Wednesday, April 17, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 15 //அரங்கம் என்பதும் ஊடகமே

யாளி பேசுகிறது – 15 //அரங்கம் என்பதும் ஊடகமே

                                                                                                                                                      (யாளி பேசுகிறது – 15)

              ஜீவகரிகாலன்

டீமானிட்டைசேஷன் என்று சொல்லப்படும் பணத்தை மதிப்பிழக்கச் செய்யும் யுக்தியை மத்திய அரசு கையாண்டது 500 மற்றும் 1000 ரூபாய்களில், அதே போல பொதுமக்களிடம் இருந்து கடைகளும், நிறுவனங்களும் 2000 ரூபாய்த்தாள்களை வாங்கிக்கொள்ள மறுப்பதும் டீமானிட்டைசேஷன் தான் என்று அரசாங்கம் புரிந்துகொள்வதில்லை. ஆக ANTI-INFLATIONARY (பணவீக்கத்தைத் தடுக்கும் முயற்சியாக –இவர்கள் உருவாக்கியப் பணத்தட்டுப்பாடு) நடவடிக்கை, முறைப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படாததால். ஒரு பக்கம் சிறுவியாபாரிகள் , உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், விலைவாசியைக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு எகிற வைத்துவிட்டது என்று யாளி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கும் சற்று அதிர்ச்சி தான்.

என்ன செய்ய சென்ற வருடம் எல்லோரும் இணையத்தில் வானிலை அறிக்கைச் செயலிகளை தரவிரக்கம் செய்து மழையின் வருகையை ஊகித்ததுபோல். இந்த வருட இறுதியில் இப்படி மழைக்காளான்களாய் பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில். இந்த நிர்வாண நகரத்தில், அண்டர்வேர் அணியாத யாளி பொருளாதார நிபுணராவதில் என்ன தவறு?

தக்ஷிணசித்ராவில் இந்த மாதம் இரு முக்கியக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று வஜிரா கேலரியில் அனாமிகாவின் படைப்புகளும். காதம்பரி கேலரியில் ராமு மற்றும் அந்தோனிராஜின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கணபதி சுப்ரமணியன், ஓவியம் மீது ஆர்வம் கொண்ட நபர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வாரயிறுதி நாட்களிலும் வரைய ஆரம்பித்து சென்னை வீகெண்ட் ஆர்டிஸ்ட் என்று இயக்கமாகவே செயல்பட்டுவரும் அமைப்பினைத் தொடங்கிய நபர்களில் ஒருவர். அவருடன் இணைந்து கேலரிகளுக்கு சென்று வர விரும்பி சொல்லிவைத்திருந்தேன். பொதுவாக ஓவியக் கண்காட்சிகளில் தொடக்க நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் ஆள் அரவமற்று தான் இருக்கும். அப்போது சென்று வந்தால் ஓவியங்களை சற்று சாவகாசமாக பார்த்துவரலாம். என்ன ஒரு சிக்கலென்றால், விளக்குகளை நாம் தான் போட வேண்டும், ஒருவேளை அங்கு காப்பாளர் இருந்தால் இன்னும் சிக்கல் தான் நாம் நகர நகர விளக்குகள் அணைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனாலும் இரட்டை நாக்குகள், வெற்றுப் புகழ் பேச்சுகள், போலிப் பாராட்டுகள் இல்லாமல் படைப்புகளைப் பார்க்க தொடக்க நாளை மட்டும் புறக்கணித்தல் உசிதம்.

சென்னையில் லலித்கலா, சோழமண்டலம் தவிர்த்து மற்ற அரங்குகள் பெரும்பாலும் அபார்ட்மெண்டுகளாகக் கட்டப்பட்டவையே, ஆர்ட் ஹவுஸ், வேதா போன்ற கேலரிகளில் முக்கியமான கண்காட்சிகள் பல அமைக்கப்பெற்றாலும் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்ப்பது ஒரு வகையான அசூயை தான். ஃபோரம் ஆர்ட் கேலரியில் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும். சென்னை அரசு மியூசியத்தின் மாடர்ன் ஆர்ட் கேலரியில் SG வாசுதேவின் சிற்பங்களுக்கு அருகில் லோகோமோடிவ் மினியேச்சர் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து “பஹுத் அச்சி க்ரியேடிவ் டிஸ்ப்ளே” என்று யாராவது சொல்லும்போது கேட்டிருந்தால் உங்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படலாம். எல்லாவற்றுக்கும் உச்சபட்சமாக சென்னை ஓவியக் கல்லூரியில் உள்ள கண்காட்சிக் கூடம் உலகத்தரம் வாய்ந்தது. இதற்காகவே PWD நண்பர்களுக்கு அரசு சார்பாக பாராட்டு விழா நடத்த வேண்டும். ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் கூடத்தில் மிகப்பெரிய ஜன்னலகள் அவசியம் என்று நினைத்த அவர்களது திறனைப் பற்றி ஓவியக்கல்லூரி மாணவராக அரிதாரம் பூசியிருந்த சீனிவாசன்ஜி பெருமை பேசியதைக் கேட்டால், அக்கெடமிக் முதல்வர் பெருமைப்பட்டிருக்க வேண்டும்.

சென்னையைப் பொருத்த மட்டில் நவீன ஓவியங்களை, சிற்பங்களைக் காட்சிப்படுத்த மக்கள் கூடுமிடங்களாக விமானநிலையமும், ஷாப்பிங் மால்களையுமே, (மியூசியத்தை ஏனோ மறந்துவிட்டேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) சொல்லலாம். விமான நிலையத்தில் அடிக்கடி கூரை இடிந்து விழுவதாலும், அங்கே நம்மைப் போன்றவர்களுக்கு அதிகம் (துளிகூட) வேலையில்லை என்பதாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் உலக அளவில் சமகாலக் கலை என்னவென்பதைத் தெரிந்து கொள்ள எந்த கேலரிகளிலோ அல்லது நட்சத்திர ஹோட்டல்களிலோ தெரிந்து கொள்ள இயலாததை ஃபீனிக்ஸ் ஷாப்பிங் மாலிலும் அதன் ஆர்ட் சீ ப்ரோக்ராம்களிலும் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. எப்படியாகினும் சமகாலக் கலை எப்போதும் மக்களுடன் தான், அவர்களுக்கு அருகில் தான் எப்போதும் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு தான் பெரிய பயணம் தேவைப்படுகிறது.

சென்னையின் தக்ஷிணசித்ராவும் அப்படிப்பட்ட ஓர் இடம் தான். வார இறுதி நாட்களில் அங்கே எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். கைவினைகள், கட்டுமானங்களோடு, கிராமியக் கலைகளோடு, நவீன ஓவியங்களையும் பார்ப்பது நேரடியாக கேலரியில் சென்று பார்ப்பதைக் காட்டிலும் நல்ல அனுபவமே.

அந்தோணிராஜின் போர்ட்ரெயிட்கள் ஆச்சரியப்படுத்தின, ராமுவின் போர்ட்ரெயிட்டுகளும். நிழற்படங்களிலிருந்து போர்ட்ரெயிட்களாக உருமாற்றித் தரும் எத்தனையோ செயலிகள் சாமான்யனுக்கும் கிட்டுவதாலோ என்னவோ இந்தவகைப் படைப்புகள் பற்றி அதிகம் வியக்காமல் இருக்க நியாயம் இருக்கிறது. ஆனால் அந்த கற்பிதத்தை உடைத்துப் போட்ட இரு இளைஞர்களாக இவர்களைச் சொல்லலாம். எளிய மனிதர்கள் தான் இவர்களது கருப்பொருள், மிக நுண்ணிய கோடுகள் தரும் பிரமிப்பும், தேர்ந்தெடுத்த மாடல்களான எளிய மனிதர்களிடமிருந்து நமக்குக் கடத்தப்படும் உணர்வுகளும் பிரமிப்பூட்டுபவை தான். ராமு பென்சிகளாலும், அந்தோணிராஜ் பேனா மையினாலும் இவற்றை வரைந்து வைத்திருக்கின்றனர்.

இது போன்ற படைப்புகளை சற்று நேரம் உற்றுப்பார்ப்பதே தியானித்தலை ஒத்தது எனில், அதை வரைதல் என்பது?

 Tradiotins of Tamilnadu - Show - Dakshichithra
Acquaitance – Anthony Raj (Pen & Ink)

ஏ.வி.இளங்கோ ஆர்ட் ஃபவுண்டேசன் இவரது படைப்பிற்கு விருது கொடுத்ததாக அவரிடம் பேசிய போது தெரிந்து கொண்டேன்.

அந்தோனிராஜ் கோபுவின் நண்பர் என்பது, அவரைப் பற்றி எழுதிய ஒரு சில வார்த்தைகளின் பிழைத்திருத்தத்தை கேரி அவுட் செய்யும் போது தான் சொன்னார். இத்தனை நிதானம் கொண்டிருக்கிற கோபுவும் போர்ட்ரெயிட் வரைவதில் தேர்ந்தவர் தானே என்று நினைக்கும் போது பவா செல்லதுரையின் போர்ட்ரெயிட்டும் ஞாபகம் வந்தது. பெரிய வேலை ஒன்று நமக்கென இருக்கிறது என்பதைத் தான் கணபதிஜியை ஒவ்வொரு தடவை சந்திக்கும் போதும் உணர்ந்து வருகிறேன். அந்தோனிராஜ் அல்லது அனாமிகாவின் நேர்காணலில் இருந்து தான் இவற்றைத் தொடங்க வேண்டும் என்று யாளி ஆலோசனை சொல்கிறது. எப்படியோ யாளியை விடுத்து, தனியாக (அதாவது கணபதிஜியுடன் இணைந்து) ஓவியக்கலை குறித்து எழுத வேண்டும்/ஆவணங்கள் திரட்ட என்று முடிவெடுத்தபோது. யாளி தொண்டையைக் கணைத்துக் கொண்டுப் பேச ஆரம்பித்தது என்னிடம்…

 “கணபதிஜி சொன்னது போல நீ தனியாக ஓவியம் பற்றி எழுதப்போகிறாயா?” என்று யாளி கேட்கும் போது.

அதற்கு கொஞ்சமாவது சங்கீதம் தெரிந்து கொள்ளனுமே? அல்லது நடனம் தெரிந்து கொள்ளனுமே? என்கிற சித்திர சாஷ்த்ர கேள்விகள் வருமென்று எதிர்பார்த்தால்.

உனக்கு ஓவிய உலகின் கலைஞர்களின் SENIORITY & HIERARCHY FLOW CHARTS தெரியுமா? என்று நாக்கைத் தொங்க போட்டு கண்ணடித்தது.

எனக்கு அவையெல்லாம் தெரியாதே. கணபதிஜி, உங்களுக்குத் தெரியுமா?

– ஜீவ கரிகாலன்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular