதா…!”

நாக்கு ஒட்டிக்கொண்டு வார்த்தை வெளிவரவில்லை.

பாட்டி பேசிக்கொண்டிருக்கும் போதே என்னுடைய கண்கள் இருட்டி நாக்குச் சுழற்றி தொண்டைக்குளும் ஏதோ சுழல, என்னை நானே பாறாங்கல்லைப் போல் சுமந்து இன்ச் இன்ச்சாக நகர்ந்து போய் அவளுடைய கால்களை வலுக்கட்டாயமாக இழுத்து சங்கிலியை நகர்த்தி, சாராயைக் கழற்றினேன்.

இரண்டு கால்களிலும் ஆறு ஆறு விரல்கள்.

***

பாலைவன லாந்தர். தற்பொழுது கத்தாரில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம், ஓநாய் என்று மூன்று கவிதைத்தொகுப்புகள் வந்துள்ளன. சுயாதின குறும்படங்கள் இயக்குவது, தமிழ் மன்ற அமைப்பில் பணியாற்றுவது என செயல்பட்டு வருகிறார். மின்னஞ்சல் – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here