Monday, September 9, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 16 // சல்லிக்கட்டு

யாளி பேசுகிறது – 16 // சல்லிக்கட்டு

ஸேண்ட்ப்ளாஸ்ட் பண்ணப்பட்ட, தன் அருகினிலிருக்கும்  ரதியைப் பார்ப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் யாளி  அவ்வப்போது, கையில் கிடைத்ததையும் வாசித்தும் வருகிறது. புத்தகக்கண்காட்சி அவலத்தில் ஒருவாரத்தாடியுடன் லலித்கலா சென்று வந்தவனின் புலம்பலைத் தாங்க இயலாமல் தானும் சென்று பார்த்திட துனிந்தது. கோயில் பாதுகாப்புக் குழு என்ற ஏதோ ஒரு வரலாற்று அமைப்பு பராமரிப்பு குறித்த அக்கறையோடு தங்களைப் போன்ற ஆர்வலர்களை ஊக்குவிக்கும் நந்திதா கிருஷ்ணா பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தனர்.

INDOLOGY எனும் இந்தியவியல் பற்றிய படிப்பை சென்னையில் கற்பிக்கும் ஒரே நிறுவனத்தின் இயக்குனர்கள் தான், சிந்துச்சமவெளிப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் தொடர்ந்து வரும் ஏறு தழுவுதல் எனும் தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றினை முழுவதுமாக அழிக்க, கோடிகளில் பணம் புரளும் கிண்டி ரேஸ் கோர்ஸில் சொகுசுக் கார்களை பார்க் செய்கின்ற கூட்டம் திட்டமிட்டு வருகிறது. யாளிக்கு வார்னிஷ் அடிப்பது குறித்து சர்வதேச கருத்தரங்குகள் நடத்துவதற்கு மத்திய கலாச்சார பண்பாட்டு மையத்திடம் உதவிகள் பெற்றிட தோதாக அதன் நிறுவனரே மத்திய அரசால் அந்த நிறுவனத்தின் அங்கத்தினரே இருக்கலாம் அதில் நேரடியானத் தவறு என்று ஏதுமில்லை. ஆனால் தொன்மையான கலாச்சாரத்தின் நீட்சியாகத் தொடர்ந்து வரும் ஒரு அடையாளத்தை அழிப்பதில் அவர்களுக்கு ஏன் இந்த அக்கறை.

  1. அது தமிழர்களின் அடையாளம் என்பதை மறுக்க வேண்டுமா
  2. உண்மையில் பீட்டாவோடு கைகோர்த்துக் கொண்டு விலங்குகள் நலம் என்கிற பெயரில் நடக்கும் உலகளாவிய மோசடியா

ஏற்கனவே கீழடி எனும் நாகரிகத்தின் தடையங்களை அழிக்க நினைக்கும் சிந்தனைக்குப் பின்னே ஒழிந்திருக்கின்ற அரசியல் தொலைநோக்குள்ளதாகத் தான் இருக்கிறது என்று உணர்ந்த போதும். அந்த விழுமியத்தின் நீட்சியாகத் தான் இவர்கள் முன்னெடுக்கும் ஜல்லிக்கட்டிற்கானத் தடை என்பதில் உறுதி.

ஆனால் இதற்கெல்லாம் வித்தைப் போட்டிட 2014லேயே ஆயத்தமாகிவிட்டது மத்திய அரசு ABISY எனப்படும் அகில பாரத இதிகாச சங்கலன யோஜனா எனப்படும் சங்பரிவாரின் ஒரு அங்கத்தின் உறுப்பினராக இருந்த YS ராவ் (காகத்திய பல்கலைகழகத்தில் பேராசிரியராக வேலை செய்தவர்)தான் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததும் மத்திய வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவராக அமர்த்தியது. அது 2014ல் மற்ற வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களில் பெரும் அமளியையும் எதிர்ப்பையும் உருவாக்கியது. உடனேயே அவர் தன் பதவியைத் துறந்தும் அதை ஏற்காத மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதிராணியின் முயற்சியின் படி தங்களது ஒற்றை வண்ணத்தின் கீழ் ஒரு நாட்டின் கலாச்சார பண்பாட்டை மாற்றியமைக்கும் முயற்சிகள் தொடங்கின. இன்று நாம் எதிர்கொண்டிருப்பதும் அப்படியான ஒரு நிலை தான்.

உஜ்ஜைனி எனும் மூன்றாம் அடுக்கு நகரத்தைத் தேர்ந்தெடுத்து உலகத்தரமான கலைத்திருவிழாவைக் கொண்டாடுவதற்குப் பின்னர் இப்படியான திட்டமிட்ட பண்பாட்டு அழிப்பு நடந்து கொண்டிருக்கும் என்பது தான் நுண்ணரசியல். கலைக்கான கலை என கலைப் போதையில் மிதப்பவர்களுக்கு தங்கள் உல்லாசங்களும், கேளிக்கைகளும் எதனை அடகு வைத்து வாங்கப்பட்டிருக்கின்றன என்று சொல்ல இயலாது.

இப்படியான திருவிழாக்களையும், மாநாடுகளையும் அரசும் பெருநிறுவனங்களும் நடத்தும். ஆனால் மெரினா எனும் கடற்கரையினையே தூரிகையாக்கி வெவ்வேறு போராட்ட வடிவங்களில் கலையுணர்வோடு மக்களுக்காகப் பிரச்சாரம் செய்த பணத்தைத் தேடியலையாத மாபெரும் ஒன்றுகூடலை வரலாற்றில் பதித்த ஓவியர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், பாடகர்களுக்கும், நடனமாடியவர்களுக்கும், கலாபூர்வமாக ஒருங்கிணைத்தவர்களுக்கும் இந்தச் சமூகம் நிறைய கடமைப்பட்டிருக்கிறது. ஆழ்மனதில் நல்லெண்ணத்தின் விளைவாய் அதைத் தங்கள் கலையுணர்வால் மக்களுக்கு கடத்தியமையாலும் மிகப்பெரிய அளவில் தொழிற்நுட்பத்தோடு ஒருங்கிணைத்தமையாலும் தான் மாபெரும் வரலாறு சாத்தியமானது.

நாம் தோற்கவில்லை ஜெயித்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் பண்பாட்டை அழிப்பதற்கு நம்மை பயமுறுத்தி வீழ்த்துவதும், குழப்பிவிட்டு சாதிப்பதும் அவர்களது திட்டமாக இருக்கும், அதற்காகவே நிறைய துரோகிகள் நம்முடன் திரிவதும் யதார்த்தமான உண்மை.

யாளி தன்னை உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறது ? நீங்கள் அழிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அறிவீர்களா?

– ஜீவ கரிகாலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular