நம்பிக்கைகளை வளர்க்கும் கலை
ஜீவ கரிகாலன்
யாளி இந்த முறை பேசப்போவதில்லை, அது இன்ஸோம்னியா நோயால் அவதிப்பட்டு இப்போது அது சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நான் தான் பேசுகிறேன்.
உண்மையில் உரையாடல் என்பது அதிப்பட்சம் இருவருக்கு மேல் நிகழாது என்பது ஓவியர் கணபதி சுப்ரமணியத்துடன் பெசண்ட் நகரில் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது தோன்றியது, மூன்றாவதாக ஒருவர் அமர்ந்தாலே அது சச்சரவாகவும், கூடுதலாக சிலர் வந்திருந்தால் அது கலவரமாகவோ மாறிவிடும்.(குறிப்பு – மனம்திறந்த பேச்சுகளில் மட்டும்(
பரஸ்பர அறிமுகத்தோடு பேச ஆரம்பித்த உரையாடல் நுண்கலைகளை ஒரே கூரையில் வளர்த்தெடுக்கும் கேந்திரங்களில் ஆரம்பித்து, விமர்சனப் போக்கு, சுய முன்னிறுத்துதல் என்று நீண்டு நெளிந்துச் சென்றது. அவர் ஓவியத்தின் பால் கொண்ட ஈடுபாட்டுடன், கலை வரலாறு குறித்த நிஜமான அக்கறையும் கொண்டவர்.
கலைஞர்கள் தமக்கான ஊடகத்தைத் தேர்வு செய்யும் முறை பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது தான் ஓவியர் விஜய் பிச்சுமணியின் படைப்புகள் பற்றியும் பேசினோம். தனது படைப்புகளை உருவாக்க ஏன் அவர் மரங்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்று பேசும் போது. அந்த காத்திரமான இளைஞனின் இருப்பு பெருமிதமாக இருந்தது. அதே பெருமிதம் சற்றைக்கெல்லாம் மாறியது மற்றொரு ஓவியரைப் பற்றிப் பேசுகையில்
அண்மையில் தன் 75வது வயதுப் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய நடிகர்,பேச்சாளர், தமிழ் ஆர்வலர், சமூக ஆர்வலரான சிவக்குமாருக்கு தாமதமாகச் சொன்னாலும் ஒரு சாதாரண சினிமா ரசிகனாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனென்றால் அவர் ஒரு ஓவியரும் கூட.
(நல்லவேளை யாளி குரட்டை விட்டுக்கொண்டிருக்கிறது).
லலித் கலா அகாதெமியில் ஓவியர் சிவக்குமார் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் அவர் பிறந்தநாளை ஒட்டிக்காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அவர் தனது 14வயது முதல் 24,25 வயது வரை வரைந்திருந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவரது ஏற்புரையின் காணொளியைக் கண்டால் வியக்கலாம். ஏற்புரை இணைப்பில்
https://www.youtube.com/watch?v=ygKfxgonfr0&t=3s
ஓவியர் வீரசந்தானத்தின் உரை மிகவும் கவர்ச்சியாகவும் உறுதியாகவும் இருந்தது. அநேகமாக அந்தக் கூட்டத்திற்கு ஒரு ஓவிய ஆர்வலர்களும் வந்துவிடமாட்டார்கள் என்று தீர்கமாய் அவர் நம்பியிருந்தது அந்த பேச்சில் தெரிந்தது.
“நவீன யுகத்தில் சாமியார்கள் கூட ஒளித்துவைக்கப்பட்ட காமிராவுக்கு எப்படி நடந்துக்கனும்னு தெரிஞ்சிக்கிட்டாங்க, ஆனா கலைஞர்கள் தான்… வெளிப்படையா காமிரா படம்பிடிக்கும்போது கூட மேடை இருக்குதேன்னு கட்டுப்படுத்த மாட்டாங்க.” என்றபடி கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்தது யாளி.
இனி யாளியை தூங்க வைக்க இயலாது.
இந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் எத்தனையோ முக்கியமான ஓவியக் கண்காட்சிகள் நடந்துகொண்டிருக்க மீடியாக்கள் அதிகம் கண்டு கொண்ட நிகழ்வாக இதை மட்டுமே சொல்ல முடியும்.
‘என் படைப்புகளைப் பற்றி எழுதுங்கள் என்று சொன்னால் எனது ஏழ்மையைப் பற்றி எழுதுகிறார்கள்’ என்கிற ஒரு சமகாக கலைஞனின் வலியைத் தான் இந்த ஊடகங்கள் சென்ஷேசனாக மாற்றி கவனிக்க வைக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக பாப்புலர் கலாச்சாரம் குறித்த விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால். வெகுஜனங்களுக்கான கலை என்கிற முத்திரை வாயிலாக லாபமடையும் பல்வேறு வகையினரைப் பார்க்கலாம். கலையை நன்கு உணர்ந்து தமது அனுபவத்தாலும் செயல்திறனாலும் மட்டுமன்று வெகுஜனங்களின் மனப்போக்கை அவர்களது நாடித்துடிப்பை அறிந்து கொள்ளும் கலைஞர் அவர்களது ரசனையை மேம்படுத்துவதற்கு பதிலாகப் பயன்படுத்திக் கொள்வது தான் வெகுஜனக் கலையாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, அதே சமயம் தீவிரமாக கலையை முன்னெடுப்பவர்களும் லாபத்தைக் குறிவைப்பதால், மற்ற வகைமைகளை தாழ்த்திட அவற்றை வெகுஜனக்கலை என்று பிரச்சாரம் செய்வார்கள்.
கொள்கைகளை பிரச்சாரம் செய்வது மக்களுக்கான கலை, பிரச்சாரக்கலை என பிரச்சாரம் செய்வது என்ன வகையான கலை?
இப்படியான பல வகையான பிரச்சாரங்களை விமர்சனமாகப் பார்ப்பதால், நமக்கு ஒரு தூய்மைவாதம் வந்து விடுகிறது. சமகாலத்தின் பிரச்சினை என்பதே இந்த தூய்மைவாதம் தான். எல்லா வகையிலும் தூய்மைவாதத்தை முன்னெடுக்கும் இயக்கங்களால் தான் பிரச்சினைகள் இருப்பதாக யாளி அஞ்சுகிறது.
கம்பிகளால் முன்னும் பின்னுமாக நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் ஆயிரம் மக்களும் தரிசிக்க இருப்பது ராஜ அலங்காரம் பண்ணியிருக்கும் மட்டும் இறைவன் மட்டுமே. வழியில் இருக்கும் சிற்பத்தூண்களில் தனது முன்னோர்கள் என, தனது தெய்வங்கள், தேவதைகள் என செதுக்கப்பட்டிருக்கும் சிலைகளின் முகவெட்டை நாம் தரிசித்திருந்தால், மாங்கலாய்டு கலப்புடைய மனிதர்கள் இங்கே என்ன செய்திருந்தார்கள் என்கிற கேள்வி எழுந்திருந்தால் இனத் தூய்மைவாதம் பேசியிருக்க மாட்டோம்.
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ஜாக்கெட் அணியாத பிரதேசத்திலிருந்து, உள்ளாடைகளைத் தீட்டாகப் பார்த்த சமூகத்தில் தான் இன்று நிர்வாணம் தடை செய்யப்பட்டு சிற்பங்களுக்கு ஆடைகள் தரித்தும். புடைத்து நிற்கும் குரங்கின் குறிகளில் மின்சார மத்தளங்களையும் அழகாகப் பொருத்தியிருக்கிறோம்.
நிர்வாணம், காதல், முத்தங்கள் கூட தேசத்தின் பெயரால், மொழி, இனம், ஜாதி, மதம் தூய்மை செய்யப்படுகிறது. ஆனால் ஏரிகள், ஆற்றுப்படுகைகள், நீரோடைகள் மட்டும் தான் இன்னமும் தூர்வாரப்படாமல் இருக்கின்றன.
தமிழகத்திற்கு இடப்புறமும் வலப்புறமும் இருக்கும் ஈழமோ, கேரளமோ தனது உணவு, கலாச்சாரம், திருவிழா, கைவினைகள் என்ற தடயங்களற்ற உருமாற்றம் செய்யப்பட்ட இனம் கோரும் தூய்மைவாதத்தில் இருக்கின்ற பிரச்சனைகளின் வீரியத்திற்கு இணையானது ஒரு கலைஞனை SELF TAUGHT என்று சொல்லும் தன்மையும்.
ஓவிய உலகின் க்ளிஷேக்களில் ஒன்றாக இதைப் பார்க்கலாம்.
நான் முறையாக ஓவியம் கற்றிருப்பதாலே என்னை ஓவியன் என்று அழைக்கலாம் என்கிற வாதம்.
தன்னைக் காண வரும் பார்வையாளர்களுக்காக தமது போர்ட்ரெயிட்டுகளையும் மற்ற படைப்புகளை அகலப்படுத்தி, பெரிதாக்கி பதிப்பு செய்திருக்கிறார். தானொரு வெள்ளித்திரை கலைஞனும் கூட என்பதால் தன் படைப்புகளைக் காண வருபவர்களுக்கு பிரம்மாணடமாகக் காட்ட வேண்டும் என்று அவர் நினைத்தது வெற்றிப்பெற்றது என்று தான் சொல்லவேண்டும்.
“நவீனக் கலைகளும் அவசியமானது தான்” என்று சொல்லி ஓவிஅர் சிவக்குமார் அறிமுகப்படுத்திய வீர சந்தானத்தின் பாராட்டுரை லலித்கலா அகாதெமியின் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.
மேலே சிவக்குமார் தன்னை இரண்டு மூன்று முறை அகாடமிக் ஓவியங்கள் என்று சொல்வது மட்டும் தான் தனது இருப்பை ஓவியனாகத் தக்க வைத்திருக்கச் செய்யும் ஒரே உபாயம். சாதாரண தூரிகைகளில் அல்லது காகிதங்களில் வரையப்பட்டிருந்த போர்ட்ரெயிட்டுகளும், கோட்டோவியங்களும் தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் பெரிதுபடுத்தப்பட்டு பதிப்புசெய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதையும் அவர்கள் பெருமையுடன் ஒப்புக்கொண்டார்கள். போதாக் குறைக்கு வீர சந்தானம் வேறு – சிவக்குமாருக்கு இணையான இளைய ஓவிராக தான் எந்த கலைஞனையும் இப்போதுவரைப் பார்க்கவில்லை, இப்போது பார்க்கப்போவதுமில்லை வேண்டுமானால் தன் இறப்பிற்குப் பின்னால் பார்க்கலாம் என்று உரையாற்றினார். (யாளியை இடைமறித்து – சிறந்த மேடைப்பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்).
அகாதமிக் ஓவியன் என்று கலைஞர்களை தூய்மைவாதம் செய்யும் அளவுகோலைத் தகர்த்தெரிந்த பல ஓவியர்களின் பெயரைச் சொல்லலாம். எம்.எஃப் ஹுசைனில் இருந்து அந்தப் பட்டியலைச் சொல்லலாம். பூபன் காகர், ஏ.வி.இளங்கோ என முக்கிய ஓவியர்கள் பலரைச் சொல்லலாம்.
மீண்டும் நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் கலை என்று புரிதலை நோக்கிய பயணத்தில் கிடைப்பது ஒரு அபூர்வ காட்சியாகத்தான் இருக்கிறது. இருவேறு எந்த கோட்பாடுகளையும் இணைக்கிறது ஒரு மாயக் கோடு, அது தலை எது வால் எது என்று கண்டுபிடிக்க இயலாத எட்டு போன்ற வடிவம்.
எது ’‘நம்பிக்கை கொடுக்கும் கலை’யாக இருக்கும் என்று யோசிக்கும் போது ஓவியர் நரேந்திரபாபுவின் கூற்று/அனுபவம் ஒன்று ஞாபகம் வருகிறது.
தனது படைப்புகளில் வரும் கோடுகள் பற்றி அவர் பேசுகையில் (தினமும் அல்லது அவர் வாழ்க்கையில் பெரும்பகுதியும் வரைவது மட்டுமே) அவர் சொல்கிறார், அவர் பெரும்பாலும் பயணங்களின் போதும் தொடர்ந்து வரையும் பழக்கம் உடையவராம். அப்படியான பயணங்களில் கிடைக்கும் கோடுகளின் தன்மை விஷேசமானது என்கிறார். எப்படியென்றால், உடனிருக்கும் மனிதர்கள் பயணத்தின் போது நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒருவரோடு இடித்துக் கொள்ளும்போது கிடைக்கும் சிறு சிறு பிசுருகளை அவர் நேசித்ததைச் சொன்னதை எண்ணி மீண்டும் வியந்தேன்.
நம்பிக்கைகளை வளர்க்கும் கலை இப்படி சமூகத்திடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், சமூகத்தை நேசிப்பதாகவும் இருக்கிறது. வெறுப்புணர்வில் கோடுகளுக்கும், வண்ணங்களுக்கும் , படைப்புத் திறனுக்கும் கிடைக்கின்ற மதிப்பு நித்தியத்தன்மை பெறாது என்பதை ஏதோ உணர்த்துகிறது.
ART FOR HOPE, ALL YOU NEED IS A GENTLE PUSH
ஜீவ கரிகாலன்